இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-19 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 21-04-2024

Total Views: 32948

அத்தியாயம் -19


“என்ன அஞ்சு வாங்கிருக்க? எதுக்கு அவ்வளவு நேரம் அந்த மாலை (mall) சுத்தி சுத்தி வந்தனு தான் காட்டேன்” என்று அர்ஜுன் வினவ,

 “ம்ஹும்.. நாளைக்கு பர்த்டே பார்ட்டிக்கு வருவல்ல? அப்ப பாரு” என்றுவிட்டாள்.

'ஓ.. நானும் போகணுமோ? ப்ச்..’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன், அவளை வீட்டில் விட்டுவிட்டுப் புறப்பட்டான். பரிசை தனது கல்லூரி பையில் பத்திரப்படுத்திக் கொண்டு தங்கள் அறைக்குள் சென்றவள், யஷ்வந்த் குரல் கேட்கத் திடுக்கிட்டுப் போனாள்.

'அட மாமா வீட்டுல தான் இருக்காரா?’ என்று நினைத்தவள் பரிசு வைத்ததன் அடையாளமாய் பை சற்றே புடைத்திருப்பதைக் கண்டு, ‘அய்யோ இதை மறைக்கணுமே' என்று எண்ணினாள். 

அதற்குள் வேலையறையிலிருந்து யஷ்வந்த் அலைபேசியில் பேசியபடி வெளியே வர, பையை சட்டென தனக்குப் பின்னே மறைத்தாள். 

அமைதியாய் இருந்திருந்தால் கூட அவன் பார்த்திருக்க மாட்டானோ என்னவோ? இவள் மறைக்கின்றேன் என்ற பெயரில் பையை மறைத்ததும் தான் அவன் கண்களுக்கு அது புலப்பட்டது. நமட்டு சிரிப்போடு அலைபேசியில் பேசியவரிடம் கூறி அழைப்பை துண்டித்தவன், “சனா..” என்றான்.

அதில் திடுக்கிட்டுத் திரும்பியவள் “மா..மாமா” என்க, 

“ஒரு நோட் குடு” என்றான்.

பையை இன்னும் மறைத்தவள், “நோட்லாம் இல்லை மாமா” என்க, 

“ஏன்டி படிக்குற பொண்ணு, காலேஜ் போற, ஒரு நோட் கூடவா பேக்ல இருக்காது? அதை குடு நானே எடுத்துக்குறேன்” என்றான். 

“ப்ச்.. என்கிட்ட இல்லை மாமா. மதுகிட்ட கேளுங்க” என்று அவள் கூற,

 “ஒரு நோட்டுக்கு இப்ப அவ ரூம் வரை போகணுமா?” என்றான்.

 “உங்களுக்கு அவ்வளவு கஷ்டம்னா நானே போய் வாங்கிட்டு வரேன் மாமா. என்கிட்ட இல்லை” என்று அவள் கூற, 

“என்ன? நோட் கேட்டதுக்கு இப்படி பதறுற? பேக்ல என்ன?” என்று சிரிப்பை அடக்கியபடி கேட்டான்.

“அதான் ஒன்னுமில்லைனு சொல்றேன்ல? போங்க மாமா” என்றவள் உடை மாற்று அறைக்குள் சென்று கதவை படாரென சாற்றினாள்.

 அதில் வாய்விட்டுச் சிரித்தவன், ‘இதுதான் ரொமான்டிக் வைஃப்கு அறிகுறியோ?’ என்று நினைக்க, அடுத்த பத்தாவது நிமிடம் அவன் முன்னே அமர்ந்து உர் உர்ரென பூஸ்டை குடித்துக் கொண்டிருந்தாள் அவன் கோழிக்குஞ்சு!

அன்றைய இரவு பொழுது இனிமையாய் கழிந்து யாவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கிவிட, தூக்கத்தில் அருகில் கேட்ட அலைப்பேசி ஒலியில் துயில் கலைந்து எழுந்தான் யஷ்வந்த். அறை பால்கனி ஜன்னல்கள் வழியே தெரிந்த கரும் இருள் ஒன்றே கூறியது அந்த இரவுப் பொழுதை..

'யாரது இந்த நேரம்?’ என்றபடி கண்களைத் தேய்த்துக் கொண்டு எழுந்தவன் பின்பே கவனித்தான் அது தன் மணையாட்டியின்‌ அலைபேசி அலாரம் என்பதை.

பண்ணிரெண்டு மணிக்கு அவனை எழுப்பி வாழ்த்த அவள் வைத்த அலாரம் அடித்துக் கொண்டிருக்க அவளோ அசராமல் தூங்கிக் கொண்டிருந்தாள். விடயம் புரிந்த மாத்திரத்தில் அவனுக்கு அப்படியொரு சிரிப்பு பொங்கி வந்தது.

“அடியே கோழிக்குஞ்சு..” என்று சிரித்துக் கொண்டவன் அலாரத்தை அணைத்து வைத்துவிட்டு அவளை இறுக்க அணைத்துக் கொண்டான். தூக்கத்தில் அவள் எழுப்பிய முனகல் ஒலிதான் அவனுக்கு முதல் வாழ்த்துப் போலும்!

அங்கு கண்களில் மெல்லிய நீர்த்துளிகளுடன் அலைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தாள் யாழினி. பண்ணிரெண்டு மணிவரை அவளுக்கு தூக்கமென்பது துளியுமில்லை. ஒளியணைப்பு செய்யப்பட்ட அலைபேசி இதோடு இரண்டுமுறை சிணுங்கிவிட்டது, அவன் அழைப்பைத் தாங்கி!

மூன்றாம் முறை அழைப்பு வரவும் கண்களை அழுந்த மூடி ஒரு பெருமூச்சு விட்டவள் அழைப்பை ஏற்று, “டார்..” என அவன் அழைப்பதற்குள்,

 “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாள் உங்களுக்கு இனிமையா அமையட்டும்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

'வழக்கம் போல நீ தான் முதல் விஷ். கண்டிப்பா இனிமையா தான் அமையும் என் நாட்கள்.. உன் நினைவுகளால. தேங்ஸ் டார்லிங்' என்ற மின்னஞ்சல் செய்தி அவனிடமிருந்து அவள் அலைபேசிக்கு வந்தது.

ஆம்! அந்த நாள் யஷ்வந்த் கிருஷ்ணாவின் பிறந்தநாள் மட்டுமல்ல. அர்ஷித் பிரசாத்திற்கும் பிறந்தநாள் தான்! இந்த இரும்பர்கள் இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை பிறப்பில் கூட நிலைநாட்டினர் போலும். பிறந்த நாள், வருடம் மட்டுமல்லாது பிறந்த நேரம் கூட நொடி தவராது ஒரே நேரத்திலேயே பிறந்துள்ளனர்!

அர்ஷித்தின் ஆசை காதலியான யாழினி தான் கடந்த ஐந்து வருடமாக அவனுக்கு முதல் வாழ்த்தைக் கூறுகிறாள். முதல் இரண்டு வருடம் அவன் காதல் புரியாமல், அடுத்த மூன்று வருடம் அவன் காதல் தெரிந்த பின்பும் தவிர்க்க முடியாமல்!

சிறுவயது முதலே யாழினி மீதிருந்த ஒரு தனி பிரியம் பருவ வயதில் வேறு கோணத்தில் அவன் மனதில் துளிர்த்தது. அதை அப்போதைய வயது கோளாறு என்று புரிந்துணர்வோடு புறம் தள்ளியவன் தன் பதின் பருவத்தைக் கடந்து பின்பும் அவள் மீதிருக்கும் இனம் புரியாத ஆசையை காதலென்று தெளிவுரக் கண்டுகொண்டான்.

அவன் தன் காதலை காதலாய் ஸ்வீகரித்தபோது அவளுக்கு வயது பத்தொன்பது தான். இரண்டு வருடம் காத்திருந்தவன் அவளது இருபத்தி ஒன்றாம் பிறந்தநாளின்போது வாழ்த்துடன் சேர்த்து தன் காதலையும் கூறியிருந்தான். அதில் அரண்டு மிரண்டு போனவள் தான்!

மதுமஹதி பேசும்போது பெயருக்கு தானும் பேசுபவள், மது வாழ்த்த ஆசைபட்டு பண்ணிரெண்டு மணிக்கு எழுப்பும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க எழுப்பி தானும் மதுவுக்காக வாழ்த்தை தெரிவித்தாள். அதன் பிறகும் அவனுக்கு வாழ்த்த அவளுக்கு மனமே இல்லை. இந்த காதலை அவன் மறைக்காது உறவினர் வரை அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே நடந்து கொண்டான்.

அதில் அர்ஷித்தின் தந்தை அக்ஷைக்கு தான் அத்தனை ஆத்திரம். யாழினியைப் பார்த்தாளே அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எரியத் துவங்கிடும். 'என் தங்கையின் உயிர்போக காரணமான கொலைகார குடும்பத்திலிருந்து பெண் எடுப்பதா?’ என்று தான் அவருடைய மனநிலை இருந்தது‌.

அதில் யாழினியும் அக்ஷையை அறவே வெறுத்தாள். பிடிக்காதவர்கள் இருக்கும் வெறுப்புக்குறிய இடத்தில் ஒருவனை மணம் முடித்து செல்வதா என்று அவளுக்குள் அப்படியொரு கோபமும் ஆற்றாமையும் தோன்றும். 

அவன்பால் சாயும் மனதை பயமெனும் கடிவாளம் கொண்டு தான் கட்டிவைத்துள்ளாள். அவளுக்கு யார் கூறுவது காதல் எதைக் கொண்டும் தடுக்கப்படும் அணையன்று என? அது காட்டாற்று வெள்ளம்! யாரின் தடுப்புகளுக்கும் அடங்காத ஒன்று!

அங்கு தன் காதலியைப் பற்றியும் காதலைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தவன் மனமெங்கும் இன்பம் மட்டுமே! அவனுக்கு யாருடைய கூற்றிலும் கவலையோ வருத்தமோ கிடையாது! 'எனக்கு அவளைப் பிடித்திருக்கின்றது! அவளுக்கும் என்மீது ஆசை உள்ளது, பயமெனும் போர்வை கொண்டு மூடிவிட்டால் அது என் காதல் கண்களிலிருந்து தப்பிவிடுமா என்ன?

என் தந்தையின் எண்ணமெல்லாம் எனக்கு துளியும் கணக்கில்லை! முட்டாள்தனமாக அவர் சிந்தித்தால் அதற்கு அடுத்தவர் பலியாக இயலுமா என்ன? அவரது தங்கை பாசமும் தங்கையின் இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாது பிடிவாதமும் யஷ்வந்த் குடும்பத்தை தவறாக சித்திரத்து மனதில் பதித்து வைத்திட்டது. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதை மாற்றவும் இயலாலு மாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் எனக்கு தேவையில்லை. ஒவ்வொருவருடைய கருத்துக்கும் மதிப்பு கொடுத்து மாற்ற நினைத்தால் நாம் என்று தான் நமது வாழ்வை வாழ்வது? அவர் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும் எனக்கு என் காதலும் காதலியும் நிஜம் தான்! தூய்மை தான்!’ என்ற எண்ணமே அவனிடம்.

அனைவரின் எண்ணங்களோடு அவரவர் இரவு கழிய, அழகினும் அழகாய் அந்த காலைப் பொழுது புலர்ந்தது! காலை எழுந்ததும் முகம் வாடிய அஞ்சனா தன் அலைபேசியில் ஏதும் கோளாறு உள்ளதா என்று அதை திருப்பித் திருப்பிப் பார்த்தாள். 

“என்ன சனா? ஃபோனா அத்தனை முறை திருப்பி பார்க்குற?” என்று யஷ்வந்த் கேட்க, 

அதை வைத்துவிட்டு அவனிடம் வந்தவள், “ஹாப்பி பார்த்டே யஷு மாமா” என்று அணைத்துக் கொண்டு கூறினாள்.

“தேங்ஸ் டி” என்றவன், “சரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்று கூற, 

“நேத்து பண்ணென்டு மணிக்கு விஷ் பண்ண அலாரம் வச்சேன் மாமா. அடிக்கவே இல்லை போல” என்று கூறினாள்.

“எது? ஃபோன் அடிக்கலையா? அதெல்லாம் அடிச்சு என்னை எழுப்பி விட்டு நான் தான் ஆஃப் பண்ணேன்” என்று அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற, 

“ஆஃப் பண்ணிட்டீங்களா? நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? என்னை எழுப்பிருக்கலாம்ல மாமா?” என்றாள்.

“எப்படி எப்படி? என் பர்த்டேக்கு விஷ் பண்ண நானே உன்னை எழுப்பிவிட்டு விஷ் பண்ண வைக்கணுமா?” என்று அவன் வினவ, 

“ஆமால்ல?” என்று நொந்து கொண்டாள்.

வாடிய அவள் முகம் கண்டு “எப்ப விஷ் பண்றோம்னுலாம் முக்கியமில்லை சனாமா.. விஷ் யாரு பண்றாங்க, எவ்வளவு ஆத்மார்த்தமா பண்றாங்கனு தான் இருக்கு” என்று யஷ்வந்த் கூற, பாவம் போல் தலையாட்டியவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விறுவிறுவென குளிக்க ஓடினாள்.

லேசாய் சிரித்துக் கொண்டவன் தயாராகிக் காத்திருக்க குளித்து முடித்து உடைமாற்றும் அறைக்குள் சென்றவள் அங்கிருந்த புத்தாடைகளைக் கண்டாள். 

‘நல்லதா போச்சு.. மாமா பர்த்டே லீவ்ல வந்துருக்கு’ என்று நினைத்தபடி வந்தவள் அவ்வுடைகளைக் கண்டு ‘மாமாக்கு தானே பர்த்டே? என்ன நமக்குலாம் புது டிரஸ் இருக்கு?’ என்றபடி அந்த சிவப்பு நிற நீள்சட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

சிவப்பு நிற ஷர்ட் அணிந்து மங்கிய வெள்ளை நிற கால்சட்டையணிந்திருந்தவனோ தனது கைக்கடிகாரத்தை அணிந்து சரிசெய்ய, அவனை கண்டு ஒருநொடி அதிர்ந்து தான் நின்றாள்.

எத்தனை அழகாய் பொருத்தமாய் இருக்கின்றது அவ்வுடை அவனுக்கு என்று வியந்து பார்த்தவள் மனதில் அவனை கண்கள் முழுதும் பருகி ரசித்திடும் ஆவல் பொங்கியது!

அதிர்வாய், வியப்பாய், ஆனந்தமாய் ரசித்து நின்றவள் அவன் தன்னை கண்டு சிரிக்கும் ஒலியில் தான் நினைவு மீண்டாள். தன்னவள் தன்னை கண்டு ரசிப்பதில் ஆண்களுக்குத்தான் எத்தனை கர்வமும் பூரிப்பும் எழுகிறது! அழகாய் வெட்கம் கொண்டவன், 

“ஏ கோழிக்குஞ்சு.. என்னடி டிரஸ் பண்ற ஐடியா இல்லை? பாத்ரோபோடவே வரலாம்னு யோசனையா?” என்று சிரித்தபடி வினவ, அந்த சிரிப்பில் இன்னும் தான் சிதறினாள்.

“மா..மாமா” என்று தடுமாறியவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தன் உடையை காட்டி, “இது எனக்கா?” என்று கேட்டாள்.

 “இந்த ரூம்ல நாம ரெண்டு பேர்தான் இருக்கோம். நான் கௌன் போட மாட்டேன். அப்ப இது உனக்கா தானே இருக்கும்?” என்று அவன் கேட்க,

 “ப்ச்.. யாரு மாமா வாங்கினா?” என்று கேட்டாள்.

“அது கூடவே லெட்டர் இருக்குமே” என்று அவன் கூற, அந்த பெட்டிக்குள் பார்த்தவள் ஒரு அழைப்பிதழ் அட்டையை எடுத்துப் பார்த்தாள். 'Arshith prasatha CEO of AP industries inviting you both Mr and Mrs.Yashwanth Krishna for my birthday party. Welcome you both with my immense pleasure’ என்று எழுதியிருப்பதை கண்டு விழிகள் விரித்தாள்.

“மா..மாமா அவங்களுக்கும் பர்த்டேவா?” என்று அவள் வியக்க,

 “ஆமா சனா. வருஷா வருஷம் அனுப்புவான்‌. மது அவன் பர்த்டே பார்டிலயும் இருக்கணும்னு ஆசைபடுவா என் பர்த்டே பார்டிலயும் கலந்துக்க ஆசைப்படுவா. அதனால அவனோடது காலைல நடக்கும். மதுக்கும் டிரஸ் எடுப்பான்.. அவளுக்கு மட்டும் கொடுத்தப்போ அவ ஒருமுறை எனக்கு மட்டும் தர்றது ஃபிஷியா இருக்குனு சங்கடப்பட்டதால வீட்டுல எல்லாருக்குமே அனுப்புவான்” என்று கூறினான்.

'வாவ்..’ என வியந்தவள், “நீங்க போட்டிருக்குறது?” என்று அவள் கரம் நீட்டி வினவ,

“அவன் அனுப்புனது தான்” என்று கூறினான்.

மேலும் வியந்து நின்றவள், ‘இவங்க எனிமீஸா ஃப்ரண்ட்ஸா?’ என்று யோசிக்க, 

“யோசிச்சு முடிச்சுட்டனா போய் ரெடியாகு” என்றான்.

சென்று சட்டென தயாராகி வந்தவளைக் கண்டு, ‘நைஸ் செலெக்ஷன்' என்று நினைத்துக் கொண்டவன் கீழே வர மொத்தக் குடும்பமும் அவனுக்காகக் கூடியிருந்தது.

“ஹாப்பி பர்த்டே டா யஷ்வா”

 “ஹாப்பி பர்த்டே யஷ்வா” 

“ஹாப்பி பர்த்டே டா கண்ணா”

 “ஹாப்பி பர்த்டே சித்தா” 

“ஹாப்பி பர்த்டே அண்ணா” என்று பல குரல்கள் அவனை நோக்கி வந்தன. 

அதனை எப்போதும் போல் சிறு இதழ் பிரியா புன்னகையுடன் ஏற்று நன்றி கூறியவன், அவர்களுடன் புறப்பட்டு கோவிலுக்குச் சென்றான். கோவிலில் அனைவரும் இறை வணக்கத்தினை முடித்துக் கொண்டதும் நேரே அர்ஷித் ப்ரசாத்தின் வீட்டிற்கு (இந்தியாவில் உள்ள அவர்களது பூர்வீக வீடு) சென்றனர்.

தேக்கை இழைத்து பளிங்கைக் குடைந்து அந்த காலத்திலேயே பல லட்சங்களைக் கொட்டி கட்டியிருப்பர் என்பது அவ்வீட்டை பார்க்கும்போதே தெரியும்படி இருந்தது. 

அனைவரது வாகனமும் வரிசையாய் வந்து நின்ற வண்ணமாகவே இருந்தது. அந்த மொத்த குடும்பத்தினரும் வருடம் ஒரே ஒருநாள் பிரவேசிக்கும் இடமது!

மற்ற நாட்களில் அக்ஷையின் வாயும் அமைதியாய் இருக்காது, அவரது அநாவசிய பேச்சுக்களை கேட்குமளவு மானம் கெட்டவர்களாய் யஷ்வந்த் குடும்பத்திலும் யாரும் கிடையாது.

அனைவரும் உள்ளே நுழைய கூட்டத்தில் இளம் தொழிலதிபர்கள் புடை சூழ நின்றிருந்த அர்ஷித் அவர்களை நகர்த்திக் கொண்டு தன் பார்வையை வருபவர்கள் புறம் திருப்பினான்.

கூட்டமாய், கம்பீரமாய் வந்து கொண்டிருந்த அந்த குடும்பத்தில் அவன் கண்ணுக்குள் நுழைந்ததென்னவோ, அவன் கைப்பட உருவாக்கிய அரக்கு மற்றும் மரகத பச்சை நிற அனார்கலியை உடுத்தி தேவலோக சிலை போல வந்துகொண்டிருக்கும் அவனவள் உருவம் மட்டும் தான்!

கொடியிடையாள் அவன் கண்களுக்குள் புகுந்து இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர, அவனது வெளிப்படையான ரசனையைக் கண்டு யமுனா, யாதவ் மற்றும் யஷ்வந்த் ஆகிய மூவரும் யாழினியைத் திரும்பிப் பார்த்தனர்.

அவர்கள் பார்வையில் சந்தோஷமும் இல்லை, கண்டிப்பும் இல்லை! ஆனால் அவளுக்குள் எழுந்த பயப் புகையில் தலையை இன்னும் ஒரு இன்ச்ச குனிந்துக் கொண்டாள். கண்களை முட்டிக் கொண்டு வரும் கண்ணீருக்கு அணைபோட அவள் போராடிய போது, அவளது கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டது ஒரு மென்மையான கரம். 

ஆம்! மதுமஹதியின் கரங்களே! தங்கையவளை திரும்பிப் பார்த்தவள் வலுக்கட்டாயமாய் புன்னகைக்க, தன் தலையை இடவலமாய் ஆட்டிய சின்னவள் ஆறுதலாய் புன்னகைத்தாள்.

அவர்கள் வந்ததும் கூட்டத்திலிருந்து விலகி அவர்களிடம் வந்தவன், யஷ்வந்திற்கு தான் அனுப்பிய உடை எத்தனை கச்சிதாய் உள்ளது என்பதை ஒருவித பெருமையுடன் பார்த்துக் கொண்டு, குடும்பத்தின் புடைசூழ அவன் வந்ததைக் கண்டு மகிழ்ந்தான். அவன் காதலியும் அங்கு இருக்கின்றாளே!

“வெல்கம் யூ ஆல் ஃபார் மை பர்த்டே பார்டி” என்று அர்ஷித் கூற, 

சம்பிரதாயமாய் புன்னகைத்த யமுனா, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா” என்றார். 

அவர் கண்களின் கனிவும், துணிவும் ‘உறவினராய் தான் நான் வந்திருக்கின்றேன்' என்று கூற,

 அதில் மென்மையாய் புன்னகைத்தவன், “தேங்ஸ் அத்தை” என்றான்.

மனைவியுடன் அங்கு வந்த அக்ஷைக்கு கோபம் விண்ணை முட்டியது. மனைவியை ஒரு முறை முறைத்தவர் கடினப்பட்டு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, மது தன் அத்தையிடம் விரைந்து சென்று அவரை அணைத்துக் கொண்டு, 

“இந்தியா வந்துட்டீங்கனு சொல்லவே இல்லையே அத்தை. போன வாரம் பேசும்போது கெனடால தானே இருந்தீங்க?” என்று கேட்டாள்.

மதுமஹதிக்கு யமுனா எப்படியோ, அப்படி தான் அர்ச்சனாவையும் பார்த்தாள். இருவர் மீதும் அளவுகடந்த பாசமும் மரியாதையும் கொண்டவளுக்கு இருவருமே அவளது உலகம் தான்!

மதுவின் முகம் வருடி பாசமாய் பார்த்தவர், “நேத்து தான் வந்தோம்டா கண்ணா. உங்க மாமா தான் லேட் பண்ணிட்டார். இல்லைனா ரெண்டு நாள் முன்னவே வந்துருப்போம்” என்று கூற, 

மாமாவை பயத்துடன் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு பெயருக்கு சிரித்தவன், “நல்லா இருக்கீங்களா ம்..மாமா?” என்றாள்.

பரிவாய் அவள் தலை கோதியவர் மனதின் ஒரு ஓரத்தில் அவளது பயம் முணுக்கென்ற வலியை கொடுத்ததும் உண்மை தான்! இவளுக்காகவேணும் இந்த குடும்பத்தை தான் ஏற்றுக் கொள்ளலாமோ? என்று எப்போதும் போல் வந்த அவரது ரகசிய எண்ணத்தை அந்த குடும்பத்தின் மீதுள்ள கோபம் கொண்டு துடைத்தார்.

“நல்லா இருக்கேன்டா கண்ணம்மா. நீ எப்படி இருக்க? காலேஜ்லாம் எப்படி போகுது?” என்று அவர் விசாரிக்க, தானும் மெல்ல புன்னகைத்து பதில் தந்தாள். 

அவள் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டு வைத்த அர்ஷித், “ஏ வாண்டு.. வந்தது என் பர்த்டேக்கு. உடனே உங்க அத்தைகிட்ட ஓடுற?” என்று வினவ, 

“அச்சோ மாமா.. சாரி” என்று அவனை அணைத்துக் கொண்டவள், “விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே மாமா” என்றாள்.

“தேங்ஸ்டா மது” என்று அவன் கூற, மற்றவர்களும் வந்து வாழ்த்தினர். 

நடுங்கும் கரங்களுக்கு திடமளித்து தன் கரம் நீட்டிய யாழினி, “ஹாப்பி பர்த்டே” என்று கூற,

“தேங்ஸ் டார்லிங்” என்றவன் மெல்லிய குரலில், “யூ லுக் காட்ஜியஸ்” என்று ரகசிய குரலில் கூறினான்.

பட்டென தன் கரம் எடுத்துக் கொண்டவள் அவ்விடம் விட்டு அகல, அஞ்சனாவும் யஷ்வந்தும் வந்தனர். யஷ்வந்தை ஒரு பார்வை பார்த்துக் கொண்ட அஞ்சனா அர்ஷித்திடம் திரும்பி மெல்லிய புன்னகையுடன், “ஹாப்பி பர்த்டே.. அண்ணா” என்றாள்.

யஷ்வந்த் சட்டென அஞ்சனாவை ஒற்றை புருவம் உயர்த்தி பார்க்க, அதை உணர்ந்த அவளுள் மெல்லிய திடுக்கிடல் எழுந்தது. 

இதழ் பிரித்து சிரித்த அர்ஷித் “தேங்ஸ்டா” என்று கூற, யஷ்வந்த் இதழில் கண்ணுக்கு எட்டாத ஒரு சிரிப்பு. 

யமுனா உறவு பாராட்டுவதை உணர்ந்த அஞ்சனாவுக்கு மது அடிக்கடி ‘இந்த குடும்ப சண்டை தீர்ந்தா நல்லா இருக்கும் அண்ணி’ என்று கூறிய வரிகளும் நினைவு வந்தது. 

மேலும் அர்ஷித்தின் குணமும் ஓரளவு புரிந்து கொண்டவளுக்கு அக்ஷை மட்டும் தான் பிரச்சினை என்பது உடன் இருப்போரின் பேச்சில் புரிந்திருந்தது. 

அறியாதோரைக் கண்டாள் அண்ணா என்று அழைத்தே பழக்கப்பட்டவளுக்கு அர்ஷித்தை முதன் முறை கண்டதே நிறுவனத்தில் என்பதால் நிறுவனத்தில் உறவு முறை அழைப்புகள் முறையன்று என அறிவு உணர்த்தியது.

தற்போது ஏதோ ஒரு உந்துதலில் அவள் மனதிலிருந்து அண்ணாவென்ற அழைப்பு வந்துவிட, அதை தானும் மனமாற ஏற்று நன்றி கூறினான். 

அர்ஷித் பார்வை யஷ்வந்த் புறம் திரும்ப, அழுத்தமான பார்வையும், அழுத்தமான இதழ்களுமாய் ஏறிட்ட யஷ்வந்த், தன் கரம் நீட்டினான்.

கூட்டத்தில் திடீரென அக்காட்சி ஒருவித அமைதியை உருவாக்கியது. இருவரும் கரம் கோர்த்து அழுத்தமாய் குலுக்கிக் கொள்ள,

“ஹாப்பி பர்த்டே அர்ஷித் ப்ரசாத்”

“ஹாப்பி பர்த்டே யஷ்வந்த் கிருஷ்ணா”

என்ற இருவரிகளும் ஒரே நேரம் எதிரொலித்தது.

அதில் இருவர் இதழிலும் முத்து முறல்கள் மின்ன அதிசயமாய் ஒரு புன்னகை தோன்றியது! அடடா..! இந்த ஆடவர்களின் குணங்களில் தான் எத்தனை அதிசயங்கள்.

அமைதியாய் அவன் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு, ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களில் யுவனா குழுமம் ஏற்பாடு செய்த அன்னதானம் சரியாக நடைபெறுகிறதா என்பதையும் அறிந்து கொண்டு தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்.

அன்று மாலை யஷ்வந்தின் பிறந்தநாள் விழா இனிதே துவங்க, யஷ்வந்த் வாங்கிக் கொடுத்த, கருப்பு நிற சட்டையும் வெள்ளை கால்சட்டையும் அணிந்து மிடுக்காக வந்திருந்தான் அர்ஷிஷ். 

தனக்கான சாம்பல் நிற கோர்ட் சூட்டில் தயாராயிருந்த யஷ்வந்த் தன் அருகே அதே சாம்பல் நிற புடவையில் தயாராக வந்து நின்று மனைவியைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அஞ்சனாவின் குடும்பமும் வந்திருக்க, அர்ஜுனும் அவள் ஆசைக்காக வந்து கலந்துக் கொண்டான். அழகாய், மிக மிக அழகாய் அந்த பொழுது கழிந்தது. 

ஆனால் அதன் முடிவு தான் யஷ்வந்தை கோபத்தின் உச்சத்தில் ஆழ்த்தியிருந்தது..!


Leave a comment


Comments


Related Post