இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 20 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 25-04-2024

Total Views: 12419

காதலொன்று கண்டேன்!

தேடல்  20

அவனுக்காக..


வீட்டுக்கு வந்த பின்னும் பையனின் மனதில் யாழினியின் விம்பமே நிழலாட மெதுவாய் இதழ் விரித்தவனுக்கு பெண்ணவள் வித்தியாசமாகத் தோன்றினாள்.அவனிடம் நட்பு பாராட்ட யாரும் இதுவரை மனமுவந்து கேட்டதில்லை.

அவனின் தோற்றம் முதற் காரணம் என்றால் பையனின் ஒதுக்கமான குணமும் அதற்கு உடந்தையாய்.

தந்தையிடமும் யாழினி தன்னிடம் கேட்டதை அப்படியே பகிர்ந்து கொள்ள அவர் மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.

ஏதோ கடவுளே முன்னால் வந்து அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவதாக வாக்குக் கொடுத்தது போன்ற எண்ணம் தோன்றினும் அதை மகனிடம் கொஞ்சமும் வெளிப்படுத்தவில்லை.
அவனின் எதிர்வினை எவ்வாறு அமையும் என்று தெரியாதே.

தன் வீட்டில் இருந்த யாழினியின் மனதில் பல்வேறு எண்ண அலைகள்.அவன் புறம் அவள் ஈர்க்கப்பட்டு செல்வது புரிந்திட தடுக்கும் வழி தெரியாது சகஜமாய் பேசிப் பழக முயன்று அவனிடம் நட்புக்காக கோரிக்கை விடுத்திருந்தாள்.அதில் அவளுக்குத் தவறாய் தோன்றவில்லை.

ஆனால்,மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை.தாயிடமும் பையனிடம் பேசிய விடயத்தை கூறினாலும் அவள் மனதுக்குள் தோன்றியிருக்கும் மாற்றங்களை வழமை போல் அவரிடம் உரைக்க முடியவில்லை.
ஒரு வித சங்கடம் அதில்.

ருத்ராவின் பார்வையும் தன் மீது ஆராய்ச்சியாய் படிந்து மீள்வது தெரிந்தாலும் அதை கண்டு கொள்ளாதது போல் நடந்து கொள்வது வழக்கமாய் இருந்தாலும் வெறுமனே ஈர்ப்பு என்று கூறி அவளை அடக்கி விட முடியவில்லை.

உள்ளுணர்வு தடுத்தது.ஈர்ப்பல்ல என்று தெரிந்திருந்தவளுக்கு அவனின் மீதான உணர்வுக்கு தவறியேனும் வேறெதும் பெயர் சூட்ட முடியவில்லை.மனம்  எந்த நிலையிலும் அதற்கு அனுமதிக்காது.இப்போது போல்..

நெற்றியை இருவிரல்களால் தேய்த்த படி நிமிர்ந்தவளுக்கு மனம் மட்டுப்படாது இருக்க அறையில் குறுக்கும் நெடுக்கும் நடக்காலானாள்,தாளாமல்.

                  ●●●●●●●●

தன்னிடத்தில் அமர்ந்து விழிகளை மூடி ஏதோ வேண்டிக் கொண்டிருந்தவளை புருவம் சுருக்கிப் பார்த்தாள்,ருத்ரா.

"என்னாச்சு இவளுக்கு..? கண்ண மூடி கோயில்னு நெனச்சு கடவுள் கிட்ட வேண்டிட்டு இருக்கா.." மனதுக்குள் எண்ணிய படி விழிகளைத் திறந்து பார்த்திட அப்போதும் பெண்ணவளின் வேண்டுதல் முற்றுப் பெற்றிருக்கவில்லை.

"யாழினி.."

"ஒரே ஒரு நிமிஷம் இரு.." அவசரமாய் மொழிந்தவளோ இரண்டு நிமிடங்கள் கடந்திட்ட பின்னரே விழிகளை திறக்க முறைப்புப் பார்வையை வீசிக் கொண்டிருந்தன,தோழியின் விழிகள்.

"என்னாச்சுடி எதுக்கு மொறச்சி பாத்துகிட்டு இருக்குற..?"

"மொறக்காம என்ன பண்ணுவாங்க..உன் கூட பேசலாம்னு ஆபிஸ் டைம்கு முன்னாடி பத்து நிமிஷம் ஏர்லியா வந்தா நீ என்னடான்னா கண்ண மூடி தியானம் பண்ணிகிட்டு இருக்க..?"

"அது தியானம் எல்லாம் இல்லடி..செல்ப் கன்ட்ரோல் பண்றேன்.."

"ஏன் எதுக்கு..?" தெரியாது கேட்டாலும் அவளிதழ்களில் ஓடிற்று,பலநூறு அர்த்தங்களை தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டிருக்கும் புன்னகையொன்று.

"எதுக்குன்னு தெரியாம தான் கேக்கறியா..? உனக்கு தெரியும்னு எனக்கும் தெர்யும்.." அலட்டலின்றி பதில் சொல்லிட மெதுவாய் அவளின் தலையில் கொட்டினாள்,ருத்ரா.

சிறிது நாட்கள் தான் பழக்கம் என்றாலும் யாழினியின் குணங்களில் வெகுவாய் ஈர்க்கப்பட்டிருப்பவளுக்கு தோழி மீது அலாதியான பாசம்.

"எனக்கு எதுக்காக இந்த செல்ஃப் கண்ட்ரோல்னு தெர்யும்..ஆனா சார் வந்ததும் நீ தான் பாக்கனும் அது எவ்ளோன்னு.." சிரித்த படி சொல்லி முடிக்கும் முன்னமே அழுத்தமான காலடியோசை.

திரும்பாமலே யாரென்று தெரிந்து கொள்ள ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்ட படி அவள் திரும்ப " குட் மார்னிங்க்.." என்றவனின் இதழ்களில் கொஞ்சமே கொஞ்சமாய் தேடிப் பார்த்தால் மட்டும் தெரியக்கூடியதாய் ஒரு மென் புன்னகை.

பையன் முன்னே நின்றால் வேறெதுவும் கருத்தில் பதியாத நிலையில் இருப்பவளின் விழிகளில் இருந்து அந்தப் புன்னகை தப்பித்து விடுமா..?

ஒரு கணம் உறைந்து மறு கணம் மீண்டு பதிலுக்கு "குட் மார்னிங்" சொல்லி விட்டு அவள் கணினியில் பார்வையைப் பதிக்கும் அந்த நொடிகளில் அவள் உயிருக்குள் உருமாற்றம்.

பையனுக்கு எந்த விதமான தடுமாற்றமும் இல்லை போலும்.அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்து தன் வேலையில் கவனம் செலுத்திட பையன் அமர்ந்த அரவம் கேட்டதும் ருத்ராவின் தோற்பட்டையை ஐவிரல்களால் பற்றிக் கொண்டு சாய்ந்து விட்பாள்,தோற்புயத்தில்.

"ஏய் என்னாச்சுடி..?" பையன் இருப்பது தெரிய கிசுகிசுப்பாய் கேட்டவளுக்கு பதில் சொல்ல அவளுக்கு சில வினாடிகள் அவசியமாகிற்று.

"என்னடி இவ்ளோ அழகா இருக்காரு.." விழிகளில் ஆச்சரியத்தை தேக்கி அவள் கேட்டதில் கொஞ்சமேனும் பொய்யில்லை என்பதற்கு அவள் விழிகளே சாட்சி.

சட்டென புரிந்தது தோழிக்கு,அவனின் புன்னகைக்குத் தான் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று.

"இது உனக்கே ஓவரா தெரில.."தோழியின் கூற்றில் வெடுக்கென எழுந்து தீயாய் முறைத்தாள்,இதழ் கடித்து.

"நா எதுக்கு டி ஓவரா பண்ணப் போறேன்..நெஜமாடி சும்மாலே அந்த மனுஷன் அழகு..இதுல சிரிச்சு இன்னும் அழகா இருக்காரே.." இதழ் பிதுக்கி மெதுவாய் கூற ஓரக்கண்ணால் பையனின் முகத்தை உரசினாள்,தோழி.

ஏனோ பையன் அவளின் வார்த்தைகளுக்குப் பின் இப்போது அழகாய்த் தெரிவது போன்ற பிரம்மை.

அவளுக்குமே பல முறை யோசனை வந்திருக்கிறது தான்,
பையனின் முகத்தில் வடுக்களும் பருக்களும் இல்லாவிடின் அவனுக்கு நிச்சயம் ஆளை இழுக்கும் வசீகரத் தோற்றம் கிடைத்திருக்கும் என்பது.

பலரின் பார்வை பையனின் மீது அறுவறுப்புடன் படிவதைக் கண்டு கோபம் வந்தாலும் யாழினியின் அளவு கோபப்படுவதில்லை என்று அவளுக்கே தெரியும்.ஆனால்,தோழியின் பார்வை அவன் மீது ஆர்வமாய் படிவது கண்டு அவளுக்குமே அதிர்வு தான்.

யாராலுமே இரசிக்கப்படாதவர்களையும் யாரோ ஒருவர் நேசிப்பது தான் காதலின் விந்தை என்பது அவளுக்கு மறந்து தான் போயிருந்தது.

"பாரு சார் அழகா இருக்காருல.." விழிகள் மின்ன கேட்டவளின் கேள்விக்கு ஆமோதிப்பாய் தலையசைக்க அழகாய் சிரித்தவளைக் கண்டு அவள் உணர்வது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

"என்ன லவ் பண்றியா டி..?"

"உன் நார வாய மூடு..லவ் எல்லாம் இல்ல.."

"அப்போ.."

"சொல்லத் தெரில..ஆனா அந்த ஸ்மைல பாக்கும் போதே ஹார்ட்டு ஒரு பக்கமா குளிர்ந்து போகுது.."

"அப்போ அடுத்த பக்கம்..?"

"தோலை கிழிச்சுகிட்டு அந்த சிரிப்பு பின்னாடி பறந்து போகுது.."

"கடவுளே.." தலையில் கை வைத்தவளுக்கு எங்காவது முட்டிக் கொள்ளத் தோன்றியது.

"உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா ருத்ரா..?"

"என்னடி..?"

"நா ஒருத்தன சொல்லுவேன்ல..ஸ்கூல் டைம்ல கருவாச்சி குண்டச்சின்னு கலாய்ச்சிகிட்டு திரிவான்னு..எங்கம்மாவோட ப்ரெண்டு பையன்..எங்க ஸ்கூல்ல படிச்சான்னு.."

"யாருஉஉஉஉ..ஆஆஆ..அந்தப் பையன்..அன்னிக்கு சிக்னல்ல வச்சி காட்டித் தந்த..அவன் தான.."

"ஆமா..அவனே தான்.."

"சரி அந்த பையனுக்கு என்னாச்சு..?"

"அந்த மன்கியும் நம்மள மாதிரி இந்த கம்பனி பரான்ச்ல தான் வேல பாத்துட்டு இருந்தான்..இப்போ அவன இங்க மாத்திட்டாங்டளாம்..வித் ப்ரமோஷன்..நம்ம ராகவி மேடத்துக்கு ப்ரமோஷன் வந்து இருக்குல..அவங்க எடத்துக்கு இந்த மன்கி தான் வருதுன்னு அம்மா சொன்னாங்க..கேக்கும் போதே பயர் ஆகுது..என்ன பண்ண மரியாத கொடுத்து தான ஆகனும்..நம்மள விட ஒரு படி மேல இருக்கான்ல.." நொந்த படி ஒப்புவித்தவளுக்கு அவனைப் பற்றி நினைக்கும் போதே எரிசிசலாய் வந்தது.

"ஆமா அந்த பையன் பேர் என்ன..?"

"சஞ்சீவ்..ஹா ஹா சட்டிபான சஞ்சீவ் னு தா நாங்க சொல்லுவோம்.."

"எதே சட்டிபான சஞ்சீவா..?" பெயரை உச்சரிக்கும் போதே சிரித்து விட்டாள்,ருத்ரா.

"ஆமா..முன்னவெல்லாம் நாங்க வெளயாடும் போது சின்ன சட்டி பான எல்லாம் அவன் தான் கொண்டு வருவான்..ஹா ஹா அதனால தான் அந்தப் பேரு.."

"எனக்கென்னமோ இந்த லொள்ளு வாய் தாங்காம தான் அந்த பையன் உன்ன வச்சி கலாய்ச்சி இருக்கார்னு தோணுது.."

"அட போடி..அந்த மன்கி மனசுல அவன் அழகுன்னு  நெனப்பு..அதான் அப்டி.." சிரித்த படி கிசுகிசுத்தவர்களின் சத்தம் பையனின் காதை எட்டினாலும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெளிவாய்ப் புரியவில்லை.

ஒருவேளை அவள் பேசியவை பையனின் செவியில் சரியாய் அலைமோதி இருந்தால் சில தவறான புரிதல்களை தடுத்து இருக்கலாமோ..?
விதி வலியது.

"யாழினி ருத்ரா வர்க்ல கான்சன்ட்ரேட் பண்ணுங்க.." அதட்டலாய் வந்த குரலுக்கு பயந்து அடுத்த நொடி அமைதியாகி இருந்தனர்,இருவரும்.

காலை உணவுக்கான இடைவேளை நேரம் அது.

தனியாக உண்கிறேன் என அடம் பிடித்த கார்த்திக்கை வம்படியாய் இழுத்துக் கொண்டு வந்திருந்தாள்,யாழினி.

எத்தனை முறை கூப்பிட்டும் மறுப்பு சொன்னவனிடம் "நீங்க தான சார் ப்ரெண்டுன்னு சொன்னீங்க..அப்றம் எதுக்கு சேந்து சாப்ட வர மாட்டேங்குறீங்க..?" வாடிய முகத்துடன் அவள் கேட்க அவனுக்குள்ளும் ஏதோ பிசைந்தது.

மீண்டும் மறுத்தவனிடம் அவள் அதே வசனத்தை அடித்து விட பொறுக்காமல் கிளம்பி இருந்தான்,அவர்களுடன்.

என்றுமில்லாமல் சிற்றுண்டிச் சாலையின் நடுவில் இருந்த மேசையில் அமர்ந்திருந்தவனுக்கு ஒரு வித அசௌகரியமாய் இருக்க விழிகளால் யாழினியிடம் கெஞ்சினாலும் அசரவில்லை,அவள்.

யாழினியும் ருத்ராவும் ஒரு புறம் அமர்ந்திருக்க அவர்களுக்கு முன்னே பையனும் அஜய்யும்.

எப்போது எழுந்து கொள்வோம் என்கின்ற முனைப்புடன் பையன் அல்லாடிக் கொண்டிருக்க கண்டும் காணாமல் இருந்தான்,தோழன்.

அவரவருக்கான உணவும் காபியும் வர தன் தட்டில் இருந்து வந்த வாசனையிலேயே யாழினியின் முகத்தில் புன்னகை.

வெங்காய தோசையும் மெதுவடையும் தான் தனக்கென வருவித்து இருந்தாள்.அவளின் முக பாவத்தை பார்த்த பையனின் இதழில் மெல்லிய முறுவல் பிரசன்னமாக நல்ல வேளை அவள் காணவில்லை.இல்லையென்றால் ருத்ராவின் பாடு தான் திண்டாட்டம் ஆகியிருக்கும்.

"என்ன தங்கச்சீ..தோசன்னா அவ்ளோ இஷ்டமா..?"

"ஆமாண்ணா..வெங்காய தோசயும் மசால் தோசயும் ரொம்ப புடிக்கும்..அதுவும் இங்க..செம்மயா இருக்கும்..வந்த மொத நாளே நா அடிமயா ஆகிட்டேன்.." சிலாகித்த படி கூறியவளின் விரல்களும் செவ்வனே தன் வேலையை செய்தன.

"ஆமாண்ணா..நீங்க சாப்டதில்லயா..?"

"நாங்க அவ்ளவா சாப்ட இங்க வர மாட்டோம்.." இயல்பாய் அஜய் சொல்ல ஒரு நிமிடம் அங்கு பேச்சற்ற மௌனம்.

"அதுக்கென்ன இனிமே வந்துட்டா போச்சு..என்ன சார் வருவீங்க தான..?" கனமான சூழ்நிலையைக் கலைக்க அவள் கேட்க பையனிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லை.

"அதுக்கென்னமா சார இழுத்துட்டு வந்தா சரியாய்டும்.." தன் பங்கிற்கு அஜய்யும் கூற  ஏனோ ஒரு நிறைவு பையனின் மனதில்.

"ஆமா..இன்னிக்கி புதுசா ஒருத்தர் ஜாய்ன் பண்ணிருக்காரு நம்ம ஆபிஸ்ல தெரியுமா யாருக்காச்சும்..?"

"ஆமாண்ணா சஞ்சீவ் தான பேரு.." அலட்டிக் கொள்ளாமல் கூறிய யாழினியின் கூற்றில் பையனின் விழிகளில் வினா.

"உங்களுக்கு எப்டி தெரியும் யாழினி..?" தற்செயலாய் மரியாதை கொடுத்து அழைத்து விட அவளுக்குள் சுணக்கம்.

"அது ஒரு பெரிய கத சார்.."

"சரி தங்கச்சி நீ சொல்லுமா..நாங்க கேக்க ரெடி.." அஜய் சொல்ல தோழனின் முகத்திலும் அதே ஆர்வம்.

"எங்கம்மாவுக்கு ஒரு பெஸ்ட் ப்ரெண்டு..அவங்க பையன் தான் இவன்..சரியான மன்கி..எனக்கு அப்போல இருந்தே அவன புடிக்காது..எப்ப பாரு வம்பிழுத்துட்டே இருப்பான்..மன்கி.."

"தங்கச்சி கொஞ்சம் மெதுவா பேசுமா..யாராச்சும் கேட்டா நம்மள சாத்திருவாங்க.."

"எதுக்குண்ணா இவ்ளோ பயந்து கிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..சார் தான் வம்புன்னா பத்தடி தள்ளி நிப்பாருன்னா நீங்களுமா..?" பையனை ஒரு பார்வை பார்த்து விட்டு சலித்துக் கொள்ள அஜய்யின் இதழ்களில் சிறு புன்னகை கூத்தாடியது.

"ஆனா தங்கச்சி நானுந்தான் காலைல அந்தப் பையன பாத்தேன்..பாக்கறதுக்கு அம்சமா இருக்கான்..அவனப் போய் கொரங்குன்னு சொல்றியேமா..?"

"அது உங்களுக்கு வேணா அழகா இருக்கலாம்..என்னோட கண்ணுக்குன்னா அப்டி தோணலண்ணா..அழகுங்குறது அவங்க அவங்கள பொருத்தது தான.."ஓர விழியால் பையனை ஸ்பரிசித்த படி சொல்ல அவனின் கவனம் முழுக்க காபியை உறிஞ்சுவதில் தான் இருந்தது.

நால்வரும் உணவை முடித்துக் கொண்டு கிளம்பும் வழியில் எதிர்ப்பட்டான்,சஞ்சீவ்.

பையனைத் தேடித் தான் வந்து கொண்டிருந்தான்,
தன்னை அறிமுகப்படுத்தி சில தகவல்களை கேட்டுக்கொள்ள.

"ஆத்தாடி மன்கி வருது.." சத்தமாய் முணுமுணுத்தபடி தலையை குனிந்த படி பெண்ணவள் பாதம் வைக்க அவளின் நடத்தையை வைத்தே யாரென்று ஊகிக்க முடிந்தது,சஞ்சீவால்.

"இந்த கருவாச்சி இங்க என்ன பண்றா..? இன்னும் அதே மாதிரி குண்டா தான் இருக்கா..குண்டு யான.." தனக்குள் நினைத்ததை காட்டிக் கொள்ளாது பையனை நோக்கி நடந்து வந்தவனின் பார்வை ஒரு நொடி மாறினாலும் தாமதியாது இயல்பாக அவனின் பார்வை மாற்றத்தை கண்டு கொண்ட யாழினிக்கு அப்படி ஒரு கோபம்.

"இவனுங்களால இந்த மனுஷன் இப்டி இருக்காரு.."  எரிச்சிலுடன் திட்டியவளோ விடுவிடுவென நடந்து செல்ல புரியாது விழித்தாள்,தோழி.

தேடல் நீளும்.

2024.04.20


Leave a comment


Comments


Related Post