இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...31 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 24-04-2024

Total Views: 30374

பர்பில் நிறத்தில் வெள்ளை பூக்களை தூவியதைப் போன்ற சுடிதாரும் வெள்ளை பேண்டும் அணிந்து அளவாய் தன்னை அலங்காரம் செய்து கொண்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டாள் பூச்செண்டு. குளித்து முடித்து இடுப்பில் சுற்றிய டவலுடன் குளியலறையில் இருந்து வெளியே வந்தான் தரணி.


“ஓய்… கிளம்பியாச்சா…?” கேட்டபடியே தனது அடர்ந்த சுருண்ட கேசத்தை டப்டப் என கைகளால் தட்டியபடியே கண்ணாடியின் முன் வந்து நின்றான். அவள்முன் இப்படி அரைகுறையாக இதற்கு முன் நின்றதில்லை… உரிமை கூடிப் போனபின் தயக்கம் வந்துவிடுமா என்ன…?


போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆறடி உயரத்தில் மினுமினுவென்று மாநிறத்திற்கும் சற்றே கூடுதலான நிறத்தில் தேக்கு மர தேகத்தில் ஆங்காங்கே படிந்திருந்த நீர் திவலைகள் அவன் தலையின் ஈரத்தை துவட்டிய வேகத்தில் உதிர்ந்து நகர்ந்து செல்லும் அழகை ரசித்தவள் முதுகில் நீள நீளமாய் ஆங்காங்கே பளிச்சிட்ட நகக்கீறல்களில் பார்வை பதிந்ததும் ஜிவ்வென வெட்கமும் உடன் சங்கடமுமாய் படக்கென விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.


கண்ணாடி வழியே அவளின் பார்வை மாற்றங்களை கண்டு கொண்டவன் உதடு கடித்து சிரித்தபடி அவள் அருகில் வந்து ஒற்றை விரலால் நாடியைப் பிடித்து நிமிர்த்தினான். நேற்றிலிருந்து வெட்கத்தால் அதிகமாகத்தான் சிவந்து போய் இருக்கிறாள்.


“ஒரே நாள்ல ரொம்ப கலர் ஆயிட்ட பொக்கே…” இரு கைகளால் முகத்தை ஏந்தி ஆசையாய் அவளை ஆராய்ந்தான். கூடலுக்குப் பின் இயற்கையாய் ஏற்படும் பொலிவும் சேர்ந்து இருந்ததால் கன்னங்கள் இரண்டும் ரூஜ் தடவியதைப் போல் மின்னி பிரகாசித்தன. போதாக்குறைக்கு வெட்கம் வேறு… அத்துடன் ஐயாவிடம் கிடைத்த அழுத்தம் குறையாத இடைவிடாத முத்தங்களும் செம்மையை இன்னும் அதிகப்படுத்தி இருந்தன. ஏந்தியிருந்த விரல்கள் மென்மையாய் அவள் கன்னம் வருட கிளர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களும் கிறக்கமாய் அவளை பார்த்திருந்தன.


அவள் காதோரம் குனிந்தவன் “ஷல் வி ஹேவ் ஒன் மோர்…” என்று நிறுத்தி குறும்பாய் அவள் முகம் பார்க்க பொங்கி வந்த நாணத்துடன் அவனை வேகமாய் பிடித்துத் தள்ளி “உங்களுக்கு ரொம்ப கொழுப்பு கூடிப்போச்சு மாமு… டைம் பார்த்தீங்களா… இன்னும் லேட் பண்ணினா மாமா கதவை உடைச்சுட்டு உள்ளே வந்துடும்… பாருங்க விடாம கூப்பிட்டுட்டே இருக்கு… நான்தான் அட்டென்ட் பண்ணல… சீக்கிரம் கிளம்புங்க…” அவனை முறைத்தபடி கூறியவளை பார்த்து சிரிப்புடன் அவள் முன்பே உடையை மாற்றத் தொடங்கினான்.


“ஐயோ… வெக்கமே இல்லாம என் முன்னாடியே டிரெஸ் மாத்துறீங்க…” தன் முகத்தை வேகமாய் வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.


“ஆஹான்… வெட்கமே இல்லாம உன் முன்னாலதான்…” என்றவன் அடுத்து கூறிய வார்த்தைகளில் ஓடிச் சென்று அவன் வாயை மூடியவள் “நீங்க ரொம்ப மோசம்…” என்றபடியே அவன் நெஞ்சில் செல்லமாய் அடித்தாள்.


“அப்படியா… ஆனா இந்த வாய் நேத்து வேற என்னமோ சொல்லுச்சே…” என்றபடியே மீண்டும் அவள் காதில் ஏதோ கிசுகிசுக்க “ஐயோ மாமு… வாயை மூடுங்க…” என்றபடியே தன் காதுகளை மூடிக்கொண்டு அவன் நெஞ்சிலேயே அழுத்தமாய் சாய்ந்து கொண்டாள்.


ஹாஹாஹா சத்தமிட்டு சிரித்தவன் அவளை இடையோடு தூக்கி கழுத்தில் ஆழமாய் முத்தமிட்ட நொடி தரணியின் கைப்பேசி அழைத்தது. அவளை தூக்கிய நிலையிலே மெத்தையில் கிடந்த செல்போனை எட்டிப் பார்த்தவன் “உன் மாமன்தான்…” என்று சிரித்தபடியே அவளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு மறு கையால் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.


“சொல்லுடா…”


“சொல்றதா…? உனக்கு அஞ்சு நிமிஷம் டைம்… நீ வெளியே வரலேன்னா கதவை உடைச்சுக்கிட்டு நான் உள்ளே வருவேன்… இங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு ஒன் ஹவர் டிராவல் பண்ணனும்… ஞாபகம் இருக்குல்ல… எவ்வளவு நேரம் உன் சொர்க்க வாசலையே பாத்துட்டு உட்கார்ந்து இருக்கிறது…” அவன் பேசும் தொணியிலேயே ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறான் என்று தெரிந்து போனது.


“என் பொண்டாட்டி உன்னை நல்லாதான்டா புரிஞ்சு வச்சிருக்கா…. கதவை உடைச்சா ஹவுஸ் ஓனருக்கு நீதான் கப்பம் கட்டணும்… பைவ் மினிட்ஸ்… நிச்சயம் வந்துருவேன்… வை போனை…” மீண்டும் போனை மெத்தையில் போட்டவன் “உடைக்க ரெடியாத்தான் இருக்கான் உன் மாமன்…” அவள் கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கிவிட்டு மடமடவென கண்ணாடி முன் நின்று கிளம்பத் தொடங்கினான்.


“போனை அட்டென்ட் பண்ணி அவன்கூட பேசி இருக்கலாம்ல… இல்லேன்னா கிளம்பின உடனே வெளியே போய் இருக்கலாம்… உன்னை பார்த்தால நான் டெம்ப்ட் ஆகிட்டே இருப்பேன்… ஒரு மாதிரி உடம்புக்குள்ள என்னென்னவோ பண்ணுது…” தலைவாரியபடியே கூறியவனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள். 


“பண்ணும் பண்ணும்… உடம்பு பூரா புடிச்சு காயம் வர்ற மாதிரி கிள்ளி வச்சா சரியா போயிடும்…” ஓரமாய் இருந்த ட்ராவல் பேக்கை கதவுவரை நகர்த்தியபடியே சொன்னவளை பக்கவாட்டாய் பார்த்தவன் “ஏற்கனவே அந்த வேலையைத்தானே பண்ணி வச்சிருக்க…” சட்டையை அணிந்து கொண்டே அவன் நெஞ்சுப் பகுதியை திருப்பிக் காட்ட “போதும் மாமு… ரொம்ப நெளிய வைக்கிறீங்க…” என்றவள் சுவர்புறம் திரும்பிக் கொண்டாள்.


விசில் அடித்தபடியே தன் உடையின் மேல் பர்ஃப்யூம் அடித்து அவளுக்கும் அடித்துவிட்டான். இருவரும் பக்காவாக கிளம்பி இருந்தனர்.


“போகலாமா…”


“ம்…” என்றவள் உதட்டை வளைத்து சங்கடமாய் அவனை பார்க்க “என்னாச்சு பேபி…?” மென்மையாய் அவள் நெற்றியில் முட்டியபடி கேட்டான்.


“ரொம்ப கூச்சமா இருக்கு மாமு… மாமாவையும் அக்காவையும் நேர்ல பார்க்க ஒரு மாதிரி வெக்கமா இருக்கு…” நெளிந்தபடியே சொன்னவளை இடையோடு பிடித்து அருகே இழுத்தான்.


“ஓ… அதனாலதான் அம்மணி அசையாம இங்கேயே சுத்திட்டு இருக்கீங்களா…”


“நேத்து ஈவினிங் உள்ளே நுழைஞ்சோம்… இன்னைக்கு மதியமே ஆயிடுச்சு… நைட் ஒரு மணிக்கு அவங்க தூங்கினதுக்கு அப்புறம் சத்தம் இல்லாமல் வெளியே போய் பேய்கூட சாப்பிடாத நேரத்தில சாப்பிட்டு வந்தோம்… இப்போ வரைக்கும் வெளியில போகல… நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க…?” அவன் சட்டை பட்டனை திருகியபடியே சொன்னவளை ரசித்துப் பார்த்தான் தரணி.


“ஒன்னும் நினைக்க மாட்டாங்க… உன் மாமா சாதாரண ஆளா…? கல்யாணத்துக்கு முன்னாடியே கபடி விளையாடி கப்பையும் ஜெயிச்சவன்… வாயை திறந்தா வகுந்துட மாட்டேன்…? இதெல்லாம் சகஜம்டி… இனிமே இந்த மாதிரி அடிக்கடி நடக்கும்… பழகிக்கோ…” கண்களை சிமிட்டியவனை மூக்கை சுழித்து முறைக்க “விதவிதமா எக்ஸ்ப்ரசன் காமிச்சு என் மூடை மாத்திடாதே… போகலாம் வா…” அவள் தோளில் கை போட்டபடி கதவை திறந்தான். 


வேகமாய் அவன் கையை விலக்கி ட்ராலி சூட்கேஸை இழுத்தபடி அவள் பின்தொடர பிடரி முடியை கோதியபடியே முன்னே நடந்தான் தாரணி. ஹாலில் லக்கேஜுடன் தயாராக இருந்தனர் முகிலனும் மீராவும்.


“மீரா… ரொம்ப பசியா இருக்குடா… என்ன பண்ணி வச்சிருக்க…? அஞ்சே நிமிஷம்… சீக்கிரம் சாப்பிட்ருவோம்…” கைச்சட்டையை மடக்கியபடியே அவர்கள் முகம் பார்க்காது வேகமாய் உணவு மேஜையை நோக்கி நகர்ந்தான் தரணி. உண்மையில் அவனுக்குமே அவர்களின் முகத்தை நேருக்கு நேர் பார்க்க வெட்கமாக இருந்தது.


“நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா…?” தனக்கும் தன்னவளுக்கும் உணவு பரிமாறியபடியே கேட்க பூச்செண்டும் வந்து அருகில் அமர்ந்து கொண்டாள்.


“நாங்க சாப்பிட்டோம்ணா… அவசரப்படாம சாப்பிடுங்க… டைம் இருக்கு…” என்றபடியே இருவருக்கும் பரிமாறத் தொடங்கினாள்.


“உன் புருஷன் குதிச்சானே…” உணவை வாயில் போட்டபடியே முகிலனை திரும்பிப் பார்த்தான். இடுப்பில் கை வைத்தபடி அவனும் இவர்களைத்தான் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான்.


“கண்ணை வேற பக்கம் திருப்புடா… வயிறு வலி வந்திடும்…” பொய்யாய் முறைத்தபடி கூற உஃப் என்று உதடு குவித்து மூச்சுவிட்டு சோபாவில் அமர்ந்து கொண்டான் முகிலன்.


வெளியில் முறைப்புடன் இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் அத்தனை மகிழ்ச்சி முகிலனுக்கு. தனக்காக தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்ட நண்பன்… அவன் வாழ்க்கை சீரடைய வேண்டும் என்று இவன் கவலைப்படாத நாள் இல்லை… இருவருக்கும் புரிதல் வராது போய்விடுமோ…? பூச்செண்டிடம் மாற்றம் ஏற்பட இன்னும் நிறைய நாட்கள் ஆகி விடுமோ…? அதற்குள் அவர்களுக்குள் நிறைய விரிசலும் பிளவும் வந்துவிடுமோ என்று குழப்ப மனநிலையிலேயே தான் இருந்தான் முகிலன். தரணி தன் காதலை வெளிப்படுத்தி பூச்செண்டும் நேற்றைய தினம் பட்டவர்த்தனமாய் தன் காதலை வெளிப்படுத்தி இருக்க அதனை தொடர்ந்து அவர்களது இல்வாழ்க்கையில் இன்பமாய் ஆரம்பமாகிவிட்டதில் மனதில் இருந்த பாரம் மொத்தமாய் வடிந்து நிம்மதியும் சந்தோஷமாக உணராந்தான். இருவரின் முகத்தில் தெரிந்த பளபளப்பும் மகிழ்ச்சியும் அவனை கூடுதலாய் பூரிப்படையச் செய்திருந்தது.


மீராவிற்கு மூன்றாம் மாதம் தொடங்கி இருந்ததால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே மதுரைக்கு கிளம்பி இருந்தனர். பிளைட்டில் ஒன்றரை மணி நேர பயணம்தான்… பயம் ஒன்றும் இல்லை என்று கூறி கூடுதலாய் ஒரு மருந்தும் கொடுத்து இருந்தார் மருத்துவர். ஆயிற்று… நால்வரும் கிளம்பி மதுரை வந்து இறங்கி இருந்தனர். அங்கிருந்து கால் டாக்ஸி மூலம் தவசிபுரம் வந்து சேர்ந்தனர்… ஊருக்குள் நுழையும்போதே தரணிக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு. முதன்முறை வந்தபோதே அத்தனை ரசனையும் மகிழ்ச்சியுமாய் வந்தான். 


தன் காதலும் எதிர்காலமும் அவனுக்காக அங்குதான் காத்திருக்கிறது என்று அப்போது தெரியாது… இன்று அந்த ஊரின் மருமகனாக தன்னவளின் காதலையும் முழுதாய் பெற்று மறுநாள் நடக்கவிருக்கும் தங்களது வரவேற்பில் கலந்து கொள்ள முழு மகிழ்ச்சியுடன் ஊருக்குள் நுழைந்திருந்தான். மீராவின் நிலையம் கிட்டத்தட்ட தரணி போன்று தான். ஊரின் அமைப்பும் அழகும் அவளை வெகுவாக கட்டிப்போட்டது. இனி இவளது அடையாளம் இதுதானே… என்னதான் வெளியூரில் வேலையில் இருந்தாலும் உரிமைப்பட்ட ஊர் இனி தவசிபுரம்தானே.


“ஐ அம் சோ எக்சைட்டட் முகில்…” சிலிர்ப்புடன் கூறி தன்னவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


வீட்டின் முன் வாசலில் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் வரவேற்பு நிகழ்ச்சி அல்லவா… முகிலனின் குளறுபடியால் தரணி பூச்செண்டினா மாப்பிள்ளையாகிப் போனதில் ஊருக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டிருந்தது. கிராமத்து ஜனங்களுக்கு விதவிதமா யோசித்து பேச தெரியாதா என்ன… ஊரின் பெரியதனக்காரர்கள் என்பதால் சற்று அடக்கி வாசித்தனர். அனைவரின் வாயை மூடவே வரவேற்பினை மாணிக்கவேலுவும் மணிவாசகமும் இணைந்து வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்திருந்தனர்.


பெரிய வீட்டைச் சுற்றிலும் தோரணங்களாக தொங்கவிடப்பட்ட வண்ண விளக்குகளுடன் வீட்டிற்கு முன் அலங்கார விளக்குகளும் மின்னிக் கொண்டிருந்தன. புதுமணத் தம்பதியர் நால்வரும் ஊருக்குள் நுழையும்போது அந்தி சாய்ந்து மெலிதாக இருட்ட ஆரம்பித்திருந்தது. காரில் இருந்து இறங்கியவர்களை வரவேற்க குடும்பத்தினரை தாண்டி ஊரின் பாதி கூட்டம் அங்குதான் இருந்தது. முகிலனின் மனைவியை பார்க்க அத்தனை ஆர்வம்… குறும்புப் பெண் பூச்செண்டின் மாற்றத்தை பார்க்கவும் ஆசைதான்… தரணியின் பெற்றோர் முத்துராமனும் அனுசுயாவும் அன்று மதியமே அங்கு வந்து சேர்ந்திருந்தனர்… இரண்டு ஜோடிகளுக்கும் ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றனர்.


வீட்டின் பிரம்மாண்டத்திலும் அழகிலும் சொக்கிப் போனாள் மீரா. பழைய செட்டிநாடு வீடுகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறாள்… வீட்டிற்குள் நுழைந்து அந்த அமைப்பை நேரில் பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சி… பூச்செண்டின் தோழிகளும் சுற்றங்களும் ஆளாளுக்கு அவளை மொய்த்துக்கொள்ள மீராவை உள்ளூர் மக்களும் மற்ற சொந்தங்களும் வளைத்துக் கொண்டனர். ஆண்கள் இருவரும் பேண்டில் கைவிட்டபடி சற்று விலகி நின்று புன்னகையுடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


“பூச்செண்டு… உன் கல்யாணத்துக்கு என் அம்மா என்னை கூட்டிட்டு வரல… உன் வீட்டுக்காரரை இப்போதான் பார்க்கிறேன்.. ரொம்ப அழகா இருக்காருடி... நீ குடுத்து வச்சவதேன்… ஹுய்… இப்படி பொசுக்குன்டு தாலிய புடுங்கிக் கட்ட உன் புருஷன் மாதிரி ஒருத்தன் எனக்கெல்லாம் வந்து கிடைச்சா நல்லாத்தேன் இருக்கும்… நடக்கணுமே…” பெருமூச்சுடன் அங்கலாய்பாய் ஒருத்தி கூற


“எதுக்கு புள்ள வெசனப்படுற…? நீ இம்முன்டு ஒரு வார்த்தை சொல்லு… நானும் பொசுக்குன்டு உன் கழுத்துல தாலிய கட்டி புரட்சி பண்ணிப்புடறேன்… என்ன பண்ணட்டுமா…?” மீசையை முறுக்கியபடி அந்த பெண்ணிடம் புருவத்தை ஏற்றி இறக்கினான் பனங்கருப்பட்டி நிறத்தில் பளபளப்பாய் சுற்றும் அந்த ஊர் கதாநாயகன் பரமசிவன்.


“ம்க்கும்… கருவாயனுக்கு ஆசைய பாரு…” முகத்தை சுளித்தால் அவள்.


“ஏன்டி… நீ மட்டும் என்ன அத்திப்பழ நெறத்துலயா இருக்க… காபிக்கொட்டை நெறம்தானடி… உனக்கு நானே அதிகம்… கருப்பா இருந்தாலும் நான் எம்புட்டு களையா இருக்கேன்… போடி சப்பைமூக்கி… நீ சரின்டு சொன்னாலும் உன்னை நான் கட்டிக்க மாட்டேன்… வருவா வருவா… எனக்குன்டு ஒரு தேவத… நகரு… நகரு…” லுங்கியை உதறி மீண்டும் மடித்து கட்டியப்படியே நெஞ்சை நிமிர்த்தி நடந்தபடி முகிலனிடம் சென்றான் பரமசிவன்.


“இந்த கருவாயனுக்கு திமிரு ஜாஸ்தி ஆயிடுச்சு…” பூச்செண்டிடம் மீண்டும் ஒட்டிக்கொண்டாள் அவள்.


சலசலப்பும் கலகலப்புஅ ஓய்ந்து கூட்டம் தணிந்து இரவு உணவை மொத்தக் குடும்பமும் ஒன்றாய் அமர்ந்து சிரித்தபடி உண்டு முடித்து அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்குள் அனைவரும் நுழைந்து கொண்டனர். 


“யாத்தே… மணி… மல்லி… ஏய் செம்பகம்… இந்தக் கொடுமைய கேட்டீகளா…?” நடுக்கூடத்தில் இருந்து பாட்டியின் ஓங்கிய குரல் சத்தமாய் ஒலித்தது.


Leave a comment


Comments


Related Post