இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--7 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 22-04-2024

Total Views: 32451

இதயம் 7


ஜீவனும் இந்த விளையாட்டில் வித்தகனாக இருந்தான். விளையாட்டாக அவனோடு விளையாட ஆரம்பித்து, தொடர்ச்சியாக தோற்றுக்கொண்டே போனதில் தன்மானம் தூண்டப்பட ஜீவனை ஒருமுறையாவது வெல்ல வேண்டும் என்கிற உத்வேகத்தில், இணையத்தின் உதவி மற்றும் முன்னாள் சதுரங்க ஆட்டக்காரர்களின் செயல்பாடுகளை உற்றுக் கவனித்து உள்வாங்கி பெற்றுக்கொண்ட கேள்வி ஞானத்தின் மூலம், ஏகலைவனாய் சதுரங்கத்தின் யுக்திகள் பலவற்றைத் தானே கற்றுத் தேர்ந்து, தன் ஆசைப்படி ஜீவனைத் தோற்கடிக்கவும் செய்தாள் மினி. 


சதுரங்கத்தில் மாஸ்டர் மூவ் எனப்படும் சில வகைகள் உள்ளது. அதில் ஒன்று தன் சொந்தக்காயை பலி கொடுத்து அதன் மூலம் எதிராளியின் முக்கிய காயை கைப்பற்றுவது. Queen Sacrifice முறையில் சொந்த ராணியை விட்டுக்கொடுத்து, அதன் மூலம் தன் தந்திரங்களுக்கு உகந்த ஆயுதமாக இருக்கும் குதிரைகளை மினி கைப்பற்றிய வித்தையைப் பார்த்து அசந்து போனான் ஜீவன். 


சதுரங்கத்தைப் பொறுத்த வரை, நம் சொந்த பலம் மற்றும் பலவீனத்தோடு சேர்த்து, முடியும் மட்டும் எதிராளியின் பலம், பலவீனத்தையும் தெரிந்து வைத்திருத்தல் நலம். அதைத் தான் செய்திருந்தாள் மினி. ஜீவனோடு விளையாடிய முந்தைய விளையாட்டுகளில் அவன் பலம் குதிரைகள் என்பதை உணர்ந்திருந்தவள், அதற்கு ஏற்ப வியூகம் அமைத்து அவனை ஆச்சர்யப்படுத்தி இருந்தாள்.


ஜீவன் தன் இரண்டு குதிரைகளையும் ஒரே ஆட்டத்தில் இழந்திருக்கிறான் என்றால் அது சாணக்கியனுடன் ஆடும் போது மட்டும் தான். சாணக்கியன் ஒரு மாயாஜாலக்காரன். தனக்கு ஏற்ப எதிராளியை விளையாட வைப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான். மினியின் ஆர்வம் மற்றும் திறமை ஜீவனுக்கு நண்பன் சாணக்கியனை நினைவுபடுத்தியது. அதனாலே அவளை இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பிடித்தது அவனுக்கு.


மச்சினியின் திறமையைப் பார்த்து வியந்து போய் அவளை செஸ் க்ளப் ஒன்றில் சேர்த்து விட்டிருந்தான் ஜீவன். அதில் பொதுவிழா காலங்களில் போட்டி நடத்துவார்கள். அன்றைய நாளில் மாவட்ட, மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் பல இடங்களில் இருந்தும் வருவார்கள். அவர்களோடு போட்டி போட்டு சில பல பரிசுகளைப் பெற்றிருந்தாள் மினி. அந்த நம்பிக்கையில் தான் பிரியாவுடன் அவள் போட்டிக்குத் தயாரானது.


ஆனால் அவள் ஆச்சர்யப்படும் வகையில் பிரியாவின் ஆரம்பகட்ட காய் நகர்த்தலே கிங் இந்தியன் அட்டாக் (King’s Indian attack) முறையில் அட்டகாசமாகத் துவங்கியது. பிரியா காய் நகர்த்தும் விவேகத்தை மினி ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அவள் சற்றும் எதிர்பாரா வண்ணம் Legal Trap முறையில் தன்னுடைய இரண்டு குதிரைகள் மற்றும் ஒரு மந்திரியை வைத்து ஆட்டத்தை முடித்து வைத்திருந்தாள் பிரியா.


தனக்காக அவள் உருவாக்கிய வியூகத்தில், தான் கணக்கச்சிதமாகச் சிக்கியதை உணர்ந்த மினிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. பிரியா அதி திறமைசாலியா இல்லை தான் கவனக்குறைவாக இருந்துவிட்டோமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அடுத்த விளையாட்டிற்கு கேட்க, பிரியாவும் ஒப்புக்கொண்டாள். 


இம்முறையும் மினி தன் வியூகத்தை வகுக்கும் முன்னர் முந்திக்கொண்டாள் பிரியா. Rubinstein Trap வியூகம் வகுத்து அதற்கு ஏற்ப மினியைக் காய் நகர்த்த வைத்து கடைசியில் அவளுடைய ராணியைக் கைப்பற்றினாள். அதைப் பார்த்து இன்னமும் தான் அசந்து போனாள் மினி. ராணி போனதும் மினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுடைய குழப்ப மனநிலையைப் பயன்படுத்தி வெகுவிரைவில் ஆட்டத்தைத் தன்வசப்படுத்தினாள் பிரியா. 


அப்பொழுதே பிரியா இந்த விளையாட்டு விளையாடுவதற்காகவே பிறந்தவள், அவளுள் இயற்கையாகவே திறமை இருக்கிறது, சரியான விகிதத்தில் அதைத் தூண்டிவிட்டால் பெரிய இடத்திற்கு வருவாள் என்பதைப் புரிந்துகொண்டாள் மினி. இன்னும் இரண்டு முறை விளையாடினார்கள். அதில் ஒன்றில் மட்டுமே மினியால் வெல்ல முடிந்தது. நான்காவது போட்டியில் Smothered Mate வியூகத்தைப் பயன்படுத்தி, சொந்த ராணியை பலி கொடுப்பது போல் கொடுத்து குதிரையின் மூலம் தன் ராஜாவை மூச்சுகூட விடமுடியாதபடி ஒரு ஓரத்தில் நிறுத்தி கைப்பற்றிய விதத்தைப் பார்த்த நேரமே அவளுக்கான ப்ரத்யேக பயிற்சியைப் பற்றி தன் தோழியிடம் பேச வேண்டும் என்பதை மனதுக்குள் குறித்துக்கொண்டாள் மினி.


இலட்சியத்தை நோக்கிய பிரியாவின் நல்ல எதிர்காலத்திற்கு உதவி செய்யப் போய், தன் எதிர்காலத்திற்கும் சேர்த்து நல்லதொரு பாதை போட்டுக்கொள்ள இருப்பதை மினி அப்போது அறிந்திருக்கவில்லை. நினைத்தது போலவே தோழியிடம் பிரியாவுக்கான சதுரங்கப் பயிற்சியைப் பற்றி மினி பேச, “நாங்க என்ன அவளை அகாடெமியில் சேர்த்துவிட மாட்டோம் என்றா சொல்றோம். அவதான் கத்துக்கிட்டா அந்த வீணாப் போனவன் கிட்ட  தான் கத்துப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறா.


ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை என்னைப் பார்க்க வரும் எழில் கிட்ட கூட அந்த சாணக்கியன்கிட்ட கோச்சிங் சேர்வதைப் பத்தி தான் பேசுறா. எனக்கு அதில் பிடித்தம் இல்லை என்றாலும் அவளுக்காக அமைதியா இருந்தேன். ஆனாப் பாரு அந்த சண்டியர் என் தங்கச்சிங்கிறதுக்காக சொல்லிக்கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்“ கடுகடுத்தாள் தேன்மொழி.


“அது அப்படி இல்லை தேனு. ஏற்கனவே உனக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமா போகுது. சரியோ, தப்போ உன் அத்தானுக்கும் உனக்கும் சண்டை வருவதற்கு அவரும் ஒரு காரணம். 


இந்த நிலையில் பிரியா அவர்கிட்ட கோச்சிங் வருவதால் உனக்கும் எழிலுக்கும் இன்னும் சண்டை வரும் என்று நினைத்து கூட அவர் அமைதியா இருந்திருக்கலாம் இல்லையா?“ மினி சொல்ல அவளை ஒருநிமிடம் ஊன்றிக் கவனித்த தேன்மொழி, “அது என்ன எப்ப பார்த்தாலும் அடுத்தவங்க மனதிற்குள் என்ன இருக்குன்னு உள்ள போய் பார்த்த மாதிரியே பேசுற“ ஆச்சர்யமாகக் கேட்டாள்.

     

“எப்பவும் நம்ம மனநிலையில் இருந்து மட்டும் யோசிக்காமல் எதிராளியோட நிலையில் இருந்தும் யோசித்துப் பார்த்தாலே பாதிப் பிரச்சனைகள் இல்லாமல் போயிடும். அதைத் தான் நான் பண்றது“ மினி சொல்ல, “அடுத்தவங்களுக்கு நடக்கும் போது இரண்டு பக்கம் யோசித்துப் பார்த்து சரி தப்பு கண்டுபிடிக்கிறது எல்லாம் நல்லா தான் இருக்கு. சொந்தப் பிரச்சனை என்று வரும் போதும் நீ இதே மாதிரி இருக்கப் போறியான்னு பார்க்கலாம். ஆனா என்ன சொல்லு எனக்குப் பிரியாவை அந்த ஆள் கிட்ட அனுப்புவதில் பெரிதா இஷ்டம் இல்லை.

     

இப்படி ஒரு வாழ்க்கை வாழும் போதே அவருக்கு இந்தளவு கொழுப்பு இருக்கு. இன்னும் கொஞ்சம் நல்ல வாழ்க்கை வாழ்ந்திருந்தா அம்மாடியோவ்“ தோழியை அவள் வார்த்தைகளை முடிக்க கூட விடாமல் கோபமாக நடுவில் வந்தாள் மினி.

     

“தப்பு தேனு. ஒருத்தரைப் பற்றி முழுசாத் தெரியாம அவங்களைப் பத்தி தப்பாப் பேசக்கூடாது“ என்க, மினிக்கு இணையாகத் தேன்மொழிக்கும் கோவம் வந்தது. 

     

“என்ன நீ எப்ப பார்த்தாலும் என்னை ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்க. நீ எனக்குத் தானே தோழி அந்தச் சாணக்கியனுக்கு இல்லையே. நான் பண்றது தப்பாவே இருந்தாலும் நீ என்கூட தான் நிற்கணும் அந்தக் கர்ணன் மாதிரி“ என்றவளுக்கு தான் சொன்னது அதிகப்படி என்று தோன்றியதோ என்னவோ அங்கிருந்து சென்றுவிட்டாள்.

     

தோழியினுள் இருக்கும் சிறுபிள்ளைத் தனத்தை நினைத்து சிரித்துக்கொண்ட மினி, தன் அருகே முகத்தை  தூக்கி வைத்துக்கொண்டு நின்றிருக்கும் பிரியாவின் அருகே வந்து, “உனக்கு ஏன் அவரை இவ்வளவு பிடிச்சிருக்கு. அவர்கிட்ட தான் ட்ரெயினிங் எடுத்துக்கணும் என்று ஏன் பிடிவாதம் பிடிக்கிற“ மென்மையாகக் கேட்டாள்.

     

“உங்க யாருக்கும் அவரோட அருமை தெரியல. இருபது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வாங்கினவர் அவர். அது ஒன்னும் சாதாரண காரியம் கிடையாது. கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை நோக்கிய பயணம் என்பது உற்சாகமான அதே சமயத்தில் சவாலான ஒன்று. இந்தப் பயணத்தில் அர்ப்பணிப்பு, உத்தி மற்றும் விளையாட்டின் மீதான அதீத அன்பு அவசியம்.

     

சர்வதேச செஸ் கூட்டமைப்பான (FIDE) கீழ் 2500 Elo செஸ்  புள்ளிகளைக் கடக்கணும். ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற மூன்று வீரர்களோட போட்டிபோட்டு, தொடர்ச்சியா அவங்களை ஜெயிச்சா மட்டும் தான் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கொடுப்பாங்க.

     

சதுரங்கத்தோட உச்சபட்ச சாதனையே அதுதான். ஒருமுறை ஒரு வீரருக்கு அந்தப் பட்டத்தைக் கொடுத்தாங்க என்றால் அது நிரந்தரமா அவங்க பெயரோட இணைஞ்சிடும். கிராண்ட் மாஸ்டர் என்பதே பெரிய விஷயம் என்னும் போது, இதையும் தாண்டி ஒவ்வொரு சதுரங்க வீரரின் கடைசி இலட்சியம் என்னவா இருக்கும் தெரியுமா? மிகவும் வலிமையான போட்டிகளில் பெறும் வெற்றியின் மூலம் உலக சாம்பியன் இறுதிப்போட்டிக்குத் தேர்வாகி அதையும் வென்று உலகநாயகன் பட்டத்தைப் பெறுவது தான்.

     

அப்படியான இலட்சியத்தோட இருந்தவர் தான் இவர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்ததோ அந்த சோகத்தால் இனிமேல் விளையாட மாட்டேன்னு முடிவு பண்ணிட்டாராம். 

     

நான் சதுரங்கம் கத்துக்கிட்டதே அவரோட விளையாட்டைப் பார்த்து தான். என்னோட மானசீக குரு அவர். அவர் இப்படி இருப்பதைப் பார்த்து நான் வருத்தப்படாத நாளே கிடையாது தெரியுமா? எந்தக் கடவுளாவது இறங்கி வந்து அவரோட வாழ்க்கையை சரிபண்ணாதான்னு தினம் தினம் வேண்டிக்கிட்டு இருக்கேன்“ சோகமாகச் சொன்னாள் பிரியா.

 

“அவ்வளவு திறமையான ஆள் இனிமேல் விளையாடவே கூடாதுன்னு நினைக்கும் அளவு அப்படி என்ன நடந்திருக்கும்“ ஆர்வமாகக் கேட்டாள் மினி. 

     

“அது யாருக்கும் சரியாத் தெரியல. காதல் தோல்வின்னு சொல்லிக்கிறாங்க. ஆனால், என்னைக் கேட்டால் வெறும் காதல் தோல்விக்காக யாரும் தன் உயிருக்கு இணையா நேசிச்ச இலட்சியத்தை விட்டுக்கொடுத்திருக்க மாட்டாங்க. மீண்டு எழவே முடியாத அளவு பெரிய அடி ஏதோ ஒன்னு அவர் வாழ்க்கையில் விழுந்திருக்குன்னு தோணுது.

     

அவர் விளையாடிய காலத்தில் எத்தனை எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாங்க தெரியுமா? அவங்க எல்லோரையும் விட இவர்கிட்ட தான் வெற்றியின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. 

     

கண்டிப்பா வெற்றி பெற முடியாதுங்கிற நிலை வரும் போது கூட எப்படியாவது போராடி தோல்வியில் இருந்து தப்பிச்சிடுவார். அத்தனை புத்திசாலி, அவரை இப்படிப் பார்க்க ரொம்பக் கஷ்டமா இருக்கு“ பெருமூச்சு விட்டு சாணக்கியனின் மீதான தன் மரியாதையை வெளிப்படுத்திவிட்டு தன்னறை சென்றிருந்தாள் பிரியா.

     

அன்றைய நாள் முழுக்க மினிக்கு சாணக்கியனின் நினைவு தான். ஒரு விஷயத்தைப் பற்றி நாம் முழுவதுமாகத் தெரிந்து கொண்டிருந்தாலோ இல்லை ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் இருந்திருந்தாலோ அது நம்மை அதிகம் பாதிக்காது. அரைகுறை அறிவு என்றும் ஆபத்து என்பது மினியின் விஷயத்திலும் சரியாகவே அமைந்தது. 

     

சாணக்கியனின் வீடே சொன்னது அவனுக்குச் சதுரங்கத்தின் மீது இருக்கும் அளவு கடந்த பற்றை. அப்படி இருக்க எதுக்காக, யாருக்காக இனிமேல் விளையாடவே கூடாது என்ற முடிவை அவன் எடுத்திருக்க வேண்டும் என மூன்று மணி நேரத்திற்கும் மேலாக யோசித்தவளால் எந்தவிதமான முடிவுக்கும் வரமுடியாமல் போக, அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக இணையத்தின் உதவியை நாடினாள்.

     

ஒவ்வொரு நாட்டிலும் பிரபலமான விளையாட்டு ஒன்று இருக்கும். அக்குறிப்பிட்ட விளையாட்டில் தினம்தினம் பல நூறு பேர் நுழைந்தாலும் அவர்களின் வீட்டில் பிறந்த கடைசி குழந்தை வரை விசாரித்து உலகிற்கு தெரியப்படுத்திவிடும் ஊடகங்கள், மற்ற விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் ஜாம்பவன்களைப் பற்றி கூட முழு தகவல்களை வெளியிடுவதில்லை. 

     

ஆரம்பத்தில் சாணக்கியன் அதிகளவு வெறுத்ததும் இதைத் தான், எதுவும் வேண்டாம் என்று தூக்கிப்போட்டு ஆமை தன் கூட்டுக்குள் பாதுகாப்பாக பதுங்கிக் கொள்வதைப் போல், அறிந்தவர் அறியாதவர் என அனைவரின் பார்வையில் இருந்தும் ஒதுங்கிக்கொண்ட பின்னர் பெரிய நன்மையாக நினைத்ததும் இதைத் தான்.

     

இரும்பாய் இருப்பவனைப் பற்றிய தகவல்களுக்காக மினி காத்திருக்க, இணையம் அவள் இதயத்தைப்  புரிந்து கொள்ளாமல் அவள் தேடிய சாணக்கியன் என்கிற பெயரில் சதுரங்க ஆட்டக்காரன் யாரும் இல்லை என்று கைவிரித்து இன்னமும் தான் குழப்பியது. 

     

தலையைச் சொரிந்தவளை தலைசிறந்த சதுரங்க ஆட்டக்காரர்கள் பெயர்பட்டியலில் இருந்த பகீரதன் என்ற பெயர் ஈர்க்க, தன்னால் அவள் விரல் அதைத் தொட்டது.

     

மினியின் இசைவுக்கு திறந்து கொண்ட இணைப்பு, பகீரதன் என்னும் பெயருக்குச் சொந்தக்காரனான சாணக்கியனின் புகைப்படத்தைக் காட்ட குழப்பத்துடன் அவனைப் பற்றி இருந்த இதர தகவல்களைப் பார்த்தாள். 

     

2013 இல் தன்னுடைய இருபதாம் வயதில் தமிழ்நாட்டின் பதின்மூன்றாவது மற்றும் இந்தியாவின் முப்பத்திமூன்றாவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறான். இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் உலக செஸ் சேம்பியன்ஸிப் போட்டிக்கு 2019 இல்  தேர்ந்தெடுக்கப்பட்டு பல கனவுகளுடன் ரஷ்யா புறப்பட்டவன் அதில் மோசமான தோல்வியைப் பெற்றான். அதன் விளைவாக, அடுத்து எந்தவிதப் போட்டியிலும் விளையாடவில்லை என்பதை தெரிவித்தது இணையம்.

     

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவன் தோற்றதற்கான காரணமாக அவன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, ரஷ்யாவின் காலநிலை அவனுக்கு ஒத்துவரவில்லை, அவன் காதலி அவனுக்குத் துரோகம் செய்து இன்னொருவரைத் திருமணம் செய்து கொண்டார், அவனுக்கு எதிராக விளையாடிய வீரன் ரஷ்யாவைச் சேர்ந்தவன் என்பதால் பணம் வாங்கிக்கொண்டு வேண்டுமென்றே தோற்றுவிட்டான் எனப் பலபல யூங்கள் இணையத்தில் இருக்க, அதில் ஒன்றுமே சரியாக இருக்காது என்று தோன்றியது மினிக்கு.

     

அவன் திறமையை அவனவளுக்கு நிரூபிக்கும் வகையில் சில பல வீடியோக்கள் காணக்கிடைக்க, அதைப் பார்த்த மினி அசந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும். 

     

முதலாவது அவனின் தோற்றம். இப்போது வயது முப்பதுகளின் ஆரம்பத்தில் தான் இருக்கிறது என்றாலும் அவன் முகத்தில் நிரந்தரமாக இருக்கும் இறுக்கம் அவனின் வயதை சற்றே ஏற்றிக்காட்டும். 

     

ஆனால் இணையக் காணொளியில் இருக்கும்  அவன் தோற்றம் ஆறு வருடங்களுக்கு முந்தைய தோற்றம் என்பதால் கந்தர்வ குமாரனைப் போல் ஜொலித்தான். காணொளித் தோற்றத்தை விட அதில் அவன் முகத்தில் நிரந்தரமாக இருந்த அந்தப் புன்னகை தான் மினியை அதிகமாக ஈர்த்தது.

     

புன்னகைக்கும் போது விழும் ஒற்றைக் கன்னக்குழி அவன் அழகுக்கு திருஷ்டிப்பொட்டு வைப்பது போல் இருக்க, சில பல நிமிடங்கள் ஆட்டத்தை விடுத்து ஆட்ட நாயகனை தன்னை மறந்து இரசித்த மினி வெகுவிரைவில் சுதாரித்தாள். சினிமா ஹீரோ அல்லாத ஒருவனை தன்னை மறந்து சைட் அடித்ததற்காக தன்னைத் தானே திட்டிக்கொண்டு ஆட்டத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

     

இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஆட்டக்காரனை வெகுசில நிமிடங்களில் வீழ்த்தி இருந்தான் சாணக்கியன். அவன் காய் நகர்த்தும் வேகம் மற்றும் விவேகத்தைப் பார்த்து அந்த நொடியே அவனின் விசிறியாக மாறிப்போனாள் பெண்.

     

இரவு முழுவதும் மாற்றி மாற்றி அவனின் வீடியோக்களைப் பார்த்தே நேரம் கடத்திய பெண் காலையில் எழுந்ததும் பார்த்தது கூட அவனின் முகத்தைத் தான். 

     

எழிலும், அரசனும் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அடிபட்ட காலை வைத்துக்கொண்டு தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தான் சாணக்கியன். முந்தைய இரவு முழுவதும் அவனின் பராக்கிரமத்தை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்த பெண், இப்போது அவனின் அநாதரவான தோற்றத்தைப் பார்த்து பரிதாபம் கொண்டாள்.

     

எப்போது ஒரு பெண் வளர்ந்த ஆண் ஒருவனுக்காக பரிதாபப்படுகிறாளோ அன்றே அவளுக்கான விதி மாற்றி எழுதப்பட்டுவிடும் என்பது பழங்காலத்துப் பொன்மொழி. அது மினியின் விஷயத்தில் நிறைவேறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஜன்னல் வழியே சாணக்கியனை இவள் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வழக்கம் போல் நண்பனைக் காண வேண்டி வந்திருந்தான் எழில்.

     

உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்று சொல்வார்கள். எனில் தேன்மொழியின் அத்தானுக்கு அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்திருக்கும். அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்கிற உத்வேகத்தில் உடுத்தி இருக்கும் இரவு உடை, கலைந்த தலைமுடி என எதையும் பொருட்படுத்தாமல் இறங்கி ஓடினாள் மினி. 

     

அவனுடைய கடந்தகாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதால் தனக்கு என்ன இலாபம், தான் கேட்டால் எழில் உடனே சொல்லிவிடுவானா? அப்படியே சாணக்கியனின் கடந்தகாலத்தைப் பற்றி தெரிந்துகொண்டாலும் தான் தன்னால் என்ன செய்துவிட முடியும் என்று எந்த விதமான சிந்தனையும் இல்லாமல், எழில் கேட்டைத் திறக்கும் முன்னர் மூச்சுவாங்கியபடி அவன் அருகே வந்து நின்றாள்.

     

“என்னம்மா, உன்னோட ப்ரண்டு ஏதாவது சொன்னாளா?“ ஆர்வமாகக் கேட்டான் எழில். அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல், “எனக்கு உங்க ப்ரண்டைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணுமே“ ஆர்வமாகக் கேட்டாள்.

     

அவளை ஒருமாதிரி பார்த்தவன், பெண்ணவளுக்குள் ஊற்று நீர் போல் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்த ஆர்வத்தை, “அவனைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறதா உத்தேசம். அவன் கொஞ்சம் ஒரு மாதிரி. அவன்கிட்ட பயிற்சி எடுத்துக்கிற பொண்ணுங்களைத் தவிர மத்த பொண்ணுங்க கிட்ட அவன் காட்டும் முகமே வேற. உன்னோட நல்லதுக்காக சொல்றேன் அவனோட நிழல் பக்கத்தில் கூட போக நினைக்காதே“ என்ற தன் சுடுசொற்களைக் கொண்டு வற்றச் செய்துவிட்டு தன் நண்பனின் வீட்டுக்குள் சென்றான்.

     

“இப்ப நான் அப்படி என்னடா கேட்டுட்டேன்“ என்பது போல் அந்த வீட்டையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மினியை தன் அறையின் பால்கனி வழியே கவனித்தான் சாணக்கியன்.

     

அறைக்குள் வந்த எழிலிடம், “அந்தப் பொண்ணுக்கு என்னவாம்“ என்றான் பார்வையை மினியில் வைத்து. அவளை முதன்முதலாகப் பார்த்த போதும் சரி, இப்போதும் சரி அவள் முகம் பரீட்சையமானது போல் தோன்ற கொஞ்சம் குழம்பினான். ஆனால் அவள் முகம் எதனால் பரீட்சையமானது போல் தோன்றுகிறது என்று தெரியவரும் நேரம் என்ன செய்வானோ அவனுக்கே வெளிச்சம்.

     

“பிரியாவுக்கு ட்ரெயினிங் கொடுப்பதைப் பற்றி பேச வந்தா“ மினி நல்லபெண் என்பதால் நண்பன் அவளைப் பற்றி தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதால் இப்படிச்சொன்னான் எழில்.

     

சற்றே யோசித்த சாணக்கியன், “சரி நான் பிரியாவுக்கு ட்ரெயினிங் கொடுக்கிறேன். என் மேல் நம்பிக்கை இருந்தால் அந்தப் பொண்ணைத் தனியா அனுப்பச் சொல்லு. இல்லாமல் போனால் உன் ஆளையும் சேர்த்து வரச் சொல்லு“ என்க, நண்பனைப் புரியாத பார்வை பார்த்து வைத்தான் எழில்.

     

“நான் எப்படியும் மூன்று மாதமாவது அகாடெமி பக்கம் எட்டிப்பார்க்க முடியாது. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க ஒரு மாதிரி இருக்கு. பிரியாவுக்கு சொல்லிக்கொடுத்தா என் மனசு கொஞ்சம் நல்லா இருக்குமே“ என்க, எழிலுக்கும் அது சரி என்று தோன்றியது. அதனால் தேன்மொழியிடம் இதைப் பற்றி பேசுவதற்காக அலைபேசியை எடுத்துக்கொண்டு தனியே சென்றான்.

     

அடுத்த ஒரு மணி நேரத்தில் வெள்ளை நிற உடையில் குட்டி தேவதை போல் பிரியாவும், கருப்பு நிறத்தில் மோகினி போல் மினியும் சாணக்கியனின் முன்னால் நின்றனர்.

 

  


Leave a comment


Comments


Related Post