இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 16 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 19-04-2024

Total Views: 22615

செந்தூரா 16


மனமுருகி வேண்டிக் கொண்டிருந்த மனைவியையே விழி எடுக்காமல் பார்த்திருந்தான் செந்தூரன். தனி அறையில் பலவந்தமாக தாலிக் கட்டியதால் தான் அவன்மேல் கோபம் போலும், அப்படிக் கட்டிய தாலி வேண்டாம் என்று அதை கோயில் உண்டியலில் போட்டு அவனை மீண்டும் அவளே தாலிக் கட்ட சொன்னாள் என்றால் அவனை அவள் ஏத்துக் கொண்டதாக தானே அர்த்தம்.


அவளருகே மெல்ல குனிந்து, “இத்தனை சீக்கிரம் சித்தார்த்தை மறந்து என்னை ஏத்துக்குவனு நான் நினைக்கலை தாரா, தேங்க்ஸ்டி” என்றான் மென்மையான குரலில்.


அவனை எரித்துவிடுவது போல பார்த்து முறைத்தவள், “உன்னை ஏத்துக்கிட்டதாக நான் சொன்னேனா?” என்றவள் விடுவிடுவென்று கோயில் பிரகாரத்தை சுற்ற தொடங்கினாள். அவன் வருகிறானா என்று திரும்பி கூட பார்க்க வில்லை.


இவளை புரிஞ்சுக்கவே முடியலையே என்று அவள் பின்னால் சென்றான். கோயிலுக்கு சென்றதும் சினிமாவிற்கு போகலாம் என்று அழைத்தான். அவனை பார்த்தாலே கோபமாக வந்தது தாரிகாவிற்கு. முடியாது என்று சொல்ல நினைத்தாள். வேண்டாம் என்று சொன்னால் அறைக்கு அழைத்துச் செல்வான். மீண்டும் அத்துமீறினால் என்ன செய்வது? ஏற்கனவே மனமும் உடலும் சோர்ந்து போய் இருந்தது. படம் பார்க்கும் நிலையில் அவள் மனம் இல்லையென்றாலும், அவனுடன் தனிமையில் இருக்க விரும்பாமல், அவன் கேட்டதற்கு ஒத்துக் கொண்டாள்.


சினிமாவிற்கு செல்ல அவள் உடனே ஒத்துக் கொள்ளவும் செந்தூரனுக்கு திருப்தியாக இருந்தது. அவளை அழைத்துக் கொண்டு திரையரங்கிற்குச் சென்றான். அது நல்ல காமெடி படம், அவனுக்கு சிரிப்பாக வந்தது. ஆனால் அந்த படத்தை கூட உர்ரென்று பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகே அமர்ந்து சிரிக்கவும் முடியாமல் சிரிப்பை அடக்கி கொண்டான்.


அதன் பிறகு சாப்பிட ரெஸ்டாரண்டிற்கு அழைத்துச் சென்றான். அங்கேயும் மெளனம் தான், அவனிடம் பேசவே இல்லை. அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி கொடுத்தான், அவள் அவனை கண்டுகொள்வதாகவே இல்லை. கோபப்படவேண்டியவன் அவன், இவள் எதற்கு முகத்தை தூக்கிக் கொண்டு அலைகிறாள்? கெஞ்சினால் மிஞ்சுவாள் என்று எதுவும் கேள்வி கேட்காமல், அவளுக்கு பிடித்ததை எல்லாம் அவனாகவே வாங்கி காரில் வைத்தான்.


“தாரா பீச்சுக்கு போகலாமா?” என்று அவன் கேட்க, அதற்கும் பதிலில்லை. பெருமூச்சொன்றை விட்டபடி, அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். அங்கே தண்ணீரை பார்த்ததும் குதித்து ஆட்டம் போடுவாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அங்கிருந்த மணலில் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள், சற்றே இடைவெளி விட்டு அவளருகில் அமர்ந்தான் செந்தூரன்.


அந்தி நேரம் நெருங்க தொடங்க வானம் தன் மேனியில் செந்நிறத்தை பூசிக் கொள்ள தொடங்கியிருந்தது. 


செந்தூரனுக்கு அவர்கள் இருவரும் சிறுவயதில் ஆத்தங்கரை மணலில் அமர்ந்து செய்துக் கொண்ட பொம்மை கல்யாணம் நினைவில் வந்தது. அன்று தாராவே ஒரு நூலை கொடுத்து கட்டச் சொன்னதால் தயங்கிக் கொண்டு யாரும் பார்க்கிறார்களா என்று கட்டி விட்டான். இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. அவள் எதிர்பாராத நேரத்தில் அவன் அல்லவா அவள் கழுத்தில் தாலியை கட்டிவிட்டிருந்தான்?


“தாரா” என மென்மையாக அழைத்தான். அவள் திரும்பவே இல்லை வேறுப்பக்கமாக பார்ப்பது போல முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆனால் அவன் பேசுவது அவள் காதில் விழுந்ததால் சற்று தடுமாறி மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.


“உனக்கு நினைவு இருக்கிறதா? நம்ம சின்ன வயசில் நீ என்னை ஆத்தங்கரைக்கு தூக்கிட்டு போக சொன்னே, நீ என்னைதான் கல்யாணம் செய்துக்கணும்னு அடம்புடிச்சு, அதுக்கு அச்சாரமா பொம்மை கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னே. நானும் உன் விருப்பத்தை நிறைவேற்ற, அன்னிக்கு நீ கொடுத்த ஜரிகை நூலை உன் கழுத்தில் கட்டினேன். இன்னைக்கும் உனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற தாண்டி உன்னை கல்யாணம் செய்துகிட்டேன்” என்றான் கரகரப்பான குரலில்.


இப்போது மெல்ல திரும்பி அவனின் விழியோடு விழி நோக்கினாள். அவள் கண்கள் கலங்கியிருந்தது. “அன்னிக்கு யாரும் இல்லாத இடத்தில் வைத்து அந்த கயிற்றை என் கழுத்தில் கட்டிய மாதிரியே, இன்னைக்கும் திருட்டு கல்யாணம் செய்யறது போல, யாருக்கும் தெரியாமல் அதுவும் பெட்ரூம்ல வச்சி தாலிக் கட்டிட்டியே, இப்படித் தான் கல்யாணம் செய்யப் போறதா வாக்கு கொடுத்திருந்தியா?” என்றாள் ஏளனமாக.


“அதுவும் தாலியைக் கட்டி, அப்பவே என்னை, என்னை…” என்று அதற்கு மேல் பேச முடியாமல் அவளின் குரல் தழுதழுத்தது. உடைந்து அழுதவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியாமல் திகைத்தான்.


அவள் சித்தார்த்தை வேறொரு சந்தர்ப்பத்தில் திருமணம் செய்துக் கொள்ள கூடாது, அவளை தவறவிடக்கூடாது என்ற ஆவேசத்தில் அவன் அப்படி செய்திருக்க, அவளானால் அந்த காதலனை பற்றியோ, காதல் தோல்வியில் முடிந்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. தனியறையில் யாருக்கும் தெரியாமல் தாலிக் கட்டியது தான் இப்போது அவளின் தலையாய பிரச்சனை போலும் என்று நினைத்தவன், 


“சரிடி, உனக்கு இப்போ என்ன பிரச்சனை? தனியா அந்த அறையில் தாலிக் கட்டியது தானே? ஊருக்கு போனதும் நானே திருமண ஏற்பாட்டையும் செய்யறேன். அதன்பிறகு ஊரறிய உனக்கு தாலிக் கட்டறேன் போதுமா?” என்றான் சமாதானமாக


வெடுக்கென்று திரும்பி அவனை பார்த்து முறைத்தாள், “இப்போ நீ தாலிகட்டியது மட்டும் தான் பிரச்சனையா? நீ வேறெதுவும் செய்யலையா?” என்றாள் கோபமாக குற்றம் சாட்டும் குரலில்.


அவன் அவளை கட்டாயப்படுத்தி எடுத்துக் கொண்டதை தான் சொல்கிறாள் என்று புரிய தொண்டையை செருமினான்.


“சாரி தாரா, என்ன இருந்தாலும் நான் அப்படி செய்திருக்க கூடாது தான். இத்தனை வருடம் காத்திருந்து மொத்த குடும்பமாக என்னை ஏமாற்றி உனக்கு வேறு ஒருவனுடன் திருமணம் என்று சொன்னதும் நான் மிருகமாக மாறிட்டேன். 


எனக்கு நல்லா தெரியும், உனக்கு என்னை பிடிக்கும்னு. நீ என்னை காதலிச்சிட்டு தான் இருந்தே அதை என்னால உணர முடிந்தது. நாம இரண்டு பேரும் அதை சொல்லிக்கலை என்றாலும் உன் மனது எனக்கு தெரிந்து தான் இருந்தது. நம்மோட இந்த ஐந்து வருட பிரிவில் நீ சந்திச்ச அந்த சித்தார்த்தின் மேல் உனக்கு ஏற்பட்டது காதலாக இருக்க முடியாது. அது ஜஸ்ட் ஒரு இன்பாக்சுவேன் தான். ஆனால் நீ என்னை தான் விரும்பறே. அதை எல்லாம் சொல்லி உனக்கு விளக்கும் பொறுமை என்னிடம் அப்போதைக்கு இல்லை.


அதே சமயம் நான் சொன்னாலும் உனக்கு புரியுமான்னும் தெரியாது. அது தான் அதிரடியாக நடந்து உன்னை என்னவள் ஆக்கி கொண்டேன். என்னோட அன்பால் என் மீதான உன் காதலையும் உனக்கு உணர வைத்திட முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவனை அழுத்தமாக பார்த்தாள்.


“நீ செஞ்ச தப்பை நியாயப் படுத்திறியா? கல்யாணத்தை நிறுத்த என்னை தூக்கிட்டு வந்ததோட நிறுத்த வேண்டியது தானே? என்கிட்ட இப்படி எல்லாம் உன்னால எப்படி நடந்துக்க முடிஞ்சது? நீ என்னை பலாத்காரம் செய்திருக்க. உன்னை என்னால் மன்னிக்கவே முடியாது. என்னை பற்றியோ என் மனதில் இருக்கறதை பற்றியோ நீ தெரிஞ்சுக்க முயற்சி செஞ்சியா? என்னோட விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்தியா?” என்று அடிக்குரலில் சீறினாள்.


“உன் மனசில் இருக்கறதை தான் அன்னிக்கு எல்லார் முன்னாடியும் சொல்லிட்டியே, சித்தார்த்தை விரும்பறதாக நீ சொன்னதுக்காக எல்லாம் என்னால உன்னை அவனுக்கு விட்டு கொடுக்க முடியாது” என்றான் ஒரு மாதிரி குரலில்.


அவனை எரித்து விடுவது போல பார்த்தவள் “திரும்பவும் தனியா என்னை அழைச்சு, விவரம் கேட்டியா? சரி என்னை கடத்திட்டு வந்தியே அதற்கு பிறகாவது என்னை விசாரிச்சியா?” என்று அவனை முறைத்தாள்.


அவன் புரியாமல் குழப்பமாக அவளையே பார்த்தான். “என்னை விசாரிக்க எல்லாம் உனக்கு எங்கே நேரமிருந்தது, காய்ந்த மாடு போல என் மேல பாய்றதுக்கு தானே பிளான் பண்ணி என்னை தூக்கினே?” என்றாள் கோபமாக


“ஏய் என்னடி இப்படி எல்லாம் பேசறே? என்று பதறினான் செந்தூரன்.


“எங்க வீட்டில் தங்கி காலேஜ் போயிட்டு வந்துட்டு இருந்தப்போ கூட என் மேல் உன் விரல் கூட தவறாக பட்டதில்லை. உன்னை என் மனசில் எத்தனை உயர்வா வச்சிருந்தேன் தெரியுமா? ஏன்டா இப்படி செய்தே? உன்னை போய் இத்தனை வருஷமா உருகி உருகி லவ் பண்ணேன் நினைச்சாலே அசிங்கமா இருக்கு? காதலிச்ச பொண்ணுகிட்டயே பலாத்காரம் பண்ண உன்னை எல்லாம்…” என்று பல்லை கடித்தபடி என்னென்னவோ கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்ட தொடங்கி விட்டாள்.


அவளின் அர்ச்சனை எதுவும் அவன் காதில் விழவில்லை. “உன்னை போய் உருகி உருகி லவ் பண்ணேன் என்று அவள் சொன்ன வார்த்தைகளே அவன் காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தது.


அவள் ஏதோ அவனிடம் ஆசையாக பேசிக் கொண்டிருப்பது போல கண்களில் ஆச்சரியத்துடன் இதழில் அரும்பிய புன்னகையுடன் அவளையே ஆழ்ந்து பார்த்தான். திட்டுவதை நிறுத்தி விட்டு என்ன என்பது போல பார்த்தாள்.


“நீ இப்போ என்ன சொன்னே?” என்றான் கண்களில் ஏக்கத்தை தேக்கி


“நான் என்ன சொன்னேன்? உன்னை நல்லா திட்டுட்டு தானே இருக்கேன், காதில் விழலையா?” என்றாள் வெடுக்கென்று .


“அதை சொல்லலடி, உன்னை போய் உருகி உருகி லவ் பண்ணேன் பாருனு சொன்னியே” என்று அவளை பார்த்து ஆவலாக கேட்டான்.


கோபத்தில் பேசியபோது தன் மனதிலிருந்ததை அப்படியே கொட்டி விட்டதை எண்ணி மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.


“ஆமா சொன்னேன் இப்போ என்ன அதுக்கு?” என்று சீறினாள். அவன் தாடையை பற்றி தன் புறம் திருப்பி அவள் கண்களை அவன் கண்களோடு கலக்க விட்டபடி, “தாரா நீயும் என்னை விரும்பினியா?” என்றான் ஆழ்ந்த குரலில்


அவள் பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. பொங்கி வந்த அழுகையை இதழ்கடையில் அடக்க பார்த்து அது முடியாமல் மெல்ல விசும்பினாள்.


அவள் கன்னத்தை தன் கைகளால் அழுத்திபிடித்து மீண்டும் அவனை பார்க்கச் செய்தான் “அப்போ ஏன்டி அன்னிக்கு நிச்சயதார்த்ததுல நீ சித்தார்த்தை விரும்பறதாகவும் உன் விருப்பத்தின் பேரில் தான் இந்த திருமணம் நடந்ததாகவும் சொன்னே?” என்றான் கோபமாக 


பதில் சொல்லாமல் சற்று நேரம் மெளனமாகவே இருந்தவள் இனி மறைத்து எந்த பயனும் இல்லை என்று தோன்ற “நான் அந்த சித்தார்த்தை விரும்பறதாக சொன்னால் தான் நீ இந்த கல்யாணத்தை நிறுத்தமாட்டேன்னு சொன்னேன். ஆனால் நான் ஒண்ணும் அவனை விரும்பலை” என்றாள் எங்கோ பார்வையை பதித்தபடி.


செந்தூரனுக்கு தலை சுற்றியது, என்ன சொல்கிறாள்? மீண்டும் வன்மையாக அவளின் கன்னத்தை பற்றி தன்புறம் திருப்பினான். அவள் கண்களோடு கண்களை கலக்க விட்டபடி, “விரும்பாத ஒருத்தனை விரும்பறதாக சொல்லி அந்த கல்யாணத்தை நிறுத்த விடாமல் நடக்கணும்னு ஏன் நினைச்சே? அப்படி என்ன கட்டாயம்? உன் அப்பன் தானே? அவன் தானே உன்னை மிரட்டி இந்த கல்யாணத்துக்கு உன்னை சம்மதிக்க வைத்தான்? சொல்லுடி, என்ன சொல்லி மிரட்டினான்? அத்தையை கொன்னுடுவேன்னு எதாவது சொன்னானா? எதுக்கு, யாருக்காக பயந்து அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? சொல்லுடி, சொல்லு” என்று அவளை உலுக்கினான்.


அவள் பதில் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருந்தாள். “அப்போ நான் அன்றைக்கு வராமல் போயிருந்தால் விரும்பாத ஒருத்தனை கல்யாணம் கட்டிட்டு அவனோட போயிருப்பே. அப்படித்தானே?” என்றான் ஆழ்ந்த குரலில். அதைக்கேட்டு பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி அமர்ந்திருந்தாள் தாரா. 


“நீ அந்த சித்தார்த்தை விரும்பி தான் கல்யாணம் செய்ய போறதாக சொன்னதால தான் உன் அப்பனை சும்மா விட்டேன். இல்லைனா” என்று பற்களை நறநறவென்று கடித்தான். “அத்தை புருஷன், உனக்கு அப்பன்னு இத்தனை நாள் இருந்துட்டேன், இனி நடக்காது. அந்த ஆளை சும்மா விடமாட்டேன்” என்று கர்ஜித்தான்.


“சும்மா எங்க அப்பாவையே குறை சொல்லிட்டு இருக்காதே. இதுக்கெல்லாம் காரணம் உங்க அம்மா தான்” என்று வெடித்தாள் தாரிகா



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post