இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 17 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 22-04-2024

Total Views: 20600

செந்தூரா 17



தாரிகா சுற்றுபுறம் உணராமல் “இதுக்கெல்லாம் காரணம் உங்க அம்மா தான்” என்று கத்தியிருக்க, கடற்கரையில் நடந்து சென்றவர்கள் எல்லாம் இவர்களையே விநோதமாக பார்த்துக் கொண்டு சென்றனர்.


சுதாரித்துக் கொண்டு சட்டென எழுந்தவள் காரை நோக்கிச் விடுவிடுவென்று நடந்து சென்றாள். மனதில் ஆயிரம் குழப்பங்களோடு அவளை பின்தொடர்ந்தான் செந்தூரமித்ரன்.


காரில் போய் அமர்ந்ததும், “என்ன திடீர்னு எங்கம்மா மேல பழி போடுறே? உங்கப்பா தானே ஆரம்பத்திலிருந்து என்னை உன்னிடமிருந்து பிரிக்க பார்த்தார்” என்று கேட்டவனை வெற்று பார்வையால் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.


“சொல்லு தாரா? என்ன நடந்ததுனு சொல்லு” என்றான். அவள் காதுகேட்காதவள் போல கார் கண்ணாடி வழியே வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.


அவன் பலமுறை கேட்டும் அவள் வாயே திறக்கவில்லை. இனி அவளிடம் கேட்டு எந்த பயனும் இல்லை. நேரடியாக வீட்டிற்கு சென்றால் தெரிந்து விட போகிறது என்று எண்ணியவனாக அவளிடம் வேறெதுவும் கேட்காமல் அமைதியாக காரை செலுத்தினான்.


அவர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அறையை அடைந்தனர். வெளியில் அலைந்தது கடல் உப்புக் காற்றில் அமர்ந்து இருந்தது வெக்கையாக இருக்க, தாரிகா போய் குளித்து விட்டு வந்தாள்.


அவளை இரவு உடையில் பார்த்ததும் அவனுக்கு காலையில் நடந்தது நினைவில் வர மெல்ல அவளருகில் சென்றான். அவளை கணவனாக அணைக்க அவன் கைகள் பரபரக்க, அவளை நோக்கி தன் கைகளை நீட்டினான். சட்டென்று விலகியவள், தன் கழுத்திலிருந்த தாலியை எடுத்துக் காட்டி, “என்னை யாரும் உன்கிட்ட இருந்து பிரிக்க கூடாதுனு தானே இப்படி எல்லாம் நடந்துகிட்டதாக சொன்னே? இதோ இந்த தாலியையும் கட்டியாச்சு என்னையும்…” என்றவளுக்கு மேலும் பேச்சு வராமல் தொண்டையை அடைத்தது.


“அச்சோ இதை சொல்லி சொல்லியே என்னை அடக்க பார்க்கிறாளே” என்று மனதில் நினைத்துக் கொண்டு அவளை  அழுத்தமாக பார்த்தான்.


“இனியும் என் விருப்பம் இல்லாமல் என்னை கட்டாயப்படுத்தி நெருங்கினால் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றாள் ஒற்றை விரலை நீட்டி மிரட்டல் தொனியில்.


“நீயும் தானேடி என்னை விரும்பறதாக சொன்னே?” என்றான் தயங்கிய குரலில்.


“அது அப்போ? எப்போ என்னை கட்டாயப்படுத்தி எடுத்துக்கிட்டயோ அதுலிருந்து உன்னை வெறுக்கிறேன். நீ உண்மையாக என்னை விரும்பி இருந்தால் எனக்கு பேச அவகாசம் கொடுத்திருப்பே. நீ உன் இஷ்டத்துக்கு நடந்துக்குவ, நான் எல்லாத்தையும் மறந்துட்டு உன்னோடு சேர்ந்து வாழணுமா?” என்றாள் எகத்தாளமாக.


“இப்போ என்ன தான்டி பண்ண சொல்றே? எப்படி இருந்தாலும் நீயும் நானும் கணவன் மனைவி தானே, சேர்ந்து தானே வாழணும்? எத்தனை நாளைக்கு பிரிஞ்சு இருக்க முடியும்?” என்றான் பொறுமையிழந்து.


“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு எப்போ உன் மேல் கோபம் குறையுதோ, அதுவரைக்கும் நீ பொறுத்து போய்தான் ஆகணும். பொறுமையில்லைனா என்னை என் அம்மா வீட்டில் விட்டுட்டு போய்ட்டே இரு” என்றால் கறார் குரலில்.


“உன்னை உன் அம்மா வீட்டில் விடறதுக்கு தான் இத்தனையும் செய்தேனா? அதெல்லாம் முடியாது. நான் காத்திருக்கிறேன்” என்று சொல்லி விட்டு பால்கனியில் போய் நின்று கொண்டான்.


தாரிகா அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக் கொண்டாள். ஏதோ ஒரு வேகத்தில் அவளிடம் அத்துமீறி நடந்து கொண்டவனால் இப்போது அவளை நிமிர்ந்துகூட பார்க்க முடியாமல் குற்ற உணர்வாக இருந்தது.


அவளை கடத்தி வந்தபின், அவளை அமர வைத்து அவளிடம் மனம் விட்டு பேசியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. அவர்களின் காதல் குழந்தைப் பருவத்தில் தொடங்கிய நீண்ட நாள் கனவு. இருவருக்கான உறவு எத்தனை ரம்யமாக நடக்க வேண்டியது? இத்தனை வருடங்களாக பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த அவர்களின் காதலை அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக அலங்கோலமாக்கி விட்டானே? 


பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள் ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்று, ஆத்திரக்காரனாக மட்டுமில்லை அவசரக்காரனாகவும் அல்லவா நடந்துக் கொண்டான்? அவளை இழந்து விடக்கூடாது என்ற அவசரத்தில் அவளின் மனநிலையை பற்றி உணர்ந்துக் கொள்ள தவறிவிட்டானே?


கடற்கரையில் அவளோடு பேசிய பின்பு தான் தான் செய்தது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று புரிந்தது. அவனிடம் கோபத்தை கொட்டிவிட்ட திருப்தியில் தாரிகா அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள்.


செந்தூரனுக்கு தான் தூக்கம் வர மறுத்தது, தூங்காமல் அவளையே பார்த்தபடி சோபாவில் அமர்ந்தவன் விடியற்காலையில் தான் உறங்கினான்.


காலையில் தாரிகா கண்விழித்து பார்த்த போது செந்தூரன் சோபாவில் தன் காலை குறுக்கி கொண்டு படுத்திருந்தான். ஒரு நிமிடம் அவனையே ஆழ்ந்து பார்த்துவிட்டு, பெருமூச்சொன்றை விட்டபடி குளியலறைக்கு சென்றாள்.


அவள் குளித்து தயாரான பின்பு தான் செந்தூரன் கண்விழித்தான். அதுவரை இயல்பாக இருந்தவள் அவன் விழித்ததும் இறுக்கமான முகபாவத்துடன் நடமாடினாள். அவனும் குளியலறைக்கு சென்று குளித்து வந்த பின் உணவை ஆர்டர் செய்தான்.


உணவு வந்ததும் அவன் எதிரே அமைதியாக அமர்ந்தபடி உண்ண தொடங்கினாள். மீண்டும் செந்தூரன் பேச்சை ஆரம்பித்தான், “என்னாச்சு தாரா? என் அம்மா என்ன சொன்னாங்க? அவங்க என்ன சொல்லி இருந்தாலும் நீ எப்படி இன்னொருத்தனை கல்யாணம் செய்துக்க ஒத்துக்கலாம்? எதாவது பிரச்சனைனா என்கிட்ட தானே சொல்லியிருக்கணும்?” என்று அவன் கேள்விகளை அடுக்கி கொண்டே போக, அவள் காது கேட்காதவள் போல கருமமே கண்ணாக சாப்பிட தொடங்கினாள்.


அவளை முறைத்து பார்த்தவன், “தாரா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்றான் அழுத்தமான குரலில்.


“நீ கேட்கிற கேள்வி சரிதான். ஆனால் கேட்கும் நேரம் தான் கடந்துவிட்டது. இனி இதைப்பற்றி பேசி எந்த பயனும் இல்லை” என்று விட்டேற்றியாக சொல்லிவிட்டு உண்ண தொடங்கினாள்.


அவளின் அந்த பதிலில் கழுத்து நரம்புகள் முறுக்கேறி கோபத்தால் முகம் சிவந்தது. ஆனால் அந்த கோபம் அவள் மேல் இல்லை, அவன் மேல்! பெரிய மூச்சுகளாக எடுத்து வெளியே விட்டபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அமைதியாக உண்ண தொடங்கினான்.


அதன் பிறகும் அவள் அவனிடம் பேசாமல் மெளனமாகவே இருக்க, இனி இங்கே இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தவன், “கிளம்பு” என்றான் மொட்டையாக


எங்கே என்று அவள் அவனை கேள்வியாக பார்க்கவும், “முதலில் உங்க வீட்டிற்கு போய் அத்தை மாமாவிடம் பேசிவிட்டு, பிறகு நம் வீட்டிற்கு போகலாம்” என்றான் செந்தூரமித்ரன்.


தாரிகா மறுப்பேதும் சொல்லாமல் அவன் வாங்கி தந்து இருந்த உடைகளை எடுத்து அடுக்கினாள். அவன் வெளியே சென்று அவளுக்காக மல்லிகை பூச்சரத்தை வாங்கி வந்து அவளிடம் தயங்கியபடி நீட்டினான். 


கணவனாக அவன் வாங்கி தந்திருந்த புடவையையும் ரெடிமேட் ஜாக்கெட்டையும் அணிந்திருந்தவள், அவன் கொடுத்த மல்லிகைச் சரத்தையும் சூடிக் கொண்டாள். கழுத்தில் புது தாலியுடன் நெற்றி வகிட்டில் குங்குமத்தோடும் நின்றிருந்தவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை.


சிலநிமிடங்கள் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளருகில் வந்து சற்றும் அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விட்டு அறைக் கதவை நோக்கி வேகமாக நடந்தான். எங்கே தாமதித்தால் திட்ட ஆரம்பித்து விடுவாளோ என்ற பயம் தான்.


கணவனின் அதிரடி முத்தத்தில் ஒரு கணம் அதிர்ச்சியாக நின்றவளுக்கு அவன் உதடுகளின் ஈரம் நெற்றியில் ஊடுருவி உடல் முழுவதும் பொங்கி பிரவாகமாக உடலெங்கும் ஓடி அவளின் உணர்வுகளை தட்டி எழுப்பியது.


அவள் அவளை முழுதாக ஆட்கொண்ட சமயத்தில் கூட தோன்றாத உணர்வு, அவனின் இந்த ஒற்றை முத்தத்தில் அவள் உணர்ச்சிகளை கிளர்ந்தெழ செய்தது. ஒருவாறு தன் உணர்வுகளை சமாளித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.


ரிசப்ஷனில் பணத்தை செலுத்தி விட்டு தாரிகாவின் கையிலிருந்த லக்கேஜை தூக்கி கொண்டு காரை நோக்கி சென்றான். அவளும் காரில் அமர்ந்ததும் காரை சென்னையை நோக்கி செலுத்தினான்.


அமைதியான சூழலில் இருந்த இறுக்கத்தை தவிர்க்க இளையராஜாவின் மெல்லிசையை ஒலிக்க விட்டான். தாரிகாவும் மெளனமாக எதையோ யோசித்தபடி வந்தாள்.


அங்கே திருமணம் நின்றதால் அப்பாவுக்கும் அவளின் குடும்பத்திற்கும் என்னவெல்லாம் அவமானம் நேர்ந்ததோ, இப்போ அந்த சித்தார்த் அவர்கள் குடும்பத்தின் மேல் மான நஷ்ட வழக்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எல்லாத்தையும் விட, ஜானகி அத்தையிடம் அவள் கொடுத்த வாக்கு? இப்போது அவர் முகத்தில் எப்படி முழிப்பது? அவர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வாரா? இல்லை என்னையும் செந்தூரனையும் பிரித்து விடுவாரா? என்று பல எண்ணங்கள் மனதிற்குள் பந்தய குதிரையாய் ஓட முகம் வெளிறி, கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.


செந்தூரன் கவினுக்கு போனில் அழைத்தான். “சொல்லு மித்ரா, ஹனிமூனெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?” என்றான். 


“அதையேண்டா கேக்கற? சென்னைக்கு தான் வந்துட்டு இருக்கோம்” என்றான் சலிப்பாக தாரிகாவை ஓர பார்வையால் பார்த்துக் கொண்டு.


அவள் தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல தலையை திருப்பி கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டாள்.


“என்னடா சொல்றே, நீ இன்னும் ஒரு மாசத்துக்கு இந்த பக்கம் வரமாட்டேனு நினைச்சேனே” என்றான் கவின் ஆச்சரியமாக. 


“டேய் அதை பற்றி எல்லாம் நேரில் பேசிக்கலாம். நீ முதலில் எங்க அத்தை வீட்டுப் பக்கமாக போய் அங்கே என்ன நிலவரம்னு பார்த்து சொல்லு. தாராவை திருமணத்திற்கு முன் தினம் தூக்கியதால் நான் போனதும் என்னை உண்டு இல்லைனு பண்ண போறாங்க என்பது தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் கொஞ்சம் பிரிப்பேராக வரணும் இல்ல? அதுக்காக தான் சொல்றேன். என்ன போய் பார்க்கறியா?” என்று கேட்டான் செந்தூரமித்ரன்


“அதுக்கென்ன டா இதோ இப்பவே‌ போறேன், யார்கிட்டயாவது விசாரிச்சுட்டு உனக்கு ஃபோன் பண்றேன்” என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தான் கவின்.


இப்போது தாரிகா அவனை ஏளனமாக பார்த்து கொண்டிருந்தாள். “என்னடி லுக்? மாமன் அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.


“நினைப்பு தான்!” என்று உதட்டை சுழித்து அழகு காட்டினாள் “பக்காவா பிளான் பண்ணி எல்லாம் செஞ்சிட்டு இப்போது பயப்படுற மாதிரி சீன் போறியா?” என்றாள் ஏளனமாக.


“பயம் எல்லாம் இல்லை. உங்க அப்பா அடிக்க வந்தால் நான் அதை தடுக்க நேரும், ரசாபாசம் ஆகிவிடக்கூடாது. என்ன இருந்தாலும் மாமாவாச்சே. நீயோ ஏற்கனவே என் மேல் கோபமாக இருக்கிற, இதுல நான் வேற அந்த ஆளை அடிச்சுட்டா அப்புறம் நீ என் பக்கத்தில் கூட வரமாட்டே” என்றான் ஒற்றை கண்ணை அடித்து


தாரிகாவின் முகத்தில் இப்போது கோபம் மறைந்து பதற்றம் தொற்றிக் கொண்டது. “பயப்படாதே ஹனி. பிரச்சனை பெரிசாகாமல் பார்த்துக் கொள்வது என்னோட பொறுப்பு. என்னை தானே வெச்சு செய்ய போறாங்க, மாமன் அதையெல்லாம் துசியா தட்டி விட்டுவேன்”  என்றான் அவள் முகத்தில் தெரிந்த கவலையை பார்த்து.


ஆனாலும் தாராவின் முகம் தெளிவடையவில்லை. குழப்பத்துடனே இருப்பவளை மேலும் செந்தூரன் சமாதானப் படுத்த முயல்கையில் அவனின் ஃபோன் அலறியது. கவின் தான் அழைத்திருந்தான்.


“சொல்லுடா” என்ற செந்தூரனிடம், “மச்சி, உங்க குடும்பம் மொத்தமும் உங்க அத்தை வீட்டில் தான் இருக்காங்க. வீட்டில் போட்ட கல்யாணப் பந்தலை கூட பிரிக்கலை. நீ எப்படியும் அங்கே தான் வருவேன்னு கெஸ் பண்ணியிருக்காங்க போல” என்றான் கவின்.


“சரிடா, நான் பார்த்துக்கிறேன்” என்று போனை வைத்த செந்தூரன், வீட்டினர் கேட்கப்போகும் கேள்விகளுக்கும் ஏச்சு பேச்சுகளுக்கும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று தனக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான். சும்மா இருந்தவனிடம் சிறுவயதில் இருந்தே தாரிகா தான் இவனின் மனைவி என்று அவன் மனதில் ஆழமாக பதிய வைத்தவர்கள் அவர்கள். இதில் அவன் அத்தை சாரதா அவனிடம் சத்தியம் வாங்காத குறைதான். நீதான் என் பெண்ணை கட்டணும்னு சொல்லி சொல்லி, அவன் அவளை சிறுவயது முதலே மனைவியாக பார்க்க தொடங்கிவிட்டான்.


இவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று அவன் வந்தால், அவர்கள் தான் அவனுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அவன் ஆசையில் மண் அள்ளி போட்டால் சும்மா இருக்க முடியுமா? அவர்களின் கோபத்தைவிட, அவன் கோபமே நியாயமானது. பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவனான காரை அவன் அத்தை சாரதா வீடு இருக்கும் தெருவின் முன்னாடி செலுத்தினான். கார் வீட்டை அடைந்ததும், காவலாளி போன் செய்து வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் சொன்னார்.


காரை உள்ளே செலுத்திக் கொண்டே தாரிகாவை ஓரப்பார்வையால் பார்த்தான். இறுக்கமாக அமர்ந்து கொண்டிருந்தாள். இவள் ஏன் தவறு செய்த பிள்ளை போல இப்படி அமர்ந்திருக்கிறாள். இவளை தட்டி தூக்கிய நானே இத்தனை இயல்பாக இருக்கும் போது இவள் எதற்கு பதட்டபடுகிறாள் என்று புருவம் சுருக்கினான்.


அவளின் கைகளைப் பற்றி, “ஆர் யூ ஓகே பேபி?” என்றான். சட்டென நிமிர்ந்து நெற்றிக் கண்ணால் அவனை எரித்து விடுபவள் போல முறைத்தாள். “யம்மா காளி அவதாரம் எடுத்தது போல முறைக்காதேடி. சோகமாக உட்கார்ந்திருக்கியேனு பார்த்தால், என்னையே முறைக்கிறியா நீ? இரு உன்னை அப்புறமா கவனிச்சுக்குறேன்” என்று அவளை பார்த்து கண் சிமிட்டினான்.


அவனை மேலும் நன்றாக முறைத்துவிட்டு காரை திறந்து கீழே இறங்கினாள். செந்தூரனும் காரில் இருந்து இறங்கவும், இருவரும் சேர்ந்து வீட்டின் வாசலின் முன்னே நின்றனர்.


சுபாஷ், சாரதா, கதிரேசன், ஜானகி, முத்துப்பாண்டி, ரஞ்சிதம் பாட்டி, காயத்ரி மற்றும் அவள் கணவன் சத்யன் என அனைவருமே வாசலுக்கு வந்தனர்.


தொண்டையை கனைத்துக் கொண்டு மனைவியின் தோள்மேல் கைப்போட்டுக் கொண்டு இறுமார்ப்பாக நின்று அவர்களை பார்த்தான் செந்தூரன். ஆனால் அனைவரின் பார்வையும் செந்தூரனின் மேல் இல்லை. ஒட்டுமொத்தமாக தாரிகாவைத் தான் பார்த்திருந்தார்கள். அவள் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் அவளின் பால்நிறத்திற்கு பளிச்சென்று தெரிந்தது. கழுத்தில் மஞ்சள் கயிற்றில் அவன் கட்டிய புது மாங்கல்யம் மின்னிக் கொண்டு இருந்தது.


தாரிகா நிமிர்ந்தும் பார்க்காமல் குனிந்தபடி கண்களில் வழியும் கண்ணீரை தன் இமைகளை தட்டி உள்ளுக்குள் இழுத்துக் கொண்டிருந்தாள். சாரதாவும் ஜானகியும் ஏதோ பேச ஆரம்பிக்கவும், அங்கே ஒரு அழுத்தமான குரல் அவர்களின் பேச்சை நிறுத்தியது. “காயத்ரி போய் ஆரத்தி கரைச்சு எடுத்திட்டு வா”  என்றார் சுபாஷ்.


தன் காதுகளையே நம்ப மாட்டாமல் அதிர்ந்து நோக்கினான் செந்தூரன். ஆமாம் அவன் மாமா சுபாஷ் தான் ஆரத்தி தட்டை எடுத்து வரச்சொன்னார், அதற்கு சாட்சியாக “சரி மாமா, இதோ கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு காயத்ரி உள்ளே சென்றாள்.


அவனை பார்த்ததும் அனைவரும் அவனை கேள்விகளால் துளைத்தெடுக்க போகின்றனர் என்று அவன் எதிர்பார்த்து வந்திருக்க, அவர்கள் என்னவோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் தாரிகாவையே கூர்ந்து நோக்கி கொண்டிருந்தனர். அவளானால் குனிந்த தலையை நிமிரவே இல்லை. அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.


அதற்குள் காயத்ரி வந்து விட, ஆரத்தி சுற்றி இருவரின் நெற்றியிலும் திலகமிட்டாள். செந்தூரன் தங்கையின் கைகளில் பணக்கற்றையை வைத்து அழுத்தினான். அவளும் மறுக்க முடியாமல் வாங்கி கொண்டாள்.


இருவரும் வீட்டிற்குள் நுழைய, வீட்டினர் அவர்களை பின்தொடர்ந்தனர். அங்கிருந்த சோபாவில் அமர்ந்த செந்தூரன் தாரிகாவையும் பிடித்து இழுத்து தன் அருகில் அமரச்செய்தான்.


காயத்ரி இருவருக்கும் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். அதை வாங்கி பருகியவன் தாரிகாவிடம் குவளையை நீட்டினான். அதை வாங்கி அவள் வாயின் அருகே கொண்டு சென்ற நேரம் ஜானகி அவள் எதிரே வந்து நின்றார்.


“அப்போ நாங்க அவ்வளவு சொல்லியும், உன் காதுல ஏறலை இல்லை? யாருக்கு என்ன ஆனாலூம் உன்னோட விருப்பம் தான் உனக்கு முக்கியம். அப்படித்தானே? எங்ககிட்ட வாக்கு கொடுக்கிற மாதிரி கொடுத்திட்டு, கல்யாணத்துக்கும் ஒத்துக்கிட்டு, சரியா நிச்சயதார்த்தம் நடக்கிற அன்னிக்கு இவனை வரவழைச்சிருக்க, எங்க எதிரில் நல்லவள் மாதிரி, அவன் கிட்ட சித்தார்த்தை காதலிக்கிறேன் சொன்னவ, எப்படி கல்யாணத்துக்கு முதல் நாள் என் மகனோடு ஓடிப் போனே? இது எல்லாம் உன் திட்டம் தானே?” என்று பொறுமையிழந்து சத்தமாக பேசிக் கொண்டிருந்தார் ஜானகி.


செந்தூரனுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அவனை திட்டாமல் எதற்காக தாராவை திட்டிக் கொண்டிருக்கிறார் அவன் அன்னை. குழப்பத்தோடு மனைவியை பார்த்தான். அவள் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்கவும் மறந்து அவனைத்தான் குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் தாரிகா.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post