இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 18 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 23-04-2024

Total Views: 24015

செந்தூரா 18



ஜானகி தாரிகாவை திட்டிக் கொண்டிருக்க, அவள் அவளின் கணவனை முறைத்துக் கொண்டிருந்தாள். “இது எனக்கு தேவை தானா?” என்ற கேள்வி அவள் முகத்தில் தொக்கி நிற்க, தன் அன்னையை பார்த்தான் செந்தூரன்.


“அம்மா நீ என்ன லூசு மாதிரி அவளை திட்டிட்டு இருக்கே?” என்றான் செந்தூரன் அதட்டலாக.


அவன் பேச்சு காதிலேயே விழாதமாதிரி ஜானகி தாரிகாவையே முறைத்துக் கொண்டிருந்தார். “அண்ணி கேட்கிறாங்க இல்ல? பதில் சொல்லுடி” என்று அதட்டினார் சாரதா.


அன்னையும் தன்னை புரிந்து கொள்ளாமல் அப்படி கேட்கவும் வெடித்து அழுதாள் தாரிகா, “ஐயோ, அம்மா எனக்கு எதுவுமே தெரியாது. இதுவரைக்கும் நான் மாமாகிட்ட தனியா ஃபோன் செஞ்சு பேசனது கூட தெரியாது. இப்படி எல்லாம் நடந்துக்கும்னு எனக்கு தெரியாது. மாமா என்னை கடத்திட்டு போனதும் தப்பிச்சு வரத்தான் நினைச்சேன். ஆனால் என்னால முடியலை” என்று குலுங்கி அழுதாள்.


“ஏன்டி… உனக்கு தெரியாமல் தான் அவன் சரியா நிச்சியதார்த்தம் நடக்கும் போது வந்தானா? அப்போ பிரச்சனை செய்தவன், கல்யாணத்துல ஓடியாடி வேலை செய்யறது போல செய்து உன்னை கூட்டிட்டு போயிருக்கான். இதுக்கெல்லாம் நீயும் உடந்தை தானே. இப்போ தாலிக்கட்டிகிட்டு வந்திருக்க? உன்னையும் உன் பேச்சையும் நம்பினோம் பாரு” என்று ரஞ்சிதம் பாட்டி அவர் பங்குக்கு நொடித்துக் கொண்டார்.


முத்துப்பாண்டியும், சுபாஷும் தான் பெண்களை அடக்கினர். “நடந்தது நடந்து போச்சு, இனி நடக்க வேண்டியதை பாருங்க. அவங்க இரண்டு பேரும் சேரணும்னு விதியிருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது” என்றார் சுபாஷ். கதிரேசனும், “ஆமாம் யாரும் தாராவை திட்டாதீங்க. தாரா மேல் தப்பிருக்க வாய்ப்பில்லை. செந்தூரன் தான் இப்படி எல்லாம் செய்திருப்பான்” என்று சொன்னார்.


“அப்போ என் மகனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா? என்ன நடக்க போகுதோ?” என்று ஒப்பாரி வைக்க தொடங்கி விட்டார் ஜானகி. சாரதாவும் ஜானகியை சமாதானம் செய்து கொண்டே அழத் தொடங்கவும் தலையை பிய்த்துக் கொள்ளலாம் போன்றிருந்தது செந்தூரனுக்கு.


“அடச்சே நிறுத்துங்க உங்க ஒப்பாரியை. இப்போதான் கல்யாணம் செய்துட்டு வந்திருக்கேன். எல்லாம் அழுதுட்டு இருக்கீங்க” என்று கர்ஜித்தான். அவன் போட்ட சத்தத்தில் பெண்கள் அனைவரும் அமைதியாகி விட தாரிகாவை திரும்பி பார்த்தான். “என்கிட்ட மட்டும் நல்லா வாயாட தெரியுமே? அடச்சீ கண்ணை துடை, இனி ஒரு சொட்டு கண்ணீர் உன் கண்ணிலிருந்து வந்துச்சு மனுஷனா இருக்க மாட்டேன்” என்று அதட்டினான்.


அவன் அதட்டல் நன்றாக வேலை செய்ய அனைவருமே கப்சிப் என்று அமைதியாகி விட்டனர்.


“என்ன நடக்குது இங்கே? எல்லாம் எதுக்கு என் தாராவை கார்னர் பண்றீங்க? நான் செஞ்சதுக்கு எல்லாரும் அவளை கரிச்சு கொட்டிட்டு இருக்கீங்க? அவளை கடத்தபோறது அவளுக்கே தெரியாது. ஏன் என் கூட வந்தானே என் பிரெண்ட் கவின் அவனுக்கு கூட தெரியாது.


நான் தான் ஸ்கெட்ச் போட்டு என் தாராவை தூக்கினேன். அதுக்கென்ன இப்போ? நீங்களா எங்க மனசில ஆசையை வளர்ப்பீங்க, நீங்களா எதாவது மொக்க காரணத்துக்கு வேண்டாம்னு சொல்வீங்க. உடனே அழிச்சிட்டு மாத்தி யோசிக்க எங்க மனசு என்ன சிலேட்டில் எழுதின எழுத்தா? என்று கத்திக் கொண்டே இருந்தவன், சற்று நிதானித்து அனைவரையும் நோக்கி கூர்பார்வையை செலுத்தினான்.


ஒற்றை புருவத்தை உயர்த்தி, “அதுசரி எதுக்கு தாராகிட்ட என்னை கல்யாணம் செய்துக்க கூடாதுனு சொன்னீங்க? யார் அப்படி சொன்னது? அவளை எதுக்காக மிரட்டி சித்தார்த்தை கல்யாணம் செய்துக்க சொன்னீங்க? யார் அவளை முதலில் மிரட்டியது, அதுக்கு யாரெல்லாம் உடந்தை? முதல்ல அதுக்கு பதில் சொல்லுங்க” என்றான் அடிக்குரலில்.


இப்போது வீட்டுபெண்கள் அனைவரும் திருதிருவென விழித்தனர். உண்மையை சொன்னால் மேலும் திட்டுவான் என்று நன்றாக தெரியும் என்பதால் பதில் சொல்லாமல் தலையை கவிழ்ந்துக் கொண்டனர்.


அவர்களின் மெளனம் மேலும் கோபத்தை வரவழைக்க, “இப்போ சொல்ல போறீங்களா இல்லையா? எதுக்காக தாராகிட்ட என்னை கல்யாணம் செய்துக்கூடாதுனு கேட்டிங்க?” என்று கர்ஜித்தான். அவர்களிடம் மெளனமே பதிலாக வர தாரிகாவை பார்த்தான். அவள் இன்னமும் அழுதுக் கொண்டுதான் இருந்தாள்.


கட்டுக்கடங்காத கோபம் தலைக்கேற அங்கிருந்த பூச்சாடியை சுவற்றின் மீது ஓங்கி வீசினான். அப்போது அவன் தோள்மேல் யாரோ கைப்போட்டது போலிருக்க திரும்பி பார்த்தான். சுபாஷ் தான் நின்றிருந்தார்.


யோசனையோடு அவரை பார்த்தவனிடம் சற்று வெளியே வரும்படி கண்களால் சைகை செய்தார். குழப்பமாக அவரை பார்த்தபடி அவர்பின்னால் சென்றான் செந்தூரன், “மாப்பிள்ள, கொஞ்சம் பொறுமையாக இருப்பா. எல்லாருமே எமோஷனலாக இருக்காங்க. அதுக்கு காரணம் உன்மேல அவங்க எல்லாரும் வைச்சிருக்கும் அளவுக்கு அதிகமான பாசம் தான். என்ன நடந்ததுனு நான் உனக்கு விளக்கமாக சொல்றேன். முதலில் நீயும் தாராவும் அவளோட அறைக்கு போய் கொஞ்சம் பிரஷ்அப் ஆயிடுங்க. தாரா ரொம்ப எமோஷனலாக இருக்கா, அவளையும் சமாதானம் செய்து ஓய்வு எடுத்துட்டு கீழே வாங்க. அதற்குள் சமைக்க சொல்றேன். நீங்க இரண்டு பேரும் சாப்பிட்டு முடிச்சதும் நாம தனியா போய் மற்றதைப் பற்றி பேசிக்கலாம்” என்றார் சுபாஷ் நிதானமான குரலில்.


இவரால் நிதானமாகவும் மரியாதையாகவும் தன்னிடம் பேசமுடியுமா? என்று வியப்பாக இருந்தது செந்தூரனுக்கு. சுபாஷ் சொல்லியதை மறுக்கமுடியாமல் சரி என்பதை போல தலையை ஆட்டினான். அவன் தோளில் தட்டி விட்டு உள்ளே சென்றார்.


“தாரா மாப்பிள்ளையை உன் அறைக்கு அழைச்சிட்டு போ, முதலில் பிரஷ்அப் ஆயிட்டு வா” என்றார் சுபாஷ். தாரிகா மறுப்பேச்சின்றி அவளின் அறையை நோக்கி சென்றாள் செந்தூரன் வருகிறானா என்று திரும்பியும் பார்க்காமல் போனவளை கடுப்பாக பார்த்தான் அவன்.


வேறுவழியின்றி அவளின் அறைக்கு சென்றான். சென்றவன் ஆனந்தமாக அதிர்ந்து நின்றான். சுபாஷின் கட்டுப்பாட்டினால் அவன் தாரிகாவின் அறைக்கு வந்ததே இல்லை. அன்று நடக்க இருந்த நிச்சயதார்த்தத்தின் போது அவள் அறைக்குள் சென்றான் தான். ஆனால் அவளின் அறையை கவனிக்கும் மனநிலையில் அப்போது அவன் இல்லை.


கண்கள் மின்ன பார்த்துக் கொண்டிருப்பவனை வெற்று பார்வை பார்த்துவிட்டு குளியலைறைக்குள் புகுந்து கொண்டாள் தாரிகா. அவளின் ஒதுக்கத்தை சட்டை செய்யமால் அந்த அறையை நோட்டமிட்டான். 


அந்த அறையின் எதிர் சுவரின் நடுவில் செந்தூரமித்ரன் சிரித்துக் கொண்டிருப்பதை போன்ற பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. வெளியிலிருந்து பார்த்தால் தெரியாது. அறைக்குள் வந்து பார்த்தால் மட்டுமே தெரியும். அதுவும் கட்டிலில் படுத்துக் கொண்டு பார்த்தால் அவன் புகைப்படம் நன்றாக தெரியும்படி இருந்தது. அதன் அருகே ஆங்காங்கே, அவன் சிறுவயதில் தாரிகாவை முதுகில் ஏற்றியபடி நின்றிருந்த போட்டோ, அவளின் மஞ்சள் நீராட்டு விழாவில் அவன் அவளுக்கு மாலை போடும் போது எடுத்த போட்டோ என அவர்களின் சிறு வயது பிராயத்தை நினைவுப் படுத்தும் புகைப்படங்களாக இருந்தது.


நடுவில் இருக்கும் புகைப்படத்தில் மட்டும் செந்தூரன் வசீகரமாக சிரித்துக் கொண்டிருந்தான். இந்த படத்தை அவள் கட்டிலில் படுத்துக் கொண்டு பார்த்தால், அவன் அவளை பார்த்து சிரிப்பதை போலவே இருக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது.


அவள் வாய் வார்த்தையாக “உன்னை போய் உருகி உருகி காதலிச்சேன் பாரு” என்று சொன்னது எத்தனை உண்மை என்று இப்போது புரிந்தது. அவன் தான் அவளை ஆழமாக காதலிக்கிறான். ஐந்து வருடங்களாக வெளிநாட்டில் அவளையே நினைத்து தனிமையில் உருகி கொண்டிருக்கிறான் என்று அவன் நினைத்திருக்க, அவனுக்கு சற்றும் குறையாத காதலை அல்லவா அவளும் தன் மேல் கொண்டிருக்கிறாள்?


இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவே தங்கள் காதலை சொல்லிக்கொள்ளாதபோதே இத்தனை ஆழமாக ஒருவரை ஒருவர் நேசித்திருக்கிறோமா? இன்னும் மற்ற காதலர்கள் போல பேசி சிரித்து பழகி இருந்தால்? அடச்சே அதையெல்லாம் தவற விட்டது எத்தனை பெரிய முட்டாள் தனம்? 


எங்கள் இருவரின் நேசத்திற்கு காரணமான எங்க வீட்டு பெரியவர்களே எங்களை பிரிக்க பார்த்திருக்கிறார்கள். அத்தையும் மாமாவும் தாரிகாவின் அறையில் இருக்கும் செந்தூரனின் புகைப்படத்தை பார்த்திருப்பார்கள் தானே? அப்படி இருந்து இந்த அத்தை ஏன் இப்படி செய்தார் என்று தான் அவனுக்கு புரியவில்லை. சரியான காரணம் மட்டும் இல்லாமல் போகட்டும் அவர்களை சும்மா விடப்போவதில்லை என்று மனம் கனன்றான்.


அவனின் மனதை குளிர்விக்க தாரிகா குளித்து தலையை துவட்டியவாறு வெளியே வந்தாள். மனைவியை ஆசையாக பார்த்தவன், அவளை நெருங்கி கண்களால் அங்கே மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை காட்டி “தாரா, நீ என்னை இவ்வளவு காதலிச்சிருப்பேனு எனக்கு தெரியாமல் போச்சுடி” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக.


“ஓ தெரிஞ்சிருந்தா என்னை பலாத்காரம் செய்திருக்க மாட்டியோ?” என்றாள் தலையை துவட்டியபடி எகத்தாளமாக.


அவளின் இந்த பதில் முகத்தில் அறைந்தது போல இருந்தது. இருவருக்குள்ளும் ஆழமான காதல் இருந்தும், அவர்களின் முதல் சங்கமம் அவனின் அவசரத்தால் அத்துமீறி அல்லவா நடந்தேறிவிட்டது. முதல் முத்தம் முதல் அணைப்பு, முதல் சங்கமம் அனைத்தும் என்றுமே மறக்க முடியாத இனிமையான நினைவுகளாக அனைவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய ஒன்றாயிற்றே. 


அவன் தான் அவர்களின் சங்கமத்தை அலங்கோலமாக்கியிருந்தானே. இனி என்ன தான் அவளை சமாதானம் செய்தாலும், அவர்களின் முதல் சங்கமம் இனிமையான நினைவுகளை அவளுக்கு தரப்போவதில்லை. தான் செய்திருந்த தவறின் அளவை உணர்ந்து, “ரொம்ப சாரி தாரா, நான் அப்படி நடந்திருக்க கூடாது” என்றான்.


அவள் பதில் சொல்லாமல், அவனின் உடையை எடுத்து அவன் கையில் வைத்து குளியலறைக்கு செல்லுமாறு கண்களால் சொல்லிவிட்டு, சீப்பினால் தலையை வார தொடங்கிவிட்டாள். பெருமூச்சோடு குளியலைறக்கு சென்று முகத்தை கழுவி இலகுவான உடை அணிந்து வெளியே வந்தான். அதற்குள் தாரிகாவும் தயாராக நின்றிருந்தாள். 


அவளின் முகத்தை நேராக பார்த்தான். அவளின் முகம் இறுகி இருந்தது. கண்களில் எப்போதும் கீழே விழ தயார் என்பது போல கண்ணீர் கரைக்கட்டி நின்றிருந்தது. அவளை எப்படி சமாதானம் செய்வது என்றே புரியாமல் அவள் கண்களில் தன் இதழை மென்மையாக ஒற்றி எடுத்தான். அதில் அந்த கண்ணீர் அவள் கன்னத்தில் பட்டு தெரித்தது.


ஒற்றை விரலால் அவளின் கன்னத்திலிருந்த கண்ணீரை துடைத்தவன், அவள் தோளில் கைப்பாேட்டு, “வா சாப்பிட போகலாம்” என்று அழைத்தான். பதில் பேசாமல் அவனுடன் நடந்தாள். 


கதிரேசனும் முத்துப்பாண்டியும் ஜானகியையும் ரஞ்சிதம் பாட்டியையும் அதட்டிக் கொண்டு இருந்தனர், “யாராவது எதாவது தாராவை சொன்னீங்கனா வீட்டை விட்டு துரத்திடுவோம் ஜாக்கிரதை” என்று மிரட்டிக் கொண்டிருக்க, “அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு அண்ணா, அண்ணியை திட்டாதீங்க. செந்தூரனுக்கு விஷயம் தெரியாதுனு வெச்சுக்கிட்டாலும், என் பொண்ணு தான் அவனிடம் உண்மையை சொல்லி விளக்கி இருக்கணும். இப்படி அவன் தாலி கட்டும் வரைக்கும் சும்மா இருந்திருக்க கூடாது” என்று புலம்பினார் சாரதா.


“இன்னொரு வீட்டில் கட்டிக் கொடுத்த பொண்ணுன்னு பார்க்கிறேன் சாரதா. இல்லைனா அறைஞ்சிடுவேன். என் மருமகளை பத்தி எனக்கு தெரியும். நீ வாயை மூடிட்டு இருந்தா உனக்கு நல்லது” என்று அடிக்குரலில் கர்ஜித்தார் கதிரேசன்.


இதை எல்லாம் கேட்டபடி செந்தூரனும் தாரிகாவும் படியிறங்கி வந்துக் கொண்டிருந்தனர். “என்னடி ரொம்ப பில்டப் பண்றாங்க, என்ன தான் விஷயம்? இவங்க டிராமா இப்போதைக்கு முடியற மாதிரி தெரியலையே” என்றான் சலிப்பாக மனைவியை திரும்பி பார்த்து, தாரிகாவின் முகமோ கருத்திருந்தது. “இவ வேற” என்று மனதிற்குள் சலித்தபடி சாப்பாட்டு மேஜை அருகே சென்றான்.


அவர்கள் வருவதை பார்த்ததும் பேசிக்கொண்டிருந்தவர்கள் அமைதியாகிவிட, காயத்ரி அவர்களுக்கு சாப்பாடு பறிமாறினாள். இருவரும் அமைதியாக உண்டு முடித்தனர். அதன் பிறகு தாரிகா மீண்டும் தன் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள்.


செந்தூரன் சுபாஷிற்காக ஹாலிலேயே காத்திருந்தான். அவரும் சற்று நேரத்தில் வந்தவர் சாப்பிட்டு முடித்து, “மாப்பிள்ளை, என்கூட கொஞ்சம் ஆபிஸ் வரைக்கும் வரமுடியுமா?” என்று கேட்டார். அவரின் பார்வை வேறொன்றை சொல்ல அவரின் முயற்சி அவனுக்கும் புரிந்துவிட வருகிறேன் என்று தலையசைத்து விட்டு அவருடன் நடந்தான்.


சாரதாவிற்கு மனதிற்குள் பெருத்த நிம்மதியாக இருந்தது. இதுநாள் வரை அவர் கணவரும் செந்தூரனும் இப்படி இயல்பாக பேசிக் கொண்டதே இல்லை. இன்று இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டே சென்றது அவருக்கு மனநிறைவாக இருந்தது.


சுபாஷ் காரை செலுத்திக் கொண்டே செந்தூரனிடம் பேச தொடங்கினார்.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post