இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--8 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 24-04-2024

Total Views: 31036

இதயம் 8

     “டேய் நான் சொன்னதை அப்படியே போய் சொன்னியா என்ன?“ பிரியாவுடன் வந்த மினியைப் பார்த்துக்கொண்டே கேட்டான் சாணக்கியன்.

     “இல்லடா அந்தப் பொண்ணு எதுக்கு வந்து இருக்குன்னு எனக்குத் தெரியாது“ நண்பனிடம் சொன்னாலும் சந்தர்ப்பம் கிடைத்த உடன் நடுவீட்டில் வந்து நிற்கும் மினியை சற்றே சந்தேகக் கண்கொண்டு பார்த்தான் எழில். மினியின் நல்ல நேரம் ஜீவன் இந்த ஏரியாவுக்கு வந்து போன நாள் முதல் தான் மினியும் இங்கே சுற்றிக்கொண்டிருக்கிறாள் என்பதை எழில் ஊன்றிக் கவனித்து இருக்கவில்லை.

     “என்ன பாஸ் நீங்க, செஸ் என்ன சாதாரண விளையாட்டா. இங்க வைச்சு நீங்க அவளுக்குச் சொல்லிக்கொடுக்கப் போறது வெறுமென யூகங்கள் மட்டும் தானே. அதைப் எப்படிப் பயன்படுத்துவது என்று வீட்டில் போய் தானே அவ ப்ராக்டிஸ் பண்ணனும். 

     நீங்க இரண்டு பேரும் விளையாடுவதைப் பார்த்து நானும் கொஞ்சம் கத்துக்கிட்டேன் என்றால், அவளுக்கு வீட்டில் கொஞ்சம் கூடுதல் வசதியா இருக்குமே“ ராகம் பாடினாள் மினி. பல அகாடெமியில் இது வழக்கம் தான் என்பதால் சாணக்கியன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

     “ஆனா, உனக்குத் தான்“ என்று எதையோ சொல்ல வந்த பிரியாவின் கரத்தில் கிள்ளி அவளைப் பேசவிடாமல் செய்து, சூழ்நிலையை சகஜமாக்கினாள் மினி.

     அந்த பெரிய தோட்டத்தின் மேற்கு பகுதியில் நான்கு பேர் அமரக்கூடிய வகையில் இருந்த நிழற்குடையின் அடியில் இவர்கள் மூவரும் அமர்ந்திருக்க சதுரங்கப் பலகையோடு வந்தான் எழில்.

     “சதுரங்கம் கத்துக்கிட்டு என்ன பாப்பா செய்யப் போற“ தன்னிடம் பயிற்சிக்கு வரும் ஒவ்வொருவரிடம் கேட்கும் முதல் கேள்வியை பிரியாவிடமும் கேட்டான்.

     “உலக செஸ் சேம்பியன்ஸிப் பட்டம் வாங்கனும்“ மற்றவர்களை விட வித்தியாசமாக, அதே சமயம் உறுதியாக மொழிந்தவளை உற்றுப் பார்த்தவன் கண்களில் சற்றே ஒளி வந்திருந்ததைக் கவனித்தாள் மினி.

     “ஆசை, இலட்சியம் எல்லோருக்கும் இருக்கக்கூடியது தான். ஆனா உன்னோட வயதில் உனக்கான கடமைகள் என்று பல இருக்கு. சொல்லப்போனால் இப்ப நீ முன்னுரிமை கொடுத்து செய்யும் செயல்கள் தான் உன்னோட வளமான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்“ அவள் மனதில் சதுரங்கத்தின் மீதான ஆவல் எந்தளவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கேட்டான் சாணக்கியன்.

     “எனக்கு படிப்பு கொஞ்சம் நல்லாவே வரும். விளையாட்டை முதல் பிரையாரிட்டியா நினைச்சாலும் அதுக்காக படிப்பை விட்டுட மாட்டேன்.  என்னைப் பத்தி என் அப்பா அம்மாவுக்கு பெரிதான கனவுகள் எல்லாம் இல்லை. உனக்கு எது பிடிச்சிருக்கோ அதைப் பண்ணு. அது சரியாக இருந்தால் எங்கள் ஆதரவு அதிகமா இருக்கும் என்று வாக்குக் கொடுத்திருக்காங்க. சோ அவங்க பக்கம் இருந்தும் எந்தவிதத்திலும் பிரச்சனை வராது. என் கவனம் முழுக்க இலட்சியத்தில் மட்டும் தான் இருக்கு“ சூழ்நிலையைத் தெளிவாக விளக்கினாள் பிரியா. 

     “உலக நாயகன், நாயகி பட்டம் வாங்குவது ஒன்றும் அவ்வளவு சுலபமானது இல்லை. எந்நேரமும் சதுரங்கத்தைப் பற்றி மட்டுமே யோசிக்கணும். உன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அது சதுரங்கத்துக்குப் பின்னால் தான் இருக்கணும். 

     உன்னோட இலாபம், நஷ்டம், சந்தோஷம், துக்கம், முக்கியமா காதல் இது எதுவும் உன் ஆட்டத்திறனை பாதிக்காம பார்த்துக்கணும், உன்னால் முடியுமா?“ ஒருவித எதிர்பார்ப்புடன் கேட்டான்.

     “எதுவுமே சுலபமில்லை ஆனால் எல்லாமே சாத்தியம் தானே சார்“ தேர்ந்தெடுத்துக் கோர்த்த வார்த்தைகளின் தொகுப்பை கொண்டு உருவாக்கிய ஒற்றை வாக்கியத்தில் தன் மன எண்ணத்தை வெளிப்படுத்தினாள் பிரியா. 

     “உங்களுக்கு காந்தியும் மாம்பழமும் கதை தெரியுமா சார்“ சம்பந்தம் இல்லாமல் நுழைந்த மினியை குழப்பத்துடன் பார்த்தனர் பிரியா சாணக்கியன் இருவரும்.

     அதைக் கவனித்தும் கவனியாதவள் போல், “அந்தக் கதையோட மையக்கருத்து, நாம ஒரு அறிவுரை சொல்றோம் என்றால் முதலில் நாம அதை பாலோ பண்ணனும். சதுரங்கத்தை உயிரா நினைச்ச நீங்க, அதைத் தவிர்த்து உங்க கவலைகளை முதன்மையா வைத்ததால் தானே அடுத்தடுத்த உலக செஸ் சேம்பியன் பட்டத்திற்கு தயார் ஆவதை விடுத்து, விளையாட்டை விட்டு மொத்தமா விலகி வந்து, உங்களால் சாதிக்க முடியாததை  உங்க மாணவர்களைக் கொண்டு சாதிக்க நினைக்கிறீங்க“ என்க, “என் மாணவர்கள் ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி தான்“ மினியின் கண்களைப் பார்த்துச் சொன்னான் சாணக்கியன். அவனுடைய அழுத்தம் அங்கே அதிகரித்திருந்தது.

     “சரி தான், உங்க மாணவர்கள் ஜெயித்தால் நீங்க ஜெயித்த மாதிரி தான்“ அந்த மாதிரியில் அழுத்தம் கொடுத்து சொன்னவள் தொடர்ந்தாள்.

     “நிழலுக்கும் நிஜத்துக்கும் இருக்கும் வித்தியாசம் புரியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறீங்களா? 

     உலகப்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றதைத் தாங்கிக்க முடியாத அதீத வருத்தத்தில் தான் நீங்க இப்படி அஞ்ஞாதவாசம் இருக்கிறதா எல்லோரும் பேசிக்கிறாங்க.

     உங்க வாழ்க்கையிலே இத்தனை மர்மங்கள் இருக்க, எங்க பிரியாவுக்கு இப்படி ஒரு அறிவுரையை நீங்க சொல்லலாமா?“ மிக மிருதுவாகக் கேட்டாள் மினி.

     சாணக்கியனுக்கு யாரோ அவனை கன்னத்தில் ஓங்கி அடித்தது போல் இருந்தது. அந்த உணர்வை ஏற்றுக்கொள்ள முடியாமல், “ஹே யார் நீ, என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும் என்று பேசுற. வந்த இடத்தில் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருந்தால் எல்லோருக்கும் நல்லது. இல்லாமப் போனால் பெரிய விளைவுகளைச் சந்திக்க  நேரிடும்“ நேரடியாக மிரட்டினான்.  

     “போங்க சார் இதைவிட எங்க அப்பாவோட குரல் இன்னும் அதிகமான டெசிபலில் இருக்கும். இதுக்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை“ என்று மனதோடு நினைத்தவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

     பிரியாவுக்கு மினி கேட்டது சரி என்று தோன்றியதால் இந்த விஷயத்தில் அவள் எதுவும் சொல்லவில்லை. அது சாணக்கியனுக்கும் புரிந்ததோ என்னவோ, “ஒருத்தர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால், ஒன்னு அந்தக் கருத்தால் அவர் நிறைய சம்பாதித்து இருக்கணும். தன்னைப் போல் எதிரே இருப்பவரும் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்கிற உத்தேசத்தில் அதைச் சொல்லி இருக்கணும். 

     ஒருவேளை அந்த மனிதர் தான் மேற்க்கோள் காட்டிய விஷயத்தால் அதிகம் இழந்திருந்தார் என்றால், தன் எதிரே இருக்கும் நபர் தன்னைப் போல் அல்லாமல் சுதாரிப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் சொல்லி இருக்கவேண்டும்.

     இங்கே ஜெயிச்சவங்களுக்கு மட்டும் இல்லை, தோற்றவங்களுக்குக் கூட கருத்து சொல்ற உரிமை இருக்கு, தகுதியும் இருக்கு“ அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் சாணக்கியன்.  

      இம்முறை பிரியாவோடு சேர்த்து மினியும் அவன் கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் தலையாட்ட அவனே தொடர்ந்தான். “பொதுவா மாணவர்களோட திறமையைப் பொறுத்து தான் அவங்களுக்கான பயிற்சியை ஆரம்பிக்கணும் என்று சொல்லுவாங்க. ஆனால் நான் கொஞ்சம் வித்தியாசமா அவங்களோட இலட்சியம் மற்றும் மனநிலைக்கு ஏற்ப தான் கோச்சிங்கை ஆரம்பிப்பேன். ஆர்வம் இருந்தா திறமை தன்னால் வந்திடும் என்பது என் நம்பிக்கை.

     என்கிட்ட வரும் பெரும்பாலான மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் ஜெயிப்பதற்காகத் தான் வருவாங்க. அதற்கு ஏற்ப அவங்களுக்கான பயிற்சி நேரம் இருக்கும். ஆனால் உன்னோட இலட்சியம் பெரிது என்பதால், உன் அளவு அஸ் எ கோச் நானும் ஓடனும். 

     நீ என்னோட நிறைய நேரம் செலவு பண்ற மாதிரி வரும். இப்படியான வேளையில் எந்தக் காரணத்துக்காகவும் உன் கவனம் திசை மாறக்கூடாது“ நேரடியாகச் சொல்ல முடியாமல் சாணக்கியன் சுற்றி வளைக்க, “சொல்லிக்கொடுக்கும் குரு பெற்றெடுத்த அப்பாவுக்குச் சமம் என்று எனக்கும் தெரியும்“ என்று சொல்லி அங்கிருந்த அனைவரின் மனதிலும் பாலை வார்த்தாள் பிரியா. 

     “என்கிட்ட கூட இந்த வார்த்தைகளைச் சொல்லலாம். நான் கூட உங்ககிட்ட கத்துக்க தான் வந்து இருக்கேன்“ நடுவில் வந்த மினியைப் பார்த்து முறைத்து வைத்தான் சாணக்கியன். 

     “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த முறை முறைக்கிறார். அவர் என்ன எனக்கு முறைப்பையனா?“ உள்ளுக்குள் கடுகடுத்தாலும் வெளியே சிரித்து வைத்தாள் மினி.

     “அம்மாடி, வாய் எல்லாம் நல்லா தான் பேசுற. விளையாட்டைக் கத்துக்க ஆசைப்பட்ட தானே, முதலில் செஸ் போர்டில் தப்பு இல்லாமல் இந்தக் காய்களை அடுக்கி வை பார்க்கலாம்“ சற்றே நக்கலாகக் சொன்னான் எழில்.

     “அத்தான், அக்கா வந்து“ என்று மினியைப் பற்றி சொல்ல வந்த பிரியாவை இப்பொழுதும் பேசவிடாமல் செய்தாள் மினி. அவளுக்கு இந்த இரு ஆண்களுடன் விளையாடுவது பிடித்திருந்தது. சின்னப் புன்னகையுடன் காய்களை அடுக்க ஆரம்பித்தாள். 

     அவள் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்கள் ஒன்றோடு ஒன்று மோதி இனிய ஓசையை எழுப்ப தன்னால் சாணக்கியனின் கண்கள் அவள் மென்கரங்களை நோக்கிச் சென்றது.

     மினியின் சிந்தை முழுவதையும் முந்தைய நாள் அவள் பார்த்த சாணக்கியனின் ஆட்டக் காணொளி நிறைத்திருக்க, அவள் கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாலும் கைகள் தன்போக்கிற்கு பலநாள் கடமையை சரியாகச் செய்து கொண்டிருந்தது. அதைக் கவனித்த சாணக்கியனுக்கு, மினி அவள் காட்டிக்கொள்ளும் அளவு ஒன்றும் தெரியாத அப்பாவி இல்லை என்று நன்றாகவே புரிந்தது. 

     பிரியாவின் பக்கம் காய்களை அடுக்கி முடித்த மினி சாணக்கியன் பக்கம் வர, வேண்டாம் என்று கை நீட்டித் தடுத்தவன் தன் காய்களை அடுக்கிக்கொண்டே தன் பயிற்சியை ஆரம்பித்தான்.  

     “இந்தியாவில் இப்ப வரை 84 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகி இருக்காங்க. அவர்களில் 30 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை சதுரங்கத்தில் கொடி கட்டிப் பறப்பது தமிழ்நாடு தான். 

     நம்ம தமிழர்கள் ஏன் பல விஷயங்களில் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தனித்தன்மையோட இருக்காங்க தெரியுமா? நம்ம ஆளுங்ககிட்ட நெஞ்சுரமும், வைராக்கியமும் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். அது தான் இந்த விளையாட்டோட அடிப்படை“ என்க, பிரம்மிப்போடு ஏற்றுக்கொண்டாள் பிரியா.

     வெள்ளைக் காய்கள் பிரியா பக்கம் இருந்ததால் முதல் நகர்த்துதல் அவளுக்கு உரித்தானதாக அமைந்தது. பொதுவில்   பலர் தேர்ந்தெடுக்கும் துவக்க காய் நகர்த்தல் என்பது ராணிக்கு நேராக உள்ள சிப்பாயை D4 கட்டத்திற்கு நகர்த்துவது இல்லை ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை E4 கட்டத்திற்கு நகர்த்துவதாகத் தான் இருக்கும். 

     ஆனால் பிரியா சற்றே வித்தியாசமாக Zukertort opening முறையைப் பயன்படுத்தி Nf3 நகர்வைச் சாத்தியப்படுத்தினாள். அப்பொழுது ஆரம்பித்து எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்னும் விதத்தில் தான் அவளுடைய அடுத்தடுத்த நகர்வுகளும் அமைந்தது.

     மந்திரியை வைத்து தன் ராணிக்கு அவள் வைத்த எளிமையான Elephant trap இல் ஆரம்பித்து, சற்றே கடினமான Siberian Trap ஐ கொண்டு தன் ராஜாவைக் கைப்பற்ற அவள் எடுத்த அதிரடி நடவடிக்கை வரை அனைத்தையும் பார்த்து வியக்கவே செய்தான் சாணக்கியன். 

     பிரியாவுக்கு பல ஆட்ட நுணுக்கங்கள் அத்துப்படி என்பது உண்மை தான் என்றாலும், எதிரே இருக்கும் சாணக்கியனுக்கு எல்லா யூகங்களையும் உடைக்கும் வித்தை தெரிந்திருந்ததால், என்ன முயற்சி செய்தும் அவளால் சாணக்கியனின் ராஜாவைக் கைப்பற்ற முடியவில்லை. இரண்டு திறமையான வீரர்கள் விளையாடும் போது அங்கே சாத்தியமானது என்னவோ டிரா மட்டும் தான். 

     “ரொம்ப நல்லா விளையாடின பிரியா. எந்தவித கூடுதல் பயிற்சியும் இல்லாமல் என்னை மாதிரி அதிக அனுபவம் உள்ள சதுரங்க ஆட்டக்காரன் உடன் மோதி ஜெயிப்பது என்பது சாதாரண காரியம் இல்லை“ மனதாரப் பாராட்டினான்.

     “ஆனா மாஸ்டர் போட்டி டிரா தானே ஆச்சு“ வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் சின்னப்பெண் அவள் குரலில் நன்றாகவே தெரிந்தது.

     “என்கூட விளையாடி டிரா செய்வது என்பது வெற்றி பெற்றதற்குச் சமம் தான். இன்னைக்கு இது போதும். ரொம்ப நாள் கழிச்சு வெற்றிக்கனி உனக்குக் கிடைக்காமல் போய் இருக்கு போல. உன் முகமே சொல்லுது உன் மனவருத்தத்தை. இதுக்கு அப்புறம் விளையாடினால் உன்னால் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாது. என்கிட்ட இருந்து நீ கத்துக்கப் போற முதல் பாடம் தோல்வியை எப்படி ஏற்றுக்கொள்வது என்பது தான்.

     வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்பது வெறும் வாய் வார்த்தையில் மட்டும் இருக்கக்கூடாது. அதை நடைமுறையில் செயல்படுத்தணும். தோல்வியால் உடையாத உள்ளம் தான் வெற்றியில் தலைக்கனத்தை சுமக்காது“ என்றான்.

     பிரியா அமைதியாகவே இருக்க, “பயிற்சியோட ஆரம்ப காலகட்டத்தில் தேய்மானம் இல்லாத உன்னோட முழு ஈடுபாடு எனக்கு ரொம்ப முக்கியம். அப்ப தான் உன்னைப் புரிஞ்சுக்கிட்டு, உன் பலம் பலவீனங்களுக்கு ஏற்ற மாதிரி நான் உன்னை தயார் படுத்த முடியும். அதனால் இப்ப போ. நாளை இதே நேரத்துக்கு வா“ என்றுவிட்டு தன் ஊன்றுகோலை எடுத்தான். 

     “எல்லாம் நல்லா தான் இருக்கு. என்ன ஒன்னு தலைகனம் தான் கொஞ்சம் தூக்கலா இருக்கு. அதைக் கொஞ்சம் குறைச்சுக்கிட்டா நல்லா இருக்கும்“ போறபோக்கில் சொல்லிவிட்டுச் சென்றாள் மினி.

     “என்னடா நடக்குது இங்க. உன்னை முதன் முதலில் பார்க்கிற மாதிரியா அந்தப் பொண்ணு நடந்துக்கிறா. ஏதோ உனக்கும் அவளுக்கும் பல காலம் சம்பந்தம் இருக்கிற மாதிரி அவ்ளோ உரிமையாப் பேசுறா“ எழில் நண்பனைப் பார்த்துக் கேட்க, “சின்னப்பொண்ணு, ஏதோ விவரம் புரியாம பேசுறா. நீ சும்மா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாமல் இரு“ நண்பனை அடக்கிவிட்டு தன் போக்கில் முன்னால் நடந்தான் சாணக்கியன்.

 


Leave a comment


Comments


Related Post