இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயம் கேட்குமே அனைத்து பாகங்கள் படிக்க
By Kadharasigai Published on 24-04-2024

Total Views: 18164

இதயம் - 1

மனிதர்களின் மூளையின் எண்ணத்தையும் யோசனையையும் தாண்டி இதயம் நம் செயலுக்கான பங்கை வழிவகுக்கும். இருவேறுவிதமான யோசனைகளில் நம் மூளை செயல்படுகின்ற நேரத்தில் ஒரே ஒரு எண்ணத்தின் பின்னால் நம் இதயம் நிம்மதியடைந்து தீர்வை கூறும். அப்படிப்பட்ட இதயம் நம்மிடம் பல எதிர்பார்ப்புகளையும் பல ஆசைகளையும் முன் வைக்கும். சிலதை நம் மூளை செய்ய விடாமல் தடுத்து விடும் சிலது காலத்தினால் நிறைவேறாமலே சென்று விடும். அப்படியே இதயம் கேட்கின்ற அனைத்தும் கிடைத்து விட்டால் மூளைக்கான வேலையே இருக்காதே. 

இங்கோ நாயகனின் இதயம் ஒன்றை தேட அவனின் மூளை மற்றொன்றை தேட நாயகியோ நாயகனின் இதயத்தை தேட என்று வெவ்வேறு எண்ணங்களில் ஓட போகின்றனர். யாருக்குத் தெரியும்?, யார் இதயம் கேட்பவை கிடைக்க போகிறது என்று பார்ப்போம். 

சென்னை மாநகரத்தின் ஓர் பகுதி. அருகருகே ஒட்டி அமைக்கப்படாமல் சிறிது இடைவெளி விட்டு அருகருகே கட்டப்பட்டிருந்த தனிதனி வீடுகள். முன்னால் ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நிறுத்தும் அளவிற்கான இடம். பக்கவாட்டில் மிச்சமிருந்த இடங்களில் பூச்செடிகள் அமைக்கப்பட்டு பூக்களும் பூத்துக் குலுங்கியது. உள்ளே ஒரு ஹால் ஓர் சமையலறை ஒரு பூஜை அறை ஒரு படுக்கையறை கொண்ட அமைப்பும் அதற்குள்ளே படிகள் அமைக்கப்பட்டு மேல்தளத்தில் நான்கு படுக்கையறை கொண்ட அமைப்பும் கொண்ட ஓர் நடுதரமும் அல்லாத பணபலம் நிறைந்ததாகவும் அல்லாத சிறிது வசதி நிறைந்த வீடு. 

அப்பொழுது தான் குளித்து விட்டு தலைமுடியை அள்ளி கொண்டையிட்டவாறே புடவையில் மகாலட்சுமியின் அம்சத்தில் நடந்து வந்தார் ஐம்பதை தாண்டிய மல்லிகா. அவ்வீட்டின் குடும்பத்தலைவி. பார்ப்பவர்கள் அவர்க்கு ஐம்பது என்று கூறினால் நம்பக்கூட மாட்டார்கள். மல்லிகா நாற்பதை கூட நெருங்காதவர் போல் இளமையான தோற்றத்துடன் காண்பவர். தன் குடும்பத்திற்காக வேலையை விட்டு வீட்டிலே முழு குடும்பத்தலைவியாக பொறுப்பேற்று பிள்ளைகளை வளர்ப்பதில் முழு கவனம் செலுத்தினார். 

சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்க மல்லிகா வேகமாக உள்ளேச் சென்று பார்த்தார். உள்ளே அவரின் செல்ல புதல்வன் பரத் அனைவருக்கும் காலை உணவையும் மதிய உணவையும் சமைத்துக் கொண்டிருந்தான். "பரத் ... என்னடா நீ இதெல்லாம்" என்று மல்லிகா பேசி முடிக்கும் முன்பே "இதெல்லாம் நா செய்ய மாட்டனா ... வேலைக்கு போற புள்ளை இதெல்லாம் செஞ்சிட்டு போய் வேலை எப்படி செய்வ டையர்ட்டா இருக்காதா ... இதான்னம்மா கேக்க போற ... சும்மா அதையே கேட்டு திரும்ப திரும்ப என் வாயால உனக்கு அந்த பதில கேக்கனும் அப்படி தான" என்று கேட்டான். மல்லிகா தன் மகனின் கிண்டலான பேச்சில் அவனை லேசாக முறைக்க பரத் "பரவால்ல நீ என் பதிலை கேளு ... உனக்காக நா செய்யாம வேற யார்ம்மா செய்வா ... எனக்கு தங்கச்சின்னு ஒன்னு படிக்கிறன்னு வீணா காச மைதா மாவுல முக்கி எடுக்குதே அதுவா செய்யும்" என்று கேட்டு ஒரே நேரத்தில் தன் தாயின் முறைப்பையும் தங்கை பிரீத்தியின் முறைப்பையும் பெற்றுக் கொண்டான். 

"டேய்" என்று அன்னையும் மகளும் ஒரே குரலில் பரத்தை அதட்ட அவனோ கையை மேலே உயர்த்தி "சர்ரன்டர் ... நா குளிக்க போறன் வழி வழி வழி" என்று கத்திக் கொண்டு வேகமாக சமையலறையில் இருந்து வெளியேறி விட்டான். இல்லையேல் அன்னை ஒரு புறமும் தங்கை மறுபுறமும் அவனின் தலையை வீங்க வைத்து விடுவர். "பாரும்மா சும்மா சும்மா இரண்டு மாடுங்களும் என்னை மைதா மாவு மைதா மாவுன்னு சொல்லி கிண்டல் பன்றாங்க" என்று பாவமாக சினுங்கியவாறே கூற மல்லிகா "சரி சரி .. அழுகாத நா உனக்கு பிடிச்ச மில்க் ஷேக் அடிச்சி கொடுக்கறன்" என்று செல்லம் கொஞ்சி மகளை சிரிக்க வைத்தார். அப்பொழுது தான் உறக்கத்தில் இருந்து விழித்து முகம் அலம்பிக் கொண்டு சமையலறைக்கு தண்ணீரைத் தேடி வந்த பொன்னுரங்கம் அக்குடும்பத் தலைவர் பிரீத்தியின் வெள்ளை பேஸ் மாஸ்க்கை பார்த்து பயத்தில் கத்தி விட்டார். அவர் கத்திய கத்தலில் அம்மா மகள் இருவரும் அதிர்ந்து கத்தி விட குளிக்கச் சென்ற பரத்தும் என்னவோ ஏதோ என்று பயந்து ஓடி வந்தான். 

"என்னம்மா என்னம்மா ஏன் கத்தறிங்க" என்று பரத் அவசரமாகவும் பதட்டமாகவும் கேட்க "இவர் தான்டா முதல்ல கத்தனாரு ... அதனால தான் நாங்க கத்தனோம்" என்று மல்லிகா தன் கணவனை மகனிடம் குற்றம் சாட்டினார். "ஏன்ப்பா" என்று பரத் சிறு சலிப்புடன் தன் தந்தையின் புறம் கழுத்தை திருப்பி கேட்டான். "இல்லைடா ... தூக்க கலக்கத்துல வெள்ளையா உன் தங்கச்சி முன்னால நிக்கவும் பயந்துட்டன்" என்று பொன்னுரங்கம் பதட்டத்தில் வேகமாக துடித்துக் கொண்டிருந்த இதயத்தை தடவிக் கொடுத்தவாறு கூறவும் பரத் சிரித்து விட பிரீத்தி தன் தந்தையை கொடூரமாக முறைத்தாள். 

'ஐய்யய்யோ உண்மைய சொல்லி மாட்டிகிட்டோமா' என்று நினைத்தவர் வேகமாக வெளியேறி விட பிரீத்தியின் முறைப்பு தற்பொழுது தன் அண்ணனின் மீது திரும்பியது. பரத் அங்கிருந்து ஓடியதும் அமைதியாக நின்றிருந்த தாயை பிரீத்தி பாவமாக பார்த்தாள். மல்லிகா தன் மகளின் தலையை கோதி விட்டு சமாதானமாக இரண்டு வார்த்தை கூறிய பின்பே பிரீத்தியின் மனம் ஆறுதலடைந்தது. 

இவ்வளவு கலவரத்திற்கு இடையிலும் பூகம்பமே வந்தால் கூட தெரியாத அளவிற்கு ஒரு மலை கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது. தன் தந்தையின் கத்தலில் உறக்கம் கலையவில்லை, தன் தங்கை மற்றும் அன்னையின் கத்தலில் உறக்கம் கலையவில்லை. ஆனால் அவனின் கைப்பேசியில் இருந்து வந்த மெசேஜ் டோனிற்கு அவனின் உறக்கம் கலைந்து வேகமாக போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தான். பதட்டமாக கைப்பேசியை அங்கும் இங்கும் திரும்பி தேடி அவசரமாக கைப்பேசியை எடுத்தவன் அதில் வந்திருந்த குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினான். கைப்பேசியை தூக்கி தூர வைத்தவன் தன் உடற்பயிற்சியால் முறுக்கேறி இரும்பு போல் வழுவுடன் கட்டுகட்டாய் வீங்கி கிடந்த தன் கட்டுடல் கை இரண்டையும் தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தவாறு எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான். 

அவ்வீட்டில் அவன் இருக்கும் அறை மட்டும் சற்று வித்தியாசமானது. அவன் அறையில் இருந்து முன்னால் இருக்கும் முற்றத்திற்குச் செல்ல ஒரு கதவிருக்கும். நேராக படியேறி மேலே வரும் வழியில் முற்றத்திற்கு மற்றொரு வழி இருக்கும். குளியலறையில் இருந்து பல் தேய்த்தவாறே முற்றத்திற்கு வந்தவன் அதன் தடுப்பில் தன் ஒரு கையை ஊன்றி நின்று வெளியில் வேடிக்கை பார்த்தவாறே பல் துலக்கினான். 

அவனுக்கு நேரெதிரில் இருந்த வீட்டு மொட்டை மாடியில் இருந்து ஒருவள் அவனை அங்கம் அங்கமாக ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் தன் ஒரு காலை மடக்கி ஒர் கையால் தன் உடல் எடையை தாங்கி மற்றொரு கையால் மீசையில் நுரை ஒட்டாமல் அவன் பல் துலக்கிக் கொண்டிருக்கும் அழகை அவள் கண்ணிமைக்காமல் பார்த்தாள். காலை தென்றல் அமைதியாக படர்ந்திருந்த அவன் தலைமுடி மேல் காதல் கொண்டு ஊதி எடுத்துச் செல்ல விருப்பப்பட்டு முடியாததால் மீண்டும் மீண்டும் அவனையே சுற்றி சுற்றி வந்து அவன் கேசத்துடன் விளையாடியது. சூரியனோ அவன் கருவிழியில் காதல் கொண்டு தன் கதிர்களை அவன் கண்களில் ஊடுறுவி தன் காதலைக் கூற கட்டையிட்டது போலும். அவன் கண்களில் சூரிய கதிர்கள் மின்னி மிளிர்ந்தது. சூரியனின் காதலை ஏற்க மறுத்தவன் தன் கைகளால் கதிர்களின் தாக்கத்தை தடுத்து விட்டான். தன் காதல் மறுக்கப்பட்ட சோகத்தில் சூரியன் மரங்களுக்கிடையே மறைந்துக் கொள்ள அவனோ திரும்பி தன் அறைக்குள் நடையை கட்டினான். 

இவ்வளவு நேரமும் அவனை சைட் அடித்துக் கொண்டிருந்த காரிகை தன் தலைக்கு மேல் சூரியகதிரின் தாக்கம் அதிகமாக உணர்ந்தாள். பின்னே தன் காதலை அவள் எவ்வாறு சைட் அடிக்கலாம் என்ற கோபம் தான் சூரியனிற்கு. தன் மஞ்சள் முகத்தை நிமிர்த்தி தன் கருவிழியை உருட்டி அதை முறைத்தவள் சலிப்புடன் கீழேச் சென்றாள். அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் அலுவலகத்திற்கு தயார் ஆகி ஹாலில் நின்றிருந்தான். "வாசு வந்து சாப்பிடு" என்று மல்லிகா தன் இரண்டாம் மகன் சமைத்து வைத்திருந்த உணவை மேசை மேல் பரப்பி வைத்து விட்டு அதை உண்ண தன் மூத்த மகனை அழைத்தார். 

"இல்லைம்மா நா வெளில சாப்ட்டுக்றன் லேட் ஆச்சி" என்று அவசரமாக கூறியவன் தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான். "டேய் டேய் காபியாவது குடிச்சிட்டு போடா" என்று மல்லிகா கூறியதெல்லாம் அவன் காதுக்கு எட்டும் வரை அவன் அங்கு நிற்கவில்லை. வாசுதேவன் பொன்னுரங்கம் மற்றும் மல்லிகாவின் மூத்த புதல்வன். ஐடி கம்பனியில் டீம் லீட்டராக பணியாற்றிக் கொண்டிருக்கிறான். வாசு தன் வண்டி சாவியை ஆள்காட்டி விரலால் சுற்றியவாறே வெளியில் வந்து வண்டியில் ஸ்டைலாக ஏறி அமர்ந்து வண்டியை கிளப்ப போக பின்னால் பிரீத்தி ஏறி அமர்ந்துக் கொண்டாள். 

"ஹேய் நீ எங்க வர்ர இறங்கு எனக்கு வேலைக்கு டைம் ஆகுது" என்று வாசு வண்டியை ஆட்டி கூற பிரீத்தி வாசுவின் தோளை அழுத்தமாக பற்றிக் கொண்டு "அண்ணா அண்ணா ப்லீஸ் அண்ணா ... எனக்கும் பஸ்க்கு டைம் ஆச்சி ... பஸ் ஸ்டாப் வரைக்கும் தான ப்லீஸ் அண்ணா" என்று கெஞ்சலுடன் கூறினாள். "அதெல்லாம் முடியாது ... உன் சின்ன அண்ணன கூட்டிட்டு போக சொல்லு இப்ப இறங்கு" என்று வாசு கர்ரராக கூற பிரீத்தி "அம்மா" என்று கத்தினாள். 

"அம்மான்னா பயப்பட நா என்ன விரல் சூப்பர பையனா ... அடச்சீ இறங்கு" என்று வாசு கூற பிரீத்தி "அஞ்சனா" என்று ராகமாக இழுத்தாள். மல்லிகா பிரீத்தியின் குரல் கேட்டு வெளியில் வந்து நின்று "காலையிலே அண்ணனும் தங்கச்சியும் ஆரமிச்சிட்டிங்களா" என்று சலிப்புடன் கேட்டார். "அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா நாங்க கிளம்பறோம்" என்று வாசு அவசரமாக பிரீத்தியை பேச விடாமல் வண்டியை விரைவாக வீட்டை விட்டு வெளியேற்றினான். பிரீத்தி சிரித்தவாறே தன் அண்ணன் தோளை இறுக பற்றிக் கொண்டாள். 

வெளி கேட்டை தாண்டும் போது பிரீத்தியின் கண்கள் எதிர் வீட்டில் வாசுவை பார்க்க வேண்டும் என்பதற்காகவே முகத்தில் இருக்கும் அத்தனை அழகு சாதனத்தையும் நிறப்பிக் கொண்டு ஸ்டைலாக ஒற்றை காலில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்த ஹேமாவை பிரீத்தி கண்களாலே முறைத்து எச்சரித்து விட்டு சென்றாள். ஹேமாவும் பிரீத்தியும் ஒரே கல்லூரி தான். எதிர் எதிர் வீடு என்பதால் இருவரும் எதிர் எதிர் துருவமாக முறுக்கிக் கொண்டு நிற்கின்றனர். பிரீத்திக்கு ஹேமாவை தன் அண்ணனை கைக்குள் போட நினைப்பதால் பிடிப்பதில்லை. ஹேமாவிற்கு பிரீத்தி வாசுவை சைட் அடிப்பதை தடுப்பதால் பிடிக்காது. இருவரும் கல்லூரியில் கூட ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு தான் திரிவர். 

வாசு பிரீத்தியை பேருந்து நிலையத்தில் விட்டு வேகமாக கிளம்பினான். 'எதுக்கு தான் இவ்வளவு அவசரமா போறானோ' என்று தன் அண்ணனை மனதில் திட்டியவாறு பிரீத்தி நிற்க அவளை தொடர்ந்து ஹேமாவும் பிரீத்தியை முறைத்தவாறு வந்து பிரீத்தியை விட்டு பத்தடி தள்ளி நின்றாள். வாசு நேராக சென்று நின்றது தன் அலுவலக கேன்டீனில் தான். அங்கே பல பேர் அமர்ந்து உணவும் தேனீரும் அருந்திக் கொண்டிருந்தனர். தன் தேடலானவளை கண்டுக் கொண்டு விரிந்த புன்னகையுடன் அவளிடம் சென்றவன் உடனே தன் முகத்தை சோகமாக சுருக்கிக் கொண்டான். 


Leave a comment


Comments


Related Post