இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 15 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 18-04-2024

Total Views: 23046

செந்தூரா 15


கவின் வனிதாவை எப்படியோ சமாளித்து மண்டபத்தின் வாசலில் விட்டு விட்டு உடனே வருவதாக சொல்லி சென்றான்.


விஷயம் தெரிந்தால் தன்னை உண்டு இல்லை என்று செய்து விடுவார்கள் என்று தோன்ற அவசரமாக கிளம்பி விட்டான். உள்ளே வந்த வனிதாவிடம் “தாரிகா எங்கே?” என்று சாரதா கேட்க,


“அவங்க மாமா கூட அப்பவே மண்டபத்திற்கு போய்ட்டதாக கவின் அண்ணா சொன்னாங்களே” என்றாள்.


புருவ முடிச்சுடன் சாரதா செந்தூரனுக்கும், தாராவுக்கும் மாற்றி மாற்றி போனில் அழைத்தார். இருவரின் போனுமே ஸ்விட்ச் ஆப் என்றதும் சற்றே பதட்டத்துடன் கணவரை அழைத்து விஷயத்தை சொன்னார்.


அவரும் ஆட்களை அனுப்பி அவர்கள் சென்ற பியூட்டி பார்லரில் விசாரித்து வரச்சொன்னார். போனவர்கள் தாராவின் கைப்பை மற்றும் அலைபேசியை மட்டும் கொண்டு வரவும் சுபாஷிற்கு பொறி தட்டியது.


இளம் வயதிலேயே அவர் பேச்சை மீறி மகளின் கழுத்தில் மாலை போட்டவனாயிற்றே, அவனை பற்றி தெரிந்து இருந்தும் தாராவை அவனுடன் அனுப்பிய தன் முட்டாள்தனத்தை எண்ணி வெளிப்படையாகவே தலையில் அடித்து கொண்டார்.


சித்தார்த் குடும்பத்திற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவனை மட்டும் முதலில் அழைத்து விஷயத்தை சொல்லி விட்டார். சித்தார்த்தின் முகம் கருத்து போனது. “அன்னிக்கே விஷயத்தை சொல்லி இருந்தால் நானே விலகி இருந்து இருப்பேன். எல்லார் முன்னாடியும் என்னை அவமானப் படுத்தணுமனே இத்தனை நாளாய் காத்திருந்திங்களா?” என்று கத்த தொடங்கி விட்டான்.


அதற்குள் சத்தம் கேட்டு வந்த சித்தார்த்தின் அம்மா மற்றும் குடும்பத்தினர் விஷயம் அறிந்து ஆளாளுக்கு பேச தொடங்கி விட்டனர்.


“அன்னிக்கு அவன் சத்தம் போட்டு பேசும் போதே என்ன விஷயம்னு கேட்டேனே, சொல்லி தொலைக்க வேண்டியது தானே என்று பலவாறு பேசி புலம்ப தொடங்கி விட்டார்.


எப்படியாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வருவதாக சொன்ன சுபாஷை ஏளனமாகப் பார்த்தான் சித்தார்த். “தாலி கட்டிய பின்பும் அவளை அவன் மீண்டும் வந்து தூக்கி சென்றால் என்ன செய்யறது? அவன் முறை பெண்ணை அவன் தூக்கி இருக்கான். சரியாக விசாரிக்காமல் பெண் எடுக்க நினைத்தது எங்கள் தப்பு” என்று மேலும் பல துவேஷங்களை மொத்த குடும்பத்தின் மேல் காட்டிவிட்டு மாப்பிள்ளை வீட்டார் அனைவருமே அங்கிருந்து கிளம்பினர்.


யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று புரியாமல் அதிர்ச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். சுபாஷ் அனைவருக்கும் பணத்தை செட்டில் செய்து விட்டு குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்து சென்றார்.


பெண்கள் எல்லாம் அழுதுகொண்டே இருந்தனர். சுபாஷ் கதிரேசனும் கூட தொய்ந்து அமர்ந்து இருந்தனர்.


முத்துப்பாண்டி தான் அவர்களை அதட்டினார். “இப்போ என்ன நடந்ததுனு எல்லாம் ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க. என் பேரன் அவனோட அத்தை மகளை தானே தூக்கி இருக்கான். அவனுக்கு அவள்தான்னு விதிச்சிருந்தால் அதை கடவுளாலக் கூட மாத்த முடியாது. ஆகவேண்டிய காரியத்தை பாருங்க. அவனே தாரிகாவை அழைச்சிட்டு வருவான்” என்றார்.


ஜானகி ஏதோ பேச தொடங்க, “வாயை மூடு, எல்லாம் உன்னால் வந்த வினை தான். அவங்களாக வர்ற வரைக்கும் யாரும் எதுவும் பேசாமல் அவங்கவங்க வேலையை பாருங்க. அவங்க வந்த பின்னாடி மற்றதை பார்த்து கொள்ளலாம்” என்று திட்டவட்டமாக அழுத்தி சொல்லிவிட பெரியவரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அனைவரும் அமைதியாகி விட்டனர்.


தாரிகாவிற்கு உள்ளம் உலை என கொதித்து கொண்டு இருந்தது. இத்தனை வருடங்கள் அவன் அவளுக்காக காத்திருந்து என்ன பயன்? அறியாத டீனேஜ் பருவத்தில் எல்லாம் கட்டுப்பாட்டோடு அவளிடம் நடந்து கொண்டவன், இன்று அவளின் மனநிலையை முழுதாக அறியாமல் அவளுக்கான எந்த அவகாசமும் அளிக்காமல் கட்டாயப்படுத்தி அல்லவா அவளை எடுத்து கொண்டான். அவனின் முதல் முத்தத்தை எப்படி எல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தாள்? இந்த மாதிரி ஒரு சூழலிலா அவர்கள் சங்கமம் இருக்க வேண்டும்?


இரு குடும்பத்தாரும் இணைந்து இந்த திருமணம் செய்து வைத்திருந்தால் அவர்களின் வீட்டில் எத்தனை கேலி கிண்டல் என்ற ஆரவாரத்துடன் அவர்களின் இனிய இரவு கழிந்திருக்கும். ஆனால் யாருக்கும் தெரியாமல் அவசரமாக தனிமையில் தாலிக் கட்டி அடுத்த கணமே அவளை ஆட்கொண்டும் விட்டானே. அவன் கைகளில் குழைந்து போன தன் வெட்கங்கெட்ட மனதை எண்ணி தன் மேலே கோபம் வர எழுந்து அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதாள்.


செந்தூரனுக்கும் உள்ளுக்குள் குற்ற உணர்வாக தான் இருந்தது. ஐந்து வருடமாக அவளை பார்க்காதிருந்த தவிப்போடு வந்தவனுக்கு மொத்த குடும்பமும் சதி செய்து அவனிடமிருந்து தாராவை பிரிக்க பார்ப்பதை உணர்ந்ததும் அவளை தவறவிடவே கூடாது என்ற ஆத்திரத்தில் அவளை எடுத்து கொண்டான். அவனுமே அந்த பொழுதிற்காக எத்தனை கற்பனையோடு இருந்தான். பெருமூச்சோடு திரும்பி படுத்து அருகில் இருந்தவளை இறுக்கி அணைத்து கொள்ள கைகளால் அவளை துழாவினான்.


அவன் கைகளுக்கு அகப்படாததால் தலையை உயர்த்தி பார்த்தான். அவள் முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு குலுங்கி குலுங்கி சத்தமில்லாமல் அழுதுகொண்டு இருந்தாள். அதை பார்த்ததும் இதுவரை இருந்த இலகுத்தன்மை மாறி அவன் முகத்தில் இறுக்கம் குடிக்கொண்டது. 


“என்னடி ஆச்சு இப்போ? ஓ கற்பு போயிடுச்சேனு அழறியா?” என்றான் அழுத்தமான குரலில். அவள் பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருக்க, “என் கற்பு கூட தான் போயிடுச்சு, நான் என்ன உன்னை மாதிரியா அழறேன்?” என்றவனை நிமிர்ந்து தீப்பார்வை பார்த்தாள்.


அவள் பார்வையில் தொண்டையை செருமியவன், அவளை மீண்டும் தன்னை நோக்கி இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலேயே விழுந்து அழுதாள். அவள் கண்ணீர் அவன் வெற்று மார்பை நனைத்தது. ஒருவேளை சித்தார்த்தை நினைத்து அழுகிறாளோ என்று தோன்றியது. இனி அவனை நினைக்கும் வாய்ப்பையே கொடுக்க கூடாது என்று எண்ணி கொண்டு சற்று வன்மையாக அவளை அணைத்தவன் மீண்டும் அவளை ஆட்கொள்ள தொடங்கிவிட்டான்.


தான் அழுதுகொண்டு இருப்பதையும் பொருட்படுத்தாமல் இப்படி நடந்து கொள்கிறானே என்று தாங்க முடியாத வேதனையில் அவளின் விசும்பல் அதிகரித்தது.  அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து இருந்தவன் இடம் மாற்றி அவளின் இதழில் தன் இதழ்களை பொறுத்தி அவளின் விசும்பலை தனக்குள் வாங்கிக் கொண்டான். நீண்ட நெடிய நேரம் தொடர்ந்த அவனின் இதழ் அணைப்பு அவளின் விசும்பல் அடங்கும் வரை தொடர்ந்து கொண்டே இருந்தது.


அவன் கைகள் ஆதரவாய் அவளை தடவிக் கொடுத்து சமாதானம் செய்தது. களைப்பில் அவன் நெஞ்சில் தலை சாய்த்து அப்படியே உறங்கி போனாள். அவளின் உறக்கம் கலைக்காமல் மெதுவாக அவளை கட்டிலில் கிடத்தியவன், குளிக்க சென்றான்.


அவர்கள் சாப்பிடுவதற்காக உணவு ஆர்டர் செய்ய தன் அலைபேசியை இயக்கினான். அடுத்த நொடி கவினிடமிருந்து அழைப்பு வந்தது, அதை ஏற்று காதில் வைத்து “சொல்லுடா” என்றான் கூலாக.


“என்ன மச்சி, அங்கே ஏதும் பிரச்சினை இல்லையே? அந்த சித்தார்த் தான் உன் மாமா குடும்பத்தை அவமானப்படுத்திட்டு போயிருக்கான். மற்றபடி வீட்டில் பந்தல் கூட பிரிக்கலை, எல்லாம் அப்படியே இருக்குடா, எனக்கு தெரிஞ்சு நீ இப்போ தாராவை கூட்டிட்டு வந்தால் அவங்களே கல்யாணம் செய்து வச்சிருவாங்க” என்றான்.


“அதுக்கு அவசியமே இல்லை மச்சி, எங்க கல்யாணம் முடிந்து விட்டது. அவங்களுக்கு நான் கொடுத்த மரியாதையை அவங்களே கெடுத்துக்கிட்டாங்க. எனக்கு கல்யாணம் செய்து வைக்கும் உரிமையோ தகுதியோ அவங்களுக்கு இல்லை” என்றான் பிசிறில்லாமல்.


“சரி கல்யாணம் தான் ஆயிடுச்சில்ல, கிளம்பி வா” என்றான் கவின்.


“போடாங்… இத்தனை வருடம் காத்திருந்து கல்யாணம் பண்ணியிருக்கேன், கொஞ்சம் அவளோட நேரம் செலவழிக்க வேண்டாமா?” என்றான் செந்தூரன்.


“அந்த பொண்ணுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுடா, அவங்களும் உன்னை புரிஞ்சுக்க வேண்டாமா? அவசரப்படாதே” என்றான் கவின்.


“ம்ம்ம், அப்படியா சொல்றே?  நீ சொல்றதும் கரெக்ட் என்று தான் தோணுது. ஆனால் இதை ஒரு இரண்டு மணிநேரம் முன்னாடி சொல்லி இருக்க கூடாதா?” என்றான் செந்தூரன்.


“டேய் மித்ரா என்னடா சொல்றே?” என்றான் கவின் அதிர்ச்சியாக.


“இப்போதான் எங்களோட பர்ஸ்ட் நைட் முடிஞ்சது” என்றான் ரகசியமான குரலில்.


“டேய் இராத்திரியில் நடந்ததா தான்டா அதுக்கு பேரு பர்ஸ்ட் நைட், அது சரி கல்யாணம் எப்போ பண்ணிகிட்டே?” என்றான் கவின்.


“இரண்டு மணிநேரத்திற்கு முன்னாடி” என்றான் செந்தூரன்.


“என்னடா சொல்றே கல்யாணமும் பர்ஸ்ட் நைட் இரண்டுமே எப்படி இரண்டு மணிநேரத்திற்கு முன்னாடி?” என்று கேட்டவனுக்கு ஏதோ புரிவது போல் இருக்கவும் தொண்டையை பலமாக செருமினான்.


“புரியுது இல்ல போனை வைடா, நானாக கூப்பிடும் வரை டிஸ்டர்ப் பண்ணாதே” என்று பேசிவிட்டு போனை வைத்தான்.


அப்போது தான் கண்விழித்திருந்த தாரிகாவிற்கு, செந்தூரன் போனில் பேசியதை கேட்டிருந்தாள். அவனை சுட்டெரித்து விடுவது போல முறைத்து பார்த்தாள்.


அவளின் பார்வையை சந்திக்க முடியாமல் பக்கவாட்டாக திரும்பி தலையை கோதிக் கொண்டான். 


மீண்டும் திரும்பி அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு, “சரி குளித்து தயாராகு, சாப்பாடு ஆர்டர் செய்திருக்கேன், சாப்பிடலாம்” என்றான்.


அவன் சொன்னது காதில் விழாதது போல திரும்பி படுத்துக் கொண்டாள் தாரிகா.


“தாரா, நேற்று இரவு கூட சாப்பிடலை. மணி பத்தாக போகுது. எழுந்து குளி” என்று அதட்டினான். அவளிடம் அசைவே இல்லை.


அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகே வந்தவன் தன் இருகைகளாலும் அப்படியே அவளை தூக்கினான். மறுபடியும் என்ன செய்ய போகிறானோ என்று பதட்டத்துடன் அவனையே விழிவிரித்து பார்த்தாள் தாரிகா. 


அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்துக் கொண்டவனாக தொண்டையை செருமி, “இப்போதைக்கு உன்னை குளிக்க வைக்க போகிறேன். நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, அப்புறம்…” என்றவனை முறைத்தாள்.


“முதலில் கீழே இறக்கி விடு, நானே குளிச்சு தொலைக்கிறேன்” என்றாள் சிடுசிடுவென்று. 


அவளை குளியலறைக்கு முன்னே இறக்கி விட்டவன், “நீ குளிச்சிட்டு இரு, நான் தற்சமயத்திற்கு இலகுவான டிரஸ் வாங்கிட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டு மறக்காமல் கதவை வெளிப்புறம் பூட்டிக் கொண்டு சென்றான்.


அவள் குளித்துவிட்டு பெரிய டவலை மட்டும் கட்டிக் கொண்டு அவனுக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்தில் அவன் கதவை திறந்து உள்ளே வந்து அவளின் நிலையை பார்த்து அதிர்ந்தான். கதவை தாழிட்டு விட்டு அவளை அழுத்தமாக மேலும் கீழும் ரசித்து பார்த்துக் கொண்டே  மோகத்துடன் அவளை நெருங்கி வந்தான். அவளோ அவனின் கைகளில் இருந்த துணிப்பையை வெடுக்கென்று பிடுங்கி கொண்டு மீண்டும் குளியலறைக்குள் சென்று விட்டாள்.


வாயை ஊதி தன் நீண்ட பெருமூச்சை வெளிவிட்டான். ஏக்கமாக குளியலறையே அவன் பார்த்துக் கொண்டிருக்க, அவள் உடலை ஒட்டியிருந்த இறுக்கமான சுடிதாரை அணிந்துக் கொண்டு வந்து நின்றாள். அந்த உடை அவளின் அங்க வளைவுகளை அப்பட்டமாக அவனுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, கண்களால் அவளை கபளீகரம் செய்தான்.


அவனை பார்த்து மனதிற்குள் திட்டிக்கொண்டே, சுடிதாருக்கு கொடுக்கப்பட்டிருந்த மேலாடையை அவள் மேல் படர விட்டுகொண்டு அவனை முறைத்தாள். தொண்டையை செருமிக் கொண்டு பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டான்.


சற்று நேரத்தில் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட, அதை வாங்கி இருவரும் சாப்பிடுவதற்கு பறிமாறினான். தாரிகா மறுப்பேதும் சொல்லாமல் உண்ண தொடங்கினாள். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்று புரியாமல், அவளை கேள்வியாக நோக்கியபடி அவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.


அவள் அவன் மேல் கோபத்தை காட்டினாலும், அதில் வெறுப்பு இல்லை. சற்றுமுன் அவனுடன் இணைய மறுத்தாலும், அவன் கைகளில் அவன் குழைந்து போயிருந்தாள். இப்போது முகம் நிர்மலமாக இருந்தது. உண்மையில் இவள் சித்தார்த்தை விரும்பி இருந்தால் இதற்கு எல்லாம் சாத்தியமே இல்லையே? புருவ முடிச்சுடன் அவளையே பார்த்தபடி சாப்பிட்டு முடித்தான்.


இருவரும் சாப்பிட்டு முடித்ததும், “நான் இன்னும் கொஞ்சம் உனக்கு தேவையான திங்க்ஸ், மற்றும் எனக்கும் டிரஸ் வாங்கிட்டு வருகிறேன்” என்று திரும்பி அறைக்கதவை நோக்கி நடந்தான்.


ஆக இப்போதைக்கு இவன் இங்கிருந்து கிளம்ப போவதில்லை என்று உணர்ந்தவள் பெருமூச்சொன்றை விட்டாள். பின்பு ஏதோ நினைவு வந்தவளாக, “செந்தூரா” என்று அழைத்தாள்.


அந்த அழைப்பில் அப்படியே சடர்ன் பிரேக் போட்டு நின்று அவளை திரும்பி பார்த்து முறைத்தான். “என்னடி மரியாதை எல்லாம் குறையுது? எப்பவும் மாமான்னு தானே கூப்பிடுவே? கல்யாணம் பண்ணிக்கிட்டால் மரியாதை கொடுக்கமாட்டியா?” என்றான் அழுத்தமாக.


எப்போதும் மாமா என்றே அவள் அழைத்து பழக்கப்பட்டதால் அவனுக்கு ஏதோ மாதிரியாகி விட்டது, எப்பவாவது வெறுப்பேற்ற செவப்பா என்பாள். ஆனால் அதில் குறும்பு இருக்கும், இப்போது அவளின் அழைப்பில் குறும்பு இல்லை. அழுத்தம் மட்டுமே இருந்தது.


“நீ எனக்கு மாமா இல்லை, என்னை கடத்திட்டு வந்து கல்யாணம் செய்துகிட்ட செந்தூரமித்ரன். இனி உன்னை ஒரு போதும் டேஷ்னு அழைக்க மாட்டேன்” என்றாள் வெறுப்பாக.


கொஞ்சம் முன்னாடி அவளின் நிர்மலமான முகத்தை பார்த்து சந்தோஷப்பட்டவன்,. இப்போது அவள் வெறுப்பை உமிழவும், இறுகி போய் நின்றான். “எப்படியோ கூப்பிட்டு தொலை. இப்போ எதுக்கு கூப்பிட்டே?” என்றான் அழுத்தமான குரலில்.


“இப்போதைக்கு வீட்டிற்கு அழைச்சிட்டு போக மாட்டேன்னு தெரியும், இந்த ஊரில் எதாவது கோயில் இருந்தால் அங்கேயாவது அழைச்சிட்டு போ” என்றாள் அவனை நேராக பார்த்து.


திருமணம் ஆகி முதன்முறையாக கோவிலுக்கு அழைச்சிட்டு போ என்று சொன்னவளை ஆச்சரியமாக பார்த்தவன், “சரி கிளம்பு போகலாம்” என்றான் மென்மையான குரலில்.


தாரிகா தயாராகி வந்ததும் அவளை அழைத்துக் கொண்டு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றான்.


அவள் உள்ளே செல்லாமல் பூக்கடையின் எதிரே சற்று தயங்கி நிற்கவும், பூவைத் தான் கேட்கிறாள் என்று ஐந்து முழம் பூ வாங்கி அவள் கைகளில் கொடுத்தான், அப்போதும் அவள் அங்கேயே தயங்கி நிற்கவும், என்னவென்று புருவம் உயர்த்தி கேட்டான்.


அங்கிருந்த மஞ்சளால் கட்டியிருந்த தாலி கயிற்றை காட்டினாள். “இது எதற்கு?” என்றவனிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள். யோசனையாக அவளை பார்த்துக் கொண்டே அதை வாங்கி அவளிடம் கொடுத்தான்.


அமைதியாக கோவிலின் உள்ளே சென்றவள், கடவுளின் முன்னே நின்று அந்த தாலியை அவனிடம் நீட்டினாள், அவன் புரியாமல் அதை கைகளில் வாங்கி என்ன என்பது போல புருவம் உயர்த்தினான். அவள் அழுத்தமாக பார்த்து முறைத்ததிலேயே தெரிந்தது, பதில் பேசாமல், அந்த மஞ்சள் கயிற்றை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான்.


செந்தூரன் இறைவனின் சன்னிதியில் மஞ்சள் கயிற்றை கட்டிய பின்பு, அறையில் அவன் கட்டியிருந்த தங்க தாலியை கழற்றி அப்படியே அங்கிருந்த உண்டியலில் போட்டாள். அவன் கட்டிய மஞ்சள் தாலியில் குங்குமத்தை வைத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள்.


கலங்கிய கண்களுடன் இறைவனை நோக்கி பிராத்திப்பவளை ஆச்சரியமாக விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தான் செந்தூரன்.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post