இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 27-04-2024

Total Views: 32423

அத்தியாயம் -21


ஒரு வாரம் பரபரப்பாய் கடந்திருந்த நிலையில் தற்போது தான் யஷ்வந்த் அனைத்து வேலைகளையும் முடித்து ஓரளவு பெருமூச்சு விடவே நேரம் கிடைக்கப் பெற்றிருந்தான்.

இந்த ஒருவாரம் முழுதும் அவள் உறங்கிய பின்பு அவன் வருவதும் அவள் எழும் முன்பே செல்வதுமாய் இருந்திருக்க, அடுத்த ஒரு வாரம் வேண்டுமென்றே அவன் விரைவாகவே வந்தாலும் உறக்கம் வருவதாய் அவள் படுப்பதும் காலை தாமதமாய் எழுந்து பரபரப்பாய் கிளம்பி கல்லூரி செல்வதுமாய் இருந்தாள், பெண்!

அவளது நடவடிக்கைகள் யாவும் அவனுக்கு புதிராகவே இருக்க, இன்று எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான்.

அங்கு கல்லூரியில் இரண்டு வாரமாய் பேய் பிடித்ததைப் போல் திரியும் தன் தங்கையை கேண்டீனில் அமர்த்திய அர்ஜுன், “எதாச்சும் சாப்டுறியா அஞ்சு?” என்று கேட்டான். 

“ம்ம்..” என்றவள்,

 “என்ன வேணும்?” என்று அவன் கேட்டதும்,

 “நீ என்ன வாங்குறியோ அதுவே வாங்கு அஜு” என்று கூறவும் அதிருப்தியாய் நோக்கினான். அதுவெல்லாம் அவள் கவனத்தில் எங்கு இருந்தது?

தானே சென்று இருவருக்கும் ரோஸ் மில்க் வாங்கி வந்தவன், “என்னாச்சு அஞ்சு? ஏன் ஒருமாதிரி இருக்க?” என்று கேட்க, 

“அப்படிலாம் இல்லைடா. நல்லாதான் இருக்கேன்” என்றாள்.

“இல்லையே ஒருவாரமா ஒருமாதிரி தான் இருக்க” என்று அவன் கூற, 

“அ..அப்படியா?” என்றாள். 

“என்ன அப்படியா? எதும் பிரச்சினையா அஞ்சு?” என்று அவன் கேட்க, அவளிடம் பதிலே இல்லை.

“அஜு நான் நம்ம வீட்டுக்கு வரவா?” என்று அவள் கேட்க, 

“ஏன்டா? அ..அவங்க கூட எதும் சண்டையா?” என தயக்கத்துடன் கேட்டான். 

“ச்ச ச்ச.. இல்ல அஜு” என்றவள், “வரவா?” என்க, 

“உன் இஷ்டம்” என்றான்.

“நீ சொல்லு அஜு..” என்று அவள் கூற, 

மீண்டும் என்னதிது என்று சலிப்பும் வேதனையும் கொண்டவன், “உன் இஷ்டம் அஞ்சு. இதுல என்ன என்கிட்ட பர்மிஷன் கேக்குற?” என்றான்.

“ப்ச்.. சொல்லேன் அஜு” என்று அவள் கூற, 

“என்ன அஞ்சு உனக்கு பிரச்சினை? சும்மா நீயே சொல்லு நீயே சொல்லுன்னு. நீ சொந்தமா யோசிக்க மாட்டியா? நீ சின்ன குழந்தையில்ல அஞ்சனா. உனக்கு எங்க போகணும் வரனும்னு கூடவா என்கிட்ட கேட்ப?” என்று கத்தினான்.

அவன் கத்தியதும் திடுக்கிட்டுப் போனவள் அவன் பேச பேச விழிகள் விரிய, அதிர்ந்து விழிக்க, அவள் கண்களில் நீர் நிரம்பிக் கொண்டது. 

“எதாச்சும் பேசேன் அஞ்சனா?” என்று அவன் கத்த, 

“அத்தான்..” என்றபடி அங்கு வந்தாள் மதுமஹதி.

கண்ணீருடன் அமர்ந்திருந்த அண்ணியைக் கண்டவள், “அண்ணி என்னாச்சு?” என்று வினவ, 

கன்னம் தாண்டி உருண்டோடிய கண்ணீரை துடைத்துக் கொண்டு விறுவிறுவென எழுந்து சென்றிருந்தாள்.

அவளை வேதனையான பார்வை பார்த்தபோதும் அவள்மீது முதன் முறை அளவு கடந்த கோபத்தை தான் உணர்ந்தான் அர்ஜுன். 

“அத்தான்.. எதுக்கு அண்ணிய திட்டுறீங்க? பாவம் அழுதுட்டே போறாங்க” என்ற மதுவின் குரலில் நிலைபெற்றவன், 

“ஒன்னுமில்ல மஹதி” என்றான்.

“எதும் பிரச்சினை இல்லையே?” என்று மது மீண்டும் வினவ, 

சற்றே தயங்கியவன், “அஞ்சு ஒருவாரமாவே சரியில்லயே” என்று கேட்டான்.

 “ஆமா அத்தான். எப்பவும் கலகலனு இருப்பாங்க. இப்ப ரெண்டு வாரமாவே ஆள் சோகமா இருக்காங்க” என்று அவள் கூற, “இல்ல மஹதி.. எதோ சரியில்லை” என்றான்.

அவன் ஏதோ கேட்க நினைப்பதும் விழுங்குவதுமாய் இருக்க, 

“எதும் கேக்கனுமா அத்தான்?” என்று கேட்டாள். 

“அ..அது.. அவ்..அவங்க கூட எதும் பிரச்சினையா?” என்று அவன் கேட்க, “எவங்க கூட?” என்றாள்.

முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டவன், “உங்க அண்ணா கூட” என்று கூற, 

கண்கள் சுருக்கி அவனைப் பார்த்தவள், “அதென்ன எங்கண்ணா? உங்க மாமானு சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“ப்ச்.. அப்படிலாம் கூப்பிட்டதில்ல மஹதி’’ என்று அவன் கூற,

 இரு புருவங்கள் உயர்த்தி “ஏன்?” என்று கேட்டாள். 

“ப்ச்.. உனக்கு தெரிஞ்சா சொல்லு மஹதி” என்றவன் நகர எத்தனிக்க, 

அவன் கரம் பற்றி நிறுத்தியவள், “உங்களுக்கு அண்ணாவை பிடிக்காதா அத்தான்?” என்றாள்.

சிறு பெண் இவள் இத்தனை பக்குவமாய் பேசுவதிலும் துரிதமாய் கேள்வி கேட்பதிலும் ஒரு நொடி வியந்து நின்றவன், “பிடிக்காதுனுலாம் இல்லை மஹதி. பேசினது கிடையாது” என்று கூறினான்.

“இன்னும் ரெண்டு மாசம் போனா அவங்க ஃபர்ஸ்ட் வெட்டிங் ஆனிவர்ஸரியே வந்துடும். இன்னுமா நீங்க அண்ணாகிட்ட பேசலை? சரி அதை விடுங்க, முறை வச்சு கூப்பிட கூடவா பழகலை?” என்று அவள் கேட்க,

 ‘அய்யோ சும்மாவே போயிருக்கலாம் போல. இவகிட்ட கேட்டது தப்பா போச்சு. என்ன பேச்சு பேசுறா' என்று நினைத்துக் கொண்டவன், “எனக்கென்ன இருக்கு பேச?” என்று சலிப்பாய் கூறினான்.

“ஏன் நானோ யாழி அக்காவோ உங்க வீட்ல எல்லார் கூடவும் எவ்வளவு ஜோயலா இருக்கோம்? சரி எங்கள விடுங்க. யாதவ் அண்ணா ஆதி அத்தான்கூட எவ்வளவு ஜாலியா பேசுறாரு” என்று அடுத்தடுத்து அவள் போடு போட, 

“எல்லாரும் ஒரே போல இருக்க மாட்டாங்க மஹதி” என்றான்.

“அதுக்குனு ஒரு வருஷமாவா பழகாம இருப்பாங்க?” என்று அவள் மீண்டும் அதே இடத்திற்கு வந்தாள்.

 “உனக்கு சொன்னா புரியாதுமா” என்று அவன் கூற,

 “சொல்லுங்க புரியுதா பார்ப்போம்” என்றாள்.

'யாருடா இவ?’ என்னும் ரீதியாய் அவளைப் பார்த்தவன், “எனக்கு இந்த கல்யாணத்துலயே இஷ்டம் கிடையாது மஹதி. சுத்தமா பிடிக்காம, ஏத்துக்காம இருந்த உங்க அண்ணாவையே இப்ப தான் கொஞ்சம் என் அஞ்சுக்கு ஹஸ்பெண்ட் என்னும் வரை ஜீரணிச்சிருக்கேன். போதுமா?” என்றான்.

அவனை ஆச்சரியமாய் பார்த்தவள், “ஏன் அப்படி?” என்று கேட்க, 

“இந்த வயசுல உங்க வீட்ல உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சா என்ன சொல்லுவ?” என்று அவன் கேட்க, 

அவன் கேட்க வருவது புரிந்தவளாய், “அண்ணிய கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சாங்களா?” என்று கேட்டாள்.

“அதுக்கு கல்யாணம்னா அவளுக்கு என்னனு தெரிஞ்சுருக்கனும்” என்று முனுமுனுத்துக் கொண்டவனுக்கு அவளிடம் எதையும் விளக்க தோன்றவில்லை. அத்தனை உரிமையுணர்வும் அவளிடம் அவனுக்கில்லை. 

“கட்டாயப்படுத்தலை.. ஆனா அவளுக்கு விளக்கமும் யோசனையும் இல்லாம பண்ணி வைச்சுட்டாங்க. அவ்வளவு தான். அதனால எனக்கு கோபம். விருப்பமின்மை” என்றவன்,

 “ப்ளீஸ் மஹதி. மேல கேட்காத” என்று பட்டென கூறினான்.

“ம்ம் கேக்கலை கேக்கலை” என்றவள், அவன் வாங்கி குடிக்காமல் வைத்திருந்த ரோஸ்மில்கை பருகி, “வேற ஒன்னு கேட்கலாமா?” என்றாள்.

அவளை ஏற இறங்க ‘என்ன?’ என்பது போல் பார்த்தவன் கண்டு,

 “நீங்க இல்யூஷன் டிராயிங்ஸ்லாம் நல்லா வரையுவீங்கனு அண்ணி சொல்லுவாங்க. எனக்கும் சொல்லி தரமுடியுமா? இல்லை இதுக்கும் உங்கண்ணாவை பிடிக்காது உன்னை பிடிக்காதுனு சொல்லுவீங்களா? எங்கண்ணாவை பிடிக்கலைனாலும் என்னை கன்ஸிடர் பண்ணலாமே.. நான் பாவமில்லையா?” என்று அவள் கேட்க, 

அவள் பாவனையில் லேசாய் எட்டிப் பார்த்த சிரிப்பை மறைக்காது பிரதிபலித்தவன், “ஓகேமா” என்றான்.

“ஹப்பா.. சிரிச்சாச்சு சார். சரி கிளாஸ் போங்க. அண்ணி பாவம்” என்று கூறியவள் செல்ல, தானும் எழுந்து சென்றான்.

“டேய் விளக்கெண்ண.. என்னாச்சுடா? அவளை என்ன சொன்ன?” என்று மீனு தன் நண்பனை முறைத்தபடி கேட்க, 

அமைதியாய் வழியும் கண்ணீரை துடைத்தபடி அமர்ந்திருக்கும் அஞ்சனாவைப் பார்த்தவன்,

 “மடில வச்சு கொஞ்ச சொல்றியா? போ மீனு” என்றுவிட்டு சென்றான்.

கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அப்படியேனும் அவள் வாய் திறந்திட மாட்டாளா என்ற நப்பாசையில் தான் அவ்வாறு கூறினான். இருப்பினும் எதுவும் வேலை செய்யத்தானில்லை.

அன்று கல்லூரியிலிருந்து நேரே தன் புகுந்த வீட்டிற்கே வந்தவள் தங்கள் அறைக்குள் நுழைய, யஷ்வந்த் அழுத்தமான பார்வையுடன் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

அதில் ஒருநொடி திடுக்கிட்டு நின்றவள், பின் குளியலறைக்குள் செல்ல, வெகுநேரம் பொறுத்து பொறுத்து பார்த்தவன் குளியலறை கதவை ‘தட் தட்’ என தட்ட, அவ்வொலியில் பதறித்தான் போனாள்.

உடைகூட கலையாது நீருக்கடியில் இத்தனை நேரம் நின்றிருந்ததே அப்போது தான் பாவைக்குப் புரிந்தது. 

“அஞ்சனா..” என்று அவன் கத்த,

 “ம்..ம்ம் மாமா” என்று குரல் கொடுத்தவள் விரைவே உடை கலைந்து குளியல் அங்கிக்கு மாறிவிட்டு கதவைத் திறந்தாள்.

ஈரம் சொட்ட சொட்ட நின்றவளுக்கு குளிரூட்டப்பட்ட அறையின் குளிர் மேனியை ஊசியாய் துளைக்க,

 “ஏ..இப்ப எதுக்கு சனா தலைக்கு குளிச்ச?” என்றவன் அவள் நடுநடுங்குவதைக் கண்டு குளிரூட்டியை அணைத்தான்.

“போய் முதல்ல டிரஸ் பண்ணிட்டு வா” என்று அவன் கூற, சென்று தனது இரவு சட்டை மற்றும் பைஜாமா கால்சட்டைக்கு மாறியவள் தலையை துவாலை கொண்டு துவட்டியபடி வந்தாள்.

ஈரத்திலும் குளிரிலும் வெடவெடக்கும் அவள் ரோஜா இதழ்களைத் தன் உஷ்ண இதழ் கொண்டு அணைத்திட எழுந்த ஆவலை அப்படியே உள்ளே தள்ளிய யஷ்வந்த், “சனா..” என்று அடர்ந்த குரலில் அழைக்க, அமைதியாய் நிமிர்ந்து பார்த்தாள்.

எப்போதும் அவள் கண்களில் பிரதிபலிக்கும் சிரிப்பும் துள்ளலும் மருந்துக்கும் அவளிடம் இல்லை. பொய்யான புன்னகை கூட இல்லாத அவளது அமைதியான முகத்தை அவனுள்ளம் அறவே வெறுத்தது என்று தான் கூற வேண்டும்.

'உன்கிட்ட மெசூரிடி தான்டி எதிர்ப்பார்த்தேன். இந்த அமைதியை இல்லை’ என்று அவன் உள் மனம் அறற்ற, 

“என்னாச்சு சனா உனக்கு?” என்று கேட்டான்.

சோகமும் சோர்வுமாய் தளர்ந்தவள், தலையை கவிழ்ந்தபடி, இதழ் துடிக்க, “வயிறு வலிக்குது மாமா” என்றாள். 

நாட்காட்டியை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவன், “பீரியட்ஸா சனா?” என்க, மெல்ல தலையசைத்து ஆமோதித்தாள்.

அவளை தன் பரந்த கரங்களுக்குள் அரவணைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தவன், எப்போதும் அதில் பாந்தமாய் பொருந்திக் கொள்பவள், தற்போது எதிர்வினை இன்றி பொம்மை போல் சிறைப்பட்டிருப்பதை வித்தியாசமாய் உணர்ந்தான்.

'மாமா வயிறு வலிக்குது மாமா' என்று பாவம் போல் தன்னை கட்டிக் கொண்டு அவள் அடைக்கலம் புகுந்து கொண்ட நாட்கள் ஏதோ முற்பிறவியில் நடந்ததைப் போல் அவன் கண்முன் தோன்றியது.

“ரொம்ப வலிக்குதாடி? அதான் ஒருமாதிரி இருக்கியா?” என்று அவன் கேட்க, அவள் கண்களில் கண்ணீர் கரைபுரண்டது.

லேசான விம்மலுடன் “அ..அஜு.. அஜு கூட சண்டை மாமா” என்று அவள் கூற, முதலில் அவனுக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

 'யாரு உன் உடன்பிறப்பாடி? அவனா உன்கூட சண்டை போட்டான்?’ என்று எண்ணியவன், “என்னாச்சு சனா?” என்றபடி அவளுக்குத் தட்டிக் கொடுத்தான்.

அவளேதும் கூறவில்லை. மெல்ல அவனுடன் ஒன்றி அவனை அணைத்துக் கொண்டவள் கண்ணீரை அவன் சட்டைக்கு பாய்ச்சிவிட்டு மெல்ல உறங்கிப் போனாள்.

ஏற்கனவே வாய் திறக்காமல் சுற்றுபவள் தற்போதைய நிலையில் கேட்டால் அழுகையைத் தவிர ஏதும் பதில் தரமாட்டாள் என்பதால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்பு பார்த்துக் கொள்வோம் என்று எண்ணிக் கொண்டான்.

ஐந்து நிமிட உரையாடலை அவன் தட்டிக் கழிப்பதன் விளைவு கூடிய விரைவில் அவன் முன் காட்சிப்படப் போவதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை!


Leave a comment


Comments


Related Post