இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 21-04-2024

Total Views: 34072

அத்தியாயம்-18

கடிகார முள் கூட சில சமயம் ஆற்றலுக்காக காத்திருந்து நின்றுவிடும், ஆனால் சூரியனும் சந்திரனும் யாருக்காகவும் காத்திருந்து புலர்வதில்லை. அதன் தடையற்ற சேவையின் பலனாய் சில மாதங்கள் அமைதியோடு கடந்திருந்தன.

அமைதியோடு நடந்ததென்னவோ நாட்கள் தான், அஞ்சனாவின் மனமல்ல. அவளிடம் பல மாற்றங்களை சுற்றியுள்ளோரால் உணர முடிந்தது. நல்லவிதமான மாற்றம் தான் என்றாலும் சிலசமயம் யோசனையான முகபாவத்துடனே அவள் வலம் வருவது மட்டும் சற்று வித்தியாசமாக இருந்தது.

அந்த அழகிய இரவு வேளை தங்கள் அறை கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்தபடி மடிக்கணினியில் வேலையாக இருந்தான், யஷ்வந்த். பால்கனியில் தேக்கு மர ஊஞ்சலில் தனியே அமர்ந்திருந்தவள், சில நிமிடங்களில் உள்ளே வர, அவன் தன் வேலையிலேயே இருந்தான்.

எங்கே படுத்தால் தூங்கிவிடுவோமோ என்ற காரணத்தால், அவனிடம் பேசிவிட வேண்டிய அவசியத்திற்காக அந்த அறையிலேயே குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் அமைதி காத்தவன், 

“சனா.. எதும் பேசணுமா?” என்று கணினியைப் பார்த்தபடியே வினவ, 

“வேலை முடிஞ்சதா மாமா?” என்றாள்.

கணினியை மூடி அருகில் உள்ள மேஜையில் வைத்தவன், அவளைக் கண்டு ஒற்றை புருவம் உயர்த்த, மெல்ல வந்து அவனருகே அமர்ந்தவள், எப்படி துவங்குவது எதைக் கூறுவதென்று யோசனையில் ஆழ்ந்தாள். அவள் தலையை மெல்லக் கோதியவன், 

“என்னடா?” என்க,

 “க்..குழப்பமா இருக்கு மாமா” என்றாள்.

இந்தப் பேச்சுவார்த்தையை அவன் முன்பே எதிர்ப்பார்த்தான். சில காலமாகவே குழப்பமாய் சுற்றுபவள் தன்னிடம் வந்து பேசுவாள் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்க, தனக்குள்ளாகவே குழம்பி இதற்குமேல் முடியாமல் தற்போதுதான் தன்னவனை நாடி வந்துள்ளாள்.

“என்னடி குழப்பம்?” என்று அவன் வினவ, 

“மா..மாமா எனக்கு சரியா தெரியலை.. ஆனா நான் ரொம்ப மாறுற போல இருக்கு” என்று தடுமாற்றமாய் கூறினாள். 

“என்ன மாற்றம்?” என்று கேட்டவனை பாவம் போல் பார்த்தவள், 

“இன்னிக்கு நாங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கேன்டீன் போனோம். மீனு ஆர்டர் பண்ண ஒவ்வொருத்தர் கிட்டயா என்ன வேணும்னு கேட்டுட்டு இருந்தா. அஜு கிட்ட கேட்டுட்டு அப்படியே போகவும் என்கிட்ட கேட்காம போறனு சொன்னேன். பக்கத்துல இருந்த இன்னொரு ஃப்ரண்ட் நீ எப்பவும் அவன் என்ன கேப்பானோ அதைதானே கேப்ப இன்னிக்கென்ன புதுசானு கேட்டான். எ..எனக்கு தெரில.. அ..அவன் பேசினது கொஞ்சம் கோவம் வந்துச்சு. இல்ல எனக்கது வேணாம்னு சொல்லி நான் வேற ஆர்டருக்கு சொல்லிட்டு திரும்பினேன். அ..அஜு என்னை பார்த்த பார்வை ரொம்ப டிஃப்ரெண்டா இருந்தது.

அ..அந்த பார்வை எனக்கு சொல்ல தெரில மாமா. ஒருவேளை அவன் கோச்சுகிட்டானோ? இப்பலாம் நான் அடிக்கடி இப்படி தான் பிஹேவ் பண்றேன் மாமா. அப்போலாம் அ..அஜு ஒருமாதிரி வித்தியாசமா பாக்குறான். எப்பவும் அவன கேட்டு செஞ்சுட்டு இப்படி அவனை தவிர்க்குறது அவனுக்கு வருத்தமா இருக்குமோனு தோனுது” என்று தட்டுத்தடுமாறி கூறினாள்.

அதற்குள் அவள் குரலில் எத்தனை ஏற்றத் தாழ்வுகள், தொண்டைக்குள் எத்தனை நெருடல்கள், இமைகளின் இடையே எத்தனை படபடப்பு, கண்களுக்கு காத்திருக்கும் கண்ணீர்த் துளி என அவளின் தவிப்பை அவளவனால் முழுதாய் உணர முடிந்தது.

அவனது மௌனத்தில் நிமிர்ந்தவள், பளபளக்கும் தன் விழிகளை அவன் விழிகளோடு சங்கமித்து,

 “நா.. நான் தான் தப்பா மாமா?” என்று வினவ, 

கன்னத்தில் மெல்லிய கோடாய் உருண்ட அவள் கண்ணீரை துடைத்தவன் இடவலமாய் தலையசைத்தான்.

தன் தங்கை சுயமாக சிந்திக்கத் துவங்கிவிட்டாளே என்று ஆனந்த அதிர்ச்சியும், உணர்ச்சி பிரவாகமுமாய் அர்ஜுன் பார்த்த பார்வைக்கு இவள் மனம் இப்படியொரு அர்த்தம் கண்டுவிட்டதில் யஷ்வந்த் ஆச்சரியமெல்லாம் அடையவில்லை. ஒவ்வொரு வயதிற்கும் ஏற்றார் போல் படிப்படியாய் வளர்ந்திருந்தால் அனைத்தும் சாதாரணமாக தெரிந்திருக்கும். திடீரென வந்து நீ வாழ்ந்த வாழ்க்கை தவறு என்று கூறி மாற்றச் சொன்னால் அனைத்தும் முரணாகத் தானே தோன்றும்?

அதை புரிந்துகொண்டவன், “அர்ஜுன் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணிருப்பான் சனா” என்க,

 “அவன் கண்ணு கலங்கி இருந்ததே மாமா?” என்றாள். 

“நீ இப்ப தான் உன்னையே புரிஞ்சுக்கத் துவங்கிருக்க சனா. அதுக்குள்ள உணர்வுகள புரிஞ்சுக்குறது கஷ்டம் தான். கண்ணீர் கஷ்டத்துல மட்டுமே வருவது கிடையாது. அதிகப்படியான கோபத்தை பொறுக்க முடியாமலும் கண்ணீர் வரும், சந்தோஷத்தின் வெளிப்பாடாகவும் கண்ணீர் வரும். கண்ணீருக்கு வருத்தம் மட்டுமே வரையறை கிடையாதுடா. உணர்வுக்குவியலை சமன் செய்ய கண்ணீர் தான் சிறந்தது. நீ சுயமா சிந்திக்கத் துவங்கிட்டனு அவன் சந்தோஷப்பட்டிருக்கான். அதோட வெளிப்பாடு தான் அந்த கண்ணீர்” என்று அவன் கூற, 

“அப்போ அஜுக்கு வருத்தம் இல்லைதானே மாமா?” என்றாள்.

“நிச்சயமா இல்லை. உனக்கு சந்தேகமா இருந்தா நாளைக்கு அவன்கிட்டயே பேசு. உனக்கு தெளிவா புரியும்” என்று யஷ்வந்த் கூற, அவன் மடியில் தலை சாய்ந்தவள் அவனை வயிற்றோடு கட்டிக் கொண்டு,

 “நான் இன்னும் எவ்வளவு தான் தெரிஞ்சுக்கணும் மாமா?” என்று கரகரத்த குரலில் கேட்டாள்.

அந்த குரலில் பயமும், ஆற்றாமையும் விரவியிருந்ததை அவனால் உணர முடிந்தது. இந்த சில மாதங்கள் கொடுத்த பாடம் அவளுக்கு பூதாகரமாக விளக்கியது அவள் தன் வாழ்வில் பல விஷயங்களை இழந்துவிட்டதை தான். 

‘ஏன் எனக்கு இது கிடக்கலை? ஏன் இப்படி நடக்கலை? ஏன் நான் எல்லார போல சராசரியா ஒரு வாழ்வு வாழலை? ஏன் ஸ்கூல் போகலை?’ என்று பல கேள்விகள் அவள் மனதில் தோன்றி அவளைச் சோர்வடையச் செய்தன.

“ஒன்னுமில்ல சனா..” என்று அவன் தட்டிக் கொடுக்க, அவன் அணைப்பை வேண்டி அவள் உடலும் உள்ளமும் ஏங்கியது. அதை வெளிப்படுத்தத் தெரியாமல் இன்னும் சோர்ந்தவள் எழுந்து அமர, அவள் முகம் கண்டு என்ன புரிந்து கொண்டானோ? அவளை அணைத்து தலை கோதி ஆறுதல் படுத்தினான்.

தன் குழப்பங்களை சொல்லி அழவும், அணைத்து ஆறுதல் பெறவும் ஒரு பெண் ஒருவனை நாடுவது ஆண் தோழனாக தந்தையாக, தமையனாக, கணவனாகவென யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் பெண்ணவள் பார்வையில் தன் சோகங்கள் கழைந்திட, அவனுள் அடைக்கலம் புகுந்திட அனுமதி வேண்டும் அந்த தவிப்பு ஒன்று போதும், அது அவள் மனம் விரும்பும் மணாளனுக்கான காதலென்பதைக் கூற!

அவள் கண்களில் அப்படியான தவிப்பைக் கண்டு, அவளுள்ளம் தன்பால் காதலெனும் உணர்வில் சாயத்துவங்கிவிட்டதை உணர்ந்தவன், அதை அவள் உணர்ந்து மொழியும் நாளுக்காக காத்திருக்க அந்நொடியிலிருந்து தவம் கிடக்க சித்தமானான்.

“சனா..” என மென்மையாய் அழைத்தவன், “ஒன்னுமில்லடா” என்று கூற,

 “தெரில மாமா.. பயமா இருக்கு” என்றாள்.

 “புரியுது சனா. நீ பயப்படுற அளவு இது ஒன்னுமே இல்லை. இப்ப தான் உனக்குள்ள நல்ல மாற்றங்கள் நடக்குது. இது நல்லதுக்கு தான்னு முதல்ல நீ நம்பு. அப்ப தான் தன்னால உனக்கு ஒரு செல்ஃப் காண்பிடென்ஸ் வரும்” என்று அவன் கூற, மெல்ல தலையசைத்தாள்.

அத்தோடு பேச்சை நிறுத்திக் கொண்டவன் அவளை அணைத்த வண்ணம் படுத்துக் கொள்ள, இருவரும் மெல்ல உறக்கத்தின் பிடிக்குச் சென்றனர்.

அங்கு தூக்கமின்றி தங்கள் அறை பால்கனி உஞ்சலில் அமர்ந்திருந்த யாழினி மனமெங்கும் அந்த வாக்கியமே!

உறங்காது அமர்ந்திருந்தவள் தனது அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க, அவளவனிடமிருந்து அழைப்பு வந்தது‌. மதுமஹதி உறங்குவதால் அலைப்பேசியை ஒளி அணைப்பில் வைத்திருந்தவள் முதல் அழைப்பை எடுக்காது புறக்கணித்திட மீண்டும் அழைப்பு வந்தது. அந்த எண்ணை அவள் பதிவு செய்து வைக்கவில்லை. ஆனாலும் அந்த எண்களுக்கு சொந்தக்காரன் யாரென்று அவள் மனம் மனனம் செய்து வைத்திருந்தது. 

இரண்டாம் அலைப்பின் கடைசி ஒலிப்பு வரை தன்னை கட்டுப்படுத்தியவள் விரல்கள், இந்த நேரத்தில் எதற்காக அழைத்தாரோ என்று அழைப்பை ஏற்று பால்கனிக்கு அவளை நடத்திட,

 “ஏ டார்லிங்.. தூங்கிட்டியா?” என்று கேட்டான்.

அவளிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லாத போதும், 

 “என்ன தூக்கம் வரலையா? ஃபோன் பார்த்துட்டு இருந்த போல? லேட் நைட் ஆன்லைன்ல இருந்தா உங்கண்ணன் கத்த மாட்டான்? ஆமா ஏன் நீ இன்னும் கம்பெணில ஜாயின் பண்ணலை? ஒருவேள.. ஏ.பி இன்டஸ்ட்ரீஸ்ல ஜாயின் பண்ணலாம்னு ப்ளான்ல இருக்கியோ? எப்படி வருங்கால மிஸஸ்.அர்ஷித்தாவா இல்லை அத்தை மகளாவேவா?” என்று கேட்டான்.

“ஷட்டப்.. அவ்வளவு தான் சொல்லிட்டேன். சும்மா உங்க இஷ்டத்து பேசாதீங்க. எல்லாத்துக்கும் ஒரு அளவுதான். காதலிக்கவே இல்லைனு சொல்றவகிட்ட உங்க இஷ்டத்துக்கு உரிமை எடுத்துக்குறீங்க?” என்று அப்போதும் யாருக்கும் கேட்டுவிடாதபடி குறைந்த சத்தத்தில் சண்டையிட்டாள். 

“கேடி ஃபெல்லோ.. மதுமா முழிச்சுக்காம இருக்க சத்தமில்லாம திட்டுறியோ?” என்றவன், 

“லவ் பண்ணலைனு அந்த சில்லி நோஸ்கு கீழ இருக்கும் ரோசி லிப்ஸ் மட்டும்தான் சொல்லுது..” என்று கூற அவனது நக்கலான குரலும் சொல்லும் கொடுத்த தடுமாற்றத்தில் திணறித் தான் நின்றாள்.

“என் மேல காதலில்லையா உனக்கு? நான் கடத்தினப்ப தப்பிக்க எத்தனை வாய்ப்பு கிடைச்சது உனக்கு? தப்பிக்க முயற்சி பண்ணியா நீ? எத்தனை முறை நான் கால் பண்ணி நீ எடுத்துருக்க? என் இன்டன்ஷன் தெரிஞ்சும் ஏன் கால் எடுத்து பேசுணும்? ஒன்னும் வேணாம் யாழு.. என் இடத்துல வேற யாரையாவது வச்சு யோசி. என்கிட்ட நடந்துக்குற போலவா அவங்க கிட்ட நீ நடந்துப்ப?” என்று அவன் கூற, மேலும் திணறியவள் கண்கள் அந்த கரிய வானில் இங்குமங்கும் அலைபாய்ந்தது.

“இ..இல்ல நா.. நான் ஒன்னும் உங்கள லவ் பண்ணலை. பெட்டர் சாய்ஸ் நீங்க வேற யாரையும் தேடுங்க” என்றவள் அழைப்பை பட்டென துண்டித்திட, அழைப்பின் தாக்கம் மட்டும் நீங்காது அவளுடனே மிதந்துக் கொண்டிருந்தது.

அங்கு அவளுடன் பேசிய உல்லாசத்தில் இருந்தவன் தன் அலைப்பேசியிலிருக்கும் அவளது புகைப்படத்தைப் பார்த்து, “யாழு பேபி.. the beauty of teaching is, if you can't convince just confuse them.. and am the teacher of your love” என்று கூறி சிரித்துக் கொண்டான்.

மறுநாள் காலைப்பொழுது அழகாய் விடிந்திட, வீட்டு கூடத்தில் பரபரப்பான பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தது. கீழே வந்த அஞ்சனா, வினோத் கூடத்தில் அமர்ந்து யாதவன், அக்ஷரா, யமுனா, மதுமஹதி, யாழினி என யாவருக்கும் பதில் கூறிக் கொண்டிருப்பதைக் கண்டு குழப்பமாய் கண்டாள்.

தானும் அவர்களுடன் ஐக்கியமானவள், ஏதோ விழாவிற்காக வீட்டிலுள்ளோர் அவனிடம் ஏற்பாடு குறித்து பேசுவது மட்டும் புரிந்தது. அருகே இருந்த மதுவிடம் சரிந்து,

 “மது என்ன பங்கஷன்?” என்று அஞ்சு மெல்லொலியில் வினவ, 

அவளை திடுக்கிட்டுப் பார்த்த மது, “என்ன அண்ணி இப்படி கேக்குறீங்க?” என்று தானும் அமைதியாகவே பதில் கொடுத்தாள்.

அவள் கூற்றில் திருதிருத்த பெண், “என்னாச்சு?” என்க,

 “நாளைக்கு யஷ்வா அண்ணா பிறந்தாள் இல்லையா அண்ணி? அதான் அதுக்கு எப்படி டெகரேட் பண்ணலாம் யார் யாரை கூப்பிடலாம்னு டிஸ்கஸ் பண்றோம்” என்று கூறினாள்.

பிறந்தநாள் விழா அவ்வீட்டில் தவறாமல் அனைவருக்குமே வைக்கும் ஒன்று. அதுவும் கட்டாயம் வீட்டில் தான் நடைபெறும் என்பதனால் சில நெருங்கியவர்களை மட்டுமே அழைப்பர். தன்னவன் பிறந்தாள் தனக்கே செய்தி போல் தெரியப்படுவதில் அவள் உள்மனம் சற்றே அதிருப்தியடைந்தது.

“ஓ..” என்ற அஞ்சனா, 

“அச்சோ லேட்டாச்சு நான் புக்ஸ் எடுத்துட்டு வரேன்” என்றபடி தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.

யஷ்வந்த் தனது வேலையறையில் இருந்து வெளியே வர, 

“ஏன் மாமா என்கிட்ட நீங்க சொல்லவே இல்லை?” என்றாள். 

திடீரென அவள் கேட்பதில் குழப்பமாய் பார்த்தவன், “என்ன சொல்லலை?” என்க, 

“நாளைக்கு உங்களுக்கு பர்த்டேவா?” என்று கேட்டாள்.

தன் அலைப்பேசியை எடுத்து தேதியைப் பார்த்தவன், “ம்ம்.. ஆமா சனா” என்க, 

“என்கிட்ட ஏன் நீங்க சொல்லவே இல்லை?” என்றாள்.

“என்ன சொல்லனும்?” என்று மீண்டும் அவன் வினவ, 

“நாளைக்கு உங்க பர்த்டேனு தான். கீழே எல்லாரும் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க. நான் என்னனு கேட்கவும் மது உங்களுக்கு தெரியாதா அண்ணினு கேக்குறா. என்..எனக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு” என்று கூறினாள்.

“இதுல என்ன இருக்கு சனா? உனக்கு தெரியலை அதனால கேட்டிருக்க” என்று அவன் கூற, 

“அப்படி இல்லை மாமா.. நா.. நான்.. ப்ச்.. அது நான் அப்படி கேட்டிருக்கக்கூடாது. முதல்லயே எனக்கு தெரிஞ்சிருக்கணும்” என்று கூறினாள். 

அவளை நக்கல் சிரிப்புடன் பார்த்தவன், “ஏன் தெரிஞ்சிருக்கனும்?” என்று கேட்க, 

“ஏன்னா நான் உங்க வைஃப். எனக்கு தெரிஞ்சிருக்கணும்” என்று கூறினாள்.

அவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி பார்த்தவன், “அப்படியா? தெரிஞ்சு வைச்சுருக்கணுமா?” என்று வினவ, 

“ஆமா மாமா. உங்களுக்கு புரியலையா?” என்று ஆற்றாமையாய் கேட்டாள்.

 'யாரு? எனக்கு புரியலையாடி கோழிக்குஞ்சு? உனக்கு இப்ப தான்டி பல்ப் எரியுது’ என்று நினைத்துக் கொண்டவன் சிரிக்க, 

அவள் முகம் மேலும் வாட, “ஏன் நீங்க சொல்லவே இல்லை” என்று சண்டை பிடித்தாள்.

அவளைப் பின்னிருந்து வந்து அணைத்தவன்,

 “என் கோழிக்குஞ்சுக்கு ப்ளூ கலர்னா ரொம்ப பிடிக்கும், சாப்பாட்டுல சப்பாத்தி வித் பன்னீர் ஆர் சிக்கன் கிரேவி ரொம்ப பிடிக்கும், வீக்கெண்ட்ல வெளிய போய் என்ஜாய் பண்ண, முக்கியமா பீச்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், டிரிங்க்ஸ்ல பூஸ்ட், வாடர்மெலான் ஜுஸ் அன்ட் சாக்லேட் மில்க்ஷேக் ரொம்ப பிடிக்கும், ஹேர்ஸ்டைல் ப்ரன்ச் பேக் பிடிக்கும், டிரஸஸ்ல ஜீன்ஸ் ஷார்ட் டாப் பிடிக்கும். இப்ப புடவை கட்ட கத்துகிட்டதுல இருந்து மேடம் அடிக்கடி புடவை ப்ரிஃபர் பண்றீங்க” என்று அவள் வெற்றிடையில் கரம் நுழைத்து இன்னும் அணைத்துக் கொண்டான்.

அவன் கூறுவது ஒவ்வொன்றையும் வியப்பாய் கேட்டுக் கொண்டே வந்தவள் அவன் அணைப்பில் திடுக்கிட்டு துள்ள, அதில் சிரித்துக் கொண்டவன், 

“எல்லாம் கரெக்டா?” என்று கேட்டான்.

திணறலாய் நெழிந்தவள், “எ.. எப்படி தெரியும் உங்களுக்கு?” என்று கேட்க, 

“தெரிஞ்சுகிட்டேன். உன்னை நோடிஸ் பண்ணி தெரிஞ்சுகிட்டேன்” என்றான். 

அந்த பலவகையான உணர்வுகளை அவளால் ஒருசேர அனுபவிக்க இயலவில்லை! 

“ஒன்னு வாய்விட்டே கேட்டு தெரிஞ்சுக்கணும். இல்லை நீயும் இதே போல கவனிச்சு தெரிஞ்சுக்கணும்” என்று அவன் கூற, திக்கித் திணறி தலையசைத்தாள்.

அவள் தோளில் தன் தாடையைப் பதித்தவன், 

“என்ன சனா சைலெண்ட் ஆகிட்ட?” என்க, 

“லே..லேட்டாச்சு விடுங்க. அ..அஜு வந்துடுவான்” என்றாள். 

“வந்தா வரட்டும். அவனுக்கு லேட்டானா போக சொல்லு” என்று கூறிய யஷ்வந்த் அவளை இன்னும் அணைத்துக் கொள்ள, 

பாவம் போல் தலையைத் திருப்பி அவன் கண்களை கெஞ்சலாய் ஏறிட்டாள். அதில் புன்னகைத்துக் கொண்டவன் அவளை விட, விட்டால் போதும் என்பதுபோல் வெளியேறினாள்.

கீழே சென்றவள் அர்ஜுன் வருவதைக் கண்டுவிட்டு வேகமாக உணவருந்த செல்ல, அப்போது தான் மதுவும் கல்லூரி நினைவு பெற்று அஞ்சனாவுடன் இணைந்து கொண்டாள். இருவரும் உண்டு முடித்து கிளம்ப அர்ஜுனுடன் வண்டியில் சென்றுகொண்டிருந்தவள், 

“அஜு.. நாளைக்கு மாமாக்கு பிறந்தநாளாம்” என்று கூறினாள்.

அவனிடம் பெரியளவில் எந்த எதிர்வினையும் இல்லை. 

“ஓ.. கிப்ட் வாங்கிட்டியா?” என்று அவன் வினவ,

 “அடபோடா.. எனக்கு பர்த்டேனே இப்ப தான் தெரியும்” என்று அவள் சலிப்பாய் கூறியதில் அவன் பக்கென சிரித்துவிட்டான்.

 'நிஜமா உன்னபோல அன்ரொமேன்டிக் பொண்ணெல்லாம் பொண்டாட்டியா கிடைச்சா கஷ்டம் தான் அந்த மனுஷன்’ என்ற எண்ணம் அலையா விருந்தாளியாய் அவன் மூளைக்கு வந்திட, அடுத்த நொடியே மனம், 

‘அவரோட கருங்கல் முகத்துக்கு என் அஞ்சனாவே எவ்வளவோ பெட்டர் தான்’ என்று கூறியது. இருப்பினும் அவன் முகத்தில் அந்த சிரிப்புக்கு மட்டும் பஞ்சமில்லை.

“சிரிக்காம கிப்ட் பண்ண எதாவது ஐடியா குடுடா” என்று அஞ்சனா கூற,

 ‘நாசமா போச்சு.. உன்னோட மிஸ்டர் உம்மானா முஞ்சி மாமாவுக்கு கிப்ட் பண்ண நான் ஐடியா தரனுமா?’ என்று நினைத்துக் கொண்டவன், 

“எனக்கு ஐடியா இல்லை அஞ்சு. அவருக்கு என்ன புடிக்குமோ அது ரிலேட்டடா வாங்கு” என்றான்.

“அவருக்கு பிளாக் கலர் பிடிக்கும்ன்றத தவிர எனக்கு எதுவுமே தெரியாதே” என்று அவள் கூற, 

“பிளாக் பிளாக் பிளாக்னு நினைச்சுட்டே இரு ஐடியா வரும்” என விட்டேத்தியாக கூறினான். 

ஆனால் அவன் கூற்றை உண்மையாக ஏற்றுக் கொண்டவள் மனமெங்கும் கருப்பு வர்ணமே வலம் வந்தது. அதில் ஒரு நல்ல யோசனையும் கிடைத்தது!


Leave a comment


Comments


Related Post