இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
சொல்லாத காதல் இல்லாமல் போகுமா - 20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK009 Published on 18-04-2024

Total Views: 23119

“ஹேய் அபி இந்த லெகங்கா ல நீ ஏஞ்சல் மாதிரி இருக்க டி… ம்ஹ்ம் இன்னைக்கு உன் பக்கத்துல அபிநந்தன் எப்படி தான் தாக்கு பிடிக்க போறாரோ?” அலங்காரம் செய்த படி அவளி காதோடு ஒட்டி ரகசியமாக கேலி செய்தாள் கீர்த்தனா.


“ச்சூ போடி…” என்று அழகாக வெட்கம் கொண்டாள் அபிலாஷா.


“என்ன கீதூ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீயும் அபியும் ஓவரா சீக்ரெட் பேசிக்கிறீங்க…” பவி கேட்க


“ம்ம் இதெல்லாம் கல்யாணம் ஆன சீனியர்ஸ் பேசிக்க வேண்டியது.. நீங்க எல்லாம் சின்ன பொண்ணுங்க கெட்டுப் போய்ட கூடாதுல…” கீர்த்தனா கேலியாக சொல்ல


“ஓ… அப்படியா? இதோ இவளுக்கு நெக்ஸ்ட் மந்த் மேரேஜ் ஆகப் போகுது.. எனக்கும் வீட்ல அலையன்ஸ் பாக்குறாங்க சோ சத்தமா பேசுனா எங்களுக்கும் கொஞ்சம் ஐடியாஸ் எல்லாம் கிடைக்குமே..‌” ஜெனி கலாய்க்க பவி செல்லமாக அவளை முதுகில் தட்ட என்று கலகலப்பாக இருந்தது மணமகள் அறை. 


அபிநந்தன் வேறொரு அறையில் தயாராக பார்வதி மோகன்ராம் பத்மாவதி வந்தவர்களை வரவேற்று உபசரிக்க அபிலாஷாவின் சித்தப்பா சித்தி அத்தை மாமா கால் மேல் கால் போட்டு முன் வரிசையில் அமர்ந்து விட்டிருந்தனர்.


மணமகள் அறை தட்டப்பட பவி திறந்தாள். ஸ்டைலாக கண்ணாடி போட்டபடி நின்றிருந்த ப்ரதீப்பை ஏற இறங்க பார்த்தவள்


“ஏய் இது பொண்ணு ரூம்… பசங்களுக்கு அலௌவ்ட் இல்ல..” என்று கதவை சாத்த போக


“அப்போ ஏன் நீ இங்கே இருக்க?” என்று அவளை கலாய்த்தபடி கதவை தள்ளி திறந்து உள்ளே வந்தான் ப்ரதீப்.


“டேய் என்ன நக்கலா?” என்று அவள் முறைக்க அறைக்குள் வந்து யாரையோ தேடியவன்


“ஹேய் அபி ரெடியா? அம்மா பார்த்திட்டு வரச்சொன்னாங்க… என்று வந்தவன் ப்ப்பா! யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்கப் போட்டு உட்காந்திருக்கு?” என்று நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய்சேதுபதி போல பேச


“டேய் ப்ரதீப்…” என்று பல்லை கடித்து கண்ணை உருட்டினாள் அபி.


“ஐயோ அபி மா அப்படியே பேய் கெட்டப் போடுறதுக்கு பத்து பொருத்தமும் பக்காவா இருக்குடா…” என்று சொன்னவனை அடிக்க கையோங்க “ஐயோ நான் எஸ்கேப்” என்று வெளியே ஓடி வந்தான் ப்ரதீப்.



“ஜூஜூஜூ…. செல்லக்குட்டி அழக்கூடாது ஏன் அழறீங்க?” என்று ஒரு குழந்தையின் அழுகையை அடக்க முடியாமல் அவளே அழுவது போல முகத்தை வைத்திருந்தாள் அக்சயா.


“ஏய் எப்பவும் என்கிட்ட சமத்தா தானே இருப்ப.. இன்னைக்கு ஏன்டி இப்படி அழுவுற.. பப்பா அழாதடா இதோ அம்மா வந்திடுவாங்க” என்று அந்த குழந்தையை சமாதானம் செய்ய முயல முடியவே இல்லை.. விளையாட்டு காட்ட முயன்றாலும் அது எதையும் கவனிக்காது இவளின் லெகங்காவை பிடித்து இழுக்க 


“அடியே கூட்டத்துல மானம் போகுது… நான் உங்க வீட்டுக்கு வந்து கொஞ்சும் போது எல்லாம் நீ நல்லாத்தானே விளையாடுவ..‌ இப்போ என்ன பாப்பா.. அம்மா இப்போ வந்திடுவாங்க அது வரை அழாம இருடி…” என்று சிணுங்கலாக அவள் முடிக்க


“ம்ஹூம் அழறது குழந்தையா இல்ல அதை சமாதானம் பண்றது குழந்தையானே தெரியலையே…” என்று தலையை உலுக்கி கொண்டான் ப்ரதீப்.


ஆனாலும் அதை சுவாரஸ்யமாக பார்த்திருக்க அலங்காரத்திற்காக வைத்திருந்த பலூனை எடுத்து விளையாட்டு காட்ட அவள் உடையில் இருந்த ஜமிக்கி பலூனில் குத்தி பலூன் ‘டொப்’ என்று உடைய ஒரு நொடி அழுகையை நிறுத்தி விழியை உருட்டிய குழந்தை இன்னும் பெருங்குரல் எடுத்து அழ என்ன செய்ய என்றே தெரியாமல் சுற்றும் முற்றும் குழந்தையின் தாயை தேட 


குழந்தையின் தாய் வர “அக்கா சமாதானமே ஆகமாட்டேங்குறா..” என்று அக்சயா சிணுங்க


“அவளுக்கு பசி வந்திடுச்சு அச்சு… தாங்க்ஸ்டா இவ்வளவு நேரம் வைச்சிருந்ததுக்கு…” என்று சொல்லி குழந்தையை வாங்கி சென்றார்.


கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தை பசியாறி வர அக்சயா மீண்டும் வாங்கி கொஞ்ச இப்போது அந்த குழந்தை அவளோடு சேர்ந்து அழகாய் சிரிக்க அதனை அழகாய் மனதில் பதித்துக் கொண்டான் ப்ரதீப்.


நேரம் ஆக அபிநந்தன் மற்றும் அபிலாஷாவை மேடைக்கு அழைத்து வர வந்திருந்த விருந்தினர்கள் தாங்கள் வாங்கி வந்த பரிசுப் பொருட்களை தந்து வாழ்த்தி விட்டு புகைப்படம் எடுத்து கொள்ள அவர்களை சாப்பிட வைத்து வந்தவர்களுக்கு நினைவுப் பரிசு தந்து அனுப்பினர் மோகன்ராம் மற்றும் பத்மாவதி.


பின்னர் நண்பர்கள் சேர்ந்து கேக் கொண்டு வந்து மணமக்களை கேக் வெட்ட வைத்து கலகலப்பாக கொண்டு செல்ல தோழிகள் கேலி செய்தது போலவே அபிநந்தன் அபிலாஷாவின் அழகில் மயங்கி தொலைந்து போனான் என்று தான் சொல்ல வேண்டும்.


பின்னர் மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து ஆரத்தி எடுத்து வரவேற்றார் பார்வதி.


மறுநாள் காலை அபிநந்தன் எழுந்து வரும் போது பார்வதி நாற்காலியில் அமர்ந்து காலை பிடித்து கொண்டு இருக்க கிச்சனில் இருந்து வெந்நீர் கொண்டு வந்தாள் அபிலாஷா.


“எதுக்கு அபி… நேத்து நிறைய நேரம் நின்னுட்டே இருந்தேன் ல அதான்… நான் தைலம் தேச்சுக்கிறேன் அபி மா.” என்று சொல்ல


“இருக்கட்டும் ம்மா வெந்நீர் ஒத்தடம் கொடுத்திட்டு தைலம் தேய்ச்சா சீக்கிரம் சரியாகிடும்.” என்று அவளே ஒத்தடம் வைத்து விட


“அம்மா என்னம்மா திரும்ப மூட்டு வலியா?” என்று அவர் காலடியில் அமர்ந்தான் அபிநந்தன்.


“ஆமாப்பா… வயசாயிடுச்சு ல…” என்றிட 


“ம்ஹூம் உங்களுக்கு கீழே உட்கார்ந்து எழறதே ரொம்ப சிரமமா இருக்கும். இப்போ எல்லாம் கீழே படுத்து தூங்குறீங்க… இனிமே நீங்க ரூம்லயே தூங்குங்க…” என்று அபிநந்தன் சொல்ல


“இல்ல நந்தா அதெல்லாம் சரி வராது. நானும் அச்சுவும் வெளியவே தூங்கிக்கிறோம்…” என்று பார்வதி மறுக்க


“ஏன்மா நந்தன் சொல்ற மாதிரி நீங்க ரூம்ல தூங்கினா என்ன? உங்களுக்கு அதுதானே வசதியா இருக்கும்.” அபிலாஷா சொல்ல


“இல்லம்மா அது நல்லா இருக்காது…” என்று தயங்க சற்று யோசித்த அபிலாஷா


“நந்தன் ஒரு நிமிஷம் வாங்க…” என்று அறைக்கு அழைத்துச் சென்றவள் அக்சயாவையும் துணைக்கு அழைத்து உள்ளே அறையில் இருந்த கட்டிலை தூக்கி வந்து வெளியே ஹாலில் இருந்த பொருட்களை ஒதுக்கி விட்டு போடச் செய்தாள் அபிலாஷா.


“அபி மா… ஏன்டா?” பார்வதி தயங்க


“அம்மா எதுவும் பேசக்கூடாது… கீழே படுத்து தினமும் கால் வலி அனுபவிக்கிறதுக்கு கட்டில்ல தூங்கினா கொஞ்சம் பெட்டரா இருக்கும் ல…” என்று சொன்ன அபியை வாஞ்சையாக தலையை கோதி விட்டார் பார்வதி.


“சரி நான் இன்னைக்கு குக்கிங் பார்த்துக்கிறேன். ஏதாவது டவுட்னா கேட்குறேன் மா… ரெஸ்ட் எடுங்க நீங்க…” என்று அபி செல்ல அக்சயா கல்லூரி செல்ல குளிக்க சென்று விட நந்தன் காலடியில் அமர்ந்து காலை இதமாக பிடித்து விட்டான்.


“நந்தா…” என்று அழைக்க


“என்னம்மா ஏதாவது பேசனுமா? சொல்லுங்க…” 


“அபி எவ்வளவு நல்ல பொண்ணு இல்லப்பா… உனக்கு இதுக்கு முன்னாடி நிறைய வரன் பார்த்தோம்… ஆனா பாதி சம்பந்தம் தட்டிப் போக காரணம் இந்த சின்ன வீட்டுல இருக்கிறவங்களுக்கு எங்க பொண்ணை கல்யாணம் பண்ணி தர முடியாதுன்னு தான்… 


ஆனா, அபி எவ்வளவு பெரிய வீட்ல இருந்து வந்த பொண்ணு. ஆனா அவ நம்ம வீட்ல எப்படி அனுசரிச்சு போறா இல்ல…” என்று பேச தன்னவளை நினைத்து பெருமை கொண்டான் அபிநந்தன்.


“நந்தா… ஏற்கனவே அச்சு நிறைய முறை நாம ரெண்டு மூணு ரூம் இருக்கிற மாதிரி ஒரு வீட்டுக்கு மாறலாம் னு சொல்லிட்டே இருப்பா… அப்போ எல்லாம் நான்தான் மறுத்தேன். நந்தா..‌ இப்போ வேற ஒரு நல்ல வீடா பார்க்குறியாப்பா” என்று கேட்ட அம்மாவை ஆச்சரியமாக பார்த்த நந்தன்


“அம்மா… ஒருவேளை அபிலாஷாவுக்காக தான் இப்படி சொல்றீங்கன்னா அபிக்கே இங்க இருக்கிறது முழு விருப்பம் தான் அம்மா…” அபிநந்தன் சொல்ல


“அபியை பத்தி தெரியும் நந்தா.. ஆனா நேத்து விஷேசத்துலயே கவனிச்சேன். அக்சயாவை பிடிச்சிருக்கு பொண்ணு கேட்கலாமா னு ஒரு சிலர் அவங்களுக்குள்ளேயே பேசிட்டு இருந்ததா பக்கத்து வீட்டு கவிதா சொன்னா ப்பா..‌ இப்போ அச்சுக்கு மாப்பிள்ளை பார்த்தா அவங்களுக்கும் இந்த வீடு சின்னதா இருக்கிறது உறுத்தும் ல…” என்று பார்வதி சொல்ல


“சரிம்மா இந்த ஏரியா என் ஆஃபிஸ் அச்சுவோட காலேஜ் னு எல்லாத்துக்கும் பக்கத்துல வசதியா இருக்கு. உங்களுக்கும் பழகின ஏரியா… இங்கேயே பக்கத்துல மூணு பெட்ரூம் இருக்கிற மாதிரி ஒரு வீடை பார்க்கிறேன்.” ‌ என்று அபிநந்தன் சொல்ல 

 

“ஆ… இல்லப்பா மூணு ரூம் எதுக்கு? ரெண்டு ரூம் போதும் நந்தா… நிறைய வசதி வேணும் னு நீயே நிறைய செலவை இழுத்துப் போட்டுக்காதே…” என்று சொல்ல


“ம்ஹூம் சரிம்மா” என்று சிரிப்புடன் முடித்துக் கொண்டான் அபிநந்தன்.


அம்மா இரண்டு அறைகள் போதும் என்றாலும் அபிநந்தன் மூன்று அறைகள் இருக்கும் படியே ஒரு வீட்டை தேட கொஞ்சம் தள்ளி இருந்தாலும் இவன் எதிர்பார்த்த படியே ஒரு வீடு அமைய ‘நல்ல நாள் பார்த்து போகலாம்.’ என்று பார்வதி சொல்ல ‘சரி’ என்று அதற்குள் வீட்டிற்கு சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்க அதை எல்லாம் முடித்தான் அபிநந்தன்.


அடுத்த வாரம் நல்ல நாளாக இருக்க அப்போது குடி போகலாம் என்று முடிவு செய்யப் பட்டு இருக்க அச்சுவிற்கு புது வீடு இன்னும் கொஞ்சம் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஆர்வம் மட்டுமே மேலோங்கி இருக்க அபிலாஷா மட்டுமே


“ஏன் நந்தா… எதுக்கு வேற வீடு?” என்று தனக்காக தானோ என்று அவள் தயங்க


“அதெல்லாம் ஒன்னும் இல்ல லாஷா…” என்று அம்மா தன்னிடம் கூறிய காரணங்களை சொல்ல அபிலாஷாவும் ஏற்றுக் கொண்டாள்.


  • தொடரும்…



Leave a comment


Comments


Related Post