இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 19.2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 24-04-2024

Total Views: 21339

செந்தூரா 19.2


“புல்ஷிட், எந்த காலத்தில் இருக்கீங்க நீங்க எல்லாம்? நம்ம நாட்டை தவிர எல்லா நாட்டிலேயும் திருமணம் நடந்துட்டு தான் இருக்கு. அவங்க எல்லாம் இப்படியா ஜாதகம் பொருத்தம்னு பார்த்திட்டு இருக்காங்க? அவங்க சந்தோஷமா இல்லையா? அதுக்காக என் தாராவை மிரட்டி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைச்சிங்களா?” என்றான் செந்தூரன் கடுப்பாக


“அதுமட்டுமில்லை செந்தூரா, இவங்க முதலில் ஜாதகம் பார்க்க போன அதே நாள் வேறொரு குடும்பமும் திருமண பொருத்தம் பார்க்க வந்திருக்காங்க. அந்த பையன் தான் காதலிச்ச பொண்ணோடு ஓடி வந்து தன்னோட பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்க சொல்லி இருக்கான். அந்த ஜோசியர் அவங்களுக்கும் அதே மாதிரி தான் பொருத்தம் இல்லைனு சொல்லி இருக்காங்க. இருந்தாலும் அந்த பெண்ணை மகன் கூட்டிட்டு வந்துட்டதாலும் திரும்ப அவளை அனுப்ப முடியாது என்பதாலும் அவங்க திருமணம் செய்து வச்சாங்க” என்றார் சுபாஷ்


“நல்லது தான் பண்ணியிருக்காங்க. நான் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன்” என்றான் செந்தூரன்.


“நானும் அதைச் சொல்லி தான் எல்லாரையும் சமாதானம் செய்தேன். ஆனால் அடுத்த வாரமே அந்த பையன் ஒரு ஆக்சிடென்டில் இறந்துட்டான். அதை கேள்விப்பட்ட எனக்கே கதிகலங்கிடுச்சுனா, உங்க அம்மா அத்தை பாட்டியை பத்தி சொல்லவே வேண்டாம். மொத்தமா அவங்க மூணுபேருமே பேசி தான் உங்க கல்யாணத்தை நிறுத்தறதுனு முடிவு செஞ்சாங்க. என்னாலயும் கதிரேசனாலயும் அவங்க முடிவை மறுக்க முடியலை. குடும்பத்திற்கே ஒத்தையா இருக்கும் ஆண் வாரிசான உன்னை இழக்க எங்க யாருக்குமே மனசு வரலை” என்று நிறுத்தினார்.


முகம் இறுக சுபாஷ் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தான் செந்தூரன்.


“அதுக்கப்புறம் மூணு பேருமா வந்து தாரிகா கிட்ட பேசினாங்க, அதுவும் உங்க அம்மா தாரிகாவை எப்படி பேசி வழிக்கு கொண்டுவர முடியுமோ, அப்படி பேசினாங்க” என்று அந்த நாளின் நினைவில் மூழ்கினார் சுபாஷ்.


ஜானகி தன் முன்னே நிற்கும் தாரிகாவின் முன்னே மண்டியிட்டு மடிப்பிச்சை ஏந்தி நிற்பது போல அமரவும் பதறிப் போனாள் தாரிகா.


“என்ன அத்தை இது? எதுக்காக இப்படி செய்யறீங்க? முதல்ல எந்திரிங்க, என்கிட்ட போய் ஏன்?” என்று அதற்கு மேல் பேசமுடியாமல் கதறினாள் தாரிகா


“தாரா, என் மகன் உயிரை எனக்கு பிச்சை போடுமா, நீ அவனை கல்யாணம் செய்துக்காதே. நீ மனசு வைச்சால் என் மகனை காப்பாத்த முடியும்” என்றார் ஜானகி.


ஜானகியின் முன்னால் தொய்ந்து அமர்ந்தபடி “என்னை கல்யாணம் செய்தால் மாமா செத்துடும்னு சொல்றீங்களா அத்தை? இந்த ஜாதகம் ஜோசியத்தை போய் நம்பலாமா?” என்றாள் தாரிகா அழுதுக் கொண்டே.


“நான் அப்படி சொல்லலை தாரா, ஒருவேளை அப்படி நடந்துட்டால்? நாம எதுக்கு விஷபரிட்சை செய்யணும்? உனக்கு மாமாவை கல்யாணம் செய்துக்கிறது முக்கியமா? அவன் உயிரோடு இருக்கிறது முக்கியமா?” என்று கேட்டார் ஜானகி.


இப்படி கேட்டால் அவள் என்ன தான் சொல்வாள்? அவனோட உயிரைவிட என் சந்தோஷம் தான் முக்கியம் என்று அவளால் சொல்ல முடியுமா? “அத்தை நான் மறுத்தாலும் மாமா என்னை விடாது. உங்களுக்கே மாமாவை பத்தி தெரியும் தானே? நாம என்ன சொன்னாலும் கேட்காது. என்னை தூக்கிட்டு போயாவது கல்யாணம் கட்டிக்கும்” என்றாள் தாரா.


அவள் சொல்வதும் உண்மை தானே! அவனிடம் இந்த காரணத்தை எல்லாம் சொன்னால் அவன் கட்டாயமாக ஒத்துக் கொள்ள மாட்டானே என்று ஜானகி பிரமை பிடித்தவர் போல இறுகி போய் அமர்ந்து விட்டார்.


“அண்ணி கவலை படாதீங்க, நம்ம செந்தூரன் இந்தியா வர்றதுக்குள்ள, சீக்கிரமா தாராவுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்துக் கல்யாணம் செய்து வச்சிடலாம்” என்றார் சாரதா தெளிவான குரலில்


இப்போது தாயை அடிப்பட்ட பார்வை பார்த்தாள் தாரிகா. மகளின் முகபாவத்தை உணர்ந்தவராக, “எனக்கு என் பெண்ணோட சந்தோஷத்தை விட, என் அண்ணன் மகனோட உயிர்தான் முக்கியம். அவன் வந்தால் நாங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். அவன் வர்றதுக்குள்ள உனக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செய்து வைச்சிடறோம், நீ எங்க பேச்சை கேட்பே தானே தாரா? மாமா உயிர் தானே உனக்கும் முக்கியம்?” என்று கேட்டார் சாரதா உணர்ச்சி துடைத்த முகத்துடன்.


தாரிகாவினால் பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. குடும்பத்தார் அருகில் இருந்தும் தேற்றுவாறின்றி அழுதுக் கொண்டிருந்தாள். அவர்களே இந்த முடிவால் ஸ்தம்பித்து போயிருக்க, யார் அவளை தேற்றுவார்கள்? இடை விடாது மூன்று நாட்களாக அழுது கரைந்தவளிடம் ஜானகியும் ரஞ்சிதம் பாட்டியும் சென்று, “தாரா ஒரு வேளை எதிர்பார்க்காமல் திருமணத்திற்கு முன்னாடியோ பின்னாடியோ செந்தூரன் வந்து விசாரிச்சால் நீ இந்த ஜாதகப் பிரச்சனையை சொல்லக் கூடாது. அதையெல்லாம் அவன் நம்ப மாட்டான். உன்னை தூக்கிட்டு போயிட்டே இருப்பான்” என்றனர்.


“அதுக்கு என்ன செய்ய சொல்றீங்க அத்தை? அதுதானே உண்மை?” என்றாள் தாரிகா புரியாமல்.


“அது உண்மை தான், ஆனால் செந்தூரன் ஏத்துக்க மாட்டானே. அதனால அப்படி ஒரு சூழ்நிலை வந்து உன்னை அவன் விசாரிச்சால் நீயே அந்த மாப்பிள்ளையை காதலிச்சு திருமணம் செய்யறதாக சொல்லணும். அப்படி சொன்னால் தான் உன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அமைதியாக போயிடுவான். எனக்காக அப்படி சொல்லுவியா தாரா?” என்றார் ஜானகி தாராவின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு


“என்ன? நான் உயிருக்குயிராய் காதலிக்கும் என் செந்தூரனிடம், நான் வேறு ஒருத்தனை விரும்பறதாக சொல்லணுமா? என்னால முடியாது” என்று வெடித்தாள் தாரா.


“அப்போ உன் மாமா உயிர் உனக்கு முக்கியமில்லையா?” என்று ஜானகி பழைய பல்லவியை பாட, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே, “இப்போ என்ன நான் யாரையோ காதலிக்கிறதா சொல்லணும் அவ்வளவு தானே சொல்றேன்” என்றாள் கசந்த குரலில்.


“அதுமட்டுமில்லை. கல்யாணம் முடியறவரைக்கும் நீயோ சாரதாவோ இங்கே நடக்கிறதை பத்தி செந்தூரனுக்கு ஒரு போதும் சொல்ல கூடாது, இரண்டு பேரும் என் தலையில் அடித்து சத்தியம் செய்யுங்க” என்றார் ஜானகி.


இதையெல்லாம் பார்க்க சகிக்காமல் சுபாஷ் மற்றும் கதிரேசன் இறுக்கமான முகபாவத்துடன் அமர்ந்து இருந்தனர். அதன் பின் தாரிகாவும் சாரதாவும் ஜானகியை நம்ப வைக்க வேறு வழியில்லை என்பதால் அவரின் தலையில் அடித்து சத்தியம் செய்தனர். 


சாரதா தன் கணவனிடம் தாரிகாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும்படி கூறினார். “சாரதா என் பிரண்ட் விநாயகம் இருக்கான் இல்லை? அவன் போன மாசம் தான் எனக்கு போன் செய்தான். அவன் பிசினஸ் பார்டனரோட மகன் சித்தார்த் நம்ம தாரா படிக்கிற காலேஜில் தான் படிச்சு முடிச்சுட்டு இப்போ அவன் அப்பாவோடு சேர்ந்து பிசினஸ் செய்யறானாம்.


அந்த பையன் சித்தார்த்துக்கு நம்ம தாராவை ரொம்ப பிடிச்சிருக்காம், தாராவுக்கும் அவனை தெரியுமாம். அவன் தாராவை பத்தி விசாரிக்கும் போது நானும் விநாயகமும் பிரண்ட்னு தெரிஞ்சுகிட்டு, அவன் கிட்ட தாராவை பத்தி கேட்டு இருக்கான். விநாயகம் என்கிட்ட சொன்ன போது, இல்ல செந்தூரனுக்கு பேசி முடிச்சிட்டோம்னு சொல்லிட்டேன். நான் வேணூம்னா மறுபடியும் விநாயகத்துக்கிட்ட பேசி அந்த சித்தார்த் குடும்பத்தை பெண் கேட்டு வரச்சொல்லட்டுமா? ஏன்னா தெரியாத ஒருத்தனுக்கு நம்ம பெண்ணை கொடுக்கிறதை விட, அவளை விரும்பறவனுக்கு கொடுத்தா அவனும் அவளை நல்லா பார்த்துக்குவான் இல்லை?” என்றார் சுபாஷ்.


சாரதாவுக்கும் அதுவே சரியென்று தோன்றியது, “எதுக்கும் தாராவிடம் சம்மதம் கேளுங்க” என்றார். அவருக்கு மகளின் முகத்தை நேரடியாக பார்க்க முடியாத நிலை. அவரே மகளின் மனதில் ஆசையை வளர்த்து விட்டு இப்போது வேண்டாம் என்றால் அவள் எப்படி தாங்குவாள்?


சுபாஷ் தாராவை அழைத்து விசாரித்ததற்கு, “சித்தார்த்தோ இல்லை வேறு எந்த கழுதையோ கூட கூட்டிட்டு வாங்க கட்டிக்கிறேன்” என்று வெறுப்பாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து குலுங்கி குலுங்கி அழத் தொடங்கிவிட்டாள்.


இருவரும் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்த சமயம் தான் செந்தூரன் அடுத்த மாதம் இந்தியா வரப்போவதாக போன் செய்தான். இதைக் கேட்டதும் ஒரு வாரத்திலேயே தாரிகாவிற்கும் சித்தார்த்துக்கும் திருமணம் செய்ய ஏற்பாடும் செய்திருந்தனர்.


ஆனால் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் செந்தூரமித்ரன் சரியான நேரத்திற்கு அங்கே ஆஜராகியிருந்தான். அதன் பின்பு நடந்த அனைத்திற்கும் செந்தூரமித்ரன் மட்டுமே காரணம் என்று சுபாஷிற்கு நன்றாக விளங்கியது. ஆனால் வீட்டு பெண்கள் தாரிகாவை நம்பாமல் அவள் மேல் பழி சுமத்துகிறார்கள் என்று சொல்லி முடித்தார் சுபாஷ்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post