இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -20 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 20-04-2024

Total Views: 27763

நாட்கள் வேகமாக சென்றது. நந்தன் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து சென்னையில் மிகப்பெரிய பொறியியல் கல்லூரியை எடுத்திருந்தான்.

வளவனும், நந்தனுக்கு இணையான மதிப்பெண் எடுத்திருந்தாலும் வீட்டை விட்டு வெளியே போய் படிக்க விரும்பாதவன் ஊருக்குள்ளயே அரசுக் பொறியியல் கல்லூரியை தேர்ந்தெடுத்திருந்தான்.

விடுமுறை முடிந்து  நந்தன் கல்லூரி செல்ல வேண்டியிருந்தது.அவனுக்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் தேடி தேடி வாங்கியிருந்தார் மணிமேகலை.

பேசாமல் இருந்தாலும் அவன் முகத்தையாவது பார்த்துக்கொண்டு இருக்கலாம் என இருந்தவருக்கு, நந்தன் சென்னைக் கல்லூரியை தேர்ந்தெடுத்ததும் தாயாக  மனம் பயம் கொள்ளவும் செய்தது, தவிக்கவும் செய்தது.

பயம் வந்ததற்கு காரணம்,   இங்கு இவ்வளவு பேர் இருக்கும் போதே அவன் செய்வது தான் சரி என்று இருப்பான். விடுதியில் தங்கினால் சொல்லவா வேண்டும்?  மனம்  மகனை நினைத்து பரமாகியது.

யாருக்கு சந்தோஷமோ இல்லையா நிலாவிற்கு பரம சந்தோசம்.

"ஹப்ப நெட்டக் கொக்கு இனி இங்க இருக்காது.அது போதும்ப்பா, கொஞ்ச நாளைக்கு அடி உதையில இருந்து லீவ் வாங்கிட்டேன் ஐ ஜாலி" என வளவனிடம் சொல்லி சொல்லி ஆனந்தப்பட்டுக் கொண்டாள்.

அவள் சந்தோசத்திற்கும் அதற்கும் ஆப்பு வைத்தான் நந்தன்.

ஒருமாலைப் பொழுது தனியாக நிலாவைப் பிடித்து ஆட்டிவிட்டான்.

"என்னடி நான் காலேஜிக்கு சென்னைப் போறேன்னு ரொம்ப கொண்டாட்டமோ."

"இல்லைங்க".

"என்ன நொள்ளைங்க?.அப்புறம் என்னடி ஒரே குதுகலமா சுத்திட்டு இருக்க, நான் ஊருக்கு போறேன்னு உனக்கு கொஞ்சம் கூட  கவலை இருந்த மாதிரி இல்லையே."

'நீ ஊருக்கு போறதுக்கு நான் எதுக்குடா  கவலைப்படனும்?'என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு 

"மனசு முழுக்க கவலையா இருக்குங்க,அதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் சொல்லாம இருந்தேன்" என சோகமாக சொன்னவளை நம்ப முடியாதவாறுப் பார்த்தான்.

"ச்சை பச்சையா நடிக்காதடி நீ யாருன்னு மத்தவீங்களை காட்டிலும் எனக்கு நல்லாவே தெரியும்."

"இல்லைங்க உண்மையா தான் சொல்றேன்"  என மெலிதாக வெளியே சொன்னாலும், "ஐயா சாமி சீக்கிரம் இடத்தைக் காலிப் பண்ணு உனக்கு புண்ணியமா போகும்"  என மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

"என்னடி வெளியே கவலையா இருக்குன்னு ரீல் விட்டுட்டு உள்ளே சனியன் எப்போடா போவான்னு நினைக்கறியா?"

அவன் சொன்னதைப் போல தானே நினைத்தாள் அதனால் ஆமா என தலை முதலில் ஆடிவிட.. "ஐயையோ இல்லைங்க அப்படிலாம் நான் யோசிக்கலைங்க". என வேகமாக மறுத்து தலையை ஆட்டி சொன்னவள்.

"அங்க சோறுலா நல்லா இருக்காதுன்னு சொல்றாங்க உங்களுக்கு சோறுலாம் நல்லா இருக்கணுமே" என தயங்கி தயங்கி கேட்டாள்,

அவள் கண்ணை உருட்டி உருட்டி பேசும் விதத்தில் எதிரில் நிற்கும் யாராக இருந்தாலும் அவள்  கண் அழகில் மயங்கி விடுவார்கள். நந்தனை அந்த லிஸ்டில் எல்லாம் சேர்க்கவே வேண்டாம் என்பது போல் அவளை முறைத்துக்கொண்டு நின்றவன்.

"ஏன் நல்லா இல்லைனா நீ வந்து ஆக்கிப் போடப்போறியா?".

'நான் எதுக்குடா பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டுப் போகணும்'  "ஹும்ஹும்.."என அவசரமாக மறுத்தாள்.

"அப்புறம் என்னடி என்மேல் அக்கறை இருக்கறவ மாதிரி நடிக்கிற?"

"இனி சொல்லமாட்டேன்" என்றவள் கையை பிடித்து முறுக்க  வலியில் மற்றொரு கையால் வயிறைப் பிடித்துக் கொண்டு அலறினாள்.

"ஸ்ஆஆஆஆஆஆஆஆஆ வலிக்குது"

"கையை தானே முறுக்குறேன் நீ எதுக்குடி வயித்தைப் பிடிச்சிட்டு உக்கார்ந்து இருக்க.?"

"எனக்கு வயிறு தான் வலிக்குது"என காலை மண்டியிட்டு  கீழே உக்கார

"என்னப் பண்ணுது.ஏய் என்னடி பண்ணுது.?"

"தெரியலங்க பயங்கரமா வயிறு வலிக்குது,  தலை சுத்தற மாதிரி இருக்கு, வாந்தி" என சொல்வதற்குள்ளே வாந்தியும் எடுத்து விட்டாள் அவன் மீதே.

"ஏய்..." என பல்லைக் கடிக்க

"சாரிங்க.. நானும் அடக்கப் பார்த்தேன் முடியல, உங்க டிரசை குடுங்க  துவைச்சு தரேன்" என சோர்வாக சொன்னாள்.

"அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டா" இரு ஆயாவை வர சொல்றேன், என்ன பண்ணி தொலையுதுன்னு அவங்ககிட்ட சொல்லு" என்று நகரப் போனவனின் கையை எட்டிப் பிடித்தவள்.

"வேண்டாங்க, அவங்க  உங்கமேல வாந்தி எடுத்ததுக்கு திட்டுவாங்க".

"இப்படியே உக்காரு நான் போய்  குளிச்சிட்டு ஆயாவை கூட்டிட்டு வரேன்" என்றவன் சென்று விட்டான்.

ராஜி வேலைக்குச் சென்று இன்னும் வரவில்லை. வளவனும் இந்த விடுமுறையில் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தான். நந்தனும் வளவனும் வேறு வேறு கல்லூரியாக இருந்தாலும் இருவருக்கும் ஓரே நாளில் தான் கல்லூரி ஆரம்பிப்பதால் அதுவரையிலும் வேலைக்குச் செல்லலாம் என நிலாவை எப்போதும் போல  கிருஷ்ணம்மாளின் பாதுகாப்பில் விட்டுவிட்டு சென்றிருந்தான்.

அவன் விட்டு சென்ற இடத்தில் இருந்த கல்லில் உக்கார்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டாள்.

இதுவரை அனுபவித்திராத வலி.. அடிவயிற்றில் சுளீரெண்டு வலி வந்து வந்து போனது.

நந்தன் குளித்து உடை மாற்றிக் கொண்டு கிருஷ்ணம்மாளிடம் வந்தவன்.

"ஆயா" என்றான்.

"சொல்லு ராசா நாளைக்கு கிளம்ப எல்லாத்தையும் எடுத்து வெச்சிட்டியா?"

"ம்ம் அந்த வியா புள்ளைக்கு வயிறு வலிக்குதுன்னு  பூங்கொடி அக்கா வீட்டுக்குப் பக்கத்துல உக்கார்ந்து இருக்கு,வந்து பாரு என்னனு.?"

"அங்க எதுக்கு போனா..?" என்றர் அவர்களை எவ்வளவு கோவமான வார்த்தைகளால் சாடியிருந்தாலும்,  அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் வேக வேகமாக ஓடினார்.

"ஏய் குட்டி என்னடி பண்ணுது?".

"ஆயா வயிறு பயங்கரமா வலிக்குது வாந்தி வந்துட்டே இருக்கு" என்றவள் நந்தன் போனதில் இருந்து இரண்டு முறை தொடர்ந்து வாந்தி எடுத்து விட்டாள்.

"எழுந்திரி ஆஸ்பத்திரி போவோம்."

"இல்ல என்னால நடக்கக் கூட முடியல" என எழுந்து நின்றவளின் பின்புற ஆடை முழுவதும் ரத்தமாக இருக்க, 'என்ன நடந்திருக்கும்' என்று புரிந்து போனது கிருஷ்ணம்மாளுக்கு.

"12 வயது தானே ஆகிறது அதுக்குள்ளவா?" என்று யோசித்தால் இதுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே நிலாவுடன் படிக்கும் குழந்தை பூப்பெய்திருந்தது நினைவிற்கு வர.

"இந்தக் காலத்துல எல்லாமே அவசரமாக தான் நடக்குது, என்னத்தை சொல்ல?,நந்து நீ வீட்டுக்குப் போய் உன்ற அம்மாவை வர சொல்லு" என்றார்.

"ம்ம் இவளுக்கு என்னாச்சி?" என்றவன் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. வயிறுவலி சிறிது சிறிதாக குறைந்து விட.. நந்தனைப் பார்க்க ஒரு மாதிரி வெட்கமாக இருக்க, தலையை குனிந்து அமர்ந்திருந்தாள் நிலா.

இதெல்லாம் சொல்லிக் கொடுத்து வருவதில்லை இயற்கையாக உடலில் தோன்றும்  ஹார்மோன்களின் மாற்றம் தானே.நந்தனை தலை நிமிர்ந்து பார்க்கவே அஞ்சினாள்.

ராஜி வேலைக்கு செல்வதால் தன் மகளிடம் இதுபோன்ற மாற்றங்கள் உடலில் ஏற்பட்டால் என்ன நடக்கும் யார் யாரிடம் சொல்ல வேண்டும், எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என ஏற்கனவே சொல்லிக் கொடுத்திருக்கிறார்.  தான் இல்லாதப் போது மகள்  வேதனைப்படக்கூடாதே என்ற  பாதுக்காப்பிற்காக  சொல்லிக் கொடுத்தது.

"கண்ணு இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்,  நீ போய் உன்ற அம்மாவை வர சொல்லிப்புட்டு, நாளைக்கு ஊருக்குப் போக வேண்டியதை பண்ணுப் போ'  என்று முதன் முதலாக பேரனை அதட்டி அனுப்பினார்.

அங்கிருந்து போக மனம் இல்லை, வலி என்று தன் கையை இறுக பிடித்த நிலாவை எப்படி அப்படியே விட்டுச் செல்வது. மற்ற நேரமாக இருந்தால் அவன் மீது வாந்தி எடுத்ததற்கு ஆடி தீர்த்திருப்பான்.  பிடுங்கிப் போட்ட கொடிப் போல் தன்மேல் விழுந்தவளை  எதுவும் சொல்ல முடியாமல் தான் அமைதியாகி நின்றான்.

"போன்னு சொன்னேன்" என மீண்டும் அதட்டவும், திரும்பிப் பார்த்துக்கொண்டே போனவன். ஷாலினியிடம் நடந்ததை சொல்லி தாயிடம் சொல்லச் சொன்னான்.

"அம்மா அம்மா.."

"எதுக்குடி இப்போ என்னைய ஏலம் விடற.?"

"அது. நிலாவுக்கு உடம்பு சரியில்லையா,ஆயா உன்னைய வர சொல்லிருக்காம் பெரியவன் சொன்னான்."

"புள்ளைக்கு என்னாச்சி.?"

"என்னையக் கேட்டா?.எனக்கு என்ன தெரியும்?,அங்கப் போய் பாருங்க" என்று தன் நோட்டு புத்தகங்களுக்கு அட்டைப்  போட.

"அம்மா வா நம்ப போய் பார்க்கலாம்"என முதல் ஆளாக யுகி கிளம்ப.

"ஷாலு அங்க பசங்க யாரையும் வர வேண்டான்னு ஆயா சொன்னாங்க"   என்றான் நந்தன் தகவலாக.

அவன் சொன்னதுமே மணிமேகலைக்கு புரிந்து விட.

"டேய் யுகி நீ இங்கையே இரு,நான் தேவைப்படும் போது கூப்பிடறேன் அப்போ போய் வளவனையும் அவங்க அம்மாவையும் கூட்டிட்டு வாங்க" என பொதுவாக சொல்லிவிட்டு வேகமாக நிலாவைப் பார்க்க ஓடினார்.


Leave a comment


Comments


Related Post