இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பாவை - 13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK018 Published on 18-04-2024

Total Views: 18241

பாவை - 13

இரவு நேரம் பணிக்கு வழக்கம் போல் நந்தன் வர, வந்தவனின் விழிகள் முதலில் தேடியது என்னவோ அஞ்சனாவை தான். அவளைப் பார்த்த பின் தான் சற்று நிம்மதி உணர்வு.

 அப்படியே மூச்சினை இழுத்து விட்டவனோ தன்னிருக்கையில் அமர்ந்து வேலையைக் கவனித்தான். பகலில் வரும் அவர்களின் ஹெச். ஆர் அன்று இரவு வந்திருக்கவே அனைவரும் அவரை பற்றி தான் பேசினார்.

“இப்போ தானப்பா எனக்கு கொஞ்சம் நிம்மதி. நம்ம மட்டும் ராத்திரி வேலைப் பார்க்கணுமா ? இப்போ பாரு நம்ம சாரும் நைட் சிப்ட் வந்துட்டாரு “ என்க,

“எந்த சார் ?” கணினியின் முன் கவனமாக இருந்த அஞ்சனா கவனிக்காதுப் போனதால் கேட்க, 

“சதிஷ் சார் “ என்றான் அருகில் இருந்தவன்.

“ஒ அப்படியா ! ஏன் இதுக்கு முன்னாடி அவங்க எல்லாம் வந்ததில்லையா ?”

“நான் இங்கே வேலைக்கு வந்து நாலு மாசம் ஆகுது. இதுவரைக்கும் இது தான் என்னோட ரெண்டாவது நைட் சிப்ட். நான் பார்த்த வரைக்கும் இல்லை “ என்கவே, சரியெனக் கேட்டுக் கொண்டாள்.

சிறிது ஓய்வு நேரம் இருக்கவே, நித்திரை வந்து அஞ்சனாவை அழைக்கவே தலையைச் சிலுப்பியவள், காபி அருந்த அதன் இடம் நோக்கிச் சென்றாள்.

அங்கே தனக்காக ஒரு காபியை எடுத்துக் கொண்டு கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்க, அமைதியான சாலையாக அவளின் விழிகளுக்கு காட்சிக் கொடுத்தது.

யாராவது ஒருவர் தான் அவ்வப்போதுச் செல்வது தெரிய, நீண்ட நாட்களுக்கு பின் இப்படியொரு நிகழ்வைக் கண்டாள்.

“நல்லாயிருக்குல “ என்ற குரல் அவளின் அருகில் கேட்க, பட்டென திரும்பினாள். அங்கே அவளுக்கு முன் கரங்களில் அவளைப் போன்றே ஒரு காபியை வைத்துக் கொண்டு நின்றான் நந்தன்.

அவனை நியாபகம் இருக்க அவனின் பெயரோ மறந்து போயிருக்கவே, “நீங்க, அன்னைக்கு. உங்க பேர் “ அன்றைய நாளை நினைத்து கூற வந்தாள்.

“நான் தான் நந்தன் “ என்க,

“சாரி. மறந்துட்டேன். உங்களுக்கும் நைட் சிப்ட் தானா ?”

“ஆமா “

“கேட்க மறந்துட்டேன். நீங்க எந்த டிபார்ட்மெண்ட் “ 

“டெக்னிக்கல் “ என்றதுமே, சட்டென மின்னல் வெட்டியது.

“எப்போ இந்த ஆபிஸ்ல ஜாயின் பண்ணுனீங்க ?”

“ஏன் இதெல்லாம் கேட்குறீங்க ?”

“சும்மா தான். சரி நான் வரேன் “ மெல்லப் பேச்சினை கொடுக்கலாம் என நினைத்து செல்லப் பார்த்தாள். ஏனோ அவளிடம் சிறிது நேரம் பேச நந்தனுக்கு தோன்றவே தடுத்தான்.

“நில்லுங்க “

“என்ன ?”

“அதிகமா வேலை இருக்கா என்ன ?”

“பகல்ல தான் வேலை இருக்கும். இப்போ கொஞ்சம் குறைவா தான் இருக்கு “

“சரி. நான் இங்கே ஜாயின் பண்ணி ஏழு மாசத்துக்கு மேலாச்சு “ 

‘அப்போ, அக்கா இறந்ததுக்கு அப்பறம் வசந்த் கிட்ட இவரை பத்திக் கேட்டே ஆகணும்ன்னு இன்னைக்கு ‘ நினைத்துக் கொண்டுப் பேச்சினை வளர்த்தாள்.

முதல் நாள் என்பதால் இருவரும் பொதுவாக வேலையைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டனர். பின் நேரம் செல்வதை உணர்ந்து வேலையைப் பார்க்க கிளம்பி விட்டனர்.

வேலை முடிந்ததும் பார்க்கிங்கில் பார்த்த இருவருமே லேசாக புன்னகை மட்டும் வீசிக் கொண்டனர். அவளோ தன் இஸ்கூட்டியில் செல்ல, அவளுக்கேத் தெரியாது அவளின் இருப்பிடம் காண பின்னேச் சென்றான்.

அரை மணி நேரம் பயணத்திற்கு பிறகு எங்கு தங்கியிருக்கிறாள் என்பதை அறிந்தவனோ அவள் பத்திரமாகச் சென்ற பின்னே தன் வீட்டுக்கு கிளம்பினான்.

மதிய நேரம் போல் வசந்த்திற்கு அழைத்தவள் இரவில் அவனோடுப் பேசியதை கூறவே, “இந்த பேரை நான் இருக்கும் போது கேள்விப்பட்டது இல்லை அஞ்சனா. ஒரு வேலை எனக்கு அப்பறம் ஜாயின் பண்ணிருக்கலாம் “ என்றான்.

“ஆமா நீங்க வெளியேப் போன அதே மாசம் தான் ஜாயின் பண்ணிருக்காங்க. இவங்க அந்த போலீஸ்சோட தம்பியா இருக்குமோ ?”

“எனக்கு அது தெரியாது. ஆனா அந்த போலீஸ் போட்டோ கேட்டீல. இப்போ இருக்கு. நான் அனுப்புறேன். முகம் எதுவும் ஒத்துப் போகுதுதா பாரு அப்படியே பேச்சு வாக்குல கூட பிறந்தவங்க வேலை எப்படி கிடைச்சது விசாரிச்சுப் பாரு “ என்கவே, சரியெனக் கேட்டுக் கொண்டாள்.

கைபேசியை வைத்தவளுக்கு காவல் அதிகாரியின் போட்டோ வரவே, அதனை எடுத்துப் பார்த்தாள். இவனுக்கும் அவனுக்கும் சிறிது ஒத்துப் போவது போல் தான் தெரிந்தது.

இந்த போட்டோவில் இருப்பவன் மட்டும் அவனின் அண்ணனாக இருந்தால் ? தன் அக்காவின் கொலைக்கு உதவி புரிந்த இவனைப் பற்றி அறிந்தே ஆக வேண்டும். அக்காவின் கொலைக்கு இவன் தான் காரணமாக இருக்குமா ? அல்லது வேற யாருக்காவது உதவி செய்கிறேன் என்று இந்த வேலையை பார்த்தானா ? எப்படியோ ஆனால் வசந்த புகார்க் கொடுத்து இத்தனை நாட்கள் ஆகியும் இன்னும் விசாரிக்கவில்லையே !  யோசனையை விடுத்து சிறிது நேரம் நித்திரைக் கொண்டாள்.

அன்றிரவு வழக்கம் போல் வேலைக்குச் செல்ல, இருவருமே பார்த்துக் கொண்டனரே தவிர பேசும் வாய்ப்பு அமையவில்லை. அப்படியே நாட்கள் கடக்க, ஒரு நாள் அப்படியே அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“உங்க வீட்டுல எத்தனை பேர் ?”  இருவருக்குள்ளும் இப்போது சகஜமான உரையாடல் வந்திருந்ததால் அவனோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“நான், என்னோட பேரெண்ட்ஸ், அண்ணன், அண்ணி, தங்கச்சி, அண்ணன் பொண்ணு “

“உங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சும் ஒன்னா தான் இருக்காங்களா ?”

“ஆமா. ஜாயின் பேமிலி தான் “ என்க, சட்டென தன் குடும்பம் தான் நினைவில் தான் வந்தது.

ஒரு நாள் தன் அக்கா, அண்ணன் இருவருமே இருக்க, “வருங்காலத்தில நாம்ம எல்லாரும் ஒன்னா இருந்தா எப்படி இருக்கும் ? அப்படி தான் இருக்கணும். என்னைக்கும் பிரியக் கூடாது “ என்று தன் ஆசையைக் கூற, அவர்களும் சரி என்றதை இப்போது நினைத்துப் பார்த்தாள்.

விழிகளோ கலங்கி கண்ணீர் துளி சிந்த சட்டென தலை தாழ்த்தி துடைத்துக் கொண்டாள்.

“என்னாச்சுங்க ? நான் எதுவும் ஹேர்ட் பண்ணிட்டேன்னா ?” அவளுக்கு யாருமில்லை என்பதால் தன் குடும்பத்தைப் பற்றி கூறியதும் வருத்தம் கொண்டாள் என்று எண்ணினான்.

“ஒன்னுமில்லை “ என்றவளோ விலகிச் செல்ல முயல, விடாது அவளின் கரங்களைப் பற்றினான். அறிந்து மனதால் சலனப்பட்டு மங்கையைத் தொட்டான் என்றால் அது தான் அவனின் முதல் தொடுகை. 

தங்கை, அன்னைத் தவிர அவனின் வாழ்வில் மற்றொரு பெண்ணாய் மாறப் போகும் அஞ்சனாவை அவனோ உணரவில்லை.

“விடுங்க “

“முடியாது. எனக்கு உங்களைப் பத்தி எல்லாமே தெரியும் ?” என்க, அதிர்ச்சியோடு திரும்பி அவனின் முகத்தைக் கண்டாள். அவனின் முகத்தில் என்னக் கண்டாலோ அவளின் விழிகளோ நகர மறுத்தது. 

காயம் கொண்ட இதயத்தை அவனின் பார்வை மருந்திடுவது போல் உணர்ந்தாள். தன் வேதனை அவனின் வேதனை என்பது போல் தான் அவனின் கண்கள் அவளுக்கு கூறியது.

“உங்களுக்கு யாருமே இல்லைன்னு கேள்விப்பட்டேன். ஆசிரமத்துல வளர்ந்து இங்கே ஹாஸ்டல் தங்கியிருக்கீன்னு கேசவன் சொன்னான். கவலைப்படாதே உங்களுக்காக உறவு உங்க கூடவே தான் இருக்கும். என்னைக்கும் உங்களை விட்டு போகாது “ என்க, அவளோ தன் குடும்பத்தை நினைக்க, அவனோ தன் குடும்பத்தை நினைத்துக் கூறினான்.

அவனின் கூற்றில் தலையசைத்தவளுக்கு நிம்மதியான உணர்வு. தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டாள். இப்படியே நாட்கள் கடக்க, அவனிடம் கேட்க நினைத்ததை மறந்தாள். ஆனால் அவளுக்கு நினைவூட்டும் விதமாக அன்றைய நாளும் வந்தது.

இரவு பதினொரு மணி போல் சூ சத்தம் கேட்க யாரோ ஒருவன் அந்த அமைதியான நேரம் வரவே, அனைவரின் பார்வையும் அவனின் மீது தான்.

அஞ்சனாவும் திரும்பிக் காண, வந்தது என்னவோ அந்தக் காவல் அதிகாரி தான். பார்மல் உடையில் இருக்க நேராக வந்தவனோ ஹெச். ஆர் அறைக்குள் நுழைய, சந்தேகம் கொண்டாள்.

‘இவன் ஏன் இங்க வந்திருக்கான். வசந்த் கூட சொன்னாருல ரெண்டு மூனு தடவை வர்றதைப் பார்த்ததா ? அப்போ இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. அதுனால தான் தம்பியை வேலைக்கு சேர்ந்தானாம். இவன் தம்பி நந்தனா இல்லையான்னு இன்னைக்கு தெரிஞ்சிரும்ல ‘ நினைத்துக் கொண்டு தன் விழிகளைக் கூர்மையாக்கினாள்.

சில மணி நேரங்கள் கடந்து அந்த அறையை விட்டு அவனோ வெளியே வர, அதே நேரம் அவனின் எதிரேச் சென்று நின்றான் நந்தன்.

“என்னடா வேலை எப்படிப் போகுது ? உன்னோட தகுதிக்கு உனக்கு இங்கே எல்லாம் ஓகே தானே ? “ என்க,

“எல்லாமே ஓகே தான். நீ என்ன அண்ணே இவ்வளோ தூரம் ?”

“என் பிரெண்டை பார்க்க வந்தேன். நைட் சிப்ட் ஒத்து வரலைன்னா சொல்லு. பகல்லை மாத்தச் சொல்லுறேன் “ என்கவே, 

“அதெல்லாம் தேவையில்லை அண்ணா. இது நல்லாத்தான் இருக்கு. அண்ணியும்,பாப்பாவும் தனியா இருப்பாங்க. நீ வீட்டுக்கு போ அண்ணா “

“சரி நீயும் போய் வேலையைப் பாரு “ எனக் கூறி இருவரும் பிரிந்து எதிர் திசையில் சென்றனர்.

இதனைக் கண்ட அஞ்சனா உறுதியாக்கிக் கொண்டாள். இருவரும் அண்ணன், தம்பி என்று. வேலை முடிந்து கிளம்பியவளோ தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருகிறான் என்பது கூட தெரியாது இருந்தாள்.

வசந்திற்கு அழைத்து விசியத்தை கூற அவனோ, “சரி இதுக்கு அப்பறம் என்ன பண்ணுறதா இருக்கே ?” என்க,

“எனக்கு என்னமோ அக்கா இறந்ததுக்கும் எங்க ஹெச், ஆர் இந்த போலீஸ் ரெண்டு பேருக்கும் நிச்சியம் சம்மதம் இருக்கும்ன்னு தோணுது. பொண்ணுங்க விசியத்துல அந்த ஹெச். ஆர் கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கான். ஒரு வேலை அக்காவை அவன் எதுவும் “ அதற்கு மேல் கூற முடியவில்லை என்றாலும், வசந்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

“நான் இப்படியொரு எண்ணத்துல ஒரு நாளும் யோசிச்சி பார்த்ததில்லை. நீ சொல்லுறது கூட உண்மையா இருக்க வாய்ப்பு இருக்கு. உங்க அக்கா நைட் சிப்ட் பார்த்த அன்னைக்கு ஹெச். ஆர் இருந்தாரு “

 “இது போதும். அப்போ இனி அந்த ஹெச்.ஆர் பத்தி விசாரிச்சா தெரியப் போகுது. “

“எதுக்கு நீ கவனமா இரு. ஏன்னா அவரோட அப்பா அரசியல்ல இருக்காரு. அதுனால ஆள்பலம், பணபலம் ரெண்டுமே இருக்கும் “ என்கவே, சரியெனக் கேட்டுக் கொண்டாள்.

நாட்கள் கடக்க இப்போது இவர்களுக்கு பகல் சிப்ட் மாறியது. பகலில் தினமும் வேலைக்கு வந்துக் கொண்டிருக்க, கேசவனுக்கு இரவில் வேலை மாறியது. 

ஒரு நாள் தனியாக யோசனையாய் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருந்த அஞ்சனாவின் முன்னே வந்து அமர்ந்தான் நந்தன்.

“ஹாய் அஞ்சனா ?”

“ஹாய் “ 

“என்னாச்சு ? ரொம்ப டல்லா இருக்கீங்க ?” என்கவே, சட்டென நிமிர்ந்துக் கண்டாள்.

‘எப்படி இவனால் கண்டு பிடிக்க முடிந்தது ‘ நினைத்தவளோ, “தலைவலி” என்றாள்.

“ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்க்காதீங்க அஞ்சனா “

“சரி. அன்னைக்கு ஒரு நாள் ராத்திரி நம்ம ஆபிஸ்க்கு ஒருத்தர் வந்தாரே. நீங்க கூட அவர் கிட்ட பேசுனீங்களே ? யார் அவங்க ?”

“என் கூட பிறந்த அண்ணன் “

“அப்படியா ? எதுக்காக வந்தாங்க ? உங்களை பார்க்க வந்தது மாதிரி இல்லையே ?”

“நம்ம ஹெச்.ஆர் ரும் என் அண்ணனும் பிரெண்ட். பல வருஷமா ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்கு. அதுனால எனக்கு இந்த கம்பெனில வேலையே கிடைச்சது. இதுக்கு முன்னாடி நான் வேற இடத்துல தான் வொர்க் பண்ணுனேன் “

“சரி. எனக்கு வேலை இருக்கு அப்பறம் மீட் பண்ணலாம் “ என்றவாறு எழுந்துச் சென்று விட, தோள்களை குலுக்கிக் கொண்டு நந்தனும் சென்று விட்டான்.

ரேஷ்மியிடம் செய்கை, நடை, உடை அனைத்தும் சற்று மாறியது போல் தோன்றவே, அவளிடம் கேட்க நினைத்தாள் அஞ்சனா.

ஆனால் அவளோ எப்போதும் தான் பிஸியாக இருப்பதாக காட்டிக் கொண்டாள். மற்றவர்கள் கவனிக்க முடியாத ஒரு விசியத்தை அவளையேக் கண்டு கொண்டிருந்த அஞ்சனா கண்டு விட்டாள்.

ரேஷ்மி அடிக்கடி ஹெச். ஆர் அறைச் சென்று வருகிறாள் என்பதை. யார் அந்த அறைக்குச் சென்றாலும் முகம் சுருங்க, எரிச்சலோடு, கோபமாக அப்படி தான் வருவார்கள். எந்த வேலைச் செய்தாலும் குறை கூறும் மனிதன் அல்லவா ! அப்படியிருக்க இவள் மட்டும் குறுநகை வீசிக் கொண்டே சென்று வருவது ஏன் ?

உணவருந்திக் கொண்டிருந்த நொடி தான் அவளிடம் பேச முடியும் என்பதால் அன்று ஒரு வழியாக காத்திருந்து பிடித்து விட்டாள்.

“ரேஷ்மி “

“ஹாய் அஞ்சனா “ 

“என்ன ரொம்ப பிஸி போல ? காதல் வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது. ஒரு வழியாக லவ்வரை சமாதானப்படுத்திட்டையா ?”

“இல்லை. எங்களுக்குள்ள பிரேக்அப் ஆகிட்டு. நான் எவ்வளோ சொல்லியும் புரிஞ்சிக்கலை. வேலையை விட சொன்னான். என்னால முடியாதுன்னு சொன்னேன். பிரிஞ்சிட்டோம் “

“ஓ சாரிப்பா. நான் வேற தேவையில்லாம நியாபகப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன் “ என்க,

“அப்படியெல்லாம் இல்லை  நான் அதை எப்பவோ மறந்துட்டேன் “ என்ற நொடி, ரேஷ்மிக்கு கிஸ் சுமைலி போட்டு ஏதோ குறுஞ்செய்தி ஒன்று வந்தது.

அதனை அஞ்சனா பார்க்கும் முன்னே சட்டென எடுத்து புன்னகை முகமாக அதற்கு பதிலளித்தவளோ, “சரி கேபின்ல வேலை இருக்கு போய்ட்டு வரேன் “ எனச் சென்று விட்டாள்.

ரேஷ்மியின் செய்கை வித்தியாசமாக இருக்கவே குழம்பினாள் அஞ்சனா. காதலில் தோல்வி கண்ட பெண்ணாக இவள் இல்லை என்பதை உறுதியாக தெரிய, என்ன பெண் இவள் ?

மாலை நேரம் வேலை முடிந்ததுமே ரேஷ்மி கிளம்ப, அஞ்சனாவிற்கு ஏனோ சரியாக படவில்லை. அவளை பின் தொடர்ந்துச் செல்ல நினைத்தவளோ உடனே கிளம்பினாள்.

அவசரமாக கிளம்பும் அஞ்சனாவைக் கண்ட நந்தனும், ‘என்னாச்சு இவளுக்கு ? இவ்வளோ வேகமா எங்க போக போறா ?’ நினைத்துக் கொண்டு பின்னோடு நந்தனும் கிளம்பினான்.

ரேஷ்மியை அஞ்சனா பாலோ செய்ய, அவளை நந்தன் பாலோ செய்ய, மூவருமே அறிந்திருக்கவில்லை. ஒரு மணி நேரம் பயணத்திற்கு பிறகு இருள் சூழந்து விடவே நேராக ஹோட்டல் லார்ஜ் ஒன்றிக்குள் நுழைந்தாள் ரேஷ்மி.

‘இவளுக்கு இங்கே என்ன வேலை இருக்கப் போகுது ?’ நினைக்கும் போது தான் மதியம் கண்ட குறுஞ்செய்தி நினைவு வந்தது.

‘ஒரு வேலை புது பாய் பிரெண்ட் உசார் பண்ணிட்டாலோ. அதான் பார்க்க வந்திருக்காலோ ‘ நினைத்துக் கொண்டே அவளைப் போன்று இவளும் இஸ்கூட்டியை நிறுத்தினாள்.

உள்ளே நுழைந்தவளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.

தொடரும் ...

தங்களின் கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



Leave a comment


Comments


Related Post