இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 25-04-2024

Total Views: 22994

செந்தூரா 20



செந்தூரனுக்கு தன் குடும்பத்தார் மீது கட்டுக்கடங்காத கோபம் பொங்கியது. யாரோ என்னவோ சொன்னார்கள் என்று அவனையும் தாராவையும் பிரிக்க பார்த்திருக்கிறார்கள். தெய்வாதீனமாக அவன் சரியான நேரத்திற்கு வந்திரா விட்டால் மொத்த குடும்பமும் சேர்ந்து அவனின் தாராவை அந்த சித்தார்த்தோடு அல்லவா அனுப்பி வைத்திருப்பார்கள்?


“நான் இங்கேயே இறங்கிக்கிறேன், எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்றான் செந்தூரன்.


“சரி மாப்பிள்ள, வீட்டில் இருக்கறவங்க கிட்ட எதுவும் சண்டை போட வேண்டாம், அவங்க ஏதோ பாசத்தில் இப்படி செய்துட்டாங்க” என்றார் சுபாஷ்.


செந்தூரன் பதில் எதுவும் சொல்லாமல் இறங்கி கொண்டான். சுபாஷ் காரை தன் கம்பெனி நோக்கி செலுத்தினார். அவர் வேலை முடித்து மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டை அடைந்திருந்தார். ஆனால் செந்தூரன் இன்னமே வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. தாராவிடம் கேட்டதற்கு விட்டேத்தியாக உதட்டை பிதுக்கி விட்டு சென்று விட்டாள்.


இரவு பத்து மணிக்கு வீடு வந்தவன், நேராக மாடி ஏறி தாராவின் அறைக்கு சென்றான். அவன் மேல் கோபம் இருந்தாலும் சாப்பிடாமல் அவன் வருகைக்காக காத்திருந்தவள், அலைந்து திரிந்ததால் சோர்ந்திருந்ததை போன்று இருந்த அவன் முகத்தை பார்த்து, என்ன என்பது போல புருவம் சுருக்கினாள்.


“நாம தங்கறதுக்கு கோயம்பத்தூரில் ஒரு வீட்டை பேசியிருக்கேன். ரிஜிஸ்ரேஷனுக்கு தாமதமாகும், ஆனாலும் வீட்டின் ஓனர், நாளைக்கே கூட குடியேறலாம்னு சொல்லிட்டாங்க. தேவையான பொருட்களை கவினிடம் வாங்கி வைக்க சொல்லியிருக்கேன், நாளைக் காலையிலே போய் பால் காய்ச்சனும். விடியற்காலையில் சென்னையிலிருந்து கோவைக்கு பிளைட் இருக்கு, அதில் போகலாம். நீ தேவையானதை எடுத்து பேக் செய்து வைச்சுக்கோ” என்று சொல்லி விட்டு அவள் பதிலுக்காக காத்திருக்காமல் குளியலறைக்கு சென்று விட்டான்.


பொள்ளாச்சியில் அத்தனை பெரிய வீடு இருக்கும் போது, திடீரென்று எதற்கு கோவையில் வீடு வாங்க வேண்டும்? அவன் அவளிடம் இதுபற்றி பேசாமல் அவனாக முடிவெடுத்தது கோபத்தை வரவழைத்தது. எல்லாம் இவன் இஷ்டம் தானா? என்று முறுக்கி கொண்டு அமர்ந்து விட்டாள்.


பிரஷ்ஷாகி வந்தவன், அவளை சாப்பிட அழைத்தான். அவள் வராமல் அப்படியே இருக்கவும் அவனே அவளது உடைமைகளை பேக் செய்ய ஆரம்பித்தான். இருவரும் கீழே சாப்பிட வராததால் சாரதா “தாரா” என்று சத்தமாக அழைத்தபடி வந்து அறை வாசலில் நின்றார்.


தாராவுக்கும் அன்னை மேல் கோபம் என்பதால் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். செந்தூரனுக்கும் அத்தை மேல் கோபம் அவனும் பதலளிக்காமல் இருக்கவும், அவரோ புதுமண தம்பதிகள் அறைக்குள் எப்படி நுழைவது என்று குழம்பி தயங்கி நின்றார்.


கதவின் தாழ்ப்பாளை தட்டி, “முதல்ல கீழே வந்து சாப்பிட்டு அப்புறம் வந்து தூங்குங்க, உங்களுக்காக நாங்க எல்லாம் சாப்பிடாமல் காத்திருக்கிறோம்” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தவரை, “ஹலோ மிஸஸ்.சுபாஷ், கொஞ்சம் இங்கே வாங்க” என்றது செந்தூரனின் ஆளுமையான குரல்.


“என்ன கொழுப்பு பாரு இவனுக்கு? அத்தை அத்தைனு என் காலையே சுத்தி வந்த பய, மிஸஸ்.சுபாஷ்னு கூப்பிடுறதை பாரு” என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டே உள்ளே தலையை குனிந்தபடி வந்தவர் எங்கோ பார்வையை பதித்தபடி, “என்ன?” என்று கேட்டார்.


“ஹலோ இங்கே என் பொண்டாட்டி தான் புதுபொண்ணு, நீங்க இல்ல. என்னவோ இப்படி வெட்கப்படுறீங்க, கொஞ்சம் இங்கே பாருங்க மிஸஸ்” என்றவனை முடிக்க விடாமல், ஓடி வந்து எட்டி அவன் காதை பிடித்து திருகினார் சாரதா.


“ஏன்டா செவப்பா? என்கிட்டயே உன் திமிரை காட்டறீயா? என்னவோ உன்கிட்ட சொல்லாமல் திருமணம் ஏற்பாடு செய்துட்டோமேனு கொஞ்சமா பயந்தால், என்னையே மிஸஸ்.சுபாஷ்னு கூப்பிடுவியா? ஒழுங்கா அத்தைனு கூப்பிடு” என்று மிரட்டினார் சாரதா.


“சரி சரி, அத்தை, கொஞ்சம் காதை விடுறியா? வலிக்குது” என்று பொய்யாக வலியில் துடித்தான். ஒருவேளை வலிக்கிறதோ என்று பதறிப்போய் அவனை விட்டவர், “சரி சொல்லு என்ன விஷயம்?” என்றார்.


“சொல்றேன், அதுக்கு முன்னாடி ஒரு டவுட், நேரா உள்ளே வரவேண்டியது தானே, அது என்னை மூணாவது மனுஷி மாதிரி கதவை தட்டிட்டு வெளியவே நிக்கிறே?” என்று கேட்டான்.


“அது அது வந்து… புதுசா கல்யாணம் ஆன சின்ன சிறுசுங்க, சட்டுனு அப்படி எல்லாம் உள்ள வரக்கூடாது இல்ல” என்றார் சாரதா எங்கோ பார்த்தபடி.


“உன் பொண்ணை வச்சிட்டு, நான் படுற அவஸ்தை எனக்கு தானே தெரியும். இந்த மாதிரி எல்லாம் பேசி இன்னும் என்னை கடுப்பேத்தாதே” என்றான் பொய் கோபத்துடன்.


அவன் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிய மகளை முறைத்தார் சாரதா. “தாலிகட்டும் போது அமைதியாக கட்டிக்க தெரிஞ்சது தானே, இப்போ அவனை எதுக்குடி பட்டினி போடுறே?” என்று சாரதா மகளை திட்டவும், தாரா செந்தூரனை பார்த்து முறைத்தாள்.


“அம்மா தாயே, உன்கிட்டே போய் சொன்னேன் பாரு. இப்போ இருக்கிற நிலைமையும் கெடுத்துவிட்டுடாதே. அவ ஒண்ணும் அமைதியாக தாலிக் கட்டிக்கலை, அவள் எதிர்பார்க்காத சமயத்தில் நான் தான் அவளை கட்டாயப்படுத்தி அவள் கழுத்தில் தாலியை கட்டினேன். சும்மா அவளை எதுவும் சொல்லிட்டு இருந்தீங்கனா மனுஷனா இருக்க மாட்டேன்” என்றான் செந்தூரன்.


அவன் தாலிக் கட்டிய விதத்தையும் அவன் அவளிடம் அத்துமீறி நடந்துக் கொண்டதையும் நினைத்து தாராவின் கண்களில் பொல பொலவென கண்ணீர் பெருகியது.


“ஆரம்பிச்சுட்டாடா இதையே நினைச்சு நினைச்சு என்னை வச்சி செய்ய போறா” என்று மனதிற்குள் புலம்பியவன், “இப்போ என்ன சாப்பிட வரணும் அவ்வளவு தானே, நாங்க வரோம், நீ போ” என்றான் சாரதாவிடம்.


அப்போது தான் அவன் துணிகளை பேக் செய்து கொண்டிருந்ததை பார்த்தவர், “எங்கடா போக போறீங்க? ஹனிமூனா? அதுக்கு முன்னாடி ஜோசியரை வரவழைச்சு பரிகாரம் ஹோமம்னு நிறைய செய்ய வேண்டியிருக்கு, நீங்க இரண்டு பேரும் எங்கேயும் போக கூடாது” என்று பதறினார் சாரதா.


“கொஞ்சம் நிறுத்தறியா?” என்று கத்தினான் செந்தூரன். அதில் சாரதா கப்சிப் என்று அமைதியாகி விட, அழுதுக் கொண்டிருந்த தாராவும் அழுவதை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். “முதல்ல கீழே போய் எல்லாரையும் ஹாலுக்கு வரச்சொல்லு, நான் உங்க எல்லார்கிட்டயும் பேச வேண்டியிருக்கு” என்றான் அதிகாரமான குரலில்.


அவன் இந்த குரலில் பேசினால் அதற்கு எப்போதும் எதிர்வினையாக யாரும் பேசுவதில்லை என்பதால் சாரதா சரி என்று தலையை மட்டும் ஆட்டிவிட்டு வெளியேறினார். அவர் சென்றதும் மீண்டும் அழுதுக் கொண்டிருந்த தாராவின் முகவாயை நிமிர்த்தி, “ஆமாண்டி நான் தான் உன்னை அத்துமீறி எடுத்துகிட்டேன். அதுக்கென்ன இப்போ? நடந்தது நடந்துடுச்சு, எனக்கு எங்கே உன்னை மிஸ் பண்ணிடுவேனோனு பயம், அதுமட்டுமில்லாமல் உன்னை அந்த நிலையில் அத்தனை நெருக்கமா பார்த்துட்டு சும்மா இருக்க முடியலை. என்னோட பொறுமையும் அடக்கி வைத்த உணர்ச்சிகளும் கட்டவிழ்த்து விட்ட மாதிரி ஆயிடுச்சு. அதுக்கு பழிவாங்க நீ வேணும்னா என்கிட்ட அத்து மீறி நடந்துக்கோ… சும்மா அதையே நினைச்சு பொங்கி பொங்கி அழுதுட்டே இருந்தேனு வச்சுக்கோ, இன்னொருமுறையும் அப்படி தான் நடக்கும். அதுக்கு ஓகேனா அழுதுட்டே இரு” என்றான் அழுத்தமான குரலில்.


அவன் அப்படி சொன்னதும் ஸ்விட்ச் ஆப் செய்ததுபோல அவளின் கண்ணீர் டேங்க் அப்படியே நின்று விட்டது. அவளை அழுத்தமாக பார்த்தவன், “ஏண்டி, அழுகையை நிறுத்தின? இதையே சாக்கா வச்சி உன்னை எதாவது செய்யலாம்னு இருந்தேனே” மனதிற்குள் புலம்பியவன், அவள் கண்களை நேராக பார்த்து 


“இனிமே என் முன்னாடி அழுதா சேதாரம் உனக்கு தான். பார்த்து பதிவிசா நடந்துக்கோ. வா சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கினால் தான் சீக்கிரம் காலையில் கிளம்ப முடியும்” என்று சொல்லி அவள் கையை பிடித்து இழுத்தான்.


தாராவும் வேறுவழியின்றி அவனுடன் சென்றாள். அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக ஆரம்பித்தனர். “செந்தூரா அத்தை சொல்றது உண்மையா? இரண்டு பேரும் எங்க கிளம்ப போறீங்க?” என்றார் ஜானகி.


செந்தூரன் சாரதாவை திரும்பி பார்த்து முறைத்தான். “அவளை ஏண்டா முறைக்கிறே? நீங்க இரண்டு பேரும் எங்கேயும் போக கூடாது. நிறைய சம்பிரதாயம் செய்ய வேண்டியிருக்கு. முதலில் நீ கட்டின தாலியை உண்டியலில் செலுத்திட்டு மறு தாலி கட்டணும்” என்றார் ரஞ்சிதம் பாட்டி


இப்போது மெதுவாக தொண்டையை செருமியபடி, “ஏற்கனவே அவர் கட்டிய முதல் தாலியை மணக்குள விநாயகர் கோவிலில் செலுத்திட்டோம் ஆச்சி, அங்கேயே அவர் வேற தாலி கட்டிட்டார்” என்றாள் தாரிகா சின்ன குரலில்.


“ஓ அந்த அளவுக்கு போயாச்சா? அப்போ எல்லாம் திட்டம் போட்டு தானே நடந்திருக்கு? எங்க கிட்ட ஒத்துகிட்டு செந்தூரனை போன் செய்து வரவழைச்சிருக்க” என்று ஜானகி மீண்டும் ஆரம்பிக்கவும் சுபாஷிற்கு கூட கோபம் வந்தது. மச்சானின் மனைவி என்பதால் பல்லை கடித்துக் கொண்டு அமைதியானார்.


தாராவின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப்பார்க்க, செந்தூரன் அவளை பார்த்து முறைத்தான். உடனே கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.


வீட்டின் மூன்று பெரிய நங்கைகளும் நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருக்க, “நாங்க இரண்டு பேரும் கோயம்புத்தூரல தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கோம், இன்னிக்கு விடியற்காலை கிளம்பறோம்” என்றான் அழுத்தமான குரலில்.


அவர்கள் மூவரும் பேச்சை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் செந்தூரனை பார்த்தனர். கதிரேசனும் சுபாஷும் கூட அவனை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


“என்ன தனிக்குடித்தனம் போக போறியா? எங்களுக்கு இருக்கிறது நீ ஒரே மகன், எங்களையும் தாத்தா பாட்டியையும் யார் பார்த்துக்கிறது? காயத்ரியையும் கல்யாணம் செய்து கொடுத்தாச்சு. எல்லாம் புரிஞ்சு தான் பேசறீயா? இல்லை உன் புது பொண்டாட்டி சொல்லிக் கொடுத்தாளா தனியா போகலாம்னு?” என்று கத்தினார் ஜானகி.


“என் தாராவை பத்தி இனி யாராவது குறை சொன்னால் நான் மனுஷனா இருக்க மாட்டேன். ஜாதகம் ஜோசியம்னு சொல்லி என்னையும் என் தாராவையும் குடும்பமாக சேர்ந்து பிரிக்க பார்த்திருக்கீங்க. ஏதோ சரியான நேரத்தில் நான் வந்ததால் ஆச்சு, இல்லைனா உங்க யாரையும் சும்மா விட்டு இருக்க மாட்டேன்.


எப்போ என் முன்னாடியே அவள் மேல தான் தப்புனு குறை சொல்றீங்களோ? இனி உங்க யாரையும் நம்பி அவளை விடமாட்டேன். நாளைக்கு எனக்கு சின்னதா எதாவது அடிப்பட்டால் கூட, அதுக்கு அவ ஜாதகம் தான் காரணம்னு பேச ஆரம்பிச்சிடுவீங்க. தினமும் உங்க பஞ்சாயத்தை பார்க்க எனக்கு நேரம் இருக்காது.


நம்பி வந்தவளை கண்கலங்காம பார்த்துக்கணும்னு சொல்வாங்க. ஆனால் நான் தான் அவளை தூக்கிட்டு போய் கல்யாணம் செய்திருக்கேன். அப்போ நான் அவளை எப்படி பார்த்துக்கணும்? அதுதான் யோசித்து தனிக்குடித்தனம் போறதுனு முடிவு செய்திருக்கேன். நான் ஒண்ணும் தூரமா போகலயே? கோயம்பத்தூர்ல தான் இருக்க போறேன்.


அங்கே தான் பிசினஸ் தொடங்கணும், அதனால் எனக்கு அங்கே தங்கறது தான் வசதி. பொள்ளாச்சி பக்கம் தானே, நான் அடிக்கடி வந்து பார்த்துக்கிறேன். அதனால யாரும் புலம்பாம இருங்க” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு எழுந்தான்.


“அப்போ நாங்க யாரும் உன்னோட புதுவீட்டை பார்க்க கூடாதா?” என்று கேட்டார் ஜானகி.


“தாராளமா வரலாம். ஆனால் இப்போ இல்லை. உங்க மனசில் இருக்கிற குப்பை எல்லாம் சரியாகட்டும் அதுக்கு பின்னாடி வந்தால் போதும். தேவையில்லாத மூட நம்பிக்கையை நீங்க நம்பறதும் மட்டும் இல்லாமல் எங்க மேலயும் திணிச்சு எங்களோட நிம்மதியை கெடுக்க வேண்டாம்” என்றான் செந்தூரன் ஆணித்தரமாக.


“அப்போ ஜாதகம் ஜோசியம் எல்லாம் பொய்னு சொல்றியா? எல்லாம் கிரகங்களின் அமைப்பை பார்த்து கணிக்கிறாங்க. இதுவும் ஒருவகையான அறிவியல் தான். நாங்க ஒண்ணும் போலி ஜோசியர்கிட்ட கேட்டுட்டு இப்படியெல்லாம் செய்யலை. நம்ம குடும்ப ஜோசியர் அவர் சொன்னது எல்லாம் நம்ம குடும்பத்தில சரியாக தான் நடந்திருக்கு” என்றார் ஜானகி ரோஷமான குரலில்.


“சரி அவர்கிட்ட போய் கேப்போமா? அவர் சொல்வது எல்லாம் நூறுசதவீதம் நடந்திடுமானு? அப்படி அவர் நடந்திடும்னு சொன்னா அதுக்கு சாட்சி இருக்கா?” என்று கேட்டான்


“இதுக்கெல்லாம் யாராச்சும் சாட்சி கேப்பாங்களா, நடக்க வாய்ப்பிருக்கு முன்னெச்சரிக்கையா இருனு தான் சொல்வாங்க” என்றார் ஜானகி முகவாயை தோளில் இடித்துக் கொண்டு.


“அதேதான் நானும் சொல்றேன், முன்னெச்சரிக்கையா இருக்கிறதுக்காக அவங்க சொல்றதை கேட்டு அப்படியே நடந்திடும்னு நினைச்சு நம்மளை நாமளே வருத்திக்கிறோம். ஜோசியம் கேட்காததுக்கு முன்னாடி கூட நிம்மதியா தான் இருந்திருப்போம். எதுக்கு அவங்க கிட்ட போய் எதிர்காலத்தை பத்தி கேட்கணும்? அதுக்கு அவங்க எதாவது சொல்வதை கேட்டு எதுக்காக வருத்த படணும்?


அவர் சொன்ன மாதிரியே நடந்துடுமோ நடந்துடுமோனு நம்ம மூளை நினைக்க நினைக்க நம் எண்ணமும் எதிர்மறை எண்ணங்களாக மாறி பின்னாடி அதுவே நடந்தும் விடும். எதேச்சையாக சின்ன விஷயம் நடந்தாலும் அதனால் தான் இப்படி நடந்ததுனு நம் மனசு கணக்கு போடும். அதுக்கு எந்த ஜோசியர்கிட்டயும் போகாமல் இறைவன் பக்கபலமாக இருக்கிறார், அவன் நமக்கு நல்லதே செய்வார்னு நினைச்சிட்டு நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கிட்டா, எந்த கெடுதலும் நமக்கு நேராது.


கடவுளின் படைப்பில் ஒவ்வொரு நாளுமே நமக்கு புதுவாய்ப்பு தான். கிடைச்ச வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்க போகும் எதிர்பாராத விஷயங்களை எதிர்கொண்டு அதற்கு தகுந்தபடி வாழத்தானே இறைவன் நம்மை படைத்திருக்கிறான்? அது தானே இயற்கை?


நான் தெரியாமல் தான் கேட்கிறேன் கடவுள் பெரிசா? ஜோசியம் பெரிசா? கடவுள் தானே? அப்போ அவரை நம்பறதை விட்டுட்டு ஏன் ஜோசியத்தை நம்பறீங்க?” என்று எல்லாரையும் பார்த்துக் கேட்டான்.


கடவுளை விட ஜோசியம் தான் பெரிசுனு சொல்லுங்க, நீங்க சொல்றதை நானும் ஒத்துக்கிறேன். நீங்க சொன்ன மாதிரி கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப நம்ம வாழ்க்கையும் மாறதாகவே இருக்கட்டும். அந்த கிரகங்களை படைத்ததும் அதை ஆட்விப்பதும் கூட கடவுள் தானே?” என்று செந்தூரன் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக கதிரேசனுக்குள்ளே மறைமுகமாக இருந்த சிறு சுணக்கமும் தீர்ந்து விட்டது.


மகன் சொல்வது சரிதான் என்று கைத்தட்டினார், “சபாஷ்டா, நீ சொல்றது தான் கரெக்ட்” என்றார் சத்தமாக. சுபாஷூம் மருமகனை வாஞ்சையுடன் பார்த்தார். “இவங்க எல்லாம் பேசறதை பார்த்து, எனக்கு உண்மையில் தாராவோட வாழ்க்கை என்னாக போகுதோனு  கொஞ்சம் கவலையாக தான் இருந்தது மாப்பிள்ள. இனி என்னை விட தாராவை நீ நல்லா பார்த்துக்குவனு நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் அவனை அணைத்தபடி.


தனக்காக ஒரு பெரிய கருத்தரங்கமே நடத்திவிட்டிருந்த மாமனை பார்க்கையில் தாரிகாவிற்குமே பெருமையாக தான் இருந்தது.


அவளுக்குமே தன் ஜாதகத்தினால் அவனுக்கு எதாவது விடுமோ என்ற பயம் உள்ளூர இருந்துக் கொண்டு தான் இருந்தது. இப்போது அவன் பேச்சு அவளுக்கும் தெம்பை அளித்திருந்தது. தன்னையே ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளை பார்த்து இருபுருவங்களையும் ஏற்றி இறக்கினான்.


அவள் தன்னை சமாளித்து தன் பார்வையை திருப்பும் முன் யாருமறியாமல் அவளை பார்த்து கண்சிமிட்டி இதழ்களை குவித்து முத்தமிடுவது போல செய்தான். ஆச்சரியத்தில் தன்னையும் அறியாமல் கண்கள் அகல அவனை பார்த்தாள். எப்போதும் அவன் இப்படி எல்லாம் நடந்துக் கொண்டதே இல்லை. கல்லூரி பயிலும் பருவத்தில் முறை மாமனாக அவன் சீண்டலுக்காக ஏங்கி இருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் அவளை கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. ஆனால் இப்போது புதிதாக அவளை பார்த்து கண்சிமிட்டவும் ஆவென அவனையே பார்த்திருந்தாள்.


அவளின் ஆச்சரியமான பார்வை அவனை குதுகலிக்க செய்தது. மீண்டும் அவன் அவளை பார்த்து கண்சிமிட்டி முத்தமிடுவது போல செய்ய, அவள் முகம் செந்தூரனின் செய்கையில் செந்தூரமாய் சிவந்து போனது.


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post