இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 3)) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 18-04-2024

Total Views: 24127

உனக்கென்றே உயிர் கொண்டேன் 3

இரவு பத்து மணி...

மாலை நேரம் தேயிலை தோட்டத்திற்கு சென்று மேற்பார்வை முடித்து அப்போதுதான் வீடு வந்தான் தமிழ்.

அனைவரும் உறங்க சென்றிருக்க...

தனமும், தேவராஜூம் மட்டும் மகனின் வருகைக்காகக் காத்திருந்தனர்.

"இன்னும் தூங்கலையா நீங்க?" எனக் கேட்டவன், "டேபிளில் இருக்கும் சாப்பாட்டை நான் போட்டு சாப்பிட்டுக்க மாட்டேனா லட்சுமி? எனக்கும் சேர்த்து சேவகம் செய்யணுமா நீங்க?" எனக் கேட்டிருந்தான். அவனின் குரலில் அத்தனை சூடு.

"உங்களால் அப்பாவும் இந்நேரம் வரை இந்த குளிரில் முழிச்சிட்டு இருக்கிறார்" என்றான்.

"மெதுவா பேசு கண்ணு. பாட்டி இப்போதான் தூங்கப்போனாங்க. அப்புறம் என்னவோன்னு வருவாங்க" என்ற தனம், எழுந்து உணவு மேசைக்கு அருகில் செல்ல... அவருக்கு முன் வேகமாக சென்று அமர்ந்து, தட்டினை வைத்து தானே உணவினை எடுத்துக்கொண்டான். அவரை வைக்கவே விடவில்லை அவன்.

"மத்தவங்க சொல்றது எல்லாம் கேளுங்க. நான் சொல்றதை மட்டும் கேட்டுடாதீங்க" என்றவன், "எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் தான் அப்பா" என்றிட, தனம் சிரித்து விட்டார்.

"என்னவாம் இப்போ?" தமிழ் அன்னையின் சிரிப்பை ரசித்தவனாக மறைத்துக்கொண்டு வினவினான்.

"நீ சொன்னதை நான் சொல்லியிருக்கணும். இங்கு யாரு அம்மா, மகன்னு தெரியல" என்றவர், தமிழின் கன்னம் வழித்து "குடும்பம் அப்படின்னா எல்லாம் இருக்கத்தான் தமிழு செய்யும். நாமதான் அனுசரிச்சு நடந்துக்கணும். இல்லைன்னா குடும்பம் உடைஞ்சுப்போவும்" என்றார்.

"அதுக்காக எப்பவும் நீங்களே இறங்கிப் போகணும் அவசியமில்லை" என்றவன், "எனக்கு சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு லட்சுமி. இந்த பேச்சே வேண்டாம். விடு" என்று தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டான். அத்தனை ஆயாசம் அவனுள். அன்னை என்றால் கொள்ளைப் பிரியம். அவரை வீட்டின் வேலையாள் போல் அகிலாண்டமும், தெய்வானையும் நடத்துவதில் அதீத கோபம் அன்னையின் மீதுதான். இவர் செய்வதால் தானே அவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்று. அவனும் செய்யாதீர்கள் என்று எத்தனை முறை தான் சொல்லுவான். இன்று பொறுமை நீர்த்துவிட்டது.

தேவராஜ் மகனின் கோப முகத்தை ரசித்தவராக ஏறிட்டு பார்த்திருக்க...

"அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி மட்டும் எதுவும் பேசிடாதீங்கப்பா ப்ளீஸ்" என்றான்.

"நீ நடுவுல ரெண்டு தடவை லட்சுமின்னு பெயர் சொல்லி கூப்பிட்ட" என்றார்.

"இருக்கட்டுமே! அதுதானே அவங்க பெயர். பெத்த பிள்ளைங்க கூப்பிடாததுக்கு எதுக்கு அந்த பெயர்?" என்றவன், "உங்களையும் கூப்பிடட்டுமா?" என குறும்பாக கண்சிமிட்டி கேட்டிட...

"போடா படவா" என்று தமிழின் தோளில் செல்லமாகத் தட்டியிருந்தார்.

"காலையில நீங்க லட்சுமின்னு கூப்பிடும்போது அம்மா முகத்தில் மின்னல். எனக்கும் கூப்பிடணும் தோணுச்சு அதான்" என்றவன் "நல்லாதான் இருக்குல லட்சுமி?" எனக் கேட்டான்.

தமிழ் சிரித்த முகமாகக் கேட்டிருக்க, அவனின் கன்னம் வழித்து இதழில் ஒற்றிக்கொண்டார் லட்சுமி.

லட்சுமியின் முகம் மகிழ்வை காட்டுவது தமிழின் இதுபோன்ற சிறு சிறு கலாட்டாவான செயல்களிலும் பேச்சிலும் தான். அதற்காகவே எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் அன்னைக்கென தினமும் நேரம் ஒதுக்கிடுவான்.

"எப்போப்பா வறாங்க?"

மகன் எதை கேட்கிறானென்று புரிந்துகொண்ட தேவராஜ்,

"காலையில் பத்து மணிக்குள்ள வரதா அந்த வீட்டு பெரியவரு சொன்னாரு தமிழு. சொந்த பந்தமின்னு யாருமில்லை. முடிவாச்சுன்னா நீங்க தான் எங்களுக்கு கிடைக்கிற முதல் சொந்தம், பெண் பார்க்க யாரையும் கூட்டி வரலன்னு தப்பா நினைச்சுக்காதீங்கன்னு ரொம்பவே தன்மையா பேசினார். வயசுல மூத்தவர் இவ்வளவு பணிஞ்சு பேசிறாருன்னு எனக்கே வியப்பாப்போச்சு" என்றார் தேவராஜ்.

"ரொம்ப நல்ல குடும்பமா தெரியுது" என்று தேவராஜ் சொல்ல... 

"பையனை பற்றி அப்பா விசாரிக்க சொன்னாகளே என்னாச்சு தமிழு?" என்று தனம் வினவினார்.

"விசாரிக்கவே வேண்டாம். பூர்விக்கு பிடித்திருந்தால் தாராளமா கொடுக்கலாம். ரொம்பவே நல்லவர்" என்றான்.

"அதெப்படிப்பா விசாரிக்காமலே சொல்லுவ?" மனைவியின் கேள்வியை ஆமோதித்தவராக தேவராஜூம் மகனை பார்த்தார்.

"பையனோட தங்கச்சி என்னோட பிரண்ட். காலேஜில் ஜூனியர். அந்த பொண்ணுக்கு எல்லாம் அவர் தான். அப்பா, அம்மா இல்லாத குறையே தெரியாமல் என்னை பார்த்துகிறாங்கன்னு அடிக்கடி சொல்லியிருக்காள்" என்று இருவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்த தமிழ்,

"தங்கச்சியை அன்பா அப்படி பார்த்துக்கிற ஆளு... தன்னை நம்பி கட்டிக்கிட்டு வர பொண்ணை எப்படி பார்த்துப்பார்?" என்று கேள்வியாய் வேண்டிய பதிலை அவர்களிடமே முன் வைத்தான்.

"ம்ம்ம்... பூர்விக்கு சம்மதமா படணும்" என்ற தனம், "நீயே இவ்ளோ சொல்லும்போது, இந்த இடமே முடிஞ்சிட்டால் சந்தோஷம்" என்றார்.

"நல்லதே நடக்கும். இப்போ வா தூங்கலாம்" என்று தேவராஜ் மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்கு செல்ல... தமிழ் மாடியேறி தனதறை வந்தான்.

அன்னை, தந்தையிடம் பேசியதில் அவனது மனதிலிருப்பவரின் நினைவு அதிகமாக, தன்னுடைய அலைப்பேசியை எடுத்து பூர்விக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையென தேவராஜ் அனுப்பிய புகைப்படத்தை திறந்து பார்த்தான்.

சண்முகம், அஸ்வின் இருவருக்கும் நடுவில் அவனவள்.

அஸ்வின் தனித்திருக்கும் படம் ஒன்றும், குடும்பப் படம் ஒன்றும் தரகர் காட்டியிருந்தார்.

படத்தை பார்த்ததும் தமிழுக்கு அத்தனை மகிழ்வு. உள்ளுக்குள் சந்தோஷ ஆர்பரிப்பு. பின்னே அவனது காதலை சொல்லாத நிலையிலே இருவரும் உறவினர்களாக ஒரே குடும்பமாக போகிறார்களே சந்தோஷம் பொங்கத்தானே செய்யும்.

அவளின் படத்தை பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு பேசிட வேண்டுமெனத் தோன்ற நொடியும் கடத்தாது அழைத்து விட்டான்.

"ஹலோ..." 

அழைப்பு முடியும் தருவாயில் ஏற்கப்பட்ட அழைப்பில், தூக்க கலக்கத்தில் ஒலித்தது அவளின் குரல்.

"அதுக்குள்ள தூங்கிட்ட?"

"நான் எப்போ தூங்கினால் உங்களுக்கு என்ன? இதை கேட்கவா அர்த்த ராத்திரியில் போன் போட்டிங்க?"

"எதே அர்த்த ராத்திரியா?" என்றவன் அப்பொழுதுதான் மணியை கவனித்தவனாக நெற்றியில் தட்டிக்கொண்டு, "நான் தமிழ்..." என அழுத்தம் கொடுத்து மொழிந்தான்.

"நான் மட்டும் என்ன இங்கிலிஷ்'ன்னா சொன்னேன். நீங்க பேசுறதுலே தெரியுது."

"ஹேய்... அராத்து."

அவ்வளவு தான், தமிழின் அந்த விளிப்பில் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள் மொழி வெண்பா.

"பாஸ்... சீனியர்..." அவளுக்கு திணறியது.

"ஹான்... இப்போ தான் தெரியுதா?"

"சாரி... சாரி சீனியர். தூக்கத்துல குரல் சரியா நினைவு வரல..." அப்பாவியாகக் கூறினாள்.

ஒருத்தன் நாள் முழுக்க அவளின் நினைவாகவே இருந்திட, அவளோ அவனின் குரல் கேட்டும் நினைவில் இல்லை என்றதும் மனதால் சோர்ந்துவிட்டான். ஆனால் அடுத்த கணமே அவள் கேட்டதில் சூரியனாய் மிளிர்ந்தான்.

"காலையிலே போன் பண்ணுவீங்கன்னு நினைச்சேன்." மெல்லொலி அவளிடம்.

"ஏன்?" ஆர்வமாக வினவினான். தான் பேச வேண்டுமென எதிர்பார்த்திருக்கிறாளே என்கிற சிறு மகிழ்வு.

இருவரும் நண்பர்கள். சொல்லப்போனால் தமிழின் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒரே பெண் வெண்பா மட்டுமே! தனக்கொரு அக்கா இருப்பதினால், மற்ற பெண்களை அத்தனை எளிதில் நிமிர்ந்து கூட பார்த்திட மாட்டான். அதற்காக பேசமாட்டானென்று இல்லை. அவனிடம் இயல்பாய் பேசும் பெண்களிடம் நட்பின் அடிப்படையில் நல்ல முறையிலேயே நடந்துகொள்வான். 

அப்படி தமிழிடம் கல்லூரியில் முதன் முதலில் இயல்பாக பேசிய ஒரே பெண் வெண்பா தான். சிறு பேச்சில் தொடங்கிய உறவு காதலாக அவனிடம். அவளிடம்? அவள் மனம் திறந்திட வேண்டுமோ?

"எக்ஸாம். ஆல் தி பெஸ்ட் எக்ஸ்பெக்ட் பண்ணேன்" என்று மறைக்காது கூறினாள்.

"வயலில் கொஞ்சம் வேலை. காரட் அறுவடை ஆச்சு. லோட் ஏத்தி ஆலைக்கு அனுப்பியதில் பிஸி" என்று பதில் கொடுத்தான்.

"ஹோ..." என்றவள், "எதுக்கு கால் பண்ணீங்க?" எனக் கேட்டாள்.

"ரீசன் வேணுமோ?" என்று சிறு கோபம் எட்டிப்பார்க்க கேட்டவன், "பேசணும் தோணுச்சு" என்றான்.

தினமும் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அழைத்து பேசிட தயக்கம் கொண்டதுமில்லை. வாரத்தில் இரு முறையோ, மூன்று முறையோ அவர்கள் உரையாடல் நிகழும். அப்போதெல்லாம் அனைத்தும் பகிர்ந்துகொண்டே பேச்சினை முடிப்பர்.

"என்ன சீக்கிரம் தூங்கிட்ட? வீட்டுக்கு போயிருக்கியா?"

அவனுக்கு நாளை அவளும் பெண் பார்க்கும் நிகழ்வுக்கு வருவாளா என்று தெரிய வேண்டியிருந்தது. அதற்காகவே கேட்டிருந்தான்.

"ஏன் கேட்குறீங்க?"

"எக்ஸாம் டைம் விடிய விடிய படிப்பியே" என்றான்.

"லாஸ்ட் எக்ஸாமுக்கு படிக்கிறேன்னு சரியா தூங்கல சீனியர். இன்னைக்கு கண்ட்ரோல் பண்ணவே முடியல. நாளைக்கு ஈஸியான பேப்பர் தான். அதான் தூங்கிட்டேன்" என்று விளக்கமாக பதில் கொடுத்தாள்.

"அப்போ ஹாஸ்டலில் தான் இருக்கியா?"

"ஆமாம்."

தமிழுக்கு ஏமாற்றமாகிப் போனது. அமைதியாகிவிட்டான்.

பார்த்தே ஒரு வருடமாகப் போகிறது. அவன் கல்லூரி முடித்த இறுதி நாள் பார்த்தது. காணொளி அழைப்பில் பார்த்திருந்தாலும் நேரில் பார்ப்பது போல் இருந்திடாதே! நாளை எப்படியும் வருவாள் பார்க்கலாம் என்று ஆசையாக இருந்தவனுக்கு சிறு ஏமாற்றமும் வலி கொடுத்தது.

இரண்டு மூன்று முறை அவனை கூப்பிட்டு பார்த்தவள், அவனிடம் பதிலின்றி போக அழைப்பைத் துண்டித்து அழைத்திருந்தாள்.

மொபைலின் சத்தத்தில் சுயம் மீண்டவன், 

"சொல்லும்மா" என்றான். கரகரத்த குரலில். அக்குரல் அவளுள் புதிதாய் ஒன்றை உணர்த்திச் சென்றது. உணர முயன்றாள் முடியவில்லை. ம்மா... அடிக்கடி சொல்லுவது தான். இன்று ஏனோ அந்த ம்மா'வில் மீதூறிய ஒன்று அவளை சிலிர்க்க வைத்தது. 

"சிக்... சிக்னல் இல்லையா?"

"இருக்கு" என்றவன் அவளின் குரல் அடங்கி ஒலிக்கவும் தன் ஏமாற்றத்தை புறம் ஒதுக்கி சாதாரணமாக உரையாடினான்.

பேச்சுக்கள் நீண்டது. நடுவே அவள் அஸ்வினுக்கு பெண் பார்க்க செல்லவிருப்பதை பற்றி பகிர்ந்துகொள்ள, தமிழ் எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

அவளாக உண்மையை அறியும் தருணம் அவளின் முகத்தில் வந்துப்போகும் மகிழ்வை நேரில் காண வேண்டுமென்ற ஆசையில் சொல்லவில்லை.

இன்று வெண்பாவுக்கு ஏனோ பேச்சினை முடிக்க மனமே இல்லை. பேசிக்கொண்டே இருந்தாள்.

வெண்பாவுடன் வாழ துடிப்பவனுக்கு அவளுடன் பேசிக்கொண்டிருக்க கசக்குமா என்ன? அவள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான்.

"பைனல் செம் ல?" எனக் கேட்டவன், "அடுத்து என்ன?" என்றான்.

"இப்போதைக்கு உங்க பெர்சேன்டேஜ் பீட் பண்ணனும் சீனியர்" என்றாள். வெண்பாவிடம் எப்படியும் அவனைவிட அதிக மதிப்பெண் எடுத்திட வேண்டுமென்கிற உறுதி அவள் குரலில் வெளிப்பட்டது.

"என்ன திடீர்னு... என்னை போட்டியா பாக்குற?"

"ச்சூ போட்டியாலாம் இல்லை பாஸ். நம்ம டிப்பார்ட்மெண்ட் எச்.ஓ.டி... ஃபேர்வெல்லில் சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்தினார். அப்போதான் யூஜி, பிஜி ரெண்டுலையும் உங்க மார்க் இதுவரை யாரும் டச் பண்ணதே இல்லை. ஸ்டூடன்ட் அப்படின்னா தமிழ் மாதிரி இருக்கணும். அதுக்கு படிப்பை மட்டுமே குறிவச்சு படிக்கணும்ன்னு சொன்னார். நீங்க காலேஜ் விட்டு போயும் உங்களைப் பத்தி பேசுறது மட்டும் குறையல" என்று அவள் தருவிக்கப்பட்ட சிறு கடுப்போடு கூறிட, தமிழிடம் அட்டகாசமான சிரிப்பு.

"சிரிக்காதீங்க" என்று சத்தமின்றி அதட்டியவள், "உங்களை பீட் பண்ணிட்டால், என்னை பத்தி பேசுவாங்கல" என்றாள்.

"ம்ம்ம்... பேசுவாங்க" என்றவன், "ஆல் தி பெஸ்ட் மொழி" என்று உள்ளார்ந்து வாழ்த்தினான்.

"தேன்க் யூ... தேன்க் யூ..." என்றவள், "நீங்க என்னை மொழின்னு கூப்பிட்டாலே... உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது சீனியர். என்னான்னு தெரிஞ்சிக்கிறதுக்கு நீங்க அடிக்கடி சொல்லமாட்டேன்கிறீங்க" என்று சலித்துக்கொண்டாள்.

"மொழிக்கு மொழி சொல்லணுமா?" எனக் கேட்டவனின் முகத்தை மட்டும் வெண்பா நேரில் பார்த்திருந்தால்  மொத்தமாக அவனுள் கட்டுண்டிருப்பாள். அத்தனை காதலை முகத்தில் அக்கணம் வழிய விட்டிருந்தான்.

"எஸ்... இனி அடிக்கடி மொழி கூப்பிடுங்க. பிடிச்சிருக்கு" என்றாள்.

"அப்போ தமிழை மொழிக்கு புரியுது... ரைட்?" எனக் கேட்டிருந்தான்.

அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை.

"என்னது?"

"நத்திங்" என்றவன் "குட் நைட்" என வைத்துவிட்டான்.

வெண்பா தான் அவன் இறுதியாக பேசியவற்றை அலசியபடி, அவனிடம் முதல் முறை பழக்கம் கொண்டதை நினைவு கூர்ந்தவாறு கண்ணயர்ந்தாள்.

தமிழும் அந்நினைவுகளில் தான் உறக்கத்தை தழுவாது மென் இதத்தோடு புன்னகைத்திருந்தான்.

வெண்பா பொறியியல் முதல் வருட கல்லூரி படிப்பில் நுழைந்த போது, சென்னையில் அதே கல்லூரியில் தமிழ் நான்காம் வருட மாணவன். நன்றாக படிக்கும் மாணவன் மற்றும் மாணவத் தலைவன் என்பதால் கல்லூரியில் அவனை தெரியாத நபர்களே இல்லையென சொல்லலாம்.

மெக்கானிக் டிப்பார்ட்மெண்ட். இளங்கலை, முதுகலை இரண்டிற்கும் சேர்த்து மூன்றே பெண்கள் தான். அதில் இரண்டு பெண்கள் மூன்றாம் ஆண்டு. ஒரு பெண் முதுகலை இரண்டாம் ஆண்டு.

பொறியியலில் மெக்கானிக் என்றால் தனி மதிப்பு தான். மற்ற துறை மாணவர்கள் அவர்களை கெத்தாகத்தான் பார்ப்பார்கள். அதிலும் தமிழ் என்றால் மற்றவர்களுக்கு... பெண்களுக்கு நெருங்கிடவே தயக்கம் தான். அத்தனை திமிராக எல்லாம் இருக்கமாட்டான். அவன் பள்ளி படிப்பை படித்தது எல்லாம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. கல்லூரியிலும் பெண்களே இல்லாத துறை. ஆதலால் பெண்களுடன் அவனுக்கு பழக்கமில்லை.

அன்று மெக்கானிக் துறை பரபரப்பாக இருந்தது. வகுப்பிற்குள் நுழைந்த தமிழ் தன் நண்பர்களின் சுறுசுறுப்பை வைத்தே காரணத்தை கண்டு கொண்டான்.

"இன்னைக்கு பர்ஸ்ட் இயர்ஸ் வராங்கல?" என்று தன்னருகில் அமர்ந்திருந்த பூபேஷிடம் கேட்ட தமிழ், "பொண்ணுங்க ஜாயின் பண்ணியிருக்காங்களா?" என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

"பொண்ணுங்க இல்லை மச்சான். ஒரே ஒரு பொண்ணு தான். ரிஜிஸ்டரில் பெயரை பார்த்துட்டு வந்து துள்ளிக்கிட்டு இருக்கானுவ" என்றான் பூபேஷ்.

"ம்ம்ம்..." என்று அர்த்தமாக தாடையை நீவியவன், "டிப்பார்ட்மெண்ட் பசங்க எல்லாரும் கேலரி கிளாசில் அசெம்பல் ஆகனும். டூ மினிட்ஸில்" என்றான்.

"இன்னைக்கு பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்டுக்கு கேலரி அலார்ட்'டா தமிழ். பசங்களும் வந்திருப்பாங்களே!" என்ற பூபேஷிடம்... "ம்ம்ம், அவங்களும் இருக்கட்டும்" என்ற தமிழ் தன் வகுப்பு மாணவர்களிடம் சொல்லிவிட்டு கேலரி வகுப்பை நோக்கிச் சென்றான். 

முதல் வருட மாணவர்களில் சிலர் வந்திருந்தனர்.

"ஹாய்" என்று சொல்லியவன் உள்ளே சென்று போர்டிற்கு முன் நின்றான்.

தமிழ் தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ள... மற்ற ஆண்டு மாணவர்கள் வர ஆரம்பித்தனர். அனைவரும் ஒன்று கூடியதும் தமிழ் பேச ஆரம்பித்தான்.

அக்கணம் அங்கு வந்த வெண்பா வகுப்பிற்கு முன் மூன்று பெண்கள் நிற்கவும், அவளருகில் சென்று தன்னை அறிமுகம் செய்துகொள்ள,

"பசங்களுக்கு மீட்டிங்... வெயிட் பண்ணு" என்று அவர்களில் மாலதி என்ற மூன்றாம் ஆண்டு மாணவி சொல்ல, சரியென அவர்களுடன் நின்றுகொண்டாள்.

வெளியில் நின்றிருந்தாலும், உள்ளே தமிழ் என்ன பேசுகிறான் என்பது தெளிவாக கேட்டது. அவனின் முகம் காண முடியவில்லை. சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தாள். 

முதல் வருட மாணவர்களும் இருக்க முறையாக தன்னை அறிமுகம் செய்து கொண்டவன்,

"காலையில் வந்ததும் கவனித்தேன். டிப்பார்ட்மெண்ட் அவ்ளோ பரபரப்பா இருந்தது. எதுக்கு இத்தனை ஆர்வம்?" என்றவன், "ஒரு பொண்ணு வராங்க(ள்)ன்னா? மத்த டிப்பார்ட்மெண்ட் மாதிரி மெக் கிடையாது. கேர்ள்ஸ் மெக் சூஸ் பண்றதே ரேர். அவங்க நம்மளை நம்பி தான் படிக்க வராங்க. நான் என்ன சொல்ல வரன்னு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்" என்று அழுத்தமாக ஒட்டு மொத்த பேரையும் பார்த்தவன், "அல்ரெடி திரீ கேர்ள்ஸ்... இப்போ ஃபோர், அவங்க எம்பாரசிங்கா பீல் பண்ண வச்சிடாதீங்க. பேச வேணாம் சொல்ல மாட்டேன்... அதே கணம் அவங்க பாதுகாப்புக்கு நாம தான் பொறுப்புன்னு சொல்றேன். அவ்வளவுதான்" என்று தமிழ் வெளியேற அவனுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்த வெண்பாவின் நீண்ட பின்னல் ஒரு கணம் அவளை கவனிக்க வைத்தது. இமைப்பொழுதில் தலையை  இட வலமாக ஆட்டிக்கொண்டவனாக சென்றுவிட்டான்.

தமிழ் வெளியேறிய அரவத்தில் திரும்பிய வெண்பா கண்டது தமிழின் பின் உருவம் தான். முன்னே சென்று கொண்டிருந்தவனின் எண்ணம் அவளின் நீண்ட பின்னலில் ஆச்சரியம் கொண்டிருந்தது.

'எவ்வளவு நீளம்?' அதிசயத்தவன், 'ஹேர்க்கு என்ன யூஸ் பன்றான்னு தெரிந்தால் பூர்விக்கு சஜ்ஜஸ்ட் பண்ணலாம்' என்று சொல்லிக்கொண்டான். அப்படித்தான் தமிழ். அவனை சில பெண்கள் கவனிக்க வைத்தாலும், வேறு கண்ணோட்டத்தில் அவனின் பார்வையும், எண்ணமும் இருந்திடாது.

அன்றோடு தமிழ் அவளை மறந்தும் போனான். துறையில் என்றாவது பார்க்க நேர்ந்தால் நேர்கொண்டு கடந்திடுவான்.

அறையின் கதவு தட்டப்பட... நினைவுகளை ஒதுக்கி வைத்து எழுந்து சென்றான்.





Leave a comment


Comments


Related Post