இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 4) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 19-04-2024

Total Views: 20768

உனக்கென்றே உயிர் கொண்டேன் 4

தமிழ் சென்று கதவினை திறக்க பூர்வி தான் நின்றிருந்தாள்.

"தூங்கலையா?"

"ம்ம்ம்" என்றவளுக்கு நகர்ந்து உள்ளே வர வழி விட்டான்.

"இன்னும் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்க?" என்றவள் முன்னோக்கி கைகளை நீட்டி தட்டியவளாக அறையை சுற்றி பார்த்தாள்.

அவர்கள் நால்வரும் இருக்கும் புகைப்படம் சுவற்றில் மாட்டப்பட்டிருக்க, அவனது படுக்கைக்கு அருகே இருந்த விளக்கு மேசையில் கையடக்க புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

தமிழின் அறைக்குள் அத்தனை எளிதாக யாரும் வந்துவிட மாட்டார்கள். அவனது அறையை அவனே சுத்தம் செய்து கொள்வான். ஆதலால் தனமும் அங்கு வந்ததில்லை. பூர்வி தான் எப்போதாவது வருவாள். அவனுடன் பேசுவதற்கு. அவளும் வேலை காரணமாக அங்கில்லாததால், அவனது அறைக்குள் வந்தே ஆறு மாதமாகிற்று.

இந்த ஆறு மாத இடைவெளியில் தான் அந்த புகைப்படத்தை அங்கு வைத்திருக்கிறான் என்று கணித்தவள், அருகில் சென்று கையில் எடுக்க...

"திஸ் இஸ் மொழி... கரெக்ட்?" என தம்பியை பார்த்தாள்.

தமிழின் அருகில் வெண்பா. இருவரும் கையில் ஜூஸ் குவளையுடன் இயல்பாக ஒருவரையொருவர் பக்கவாட்டாக தலை மட்டும் திருப்பி பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் காட்சி.

நீண்ட இதழோடு அவன் கண்கள் ஆமென்றது.

"எனக்கு தான் மொழி. நீங்க வெண்பா சொல்லிக்கலாம்" என்றான்.

"ஆஹான்... ரொம்பத்தான்" என்ற பூர்வி, "எனக்கு எப்படித் தோணுதோ அப்படித்தான் கூப்பிடுவேன்" என்று எடுத்த படத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு அங்கிருந்த பீன் சிட்டரில் அமர்ந்தாள்.

"எப்போ சொல்லப்போற?"

"சொல்லிக்கலாம்" என்றவன், "நீங்க இதுக்காக வரல!" என்றான்.

"ம்ம்ம்" என்றவள், தம்பியின் முகம் பார்த்து, "ஒரே படபடப்பா இருக்கு தமிழ்" என்றதோடு "கிட்ட வாயேன்" என பக்கம் அழைத்தாள்.

தமிழ் அவளருகில் சென்று அமரவும் அவனின் கையை பிடித்தவள், "எவ்ளோ வெட் பாரு" என்றாள்.

"பொண்ணு பார்க்க வரதுக்கேவா?" என்றவன், "எவ்ளோ தைரியமான பொண்ணு நீங்க. நீங்களே இப்படி ரியாக்ட் பண்ணுறீங்க?" என்று சத்தமின்றி சிரித்தான்.

"ச்சூ" என்று அவனின் தொடையில் தட்டியவள், "என்னயிருந்தாலும் நீ பையன். அதான் என் நிலை புரியல" என்றாள். முகத்தை உம்மென்று வைத்து.

"அப்படியில்லை... எனக்கு புரியுது" என்றவன், "ஃஜஸ்ட் பிரண்டை பார்த்து பேச போறீங்க. அப்படி நினைங்க" என்றான்.

"ட்ரை பன்றேன் முடியலடா" என்றவள் அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

"நீங்க அவங்களை பார்த்துட்டால் சாதரணமாகிடுவீங்களா?"

"அவங்க போட்டோ இருக்கா?"

"ம்."

"அப்பா கேட்கும்போது, நீங்கலாம் பார்த்தால் போதும் சொல்லிட்டேன். ஆனால் எனக்கு" என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அஸ்வின் தனியாக இருக்கும் படத்தை அலைப்பேசியில் அவள் முன் காட்டியிருந்தான்.

பார்த்த நொடி பூர்வியின் கண்கள் அகல விரிந்து... பேச்சு பட்டென்று நின்றது.

அலைபேசியை கையில் வாங்கியவளின் உள்ளம் அதிர்வை காட்டியது. மின்சாரம் பாய்ந்ததோ!

இமை சிமிட்டாது பார்த்தது பார்த்தபடி இருந்தாள்.

தமிழ் அவளின் உறை நிலை கண்டு புன்னகைத்துக் கொண்டான்.

"பிடிச்சிருக்கா பூர்வி?" ஹஸ்கி குரலில் தமிழ் கேட்டிட, தன்னைப்போல் பூர்வியின் தலை ஆமென்று ஆடியது.

"பார்த்ததுமா?"

தமிழின் அக்கேள்வியில் தான் தன்னுணர்வு மீண்டவள், "போடா" என்று தன் முகம் மறைத்துக் கொண்டாள். மற்றைய பக்கம் திரும்பி.

"பூர்விக்கு வெட்கம் வரும் நான் நினைத்ததே இல்லை" என்று தமிழ் தமக்கையை கேலி செய்ய, "நான் போறேன்" என்று வேகமாக எழுந்தவளை தடுத்தவன்...

"மொபைல்" என்று கை நீட்டியிருந்தான்.

"ச்சூ..." என்று அலைப்பேசியாலே நெற்றியில் தட்டிக்கொண்டவள் அவனிடம் கொடுக்க, கவனித்தவளாக பின்னிழுத்திருந்தாள்.

அவளின் கை பட்டதில், அஸ்வின் மட்டுமிருக்கும் படத்திற்கு அடுத்த படமான மூவரும் இருக்கும் படம் நகர்ந்திருந்தது.

கையிலிருக்கும் அலைப்பேசியின் திரையையும், மேசை மீதிருக்கும் பிகைப்படத்தையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.

"நீ எனக்கு மட்டும் பையன் பார்த்த மாதிரி தெரியலையே தம்பி!" என்று இரு புருவத்தையும் ஒன்றாக ஏற்றி இறக்கினாள்.

"நானே எதிர்பார்க்கல!" 

"இப்போ நான் நோ சொன்னால்?"

"யூர் சாய்ஸ் பூர்வி" என்றிருந்தான். முகத்தில் நிலைத்திருந்த புன்னகையுடன்.

பூர்வி திரும்பி செல்ல அடி வைத்திட... 

"எனக்காக நான் சொல்லல... அஸ்வின் உண்மையிலே ரொம்ப நல்லவர். அதிக பொறுமை, அமைதி. அஸ்வின் உனக்கு பார்த்திருக்கும் பையன் தெரிவதற்கு முன்பே மொழி என்னவள். இப்போ நீ எஸ் ஆர் நோ... என்ன சொன்னாலும் எனக்கானவள் மொழி மட்டும் தான்" என்று அடர்த்தியாக மொழிந்தவன்,

"உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ஓகே சொல்லுங்க" என்றான்.

"குட் நைட்" என்றவள் சென்றிருந்தாள்.

பூர்வியின் முகம் செம்மை பூசியிருந்தது. தன் தம்பி நேசிக்கும் பெண்ணின் அண்ணன் என்று தெரிவதற்கு முன்பே, அஸ்வினை பார்த்ததும் அவளுக்கு பிடித்திருந்ததே. அந்த பிடித்தம் ஒன்று போதுமே. வாழும் கலாம் அவனுடன் தான் என்ற எண்ணத்தை தோற்றுவித்திடாதா என்ன?

சில அடிகள் முன் சென்றிருந்தவள் மீண்டும் தமிழின் அறை கதவை வேகமாக திறக்க... என்னவென்று பார்த்த தமிழிடம், வாயிலில் நின்றவாறே "போட்டோ ஷேர் பண்ணிடு" என்று ஓடிவிட்டாள்.

இரண்டு புகைப்படங்களையும் அனுப்பி வைத்தவன், அவனவளின் நிழல் உருவில் தொலைந்து போனான்.

முதல் வருட மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கி நாட்கள் விரைவாக சென்றது.

இரண்டு மாதங்கள் கடந்திருக்கும்...

வகுப்பு நேரத்தில் எச்.ஓ.டி அழைப்பதாக அவரை காண வெளியில் வந்த தமிழ், அந்த பகுதியில் இருக்கும் முதல் வருட மாணவர்களின் வகுப்பிற்கு முன் கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த வெண்பாவை கண்டு என்னவென்று நினைத்து அவளருகில் சென்றவன் நொடியில் அவளை தாண்டிக்கொண்டு சென்றுவிட்டான்.

ஆனால் அன்று முழுக்க அவள் அழுததற்கான காரணம் என்னவாக இருக்குமென்று அவனறியாது தவிப்பிற்குள் உள்ளானான்.

அன்றிரவு உணவு நேரத்தின் போது மெஸ்ஸில் தன்னைப்போல் அவளைத் தேடினான். 

மாலதியுடன் அமர்ந்திருந்தாலும் அவளின் கை விரல் உணவில் அலைந்து கொண்டிருக்க, அவளின் சிந்தை வேறெங்கோ இருந்தது.

'என்ன பிரச்சினையாக இருக்கும்? கேட்போமா?' மறுகணம், 'நீ இப்படியில்லையே தமிழ்' என்று அவளின் மீதிருந்த பார்வையை விலக்கிக்கொண்டான்.

அடுத்தடுத்த நாட்கள் அவளின் கலங்கிய விழிகள் அவ்வப்போது தோன்றி அவனை இம்சிக்கும். முயன்று தான் புறம் ஒதுக்கினான். காரணம் தெரியாது அவளுக்காக வருந்தினாலும் அவளிடம் சென்று பேச வேண்டுமென நினைக்கவில்லை.

அடுத்த சில தினங்களில் ஒருநாள்,

செய்முறை தேர்விற்காக வழமையான நேரத்தைவிட முன்னதாகவே லேபிற்கு வந்த தமிழ் தன்னுடைய உபகரணங்களை சரி பார்த்துக்கொண்டிருக்க...

"அண்ணா ப்ளீஸ்" என்று செவி நுழைந்த தழுதழுப்பான குரலில், தன் இதயம் நின்று துடிப்பதை உணர்ந்த தமிழ் யாரென்று வெளியில் வந்து பார்க்க, காரிடாரில் போடப்பட்டிருந்த பெஞ்சில் வெண்பா அமர்ந்திருந்தாள். அலைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

"அண்ணா எனக்கு இங்க வேணாம்" என்றவளின் பேச்சில் உள்ளே செல்ல போனவன்,

"நான் அங்கு வந்தே எதாவது காலேஜில் படிக்கிறேன்" என்ற வார்த்தையில் லேப் வாயிலிலே நின்றுவிட்டான்.

வெண்பாவின் கண்ணீர் கன்னம் உருண்டது.

தமிழுக்கு வெண்பாவின் முகம் துடைத்து தன் மார்பில் அழுத்தி, எதுவாக இருந்தாலும் நானிருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்போல் மனம் தவித்தது.

அந்நொடி அவனின் மனம் அவனுக்கே சிறிதாய் புலப்படுவதாய்.

'தமிழ்...!' தனக்குள்ளே ஆச்சரியம் அடைந்தான்.

"இல்லை... எதுவுமில்லை."

எதிர் முனையில் என்ன கேட்டார்களோ அவள் இல்லையென மறுத்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

"எனக்கு இந்த கோர்ஸ் பிடிக்கல!"

அவளின் பதிலில்,

"பொய் சொல்றாள்" தமிழின் வாய் முணுமுணுத்தது.

முதல் பருவத் தேர்வு முடிந்திருக்க அவளது வகுப்பில் அவள் தான் முதல் மதிப்பெண் என்பது அவனுக்குத் தெரியும்.

'பிடித்தமில்லாமல் படித்து முதல் மதிப்பெண் எடுக்க முடியுமா?' என்ற கேள்வி அவனுள்.

மேலும் சில நிமிடங்கள் நீடித்த அவளின் பேச்சு...

"ஓகேண்ணா... இருக்கேன். உங்களுக்காக இங்கவே படிக்கிறேன்" என்று முடிவுக்கு வந்தது.

அலைப்பேசியை அணைத்து பெஞ்சில் வைத்து, மடியில் இரு கைகளின் முட்டி ஊன்றி உள்ளங்கையில் முகம் புதைத்து அழுத்தி துடைத்துக்கொண்டு  எழுந்தவள், இதழ் குவித்து ஊதி தன்னை நிலைப்படுத்தியவளாக அங்கிருந்து சென்றாள்.

வெண்பாவின் ஒவ்வொரு அசைவும் தமிழுனுள் அழுந்த தடம் பதித்தது.

வெண்பாவுக்கு என்னவோ பிரச்சினை இருக்கென்று நினைத்தவன் நிலைக்கொள்ளாது வருந்தினான்.

அவளுக்காக தான் ஏன் இவ்வளவு வருத்தம் கொள்கிறோமென ஆராய்ந்தவனுக்கு அவனது நேசம் வெளிப்பட்டது.

அவளிடம் பேசியே இராத போதும் அவனுள் காதல் நுழைந்துவிட்டது. அவளைப்பற்றி பெயரைத்தவிர ஒன்றும் தெரியாது. அவனறிந்த வெண்பா தான் முழுப்பெயரா என்றும் தெரியாது. ஆனால் அவளின் கலங்கிய கண்கள், சோக முகம், வருத்தமான பேச்சுக்கள் யாவும் அவனுள் அவள்மீது நேசத்தை விதைத்துவிட்டது.

'தமிழ் நீயும் லவ்வுல விழுந்துட்டியேடா! ஃபைனலி ஷீ இஸ் யூர் கேர்ள்... ரைட்?' என்று தன்னைத்தானே கேட்டு புன்னகைத்துக் கொண்டவனுக்கு அவளுக்கு என்ன பிரச்சினை என்பதை மட்டும் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அதனை களைந்து விட வேண்டுமென்ற எண்ணம்.

இரு வாரங்கள் சென்றிருக்க ஜூனியர் மாணவர்களுக்கு முன் சீனியர் மாணவர்களுக்கு பேப்பர் பிரசன்டேஷன்.

வகுப்பிற்குள் நுழைந்ததும் வெண்பா வந்துவிட்டாளா என்று தான் அவனது விழிகள் தேடியது. முதல் பெஞ்சில் மாலதியின் அருகில் அமர்ந்திருந்தாள். அவர்களுக்கு பின்னிருக்கையில் பூபேஷ் அமர்ந்திருக்க சென்று உட்கார்ந்துகொண்டான்.

தமிழின் பார்வை அவளின் நீண்ட கூந்தலில் படிந்திருந்தது.

எப்போதும் அழகாக பிரெஞ் பின்னலிட்டு இருப்பவள் குழல் இன்று ஏனோ தானோவென்று சிறு பேண்டில் மொத்தமாக அடங்கியிருந்தது.

விரல்களில் பேனாவை வைத்து சுற்றிக் கொண்டிருந்தவனிடம் அவளைப்பற்றிய யோசனை.

பேனா கீழே விழுந்திட, எடுத்திட பெஞ்சிற்கு கீழ் குனிந்தவன்,

அவள் அமர்ந்திருந்த பெஞ்சிற்கு கீழே தரையை தொட்டுக்கொண்டிருந்த அவளின் கூந்தலினை தொட்டுவிட நீண்ட விரல்களை சடுதியில் பின்னிழுத்தவனாக, நிமிர்ந்து அமர்ந்தவன் தலையை உலுக்கிக்கொண்டான்.

'எவ்வளவு நீளம்... சில்கி ஹேர்.'

"என்ன மச்சான் ஆச்சு?" பூபேஷ் அவனின் செயலில் கேட்டிட...

"பித்து பிடித்திடும்" என்றான் தமிழ்.

"யாருக்கு?" பூபேஷின் கேள்வியில் மீண்டவன், பேராசிரியர் வர சகஜமானான்.

செமினார் தொடங்கியது. அன்று நாள் முழுக்க செமினாரில் முடிந்தது.

தமிழ் வெண்பாவை மட்டும் தான் கவனித்தான். வெண்பாவின் முகம் எவ்வித உணர்வுகளுமின்றி நிர்மலமாக இருந்தாலும், அவளின் விழிகளில் மெல்லிய சோகம், பயம், எரிச்சல் என பலவித உணர்வுகள். தமிழால் கண்டுகொள்ள முடிந்தது.

அவளிடம் யார் பேசினாலும் பேசினாள். கேட்பதற்கு ஒற்றை வார்த்தையில். உணவு நேரத்தில் கூட சரியாக சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை.

"உடம்பு சரியில்லையா? மாலதியிடம் கேளு மச்சான்" என்றான்.

"அவகிட்ட நான் ஏண்டா கேட்கணும்?"

"ஹேய்... ம்ப்ச்" எப்படி சொல்வதென்று தடுமாறிய தமிழுக்கு ஏனோ வெண்பா என்று எல்லோரும் விளிக்கும் அழைப்பு வரவில்லை.

அந்நேரம் "மொழி வெண்பா" என்று பேராசிரியர் அழைத்திட... தமிழின் முகம் பூவாக மலர்ந்தது.

'மொழி... தமிழ்... நானே அவளுள் தான் அடக்கம்.' இதயம் சிறகு முளைத்து பறக்கும் உணர்வை உணர்ந்தான்.

"மச்சான் நீ சரியில்லை" என்ற பூபேஷின் கழுத்தில் கையிட்டு இறுக்கியவன்,

"மாலதியிடம் மொழிக்கு உடம்பு சரியில்லையான்னு கேளு" என்றான்.

"மொழி?" பூபேஷிடம் கேள்வி பாவனை.

"மொழி வெண்பா."

"முடியாது..." வெகமாக சொல்லியிருந்தான்.

"ப்ளீஸ்டா!" சிறுபிள்ளைப்போல் கெஞ்சினான்.

"ஸ்டூடன்ட் பிரஸிடெண்ட் டா நீ?"

"அதுக்கு?"

"வம்புல மாட்டிவிட பாக்குற!"

"மாலதி பூபேஷ் உன்னை கூப்பிடுறான்." தமிழ் அழைத்திருந்தான்.

தமிழ் தன் பெயர் சொல்லி கூப்பிட்டதை நம்ப முடியாது...

"சொல்லுங்க பூபேஷ் அண்ணா?" என்றிருந்தாள் மலாதி.

தமிழை முறைத்த பூபேஷ், "கேட்காமல் விடமாட்டல" என்று பற்களை கடித்து முனகியவனாக, பேராசிரியரின் முன் நின்று அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த வெண்பாவை காண்பித்து "உன் பிரெண்டுக்கு உடம்புக்கு ஏதும் முடியலையா? ரொம்ப சோர்வா இருக்க மாதிரி தெரியுது. முடியலன்னா சிக் ரூம் போக சொல்ல வேண்டியது தானே" என்றான். மாலதிக்கு தான் கேட்பதால் எவ்வித சந்தேகமும் வந்துவிடக் கூடாதென, சாதாரணமாக வினவுவது போல் கேட்டிருந்தான்.

"அதெல்லாம் ஒன்னுமில்லை ண்ணா... ஹோம்சிக்" என்ற மாலதி திரும்பிக்கொள்ள...

"போதுமா?" என்றான் தமிழிடம்.

"இல்லை மச்சான். அவளுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு."

"உன்னை நான் கொல்லப்போறேன். என்னடா பன்ற நீ?"

"லவ் தான்."

தமிழ் சொல்லியதை பூபேஷால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் விழி விரித்து பார்த்தான்.

"மச்சான் சத்தியமா முடியலடா... நீயாடா? உண்மையை சொல்லு?" அதிர்ச்சி நீங்காது கேட்டான்.

"இங்க உட்கார்ந்துட்டு என்னவோ பன்றாள் மச்சி" என்று கண்களை மூடிக்கொண்டு இதயப்பகுதியில் ஒற்றை கையால் குத்திக் கொண்டவனை வாய் பிளந்து பார்த்திருந்தான் பூபேஷ்.

"எப்போல இருந்துடா... என்கிட்டவே மறைச்சிட்ட பார்த்தியா?"

அடுத்து, இறுதியாக தமிழின் முறை வர, பூபேஷ்க்கு பதில் சொல்லாது மாணவர்களுக்கு நடுநாயகமாக நின்று தன்னுடைய விளக்கவுரையை முடித்து மாணவர்கள் கேட்ட அனைத்து சந்தேக கேள்விக்கும் விடையளித்து தன்னிடம் வந்தமர்ந்தான்.

செமினார் முடிய பேராசிரியர் வெளியேறியதும், முதல் ஆளாக வெண்பா கிளம்பியிருந்தாள்.

தமிழ் எங்கே என்று யோசிக்கும்போதே மலாதியிடம் ஒரு மாணவன் வெண்பா போய்விட்டாளா எனக் கேட்க, மாலதியும் ஆமென்றாள்.

"போயிட்டாடா... அப்புறமும் என்ன இங்கவே. வா போகலாம்" என்று தமிழை இழுத்துக்கொண்டு சென்ற பூபேஷ், "நைட் உன் லவ் ஸ்டோரி சொல்லணும்" என்றான்.

"இன்னும் ஸ்டோரி ஆரம்பிக்கவே இல்லைடா. ஒன் சைட் தான்" என்ற தமிழுக்கு இப்படி அவளை நினைத்து பொத்தி வைக்கும் காதலும் பிடிக்கத்தான் செய்தது.

மாலதி வெண்பாவுக்கு வீட்டு நினைவு என்று சொல்லியதை நம்ப முடியவில்லை என்றாலும், அன்று "நான் அங்கு வந்தே படிக்கிறேன்" என்று வெண்பா பேசியதை நினைவு கூர்ந்து உண்மையாகத்தான் இருக்குமென்று நினைத்துக்கொண்டான்.

நாட்கள் தமிழின் ஒருதலை காதலோடு நகர்ந்தது.

"இந்த இயர் நமக்கு காலேஜ் முடியுது. இன்னும் இருபது நாளில் ஸ்டடி ஹாலிடேஸ். நெக்ஸ்ட் எக்ஸாம். எப்போ சொல்லப்போற?" பூபேஷ் கல்லூரி மைதானத்தின் மரத்தடியில் தமிழிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

"சொல்லலாம்... சொல்லணும்" என்ற தமிழ் தூரத்தில் தன்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் வெண்பாவை நம்ப முடியாது பார்த்தான்.

தனம் அழைக்கும் சத்தத்தில் கண்கள் திறந்து எழுந்த தமிழ்...

"அதுக்குள்ள விடிஞ்சிருச்சா?" என்று மணி பார்க்க எட்டு எனக் காட்டியது.

"இவ்வளவு நேரம் தூங்கியிருக்கோமா?" என்று அலைப்பேசியை கையில் எடுத்தவன் மீண்டும் கதவு தட்டும் ஓசையில்...

"வறேன்" என்று குரல் கொடுத்துவிட்டு வெண்பாவிடமிருந்து வந்திருந்த புலனம் தகவலை திறந்து பார்த்தான்.

"இன்னைக்கு என்ன டே நினைவிருக்கா பாஸ்?" எனக் கேட்டு அனுப்பியிருந்தாள்.

அவனால் அந்நாளை மறக்க... மறந்திடத்தான் முடியுமா?

"நினைவிருக்கு... மொழியிடம் தமிழ் சிக்கிக்கொண்ட தினம்" என்று குறும்பாக கண்ணடிக்கும் எமோஜியையும் சேர்த்து அனுப்பி வைத்தான்.

மறு நொடியே அவளிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

"நான் உங்ககிட்ட முதன் முதலில் பேசிய நாள், உங்களுக்கு என்கிட்ட சிக்கிக்கிட்ட நாளா?" எடுத்ததும் வெடித்திருந்தாள்.

"ஹேய்... அராத்து" என்று அவளை அடக்கியவன், 'நான் ஒரு அர்த்தத்தில் சொன்னால், இவளொரு அர்த்தத்தில் புரிஞ்சிக்கிட்டாள்' என்று மனதில் அலுத்துக்கொண்டான்.

"எக்ஸாம் கிளம்பலையா நீ?" 

"போறேன்... போறேன்..." என்றவள், "ஹேப்பி ஃபிரண்ட்வெர்சரி" என்றாள். உம்மென்று.

"தேன்க் யூ" என்றவனுக்கு அவளை தோழியாக நினைத்து அந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க மனமில்லை.

"நீங்க சொல்லல?"

"மொழி சொல்லியாச்சு. தமிழும், மொழியும் வேற வேற இல்லையே!" என்றான்.

மீண்டும் அவன் சொல்லியது வேறு அவள் புரிந்து கொண்டது வேறு.

"ஓகே சீனியர்... காலேஜ் கிளம்பிட்டேன்" என்றவள் வைத்துவிட...

"எப்போதான் உனக்கு நான் சொல்றது புரியும்?" என்று அழைப்பில்லாத அலைபேசியிடம் கேட்டான்.

அவனுக்கும் தெரியாத ஒன்று உள்ளது. அவள் முதன் முதலாக பேசிய நாளை அவன் நினைவு வைத்திருப்பதில் ஒரு காரணம் உள்ளது. அர்த்தமிருக்கிறது. அவள் ஏன் வைத்திருக்க வேண்டும்? அதுவும் அந்த நாள் அவளிருந்த சூழலுக்கு நிச்சயம் மறக்க வேண்டிய நாளாகத்தான் இருந்திருக்க வேண்டும். மூன்று வருடங்களாகியும், இந்நாளை அவனிடம் முதலாக பேசியதை... தவறாது அவள் நினைவில் கொள்ள என்ன காரணமாக இருக்கும்?

தமிழ் கொஞ்சமேனும் யோசித்திருந்தால் அவளின் காதலையும் கண்டு கொண்டிருப்பானோ?





Leave a comment


Comments


Related Post