இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 27-04-2024

Total Views: 21086

செந்தூரா 22


தாரிகா அவனை சாமியார் என்று தன் தோழிகளிடம் சொல்லியிருக்கிறாள் என்று தெரிய பொய்யாக முறைத்தான் செந்தூரன்.


அந்த பெண்களிடம் திரும்பி “வேறென்னவெல்லாம் சொல்லி புலம்புவா?” என்று ஆர்வம் போல கேட்டான் செந்தூரன்


“அன்னிக்கு ஒருத்தன் தாரிகா பின்னாடி சுத்தறான்னு அவனை மிரட்ட பல்சர் வண்டியில் வந்தீங்க இல்ல? நீங்க வந்து மிரட்டற அளவுக்கு அவன் ஒண்ணும் ஒர்த் இல்லை. நாங்களே அவனை திட்டி இருந்தால் அப்பவே போய் இருப்பான். இவ தான் வேணும்னே உங்களை அவ பின்னாடி வர வைக்க அப்படி செய்திருக்கா. அவளோட தந்திரம் தெரியாமல் நாங்க எல்லாம் உங்களை சைட் அடிக்க ஆரம்பிக்கவும் தான் எங்க கிட்ட எல்லா விஷயத்தையும் சொன்னா” என்றாள் சுதா


செந்தூரன் திரும்பி அதிர்ச்சியுடன் தாரிகாவை பார்க்கவும் அவள் தன் ஒற்றைக் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். அங்கிருந்து எழுந்து ஓடி விடலாமா என்று கூட யோசிக்க தொடங்கிவிட்டாள்.


“ம்ம், ஆனா என்கிட்ட வந்து எங்க பிரண்ட்ஸ் எல்லாம் ஜொள்ளு பார்ட்டிங்கனு வேற சொன்னா. அதனால் தான் என்னை  முழுக்கை சர்ட் போட்டு வரச்சொன்னானு நானும் அப்படியே வந்தேன்.  இன்னொரு நாள் என்கிட்ட வந்து நீ என்பின்னாடி வரவே வேண்டாம்னுட்டா” என்றான் சோகம் போல 


இப்போது ராதிகாவிற்கு கோபம் வந்தது, “ஏண்டி எங்க கிட்ட உங்க மாமா ஒரு சாமியாரு, நான் பக்கத்திலே இருந்தாலும் தொட்டு பேசினாலும் கூட கண்டுக்க மாட்டாரு. நானே அவர் முதுகில் வேணும்னு ஏறி அவரை டெம்ட் பண்ணலாம்னாலும் கீழே போட்டு போயிடுவாரு. நீங்க டிரை பண்ணாலும் சுத்த வேஸ்ட்னு எங்க கிட்ட சொல்லிட்டு, அவர்கிட்ட போயி நாங்க ஜொள்ளு பார்ட்டிங்கனு சொல்லி வச்சிருக்கியா? உன்னை?” என்று பல்லை கடித்தாள்.


சிறுபெண்ணாக அவனிடம் அவள் தொட்டு பேசி விளையாடுகிறாள் என்று தன் உணர்வுகளை அவன் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தால், அதற்கு சாமியார்னு சொல்லி வச்சிருக்காளே என்று காதில் புகை வராத குறைதான். அப்போ அம்மணி வேணும்னே என் முதுகில் ஏறி இருக்கா!


இப்போது தாரிகாவை பார்த்து, “அப்போ அன்னைக்கு அத்தை மாமா திருமண நாள் பங்கஷன் நடந்த போது…” என்று மேலே சொல்லாமல் அவன் நிறுத்தவும், அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிய “சாரி ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அங்கிருந்து தப்பினால் போதும் என்று ஓட்டமும் நடையுமாக போனாள்.


“லெகாங்கா அணிந்து வந்து உங்க முன்னாடி உதவி செய்யறது போல உங்க முதுகில் ஏறினாளே அதைத்தானே சொல்றீங்க” என்று மாலா கேட்கவும் தூக்கி வாரி போட்டது செந்தூரனுக்கு


“அதெல்லாம் எங்களோட பிளான் தான். எப்படியும் ஒரு கிஸ்ஸாச்சும் என் மாமா கிட்ட வாங்கிடணும். அவரா கொடுக்கறதா இருக்கணும்னு எங்க கிட்ட ஜடியா கேட்டாள். நாங்களும் சொன்ன மாதிரி தான் நடந்திருக்கா, நீங்களும் எங்க பிளான்படி தான் செய்ய முயற்சித்து இருக்கீங்க, அதுக்குள்ள அவ அப்பா வந்து காரியத்தையே கெடுத்துட்டார்னு கேள்விபட்டோம். ஒரு நல்ல லவ் சீன் மிஸ் ஆயிடுச்சு” என்றாள் மாலா வருத்தமாக.


படிக்கிறதுக்கு ஸ்கூலுக்கு அனுப்பினா என்னெல்லாம் திட்டம் போட்டு இருக்குங்க? இதுங்களோட திட்டத்தினால் தானே அன்றைக்கு சுபாஷிடம் சண்டை போட்டு வெளிநாடு சென்று ஐந்து வருடங்கள் தாரிகாவையும் குடும்பத்தையும் பிரிந்திருக்க வேண்டியதாய் போயிடுச்சு. உள்ளுக்குள் மூண்ட கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.


சற்று நேரத்தில் தாரிகா வந்து, “மாமா எனக்கு என்னவோ போல இருக்கு, வீட்டிற்கு போகலாமா?” என்றவள், தன் தோழிகளிடம், “சாரி டி கொஞ்சம் தலை வலியா இருக்கு. நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம். நானே உங்களுக்கு போன் செய்யறேன்” என்றவள் மீண்டும் செந்தூரனிடம் திரும்பி “போகலாமா?” என்றாள். எழுந்து அவள் அருகே வந்தவன் அவள் காதருகே குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதுக்கு பேபி. உன்னோட வானரங்கள் எல்லாத்தையும் உளறிடுச்சுங்க, சோ பதட்டபடாதே, கூல்” என்றான் ஆழ்ந்த குரலில்.


தன் தோழிகளை பார்த்து நன்றாக முறைத்தாள் தாரிகா, எதற்கு முறைக்கிறாள் என்று புரியாமல் “ஏதும் உளரிட்டோமோ” என்று ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக் கொண்டனர் அந்த மூன்று வானரங்களும் சாரி சாரி அந்த மூன்று தோழிகளும்.


செந்தூரனுக்கு ஒருபக்கம் ஆனந்தமாகவும் ஒரு பக்கம் கோபமாகவும் இருந்தது. அவனின் தாரா அவன் அருகாமைக்காக ஏங்கி இருக்கிறாள், அதற்காக முயற்சியும் செய்திருக்கிறாள். அவளின் பார்வையில் அவன் ஒரு சாமியாரை போல அல்லவா நடந்திருக்கிறான். ஆனால் அவன் மனதிற்கல்லவா தெரியும் உணர்ச்சிகளை அடக்க அவன் பட்ட அவஸ்தை என்னவென்று! அதை நினைக்கும் போது பரவசமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.


அதே சமயம் சிறுபிள்ளை தனமாக நடந்துக் கொண்டதால் இடம் பொருள் பார்க்காமல் இருவரும் சோபாவில் விழுந்து கிடக்க, அதை சுபாஷூம் பார்த்து விட்டார். ஒரு தந்தையாக அவரின் கோபமும் நியாயமானது தான். அவரின் எள்ளல் பேச்சில் தான் இன்று இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறான். ஆனால் கடந்த ஐந்து வருடமாக தாராவையும் குடும்பத்தாரையும் நேரில் பார்க்காமல் ஒரு வைராக்கியத்தோடு இருந்து விட்டானே. அப்போதெல்லாம் அவன் மனதில் எத்தனை வலியாக இருந்தது? கண்டிப்பாக அதே வலி தாராவிற்கும் இருந்திருக்கும் தானே?


தேவையில்லாமல் இருவரும் பிரிவு துயரை அனுபவிக்க அந்த ஒரு சம்பவம் தானே முக்கிய காரணம்?


இறுக்கமான முகத்துடன் காரை செலுத்திக் கொண்டிருந்தவனையே பார்த்துக் கொண்டிருந்த தாராவுக்கு ஏதோ போல இருக்கவும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “அவளுங்க என்ன சொன்னாங்க?” என்றாள் காற்றாகி போன குரலில்.


திரும்பி அவளை பார்த்து முறைத்தவன், “ஏண்டி உனக்கு என்கிட்ட இருந்து முத்தம் வேணும்னா என்கிட்ட தானே கேட்கணும். என் கிட்ட கேட்டு இருந்தால் எப்படி எங்கே வச்சு கொடுக்கணுமோ, அப்படி கொடுத்திருப்பேன். அதைவிட்டுட்டு அரைவேக்காடுங்க கிட்ட போய் ஐடியா கேட்டு இருக்க” என்றான் கோபமாக.


அவன் அப்படி கேட்டதும் தாரிகாவின் முகம் கன்றி போனது. அதை பார்த்து சற்றே கோபத்தை தணித்து மெல்லிய குரலில் சொன்னான், “அன்னைக்கு ஹாலில் சோபாவில் நாம் ஒண்ணா நெருக்கமா இருந்ததை உங்க அப்பா பார்த்தார் நினைவிருக்கா? அதுக்கு பின்னாடி என்ன நடந்ததுனு உனக்கு தெரியுமா?” என்றான் மெல்லிய குரலில்


அவள் தெரியாது என்பது போல தலையை இடம்வலமாக ஆட்டவும், பெருமூச்சொன்றை வெளிவிட்டவன், அன்று நடந்ததை பற்றி விவரமாக விளக்கினான். அதிர்ச்சியுடன் அவனையே விழி அகல பார்த்திருந்தாள் தாரிகா. இதைப்பற்றி ஒரு நாளும் அவளின் பெற்றோர் பேசியதே இல்லை. செந்தூரனுக்கு தன்னை விட தன்னுடைய படிப்பு மற்றும் கேரியர் தான் முக்கியம் போல என்று மன சுணக்கத்துடன் இருந்தாள்.


அவளின் படிப்பு முடிந்ததும் செந்தூரன் வந்து திருமணம் செய்துக் கொள்வான் என்று சாரதா சொல்லியருந்த ஒற்றை வாக்கியம் தான் அவளை அத்தனை வருடங்கள் பொறுமையுடன் இருக்க செய்தது. ஒரு நாளும் காதல் பார்வையோ தொடுகையோ அவனிடம் இல்லையே என்று உள்ளுக்குள் வருந்தினாள். ஒருவேளை காதல் எல்லாம் இல்லையோ, சாரதாவின் மகள் என்பதற்காகவே அவளை திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டானோ என்றெல்லாம் நினைத்து குழம்பி இருக்கிறாள்.


சுபாஷின் கட்டுப்பாட்டோடு, செந்தூரனின் கண்ணியத்தாலுமே அவளிடம் நெருங்காமல் இருந்திருக்கிறான். ஐந்து வருட பிரிவிற்கு அவளின் சிறுபிள்ளை தனம் தானே காரணம் என்று வருத்தமாக இருந்தது.


மேலும் செந்தூரன் பேசிக் கொண்டே இருந்தான். “கடந்த ஐந்து வருடமும் உன் கிட்ட நான் காதலனாக பேசலைனாலும், எனக்கு நீ என்னை காதலிக்கிறாய் என்ற நம்பிக்கை இருந்தது தாரா. எப்படினு பார்க்கறீயா? உன் தோழிகள் என்னை ரசித்து பார்க்கிறாங்கனு தெரிஞ்சு நீ என்கிட்ட அன்னைக்கு வந்து பேசின பாரு அப்பவே எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு,  என் மேல் நீ காட்டிய பொசசிவ்னஸூம், என்னை நீ மட்டும் தான் பார்க்கணும் நீ சொன்னதும் தான் இத்தனை நாளாக என்னை காத்திருக்க வைச்சது.


சின்ன வயசில ஆத்தங்கரை மணலில் அந்தி நேரத்தில் உன் கழுத்தில் ஒரு கயிற்றை கட்டி உன்னை பொம்மை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்டி. அன்றையிலிருந்தே நீ என் பொண்டாட்டி என்ற நினைப்பு தான் எனக்கு. வாராவாரம் ஞாயிறன்று வெணிஸ் நகர கடற்கரை மணலில் அந்திவானத்தை ரசிச்சபடி உட்கார்ந்திரப்பேன். அப்படி மணலில் அமர்ந்தபடி அந்திவான சிவப்பை பார்க்கும் போதெல்லாம் ஆத்தங்கரையில் நாம செய்துக்கிட்ட கல்யாணம் தான் என் நினைவில் வரும். அப்படியே ஐந்து வருஷத்தை நெட்டித்தள்ளி உன்னை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசையோடு வந்தால் உனக்கு வேறொருத்தனோட திருமணம் நிச்சயம்னு தெரிஞ்சா எனக்கு எவ்வளவு கோபம் வரும்?” என்றான் பற்களை கடித்து. இப்போதும் அவன் கோபத்தின் அளவு குறையவில்லை என்று தாரிகாவிற்கு நன்றாக புரிந்தது.


உன்னை காதலியாக பார்க்கலை, மனைவியாகவே பார்த்ததால உன்னை தூக்கிட்டு போய் உன் கிட்ட உரிமையோட நடந்துகிட்டேன். அப்போ எனக்கு அது தப்பா தெரியலை. ஆனால் உன்னோட உணர்வுகளுக்கும் நான் மதிப்பு கொடுத்திருக்கணும்னு அப்பறமாக தான் புரிஞ்சுகிட்டேன். ரியலி சாரிடி, மன்னிச்சுடு ப்ளீஸ்” என்றான் உணர்ந்து.


செந்தூரன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு மன்னிப்பும் யாசிக்கும் போது அவளால் தன் கோபத்தை இழுத்து பிடித்து வைக்க முடியவில்லை. கண்கள் பனிக்க அவன் தோள் மேல் சலுகையாக சாய்ந்துக் கொண்டு தன் இருகைகளையும் அவன் இடுப்பை சுற்றி கட்டிக் கொண்டாள்.


அவளின் இந்த அணைப்பே அவனை மன்னித்து விட்டதாக பறைச்சாற்ற திரும்பி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு பின் காரை மெதுவாக செலுத்த தொடங்கினான். 


கார் வீட்டை அடைந்ததும், தாரா கீழே இறங்கினாள். செந்துரன் அவளுக்கு முன்புறம் முதுகை காட்டி நின்றவன் தன் முதுகை வளைத்து குனிந்து நின்றான். என்ன செய்கிறான் இவன்? என்று தெரியாமல் விழித்தாள்.


“ஏறு தாரா, உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன்” என்றான்


“ஐயோ மாமா” என்று சிணுங்கினாள். “அதெல்லாம் சின்னபிள்ளையில் புரியாமல் விளையாடுனது. இப்போ யாராவது பார்த்தால் என்ன சொல்வாங்க? அன்னம்மா மதியம் சமைக்கறதுக்கு வீட்டில் தான் இருப்பாங்க” என்றாள்.


“யாரு என்ன நினைக்கிறது? என் பொண்டாட்டியை நான் தூக்கிட்டு போவேன் என்று அவளின் கைகளை பிடித்து தன் தோள்பட்டையிணூடே சட்டென இழுத்து அவளை தன் முதுகில் ஏற்றிக் கொண்டான். அவளும் வாகாக அவன் முதுகில் அமர்ந்துக் கொண்டு தன் முகத்தாடையை அவள் தோளில் வைத்துக் கொண்டாள்.


இருவருக்குமே அவர்களின் சிறுவயது பிராயமே நினைவில் வந்தது. அந்த ஏகாந்த நினைவுடன் வீட்டிற்குள் சென்று அவர்களின் அறையையும் அடைந்திருந்தனர். எதிரே நின்றிருந்த கவினையும் அன்னம்மாவையும் அவர்கள் கவனிக்கவே இல்லை.


கவின் தொண்டையை செருமிக் கொண்டு, “மித்ரன் பீரி ஆனதும் எனக்கு போன் செய்ய சொல்லுங்க, நான் அப்புறம் வரேன்” என்று சொல்லி விட்டு சென்றான்.


செந்தூரன் தாரிகாவை தூக்கிக் கொண்டு பின்புறமாக நின்றபடி கட்டிலில் சாய்ந்தான். மெத்தையின் மேல் தாரிகா இருக்க, அவளின் மேல் மொத்தமாக அவன் இருந்தான். அந்த ஏகாந்த நிலையை ரசித்தபடி இருவருமே சில நிமிடங்கள் அப்படியே இருந்தனர்.


ஆறடி உயரமும் உடற்பயிற்சி செய்து இருந்த கட்டு மஸ்தான ஒரு ஆண்மகனை எவ்வளவு நேரம் தான் அந்த மெல்லிடையாளால் தாங்க முடியும், அவன் பாரத்தில் மூச்சு முட்ட நெளிந்தாள். அவன் அசைவதாக தெரியவில்லை.


சட்டென கோபத்துடன் “டேய் செவப்பா, எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்ப? கொஞ்சமான கணமா கனக்குற, இறங்குடா கீழ” என்றாள் தன்னையும் மீறி.


இப்போது அப்படியே திரும்பி தன் இருகைகளையும் அவள் இருப்புறமும் ஊன்றி அவள் மேல் பாரம் படாதவாறு தண்டால் எடுக்கும் போஸில் இருந்தான். அவளை கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவன் பார்வையும் இருவரின் மேனியும் உரசிவிடும் தூரத்தில் இருந்த நெருக்கமும், அவனின் மூச்சுக்காற்றும் அவளை நிலை தடுமாறச் செய்தது. 


வெட்கத்துடன் தன் இருகைகளால் முகத்தை மறைத்துக் கொண்டாள். அவள் கைகளில் அவனின் உதடுகள் உரச கேட்டான், “நான் சாமியாராடி? இப்போ இந்த சாமியார் என்னனென்ன செய்யறான்னு பார்க்கறீயா? அன்னைக்கே என் வேகத்தை பார்த்த தானே” என்று அவன் உளறிக் கொட்ட, அவள் மனதில் ஜெட் வேகத்தில் அவர்களின் முதல் சங்கமம் நினைவிற்கு வர, சட்டென்று அவனை பிடித்து பக்கவாட்டாக தள்ளினாள்.


அவள் அப்படி செய்வாள் என்று எதிர்பார்க்காதால் செந்தூரன் கட்டிலின் மறுபக்கம் சாய்ந்தான்.


முதலில் எதுவும் புரியாமல் அவனின் மோன நிலை அறுபட்டதில் சட்டென்று மூண்ட கோபத்துடன் எழுந்து அவளை பார்த்தவன், அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும் தான், அவன் சொன்ன வார்த்தைகள் அவர்களின் முதல் சங்கமத்தை நினைவுபடுத்தியிருக்கிறது என்று புரிந்து கொண்டான்.


இருவருமே காதலிக்கிறார்கள், இப்போது நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்தும் கொண்டார்கள். இன்னுமே நடந்த விஷயத்தை எண்ணிக் கொண்டு அவளும் வருத்தப்பட்டு அவனையும் வருத்தபடச்செய்கிறாள். நடந்ததை அவனால் மாற்றவும் முடியாதே!


கோபமாக எழுந்தவன் காலை தரையில் ஓங்கி உதைத்து கைகளை ஓங்கி சுவற்றில் குத்தினான், “இப்போ என்ன தான்டி பண்ண சொல்ற? டைம் மிஷின் எதாச்சும் இருந்தா சொல்லு, நான் வேணும்னா போய் நடந்ததை மாத்தி வச்சிட்டு வந்திடுறேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.


அவன் கோபம் மேலும் அவளை வருத்த, குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். வீணாக வருத்தம் கொண்டு அவனையும் வருத்துகிறோம் என்று அவளுக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் மனதில் ஏற்பட்ட ஏமாற்றம், கண்களில் கண்ணீராய் கரைபுரண்டு ஓடுவதை அவளால் தடுக்க முடியவில்லையே!



(தொடரும்)




Leave a comment


Comments


Related Post