இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--5 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 18-04-2024

Total Views: 33654

இதயம் 5

     சில நாட்கள் கழிந்த பிறகான ஒரு மாலை வேளையில், “மினியைத் தனியா விட்டுட்டு ஒரு மாசம் எப்படி நாம அங்க தங்க முடியும்“ கணவனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் வதனி.

     “எனக்கும் அந்தக் கவலை தான். ஆனால் என்ன பண்ண முடியும் சொல்லு. என்னை எடுத்து வளர்த்த என் சித்தப்பா, வாழ்க்கையோட இறுதிக்கட்டத்தில் இருக்கார். இந்த மாதிரி நேரத்தில் அவர் கூப்பிடாமலே நாம அவர் கூட இருந்திருக்கணும்.

     என்ன பண்றது, நம்ம வாழ்க்கையைப் பார்த்துக்கிற பிஸியில் இருந்திட்டோம். இப்ப அவரே கூப்பிடுறார் இதுக்கு அப்புறமும் போகாமல் இருந்தால் நல்லா இருக்காது“ ஜீவன் நிலமையை எடுத்துச் சொல்ல அதில் இருந்த உண்மை வதனிக்கும் புரிந்தது. கூடவே மினியை என்ன செய்வது என்பதும் பெரிய யோசனையாக இருக்க, சற்று நேரத்தில் ஜீவனே நல்ல ஒரு யோசனை சொன்னான்.

     “நான் மினியோட காலேஜ் ஹாஸ்டலில் பேசிப் பார்க்கிறேன். நாம திரும்பி வரும் வரைக்கும் மட்டும் அவ அங்கேயே இருக்கட்டும், அதுக்குப் பிறகு நம்ம வீட்டுக்கு வரட்டும்“ என்க, அது நல்ல யோசனையாகத் தோன்றியதால் சரியென்று ஒப்புக்கொண்டாள் வதனி.

     ஆனால் இவர்களின் நேரம் ஹாஸ்டலில் எந்த அறையிலும் வேக்கன்சி இல்லை என்று வார்டன் கைவிரித்துவிட என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டிருந்தவனைத் தேடி வந்தாள் மினி கூடவே தேன்மொழியும்.

     “என்னாச்சு அத்தான்“ வீட்டில் நடக்கும் பேச்சுவார்த்தை அவளுக்குத் தெரிந்தே இருந்ததால் விவரம் தெரிந்து கொள்வதற்காகக் கேட்டவளிடம் நடந்ததை தெரிவித்தான் அவன்.

     “இதுக்கு எதுக்கு சார் இவ்வளவு தடுமாற்றம். ஒரு மாசம் தானே மினி என்னோட வீட்டில் என்கூடவே இருக்கட்டும். எக்ஸாம்ஸ் வேற வரப்போகுது. சேர்ந்து படிக்க எங்க இரண்டு பேருக்கும் இது உதவியா இருக்கும்“ தேன்மொழி ஒரே போடாகப் போட, ஜீவனின் உள்ளம் ஆட்டம் கண்டது.

     அவன் முகத்தில் வந்து போன மாற்றத்தைக் கவனித்த மினி அவனுக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து தோழியைச் சமாதானப்படுத்த முயன்ற வேளையில், இரண்டாம் செமஸ்டருக்கான கல்லூரி பணம் கட்டுவதற்காக வந்திருந்த தேன்மொழியின் பெற்றோர் இந்தப் பேச்சுவார்த்தையைக் கவனித்து, தாங்கள் முன்வந்தனர்.

     அவர்களும் தொழில் சம்பந்தமாக பத்து நாள் பயணமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் தேன்மொழியும் அவள் தங்கை பிரியாவும் தனியே தான் இருக்க வேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் மினி அவர்களோடு தங்கினால் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பார்கள் என்று பேச, மினியின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைக் கவனித்தவனுக்கு சரி என்று சொல்ல ஆசை தான் என்றாலும் சாணக்கியனின் கோப முகம் கண் முன் வந்து பயமுறுத்த, “வதனிகிட்ட இதைப் பத்தி பேசணும். மினியோட விஷயத்தில் கடைசி முடிவு அவள் தான் எடுக்க வேண்டும்“ என்று சமாளிக்கப் பார்த்தான்.

     “என்ன மினி, சென்னை வந்து கிட்டத்தட்ட எட்டு மாசம் ஆகப் போகுது. இன்னும் உனக்கான முடிவுகளை எடுக்க நீ கத்துக்கலையா? இப்பவும் அக்காவும் அத்தானும் தான் முடிவெடுக்கணுமா? வயசு இருபது இருக்காது“ கேட்டு உசுப்பிவிட்டார் தேன்மொழியின் தாய்.

     “எனக்கு என்னோட ஆசை மட்டும் தான் பெரிதா தெரியும் அம்மா. ஆனா என் அக்கா, அத்தானுக்கு என் ஆசையோடு சேர்த்து என் பாதுகாப்பு, எதிர்காலம் எல்லாம் முக்கியம். அதனால் என் விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பு காட்டுவாங்க தான். மத்தவங்களை மாதிரி அதை அடக்குமுறையா என்னால் நினைக்க முடியாது“ பொறுமையாகவே தன்நிலையை எடுத்துச் சொன்னாள்.

     இந்த அளவு புரிந்து நடந்து கொள்ளும் பெண்ணிற்கு அவள் விருப்பப்படி நடந்து கொள்ள விடவில்லை என்றால் எப்படி என யோசித்த ஜீவன் மினி தேன்மொழியின் வீட்டில் தங்க அனுமதித்தான்.

     வதனியிடம் இதைச் சொல்லும் போது, பாதுகாப்பான இடம் தான் என்றால் பிரச்சனை இல்லை என்றுவிட்டாள். அந்த நேரத்தில் கூட அவளுக்கு தேன்மொழி வீடு இருக்கும் ஏரியாவைப் பற்றிக் கேட்கத் தோன்றவில்லை. ஜீவனின் மீது அத்தனை நம்பிக்கை அவளுக்கு.

     கணவன், மனைவி இருவரும் கனடா கிளம்பும் முன்னர் தங்கையை அவள் தோழியின் வீட்டில் விடும் பொறுப்பைக் கூட கணவனின் வசம் தான் ஒப்படைத்தாள் வதனி.

     மினியை தேன்மொழியின் வீட்டில் விட்டுவிட்டு, அந்த வீட்டுப் பெரியவர்கள் திரும்பி வரும் வரை எப்படியெல்லாம் பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் இருவருக்கும் சில அறிவுரைகள் சொன்ன ஜீவன் கிளம்பத் தயாராகி வெளியே வந்தான்.

     அவன் காரில் ஏறும் போது சரியாக சாணக்கியனின் வீட்டில் இருந்து வெளியே வந்தான் எழில். ஜீவனைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வர கோபம் கொண்டவனின் முகம் தன்னால் சிவக்க ஆரம்பித்தது எழிலுக்கு. அதைக் கவனித்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், நண்பனின் நலனைத் தெரிந்து கொள்வதற்காக அருகே வந்தான் ஜீவன்.

     அதனால் இன்னும் பலமாக முறைத்த எழில், அவனை உதைப்பதாக கற்பனை செய்து கொண்டு பைக்கின் கிக்கரை உதைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றான். இதையெல்லாம் மேல் மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த உருவம் ஒன்று ஜீவனின் பார்வை அவ்விடம் வரவும் சுதாரித்து விலகியது. கனத்த மனதுடன் சில நொடிகள் அங்கேயே நின்று அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவன் அதன்பிறகு அங்கிருந்து கிளம்பினான்.

     மூன்று பெண் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்தால் அங்கே கொண்டாட்டத்திற்கு பஞ்சம் ஏது. சத்தமாகப் பாட்டுக்கேட்பது, டேன்ஸ் ஆடுவது, குதிப்பது என அல்லோலப்பட்டது தேன்மொழியின் வீடு.

     மாலை நேரம் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் விடுகிறேன் என்று மினி ஆரம்பித்த வேலை எப்போது தண்ணீர் விளையாட்டாக மாறியதோ யாரும் அறியார். பிரியாவும் அவளும் சேர்ந்து விளையாடும் அழகை தன் அறையின் பால்கனியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான் சாணக்கியன்.

     அவனும் அவனுடைய நிலாவும் கூட இப்படித்தான். அவர்கள் இணைந்து தோட்டத்துச் செடிகளுக்கு நீர் ஊற்றச் சென்றால் செடிகளை விட அவர்கள் இருவரின் மேனியில் தான் நீர் அதிகம் இருக்கும். அதே நினைப்பில் விளையாடும் பிள்ளைகள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

     அவன் கண்களில் இருந்தது சுத்தமான ரசனைப் பார்வை மட்டுமே. பூக்களில் தேன் அருந்துவிட்டு சந்தோஷமாகப் பறந்து திரியும் பட்டாம்பூச்சி ஒன்றை வேடிக்கை பார்க்கும் குழந்தையின் மனநிலையில் மினியையும், பிரியாவையும் ரசித்துக்கொண்டிருந்தான்.

     கண்களில் அன்பும், ரசனையும் கொண்டிருப்பவர்களுக்கு கள்ளிப்பழம் கூட பேரழகு தான். ஆனால் அதே கண்களில் சந்தேகத்தையும், பொறாமையையும் வைத்திருப்பவர்களுக்கு மாம்பழம் கூட  அரளிப்பழம் தான் என்பது போல் அவ்விடம் வந்த தேன்மொழிக்கு சாணக்கியனின் கண்களில் இருந்த ரசனை தவறாகத் தோன்ற தங்கை மற்றும் தோழியைத் திட்டி அழைத்துச் சென்றாள்.

     காரணம் கேட்ட மினியிடத்தில், “குனிந்து உன்னைப் பார்“ என்றுவிட்டு வேகமாக வெளியேறினாள் தேன்மொழி. உடலோடு ஒட்டிய உடை தண்ணீரின் உபயத்தால் தோலோடு ஒட்டிய இன்னொரு தோலாகவே மாறிப் போய் இருக்க, “ச்சே“ என தன்னைத் தானே கடிந்து கொண்டு உடை மாற்றுவதற்காக தன்னறை வந்தாள்.

     சொந்த வீட்டில் தினமும் உபயோகிக்கும் அறை தான் என்றாலும் உடை களையும் முன்னர் ஜன்னல், கதவை சாற்றிக்கொள்வது நல்லது என்று வதனி அடிக்கடி வலியுறுத்துவது நினைவு வர அதைச் செயலாற்ற முற்பட்டாள். திறந்திருந்த ஜன்னல் வழியே இன்னமும் சாணக்கியன் அங்கேயே நிற்பது தெரிந்தது.

     உள்ளத்தில் கபடம் இருந்தால் தேன்மொழி தன்னை அழைத்து வந்த உடன் அவனும் சென்றிருக்க வேண்டுமே. ஆனால் அவன் இன்னமும் அங்கேயே நிற்கிறானே என்று ஒரு கணம் நினைத்தவள் அதன்பிறகு பெரிதாகக் கண்டுகொண்டாள் இல்லை.

     அடுத்த நாள் காலையில் தங்கள் வீட்டு நாய்க்குட்டியை வாக்கிங் அழைத்துச் சென்றார்கள் தேன்மொழியும், மினியும். அந்த நேரத்தில் சாணக்கியனைப் பார்ப்பதற்காக வந்தான் எழில்.

     “உருப்படியா ஒரு வேலை செய்வதை விட்டுட்டு எப்பப் பார்த்தாலும் நண்பனுக்கு கூஜா தூக்கிக்கிட்டு அலைய வேண்டியது“ தன்னுள் சொல்லிக்கொண்டே வெளியே அவனைப் பார்த்து முறைத்து வைத்தாள்.

     “ஏற்கனவே அனல் தாங்க முடியல. இப்ப நீயும் இப்படி கண்ணாலே அனலைக் கக்கினால் தமிழ்நாடு தாங்காது மா“ நக்கலடித்துவிட்டுச் சென்றான் அவன்.

     “யாரு டி அவர். உனக்குத் தெரிந்தவரா“ கேட்ட மினிக்கு எந்த பதிலும் சொல்லவில்லை தேன்மொழி. கண்கள் மட்டும் சாணக்கியன் வீட்டை வெறித்தது. அவளிடத்தில் இருப்பது பொறாமை. தனக்குப் பிடித்தவனுக்கு தன்னை விட அதிகம் பிடித்தவனாக சாணக்கியன் இருக்கிறானே என்கிற ஆற்றாமை. அது தான் அவ்வப்போது சாணக்கியனைப் பற்றி தவறாகப் பேச வைக்கும் அவளை.

     சதுரங்க இல்லத்தின் உள்ளே, “என்ன எழில் காலையில் நல்ல தரிசனம் போல“ கிண்டலுடன் வரவேற்றார் அரசன். “ஏன் அங்கிள் நீங்க வேற“ சலிப்புடன் சொல்லிக்கொண்டு நண்பனின் அருகே அமர்ந்தான் அவன்.

     “புரிதல் இல்லா சண்டைகளை வளரவிடக்கூடாது எழில். அனுபவஸ்தன் சொல்றேன், உனக்கு அந்தப் பொண்ணு வேண்டும் என்றால் அவகிட்ட போய் உன் மனதைப் புரியவை“ அறிவுரை சொன்னான் சாணக்கியன்.

     “நாம ஒருத்தர் மேல் காட்டுற அன்பு எதிராளியால் உணரப்பட வேண்டியதே தவிர, நம்மால் புரியவைக்கப்பட வேண்டியது இல்லை சாணக்கியன். ஒருத்தன் காட்டும் அன்பை புரிஞ்சுக்க கூட முடியாத ஆட்கள் எல்லாம் எதுக்காக காதலிக்கணும், கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படணும் சொல்லு“ என்க, சாணக்கியனிடம் அதற்குப் பதில் இல்லை.

     “அவ ஆசைப்பட்ட படியெல்லாம் நான் நடந்துக்கிறது தான், அவ மேல நான் உண்மையான அன்பு வைத்திருப்பதற்கு அடையாளம் என்று அவ நினைச்சா தப்பு அவகிட்ட தான் இருக்கே தவிர என்மேல் இல்லை. அவளைக் கட்டிக்கிட்டா நாளும் பொழுதும் சண்டை தான் வரும்“ சலிப்பாக வந்தது எழிலின் வார்த்தைகள்.

     “அவ சின்னப்பொண்ணு, உனக்கு எருமைமாடு வயசாகுது. இத்தனை வருடத்தில் நீ செருப்படி பட்டு உள்வாங்கிக் கொண்ட பொறுமை மற்றும் பொறுப்புகளை இந்தச் சின்ன வயதில் அவகிட்ட எதிர்பார்க்கிறது எந்த விதத்தில் நியாயம்.

     சமஉரிமைக்கம், சமத்துவத்துக்கும் உண்டான வித்தியாசம் தெரியும் தானே. யாருக்கு எது பற்றாக்குறையோ அதைக் கொடுப்பது தான் உண்மையான ஈகையும், காதலும்.

     அவளோட வயசுக்கு நீ கொஞ்சம் பொறுத்துப் போனா, அவ எல்லாவற்றையும் கத்துக்கும் காலம் வரும் போது இப்ப நீ படுற கஷ்டத்துக்கும் சேர்த்து உன்னை இன்னும் அதிகமாகக் காதலிப்பா“ நல்லவற்றைக் கோடிட்டு காட்டினான் சாணக்கியன்.

     “காதலே இல்லை, உலகத்தில் உள்ள எல்லாப் பொண்ணுங்களும் மோசம் என்று சொல்லும் ஆட்களுக்குத் தான் உறவுகளுக்குள் வரும் பிரச்சனையைத் தீர்க்கும் வித்தை அத்துப்படியா இருக்கு“ எழில் நக்கலடிக்க, சாணக்கியன் அவனை முறைத்தான்.

     “இப்ப உள்ள பொண்ணுங்க எல்லாம் ரொம்ப உஷார் சாணக்கியா. காதல், கல்யாணம் என்கிற பெயரில் தன்னிடம் மாட்டும் ஆண்களை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கலாம் என்கிற வித்தை நல்லாத் தெரிஞ்சவங்க.

     இதில் ஹைலைட் என்ன தெரியுமா? அவங்க நம்மை ஆட்டிப் படைக்கிறாங்க என்பது நமக்கே தெரியாது. அப்படி இருக்கும் அவங்களோட செயல்கள் ஒவ்வொன்னும்.

     முன்னாடியெல்லாம் அழுது சாதிப்பாங்க, இப்ப எல்லாம் எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா. உனக்காகத் தான் நான் என் அப்பா அம்மா எல்லோரையும் விட்டு வந்தேன்னு சொல்லியே சாதிச்சிடுறாங்க.

     எனக்கு என்னடா அவசரம், இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சம்சார சாகரத்தில் குதிச்சுக்கிறேன். அதுக்கு அப்புறம் சாகும் வரை தள்ளாட்டம் தான். அதுவரையாச்சும் என் சுதந்திரத்தை நான் அனுபவிச்சுக்கிறேனே“ என்ற நண்பனை விசித்திரமாகப் பார்த்த சாணக்கியன், “எல்லாப் பொண்ணுங்களும் நீ நினைக்கிற மாதிரி தான் இருப்பாங்கன்னு நினைக்கிறது தப்பு“ என்று ஆரம்பித்தவன், எழில் எதை நினைத்து காய் நகர்த்தினானோ அதைப் போலவே தான் நடந்து கொள்வதை உணர்ந்து கண்கள் மூடி தன்னை நிதானித்தவன் எழுந்து ஜன்னல் அருகே சென்றான்.

     “நீ பண்ற எதுவும் எனக்கு சரியாப் படல எழில். என்னைக்காவது ஒருநாள் நீ அவன்கிட்ட செமத்தியா வாங்கப் போற பார்“ அரசன் எடுத்துரைத்தார்.

     “அவன் தானே திட்டுவான், வாங்கிக்கிட்டாப் போச்சு. என்னைக்காவது ஒருநாள் என் காதில் இருந்து புகை வரும் அளவு அவன் என்னைத் திட்டினால் கூட, ரோஷப்பட்டு போற மாதிரி போய், திரும்ப வந்து தன் முயற்சியில் பின்வாங்காத வேதாளம் மாதிரி உங்க பையனோட தோளைக் கெட்டியாப் பிடிச்சுக்குவேன்“ என்று சொல்லி சிரித்தான் எழில்.

     “ஏன்டா இந்த சூடு, சுரணை எல்லாம் சொல்றாங்களே. அந்த வார்த்தைகளுக்கு உனக்கு அர்த்தம் தெரியுமா?“ நக்கலடித்தார் அரசன்.

     அதைப் புரிந்து கொண்டு, “நக்கலு, ஆனா சரியாத் தான் சொல்றீங்க. எனக்கு அவன் கிட்ட இந்த வெட்கம், மானம், சூடு, சுரணை எதுவும் கிடையாது தான். ஆமா அதெல்லாம் ஏன் இருக்கணும், எதுக்கு இருக்கணும்.

     அவனுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சு தான் நான் பண்றேன். அதனால் கோபத்தில் ஏதாவது திட்டினா, உடனே சரிதான் போடா நீயும் தேவையில்லை உன் நட்பும் தேவையில்லைன்னு தூக்கிப் போட்டுட்டு போயிடணுமா? அப்படியெல்லாம் என்னால் போக முடியாது. பாதியில் விட்டுட்டுப் போகிற அளவில் பலவீனமானது இல்லை எங்க நட்பு.

     இவனை இப்படித் தனிமரமா விட்டுட்டேனேன்னு காலம் போன கடைசியில் உட்கார்ந்து யோசிக்கிறதை விடுத்து இப்பவே முடிந்த வரை போராடிப்பார்த்துட்டா நல்லது தானே.

     அவன் மாறினால் டபுள் சந்தோஷம், இல்ல இப்படி ஜடமாத் தான் இருப்பேன் என்று அவன் நின்றால் குறைந்தபட்சம் அவனோட நல்லதுக்காக முடிந்தவரை போராடினேன் என்று மனதைத் தேத்திக்கலாம்“ பெரிய விஷயத்தை சாதாரணமாகச் சொல்லிவிட்டு தோள்களைக் குலுக்கினான் எழில்.

     “எனக்காக இல்லாமல் போனால் கூட, அவனுக்காக இல்லாமல் போனால் கூட உனக்காகவாச்சும் அவன் மனதில் மாற்றம் வரணும் எழில். அவனும் மத்தவங்களை மாதிரி மனைவி, குடும்பம், குழந்தை என்று வாழனும்“ என்று பெருமூச்சுவிட்டார் அரசன்.

     “நீங்க கவலையே படாதீங்க அங்கிள். இருப்பதிலேயே அதிக துன்பம் தரக்கூடிய விஷயம் என்ன தெரியுமா? துணை இல்லாமல் தனியாகக் காலம் கழிப்பது தான். கடவுள் எந்த ஒரு உயிரினத்தையும் அதற்கான பிரத்யேகத்துணை இல்லாமல் உருவாக்குவதில்லை. அந்த வகையில் நம்ம சாணுவுக்கான பொண்ணு கண்டிப்பா எங்கேயாவது இருப்பா. சரியான நேரத்தில் அவனைத் தேடி வருவா பாருங்க“ என்று எழில் இங்கே சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில், தன்னை ஏமாற்றிவிட்டு சாணக்கியனின் வீட்டிற்குள் நுழைந்த நாய்க்குட்டியைப் பிடிப்பதற்காக முதன்முதலாக சாணக்கியனின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் மின்மினி.

 


Leave a comment


Comments


Related Post