இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 26-04-2024

Total Views: 20811

செந்தூரா 21


பேரபிள்ளைகளின் மெளன நாடகத்தை கடைக்கண் பார்வையால் கவனித்திருந்த முத்துபாண்டி தொண்டையை செருமினார், “பேராண்டி முதலில் உன் பொண்டாட்டியை உன் அறைக்கு அழைச்சிட்டு போ” என்றார்.


மீண்டும் ரஞ்சிதம் ஆச்சி எதையாே பேச ஆரம்பிக்க, “புள்ளைங்களை சந்தோஷமா இருக்க விடுடி ரஞ்சி. அவங்க இரண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கட்டும், அப்போ தான் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்க முடியும். அந்த காலத்திலேயே நீ என்னை தனிக்குடித்தனம் போனா தான் ஜாலியா இருக்க முடியும்னு சொல்லலியா? என்ன இப்போ நம்ம பேத்தி சொல்றதுக்கு முன்னே பேரன் சொல்லிட்டான் அவ்வளவு தானே” என்று முத்துப்பாண்டி ரஞ்சிதத்தை பார்த்து கண்ணடிக்கவும்


“கிழவனுக்கு கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா பாரு” என்று நொடித்துக் கொண்டே ரஞ்சிதம் ஆச்சி அங்கிருந்து கோலை ஊன்றியபடி தள்ளாடிக் கொண்டே அவரசமாக அவர்களுக்காக ஒதுக்கப் பட்டிருந்த அறையில் புகுந்து கொண்டார்.


அதைபார்த்த அனைவரும் அப்போதிருந்த இறுக்கமான சூழ்நிலையை மறந்து கொல்லென்று சிரித்தனர். செந்தூரனும் சிரித்துக் கொண்டே தாராவை பார்த்தான். அவளும் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மாடிக்கு சென்றான்.


தாராவும் அவளின் அறைக்கு சென்றாள். செந்தூரன் கட்டிலில் அமர்ந்தபடி எதிரே இருந்த அவனுடைய புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். தாராவும் அவன் பார்வை செல்லும் திசையை பார்த்து இதை எப்படி மறந்து போனோம் என்று தலையில் கைவைத்துக் கொண்டாள். அவள் இருந்த மனநிலையில் அங்கே மாட்டப்பட்டிருந்த செந்தூரனின் புகைப்படம் பற்றிய நினைவே வரவில்லை.


சும்மாவே ஆடுவானே, இப்போ கால்ல சலங்கை கட்டிவிட்ட மாதிரி ஆடப்போறான் என்ற மனதிற்குள் நினைத்தவளாக, மெல்ல கட்டிலின் ஓரம் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.


“கட்டில்ல படுத்துகிட்டு என்னோட போட்டோவை பார்த்து என்னவெல்லாம் நினைச்சுப்ப தாரா” என்றான் அவள் காதருகே குனிந்து ஹஸ்கி வாய்சில்.


அவன் கேட்ட விதத்திலும் காதருகே அவன் மூச்சுக் காற்று கொடுத்த குறுகுறுப்பிலும் அவள் மேனி சிலிர்த்தது. அதை உணர்ந்த அந்த கள்வனோ வேண்டுமென்றே மீண்டும் அதே கேள்வியை கேட்டான், “சொல்லுடி என்ன நினைச்சுப்ப?” என்றான் அவள் காதில் அவனின் மீசை உரச


மெதுவாக தன் மூச்சுகளை வெளிவிட்டவள் தன்னை சமன்செய்துக் கொண்டு, “என்ன நினைச்சுப்பேன்னு சொல்றதை விட, எதை நினைச்சுக்கூட பார்க்கலைனு வேணும்னா சொல்றேன்” என்றாள் பற்களை கடித்துக் கொண்டு.


ஏதோ வில்லங்கமா சொல்ல போகிறாள் என்று புரிந்துவிட, அமைதி காத்தான் கணவன். “நீ என்னை கடத்தி கொண்டு போய் என்கிட்ட மோசமா நடந்துக்கிட்ட பாரு அதுமாதிரி நீ நடந்துக்குவனு ஒருநாளும் நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை” என்றாள் அழுத்தமாக


அவளை வெற்று பார்வை பார்த்து விட்டு நகர்ந்து கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கொண்டான் செந்தூரன். இருவருக்குமே தூக்கம் வரவில்லை.  தாரிகாவிற்கு அவன் தன்னிடம் நடந்துக் கொண்டதை மறக்கவே முடியவில்லை. தன் மாமனின் முதல் முத்தம், முதல் அணைப்பு எப்படி இருக்கும் என்று கற்பனையில் இருந்தவளுக்கு அவனின் ஆக்ரோஷமான அணைப்பும் வன்மத்துடனான முத்தமுமே அல்லவா பரிசாக கிடைத்தது?


அவன் அன்பின் ஆளுமையில் அவனிடம் அடங்கி போக காத்திருந்தவளுக்கு ஆக்ரோஷத்தின் ஆளுமையில் அல்லவா அடங்கி போக வேண்டியிருந்தது? அதை நினைக்க நினைக்க ஏனோ மனது தாங்க வில்லை. பொங்கி வந்த அழுகையை வாயைப் பொத்தி பெரும்பாடுபட்டு அடக்கினாள். இல்லையென்றால் மீண்டும் அவளிடம் அத்துமீறி நடந்துக் கொள்வானே!


அழுகையில் தாராவின் உடல் குலுங்குவதும், அதை அவள் அவனுக்கு தெரியாமல் மறைக்க வாயைப் பொத்திக் கொண்டு இருப்பதையும் பார்த்த செந்தூரனுக்கு முகம் இறுகி போனது. அவளையே அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான். அழுதுக் கொண்டே சிறிது நேரத்தில் தூங்கியும் போனாள். ஆனால் அவனுக்கு தான் தூக்கம் வரவில்லை. 


காலையில் புறப்படுவதற்காக அலைபேசியில் பதிந்து வைக்கப்பட்டிருந்த அலாரம் அடிப்பதற்காக காத்திருந்தான்.


காலை ஏழு மணி, அவினாசியில் இருந்த ஒரு வீதியில் மிகப்பெரிய ஒரு பங்களாவின் உள்ளே கார் செல்லவும் ஆச்சரியமாக செந்தூரனை பார்த்தாள் தாரிகா. வீடு வாங்கினேன் என்று சொன்னான் தான். ஆனால் இத்தனை பெரிய அரண்மனை போன்றதொரு வீட்டை  அவள் எதிர்பார்த்திருக்க வில்லை.


கேட்டிற்கும் வீட்டு வாசலுக்குமே அரை மைல் நடக்க வேண்டும் போலிருந்தது. இருபுறமும் தோட்டம், ஒருபக்க தோட்டத்தின் நடுவே ஒரு செயற்கை குளம். அடுத்த பக்கம் ஊஞ்சல் இருந்தது. சிறுவர்கள் விளையாட ஏதுவாக சறுக்குமரம் போன்ற சில விளையாட்டு உபகரணங்கள் இருக்கவும், கணவனை ஆராய்ச்சியாக பார்த்தாள்.


அவள் பார்வையின் கேள்வியை உணர்ந்துக் கொண்டவன், “இந்த வீட்டில் இருந்தவர்களுக்கு மூன்று குழந்தைகள், அவர்கள் விளையாடுவதற்காக இப்படி வடிவமைச்சிருக்காங்க. இந்த தோட்டத்தின் அமைப்பை பார்த்துவிட்டு நாளைக்கு நம்ம குழந்தைகளும் விளையாட நல்லாயிருக்கும்னு தோணுச்சு, அதனால யோசிக்காமல் இந்த வீட்டையே வாங்கிட்டேன்” என்றான் செந்தூரன் புன்னகையுடன்.


“நிறைய செலவாகியிருக்கும் போலயே? கதிரேசன் மாமாக்கு கூட தெரியாமல் தானே வீட்டை வாங்கினீங்க?” என்றாள் தாரிகா கேள்வியாக. ஏது இவ்வளவு பணம் என்பதை மறைமுகமாக கேட்கிறாள் என்று புரிய, “ஹலோ மேடம், நான் வெளிநாட்டில் சும்மா சுத்திட்டு இல்லை. வேலை செஞ்சு தனியா பிசினஸ் தொடங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கேன். என்னோட காதல் மனைவிக்காக இந்த வீட்டைக் கூட வாங்க முடியாதா? இன்னும் கொஞ்ச நாள்ல என்னோட பார்ட்னர்ஸ் எல்லாம் வருவாங்க. அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோ அய்யாவோட பெருமையை”  என்று காலரை தூக்கி காட்டினான் பெருமையாக


“இந்த வீட்டை பார்த்தா தாத்தா பாட்டி அத்தை மாமா எல்லாம் எவ்வளவு சந்தோஷப்படுவாங்க? அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று தன்னையும் மறந்து அவனிடம் சாதாரணமாக பேசுவது போல பேசினாள்.


“இப்போதைக்கு நமக்கு கொஞ்சம் தனிமை தேவைனு தோணிச்சு. எல்லாரும் உன்னை எதாவது சொல்லிட்டே இருப்பாங்க. இல்லைனா எதாவது எதிர்மறையா பேசி அவங்களும் பயந்து உன்னையும் பயமுறுத்துவாங்க. கொஞ்ச நாள்ல நாம நல்லா வாழறதை பார்த்து பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் மறந்துடுவாங்க. அதுவரைக்கும் நாம தனியா இந்த வீட்டில் இருப்போம். அப்புறம் எல்லாரையும் நம்ம வீட்டுக்கு வரவழைச்சுக்கலாம்” என்றான் செந்தூரன்.


தனக்காக எப்படி எல்லாம் யோசிக்கிறான் என்று உள்ளூர பெருமையாக இருந்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.


உள்ளேயிருந்து வந்த கவின், “வாடா புது மாப்பிள்ளை, என்ன சொல்லுது தங்கச்சிமா” என்றான். 


“நீயே அவகிட்ட நேரா கேளு” என்றான் செந்தூரன்.


“தங்கச்சிமா இங்கேயே நில்லுங்க. சமையல்காரம்மா வந்து ஆரத்தி எடுப்பாங்க. அப்புறமா வீட்டில் விளக்கேற்றி விட்டு பால் காய்ச்சி எல்லாருக்கும் கொடு” என்றான் கவின்.


கவினுடைய இலகுவான பேச்சு தாராவுக்கு பிடித்து போனது “சரி அண்ணா நீங்க சொல்ற மாதிரி செய்திடலாம்” என்றாள் புன்னகை முகத்துடன்.


அதன் பிறகு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு சமையல்காரம்மா அவளருகில் வந்து, “முன்னாடி இருந்தவர்களுக்கு சமையல் வீட்டு வேலை செய்து முடிச்சுட்டு கிளம்பிடுவேன். உங்களுக்கும் எதுவும் பிரச்சினை இல்லையே” என்று கேட்டார். தாரிகா கணவனை பார்க்க, “சரி அன்னம்மா நீங்க கிளம்புங்க” என்றான்.


அதன் பிறகு செந்தூரனும் கவினும் அவர்கள் தொடங்க போகும் தொழிலைப் பற்றி தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தான். தாரிகாவிற்கு போர் அடிக்கவே வீட்டை சுற்றி பார்த்தாள். ஒரே நாளில் தன் நண்பனை வைத்து வீட்டை அவளுக்கு பிடித்த மாதிரி மாற்றம் செய்திருந்தான் செந்தூரன். ரசனையாக எல்லா அறையையும் பார்த்துக் கொண்டு வந்தவள் ஒரு பெரிய அறையில் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த கட்டிலை பார்த்து அது அவர்களுக்கான படுக்கை அறை என்பதை உணர்ந்து கொண்டாள்.


எதிர் சுவரில் மிகப்பெரிய ஓவியம் அதில் செந்தூரனும் தாரிகாவும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி காதலுடன் பார்த்துக் கொள்வது போல தத்ரூபமாக வரையப்பட்டு இருந்தது. “ஒரு நாளாவது என்னை இப்படி பார்த்திருக்கிறானா? ஓவியத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்று மனதிற்குள் கணவனை வறுத்தடுத்தாள்.


அவள் படுக்கையறைக்குள் செல்வதை பார்த்த செந்தூரன் சத்தமில்லாமல் வந்து அவளின் பின்னால் நின்று அவளின் காதில் கிசுகிசுத்தான். “என்ன செய்யறது பேபி, உன்னை பக்கத்துல பார்த்தாலே எண்ணம் தாறுமாறாக தறிக்கெட்டு ஓடும். இதுல உங்கப்பன் வேற புதையலை பாதுகாக்கும் பூதம் மாதிரி என்னை உன்கிட்டயே நெருங்க விடலை. சரி ஒரு முத்தமாவது கொடுக்கலாம்னா நீ அப்போ தான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தே. கள்ளம் கபடம் இல்லாமல் என்கிட்ட பழகின உன் மனசை கெடுக்க விரும்பலை. சரி மொத்தமா கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு இருந்துட்டேன்” என்று அவள் கேட்காமலே அவன் தன்னிலை விளக்கம் கொடுக்கவும் அவள் அதிர்ந்து போய் திரும்பினாள். அதில் அவளின் இதழ்கள் அவன் கன்னத்தில் பட்டும் படாமல் உரசி சென்றது. 


மனைவியிடம் எதிர்பாராமல் கிடைத்த முதல் முத்தத்தை கண் மூடி ரசித்தவன் வேண்டும் என்றே அவளின் உதட்டருகே தன் மற்றொரு கன்னத்தை கொண்டு சென்றான். அவளுக்கு அதை ரசிக்காமல் இருக்கவும் முடிய வில்லை. அதே சமயம் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் அவஸ்தையாக இருந்தது. தலையை குனிந்து கொண்டு “கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும், வெளியே போகலாமா” என்றாள் மெல்லிய குரலில்.


அவனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் “சரி கிளம்பு” என்றான்.


காரில் போகும் போது அவளிடம் எதுவும் பேசாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தான். அவளுக்கும் என்னவோ போலிருக்க, “கவின் அண்ணா எங்கே?” என்றாள்.


“அவன் கம்பெனி தொடங்கறதுக்கு  சைட் பார்க்க போயிருக்கான்” என்றான் சாலையில் கவனத்தை பதித்தவாறு.


அதன்பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அவளும் அமைதியாகி போனாள். சற்று நேரத்தில் அருகே இருந்த ஒரு பெரிய மாலில் வண்டியை நிறுத்தினான்.


இருவரும் உள்ளே சென்றதும் அங்கே இருந்த ஒரு துணிக்கடையில் நுழைந்தாள் தாரிகா. அவளுக்கு தேவையானதை எடுக்க சொல்லிவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டான் செந்தூரன். அதன் பிறகு அவள் தேவையான சில உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். பின்பு அலங்கார பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என சிலவற்றை வாங்கினாள். அவள் வாங்கி வைத்த பொருட்களுக்கு பணம் செலுத்தினானே தவிர வேறு எதிலும் செந்தூரன் தலையிடவில்லை. இப்போது தன் மேல் அவன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்தது. அவனிடம் முன்பு போல சகஜமாக பேச முடியவில்லை. அதே சமயம் அவனின் பாராமுகம் அவளை என்னவோ செய்தது. எனவே வேண்டும் என்று பசிக்கிறது ஏதாவது சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள்.


செந்தூரனும் அங்கிருந்து ஃபுட் கோர்ட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான். இருவரும் எதிரே அமர்ந்து கொண்டிருக்க அவன் அவளிடம் என்ன வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தான் ஆனால் அவளின் பார்வையோ வேறெங்கோ யோசனையாக பதிந்தது. அவள் பார்வை சென்ற திசையில் செந்தூரனும் புருவம் சுருக்கி பார்த்தான். அங்கே இருந்த சினிமா தியேட்டரில் இருந்து சில பெண்கள் தாரிகாவை பார்த்து கைகாட்டியபடி வந்து கொண்டிருந்தனர் இப்போது தாரிகாவும் அவர்களை பார்த்து சிரித்து கையசைத்தாள். 


அவர்கள் இவர்களை நோக்கி நெருங்கி வந்ததும், “மாமா இவங்க எல்லாம் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ். உங்களுக்கு இவங்கள ஞாபகம் இருக்கா?” என்று சாதாரணமாக கேட்டாள். அவளுடைய மாமா என்ற அழைப்பில் மயங்கி போயிருந்தவனுக்கு மற்றது எதுவும் நினைவில் இல்லை.  புருவம் உயர்த்தி சில கணங்கள் பார்த்தவன் உதட்டை பிதுக்கி ஞாபகம் இல்லை என்பது போல தோள்களை குலுக்கினான்.


அங்கே வந்திருந்தவர்களில் ஒருத்தியோ “உங்களுக்கு எங்களை  தெரியாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உங்களை நல்லாவே தெரியும்” என்றாள் சிரித்துக் கொண்டே


செந்தூரன் இப்போது மீண்டும் புருவம் சுருக்கி அவர்களை ஆராய்ச்சியாக பார்த்தான் ஆனால் அவனுக்கு அவர்கள் யார் என்று நினைவில் இல்லை. அதற்கு அந்த பெண்ணும் “நான் ஒரு இன்சிடென்ட் சொல்றேன் அப்போ உங்களுக்கு நினைவில் வரும்” என்றவள் “நாங்க ஸ்கூல் படிச்சுட்டு இருக்கும் போது தாரிகாவின் பின்னாடி ஒருத்தன் சுத்தரான்னு பல்சர் வண்டியில் ஹீரோ மாதிரி வந்து மிரட்டுனிங்களே, அப்போ தாரா கூட சில பொண்ணுங்க இருந்தாங்க, நினைவிருக்கா?” என்றாள்.


அவன் ஆமாம் என்பது போல தலையாட்ட “அந்த பொண்ணுங்க நாங்க தான். என் பெயர் சுதா, இவங்க ராதிகா, மாலா” என்று அறிமுகம் செய்தாள். “ஓ அப்படியா” என்றான் செந்தூரன். “ஏய் அவர் எங்கடி நம்மையெல்லாம் பார்த்திருக்க போறார்? தாராவை பார்க்கவே அவருக்கு சரியா இருந்துச்சே” என்று கலாய்த்தாள் மாலா. செந்தூரன் கூச்சத்துடன் நெளியவும், “மாமா எங்க எல்லாருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்க” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு, “ஏன்டி இப்படி என் மாமாவை கலாய்க்கிறீங்க” என்று அதட்டினார் தாரிகா.


“அது சரி, என்ன? உன் மாமாவோட தனியா டேட்டிங்கா?” என்று சிரித்தாள் ராதிகா. “இல்லடி எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இன்னிக்கு தான் இங்கே தனிக்குடித்தனம் வந்தோம்” என்றாள் தாரிகா.


தோழியின் திருமண கலாட்டா பற்றி அறியாதவர்கள், “நாங்க இங்கே PG ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கிறோம் தான், அதுக்காக எங்களை திருமணத்திற்கு கூப்பிடக் கூட தோணலை இல்லை” என்று மூவரும் அவளிடம் சண்டை போட ஆரம்பித்தனர்.


“அப்படி எல்லாம் இல்லை, எங்களுக்கு ஜாதகம் பொருந்தலைனு எங்க வீட்டார் எல்லாம் எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க பார்த்தாங்க. ஆனால் என் மாமா சரியான நேரத்தில் வந்து என்னை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்குச்சு” என்றாள் தாரிகா மற்ற விஷயங்களை மறைத்து. 


“வாவ்… அப்படியா? உன் மாமா சரியான சாமியார்னு சொல்லுவியேடி! அவருக்குள்ள இப்படி ஒரு ரொமான்ஸ்சா!” என்று ஆச்சரியத்துடன் சத்தமாக சொல்லி கண்களை அகல விரித்தாள் சுதா.


பலகாரங்களை கொண்டு வந்து கொண்டிருந்த செந்தூரனின் காதுகளில் சுதாவின் வார்த்தைகள் தெளிவாக கேட்டது. இருக்கையில் அமர்ந்து கொண்டு “யாரை சாமியார்னு சொல்லிட்டு இருக்கீங்க” என்று கேட்டான் தாராவின் மேல் பார்வையை பதித்தபடி. தாராவிற்கு புரை ஏறியது. தோழிகளை கெஞ்சுதலாக பார்த்து அமைதியாக இருக்கும்படி கண்களால் சைகை காட்டினாள். ஆனால் அவர்கள் அவள் பக்கம் திரும்பாமல் செந்தூரனை பார்த்தபடி அமர்ந்திருந்ததால் அவளின் முயற்சி பலன் அளிக்கவில்லை. ஆனால் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த செந்தூரன் அவளின் தவிப்பை உணர்ந்து கொண்டான். மீண்டும் மனைவி மீது இருந்த பார்வையை விலக்காமல் அதே கேள்வியை அந்த பெண்களிடம் கேட்டான்.


“வேற யாரு? நீங்க தான் அந்த சாமியார்! அப்படி தான் தாரா எங்க கிட்ட புலம்புவா” என்றார்கள் மூவரும் கோரசாக


இப்போது செந்தூரன் மெல்ல திரும்பி தாராவை அழுத்தமாக பார்த்தான். அவளுக்கோ அவஸ்தையாகி போனது. தோழிகளை பரிதவிப்புடன் பார்த்தாள். அவர்கள் அவளை கண்டு கொள்வதாக தெரியவில்லை. பார்வையால் துளைத்து கொண்டிருந்தவனை பார்த்து திருதிருவென விழித்தாள்.



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post