இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -22 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 25-04-2024

Total Views: 28870

வளவன் பொருட்கள் வாங்குவது, நந்தனின் வீட்டிற்குச் சென்று சொந்தங்களுக்கு  தொலைப்பேசியின் மூலம் விஷயத்தை சொல்வது என ஓடிக் கொண்டிருந்தான், அவனுக்கு துணையாக யுகி செல்ல.. யாரும் இல்லாத வீட்டுல நந்தனும் ஷாலினியும் மட்டும் தான் இருந்தனர்.

நாளை இரவு நந்தன் கிளம்ப வேண்டும் அப்போது தான்  சரியாக இருக்கும், இவ்வளவு நாள் போக வேண்டும் என்ற ஆசை பேராசையாக இருந்தது. இன்று ஏனோ அது இல்லாமல் போக, ஏண்டா அவ்வளவு தூரம் சென்று கல்லூரிப் பார்த்தோம் என கவலையாக இருந்தது.அந்த எண்ணம் எதற்கு எழுந்தது என்றே தெரியவில்லை.

அடுத்தநாள் நிலாவின் அத்தைப் பையனை வைத்து குடிசை கட்டி நல்ல நேரம் பார்த்து நிலாவை அதற்குள் விட்டனர்.

அன்று மாலை நந்தன் சென்னை கிளம்பிவிட்டான்.

"அண்ணா அண்ணா" என ரகசிய குரலில் வளவனை அழைத்தாள் நிலா

"என்ன பாப்பு.?"

"அண்ணா அந்த நெட்டக் கொக்கு காலேஜ் போய்டுச்சா.?"

"ம்ம் ஈவினிங் மாமா கூட்டிட்டுப் போய்ட்டாரு."

"ஐ ஜாலி ஜாலி" என ஆட,

"பாப்பா இப்படிலாம் ஆடக்கூடாது அம்மா பார்த்தா சத்தம் போடும் அமைதியா இரு."

"அண்ணா எவ்வளவு பெரிய நல்ல விஷயம் சொல்லியிருக்க ஆடக்கூடாதுன்னு சொல்றியே?'.

"அவனுக்கு ஏன் உன்னைய புடிக்கலைன்னும் தெரியல, உனக்கு ஏன் அவனைக் கண்டாலே பயமா இருக்குன்னும் புரியல."

"அதெல்லாம் விடு அவன் போனது கன்பார்ம் தானே".

"எத்தனை தடவை சொல்றது..?"

"அப்போ சரி"  என்றவள் "அடிடா மேளத்தை நிலா இன்னைக்கு தான் செம ஹாப்பியா இருக்கா" என்று கத்திக் கொண்டே ஆட..

"அறிவு இருக்கா நிலா உனக்கு?வயசுக்கு வந்த புள்ள இந்த ஆட்டம் ஆடலாமா? அடங்கி உக்காரு சொல்லிட்டேன், இனி இப்படி கண்ணுமண்ணு தெரியாம ஆடுன காலை உடைச்சி அடுப்புல வெச்சிடுவேன் பார்த்துக்கோ" என்று அடிக்க கை ஓங்கிவிட்டார். திட்டியது வேறு யாரும் அல்ல சாட்சாத் நம்ப ராஜியே தான்.

இவ்வளவு நாளில் அதட்டக் கூட செய்ததில்லை, மகளும் அதட்டும் அளவிற்கு நடந்துக் கொண்டதில்ல.இன்று முதன் முதலாக அடிக்க கை ஓங்கவும் மிரண்டு விட்டாள் நிலா.

"அம்மா இப்போ எதுக்கு பாப்பாவை அடிக்கப் போறீங்க?"

"பின்ன என்ன தம்பி ஏற்கனவே ஊருக்குள்ள நாலுப் பேரு நாலு விதமாக பேசுவாங்க, இதுல இவ இந்த ஆட்டம் ஆடுன,சொல்லவே வேண்டாம் வெறும் வாயை மெல்லறவீங்களுக்கு நம்பவலே அவல் கொடுத்து மெல்ல சொன்னக் கதையாப் போய்டும், இங்கப் பாரு பாப்பா இந்த மாதிரிலாம் ஆடக்கூடாது. பசங்க முன்னாடி சட்டைக்கு மேல துண்டுப் போடாம நிற்கக் கூடாது, யாரும் உன்னைய தொட்டுப் பேச அலோப் பண்ணக்கூடாது" என  அறிவுரையை வாரி  வாரி வழங்க

அனைத்திற்கும் மிரண்டவாறே தலையை அசைத்தாள்.

"முக்கியமா இனி ரோட்டுல போய் விளையாடக் கூடாது.  நாளைக்கு ஒருத்தர்கூட என்ன புள்ள வளர்த்தி வெச்சிருக்கன்னு என்னய்யப் பார்த்து கேட்டுபுட்டா என்ற உடம்புல உசுரு இருக்காது பார்த்துக்கோ" என்றவர் சென்று படுத்துக் கொண்டார்.

வளவன் தான் தங்கையை ஆறுதல் படுத்தினான்.

"ஒருத்தன் ஊருக்கு போனா இந்த அளவுக்கு ஆடியிருக்கனா, அவனால நான் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டுருக்கணும், அதை ஏன் யாரும் யோசிக்க மாட்டிக்கிறாங்க?" என மன வருந்தியவளின் கண்ணீர் கன்னம் தொட அப்படியே உறங்கிவிட்டாள்.

நந்தன் கல்லூரி செல்ல அடுத்த நாள் அதிகாலை ஆகிவிட்டது, நிறைய பொருட்களை எடுத்துச் செல்வதால் கார் ஒன்றை வாடகைக்கு பேசியிருந்தார் மார்த்தாண்டம்.அதனால் நேராக கல்லூரிக்கேச் சென்று விட்டனர்.

அன்று முழுவதும் கல்லூரியை சுற்றிப் பார்த்த மார்த்தாண்டத்திற்கு பரமதிருப்தி மகன் இங்கு படிப்பதில்.

"நந்து காலேஜ் நல்லா இருக்கு ஸ்கூல்ல மார்க் வாங்குன மாதிரியே இங்கையும் படிச்சி கோல்ட் மெடல் வாங்கணும் கேம்பஸ்ல பிளேஸ் ஆகணும்"

"எனக்கு அந்த ஆசையிலா இல்ல"என குண்டை தூக்கிப் போட 

"பொறவு?" என்றார் அதிர்ச்சியாக.

"நானும் உங்கள மாதிரியே பிஸ்னஸ் பண்ணப் போறேன்"

"ஓ.. நான் பார்க்கறது நாய் பொழப்பு தம்பி உனக்கு அந்த அலைச்சல் வேண்டா,சொகுசா ஏசி ரூமூல உக்கார்ந்து ஐடில ஒர்க் பண்ணு."

"அதை அப்போ பேசிக்கலாம் விடுங்கப்பா."

"நீ சொல்றது சரி தான் அதுக்கு இன்னும் நாலு வருஷம் இருக்குல்ல பொறவு என்ன?" என்றவர். "நான் ஊருக்கு கிளம்பறேன் நீ பார்த்து இருந்துக்கோ" என்ன பலதடவை பத்திரம் சொல்லிவிட்டே ஊர் வந்து சேர்ந்தார் மார்த்தாண்டம்.

ஏலாம் நாள் குடிசை சுடுதல், ஒன்பதாம் நாள் சென்ஞ்சோறு சுற்றுதல், பதினோராம் நாள் வீட்டிற்கு அழைத்தல் என்ன மூன்று நாளும் தன் குடும்பத்தை சுற்றி இருப்பவர்களை அழைத்தே அனைத்து விசேஷங்களையும் எளிமையாக செய்து முடித்துவிட்டார் ராஜி . 

செலவு எந்த அளவிற்கு இருக்கிறதோ அதேப்போல வரவும் வந்துவிட  இதுவரைக்கும் ஆன செலவை  சரிச்செய்து விட்டனர்.

நிலாவிற்கான எந்த விசேஷத்திற்கு நந்தன் ஊருக்கு வரவில்லை. அவன் வரவில்லை   என்பதில் உள்ளுக்குள் அவ்வளவு ஆனந்தம் கொண்டாள் நிலா என்றால் மிகையாகாது.

தொடந்து ஒரு வாரம் விடுமுறை கிடைத்தால் மட்டும் ஊருக்கு வருவான் நந்தன், அப்படி முதல் தடவை வரும் போது. நிலா  அவன் கடைசியாக பார்த்ததை விட

உடல் பூசி,  முகத்தில் மஞ்சள் பூசி முகப் பொலிவுடன்,  பார்க்க அழகாக இருக்க அதற்கும் அவன் காய்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை.

"என்ன நான் இங்க இல்லைன்ற சந்தோசத்துல நாலு கிலோ ஏறிட்டப் போல. அவ்வளவு சந்தோசமா  இந்த கரடி மூஞ்சிக்கு".என்க

"நீ என்னமோ பேசிட்டு போ நான் எருமை மேல மழைப் பேஞ்ச மாதிரி நிற்கறேன்" என்பது நின்றவளைப் பார்க்க பார்க்க ஆத்திரம் எல்லைக் கடந்தது.

"என்னடி கேட்டா பதில் பேசாம திமிரா நிக்கிற?" என்று அவளது வலது கையை மடக்கி பின்புறம் கொண்டு வந்து முறுக்கினான்.

"வலிக்குதுங்க"

"நான் கேட்டா பதில் சொல்லணும்".

"நீங்க இல்லைன்னு சந்தோசமாலாம் இல்லைங்க," என்று வெளியே சொன்னாலும், உள்ளே "ஆமாடா நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் அதான் நல்லா வெயிட் போட்டுட்டேன் போல" என சொல்லிக் கொண்டாள்.

"உன்னைய பார்த்தா அப்படி தெரியலையே.." என்றவன் அவளது கையை விட்டுவிட்டான்.

"நீங்க திரும்ப எப்போ போவீங்க?" என்றாள் ஆவலாக.'போயி தொலையேண்டா ஏன் இங்க வந்து உயிரை வாங்கற?' என்பது தான் அவளின் எண்ணம் 

"இன்னும் ஒரு மாசத்துக்கு இங்க தான்"

"என்னது ஒரு மாசமா?" என்றவளுக்கு நாக்கு வறண்டு விட்டது,  'இப்போதானே அடிவாங்காம இருக்கேனு நினைச்சு சந்தோசப்பட்டுகிட்டேன் அதுல லாரி மண்ணை அள்ளிப் போட்டுட்டானே' என உள்ளுக்குள் பதறிப் போனவள், முகத்தில் அதைக் காட்டி விட்டால் அதற்கும் அடிப்பானோ என பயந்து சாதாரணமாக நிற்க அரும்பாடுபட்டாள்.

"என்னடி ஒருமாசம் இங்க தானோன அப்படியே அள்ளு விடும் போல.."

"அப்படிலாம் இல்லைங்க" என்று தலை குனிய

அவளது தாடையை ஒரு விரலால் நிமிர்த்தியவன், "என்னைய பார்த்து பதில் சொல்லு"

"நீங்க இங்க இருந்தா எனக்கு என்ன பிரச்சனை?" என்று தட்டுதடுமாறி சொல்லிவிட்டாள்.

"ம்ம் சரி இங்க வா, என்னோட கையை  அழுத்து"  என்று அவள் முன் கையை நீட்டினான்.

அழுத்தவில்லை என்றால் அடிப்பான் எதற்கு வம்பு? என்று அழுத்தினாள்.

ஒரு மாதம் இருக்கிறேன் என பத்து நாளில் கிளம்பிவிட்டான்.

ஆனால் நிலாவிற்கு அந்த பத்து நாளே பத்து மாதம் போல் இருந்தது.

அடுத்து வந்த நாளில் நிலா சுதாரித்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

நந்தன் விடுமுறையில் வரும் நாளை குறித்துக் கொண்டு அன்று வீட்டில் அடம்பிடித்தாவது தன் அத்தை,சித்தப்பா வீட்டிற்குச் சென்று விடுவாள்.

"அம்மு நீ பண்றது சரியில்ல, இது ரொம்ப தப்பு,அவங்களே நம்பள மதிக்கறதில்ல அங்க என்ன நமக்கு வேலை. உழைக்கறோமோ வயிறு நிறைய திங்கறோமான்னு  நம்ப வேலையைப் பார்த்துட்டு போகணும். அதை விட்டுட்டு அங்க போய் உக்கார்ந்து இருந்தா நாளைக்கு இதையே ஒரு பேச்சின்னு பேச மாட்டாங்களா?..முன்னாடியாவது நீ சின்ன புள்ளையா இருந்த சரி இப்போ வயசுக்கு வந்துட்ட இனி அங்க  போனா என்ன சொல்லுவாங்க?".

"அம்மா நான் என்ன நிரந்தரமாவா அங்கப் போறேன் ரெண்டு நாளோ மூனு நாளோ அவ்வளவு தானே..ப்ளீஸ்ம்மா இங்க இருந்தா ரொம்ப போர் அடிக்கிது. அண்ணாவும் காலேஜ் போய்ட்டு அப்படியே வேலைக்குப் போய்ட்டு வர நைட் பத்து ஆகிடுது. நீ வர ஏழு ஆகிடுது, நான் ஒருத்தி யுகி வீட்டுல இருக்க ஒரு மாதிரி இருக்கும்மா" என எதை எதையோ சொல்லி தப்பித்து விட்டாள்.

நந்தன் வரும்போது நிலா இல்லை என்றதும் அவனின் பொழுதுப் போக்கே வீணாகப் போனது போல் ஆகிவிட்டது. வேறு வழியின்றி அந்த நாளை கடத்திவிட்டு போனான்.

இதுவே தொடர்கதையானதும் தான் புரிந்து போனது தன்னிடம் சிக்கக்கூடாது  என்று தான் ஓடிவிடுகிறாள் என்று,
இப்படியே நாட்கள் வேகமாக செல்ல

மார்த்தாண்டம் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யலாம் என முடிவு செய்து தேதி குறித்து வாங்கி வந்தார்.

அடுத்த மூகூர்த்தமே நல்ல மூகூர்த்தமாக இருக்க  அதிலையே கிரகப் பிரவேசம் செய்யலாம் என முடிவு செய்து பத்திரிக்கை அடித்து வாங்கி வந்துவிட்டனர்.

வீடு பால் காச்சுகிறார்கள் என்றதும் நிலாவிற்கு தான் "ஐயோடா!!"  என்றானது.

எப்படியும் இதற்கு வரும் நந்தன் தன்னை பிடித்துக் கொள்வான். அவனிடம் தப்பிக்கவும் முடியாது இவ்வளவு நாள் விட்டதற்கும்  சேர்த்து வைத்து சிறப்பாக செய்யப் போகிறான் என மனம் பதறிக் கொண்டே இருந்தது. ஆனால் அவள் நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை.

கிரேகப்பிரவேசத்துக்கு வந்த நந்தன்  அவன் மட்டும் தனியாக வராமல் நண்பர்கள் பட்டாளத்துடன் வந்திருந்தான்.

அதில் இருப் பெண்களும் அடக்கம்.

முதன்முறை மகன் பெண்களுடன் நட்புக் கொண்டிருக்கிறான் என்றதுமே தாயாக கவலையும் மீறி உள்ளம் பதறியது, எங்கு தப்பான வழியில் சென்று விடுவானோ என்று.

இங்கு இருந்த வரையிலும்  அவன் பேசும் பெண்களே மூன்று பேர் தான் ஒன்று ஆயா, இன்னொரு தங்கை மற்றொருன்று நிலா. இதில் அவன் அடிக்கவும் , உதைக்கவும்,மிரட்டவும் நிலாவை தான் அதிகம் தேடுவான்.

கல்லூரி போனதும் பெண்களுடன் பழகியது மட்டும் அல்லாமல், தங்கள் வீட்டு விசேஷத்திற்கு உடன் அழைத்து வந்தால் எந்த தாயிக்கு தான் பயம் வராது.

விழாவிற்கு வந்த நந்தன் நிலா இருந்தப் பக்கம் கூட திரும்பவில்லை.தன்னைப் பார்த்து ஒருத்தி ஓடி ஒளிக்கிறாள் என்றால் அவளுக்காக பின்னாலையே செல்வது கேவலம் என்று எண்ணினானோ என்னவோ.

"நந்தா வீடு ரொம்ப பெருசா இருக்குடா." என்றான் முகிலன் 

"ம்ம் பின்ன மூனு வருசமா கட்டறோம் ஒவ்வொரு விஷயமும் எனக்கு புடிச்ச மாதிரி இருக்கனும் பார்த்து பார்த்து பண்ணிருக்கோம் அப்போ கிராண்டாதானே இருக்கும்."

"இதுல உன் ரூம் எது நந்து?" என அவனது தோளில் தொங்கிக் கொண்டே கேட்டாள் உஷா

கல்லூரியில் படிப்பிலும் அழகிலும் முதல் ஆளாக இருப்பதால் நந்தன் மீது அனைத்து பெண்களுக்கும் ஒரு கண் தான். யாரும் அவன் அருகில் நெருங்க முடியவில்லை, 

ஆனால் உஷாவால் நெருங்க முடிந்தது. அதற்கு காரணம் அவள் இயல்பாக இருந்ததுப் போல் தெரிந்தது நந்தனுக்கு. அதனாலையே அவளையே நெருங்க விட்டான்.,எப்போது பார்த்தாலும் அவனை தொட்டு தொட்டுப் பேசுவதும், அவன் தோளில் தொங்குவதுமே வேலையாக வைத்திருந்தாள் தடுக்க வேண்டியவனும் சாதாரணமாக விட்டுவிட்டதால்  அவள் இப்போது அனைவருக்கும் முன்பும் அதையே செய்தாள்.

"என்னோட ரூம் மேல இருக்கு அதுதான் வேணும்னு அப்பாகிட்ட ஸ்ட்ரிக்ட்டா சொன்னதால அதையே  ரெடிப் பண்ணிக் கொடுத்துட்டாரு, அழகா இருக்கும் பாருங்க",என்றவனின் பார்வை தாவணி பாவாடையில் தட்டில் பூவை வைத்து எடுத்துச் செல்லும் நிலாவின் மீது சென்றது.

பச்சைநிற பாவாடை அதில் தங்க சரிகை பாடர் போடப்பட்ருக்க,அதே நிறத்தில் ரவிக்கை,குங்கும நிறத்தில் தாவணி, என நேர்த்தியாக உடை அணிந்திருந்தாள், தலை நிறைய மல்லிகைப் பூ, ஷாலினி வற்புறுத்தி போட சொன்னதால் இரு கையிலும் சிவப்பு வளையல் , பிறை நெற்றியில் அசைந்தாடும் கூந்தலை ஒதுக்கவே முழுநேரமும் வேலைப் பார்த்தது  அவளுடைய கை, வெள்ளைநிறம் இல்லை தான், ஆனால் பார்க்க கண்கோடி வேண்டும்  என்பது போல் பாந்தமான அழகு.

நந்தனே அவளைப் பார்க்கக் கூடாது என்று கண்களைத் திருப்பினாலும் திரும்பவும் அவனது கண் அவளிடமே சென்று நின்றது. முதல் முறை தாவணி அணிந்து பார்க்கிறான் அல்லவா அதனால் தான் அவனுடைய கண்களை கட்டுப்படுத்த முடியவில்லை.என நினைத்துக் கொண்டான்.

அவன் பார்வை சென்ற திசைக்கு நண்பர்களின் பார்வையும் போக அதில் முகில் என்றவன் "வாவ் யார்டா இந்த பம்மிலிமாஸ் தாவணிப் பாவாடையில ஆளே அசத்துறா."

"பக்கத்து வீட்டுப் பொண்ணு" என்றவன் கை தானாக தலையில் இருந்த காயத்தின் மீது  தடவியது.

இப்படிதானே பொங்கல் திருவிழாவில் நண்பன் ஒருவன் கேட்டு வேலைக்காரியின் பெண் என்று சொல்லியதால் ஏற்பட்ட வடு வருஷங்கள் கடந்தும் மறையாமல் அப்படியே  இருப்பது நினைவில் வர சட்டென்று திரும்பி மீண்டும் நிலாவைப் பார்த்தான்.

அவன் அடித்ததில் உண்டான  காயத்தின் வடு அவள் நெற்றியில் இப்போதும் இருந்தது.

"பூனை. பூவை சீக்கிரம் எடுத்துட்டுப் போ அம்மா கூப்பிட்டாங்க."

"இதோப் போறேன்" என அவசர அவசரமாக ஓடிவர பாவாடை தடுக்கி கீழே விழுப்போனவளை முகிலன் ஓடி வந்து பிடித்துக் கொண்டான்.

அவனின் கண் தாவணி இடைவெளியில் தெரிந்த வெளீர் இடைக்குச் சென்றது.

"தேங்க்ஸ்.. நீங்க புடிக்கலைன்னா பூ முழுக்க கீழே கொட்டிருக்கும் ஆயாகிட்ட சத்தம் வாங்கிருப்பேன் நல்லவேளை புடிச்சிட்டீங்க"  என்றவள் அவன் பதிலை எதிர் பாராமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

நந்தன் இதை சாதாரணமாக கடந்து. விட்டான்.

பூஜை ஆரம்பிக்க. பூஜையில் கிருஷ்ணம்மாளும், கிருஷ்ணமூர்த்தியும் அமர்ந்திருந்தனர்.

மார்த்தாண்டமும் மணிமேகலையும் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். தாய் தந்தை இருக்கும் போது தாங்கள்  பூஜையில் அமர்வது சரியாக இருக்காது.அவர்கள் தான் அமர வேண்டும் என  மார்த்தாண்டம் முடிவாக சொல்லிவிட்டார்.

கிரகப்பிரவேசம் என்றதும்.. செல்வராணி தன் குடும்பத்தோடு   நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார்.

அவருக்காக செய்ய வேண்டிய சீரில் எந்த குறையும் வைக்கவில்லை மார்த்தாண்டம், உடை எடுக்க பத்தாயிரம், அதில்லாம் வெள்ளி தட்டில் பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தார்.

மகள்களுக்கு விதவிதமாக உடை வாங்கிப் போட்டுவருக்கு தன் தாயின் வீட்டின் சீர்  என்றதும்  முகம் பூவாக பூத்து நின்றது.

"டேய் வந்தவீங்களுக்கு காபிக் குடுடா" என பூஜையில் அமர்ந்துக்கொண்டே வளவனிடம் வேலை ஏவினார் கிருஷ்ணம்மாள்.

"சரி" என தலையை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து செல்ல. "நான் கப் எடுத்துட்டு வரேன்" என ஓடிய ஷாலினி அதை எடுத்துக் கொண்டு அவன் அருகில் வந்து நின்றாள்.

"வள்ளு"

"ம்ம்"

"அன்னிக்கு நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே'

"என்ன கேட்ட? நியாபகம் இல்ல."

"அதான் உன்னைய லவ் பன்றேன்னு சொன்னேன்னே"

"பல்லை தட்டி கையில குடுத்துடுவேன்னு அன்னிக்கே சொன்னதா நியாபகம்"

"பல்லு இல்லாம கல்யாணம் பண்ணிக்க உனக்கு ஓகேன்னா இப்போவே பல்லை எடுத்தரேன் என்ன பண்ணிக்கறியா?"

"வாயை மூடிட்டு போடி வாயில ஏதாவது வந்துடப் போகுது. படிக்கிறதை தவிர எல்லா வேலையும் பாரு"

"நீ கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லு படிக்கிற வேலையும் பார்க்கறேன் "

"ஒன்னும் தேவையில்ல"

"சின்ன வயசுல இருந்து ஷாலு ஷாலுன்னு உயிரையையே விடுவியே அந்த வளவன் எங்க போனான். எனக்காக இதைக் கூடப் பண்ண மாட்டியா.?"

"நீ சாக்லேட் கேட்டு நான் வாங்கி தரமா இருக்கேன் பாரு, தாலி கேக்கறடி"

"கேட்டா குடு"

"செருப்பு வேணா கொடுக்கறேன்  ஒழுங்கா ஓடிடு" என்றவன் அனைவருக்கும் காபியைக் கொடுக்கச் சென்றுவிட்டான்.

வளவன் ஷாலினியை முற்றிலும் தவிர்க்கவில்லை ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடும் அவள் கேள்வி கேட்டால் பதில் சொல்வதோடும் நிறுத்துக் கொள்வான். இன்றும் பதில் சொல்லிக் கொண்டிருக்க  அதனால் வரும் ஆபத்தை அறியாமல் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

வளவன் யுகி ஷாலினி, நிலா நால்வரும் ஒருப் பக்கமும் அவர்களுக்கு எதிராக நந்தனும் அவனது நண்பர்களும் நின்றிருந்தனர்.

"டேய் யுகி"

"ம்ம்"

"உன் அண்ணனோட வந்துருக்க பொண்ணுங்களா யாருடா?"

"என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்?, நான் அவன்கிட்ட பேசி ரெண்டு வருஷம் ஆகிடுச்சுன்னு தெரியும் தானே, ஷாலுகிட்ட கேளு வள்ளு"

"அதுக்கு நான் சும்மாவே இருப்பேன்."

"அப்போ கம்னு இரு."

"ஆனாலும் உன் அண்ணனுக்கு தைரியம் ஜாஸ்திடா. நம்பலாம் பொண்ணுங்ககிட்ட பேசவே பயபடறோம், ஆனா உன் அண்ணன் வீட்டு விசேஷத்திற்கு பிரண்ட்ஸ்ன்னு  பொண்ணுங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துருக்கான்."

"அவன் கூட்டிட்டு வந்ததை விட, உன்னால கூட்டிட்டுவர முடியலையேன்னு  வயித்தெரிச்சல் தான் அதிகமா இருக்கும் போல.."

"பின்ன.. இருக்காதா?,  உன் அண்ணன் மட்டும் எல்லாத்துலயும் உஷாரா இருக்கான்."

"உஷாரா மட்டும் இல்லை உஷாக்கூடவே இருக்கான்".

"யாருடா அந்த உஷா.?"

"வேற யாரு அந்த தோளில் தொங்கும் தொங்கட்டான் தான்"

"இப்போ தான் தெரியாதுன்னு சொன்ன, கேடி தெரியாதுன்னு சொல்லி சொல்லியே எல்லாத்தையும் தெரிஞ்சி வெச்சிருப்பான்," என்றவன் "ஓ..ஒருவேளை அப்ப டி இருக்குமோ" என சந்தேகமாக கேக்க..

"எப்படி..?"

"அதான் அப்படி.."

"அதான் நாயே எப்படி..?"

"உன் அண்ணியா வரக்கூட வாய்ப்பு  இருக்கும்ல"

"நீ அடிவாங்கியே சாகப்போறேப் பாரு,அவளும் அவ மூஞ்சியும், இவளா அண்ணியா வந்தா நான் எங்கையாவது ஓடிப் போக வேண்டியது தான்.ஏற்கனவே இவன் மூஞ்சில முள்ளைக் கட்டுன மாதிரி திரியுவான் இதுல இவ வேறையா?" 

"ஏன் அவளுக்கு என்ன குறைச்சல்?பாரு பார்க்க உன் அண்ணனுக்கு ஏத்தவ மாதிரி தான் இருக்கா" என்றதும் யுகியின் கண்கள் உஷாவை ஆராய்ந்தது.

யுகி தன்னை உற்றுப் பார்க்கவும்  உஷா மெலிதாக புன்னகைத்தாள்.

அந்த புன்னகையே அவளை அகோரமாக காட்டுவது போல் தெரிய.. சட்டென்று வளவன் பக்கம் திரும்பி அவன் காலை ஓங்கி மிதித்தான்.

"ஆஆஆ... ஏண்டா மிதிச்ச?"

"இனி தேவையில்லாம பேசுனா இதுதான் நடக்கும், அவளும் அவ முகரக்கட்டையும்"

"டேய்.. உனக்கு உன் பூனையை தவிர மத்த எல்லோரும் கேவலம் தான்" என்றவன் அமைதியாக நின்றுக்கொண்டான்.

யுகியின் கண்கள் இப்போது நிலாவிடம் சென்றது.

தாவணி பாவாடையில் தேவதைப் போல் இருந்தாள்.

"ஆமா"

"என்ன ஆமா?"

"எனக்கு என்னோட பூனை மட்டும் தான் அழகு."

இதை நீ சொல்லவே வேண்டாம் உன்னை நான் அறிவேன் என மெலிதாக பாட்டுசைத்தவன் நீ அவளோட அண்ணன்கிட்ட பேசிட்டு இருக்கறங்கறதை நியாபகம் வெச்சிக்கோ" என்க.

"அவங்க அம்மாகிட்டயும் அதை தான் சொல்லுவேன் எப்படி வசதி.?"

"நீ சொன்னாலும் சொல்லுவ வாயை மூடிட்டு பூஜையை கவனிடா சாமி"

"சரிடா மச்சான்".

எப்போதாவது நண்பர்களுக்கு சொல்வது போல் மாமன் மச்சான் என அழைத்துக் கொள்வது உண்டு  என்பதால் வளவனும் கண்டுக் கொள்ளவில்லை.



Leave a comment


Comments


Related Post