இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 19.1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 24-04-2024

Total Views: 23551

செந்தூரா 19.1

சுபாஷ் பேசிக் கொண்டிருந்ததை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் செந்தூரமித்ரன்.

சாரதாவை திருமணம் முடித்த போது சுபாஷிற்கு முதலில் செந்தூரன் மேல் சிறிது பொறாமை உணர்வு இருந்தது உண்மை தான், ஆனால் நாளடைவில் அத்தைக்கும் அண்ணன் மகனுக்கும் இடையே இருக்கும் ஆழமான பாசத்தை புரிந்து கொண்டார். தாரிகா பிறந்த பிறகு மொத்த குடும்பத்தாரும் அவளை செந்தூரன் மனைவியாகவே நினைத்து பேச தொடங்கியிருந்தனர். 

செந்தூரமித்ரனின் தாய்வழி பாட்டி கண்ணம்மா சாரதாவையும் பிறந்த குழந்தையான தாரிகாவையும் பார்க்க பொள்ளாச்சி வந்திருந்தார். அப்போது ஜானகி தன் அன்னை கண்ணம்மா விடம் “எல்லாம் உன்னால் தான் வந்துச்சு, நீ ஆரம்பிச்சு வச்சது தான், இப்ப எனக்கு வினையாக வந்து நிக்குது” என்று நொடித்துக் கொண்டார் ஜானகி.

“நான் என்னாடி அப்படி பண்ணிப் போட்டேன்?” என்று ஆச்சரியமாக முகவாயில் கையை வைத்தபடி கேட்டார் கண்ணம்மா பாட்டி.

“என்னா பண்ணியா? என் மகன் செந்தூரன் அந்த சாரதா கல்யாணத்தில் அழுதுட்டு இருந்தப்ப நீ தானே அவளுக்கு பெண்குழந்தையை பிறந்தால் அவனுக்கே கட்டி வக்கிறதா சொன்னே?” என்றார் ஜானகி கோபமாக

“ஆமா அதுக்கென்ன இப்போ” என்று புரியாமல் கேட்டார் கண்ணம்மா பாட்டி

“அதுக்கென்னவா? நீ சொன்ன மாதிரியே பொண்ணு இல்ல பிறந்திருக்கு? என் புருஷன்ல இருந்து என் மாமனார் மாமியார் ஏன் என் மகன் செந்தூரன் கூட இப்பவே பிறந்திருக்கும் குழந்தையை இந்த வீட்டுக்கு மருமகளாகவே பார்க்க தொடங்கிட்டாங்க” என்றார் ஆற்றாமையுடன்.

“சரி அதனால் என்ன?” என்றார் கண்ணம்மா பாட்டி பொறுமையிழந்து.

“ம்ம் ஏற்கனவே கல்யாணம் ஆகி வந்ததிலிருந்து நானும் பார்க்கிறேன், இந்த குடும்பமே என் நாத்தனார் சாரதாவையே தலையில் தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்காங்க. என் புருஷனை சொல்லவே வேண்டாம், தங்கச்சி தங்கச்சினு உருகுறார். எனக்கு பொறந்தது அதுக்கும் மேல! பெத்தவ என்னை அவன் கண்டுக்கிறதே இல்லை. எப்பவும் அத்தை அத்தைனு அவ பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தான். எப்படியோ அவளுக்கு சென்னை மாப்பிள்ளையோடு கல்யாணம் நிச்சயம் ஆனதும் சந்தோஷப்பட்டேன். ஆனால் நீ என் நிம்மதியை கெடுக்கிற மாதிரி, செந்தூரன் அழுகையை நிறுத்த, சாரதா பெண்ணை கட்டிக்கோனு சொல்லி தொலைக்கவும், அவன் அதையே பிடிச்சுகிட்டான். பெரியவனா ஆனாலும் அவளை தான் கல்யாணம் கட்டுவேன்னு நின்னா என்ன பண்ணுவேன்?” என்றார் ஜானகி பொருமலாக.

“இதெல்லாம் ஒரு கேள்வியா? அவன் ஆசைப்பட்டால் கட்டி வைக்க வேண்டியது தான்” என்றார் கண்ணம்மா பாட்டி வெள்ளந்தியாக

“இந்த குடும்பத்தில் என்னை யாரும் மதிக்கிறதே இல்லை. இதுல சாரதா பொண்ணையும் என் மகனுக்கு கட்டி வச்சிட்டா இவங்க எல்லாம் அவளைக்கும் அவ பெண்ணுக்கும் தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க” என்று புலம்பினார்.

“இதுக்காடி இத்தனை அலப்பறை? நானும் என்னவோனு நினைச்சிட்டேன். சாரதா நல்லவடி, இப்படி எல்லாம் அவளை போட்டியா நினைக்காதே. நான் சொன்னதால் தான் செந்தூரன் தாரிகா கல்யாணம் நடக்கும்ன்னு நினைக்காதே ஜானகி. அவங்க பெரியவங்களானதும் மனசு மாறலாம். யாருக்கு யார்னு எல்லாம் இறைவன் போடுற முடிச்சு. அதை யாராலும் மாத்த முடியாது” என்று மகளை சமாதானம் செய்து கொண்டிருந்தார் கண்ணம்மா பாட்டி.

இதை தற்செயலாக கேட்ட சுபாஷிற்கு ஜானகியின் விருப்பமின்மையும், பெரியவங்க ஆனதும் அவங்க மனசு மாறலாம் என்ற கண்ணம்மா பாட்டியின் வார்த்தைகளும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. குழந்தை பருவத்தில் அவர்களின் மனதில் ஆசையை விதைக்க வேண்டாம் என்று தோன்றியதாலே எப்போதும் செந்தூரனை தன் மகளை விட்டு எட்டி நிறுத்தி வைக்க தொடங்கினார்.

தாரிகா சற்று வளர்ந்த பின்னர், சுபாஷ் செந்தூரனிடம் காட்ட தொடங்கிய கட்டுப்பாட்டினாலும் முறைப்பினாலும் தன்னையறியாமல்  செந்தூரனும் அவளிடம் நெருங்கி பழகுவதில்லை. அதுமட்டுமின்றி தங்கை காயத்ரியுடன் வளர்ந்ததால் செந்தூரன் எப்போதும் தாரிகாவிடம் கண்ணியமாக நடந்து கொண்டான். இதை அவதானித்து இருந்த சுபாஷும் மனதிற்குள் மருமகனை மெச்சிக் கொண்டார். அவரால் செந்தூரனை மட்டுமே அடக்க முடிந்தது, ஆனால் மகளை? 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவள் செந்தூரனை நினைத்தே வளர தொடங்கினாள். எப்போதும் செந்தூரன் புராணம் தான்,  பெரியவளாகி தன் மாமனை எப்போது கைப்பிடிப்பது என்று ஏங்க தொடங்கி விட்டாள்… வேண்டுமென்றே செந்தூரனின் பொறுமையை சோதிக்க அவன் மேல் குதித்து விளையாடி அவன் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைத்தாள்.

மகளின் மனதையும் அவள் செயலால் செந்தூரன் தடுமாறுவதையும் உணர்ந்த சுபாஷ் பொள்ளாச்சிக்கு தாரிகாவை தனியே அனுப்பி வைப்பதை குறைத்துக் கொண்டார். மகளிடம் இதைப்பற்றி பேசமுயாமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் செந்தூரன் மீது குறை சொல்ல ஆரம்பித்தார். அவனும் அதை புரிந்து கொண்டு தாரிகாவுடன் ஒதுங்கி இருக்க தொடங்கினான்.

அவர்கள் உடலால் நெருங்குவதை தான் அவரால் தடுக்க முடிந்தது. இருவரும் மனதால் நெருங்கி கொண்டிருப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. தாரிகா பருவம் அடைந்த பிறகு அவளை மாமன் வீட்டிற்கு அனுப்புவதில்லை என்றதும் தாரிகா அழுது ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிவிட்டாள்.

“அப்பா என்னால் மாமாவை பார்க்காமல் இருக்க முடியாது, என்னை அனுப்பி வைங்க, இல்லைனா செந்தூரன் மாமாவை இங்கே வந்து என்னை பார்த்து விட்டு போக சொல்லுங்க” என்று தந்தையிடம் வெளிப்படையாகவே ஆர்டர் போட்டாள் தாரிகா.

“தாரா… மாமா இப்போ பிளஸ்டூ படிக்கிறான். நீ அங்கே போனாலோ, அவன் இங்கே வந்தாலோ அவன் படிப்பு கெட்டுவிடும். அவன் படிச்சு பெரிய ஆளாக வரவேண்டாமா? அதுக்கு நீயே தடையாக இருக்க போறியா?” என்று கேட்டார் சுபாஷ் கண்டிப்பான குரலில். சாரதாவும் அதையே சொல்லவும் அரைமனதாக ஒத்துக் கொண்டாள்.

“ஆனால் மாமாவை பார்க்காமல் இருக்க முடியாதே” என்று பெற்றவர்களிடமே சிணுங்கியள் முகம் சட்டென்று பிரகாசமானது, “அப்போ நான் கொடுக்கிற மாமாவோட சில ஃபோட்டோஸை எல்லாம் பெரிசாக்கி என் ரூமில் மாட்டணும் சரியா?” என்று டீல் பேசினாள் மகள்.

மகளை அதட்ட முடியாமல் மனைவியை முறைத்தார் சுபாஷ். வேறு வழியின்றி அவள் சொன்னதை செய்தும் முடித்திருந்தார். மகளின் படுக்கை அறையில் ஒரு ஆணின் புகைப்படம். அதை அவரால் தடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவளை பித்தம் கொள்ள செய்திருந்த செந்தூரன் மேல் தான் அவர் கோபம் திரும்பியது.

என்ன செய்து என் மகளை வசியம் செய்தானோ என்று மனதிற்குள் பொரிந்து கொண்டிருந்த சமயத்தில் தான் செந்தூரன் சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படிக்க அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான்.

செந்தூரன் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்பவன் தான் என்றாலும் மகளின் செயல்களால் அவன் தடுமாறக் கூடும் என்று நினைத்தார் சுபாஷ். அதுவும் தாரிகாவின் அறையில் செந்தூரனின் புகைப்படங்களை அவன் கண்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். தான் விரும்பும் பெண் தன்னை இந்த அளவிற்கு விரும்புகிறாள் என்று தெரிந்தால் எந்த ஆண்மகனால் கட்டுப்பாட்டோடு இருக்க முடியும்? 

அதுவும் அவர்கள் இருவரும் பருவ வயதின் நுழைவாயிலில் இருப்பதாலும்,  இருவரின் படிப்பு முக்கியம் என்பதாலும் சுபாஷ் செந்தூரனிடம் கண்டிப்பை காட்டினார். அவனை மாடியில் தாரிகாவின் அறைக்கு செல்ல கூடாது என்று கட்டளை இட்டார். அதன்படி செந்தூரன் நடந்து கொண்டாலும், அன்றைய தினம் ஹாலில் இருவரையும் அவ்வளவு நெருக்கமாக பார்த்ததும் கோபத்தில் பொங்கி விட்டார்.

செந்தூரன் தன் சொந்த வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும், அதை விடுத்து இளம் வயதிலே தாரிகாவை திருமணம் செய்து கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அதுமட்டுமில்லாமல் இப்போது ஜானகியின் மனநிலை என்ன என்றும் அவருக்கு தெரியாது. ஜானகியின் முழு சம்மதமில்லாமல் மகளை செந்தூரனுக்கு திருமணம் செய்து வைத்தால் பின்னாளில் மகள் மாமியார் கொடுமை என்று வந்து நிற்க கூடாதே என்று பயந்தார்.

அதனால் செந்தூரன் மேற்படிப்பு படித்து நல்ல நிலைக்கு வந்தால் திருமணம் செய்து கொடுப்பதாக பேசி அவன் கவனத்தை திசை திருப்பினார். இதையே வேதவாக்காக கொண்டு செந்தூரன் வளர்ச்சி அடைந்தால் நல்லது தானே? இதன்மூலம் இருவர் காதலின் உண்மை தன்மையும் நிலைப்பாட்டையும் உறுதி செய்து கொள்ளலாம் என்று நினைத்தார்.

அதன்படியே எல்லாம் நடந்தது. செந்தூரன் தான் சொல்லிச் சென்றதை செய்து முடிக்கும் தருவாயில் இருந்தான். தாரிகாவிற்கும் இதைப்பற்றி அவர் சொல்லி இருந்ததால் எப்படியும் செந்தூரன் தன்னை திருமணம் செய்து கொள்ள வருவான் என்ற நம்பிக்கையில் அவளும் படிப்பில் தன் கவனத்தை செலுத்தினாள்.

செந்தூரன் இன்னும் சில மாதங்களில் சென்னைக்கு வரக்கூடும் என்பதை கணித்த சுபாஷ் தன் மனைவியிடம் செந்தூரன் தாரிகா திருமணத்தை பற்றி அவரின் அண்ணன் வீட்டில் பேச சொன்னார். அதைக் கேட்டு சாரதாவும் தாரிகாவும் சந்தோஷத்தால் குதிக்காக கதை தான். திருமண ஏற்பாட்டை செய்து செந்தூரனக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று தாயும் மகளும் திட்டம் போட்டனர்.

சாரதா தாரிகாவுடன் தன் தாய் வீட்டிற்கு கிளம்பி சென்று சுபாஷ் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதை சந்தோஷமாக அறிவித்தார்.

“சரிடாம்மா, செந்தூரன் வந்த மறுநாளே திருமணத்தை நடத்திடலாம். இப்பவே கல்யாணத்திற்கு நாள் குறிச்சிடலாம்” என்றார் கதிரேசன்.

ஜானகியும் எந்த எதிர்பேச்சும் பேசவில்லை. “கல்யாண நாள் எல்லாம் நாமளே முடிவெடுக்க கூடாது. இருவரின் ஜாதகத்தையும் நம்ம குடும்ப ஜோசியரிடம் காட்டி நல்ல நாள் குறிக்கலாம்” என்றார் ரஞ்சிதம் பாட்டி.

தாத்தா பாட்டி, கதிரேசன், ஜானகி மற்றும் சாரதா என ஐவரும் ஜோசியரை பார்க்க சென்றனர். “என்னம்மா நம்ம செந்தூரனுக்கும் தாரிகாவுக்கும் கல்யாணமா? கொடுங்க ஜாதகத்தை பார்த்திடலாம்” என்று சிரித்துக் கொண்டு அவர்களின் கையிலிருந்த ஜாதகத்தை வாங்கி புரட்டினார்.

சட்டென அவர் முகத்தில் சிரிப்பு மறைந்து புருவம் சுருங்கியது. தனக்குள் கட்டங்களை பலவாறு போட்டு பார்த்தவர், கருத்த முகத்துடன் வந்திருந்தவர்களை பார்த்தார். “என்னாச்சு ஜோசியரே, இப்படி பார்க்கறீங்க? எதாச்சும் பிரச்சனையா?” என்றார் ரஞ்சிதம் பாட்டி பதட்டமாக.

“ஆமாம் பாட்டி, செந்தூரன் ஜாதகத்துக்கும் தாரிகாவின் ஜாதகத்துக்கும் முக்கியமான பொருத்தம் தாலி பொருத்தமே வரலை. தாரிகாவிற்கு நாக தோஷம் இருக்கு, அவளுக்கும் அதே தோஷம் இருக்கிற மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும், செந்தூரனுக்கு கட்ட வேண்டாம்” என்றார் ஜோசியர் அழுத்தம் திருத்தமாக.

சாரதா உடைந்து போய் விட்டார். “ஜோசியரே, அவர்களின் திருமணம் என்னோட கனவு மட்டுமில்லையே, அது ஒட்டுமொத்த குடும்பத்தின் கனவாயிற்றே? தாரிகாவும் செந்தூரனும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக விரும்புவதை நான் மட்டுமே நன்கு அறிவேன். செந்தூரன் தன் காதலை என் மகளிடம் கூட சொல்லாமல் அத்தையான என்னிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வான்.

தாரிகா வெளிப்படையாக என்னிடம் சொல்வதில்லை என்றாலும், அவளின் ஒவ்வொரு செய்கையும் செந்தூரன் மேல் இருந்த காதலை மட்டுமே வெளிகாட்டும். ஆசையை வளரவிட்டு இப்போது திருமணம் வேண்டாம் என்றால் இருவருமே ஒத்துக் கொள்ள மாட்டார்களே!” என்றார் கண்ணீருடன்

தங்கையின் கண்ணீரை பார்த்ததும் பொறுத்து கொள்ள முடியாமல், “எதாவது பரிகாரம் இருக்கானு பார்த்துச் சொல்லுங்க ஜோசியரே? இப்படியா பட்டுனு வீட்டு பொண்ணுங்க முன்னாடி போட்டு உடைப்பீங்க?” என்று அதட்டினார் கதிரேசன்.

“பரிகாரம் இருந்திருந்தால் கல்யாணத்தை நிறுத்தவே சொல்லியிருக்கவே மாட்டேனுங்க. பரிகாரத்தையும் சொல்லி நாளையும் குறிச்சிருப்பேன். கஷ்டமாக தான் இருக்கு, என்ன செய்யறது? சிலதை வெளிப்படையா சொல்லி தானே ஆகணும். உயிர் சம்மந்தமானதுனா சொல்லாமல் இருக்க முடியாதுங்களே” என்றார் ஜோசியர் தயங்கிய குரலில்.

சுபாஷ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடை மறித்தான் செந்தூரன், “இது ஏன் என் அம்மாவோட வேலையா இருக்க கூடாது? இதுக்காகத்தான் என்னையும் தாராவையும் பிரிக்க நினைச்சீங்களா?” என்றான் செந்தூரன் கோபமாக.

“முதல்ல சாரதா விஷயத்தை என்கிட்ட சொன்னதும் நானும் அப்படித் தான் நினைச்சேன். நானும் உன் அத்தையும் தனியாக வேற வேற ஜோசியரை பார்த்தோம், எல்லாருமே ஜாதகம் பொருந்தலைனு சொன்னாங்க” என்றார் சுபாஷ்.

(தொடரும்)


Leave a comment


Comments


Related Post