இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...32 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 26-04-2024

Total Views: 30048

லபோ திபோவென பாட்டியின் ஓங்கிய குரல் வீடு முழுக்க எதிரொலித்தது. மாடி அறையில் பூச்செண்டின் மடியில் படுத்து அவள் விரல்களை வருடியபடி குறும்புச் சிரிப்புடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த தரணி ஒரு நொடி புருவம் சுருக்கி “பொக்கே… அப்பத்தா சத்தம் கேக்குது பாரு…” என்று கூற அவளும் காதை திருப்பி கூர்ந்து கவனித்து “ஆமா மாமு… கெழவி எதுக்கு கத்துதுன்னு தெரியலையே…” என்று விழிக்க பட்டென எழுந்தவன் அவளையும் அழைத்துக் கொண்டு கீழே இறங்கினான். இதற்குள் மற்றவர்களும் எழுந்து கூடத்திற்கு வந்திருந்தனர்.


“என்னாச்சும்மா…? எதுக்கு சத்தம் போடுற…?” தூக்க கலக்கத்தில் மணிவாசகம் சற்று எரிச்சலுடன் கேட்க “பெரிய கொடுமை நடந்துருச்சு போலடா… நல்ல மனுசனை எந்த பாவிப்பய இப்படி பண்ணினாய்ன்டு தெரியலையே… என்னமோ பேரு சொன்னாய்ங்களே…” ஏதேதோ பிதற்றியபடி இங்கும் அங்கும் நடமாடினார் பாட்டி.


“எத்த… சொல்றத கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுங்க… நெஞ்செல்லாம் படபடங்குது…” பனியனுடன் நின்றிருந்த மாணிக்கவேல் துண்டை எடுத்து தோளில் போட்டபடியே கூறினார்.


“பால்பாண்டி தேவர கொன்டுபுட்டாய்ங்களாம் மாப்ள…” வாயில் அடித்துக் கொண்டு கூற “எம்மா… என்ன சொல்ற…? செத்த முன்னாடிதானே நான் அவரை பார்த்து பேசினேன்… உனக்கு எப்படி தெரியும்…? யார் சொன்னா…?” மணிவாசகத்திடம் பதற்றம் தொற்றிக் கொள்ள மற்றவர்களும் பதட்டத்துடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.


“ஒறக்கம் புடிக்கலேன்டு செத்த காலாற நடக்கலாம்னு வீதி முக்கு வரைக்கும் போனேன்… அங்க நம்மூரு எளந்தாரி பயலுக ஏழெட்டு பேர் முக்கு திட்டுல ஒக்காந்து பேசிட்டு இருந்தாய்ங்க… நெஞ்சே அடைச்சு போச்சு… அதேன் ஒடனே ஓடியாந்தேன்…” பாட்டி மூச்சிரைக்க கூற 


“நம்மூர்ல எப்பம்மா இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கு…? அப்படி நடந்திருந்தா இந்நேரம் ஹே ஹேன்டு ஊரே அமளி துமளியாகி இருக்காது…. பாரு… கொய்யின்டு ஊரே அமைதியா இருக்கு… நீதேன் கத்திட்டு கெடக்க…” வாசல்வரை சென்று சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு உள்ளே வந்து கூறினார் மணிவாசகம். 


“அட கிருசகெட்ட பயலே… கொலகாரப்பய பேரையும் சொன்னாயாங்கடா… ஆ..ங்… விசய்… விசய்ன்டு சொன்னாய்ங்க… நல்ல மனுஷன்.. ஊருக்கு நல்லதுதானே செய்வாரு… நீ என்னை விசாரணை பண்றத விட்டுட்டு என்ன ஏதுன்டு போய் பார்க்க மாட்டியா…? தேவர கொன்னுட்டாய்ங்கடா…”


பாட்டியின் குரல் ஓங்கி ஒலிக்க இதற்குள் முகிலனும் தரணியும் பாட்டி கூறிய வீதி முக்கினை நோக்கி வேகமாக நடையிட்டுச் செல்ல அங்கு அவர் கூறியது போன்றே சில இளவட்டங்கள் ஏதேதோ பேசியபடி கலைந்து செல்ல அந்த கூட்டத்தில் பரமசிவனும் இருந்தான்.


“டேய் பரமு…” சத்தமாய் அழைத்தபடி வேகமாய் நெருங்கி ஓடினான் முகிலன்.


“முகிலு… இந்த நேரத்துல இங்க என்னடா பண்ற…? நாளைக்கு உனக்கு வரவேற்புல்ல…”


“அது இருக்கட்டும்… நீங்க எல்லாம் இங்கே என்னடா பண்ணிட்டு இருக்கீங்க…?”


“தூக்கம் வரல பங்கு… எல்லாரும் செத்த நேரம் ஊரு கதை பேசுவோம்…”


“எங்க அப்பத்தா ஏதோ சம்பவம் நடந்துட்டதா சொல்லுச்சேடா...”


“சம்பவமா…?” குழப்பமாய் கேட்டபடி தரணி முகிலனுடன் இணைந்து தானும் நடக்கத் தொடங்கினான் பரமசிவன்.


“பால்பாண்டி தேவர யாரோ கொன்னுட்டதா சொல்லுச்சே…”


“யாத்தே… அது எப்போ…? இந்த ஊருக்கு காவலா நாங்க இத்தனை பேர் சுத்திட்டு இருக்கோம்… எவன்டா அவர்மேல கைய வப்பாய்ன்… நாங்க இங்ஙனதான இருக்கோம்… இரு… நான் அவர் வீடுவரைக்கும் போயிட்டு வாரேன்…” வேகமாய் ஓட முயன்றவனை இழுத்துப் பிடித்தவன் “டேய் நீங்க எல்லாரும் பேசிக்கிட்டதாதான் அப்பத்தா சொல்லுச்சு…” என்றான் குழப்பம் தீராமல்.


“என்னடா உளற்ர…?” தலையை சொரிந்தான் பரமன்.


“விஜய்னு யாராவது நம்ம ஊர்ல இருக்காங்களா…?”


“ஆமா… முத்து மாமாவோட மகன் பேர் விஜய்தேன்… ஆனா அவே வெளிநாட்டில இருக்கானே…” பரமன் கூற இப்போது முகிலன் குழப்பமாய் தலையை ஆட்டினான்.


அனைவரும் பேசியபடியே அவர்களின் வீட்டை நெருங்கி இருக்க “பால்பாண்டி தேவர் தெருவே அமைதியா சத்தம் இல்லாம இருக்கு… எந்த சம்பவமும் நடந்த மாதிரி தெரியல மச்சா…” என்றபடி வேகமாய் வந்து நின்றார் மாணிக்கவேல்.


மொத்த குடும்பமும் வாசலில் குழப்பத்துடன் நிற்க “அப்பத்தா… உங்க காதுல என்ன கேட்டீங்க…? யார் சொன்னா…? எந்த தப்பும் நடந்த மாதிரி தெரியல… இதோ இவரும் அந்த கூட்டத்திலதான் இருந்தாரு… அவரே குழப்பமா முழிக்கிறார்… எதை வச்சு அந்த தேவரை கொன்னுட்டாங்கன்னு சொன்னீங்க…?” கேட்டான் தரணி.


“கெழவி… தூக்க கலக்கத்துல கனவு கண்டு எதையாவது ஒளறிக்கிட்டு இருக்கியா… எல்லாரையும் முச்சந்தியில் நிக்க வச்சு பயமுறுத்திட்டு இருக்க… என்ன கேட்டு தொலைஞ்ச…? சொல்லு…” பாய்ந்தாள் பூச்செண்டு. 


“அடேய் பரமு… நீங்கதானடா மாத்தி மாத்தி சொன்னிங்க… தேவரகொன்டாய்ன் தேவர கொன்டாய்ன்னு கொன்டவன் பேரை கூட சொன்னீகளே… விசய்னு சொன்னீகள்ல… காலையில போயி கருத்தா சோலிய முடிச்சுட்டு வந்துடணும்னு பேசிட்டு இருந்தீகளே… நான் என் காதால கேட்டேன்… எடுபட்ட ஈனப் பயலுகளா… கூட்டு களவாணித்தனம் பண்ணி ஒரு பெரிய மனுஷனை கொன்டுட்டு ஒன்னும் தெரியாதவே மாதிரி நடிக்கிறியோ… இந்த ஊரு சண்டியராட்டம் நெஞ்ச நிமித்திக்கிட்டு திரியிறவே நீதான… கொலகாரப் பயல எங்கடா ஒளிச்சு வச்சிருக்கீக… அந்த தேவரோட பொணத்த எங்க போட்டு வச்சிருக்கீக… மணி… போலீசுக்கு போனை போடு… சல்லிப் பயலுக எல்லாரையும் கட்டி தூக்கிட்டு போயி செயில்ல போடச் சொல்லு…”


பரமசிவனின் சட்டையை பிடித்து உலுக்கியபடி பாட்டி ஆவேசமாய் சத்தமிட்டுக் கொண்டிருக்க கூச்சல் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்களும் அங்கு கூடத் தொடங்கினர்.


“டேய் முகிலு… உன் அப்பத்தாளுக்கு பேய் இறங்கிருச்சு போலடா… எங்கயாவது கோயிலுக்கு இழுத்துட்டு போயி மந்திரிச்சிட்டு வாங்க… என்னென்னவோ உளறுது…” பாட்டியின் உலுக்கலில் ஆடியபடியே சொன்னவனை பாட்டியிடம் இருந்து பிரித்தான் தரணி.


“அப்பத்தா… அமைதியா இருங்க…” என்றவன் பரமசிவனிடம் திரும்பி “ஏதோ மிஸ் கம்யூனிகேஷன்னு நினைக்கிறேன்… நீங்க அப்படி என்ன முக்கியமான மேட்டர் பேசிட்டு இருந்தீங்க…? அப்பத்தா காதுல ஏதோ தவறுதலா விழுந்திருக்கணும்…” என்று சொல்ல தன் நெற்றியை கீறியபடி ஒரு சில நொடிகள் யோசித்தவன் பட்டென கண்கள் விரித்து அடுத்த நொடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சத்தமிட்டு சிரிக்கத் தொடங்கினான்.


“எலவெடுத்த பயலே… கூட்டுச் சேர்ந்து ஒரு பெரிய மனுசன கொன்டுபுட்டு இளிப்பு வேண்டி கிடக்கா ஒனக்கு இளிப்பு…” தன் கையில் வைத்திருந்த குச்சியால் அவன் தலையில் ஒரு போடு போட்டார் பாட்டி. 


அந்த குச்சியோடு சேர்த்து பாட்டியை இழுத்துப் பிடித்தவன் “அட கூறுகெட்ட தண்டட்டி கெழவி… கொஞ்ச நேரத்துல ஊருக்குள்ள பெரிய கலவரத்தை ஏற்படுத்த பார்த்தியே… நாங்க என்ன பேசிணோம்னு திரும்ப சொல்லு…” அவரது சுருங்கிய கைத்தோலை பிடித்து இழுத்தபடி கேட்டான் பரமசிவன்.


“எனக்கு என்னடா பயம்…? விசய் தேவர கொண்டுட்டாய்னு பேசிட்டு இருந்தீக…” பாட்டி சொல்லி முடிக்கும் முன் மீண்டும் வெடித்துச் சிரித்தவன் முகிலன் தோளில் கை போட்டு “ஏதாச்சும் புரியுதா பங்கு… இந்த கெழவி எதையும் எதையும் கோர்த்து விட்ருக்கு பாரு…” என்றவன் அடக்க முடியாமல் மீண்டும் சிரிக்க நங்கென்று அவன் தலையில் கொட்டி சிரிப்பை நிறுத்தி இருந்தார் மாணிக்கவேல்.


“எல்லாரும் என்னவோ ஏதோன்டு வெடவெடத்து கெடக்கோம்… தெளிவா எதையும் சொல்லாம நீ பல்ல போட்டு இளிச்சுக்கிட்டு இருக்க…” கோபமாய் கத்தினார்.


அவர் கொட்டிய இடத்தை தேய்த்துக் கொண்டவன் “முகிலு… ரெண்டு நாளா பரங்கிமலை பக்கத்துல தெலுங்கு பட சூட்டிங் நடந்துட்டு இருக்கு… ஸ்ரீலீலாவும் விஜய்தேவரகொண்டாவும் வந்துருக்காக.. எல்லாரும் நாளைக்கு ஷூட்டிங் பார்க்க போகலாம்டு பேசிட்டு இருந்தோம்… விஜய்தேவரகொண்டான்னு சொன்னதைத்தான் உங்க கெழவி விஜய் தேவர கொண்டுட்டாய்னு தப்பா திரிச்சு கதையை உருவாக்கிருச்சு… இப்ப புரியுதா…” சொல்லி முடித்து மீண்டும் வெடித்துச் சிரிக்க மொத்த குடும்பமும் கொலைவெறியுடன் பாட்டியை பார்த்தது.


“காலம் போன கடைசியில கட்டைய ஓரமா சாய்க்காம ஊர் கலவரத்தை உருவாக்குறியா கெழவி… விஜய்தேவரகொண்டா சினிமா நடிகர்… அந்த மனுஷன் பேரை வச்சு நீ நடக்காத கொலையை நடத்திப்புட்ட… எம்மா… ராத்திரியானா இந்த கெழவிய பெரிய நாய் சங்கிலி போட்டு தூணோட கட்டிப் போடு… எம்புட்டு பேர் தூக்கத்தை கெடுத்துட்டு பிபிய ரெய்ஸ் பண்ணிட்டு எகத்தாளமா நிக்குது பாரேன்…” வரிந்து கட்டிக்கொண்டு பூச்செண்டு பாட்டியிடம் எகிற மீராவோ சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றை பிடித்தபடி வீட்டிற்குள் ஓடி இருந்தாள்.


சிறியவர்கள் அனைவருக்கும் சிரிப்பு முட்டிக்கொண்டு வர பெரியவர்கள் தலையில் அடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். 


“முகிலு… அகில் அக்கினேனி ராம் பொத்தினேனி இவுக எல்லாரும் கூட அடுத்தடுத்து ஷூட்டிங் வாராக… கெழவி எதையாவது எசகு பெசகா கேட்டு வச்சு ஏட்டிக்கு போட்டியா ஒளறிக்கிட்டு இருக்கப் போகுது… பூச்செண்டு சொன்ன மாதிரி சங்கிலி போட்டே கட்டி வைங்க…” சொன்ன பரமசிவனின் மேல் பாட்டி குச்சியை விட்டெறிய அவன் அங்கிருந்து ஓடி இருந்தான். மீண்டும் சத்தமாய் சிரித்தபடி அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.


“பேரு வைக்கிறாய்ங்க பாரு பேரு… தேவரகொண்டாய்ன் அய்யர அடிச்சாய்ன்டு… இப்படி பேரு வச்சா அப்படித்தேன் நெனைக்க முடியும்…” கெத்து குறையாமல் புலம்பியபடியே பாட்டி தன் இடத்தில் வந்து படுத்துக்கொள்ள “அப்பத்தா அல்டிமேட்…” என்று சிரித்தபடி பூச்செண்டின் தோளில் கை போட்டபடியே மாடிக்குச் சென்றான் தரணி.


அவர்கள் இருவரும் மிகுந்த இணக்கமாக இருப்பதை அங்கு வந்தது முதலே பெரியவர்கள் அனைவரும் கவனித்திருக்க அனைவருக்கும் நிம்மதி கலந்த மகிழ்ச்சி. மறுநாள் காலை குளித்து முடித்து உற்சாகமாக கிளம்பி தயாரானான் தரணி.


“பொக்கே… சீக்கிரம் டிபன் முடிச்சுட்டு உன் ஸ்கூட்டியில தோட்டத்துக்கு போகலாம்டி… உன்கூட சேர்ந்து ஜாலியா சுத்தணும்…” உடம்பை ஒட்டிய டீ சர்ட் ட்ராக் பேண்ட் சகிதம் முகமெல்லாம் மின்ன பூச்செண்டின் எதிரில் நின்றான்.


“மாமு… மதியமே நாம மதுரைக்கு கிளம்பணும்… ஞாபகம் இருக்குல்ல…”


வழக்கம்போல் அவளை தன் உயரத்திற்கு தூக்கி வயிற்றில் அமர்த்திக் கொண்டவன் “ஒரு மணி நேரம் மட்டும் போயிட்டு வந்துரலாம் பேபி… அன்னைக்கு சிங்கிளா சுத்தினேன்… இன்னைக்கு உன்னோட மிங்கிலாகி சுத்துறேனே…” அவள் கன்னத்தில் மீசை உரச கெஞ்சலாய் கூறினான்.


“மீரா அக்கா கூட நம்ம ஊரை சுத்தி பாக்கணும்ன்னு சொன்னாங்க…” கன்னத்திலிருந்து கழுத்தோடு ஊர்ந்து கொண்டிருந்த அவன் இதழ் ஸ்பரிசத்தில் சிலிர்த்து நெளிந்தபடியே கூற “அவ புருஷன் கூட்டிட்டு போவான்… அவரவர் பிரவேஸியை அவரவர் எடுத்துக்கலாம்…” கிறக்கமாய் கூறி அவள் கழுத்தில் ஆழ்ந்து முத்தமிட்டான்.


“கெழவி விடணுமே… கேட்டு பார்க்கலாம்… இறக்கி விடுங்க மாமு… நீங்க அடுத்த வேலையை ஆரம்பிச்சிடாதீங்க…” சிணுங்கலாய் சொன்னவளை தலைநிமிர்த்தி பார்த்தவன் “அப்போ ஒரு மணி நேரம் நம்ம வேலைக்கு யூஸ் பண்ணிக்கலாமா…?” கிசுகிசுப்பாய் கேட்க அவன் தலையில் செல்லமாய் குட்டியவள் குதித்து இறங்கினாள்.


“உங்களுக்கு வேற நெனப்பே கிடையாது… வாங்க மொதல்ல…” அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கீழே இறங்கினாள். அனைவரும் குடும்பமாக அமர்ந்து காலை உணவை முடித்து மாணிக்கவேல் மணிவாசகம் முத்துராமன் மூவரும் மண்டபத்திற்கு கிளம்பி இருந்தனர்.


“புள்ளைகளா… நீங்க நாலு பேரும் செத்தவடம் தூங்கி எந்திரிச்சிருங்க… மதியம் சாப்பாட்டுக்கே மண்டபத்துக்கு போயிரணும்.. ரவைக்கு ரொம்ப நேரம் கால் கடுக்க நிக்கிற மாதிரி இருக்கும்… நான் வந்து எழுப்பறேன்… போய் படுங்க…” செண்பகம் கூற “அம்மா… நாங்க கொஞ்ச நேரம் தோட்டத்துக்கு போயிட்டு வர்றோம்… வந்த உடனே கிளம்பிடலாம்…” என்றான் தரணி.


“இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இங்கதானே இருக்க போறீக… நாளமய்க்கா நாளு போனா போகுது… எங்கேயாவது போயி கைய கால காயம் பண்ணிர கூடாது… பேசாம போயி தூங்கி எந்திரிங்க சாமி… அப்பதேன் போட்டோ புடிக்கும்போது மூஞ்சி தெளிவா இருக்கும்…” செண்பகத்தின் பேச்சுக்கு ஆட்சேபணை தெரிவிக்க முடியாது மீண்டும் நால்வரும் சென்று அவரவர் அறைக்குள் புகுந்து கொண்டனர்.


“காயம் பண்ணிக்க கூடாதுன்னு அம்மா ஃபீல் பண்றாங்க… இங்கே இருந்தா காயம் அதிகம்தானே ஆகும்…” கண் சிமிட்டியபடியே தரணி கூற அவனை முறைத்தவளை இழுத்து நெஞ்சில் போட்டுக் கொண்டான்.


“உங்களை ரொம்ப ஜென்டில்மேன்னு நினைச்சேன்… இந்த ரெண்டு நாளா என் காதே கூசுற மாதிரி பேசுறீங்க…” வெட்கத்துடன் கூறினாள் பூச்செண்டு.


“உன்கிட்ட மட்டும்தானே எல்லா விஷயத்துலயும் என்னால வெளிப்படையா இருக்க முடியும்… உங்கிட்ட ஜெனியூனா இருந்தா அப்புறம் எப்படி நமக்குள்ள இன்டிமேஸி இருக்கும்… உனக்கு இது பிடிக்கலேன்னா சொல்லு… ஒரு மாசமா உன்கிட்ட ஜென்டில்மேனாதானே நடந்துக்கிட்டேன்… அப்படியே இருந்துக்கிறேன்…” புருவத்தை ஏற்றி இறக்கி அவளிடம் கேட்க “இருங்களேன்… பார்க்கலாம்…” அவளும் புருவத்தை உயர்த்தியபடி பதில் அளித்தாள்.


“சவால் விடாதடி… கண்டிப்பா சொன்னபடி செய்வேன்…” அழுத்தமாய் கூறினான்.


“அதையும்தான் பார்க்கலாம்னு சொல்றேன்…” அவளும் அழுத்தமாய் பதில் அளித்தாள்.


“சரிடி… பெட் (bet)... நீயா மாமுன்னு ஆசையா என் பக்கத்துல வராம நான் உன்னை நெருங்கமாட்டேன்…”


“பாக்கலாமா…?”


“பாக்கலாம்…”


“அப்போ என் இடுப்புல போட்டிருக்கிற கையை எடுங்க…”


“நீ முதல்ல என் நெஞ்சில இருந்து உன் தலையை எடு…”


இருவரும் ஒரே நேரத்தில் விலக்கிக் கொள்ள “டீல்…” என்று பெருவிரலை உயர்த்தி முதுகு காட்டி படுத்துக் கொண்டனர்.




Leave a comment


Comments


Related Post