இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 21-04-2024

Total Views: 33862

அத்தியாயம் -20


அமுதாய் அவன் பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்தது. வந்தவர்கள் யாவரும் புறப்பட, அவ்வீட்டார் மட்டுமே கூடியிருந்தனர்.

“அண்ணா நானும் யாழிக்காவும் சேர்ந்து உங்களுக்கு கிஃப்ட் வாங்கிருக்கோம்” என்று மது கூற, இதழ் பிரியா புன்னகையுடன் அவளை ஏறிட்டான்.

தங்கைகள் இருவரும் புன்னகையுடன் ஒரு பெட்டியைக் கொடுக்க, அதில் விலை உயர்ந்த கருப்பு நிற கற்கள் பதிக்கப்பட்ட, கருஞ்சிறுத்தை வடிவத்திலான மோதிரம் இருந்தது. அவன் வெகு நாட்களாய் வாங்க நினைத்துக் கொண்டிருந்த ஒன்று! 

அதைக் கண்டு புன்னகைத்தவன், “இட்ஸ் ப்யூடிஃபுல் டா. ரொம்ப அழகா இருக்கு. தேங்க்யூ போத்” என்று கூற, இருவரும் புன்னகையுடன் அவனை அணைத்து விலகினர்.

யாதவும் அக்ஷராவும் சேர்ந்து அவனுக்கு ஒரு பெட்டியைத் தந்தனர். அதில் ஒரு கருப்பு நிற பணப்பை (purse), கருப்பு நிறத்தில் தங்க கோடிட்ட உயர் தர பேனா, ஒரு பழையகாலத்து ‘ஆன்டிக் பாக்கெட் வாட்ச்’ இருந்தது.

பணம் வைக்கும் அந்த பையே சில ஆயிரங்களை சாதாரணமாக விழுங்கியிருக்கும் அளவு விலைமதிப்பற்றது. அந்தப்பக்கம் பேனாவின் மூடியில் உள்ள கோடுகள் உண்மையான தங்கம் வைத்து தயாரிக்கப்பட்டது என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

தேவையில்லாமல் அதிகம் செலவு செய்வதை யஷ்வந்த் பெரிதும் விரும்பமாட்டான் என்றபோதும் பரிசாக கொடுத்தவரிடம் அதை கூறுவது நாகரீகமற்றது என்பதால் சிறு புன்னகையுடன் நன்றி கூறினான்.

யமுனா எப்போதும் கொடுக்கும் பரிசு தான் அப்போதும் கொடுத்தார். அவரே தைத்து உருவாக்கும் சட்டையது! அடர் நீல நிறத்தில், உயர்தர பருத்தியால் நெய்யப்பட்ட துணிகொண்டு தைத்திருந்தார். நிச்சயம் விலைக்கு போனால் அதுவும் சில ஆயிரங்களை விழுங்கும் தரம் கொண்டது!

புன்னகையுடன் அதை வாங்கி அன்னையை தோளோடு அணைத்துக் கொண்டவன் தன்னவளைப் பார்க்க அவள் முகத்தில் மறைக்க முடியாமல் தவிக்கும் ஒரு சோகம். 

“அண்ணி.. நீங்க என்ன வாங்கிருக்கீங்க?” என்று மது வினவ, தன் சிந்தனையிலிருந்து மீண்டவள் தனது பரிசை நீட்டினாள். அதைப் பிரித்துப் பார்த்தவன் கண்களில் வெளிப்படையாய் ஒரு அதிர்ச்சியான பாவம்!

முழுதும் கருமை பூசிய பலகையில் வெள்ளி நிறத்தால் வரையப்பட்ட அவன் ஓவியம் அது! வரைபடத்தின் கீழே இளஞ்சிவப்பு நிறத்தில் இதயங்கள் சின்ன சின்னதாய் பறப்பது போன்றும் வரையப்பட்டு அருகே ’YK’ என்று எழுதப்பட்டிருந்தது.

 “வாவ் அஞ்சு.. ரொம்ப அழகா இருக்கு” என்று யாழினி கூற, வழுக்கட்டாயமாய் புன்னகைத்தவள் அவளவனைப் பார்த்தாள். அழகிய புன்னகையுடன், “ரொம்ப அழகா இருக்கு சனா” என்று அவன் கூற, செயற்கையாய் ஒரு புன்னகை தந்தாள்.

உணவு வேளை முடிய யாவரும் அவரவர் அறை வந்திட, உடை மாற்றச் சென்ற தன்னவளைப் பற்றி இழுத்து தன் கைச்சிறையில் வைத்துக் கொண்டவன், “ஏன் சனா ஒருமாதிரி இருக்க?” என்றான்.

அவள் பதிலேதுமின்றி தொண்டைக்குழி ஏறி இறங்க தவிப்பாய் விழிக்க, “சனா..” என மீண்டும் அழைத்தான். 

“எல்லாரோட கி..கிஃப்டும் ரொ..ரொம்ப காஸ்ட்லியா இருந்ததுல மாமா? எ..என்னால அப்படி வாங்க முடியலை” என்று தவிப்பாய் அவள் கூற, அவளது சோகத்திற்கு இதுதான் காரணமென்று நினைத்துக் கொண்டான்.

“ஏ சனா..” என்று அவன் விழிக்க, 

“யமு அத்தை கொடுத்த சட்டை கூட ஆயிரக்கணக்குல இருக்கும்ல மாமா.. ஆனா நான் வாங்கின கிஃப்ட் வெறும் ஐநூறு ரூபா தான்” என்று வருத்தமாய் கூறினாள்.

கண்கள் கலங்கி தவிப்பாய் விழித்தவள் கோலம் அவனுக்குள் அமிலமாய் இறங்க, அவள் கன்னம் தாங்கியவன், “கிஃப்ட் எவ்வளவு காஸ்ட்லியா தராங்கனு முக்கியமில்லை சனா.. அதை யாரு தர்றாங்க எவ்வளவு மனசார தராங்கனு தான் முக்கியம். அது உணர்வு சார்ந்ததுடா” என்றான்.

கண்ணீரோடு பார்த்தவள், “மா..மாமா” என்று தடுமாற, 

அவள் கண்ணீர் துடைத்து, “நீ எனக்கு ஃப்ரிஷியஸ் சனா.. உனக்கு சொன்னா புரியாது எனக்கு உன்மேல எப்படியான அன்புனு. அதை நீ சீக்கிரம் புரிஞ்சுப்படி.. அப்ப புரியும் கிஃப்டோட மதிப்பு எதை வச்சுனு..” என்று கூறினான்.

“ம்ம்..” என்று அவள் மெல்ல தலையசைக்க, 

“சரி நான் வேற கிஃப்ட் கேட்கவா?” என்று கேட்டான். அவள் கேள்வியாய் நோக்க, 

அந்த பேராழி கண்களில் மூழ்கி, “கேட்பதை விட கொடுப்பதுல ஒரு சுகமிருக்கும்டி கோழிக்குஞ்சு.. அதனால நானே தரேன்” என அவள் முகம் நோக்கி குனிந்தான்.

தாமாய் அவள் கண்கள் மூடிக் கொண்டு இதழ் மெல்ல திறக்க, அதை தன் அழுத்தமான இதழ்களுக்குள் சிறையெடுத்தான்.

அவளாய் ஒத்துழைத்து, இணைந்து புரியும் முதல் இதழ் சஞ்சரம் அவனுள் இன்பமான சாரலைப் பரப்பியது! 

'என் சனாவா? கண்கள் மூடி, சிற்பி இதழ் திறக்க, என் இதழ்முத்தம் வேண்டி ஏற்று நிற்கும் அளவுக்கு அவள் தேறிவிட்டாளா?’ என்று இன்பமாய் அதிர்ந்தான்.

அது கொடுத்த உவகையும் அவள் இதழ் கொடுத்த மோகமும் அவனை திக்குமுக்காடச் செய்திட, அவளுடன் மஞ்சத்தில் சரிந்தவன் விரல்கள் மெல்லியாளின் மேனியில் பூவினுள் அத்துமீறும் வண்டாய் உருவெடுத்தது.

அவன் செயலில் மெல்லிய சிலிர்ப்புடன் நாணியவள் புரியாத ஒரு உலகத்திற்குள் மயங்கியிருக்க, அது சடுதியில் அறுபட்டு போனது ஆடவனின் அலைபேசி ஒலியால்.

அலைப்பேசி ஒலியில் மோகம் தடைபட்ட எரிச்சல் பெற்றவன் தன்னையே வியந்தவனாய் அவளை நோக்க, கண்கள் விழித்து மருண்டு விழித்தவள், கட்டில் விரிப்பாய் அலங்கரித்த தன் சேலையை மீண்டும் பரபரப்பாய் தனதாக்கிக் கொண்டாள்.

அலைப்பேசி மீண்டும் ஒலிக்கவே அதை எடுத்தவன் எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில் அதிர்ந்துபோக, பாவையோ தனக்குள்ளாகவே குழம்பி குறுகி கண்ணீர் சிந்திக் கொண்டே எழுந்து உடைமாற்றும் அறைக்குள் சென்றாள்.

இங்கே அழைப்பில் விபரங்களைக் கேட்டுக் கொண்டு “நான் வரேன்..” என்று அழைப்பை துண்டித்தவன், “சனா..” என்று கத்தியழைக்க, சடுதியில் உடைமாற்றியவள் படபடப்பாய் வெளியே வந்தாள்.

அவளது கண்ணீரும் பதற்றமும் கண்டு புரியாது விழித்தவன் தற்போது ஏதும் கேட்க இயலாத நிலையில் இருப்பதால், “ஒரு பிரச்சினை நான் கிளம்புறேன்.. எதும் யோசிக்காம தூங்கு” என்றுவிட்டு சென்றான்.

வெளியே வந்தவன் முன் எதிர்பட்ட யாழினி பதட்டமாய், “அண்ணா என்னனா இது?” என்க, சிறு தலையசைப்போடு கீழே வந்தான். யாதவனும் யமுனாவும் பதட்டமாய் வர, “அண்ணா நீ வீட்லயே இரு. நாங்க மட்டும் போறோம்” என்ற யஷ்வந்த் மற்ற இருவருடன் விரைந்து சென்றான்.

அவர்கள் சென்றது தீ அணைப்பு வீரர்களால் போராடி தீயணைக்கப்பட்ட அவர்களது குடௌனிற்கு தான்! அவர்களது நிறுவனம் உருவாக்கிய தரம்மிக்க பல ஆடைகள் தீயில் கருகிப் போயிருந்தன. 

கண்கள் கோபத்தில் சிவப்பேறி இருக்க, அவனிடம் விரைந்து வந்த வினோத், “சார்” என்று ஒரு சீட்டை கொடுத்தான். கொடுக்கம் போதே அவன் கரங்கள் நடுநடுங்க, அதை அழுத்தமாய் பார்த்தபடி வாங்கினான்.

‘ஹாப்பி பர்த்டே ‘தி கிரேட் யஷ்வந்த் கிருஷ்ணா'. இட்ஸ் மை பர்த்டே கிஃப்ட்’ என்று தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

“சீக்கிரம் வந்ததால பாதி குடௌன் தப்பிச்சது சார். நிறையா பிராடெக்ஸ் மொத்தமா அழிஞ்சு போச்சு. கொஞ்சம் பிராடக்ஸ் டேமேஜ் ஆயிடுச்சு” என்று வருத்தமாய் வினோத் கூற, அவன் கண்கள் அந்த பாதி எரிந்த குடௌனிலேயே இருந்தது.

“யஷ்வா.. என்னப்பா இது?” என்று யமுனா கண்ணீரோடு வினவ, “பாத்துக்கலாம் ம்மா” என்றவன், “ஃபார்மாலிடீஸ்கு உங்க சைன் வேணும். போட்டுக் குடுத்துட்டு நீங்க கிளம்புங்க ம்மா” என்று கூறி வினோத்துடன் சென்றான்.

அங்குள்ள புகைப்படக் கருவிகள் அனைத்தும் கருகி, கணினியறை முழுதும் சேதமடைந்து இருந்தது. வாயிற் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தவர் தான் யாரோ குதித்து ஓடும் சத்தம் கேட்டு சென்றபோது பின்புறம் பல இடங்களில் தீ வைத்திருப்பதை கண்டுள்ளார். 

அனைத்தையும் கண்டவன் ஒரு எள்ளல் புன்னகையுடன் வினோத்தை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய், அவனது டாபை (tab) வினோத் கொடுத்தான். சில முக்கிய இடங்களில் பொறுத்தப்பட்டிருக்கும் காமிராக்கள் அவனது டேபிலும் இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் அதை நோட்டம் விட்டவன் யாரோ முகமுடிக்காரர்கள் வந்து தீ வைப்பதைக் கண்டான். 

மீண்டும் அதை வினோத்திடம் கொடுத்தவன் அர்த்தமாய் ஓர் பார்வை பார்க்க, “ஓகே சார்” என்று விட்டுச் சென்றான். 

அடுத்த அரைமணி நேரத்தில் யஷ்வந்தின் தனிப்பட்ட இடம் ஒன்றில் ஒருவன் நாற்காலியோடு கட்டப்பட்ட நிலையில் ரத்தம் வடியும் முகத்துடன் அமர்ந்திருந்தான்.

தனது அழுத்தமான காலடிகளுடன் உள்ளே நுழைந்த யஷ்வந்த், “யாரு சொல்லி இதை செஞ்ச?” என்று கேட்க, 

“சொல்ல முடியாது” என்று அவன் கத்தினான்.

யஷ்வந்த் வினோத்தை பார்க்க, அடுத்த ஐந்து நிமிடங்களும் அவன் கதறல் ஒலி மட்டுமே எதிரொலித்தது. மீண்டும் யஷ்வந்த் அதே கேள்வியை தன் விழிகளில் ஏந்தி நோக்க,

 “அ..அர்ஷித் ப்ரசாத்..” என்று அவன் திணறலாய் முனுமுனுத்தான்.

அங்கு தங்கள் அறையில் கட்டிலில் தலையணையை அணைத்தபடி படுத்திருந்த அஞ்சனாவின் விழிகளில் அருவியாய் நீர் வழிந்த வண்ணமே இருந்தது. 

அணைத்திருக்கும் தலையணையில் முகம் புதைத்தவள் வாய்விட்டு கதறத் துவங்கியிருந்தாள். மனதில் அப்படியொரு ரணம் அவளை வண்டாய் குடைந்தது.

 'நி..நிஜமாவா? அ..அது தான் உண்மையா? நா..நான்.. அய்யோ..’ என்று அவள் மனதில் வலம் வந்த ஓலங்கள் நொடிக்கு நொடி அந்த பேச்சு வார்த்தையை நினைவு கூர்ந்துக் கொண்டே தான் இருந்தது.

'மா..மாமா.. உங்க கிட்ட கேக்க முடியலையே.. கே..கேட்டா.. வே..வேணாம் மாமா..’ என்று மனதோடு மருகியவள் அலைபேசி ஒலியில் திடுக்கிட்டு எழுந்தாள்.

கன்னம் கண்ணீரில் குளித்திருந்த ஈரத்தை மெல்லத் துடைத்தவள் அலைபேசியை எடுத்துப் பார்க்க அழைத்தது அர்ஜுன் என்று காட்டியது. சடுதியில் புரிந்துபோனது தனது ஆழ்ந்த மனவலி தான் அவனுக்கு உணர்த்தியிருப்பதை. அதில் மேலும் கண்ணீர் வரப்பெற்றவள் அலைபேசியை அப்படியே வைக்க, அடுத்த ஐந்து நிமிடம் கழித்து ‘பாப்பா.. ஆர் யூ ஓகே?’ என்று குறுஞ்செய்தி வந்தது.

உள்ளே செல்லாமல் அதைக் கண்டவள் சில நிமிடங்கள் அமைதியாய் தன்னை சமன் செய்து கொண்டு நீரைப் பருகிவிட்டு அவனுக்கு அழைத்தாள். அழைப்பை ஏற்றதும்,

 “பாப்பா.. என்னடா பண்ற?” என்று அவன் படபடப்பாய் கேட்க, 

“அ..அஜு.. தூங்கிட்டு இருந்தேன்டா.. எ..ஏதோ கெட்ட கனவு.. உன் ஃபோன் கால்ல தான் எழுந்தேன். போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்தேன்” என்று கூறினாள்.

'உப்' என இதழ் குவித்து ஊதியவன், “அவரில்லையா?” என்று கேட்க, 

“மாமா ஏதோ ஃபோன் கால் வந்தது.. கிளம்பி போனாங்க” என்று கூறினாள். 

“ஓ.. உன் கிஃப்ட் பார்த்தாங்களா அஞ்சு?” என்று அவன் கேட்க, 

“நீ ஏன் அஜு சீக்கிரமே கிளம்பிட்ட?” என்று கேட்டாள். 

“மீனு கால் பண்ணாடா. பஸ் ஸ்டான்ட்ல தனியா நிக்குறேன் பிக் பண்ணிக்க வாடானு கூப்டா” என்று அவன் கூற,

 “ஓ..” என்றவள், “பாத்தாங்க அஜு. ரொம்ப பிடிச்சுருக்கு சொன்னாங்க” என்றாள்.

“ஓ..ஓகேடா. சரி நீ தூங்கு. ரொம்ப டயர்டா இருப்ப. நாளைக்கு காலேஜ்ல பார்க்கலாம்” என்றவன் அவளது பதில் வந்ததும் அழைப்பை துண்டிக்க, அலைபேசியை வைத்தவளுக்கு மீண்டும் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

அங்கு அந்த அறியாதவனின் பதிலில் வினோத் அதிர்ந்து போக, ஒரு எள்ளல் புன்னகையை உதிர்த்த யஷ்வந்த்,

 “யாரு சொல்லி இதை செஞ்ச?” என்று மீண்டும் கேட்டான். 

அடிவாங்கியவனோ “அர்ஷித் ப்ரசாத் சொல்லி தான் சார் செஞ்சேன்” என்று கூற, யஷ்வந்த் வினோத்தை நோக்கினான்.

மீண்டும் வினோத்தின் கரங்களால் பூஜை நடைபெற, “சார்.. சார் நிஜமா அப்படி தான் சார் சொன்னாங்க.. யாரு என்னனு எனக்கு தெ..தெரியாது சார்.. அ..அவர் பேரு அர்ஷித்னு தான் சொன்னாரு சார்” என்று கதறினான்.

வினோத் அர்ஷித்தின் புகைப்படத்தினை காட்டி “இவரா?” என்று வினவ, 

“இ..இல்ல சார்” என்றான். வினோத் குழப்பமாய் யஷ்வந்தை நோக்க, 

யஷ்வந்த் “இவனை அனுப்பிடு” என்றுவிட்டு சென்றான்.

வேறு யாரோ செய்த வேலை.. ஆனால் பழியை அர்ஷித் பெயரில் போட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்பது அவன் அர்ஷித்தின் பெயரை கூறியதுமே யஷ்வந்திற்கு புரிந்தது. இவ்வளவு தந்திரமாய் செயல்பட்டிருப்பவன் நிச்சயம் தன் அடையாளங்களை காட்டியிருக்கவும் மாட்டான் என்று யோசித்த யஷ்வந்த் இப்போதைக்கு இதை ஒத்திவைக்க முடிவெடுத்தான்.

அடுத்தடுத்து சேதாரங்களை கணக்கிட்டு சரிக்கட்டும் வேலை அவனை இழுத்துக் கொள்ள, வீட்டை நோக்கி அவன் புறப்படும்போதே காலை எட்டரைக்கு மேலானது.

அங்கு வெகுநேரம் கதவு தட்டப்படும் சத்தத்தில் மெல்ல மெல்ல துயில் கலைந்த அஞ்சனா தலை மிகவும் பாரமாய் கணப்பதைப் போல் உணர்ந்தாள்.

தட்டுத்தடுமாறி எழுந்து அவள் கதவைத் திறந்து இரவு அவள் அணியும் பருத்தி சட்டை மற்றும் பைஜாமா கால்சட்டையில் தலை கலைந்து கண்கள் சிவந்து முகமெங்கும் இரவு வெகு நேரம் அழுததன் சாட்சியாய் வீங்கியிருந்த தோற்றத்தில் மாமியாரை ஏறிட்டாள்.

அஞ்சனாவை அதிர்ச்சியாய் பார்த்த யமுனா,

 “அஞ்சு.. என்னாச்சுடா?” என்று கேட்க, 

தலையின் பாரம் கண்களை திறக்க முடியாதளவு அவளைப் படுத்தியது. உறக்கம் விலகாத கிரக்கமும் சேர்ந்துகொள்ள தள்ளாடிய மருமகளை கைதாங்கலாய் கூட்டிவந்து கட்டிலில் அமர்த்திய யமுனா,

 “அஞ்சு.. என்னடா முகமெல்லாம் வீங்கியிருக்கு. என்னாச்சு?” என்று பதட்டமாய் கேட்டார்.

மீண்டும் கண்களில் நீர் கோர்க்கப் பெற்றவள், “த..தலை ரொம்ப வலி அத்தை நைட் தூங்க முடியலை” என்று கதறலாய் கூறினாள். 

முதன்முறை அஞ்சனாவின் இப்படியான தோற்றம் காண்பவருக்கு சங்கடமாகத் தோன்ற, கலக்கமாய் ஏறிட்டவர், “என்னடா யாரையாவது எழுப்பிருக்கலாமே? நான் மாத்திரை கொடுத்திருப்பேன்ல?” என்றார்.

ஏதும் பேசாது மௌனமாய் அவள் கண்ணீர் வடிக்க, 

“சரி போய் முகம் கழுவி ஃப்ரஷ் ஆயிட்டுவா. நான் உனக்கு சூடா எதும் கொண்டு வரேன்” என்றுவிட்டு சென்றார்.

சென்று முகம் கழுவி பல்துலக்கி விட்டு அவள் வர, சூடாய் அவளுக்கு பூஸ்டும் தலைவலி மாத்திரையும் கொண்டு வந்தார். பூஸ்டை குடித்து முடித்தவள் மாத்திரையையும் போட்டுக் கொள்ள, 

“அர்ஜுனுக்கு சொல்லிட்டு படுத்து தூங்கு. கொஞ்ச நல்லா தூங்கி எழுந்தா சரியாயிடும்” என்று கூறினார்.

மாமியாருக்கு அவள் தலையாட்டும் நேரம் யஷ்வந்த் உள்ளே நுழைய, அஞ்சனாவின் தோற்றத்தை ஒரே ஒரு நொடி கூர்ந்து கவனித்தவன் தன் அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அதில் அஞ்சனாவின் முகம் மேலும் வாடிவிட,

 “மெயின் குடௌன் ஒன்னு தீப்பிடுச்சுடுச்சு அஞ்சனா.. நேத்து போனவன் இப்ப தான் வரான்” என்று யமுனா கூறினார். 

“அச்சோ யாருக்கும் எதுவும் ஆகலைல அத்தை?” என்று அவள் வினவ, 

“இல்லைடா. பொருள் தான் நிறையா சேதமாயிடுச்சு” என்றார். 

பின் சில நிமிடங்களில் அவளைப் படுக்கக் கூறியவர் சென்றிட, கட்டிலில் விழுந்தவளும் மாத்திரையின் உபயத்தால் தூங்கிப் போனாள்.

தன் களைப்புத் தீர குளித்து உடைமாற்றி வந்தவன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் தன்னவளிடம் வந்தான். முந்தைய நாள் உலகம் மறந்து இருவர் ஒருவராய் இணையவிருந்த தருணம் நினைவில் ஆடிய நொடி, அவனுள் இனம் புரியாத உணர்வு!

 'நல்ல வேலை கால் வந்தது’ என்று தான் அவனுக்கு தோன்றியபோதும்  அந்த இன்மபான தருணத்தை விட்ட சிறு ஏமாற்றமும் உள்ளே இருக்கத்தான் செய்தது.

அழுத தடம் மாறா அவள் முகம் கண்டவன், “என்னடி ஆச்சு உனக்கு? நைட்டெல்லாம் அழுமளவு என்ன உனக்கு?” என்று கேட்டுக் கொள்ள, முந்தைய நாள் பரிசு பற்றி அவள் கேட்டது நினைவு வந்தது. 

மேஜை மீதிருக்கும் அந்த படத்தைக் கண்டவன் இதழில் அழகாய் ஒரு புன்னகை குடிகொள்ள,

 “இதைவிட உணர்வுபூர்வமா எப்படிடி குடுக்க முடியும்?” என்று கேட்டுக் கொண்டான். 

பாவம் ‘தி கிரேட் யஷ்வந்த் கிருஷ்ணா' அவளது உண்மையான சோகத்திற்கும் அதற்கு பின்னே இருக்கும் சூழ்ச்சிக்கும் காரணத்தை அறியவில்லை, அறியும் நேரம் காலம் வெகு தாமதம் ஆயிருக்கும் என்பது தெரியவுமில்லை!


Leave a comment


Comments


Related Post