இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--9 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 26-04-2024

Total Views: 29201

இதயம் 9


     சாணக்கியனிடம் பிரியாவுக்கான பயிற்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நல்லபடியாகச் சென்றது. கூடவே சதுரங்க இல்லத்துக்குள் மினியின் நடமாட்டமும் அதிகரித்தது. 


     அரசனிடம் சண்டையிட்டு தோட்டத்தில் இருக்கும் அழகான செடிகளுக்கு நீர் விடுவதில் ஆரம்பித்து, பிரியா சோர்வாக இருக்கும் வேளையில் அவளுக்காக அந்த வீட்டின் சமையலறைக்குள் சென்று தேநீர் தயாரிப்பது வரை அவளின் ராஜ்ஜியம் அங்கே தொடர்ந்து கொண்டிருந்தது.


     அவள் கல்லூரி சேர்மன் இறந்ததால் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் பத்து நாட்கள் விடுமுறை விட்டிருக்க, கொண்டாட்டமாகிப் போனது அவளுக்கு. அதுவரை மாலை வேளைகளில் மட்டும் வந்து கொண்டிருந்தவள் அதன்பிறகு நாள் முழுவதையும் சதுரங்க இல்லத்தில் தான் கழித்தாள். 


     வீட்டினருக்கோ இல்லை அக்கா, அத்தானுக்கோ இதைத் தெரியப்படுத்தினால் தென்காசிக்கு கிளம்பச் சொல்லுவார்கள் என்று நினைத்தவள் எதையும் சொல்லாமல் மறைத்தாள். முதல்முறை கள்ளம் புரிய ஆரம்பித்தாள். செய்வது தவறு என்பது கூட புரியாத அளவில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு மாயவலை அவளைப் பிணைத்திருந்தது.


  
     சாணக்கியன் பிரியா இருவரும் விளையாட்டில் கவனமாக இருக்க, மினியோ சாணக்கியனின் மீது கவனமாக இருந்தாள். காமாளைக்காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும் என்பது போல் ஈர்ப்பா, இனக்கவர்ச்சியா என்று தெரியாத புரியாத உணர்வுக்கு கட்டுப்பட்டு அவனைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் மனம் போகும் போக்கில் செய்து கொண்டிருந்தாள்.


     “எவ்வளவு அடர்த்தியான புருவம், ஊசியா மூக்கு இருந்தால் கோபம் அதிகம் வரும் என்று இவரைப் பார்த்து தான் சொல்லி இருப்பாங்களோ. இந்த முகத்தில் இருக்கும் சுருக்கம் மறைந்து கொஞ்சம் சிரிச்சா ஈரம் படத்தில் வரும் ஆதி மாதிரியே அம்சமா இருப்பார். எப்ப பார்த்தாலும் விஸ்வாமித்திரனுக்கு அப்பா மாதிரி முறைச்சுக்கிட்டே இருக்கிறதால் அங்கங்க வெள்ளை முடி கூட வந்திருக்கு“ கண்ட மேனிக்கு அவனை மனதிற்குள் விமர்சித்துக்கொண்டு அவன் அருகே அமர்ந்து விளையாட்டைக் கவனித்துக்கொண்டிருந்தாள் மினி.

  
     அவள் செய்யும் அலப்பறைகள் அனைத்தையும் கவனித்தும் கவனிக்காதது போல் அமைதியாக இருந்தான் சாணக்கியன். பார்க்கும் அனைத்தின் மீதும் ஆசை கொள்ளும் வயதுக்குச் சொந்தக்காரி அவள். ஆனால் அவன் அப்படி இல்லையே. வாழ்க்கை கொடுத்த அடிகள் போதும் என அனைத்தில் இருந்தும் தப்பித்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனுக்கு எதையும், யாரையும் இரசிக்கும் எண்ணமும் இல்லை, பொறுமையாக அமர்ந்து இரசிக்க நேரமும் இல்லை. 


     பிரியா அவன் கவனிப்பின் கீழ் நல்லபடியாக வளர்ந்து வந்து கொண்டிருந்தாள். சரியான நேரம் வந்தவுடன் அவள் பெயரை சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பதிவு செய்து அதன்பிறகு தொடர் ஆட்டங்களில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த நிலை வந்துவிட்டால் நாள்கள் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துவிடும். 


     அவள் புத்திசாலித்தனத்துடன் கடவுள் புண்ணியமும் சேர்ந்து கொண்டு அனைவரின் ஆசைப்படி அவள் உலகசாம்பியன் ஆகிவிட்டால் அவள் கனவோடு சேர்த்து தன் கனவும் நினைவாகிவிடும் என மனைவியின் கருப்பையில் சேர்ந்த தன் உயிர்துளி, கருவாகி உருவாகி குழந்தையாக வெளிவரும் நாளுக்கு காத்திருக்கும் தந்தையைப் போல் துடிப்பாய் இருந்தான் சாணக்கியன். 


     “மினி இப்பெல்லாம் அடிக்கடி செஸ் வீட்டுக்குப் போறியே என்ன விஷயம். பிரியா அங்க போவதற்குக் காரணம் இருக்கு, உனக்கு என்ன அவசியம் வந்தது“ இன்னும் சற்று நேரத்தில் தன் தாய், தந்தை வரப்போவதாக சொல்லி இருப்பதால் வீட்டைக் கொஞ்சம் சுத்தப்படுத்தலாம் என்று வேலைகளைச் செய்துகொண்டே செய்துகொண்டே தோழியிடம் விசாரணை செய்தாள் தேன்மொழி.


     “எனக்கு அங்க போகப் பிடிச்சிருக்கு அதனால் போறேன்“ கள்ளம் கபடம் இல்லாமல் பதில் சொன்னாள் மினி. “அந்த வீட்டில் அப்படி என்ன பிடிச்சிருக்கு“ தேன்மொழி மனதில் ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு கேட்க அது புரியாமல், “அந்தப் பெரிய வீடு, தோட்டம் அதில் இருக்கும் சதுரங்கக் காய்களின் உருவத்திலான அழகுச் செடிகள். என்னை எப்பவும் முறைச்சுக்கிட்டே இருக்கிற எழில் அண்ணா. எப்பவும் என்னை குறுகுறுன்னு பார்த்துக்கிட்டு இருக்கும் அரசன் அங்கிள். புரியாத புதிர் மாதிரி இருக்கும் சாணக்கியன் என அங்க இருக்கும் எல்லோரையும் எனக்குப் பிடிச்சிருக்கு“ எதார்த்தமாகத் தான் சொன்னாள் அவள்.


     “சாணக்கியனையும் பிடிச்சிருக்கா. பிடித்தம் என்றால் என்ன மாதிரியான பிடித்தம்“ தேன்மொழி கேட்கும் தோரணையும் அதில் இருக்கும் அர்த்தமும் இப்போது தான் புரிந்தது மினிக்கு.


     சட்டென்று கோபம் வந்தாலும், தோழி தன் மேல் இருக்கும் அக்கறையில் விசாரிக்கிறாளோ இல்லை அவள் வீட்டில் தங்கி இருக்கும் தன் செயலால் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக விசாரிக்கிறாளோ எதுவாக இருந்தாலும் உள்ளே வைத்துக்கொண்டு அமைதியாக இருக்காமல் கேட்டுவிட்டாளே“ என்கிற நினைப்பில் தன் மனதில் இருப்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.


     “தேன்மொழி நான் கிராமத்துப்பொண்ணு. எனக்கு உங்களை மாதிரி கூட்டுக்குள் அடைந்து கிடக்க முடியாது. அக்கம் பக்கம் உள்ள மனிதர்களை சொந்தமா பார்க்கும் பழக்கம் உடையவங்க நாங்க. அப்படியான விதத்தில் தான் சதுரங்க இல்லத்தில் உள்ள மனிதர்களையும் நான் பார்க்கிறேன். என்னைத் தப்பா நினைக்காதே“ அழுத்தமாகச் சொன்னாள்.


     “நல்லவங்களா கெட்டவங்களான்னு சரியாத் தெரியாத ஒருத்தர் கிட்ட தேடிப்போய் பழகுவதை விடுத்து, கூட்டுக்குள் பதுங்கி இருப்பது ஒன்னும் தப்பு இல்லன்னு தோணுது. அப்புறம் உன்னோட விருப்பம்“ என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தாள் தேன்மொழி. தோழியைப் புரியாத பார்வை பார்த்துவிட்டு தனக்காக கொடுக்கப்பட்ட அறைக்குள் சென்று மறைந்தாள் மினி.


     “அந்தப் பொண்ணு மின்மினி அவ பெயரை மாதிரியே ரொம்ப சுறுசுறுப்பா இருக்கா இல்ல“ மகனிடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் அரசன். நிலாவின் புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், “என் நிலா கூட சுறுசுறுப்பானவ தானே அப்பா“ வேண்டுமென்றே சொன்னான்.


     “இன்னும் எத்தனை நாளைக்குப் போனவளையே நினைச்சு சங்கடத்தில் இருக்கப் போற. அவளுக்கு உன் மேல் உண்மையான அன்பு இருந்திருந்தால் இப்படி உன்னைத் தவிக்க விட்டுப் போய் இருப்பாளா?“ ஆத்திரமாகக் கேட்டார்.


     “அவ மேல் தப்பு இல்லை. எல்லாம் நண்பன் என்று நினைத்து நடுவீட்டிற்குள் நான் விட்ட துரோகியும், அவன் கூட இருக்கும் அந்த உலகஅழகி திலோத்தமையும் சேர்ந்து செய்த காரியம் தான். இல்லாமப் போனா இந்நேரம் என் நிலா என்கூட இருந்திருப்பா“ ஆற்றாமையாக வந்தது சாணக்கியனின் வார்த்தைகள்.


     “யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும் டா. உன்னோட அத்தனை வருஷம் பழகினவ அவ. என் பாகுவைப் போல் யாரும் இல்லை என்று மார்தட்டித் திரிஞ்சவ. அவங்க இரண்டு பேரும் சொன்னதை நம்பி காலத்துக்கும் உன்னைத் தனியா அழவைச்சிட்டு மொத்தமா போயிட்டா. 


     அவ உன் மேல் வைத்திருந்த நம்பிக்கை எல்லாம் சீட்டுக்கட்டில் கட்டி வைச்ச அரண்மனை மாதிரி ஒரு நொடியில் இல்லாமல் போயிடுச்சு. கண்ணால் பார்த்திடாத ஒரு சம்பவம் அதுநாள் வரை ஒருத்தர் மீது இருந்த மலையளவு நம்பிக்கை முழுதையும் அழித்துவிடும் என்றால் அங்கே நம்பிக்கை என்ற வார்த்தையோட பொருளே இல்லாமல் போயிடுச்சுன்னு தானே அர்த்தம். 


     நீ சொன்னது தான் சரி, பொண்ணுங்க எல்லோருமே இப்படித்தான். சரியான சுயநலப் பிசாசுங்க. அவங்களைச் சுற்றி நடக்கும் எல்லாமே அவங்க விருப்பப்பட்ட மாதிரியே நடக்கணும் என்று நினைப்பாங்க“ சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்த அரசனுக்கு அங்கே தனியாக எழில் நின்று கொண்டிருந்த எழில் தான் காட்சி கொடுத்தான்.


     “அவன் எப்படா போனான்“ மகனின் அறையைப் பார்த்துக்கொண்டே அவர் கேட்க, “உலகத்துப் பொண்ணுங்க எல்லோரையும் நீங்க தப்பா பேசும் போதே அவன் போயிட்டான்“ சிரிப்புடன் சொன்னான் எழில்.


     “என் மகன் ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்லையே டா.  நிலா ஞாபகம் வந்தால் என்னை விட மோசமா இல்ல பேசுவான்“ குழம்பினார் தந்தையானவர்.


     “மத்த பொண்ணுங்களைப் பத்தி பேசினதோட நிறுத்தினா பரவாயில்லையே. ஆனா நீங்க நிலாவையும் இல்ல  திட்ட ஆரம்பிச்சீங்க. உங்களை அடிக்கவே திட்டவோ முடியாது என்பதால் விலகிப் போயிட்டான். நான் தான் வயதில் பெரியவர் பாவம் மனதில் இருக்கும் எல்லாத்தையும் கொட்டட்டும் என்று காத்திருந்தேன்“ என்றான் நக்கலாக.


     “உன் பார்வைக்கு அர்த்தம் புரியுது டா. ஒரு சில பொண்ணுங்க பண்ற தப்புக்காக எல்லோரையும் தப்பா பேசக்கூடாதுன்னு சாணக்கியனுக்கும் உனக்கும் அறிவுரை சொல்லும் நானே இன்னைக்கு இப்படிப் பேசுறேனேன்னு தானே நினைக்கிற. 


     இன்னைக்கு அந்த வதனியைப் பார்த்தேன் டா. கொஞ்சம் கூட மனசில் உறுத்தல் இல்லாமல் என்கிட்ட வந்து பேசுறா. கூடவே அந்த குடிகெடுத்த ஜீவன். நண்பனைப் பத்தி ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி என்ன நடிப்பு“ இப்போது எதிரில் அந்தக் கணவன் மனைவி இருந்தால் அவர்களை ஒரு கை பார்க்கும் வெறியோடு இருந்தார் மனிதர்.


     “எல்லாம் நடந்து முடிந்து நாலு வருஷம் ஆச்சு. இவனைத் தவிர எல்லோரும் நல்லா இருக்காங்க. அவ்வளவு ஏன் இவன் இராத்திரி எல்லாம் நிலா நிலான்னு புலம்புறானே அவ கூட சொர்க்கத்தில் நல்லா தான் இருப்பா. இவன் தான் கிடந்து தவிக்கிறான் பாவம்“ வருந்தினான் எழில்.


     “எல்லாம் ஆண்கள் நாம வாங்கிட்டு வந்த சாபம் அப்படி. பொண்ணுங்க கூடவும் வாழ முடியாது. அவங்க இல்லாமலும் வாழ முடியாது. இரண்டு நிலாவும் சேர்ந்து எழுந்திரிக்கவே முடியாத படி மொத்தமா அவனை வீழ்த்திட்டுப் போயிட்டாங்க.


     அவன் மட்டும் சரின்னு சொன்னால் தேவதை மாதிரி ஒரு பொண்ணை, அவனை அவனுக்காக விரும்பும் பெண்ணை, அவன் முகத்தைப் பார்த்து மனசைப் புரிஞ்சுக்கிட்டு அவனுக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கும் பொண்ணை, தன் சந்தோஷத்துக்கு இணையா இவனோட சந்தோஷத்தையும் மதிக்கும் பொண்ணை நான் தேடிக்கொண்டு வருவேன். ஆனால் இதுக்கு அந்தப் பய ஒத்துக்க மாட்டேங்கிறானே“ வருந்தியவரைப் பார்த்து வருத்தப்பட மட்டும் தான் முடிந்தது எழிலால்.


     “என் கவலை அவனுக்குப் புரிய மாட்டேங்கிது டா. எனக்கு அவன் இருக்கான். நாளைக்கே நான் படுக்கையில் விழுந்தாக் கூட அவன் என்னைப் பார்த்துப்பான். ஆனா அவனுக்கு யாருடா இருக்கா. நீ இன்னும் எத்தனை நாள் வருவ. உனக்குக் கல்யாணம் குழந்தை என்று ஆனால் அவங்களைப் பார்க்கத் தான் உனக்கு நேரம் சரியா இருக்கும். என் பையன் தனிமையில் தவிச்சுப் போயிடுவான் டா. தனியா வாழ்ந்து, தனியா சாக ஒன்றும் கடவுள் உயிரினங்களைப் படைக்கல“ எழிலின் முன்னே கவலையோடு அமர்ந்தார் அரசன்.


     “நீங்க எதிர்பார்க்கிற மாதிரி பொண்ணு உங்க பையனுக்குக் கிடைக்கணும் என்றால் அது காதல் திருமணத்தால் மட்டுமே சாத்தியமானது. ஆனா காதல் என்ற பெயரைக் கேட்டால் தான் உங்க பையன் தலைதெறிக்க ஓடுவானே“ எழில் சொல்ல, “எனக்கு ஒரு சந்தேகம் டா. உன் உள்மனசைத் தொட்டுப் பதில் சொல்லு. நிஜமாவே என் பையன் ஒரு பொண்ணு காதலிக்கத் தகுதியில்லாதவனா?“ தன் மகனின் மறுபதிப்பாக தான் பார்த்த பெண் இறுதியாகச் சொல்லிச் சென்ற வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தால் இப்படிக் கேட்டார் மனிதர்.


     “ஒரு நல்ல நண்பனா, ஒரு ஆண்மகனாப் பார்த்தா உங்க பையன் ஒரு பொண்ணு அவனைக் காதலிக்க எல்லா விதத்திலும் தகுதியானவன் என்று தான் சொல்லுவேன். ஆனா ஒரு பெண்ணாப் பார்த்தால் உங்க பையனை எந்தப் பெண்ணும் தேர்ந்தெடுக்க மாட்டா“ என்றான் எழில்.


     “என்னடா நீயே இப்படி சொல்ற“ அரசன் சங்கடப்பட, “காலம் மாறிப்போச்சு அங்கிள். இப்பெல்லாம் ஒரு பெண்ணுக்குப் பிடிக்கிறதுக்கு நேர்மை மட்டும் போதுமானதா இருக்கிறது இல்லை.


     கோபம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆளா இருக்கணும். நியாயமான விஷயத்திற்காக கூட கோபப்படும் ஆண்களை இப்ப உள்ள பெண்களுக்குப் பிடிப்பதில்லை.

 
     ஆனா நம்ம சாணக்கியன் பொறுமை என்ன விலை என்று கேட்பவன். அவனைச் சந்திக்கும் யாருக்கும் அது மிகப்பெரிய குறையாகத் தான் தெரியும்“ என நிறுத்த, “இது என்னடா கொடுமையா இருக்கு. அழுகையை மாதிரி கோபமும் ஒரு உணர்வு தானே. அதை எப்படி டா கட்டுப்படுத்த முடியும். தப்பு பண்ணாக் கூட கோபப்பட்டு சண்டை போடக்கூடாது என்பது எந்த நாட்டு நியாயம்“ ஆதங்கமாகக் கேட்டார் அரசன்.


     “இப்பெல்லாம் அப்படித் தான் அங்கிள். அப்பெல்லாம் கணவன் இல்லை மகனுக்குப் பிடித்த சமையல் தான் வீட்டில் இருக்கும். அதை ஆணாதிக்கம் என்று சொல்லும் பெண்கள் தான், உன் குழந்தையை சுமக்கும் நான் என் விருப்பப்படி சாப்பிட முடியாமல் பத்திய சோறு சாப்பிடுறேன் உனக்கு மட்டும் அறுசுவை உணவு எப்படி இறங்கிது. இது தான் நீ என்மேல் வைத்திருக்கும் காதலா என்று கேட்கிறாங்க“ என்க, “இது என்னடா புதுசா இருக்கு“ ஆச்சர்யமாய் கேட்டார் அந்த பழங்கால மனிதர். 


     “எனக்கு உடம்பு சரியில்லை என்பதால் நான் மோர்சாதம் சாப்பிடுறேன். ஆனா உனக்கு என்ன வாய்ச்சதுன்னு இதையே சாப்பிடுற. சமைச்சு வைச்சதை எல்லாம் என்ன பண்ணப் போறதா உத்தேசம். மரியாதையா நீ உன் வயிறு நிறைய சாப்பிடு“ திருமணம் முடிந்த புதிதில் தன் மனைவியை அதட்டியது நினைவில் வந்து போனது அவருக்கு.


     “இன்னும் நிறைய நடக்கிது அங்கிள். முன்னெல்லாம் கல்யாணம் பண்ணிக்க பெண்கள் தான் பயப்படுவாங்க. இப்பெல்லாம் ஆண்கள் தான் பயப்படுறாங்க. நான் தேன்மொழியை விட்டு ஒதுங்கி இருக்க சில நேரங்களில் அவள் செய்யும் கிறுக்குத் தனங்களும் ஒரு காரணம்“ உண்மையை ஒப்புக்கொண்டான் எழில்.


     “ஆக நீ சொல்ல வருவது என்னவென்றால் எல்லாவிதத்திலும் சரியாக இருக்கும் ஆண்களைத் தான் பெண்களுக்குப் பிடிக்கும். சின்னச் சின்னக்குறைகளோடு  இருக்கும் என் மகனை மாதிரிப் பசங்களை பிடிக்காது என்பது தான் இல்லையா?“ கேட்டவரின் வார்த்தைகளில் தான் அத்தனை ஆதங்கம். 


     “எப்பவும் நீங்க சொல்வது தான் அங்கிள். எல்லோரும் ஒரே குணம் கிடையாது. காதலிக்கிற பையனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கும் பெண்கள் இன்னமும் நிறையவே மிச்சம் இருக்காங்க. அப்படியானவங்க தான் நம்ம சாணக்கியன் மாதிரி குறைகள் உள்ள ஆண்களை அப்படியே ஏத்துப்பாங்க. 


     அந்த மாதிரிப் பெண்களை நீங்க தேடிப் போக முடியாது. கடவுள் கருணை காட்டும் நேரம் அந்தப் பொண்ணா உங்க பையனைத் தேடி வந்தா தான் உண்டு“ எழில் சொன்ன நேரத்துக்கு, “நான் வந்துட்டேன்“ என்றபடி வந்து நின்றாள் மினி.


     
 



Leave a comment


Comments


Related Post