இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 02 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 23-04-2024

Total Views: 19112

அத்தியாயம் 02

அந்த மருத்துவமனை வளாகத்தின் முன்னே வந்து நின்றான் இயமன். அங்கே தான் அவன் இன்றைய பொழுதில் ஓர் உயிரை எடுக்க வேண்டும். எமகிங்கரர்கள் தலைவனைக் கண்டு பவ்யமாக தலை வணங்கி சென்றுவிட இயமன் மட்டும் அந்த மருத்துவமனையின் உள்ளே நுழைந்தான். 

அப்போதுதான் அஞ்சனாவிற்கு மருந்து வாங்குவதற்காக அவளின் அம்மா வெளியே வந்திருந்தார். அவரைத் தாண்டி இயமன் உள்ளே நுழைந்தான். 

உள்ளே, 

அஞ்சனா மருந்துகளின் வீரியத்தால் உறங்கிப் போயிருந்தாள். அவளைத்தான் பாசக்கயிறு வீசி கொண்டு போக வந்திருந்தான் இயமன். கடமையை முன்னிருத்தி
 வேகமாக கையில் இருந்த பாசக்கயிறினை அவளினை நோக்கி அவன் வீசப் போக அப்போதுதான் அவளது முகத்தினைப் பார்த்தான். சட்டென்று வீசிய பாசக்கயிறு அந்தரத்தில் ஆடியது. அதனை இழுத்துப் பிடித்தவன் தடுமாறி நின்றான். அந்த கணம் அவன் அகத்துக்குள் கனமேறிப் போனது. களைத்துப் போயிருந்த அந்த முகம் அவன் கண்களை கவர்ந்திழுத்தது. மனதுக்குள் கடமையை மீறி கிடந்த சஞ்சலமும் கலக்கமும் சடுதியில் மாயமாகிப் போனது போலொரு பிரம்மை. அவனே லேசாகிப் போனதாய் ஓர் மாயை. இது அவன்தானா? பெருங்குழப்பம் அவனுள்.

'இயமனுக்குள் மையல் குமிழியிட்டது போல' நாரதரின் குரல் சமயம் பார்த்து ஞாபகத்துக்கு வந்து அவனை உலுக்கியது. "இல்லை இல்லை நான் இயமன் காலன் என் கடமையிலிருந்து ஒரு போதும் நான் தவற மாட்டேன்" என்று அவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

மீண்டும் உறுதியுடன் பாசக்கயிறினை அவள் மீது வீசப் போக கைகளில் ஒருவித நடுக்கம். பாசக்கயிறை வீச முடியாமல் அவன் சோர்ந்து போனான். 

மையலா..? அவளைக் கண்டதுமா? இது தவறு. ஈசனுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான் முயன்று கடமையை அவன் நினைவுக்கு கொண்டு வந்து நிறுத்த அதற்குள் அவள் "அய்யோ எமன்" என்று பெருஞ்சப்தமிட்டவாறு அலறத் தொடங்கியதில் அவனின் பாசக்கயிறு மீண்டும் அந்தரத்தில் நின்றுவிட்டது.

"அய்யோ எமன்.. எமன்.." இமைகளை இறுக்கமாக மூடியபடி அவள் எழுந்து அந்த அறையின் சுவரின் ஓரமாக ஒண்டிக் கொண்டாள். 

எமனா? இவள் விழிகளுக்கு நான் தென்படுகிறேனா.. இருக்காதே.. நான் அவ்வளவு எளிதில் மானுடர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டேனே. இவள் ஏன் இப்படி அலறித் தொலைகிறாள். கண்களில் அச்சம் அதீத அளவில் காணப்படுகிறது. இதன் காரணம் தான் என்ன? தான் இறந்துவிடுவோம் என்று அவளுக்கே தெரிந்துவிட்டதா? அதனால் தான் இந்த பயமா? குழப்பமாக உள்ளதே! பாசக்கயிறை வீசாமலே யோசித்துக் கொண்டிருந்தான் இயமன்.

மருந்து வாங்கச் சென்றிருந்த அவளின் அன்னை உள்ளே வந்து பார்க்கையில், அவளது மேனி நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் ஓரமாக ஒடுங்கிப் போயிருந்தாள்.

"அஞ்சனா..." என்று அவர் அழைக்கும் போதே இங்கு இயமனுக்குள் ஆவி குளிர்ந்து போனது. 

"அஞ்சனா! என்னம்மா என்ன செய்யுது? ஏன் இப்படி உக்காந்திருக்க? எழுந்து வா"

"அம்மா! அம்மா! அங்க பாரு, எமன் நிக்குறான்"

"எமனா? என்னடி பேசுற?"

"ஆமாம்மா நானும் செத்துப் போகப் போறேன். ஐயாவை கொண்டு போனது மாதிரி என்னையும் கூட்டிட்டு போக அந்த எமன் வந்துட்டான். அம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அம்மா" என்று தன் அன்னையை இறுக்கமாக அவள் அணைத்துக் கொண்டே பயங்கலந்த விழிகளால் அவ்வறையை முழுவதும் அலசினாள்.

"அஞ்சு! கனவு எதுவும் கண்டயா? ஒன்னும் இல்லை. இங்க யாரும் இல்லை. பயப்படாத. அம்மா இருக்கேன்.. வா.." என்று அவளை அழைத்து வந்து படுக்க வைத்தார்.

"அம்மா என் பக்கத்துலயே இருங்க அம்மா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

"சரி நான் எங்கேயும் போகலை. நீ அமைதியாய் உறங்கு" என்று சொன்னவருக்கு கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது.

"அப்பா சர்வேசா. என் பொண்ணு நிலைமையை பார்த்தயா? அவ ஐயா போனதுல இருந்து இப்படித்தான் இருக்கா. எப்படியிருந்த பொண்ணு. அவ இப்படி பயந்து ஒடுங்கி கிடக்குறதைப் பார்க்கவா நான் அவளைப் பெத்தேன். வேண்டாம் ஈசுவரா. அவளை காப்பாத்து" என்று அவர் கரம் கூப்பி ஈசனை மனதினால் நினைக்க இயமனுக்குள் இடியொன்று விழுந்தது.

அவன் அடியெடுத்து வைத்தது அஞ்சனாவின் அருகே வந்து நின்றான். அவளது விழிகள் இறுக்கமாக மூடிக் கிடந்தது. அந்த மூடிய விழிகளும் பிசுபிசுப்பாய் இருந்தது. கண்ணீர் வழிந்து இரண்டு புறமும் வந்து கொண்டிருந்தது. அவளது கரம் அன்னையின் கரத்தினை அழுத்தமாக பற்றிக் கிடந்தது. இருந்த போதும் அவளது தேகம் அளவுக்கு அதிகமாக நடுங்கிக் கொண்டிருந்தது.

'இப்பெண்ணின் ஆயுளை கவர்ந்து செல்ல வேண்டி யான் வந்து நின்றேன். இவளோ என்னையே கவர்ந்திழுத்து அவள் அருகே சிறை வைத்திருக்கிறாள். இது தவறு என்று தெரிந்தும் தடுமாறி நிற்கிறேனே. மரணத்தின் இருள் மட்டுமே சூழ்ந்திருக்கும் இந்த அந்தகனின் உலகத்திற்குள் இவளொரு வெளிச்சப்புள்ளி. இப்படி ஒரு நிலையில் நிற்கத்தான் நான் சமீபகாலமாய் சஞ்சலத்தில் சஞ்சாரித்துக் கொண்டிருந்தேனா? சிவ.. சிவா! பார்த்த உடனே இவளை என் பாதியாக எப்படி நினைத்தேன். இவளால் ஏன் இப்படி புலம்புகிறேன். காலம் தவறாமல் கடமையாற்றுபவனுக்குள் வந்திருக்கும் இவ்வுணர்வுக்கு பெயர்தான் என்ன?' இயமன் மனம் கேட்ட கேள்விக்கு

"ம்ம்.. காதல், நேசம், மையல், அன்பு" என சிவனின் இதழ்களில் இருந்து மர்மப் புன்னகையோடு பதில் வந்து விழுந்தது.

இதைத்தான் சிவனும் நினைத்தான். அவன் எண்ணத்திற்கு மாறாக இங்கெதுவும் நடக்கப் போவதும் இல்லை. ஆட்டுவிக்க அவனிருக்க ஆடுபவன் அவன் பேச்சைக் கேட்டு ஆடத்தான் செய்ய வேண்டும். இயமனும் ஆடினான். காதலென்னும் கயிற்றினால் கட்டப்பட்டு ஈசனவனின் திட்டத்திற்கு உடன்பட்டு ஆடினான். அவள் மீது அவனுக்கு சடுதியில் அபரிமிதமான காதல் பொங்கி பெருகியது. அவளில்லை என்றால் தானில்லை என்ற நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். ஆனால் அவளின் முகத்தில் விரவிக் கிடந்த அச்சம் அவனை யோசிக்க வைத்தது. 

இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அவளருகே வந்தான். அவள் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அவளின் மூச்சுக் காற்று அனலாய் அவன் முகத்தில் வந்து மோதியது. அதில் அவன் உடல் சிலிர்த்தடங்கியது.

'அஞ்சனா' ஆசையோடு சொல்லிப் பார்த்துக் கொண்டான். அவள் உயிரை எடுப்பதற்கான நாழிகை கடந்திருந்தது. இதை எப்படி மறந்தேன் என்று தன்னையே திட்டிக் கொண்டவன் தற்காலிகமாக அவ்விடம் விட்டு அகன்றிருந்தான்.

அதே எம உலகம். சித்திரகுப்தன் தன் கடமையை செய்து கொண்டிருந்தான். இயமன் அங்கே பிரவேசித்ததும் சித்திர குப்தன் எழுந்து கொண்டு பிரபுவுக்கு மரியாதை செலுத்தினான். 

இயமனுக்கு அதில் எல்லாம் கவனம் குவியவில்லை. தான் உயிரெடுக்காமல் வந்த உயிருக்கான கணக்கினை எப்படி சமன் செய்வது என்ற எண்ணமே உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. 

பிரபுவுக்கு என்ன சிந்தனை என்றெண்ணிய சித்திரகுப்தன் பிரம்மச்சுவடியை மூடி வைத்துவிட்டு அன்று வந்த உயிர்களுக்கான தண்டனை தரப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

இயமன் பிரம்மச்சுவடியைப் பார்த்துவிட்டான். இதிலிருந்து அஞ்சனாவின் பெயரை எடுத்துவிட்டால் சித்திரக்குப்தனின் கணக்கு தவறிவிடும். அவளது உயிர் பாதுகாக்கப் பட்டுவிடும். ஆனால் இது மாபெரும் குற்றம். அதிகாரத்தில் இருப்போரே தங்களது அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தினால் ஈசன் அவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான் என்பதில் இயமனுக்கு இப்போதும் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படியிருந்தும் அவன் துணிந்து பிரம்மச்சுவடியை எடுத்து திருப்பினான். அஞ்சனாவின் பாவ புண்ணிய கணக்குகள் எல்லாம் அதில் இருந்தது. அவளது ஆயுட்காலமும் குறிப்பிடப் பட்டிருந்தது. 

ஆயுட்காலத்தினை மாற்றி எழுதுவதா? இல்லை பெயரை நீக்கிவிடுவோமா என்ற பெருங் குழப்பம் இப்போது அவன் வதனத்தில்.

கண்களை சுருக்கி எழுதுகோலால் தலையைத் தட்டிக் கொண்டிருந்தவன் அவளது குறிப்படங்கியிருந்த  தாளில் இருந்த அத்தனையும் அப்புறப்படுத்தியிருந்தான். அதைச் செய்துவிட்டு ஏதும் அறியாத கள்வனாய் அமர்ந்துக் கொண்டான். 

வந்திருந்த உயிர்களுக்கான பாவ புண்ணிய கணக்கினைப் பார்க்க வேண்டி சித்திரக் குப்தன் அவ்வுயிர்களை அழைத்து இயமன் முன் நிறுத்திவிட்டு பிரம்மச் சுவடியை எடுத்துக் கொண்டு வந்தான். 

"பிரபு"

"என்ன சித்திர குப்தா?" இயமனின் குரலில் பயங்கர துள்ளல் இருந்தது.

"பி...ரபு" அவன் தடுமாறி மீண்டும் அழைத்தான்.

"சித்திர குப்தா. ஏனிந்த தடுமாற்றம்?" உல்லாசத்தின் மொத்த உருவாய் நின்று இயமன் இயம்பிக் கொண்டிருக்க சித்திர குப்தனுக்கு தான் காண்பது இயமன் தானா என்ற ஐயமே வந்துவிட்டது.

"சொப்பனம் இல்லையே பிரபு"

"இல்லையே உன் எதிரில் நிற்பவன் இயமன் தான். அதில் உனக்கேதும் ஐயம் உண்டா என்ன?"

"பிரபு! தாங்கள் சற்று முன்னர் இருந்த மனநிலைக்கும் இப்போதிருக்கும் நிலைக்கும் ஏக வித்தியாசங்கள். கண நேரத்தில் என்ன நடந்தது பிரபு"

"கடமையை முடித்துவிட்டு வந்த களிப்பு இது. இன்னும் நிறைய வேலைகள் இருக்கையில் இத்தனை கேள்விகள் இங்கு தேவைதானா? சிவனுக்குத் தெரிந்தால்"

"ஐயோ நான் தொலைந்தேன். இதோ" என்று பிரம்மச் சுவடியினை எடுத்து அந்த உயிர்களின் பெயர்களை வாசித்து அவர்களுக்கு உண்டான பாவ புண்ணிய கணக்குகளையும் சொன்னான்.

"பிரபு! அவ்வளவுதான்" என்று குரலில் மாறுதலோடு அவன் சொல்ல இயமனுக்குள் சின்னதாய் ஓர் இடறல் வந்து போனது. கண்டு கொண்டு விட்டானோ என்ற நினைவோடு அவன் முகம் பார்த்திருக்க எழுத்தாணியைத் திருகிக் கொண்டே "ஏதோ வொன்று... குறைகிறதே" என்று முணங்கினான்.

"என்ன சித்திர குப்தா?"

"அது பிரபு இன்னும் ஓர் உயிர் இன்றைய தேதியில் இவ்விடம் வந்திருக்க வேண்டும். ஆனால் கணக்கு இடிக்கிறது"

"எங்கே பிரம்மச்சுவடியை இப்படிக் கொடு" வாங்கிப் பார்த்தவன் "சரியாகத் தானே இருக்கிறது சித்திர குப்தா" என்க,

"ஆம் அதுதான் குழப்பமாக இருக்கிறது"

"இதிலென்ன குழப்பம் உமக்கு. இங்கு பார், சற்று முன்னர் என்னிடம் இருந்த குழப்பம் இப்போது இடம்மாறி உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டது போல. போய் கடமையை செய்.. எமகிங்கரர்களை அழைத்து இவர்களுக்கான தண்டனையை சரிவர கொடுக்கச் சொல். நான் வருகிறேன்" என்றபடி இயமன் அங்கிருந்து அகன்றுவிட்டான். 

சரியாகத்தான் இருக்கிறதா? சித்திரகுப்தன் மீண்டுமொரு முறை பரிசோதித்து பார்த்தான். சரியாகத்தான் இருக்கிறது இருந்தாலும் தவறாக ஏதோ நடந்தது போல் ஒரு நினைவு அழுத்தமாக என்னுள் வந்து வந்து மோதுகிறதே! இப்படியெல்லாம் எனக்கு தோன்றியதே இல்லையே

ஒருவேளை பிரபுவின் நிலையை நினைத்து நானும் கலக்கம் கொண்டுவிட்டேனோ? அப்படியாகத்தான் இருக்கும் என சித்திரகுப்தனும் முடித்துக் கொண்டான்.

எமலோகத்தினை விட்டு வெளியே வந்தவன் மீண்டும் பூலோகத்தினை அடைந்தான். அந்த மருத்துவமனைக்குள்ளும் நுழைந்துவிட்டான். 

அஞ்சனா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளது முகத்தில் இருந்த அச்சம் கொஞ்சமாக விலகியிருந்ததைக் கண்டு இயமனும் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

இந்த காதல் தனக்குள்ளும் வருமென்று அவன் சொப்பனத்தில் கூட நினைத்ததில்லை. இப்போதுங் கூட இதுவும் அப்படியான ஒன்றுதான் என்று அடிக்கடி தோன்றுகிறது. பார்த்ததற்கே கடமையிலிருந்து தவறிவிட்டேனே. இந்த காதல் அவளிடம் இருந்தும் வெளிப்பட்டால் நானென்னாவேனோ என்ற பதட்டத்துடனே இந்த புதுவகையான உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

இயல்பாக அவனது கரம் நீண்டு அவளது தலையினை வருடத் தொடங்க அவளோ "ஐயா!" என்று முணங்கினாள்.

அவளது அழைப்பு அவனுக்குள் இன்னும் கொஞ்சம் நேசத்தினை வழியச் செய்தது. தந்தையை இழந்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவள் இப்படிச் சுருண்டு கிடக்கிறாள். முதலில் இவளது உடல்நலம் மனநலம் தேற வேண்டும். அப்போதுதான் இந்த இயமனின் காதலை அவளால் புரிந்துக் கொள்ள முடியும்

"ஏய் அந்தகா! நீயாரென்பது உனக்கு மறந்து போனதா. நீ மரணத்தின் தேவன். உனக்கு மரணமென்பது கிடையாது. ஆனால் அவள் சாதாரண மானுடப் பெண். அவளுக்கு மரணம் என்பது நிச்சயதித்த ஒன்று. உன் தர்மப்படி அவள் எப்போதோ இறந்திருக்க வேண்டும். அந்த கடமையை ஆற்றாது காதல் என்று பிதற்றிக் கொண்டிருப்பது காலனுக்கு அழகல்ல" உள்ளுக்குள் ஓர் குரல் கேட்டது.

அதைக் கேட்டவன் கசப்பினை விழுங்கியவனாய் முகத்தினை வைத்துக் கொண்டு "எல்லாம் இந்த இயமனுக்குத் தெரியும்" என்று திமிராய் நின்றுவிட்டான்.

மரணத்தின் தேவனுக்கு அப்போது ஒன்று புரியவில்லை. காதல் மரணத்திற்கு ஒப்பான வலியையேத்தரும் என்று. இவளின் காதலினைப் பெற அவன் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாய் நிற்க வேண்டும் என்பதே விதி. அதை இயமன் மாற்றி எழுதுவானா??? 


                                                                                                                                                                   காதலாசை யாரை விட்டது....!!!




Leave a comment


Comments


Related Post