இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 03 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 26-04-2024

Total Views: 16334

அத்தியாயம் 03

அவளை விட்டு நகர முடியாதபடி அவள் அவனைக் கட்டிப் போட்டு வைத்திருந்தாள். அவன் பார்த்திராத அழகிகள் இல்லை. இவ்வளவு ஏன்? எந்நேரமும் ஆரவாரத்துடன் இயங்கிக் 
 கொண்டிருக்கும் இந்திரலோகத்து அழகிகளை அனுதினமும் பார்க்கின்ற அவன் கண்களுக்கு இவள் மட்டும் ஏன் புதுமையாக தெரிய வேண்டும்? தெரிந்து தொலைக்கிறாளே! அவனையே தொலைய வைக்கிறாளே..! அவளது பெயர் கூட அவனை இப்போது இம்சித்து பித்துப் பிடிக்க வைக்கிறது.  அப்படியே இமைக்காது அவளை ரசித்துக் கொண்டிருந்தவனை அவளது தேகத்தின் நடுக்கம் என்னவோ செய்தது. தன்னைக் குறித்துப் பயமா? அவளிடம் எவ்வாறு தன்னை வெளிப்படுத்துவது என்னும் சிந்தனை தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்க அவளது அத்தை லட்சுமி அப்போதுதான் உள்ளே நுழைந்தாள்.

"மதினி! புள்ளைக்கு என்னாச்சு? எங்க அண்ணன் தான் விட்டுட்டு போயிட்டான்னு பார்த்தா இவளும் இப்படி கிடக்குறளாளே" புலம்பல் வந்த உடனே அவளிடம் இருந்து வெளிப்பட, "என்ன செய்ய லட்சுமி! நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி இருக்கு. இதுல யாரை நொந்து என்ன செய்ய?" பதிலுக்கு அவளும் நொந்து போய் பேசினாள்.

"மதினி கவலைப்படாதீங்க! அண்ணனுக்கு முப்பது முடியட்டும். இவளை கூட்டிட்டு நம்ம ஊர் சிவன் கோவிலுக்குப் போயிட்டு வரலாம். அப்போத்தான் எமபயம் விலகும்"

பயத்தின் சாயம் பூசியாவது அவளது நினைவில் நின்றுக் கொண்டிருந்த தம்மை இவர்கள் விலக்குவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்களே! இது சரியாக வராது. அவளது சிந்தையில் இருந்து நான் ஒரு போதும் விலகப் போவதே இல்லை. சிவன் கோவிலுக்கு செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என உடனுக்குடன் நினைத்துக் கொண்டான் இயமன். அவனுக்கு இப்போது சிவனை நினைத்து பயம் வேறு வந்தது.

"அப்படித்தான் நானும் நினைச்சு வச்சுருக்கேன் லட்சுமி. இவ தெம்பா எந்திரிச்சு உக்கார்ந்துட்டா போதும்"

இன்னும் இவர்கள் பேசுவதை எல்லாம் கவனித்தபடியே இருந்த இயமனின் கவனம் உள்ளே நுழைந்த ஒருவன் மீது படிந்தது. அலை அலையாய் சிலும்பிக் கொண்டிருந்த அந்த கேசம் அவனுக்கு அவ்வளவு அழகாக இருந்தது. அளவான நிறமாய் அதீத அழகாய் இருந்தான் அந்த வாலிபன்.

யார் இவன்? என் பாசக்கயிற்றுக்கு வேலை வைப்பது போல் வந்து நிற்கிறான். இவனை பார்க்கையில் ஏன் எனக்கு இவ்வளவு உடம்பில் எரிச்சல் ஏற்படுகிறது.. இயமனின் கேள்விக்கு சற்று நேரத்திலே விடை கிடைத்துப் போனது.

"அத்தை அஞ்சும்மாவுக்கு இப்போ பரவாயில்லையா?"

அஞ்சும்மா அந்த அழைப்பில் விரவியிருந்த உணர்வு இயமனை சில்லிட வைத்தது. இவன் இவளை காதலிக்கிறான். அதன் வெளிப்பாடே இவ்வழைப்பு. புரிந்துக் கொண்டான் இயமன். அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே. அவன்தான் சமீபமாய் காதலென்னும் உணர்வில் சிறைபட்டு தன்னையே மறந்திருந்தானே! இனம் இனத்தினை எளிதாக கண்டுக்கொள்ளுமே. கண்டுக்கொண்டான் அந்தகனும். 

"கொஞ்சம் கூட அவ உடம்பு தேறவே மாட்டேங்குதுப்பா திரு! உன் மாமா போனதையே என்னால இன்னும் ஏத்துக்க முடியல. இதுல இவ வேற"

"அத்தை எல்லாம் சரியாகிடும். நான் அவகூட இருக்கேன். நீங்க மொத வீட்டுக்கு கிளம்புங்க"

இப்படிச் சொன்னதும் சிவகாமி முழிப்பதைப் பார்த்தவன் "ஏன் அவளைப் பார்த்துக்க எனக்கு உரிமை இல்லையா?" கோபத்தில் அவன் சொல்ல, "அப்படின்னு சொன்னேனா. அவ உனக்குத்தான் யார் இல்லைன்னு சொன்னது. அது என்னால நம்ம வீட்டுல இருக்க..." தடுமாற..

"அம்மா! அத்தையைக் கூட்டிட்டு நம்ம வீட்டுக்குப் போங்க. எங்க கல்யாணத்தை செஞ்சு வைக்குறதுக்குள்ள இவங்களும் இங்கேயே வந்து சேர்ந்துடுவாங்க போல. எதை நினைச்சும் கவலைப்பட வேண்டாம் அத்தை. அவளை நான் பார்த்துப்பேன். நீங்க கிளம்புங்க" இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவன் படுத்திருந்தவளின் கையைப் பற்றி அவளருகே அமர்ந்தான். அவன் முகம் வெகுவாக கனிந்திருந்தது. அதில் வழிந்த காதல் அருகே இருந்த மற்றொருவனை கடுப்பின் உச்சக்கட்டத்தில் கொண்டு போய் நிறுத்தியிருந்தது.

'அடேய் மானுடா! கையை எடடா' என மிரட்டிவிட்டு கரத்தினை வெடுக்கென பறித்துவிட்டு அக்கரத்தோடு தன் கரம் நுழைக்க அவா கொண்டவன் பல்லைக் கடித்துக் கொண்டு சினத்தினை அடக்கி நடப்பதை வேடிக்கைப் பார்த்தான்.

"அஞ்சு" மென்மையாய் அழைத்தான் அந்த திருவாகப்பட்டவன். அதைவிட மென்மையாய் அவளது இமைகள் இரண்டும் திறந்தது. அந்த அழகில் வயிற்றெரிச்சல் மறந்து வஞ்சி அவள் அழகினை பருகிக் கொண்டிருந்தான் எமனாகப்பட்டவன். 

"திரு மச்சான்" சோபையாய் அவள் அழைக்க அவளது விழிகளில் இயமன் எதையோ தேடினான். அந்த ஊடுருவலில் அவனுக்குப் புரிந்தது ஒன்று தான். அது திருவின் கண்களில் வழியும் அந்த காதல் அஞ்சனாவின் விழிகளில் தென்படவே இல்லை. அந்த மட்டிலும் இப்போது இயமனின் உயிரையே இவள்தான் மீட்டுத் தந்திருக்கிறாள்.
 இது போதும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது. 

"என்ன இது? இப்படி நீ இங்க வந்து படுத்துட்டால் அம்மாவை யார் பார்த்துப்பா அஞ்சு. கொஞ்சமாச்சும் நீ பொறுப்பா நடந்துக்க வேண்டாமா?"

"ஐயா.. ஐயா" தேம்பி அழத் தொடங்க அவளது கரத்தினை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவன் "ஷ்ஷ் அழக்கூடாது. மாமா இறந்ததை யாராலும் ஏத்துக்க முடியலை தான் டா. அதுக்காக அதையே நினைச்சுட்டு இருந்தால் எப்படிம்மா? நீ பலமா இருந்தால் தானே அத்தைக்கு தைரியம் சொல்ல முடியும். அவங்க பாவம் துக்கத்தைத் தொண்டைக்குள்ள போட்டுட்டு உன்னைப் பார்த்துட்டு இருக்காங்க. இதெல்லாம் தேவையா டா. வேண்டாம் அஞ்சு‌. கொஞ்சமாச்சும் தைரியமா இரு. மச்சான் சொன்ன நீ கேட்ப தானே" என்றான் இதமான குரலில்.

தலை தன்னாலே ஆடியது. அவள் கன்னத்தினை தட்டியவன் "கொஞ்ச நேரம் தூங்கு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்" எனவும் அவள் இமைகளை மூடிக் கொண்டாள். 

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போய்விட அவளையே விழுங்குவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் திரு. 

அந்த காதலை ஏற்க முடியாது அங்கே நெருப்பில் நிற்கும் அவஸ்தையில் இருந்தவன் சட்டென்று பக்கத்தில் இருந்த மருந்துக் குப்பியினை தட்டிவிட பெருஞ் சப்தத்தோடு அது சில்லு சில்லாய் உடைந்து சிதறியது.

அதில் திரு திடுக்கிட அவளோ மீண்டும் பயத்தில் "எமன் எமன்" அலறத் தொடங்கிவிட்டாள். இப்போது அவளது அலறலை கேட்க இயமன் அங்கில்லை. அங்கிருந்து உடனே வெளியே வந்துவிட்டான். 

தனக்குப் போட்டியாய் ஒருவன் வந்து நின்றதில், அவன் ஏகத்துக்கும் அழகாய் இருந்து தொலைத்ததில் பெரும் வலி இருந்திட என்ன முயன்றும் அவனால் அதை ஆற்ற முடியவில்லை. 

தான் யாரென்பதை மறந்து இப்படி நிற்பதில் தேகம் இறுகிப் போனது. அதிலும் அவன் எடுத்துக் கொள்ளும் அந்த உரிமையான தொடுகையை வேடிக்கை பார்க்க நேர்ந்ததில் இன்னும் ரணப்பட்டுப் போனான். இப்போதே அவளை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று உள்ளுள் ஆட்டம் போட்டிருந்த உணர்வுகளை அவனால் அடக்கவே முடியவில்லை. இருந்தும் அவன் அமைதியாய் இருப்பது அவளது உடல் நிலைக்காக மட்டுமே. அப்பாவின் மரணம் அவளை நிலைகுலையச் செய்திருக்கிறது என்பது அவனுக்குப் புரிகிறதுதான். ஆனால் இப்போது அவள் உயிரோடு இருப்பதே அவனது காதலால் மட்டும் தான். பார்த்தவுடன் அவள் மீது கொண்ட மையலுக்காய் மாபெரும் பிழை செய்துவிட்டு வந்து நிற்கிறான். இதெல்லாம் அவளுக்குத் தெரியவும் கூடாது. அதைவிட அவளிடம் என் அடையாளத்தினை நான் வெளிப்படுத்தவும் கூடாது தனக்குள்ளயே சொல்லிக் கொண்டே சோர்வுடன் தன் உலகிற்கு புறப்பட்டான்.

எமலோகத்திற்குள் நுழையாமல் வான்வீதிகளில் சஞ்சாரம் செய்துக் கொண்டிருந்தவனின் நினைவுகளில் நிரம்பியிருந்தது எல்லாம் அவள் மட்டுமே. 

அஞ்சனா,

நேற்று பார்த்தபோது அவனுள் குமிழியிட்டிருந்த சந்தோஷமெல்லாம் அப்படியே உடைந்து போயிருந்தது. கடமையில் தவறியிருந்த போதும் அதை நினைத்து நேற்றைய பொழுதில் அவன் மனம் இப்படி அல்லாடவில்லை. இன்று அது ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது. அந்த அழகிய ஆண்மகன் மீது அதீத அவ்வியம் வந்திருந்தது. தன்னால் நெருங்க இயலாத பெண்ணினை அவன் நெருங்குகிறான். இதைப் பார்த்துவிட்டு.... அதற்குள் "நாராயணா! நாராயணா" என்னும் நாமம் அவ்விடம் முழுதும் பரவிட அவன் எண்ண அலைகள் தடைபட்டது.

வந்தது நாரதன். கலகக்காரன் இன்றென்ன சொல்லப் போகிறானோ என்ற பார்வையோடு தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தினை மறைக்க அவன் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

"என்ன இயமா? வான்வீதியில் சஞ்சாரம் அடித்துக் கொண்டிருக்கிறாய் போல. கடமை எல்லாம் முடிந்ததா?"

"முடிந்தது நாரதரே"

"ஆனாலும், முகத்தில் இன்னும் சஞ்சலம் ஒட்டியுள்ளதே. ஏதேனும் சங்கடமா? என்னிடம் சொல்வதாய் இருந்தால் சொல்லலாம் இயமா! என்னால் இயன்றதைச் செய்வேன்"

"எல்லாம் தங்களின் வீணான கற்பனை நாரதரே. இந்த இயமனுக்கு சஞ்சலமென்ற ஒன்று வருவதே இல்லை. அப்படியும் வந்தால் அதை எவ்வாறு நிவர்த்தி செய்வதென்று அடியேனுக்குத் தெரியும். தாங்கள் என்னைக் குறித்து ஆலோசிக்கத் தேவையே இல்லை. தங்களுக்கே ஏகப்பட்ட கடமைகள் இருக்கின்றது. இதில் என் விஷயம் உங்களுக்கு ஏன்?"

"அதற்கில்லை இயமா"

"நாரதரே இத்தோடு இப்பேச்சினை முடித்துக் கொள்ளுங்கள்"

"இயமன் இயம்பியபின் மறுபேச்சு அடியவன் பேசப் போவதில்லை. இதை மட்டும் பெற்றுக் கொள்ளவும்" என கரத்தினை முன்னே நீட்ட நீட்டிய கரத்தினுள் இருந்தது கருமை நிற மை.

"என்ன இது?"

"அஞ்சனம்" அதை உச்சரிக்கும் போதே நாரதரின் முகத்தில் சிரிப்பும் வார்த்தையில் அழுத்தமும் தெரிந்தது.

"அஞ்சனா..." மெய்மறந்து தன்னை மீறி இயமன் அழைத்துவிட்டு நாக்கை கடித்து "அஞ்சனமா? அதை ஏன் என்னிடம் நீட்டுகிறீர்கள்?" என்றான். 

"தேவைப்படும் என்பதால்தான்"

"நாரதரே"

"திரிலோக சஞ்சாரி நான் இயமா. என்னையே ஏமாற்ற நினைக்கிறாயே. இதெல்லாம் சரிதானா"

பிடிபட்ட உணர்வுடன் "நாரதரே" என விழிக்க "இறுதியாக நான் சொன்னதுதான் நடந்திருக்கிறது" என்றான் நாரதன்.

"இல்லை" அந்த மறுப்பில் திடமில்லை புரிந்து போனது நாரதனுக்கு.

"ஈசன் அழித்தலுக்கென உண்டான கடவுள். ஆதியும் அந்தமும் இல்லாதவன்" இப்போது நாரதரின் குரலில் மாற்றம் வந்திருந்தது

"அறிவேன் நாரதரே"

"அறிந்தும் கடமையை கைவிட்டுவிட்டாயே இயமா! ஈசன் நெற்றிக்கண் திறந்தால் பஸ்பமாகிவிடுவாய்"

"இணையை தேடிக் கொள்வது இயல்புதானே நாரதரே. அப்படியிருக்க நான் செய்வது மட்டும் பிழையாகுமா? நானும் உணர்வுகள் நிரம்பிய ஒருவன்தானே. மரணதேவனாய் பணியேற்ற பின் நான் என் கடமையை கண்ணும் கருத்துமாக ஆற்றியிருக்கிறேன். இன்றெனக்கென்று ஒருத்தியை சந்தித்திருக்கிறேன். அவளை என்னுடனே வைத்துக் கொள்ளப் ப்ரியப்படுகிறேன். அவளுக்காய் நான் எதையும் எவரையும் எதிர்க்க சித்தமாக இருக்கிறேன்"

"இயமா! ஈசனின் தண்டனைகள் கடுமையானதாக இருக்கும்"

"எதுவரினும் ஏற்றுக் கொள்வேன் நாரதரே. அதற்காக அவளை விட்டுக் கொடுத்துவிடுவேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அவளென் உயிர்"

"அவளுக்கு?"

"அவளும் அதையே உரைப்பாள். அவ்வாறு உரைக்க வைப்பான்" தெளிவாகச் சொன்னவன் விறுவிறுவென்று கிளம்ப, "பரமேசுவரா! இயமனிடம் இந்த மாற்றம் எதிர்பார்க்கவே இல்லை. இனி தாங்கள் நினைத்தது நடக்கப் போகிறது. தங்களின் திருவிளையாடலை காண நானும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். நமசிவாயா..." என கைகூப்பியவன் அங்கிருந்து நாராயணன் நாமஞ் சொல்லியபடி அகன்று விட்டான்.


காதலாசை யாரை விட்டது...!



Leave a comment


Comments


Related Post