இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--6 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 19-04-2024

Total Views: 33100

இதயம் 6

     தொலைவில் இருந்து தான் பார்த்து இரசித்த வீட்டை அருகில் பார்க்கும் ஆர்வத்தில், சதுரங்கக் காய்களின் உருவத்தில் செதுக்கப்பட்டிருந்த அழகுச் செடிகளின் மீது தேன்மொழியின் நாய்க்குட்டி அசிங்கம் செய்வதைக் கவனிக்க மறந்து போனாள் மினி. ஆனால் அது சாணக்கியனின் கண்களில் பட்டுவிட பயங்கர கோபத்துடன் கீழே வந்தான்.

     “அடேய் உடைஞ்ச காலை வைச்சுக்கிட்டு ஒரு இடத்தில் இருக்க மாட்டியா நீ. ஆண்டவா இவனை எல்லாம் என்ன மனநிலையில் இருக்கும் போது உருவாக்கினீங்க“ நண்பனைப் படைத்த ஆண்டவனைத் திட்டி முடித்து தானும் கீழ் இறங்கினான் எழில்.

     “ஹே அறிவில்லை. கேட் திறந்து கிடந்தால் நீ பாட்டுக்கு உள்ளே வந்திடுவியா?“ எடுத்த எடுப்பிலே ஆக்ரோஷமாகத் தான் கேட்டான் சாணக்கியன்.

     திடீரென தனக்கு மிக அருகில் கேட்டசத்தத்தில் உடல் தன்னிச்சையாகத் தூக்கிப் போட பதறிப்போய் திரும்பிய மினி தன் அருகே நின்றிருந்த சாணக்கியனைப் பார்த்ததும் நல்லவேளை மனிதன் தான் என்கிற சமாதானத்தோடு நெஞ்சில் கைவைத்து தன்னைத் தானே அமைதிப்படுத்திக் கொண்டாள். ஆனால் எதிரே நிற்பவனுக்குப் பேயே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குத் தான் அவனுடைய அடுத்தடுத்த செயல்கள் இருந்தது.

     “நீ என்ன செவிடா, உன்கிட்ட தானே கேட்டுக்கிட்டு இருக்கேன். என் வீட்டுக்குள் என் அனுமதி இல்லாமல் நீ வந்ததே தப்பு, இந்த அழகில் உன் நாய்க்குட்டியை வேற கூட்டிக்கிட்டு வந்து இருக்க. நான் அரும்பாடு பட்டு வளர்த்து வைச்சிருக்கிற என்னோட செடிகளை அது நாசம் பண்ணிக்கிட்டு இருக்கு“ அவள் தனக்கு அருகில் தான் இருக்கிறாள், மெதுவாகப் பேசினாலும் அவளுக்குக் கேட்கும் என்று புரியாமல் காட்டு கத்தலாய் கத்தினான்.

     இவன் சத்தம் கேட்டு பால்கனி வழியாக எட்டிப் பார்த்த அரசனுக்கு, பள்ளிக்குத் தாமதமாக வந்துவிட்டு வாத்தியார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் முழிக்கும் பள்ளி மாணவியைப் போல், தன் மகன் முன்னே அவன் நெஞ்சாங்கூடுவரை கூட உயரம் இல்லாத  சிறுபெண்ணைக் கண்டதும் சிரிப்பு தான் வந்தது. 

     ஆனால் அதே சிறு பெண் தான், யாருக்கும் அடங்காமல் ஒற்றைக் காட்டு யானையைப் போல் தான் தோன்றித் தனமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை சர்வாதிகார ராணியாய் கட்டி ஆளப் போகிறாள் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்.

     “ஏய் என்ன இன்னும் கனவுலகத்தில் இருந்து வெளியே வரவில்லையா? எண்ணி ஒரே நிமிஷத்தில் உன்னோட அந்த நாயைக் கூட்டிக்கிட்டு வெளியே போ“ சாணக்கியன் மீண்டும் கத்த ஆரம்பிக்க, ஏற்கனவே அவன் கத்திய கத்தலுக்கே பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து விழித்துக்கொண்டு நின்ற மினி இப்போது அழவே ஆரம்பித்து விட்டாள்.

     நடைபயிற்சியில் சற்றே பின்தங்கி வந்து கொண்டிருந்த தேன்மொழி இப்போது தான் வீட்டை நெருங்கி இருந்தாள். வழக்கத்திற்கு மாறாக திறந்திருந்த சதுரங்க இல்லத்தின் நுழைவு வாயிலும், அதனுள் வழக்கமாகக் கேட்கும் சாணக்கியனின் உரத்த குரலும் அவளை ஒரு நிமிடம் நின்று கவனிக்க வைக்க அதன்பிறகு தான் சாணக்கியனின் இன்றைய போனியாக உள்ளே மாட்டிக்கொண்டிருப்பது தன் தோழி என்பதைப் புரிந்து பதறிக்கொண்டு உள்ளே ஓடி வந்தாள்.

     அவளைப் பார்த்ததும் தன்னால் அமைதியானான் சாணக்கியன். அது எழிலுக்கு அவன் கொடுக்கும் மரியாதை. “மினி என்னாச்சு“ தேன்மொழி தோழியின் கரம்பிடிக்க, தன்னை இந்த அரக்கனிடம் இருந்து காப்பாற்ற யார் வருவார்கள் என்று காத்திருந்த அந்த பேதைப் பெண், பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியில் தோழியை அணைத்துக்கொண்டு கதற ஆரம்பித்து விட்டாள். அவள் அழுவது சாணக்கியனுக்கு வேறு ஏதோ சிந்தனைகளைக் கொண்டு வர, “இப்ப என்னாச்சுன்னு இப்படி சீன் கிரியேட் பண்ற“ அதற்கும் கத்த தான் செய்தான்.

     “ஹலோ இவளை உங்களுக்கு முன்னே பின்னே தெரியுமா? அப்படி இருக்கும் போது அவளை விமர்சிக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது“ அதிகாரமாகக் கேட்டாள் தேன்மொழி.

     “அதிகாரம் எல்லாம் நல்லா தூள் பறக்குது தான். ஆனாப் பாருங்க என் வீட்டுக்குள் அத்து மீறி நுழைஞ்சவங்களை நான் ஆரத்தி எடுத்தா வரவேற்க முடியும்“ சூடாகத் திருப்பிக் கேட்டான். அந்த உண்மை சுட, தோழியின் கரம் பற்றி இழுக்காத குறையாக அழைத்துச் செல்ல முயன்றாள் தேன்மொழி. 

     “மேடம் உங்க நாயைக் கொஞ்சம் கூட்டிட்டு போங்க. கூடவே அடுத்தவங்க வீட்டுக்குள் அத்துமீறி நுழையக்கூடாதுன்னு சொல்லிக்கொடுங்க“ நக்கலாகச் சொன்னான்.

     “ஹலோ என் லக்கியை நாய் னு சொல்லாதீங்க. அவன் எங்க வீட்டில் ஒருத்தன், என் தம்பி மாதிரி“ வேகமாகச் சொன்னாள் பெண். “இது உங்க தம்பின்னா அதோ கதவுப் பக்கம் நின்னுக்கிட்டு எட்டிப் பார்க்கிறாளே ஒரு குட்டிப்பொண்ணு அவ என்ன பொமேரியன் நாயா?“ கடுப்பாக கேட்டான் சாணக்கியன்.

     “ஏன்டா இப்படி“ கொஞ்சம் கொஞ்சமாக சந்திரமுகியாக மாறிக்கொண்டிருக்கும் தேன்மொழியைப் பார்த்தவண்ணம் கேட்டான் எழில்.

     “பின்ன என்னடா, நாய்க்கு கொடுக்கிற மரியாதையைக் கூட மனுஷனுக்குக் கொடுக்க வலிக்கிது அவங்களுக்கு“ கடுகடுத்தான். 

     “மரியாதை எல்லாம் ஒருத்தரோட செயல்பாடுகளைப் பொறுத்து தான் கிடைக்கும்“ தானும் வாயை மூட நினைக்கவில்லை தேன்மொழி.

     “ஏய் என்ன நானும் சின்னப்பொண்ணுன்னு அமைதியா இருந்தா ரொம்பப் பேசுற. ஒரு செல்லப் பிராணி தப்புப் பண்ணா அதற்கான தண்டனையை அதை சரியா வளர்க்கத் தெரியாத ஓனருக்குத் தான் கொடுக்கணும் என்று சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தா உன்னோட நாய் இங்க வந்து இவன் வீட்டுத் தோட்டத்தை நாசம் பண்ணதுக்கு உன்னைக் க்ளீன் பண்ணச் சொன்னா என்ன பண்ணுவ“ என்றான் எழில்.

     சுற்றி முற்றிப் பார்த்த தேன்மொழி அவர்களை விட்டு சற்று தொலைவில் செடிகளுக்குத் தண்ணீர் விடும் பைப் இருக்க அதை எடுத்து குறிப்பிட்ட செடிகளை குளிப்பாட்டி முடித்தவள், எழிலிடம் திட்டு வாங்கிக்கொடுத்த தன் நாய் அருகில் வருவதைப் பார்த்ததும் கோபம் கொண்டவளாக அதன் மீதும் தண்ணீர் அடிக்க, அதுவோ ஏதோ எரிமலை வெடிப்பைப் பார்த்தது போல் பதறி ஓடி வந்து சாணக்கியன் மீது மோத, அதன் பலனாக தடுமாறி விழுந்தான் அவன்.

     பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் அடிபட்ட காலில் மீண்டும் அடிபட அம்மா என்ற அலறிலான் நாயகன். நண்பனின் நிலையைப் பார்த்து பதறிப் போன எழில் தேன்மொழியை கை நீட்டப் பார்க்க அவனைத் தடுத்த அரசன் நடக்கும் அனைத்தையும் பார்த்து பயந்து போய் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த மினியை தேன்மொழியை அழைத்துக்கொண்டு செல்லச் சொன்னார்.

     அதற்கு அவசியம் இல்லாமல் தேன்மொழி கோபமாக முன்னால் நடக்க, சாணக்கியனின் அடிபட்ட காலில் கசிந்து கொண்டிருந்த இரத்தத்தைப் பார்த்து பரிதாபப்பட்டுக்கொண்டே தோழியின் பின்னால் நடந்தாள் மினி. ஒரு மினி கலவரத்தை நடத்தி முடித்துவிட்டு நல்ல பிள்ளையைப் போல் அவர்கள் பின்னே நடந்து சென்றது லக்கி.

     “உனக்கு ஏன்டா அவ்வளவு கோபம் வருது. பொண்ணுன்னு பார்க்காம அடிக்க கை ஓங்குற“ மகனின் நண்பன் மற்றும் தன் இன்னொரு மகனான விளங்கும் எழிலைக் கண்டித்தார் அரசன்.

     “சும்மா இருங்க அங்கிள், இவன் என்ன அவ சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணா அள்ளிப் போட்டான். எப்ப பார்த்தாலும் கண்ணில் விஷத்தை சேர்த்து வைச்சிருக்கிற மாதிரியே இவனைப் பார்க்கிறா. 

     வேற யாராவது இருந்தா இவன் என்ன பண்ணுவான் என்பது நம்ம எல்லோருக்குமே தெரியும். எனக்காக பொறுத்துப் போறான். அது அந்த திமிரு பிடிச்சவளுக்கும் நல்லாவே தெரியும். அதனால் தான் ரொம்ப ஆடுறா. இப்போதைக்கு அவ வேண்டாம் என்று சும்மா தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். போறபோக்கைப் பார்த்தா நிஜமாவே அவ வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்திடுவேன் போல“ கடுப்பாகச் சொன்னான்.

     “என்ன சொன்ன, வேண்டாம் என்று சும்மா சொல்றியா? சும்மா சொல்ற வார்த்தையா அது. அந்த வார்த்தைகள் கொடுக்கும் வலி தெரியுமா டா. அதைச் சொல்லும் இடத்தில் இருப்பதால் சுலபமா சொல்லிடற, அப்படியான வார்த்தையைக் கேட்கும் இடத்தில் இருந்து பார் அப்ப தெரியும் அந்த வலி என்னன்னு“ என்ற சாணக்கியன் இரத்தம் கசியும் கால் வலிக்க வலிக்க நடந்து மேலே சென்றான்.

     “என்பக்கம் இருந்து உன்கிட்ட ஒரு ரெக்வெஸ்ட் இருக்கு எழில். இப்போதைக்கு இந்த உலகத்தில் அவன் கொஞ்சமாச்சும் மதிக்கிறதும் மரியாதை கொடுக்கிறதும் தேன்மொழிக்கு மட்டும் தான். அவளைப் பத்தி தப்பா பேசி அவளும் மற்ற பெண்கள் மாதிரி தான் என்கிற எண்ணத்தை அவனுக்குள் வளர விட்டுடாதே. பெண் என்னும் இனத்தையே வெறுத்திடுவான். அப்புறம் அவனைக் கையாள்வது ரொம்பக் கஷ்டம்“ அரசன் சொல்ல புரிந்தது என்பதாய் தலையாட்டிவிட்டு நண்பனைத் தேடிச் செல்ல முயன்றான்.

     “இப்ப நீ போக வேண்டியது நண்பனைத் தேடி இல்லை, காதலியைத் தேடி, அங்க போ“ என அவனின் பாதையை மாற்றிவிட்டு மகனைத் தேடிச் சென்றார் அரசன்.

     “தேனு அவர் தான் நீ சொன்ன உன்னோட மாமா பையனா?“ மினி கேட்க, “ஆமா பொல்லாத மாமாவும் அவரோட மகனும். பெரியவரு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக என் அம்மாவை ஒதுக்கி வைச்சாரு. சின்னவரு, பொண்ணா எனக்குன்னு அவர் உருவாக்கி வைச்சிருக்கும் எல்லையில் நிற்காமல் அவரைச் சுத்தி சுத்தி வருவதால் என்னை ஒதுக்கி வைக்கிறாரு“ கடுகடுப்பாய் சொன்னாள்.

     “ஏன் தேனு அவருக்கு உன்னைப் பிடிக்கலையா?“ ஆதங்கமாகக் கேட்டாள் மினி. “அதெல்லாம் பிடிக்கும். எங்க குடும்பம் வேண்டாம் என்று அவங்க அப்பா எவ்வளவோ சொல்லியும் கட்டினால் என்னைத் தான் கட்டுவேன்னு சொல்லும் அளவு என்னை பிடிக்கும் தான்“ ஆனந்தமான விஷயம் தான் என்றாலும் அதைச் சொல்லும் போது அத்தனை விரக்தி தெரிந்தது தேனின் வார்த்தைகளில்.

     “ஒருவேளை உனக்கு அவர் மேல் பிடித்தம் இல்லையா?“ மினி புரியாமல் பார்க்க, “அந்த மனுஷனுக்கு என் மேல் இருக்கும் பிரியத்தை விட எனக்கு அவர் மேல் அதிக பிடித்தமும் அன்பும் இருப்பது தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்“ என்றாள்.

     “என்னடி உளறுர. ஒரு ஜோடியில் யாராவது ஒருத்தர் அதிகமாகக் காதலிச்சா தான் அந்தக் காதல் வளரும் ஜெயிக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கேனே. அப்படி அதிகமாகக் காதலிக்கும் நபர் பெண்ணா இருந்தால் இன்னமும் நல்லது என்று சொல்லுவாங்க. இதையெல்லாம் தாண்டி அப்படி என்ன பிரச்சனை உங்ககிட்ட“ என்க, 

     “அந்த வளர்ந்து கெட்டவன் தான் என்னோட பிரச்சனை. எனக்கு அவனைச் சுத்தமாப் பிடிக்காது. அவருக்கு அவனைத் தான் என்னை விட அதிகமாப் பிடிக்கும். எனக்காக நீங்க எதுவும் செய்ய வேண்டாம் அவனோடநட்பை கட் பண்ணிக்கோங்கன்னு சொன்னேன். அவனைத் தூக்கிப்போட்டா தான் நீ எனக்குக் கிடைப்ப என்றால் நீ எனக்குத் தேவையே இல்லைன்னு போயிட்டார்“ இதைச் சொல்லும் போது தேன்மொழிக்கு அழுகையே வந்தது.

     “சின்னப்பொண்ணுங்கிறது சரியா தான் இருக்கு. உன் வயசுக்கு ஒரு காதல், அது தோல்வின்னு வேற அழுகுற. ஆமா அவரோட நண்பனை விட்டு வரச்சொல்றதுக்கு நீ யாரு? காதலிக்கிறவ கல்யாணம் பண்ணிக்கப்போறவளா இருந்தா நீ என்ன சொன்னாலும் அவர் கேட்கணுமா?“ கேட்ட மினியை விசித்திரமாகப் பார்த்தாள் தேன்மொழி.

     அது எதையும் கண்டுகொள்ளாமல், “அவர் உன்கிட்ட வந்து என் அப்பா அம்மாவுக்கு உன் அப்பா அம்மாவைப் பிடிக்கல, அதனால் இனி என்னைக்கும் நீ அவங்ககிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னா சரிங்க அத்தான்னு உடனே ஏத்துப்பியா?“ என்கவும் கோபம் வந்தது எதிரே இருப்பவளுக்கு.

     “அது எப்படி அப்பா, அம்மாவும் நண்பனும் ஒன்னா. என்னோட அப்பா அம்மா ரொம்ப நல்லவங்க ஆனா அந்த வளர்ந்து கெட்டவன் அப்படி இல்லை“ வேகமாகச் சொன்னாள்.

     “அப்படியா அவர் அப்படி என்னம்மா தப்புப் பண்ணார். உன்னோட ஆளுக்கு தப்பான விஷயங்களை பழக்கிக் கொடுத்தாரா? உன் ஆளோட உழைப்பை உறிஞ்சி அதில் உடலை வளர்க்க ஆசைப்படுறாரா? கொலை காரனா, கொள்ளைக் காரனா? உன்கிட்ட ஏதும் தப்பா நடந்துக்கிட்டாரா?“ எனப் பல கேள்வி கேட்டாலும் எதற்கும் தேன்மொழிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

     “அவர் மேல் உனக்கு இருப்பது பொறாமை. உன் ஆளுக்குப் பிடித்த முதல் ஆளாக நீ மட்டுமே இருக்கணும் என்பது உன்னோட எதிர்பார்ப்பு. அது நிறைவேறாமல் போன ஆத்திரத்தை இப்படிக் காட்டுற“ உயிர் நாடியைப் பிடித்தாள் மினி.

     “ஆமா அதுவே உண்மையா இருந்துட்டுப் போகட்டும். காதலிக்கிற பொண்ணை முதல் பிரையாரிட்டியா வைக்கத் தெரியாத மனிதர் எதுக்காக காதலிக்கணும், கல்யாணம் பண்ணிக்க நினைக்கணும் சொல்லு. அப்புறம் அந்த வளர்ந்து கெட்ட மனிதர்கிட்ட என்ன தப்பு இருக்குன்னு கேட்ட தானே. சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ.

     அவருக்கு மென்மை என்றால் என்னவென்றே தெரியாது. பார்க்கும் ஆள் யாரா இருந்தாலும் காட்டுக்கத்து கத்த தான் தெரியும். கொஞ்ச நேரம் முன்னாடி உனக்கு ஒரு சேம்ப்பிள் கிடைச்சதே“ நக்கலாகக் கேட்டாள்.

     “தப்பு தேனு, ஒருத்தரோட கோபத்தை வைத்து அவரை எடை போடுவது ரொம்பத் தப்பு. சிலருக்கு இயற்கையிலே அதிகமா கோபம் வரும். அதுக்கு யார் என்ன செய்ய முடியும் சொல்லு. நாம இருக்கும் இடம் வந்து, நாம எந்தத் தப்பும் செய்யாத வேளையில் அவர் நம்மைத் திட்டினால் அது தப்பு. 

     ஆனால், தப்பை நம்ம மேல் வைச்சுக்கிட்டு அவர் திட்டிட்டார் அது பெரிய தப்புன்னு சொல்வது எல்லாம் நியாயமே இல்லை“ தெளிவாகப் பேசினாள் மினி.

     “உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு, கதவு திறந்து கிடந்தா நாய்க்குட்டி போகத்தான் செய்யும். அதுக்கு யார் என்ன செய்ய முடியும்“ இன்னும் இறங்கிவரத் தோன்றவில்லை அவளுக்கு.

     “நடந்ததை கொஞ்சம் மாற்றி நினைச்சுப் பாரு. இப்ப வீட்டில் பொண்ணுங்க மட்டும் தான் இருக்கோம். இப்படி நாயைப் பிடிக்கிறேன் என்று அவர் வந்து நம்ம வீட்டை உற்று உற்று பார்த்துக்கிட்டு இருந்தா, வாங்க சார் வந்து காபி குடிச்சிட்டுப் போங்கன்னு விருந்தா வைப்ப“ என்க தேன்மொழியால் எதிர்த்துப் பேச முடியவில்லை.

     “அட அட அட… என்ன பொண்ணு மா நீ. இந்தச் சின்ன வயதில் எவ்வளவு பக்குவம் உனக்கு. உன்னை மாதிரி ஒருத்தி அவ கூட இன்னும் கொஞ்ச நாள் இருந்தாக்கூட என்னோட வாழ்க்கை தப்பிக்கும்“ எழில் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் மாமா என்றபடி ஓடி வந்து அவன் இடையோடு கட்டிக்கொண்டாள் பிரியா.

     “அடடே என் செல்லப் பொண்ணு, அப்பா அம்மா இல்லன்னு அதிகமா கொட்டம் அடிக்கிறியாமே“ எதிர்கால மச்சினியை குழந்தையைப் போல் கொஞ்ச ஆரம்பித்தான் அவன்.

     “மாமா அந்த மாமா கிட்ட நான் செஸ் க்ளாஸ் சேர்வதைப் பற்றி கேட்டு சொல்றேன்னு சொல்லி இருந்தீங்களே“ ஆசையாகக் கேட்டாள் பிரியா.

     “ஏய் நீ அவன்கிட்ட தான் விளையாட கத்துப்ப என்றால் அப்படி ஒரு விளையாட்டே உனக்குத் தேவையில்லை. ஒழுங்கா போய் படிக்கிற வேலையை மட்டும் பார். வந்துட்டா பெரிய இவளாட்டம். நாளைக்கு இவ தான் வளர்ந்து உலக சாம்பியன் பட்டம் வாங்கப் போறாளாக்கும்“ கடுகடுப்பாகச் சொன்னாள் தேன்மொழி.

     “ஹலோ மேடம் நீ என்ன அவனை வேண்டாம் என்று சொல்றது. அவன் என்னைக்கோ உன்னோட தங்கச்சிக்கு கத்துக்கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டான். நான் தான் சின்னப் பொண்ணு மனசு சங்கடப்படக்கூடாதேன்னு சொல்லாம இருந்தேன்“ உண்மையை உளறினான் எழில்.

     பிரியாவின் முகம் வாடிப்போக, “ஏன் சார் அப்படி“ சும்மா இருக்க முடியாமல் கேட்டுவிட்டாள் மினி.

     “நம்ம அம்மணிக்கு அவன் மேல் அதிகமான நம்பிக்கை இருக்கு இல்ல. அந்த அவநம்பிக்கையோட இவளை அங்க அனுப்பத் தேவையில்லைன்னு சொல்லிட்டான்“ எழில் சொன்னது நியாயமாகத் தான் பட்டது மினிக்கு.

     “சரி நீங்க பேசிக்கிட்டு இருங்க, நானும் பிரியாவும் உள்ளேபோறோம்“ என்றபடி காதலர்களுக்குத் தனிமை கொடுத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றாள் மினி.

     “எனக்குத் தெரிந்த வரை நீ உன் வாழ்க்கையில் செஞ்ச மிகப்பெரிய நல்ல காரியம் என்ன தெரியுமா? இந்தப் பொண்ணு கூட பழக ஆரம்பிச்சது தான். அவளைக் கூடவே வைச்சுக்கோ நல்லது கெட்டதை சரியான வழியில் சொல்லிக் கொடுப்பா“ என்ற எழிலை கூடுமானவரை நன்றாக முறைத்து வைத்தாள் தேன்மொழி.

     “இதோ பார் தேனு, எனக்கு உன்னையும் பிடிக்கும் அவனையும் பிடிக்கும். ஆனா இரண்டு பிடித்தத்துக்கும் வித்தியாசம் இருக்கு. அதைப் புரிஞ்சுக்காம கண்டதையும் நினைச்சுக் குழப்பிக்கிட்டு என்னையும் சங்கடப்படுத்துற. நீ இப்படி இருக்கிற வரை நமக்குள் எதுவும் சரியாகப் போறதில்லை. கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு“ என்றுவிட்டு தன் வழி நடந்தான் அவன்.

     “எப்ப பார் என்மேல் தான் தப்பு இருக்கிற மாதிரி பேச வேண்டியது. என்னைக்காவது ஒருநாள் அவன் உங்களையும் அவமரியாதையாப் பேசுவான் அப்ப என்கிட்ட தான் வந்து நிற்பீங்க அப்ப பார்த்துக்கிறேன்“ என்றுவிட்டு தேன்மொழி உள்ளே செல்ல, பிரியா மினி இருவரும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தனர்.

     தங்கைக்கு இந்த விளையாட்டில் இருக்கும் ஆர்வம் புரிந்ததால் அமைதியாக அவர்களின் அருகே அமர்ந்தாள் தேன்மொழி. தென்காசியில் இருந்தவரை சதுரங்கத்தில் அ, ஆ கூட தெரியாத மினிக்கு சென்னை வந்த பிறகு இது பிடித்தமான விளையாட்டாகிப் போனது. காரணம் அவள் அத்தான் ஜீவன். 

     


Leave a comment


Comments


Related Post