இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-22 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 27-04-2024

Total Views: 32968

அத்தியாயம் -22


கோபம்.. கோபம்.. கோபம்..

மருத்துவமனையில் தன்முன் படுத்திருப்பவளைக் கண்டு மனமெங்கும் அத்தனை கோபத்துடன் அமர்ந்திருந்தான் யஷ்வந்த் கிருஷ்ணா.

பளார் பளாரென அவள் பஞ்சு கன்னங்களில் அறைந்து அதிலேயே அழுத்தமாய் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டு திட்டிவிடத்தான் அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

இருப்பினும் தனது கோபத்தினை கட்டுப் படுத்திக் கொண்டு அமைதியாய் அவள் கண்முழிக்க வேண்டி அமர்ந்திருந்தவன் நினைவுகள் சில நிமிடங்களுக்கு முன்பு பயணித்தது.

அமைதியான சாந்தமான முகத்துடன் அமர்ந்திருக்கும் அந்த பகுதியின் சிறந்த மனநல மருத்துவர் முன்பு அமர்ந்திருந்தாள் அஞ்சனா.

அவள் கண்களில் மெல்லிய நீர் படலமும் பயமும் சூழ்ந்திருக்க, “என்னாச்சுமா? என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்று அம்மருத்துவர் கேட்டார்.

இத்தனை சிறு பெண் தன்னை தேடி தானாக வந்திருப்பது ஒருபக்க ஆச்சரியம் என்றால், யஷ்வந்த் கிருஷ்ணாவின் மனைவி அவள் என்பதை அடையாளம் கண்டுகொண்டவருக்கு அது இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

இருப்பினும் ஏதும் கேட்டுக் கொள்ளாது அவர் அமைதியாக இருக்க, 

“எ..எனக்கு என்ன பிரச்சினைனு கே..கேக்க தான் நானும் வந்திருக்கேன் டாக்டர்” என்று தட்டுத் தடுமாறிக் கூறினாள். 

அழகிய மென்மையான புன்னகையுடன் அவளை ஏறிட்டவர், “ஏன்டா? என்ன கேட்கனும்?” என்று வினவ, 

“எ..எனக்கு narcissistic personality disorder, Peter Pan Syndrome, Paranoid personality disorder இ..இப்படி எதாவது இருக்கானு தெரிஞ்சுக்கணும் டாக்டர்” என்றாள்.

கூறுகையிலேயே அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. 

அதே புன்னகையுடன், “அப்படினா என்னனு தெரியுமாமா உங்களுக்கு?” என்று அவர் வினவ, 

“தெரியும்” என வேகமாய் கூறினாள்.

“என்னது?” என்று அவர் வினவ, 

“எ..எல்லாம் ஒருவகையான ம..மனநோய் தான். ப்.. பைத்தியம் மாதிரி” என்றாள்.

“அப்படினு யார் சொன்னது?” என்று அவர் கேட்க, 

“எனக்கு தெரியும்” என்றாள். 

“ஓ..” என்றவர், “Paranoid personality disorder அப்படிங்குறது ஒரு டிஸாடர் தான். அது பெரும்பாலும் யாரையும் நம்ப வைக்காது. ரொம்ப சின்னபிள்ளை தனமாவும் நடந்துக்க வைக்கும். narcissistic personality disorder என்பது குழந்தைதனமா நடந்துக்க வைக்கும் மனநல பிரச்சினை. தன் சுயத்தை பற்றிய பகுத்தறிவே அறியவிடாம பார்த்துக்கும். Peter Pan Syndrome அப்படிங்குறது ஒருவரை மனதளவில் வளரவிடாம தடுக்கக் கூடிய மனம் சம்பந்தப்பட்ட கோளாறு” என்று கூற, 

“நா.. நானும் அப்படி தான் இருக்கேன்” என்று கண்ணீரோடு கூறினாள்.

“அப்படியா? எதை வச்சு சொல்லுறீங்க?” என்று அவர் கேட்க, 

“எ.. எனக்கு எதுமே தெரியலை. யாருகிட்ட என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும், எப்படி சுயமா யோசிக்கணும் இப்.. இப்படி எதுவுமே தெரியலை” என்று கூறினாள்.

“ஏன் தெரியலை?” என்று அவர் பொறுமையாய் வினவ,

 “எ.. எல்லாம் எங்க அம்மா தான். எ..எனக்கு எதுவுமே சொல்லி த..தரலை” என்று கூறினாள். அவளிடம் ஒரு மெல்லிய கேவல் ஒலி அவ்வப்போது எழ, அதைக் கவனித்து பருக நீர் கொடுத்தவர், 

“ஏன் சொல்லி தரலை?” என்று கேட்டார்.

“நா.. நான் சின்ன பொண்ணா இருக்கும்போது ஒ..ஒன்னு நடந்துச்சு.. அதுல தான் எ..எல்லாமே இப்படி ஆயிடுச்சு” என்று அவள் கூற,

 “அப்படி என்ன ஆச்சு?” என்றார்.

தன் சிறுவயது சம்பவத்தைக் கூறி வெடித்து அழுதவள், “எ..எனக்கு அ..அது..அது பயமா இருக்கு.. அ..அந்த சத்தம் இன்னும் கேக்குது.. அம்மா யாரையும் நம்பாத, சுயமா முடிவெடுத்து மாட்டிக்காத அஜுவ கேளுனு தான் சொல்லி குடுத்தாங்க. இப்ப எல்லாரும் வந்து நீயே யோசி நீயே யோசினு சொல்றாங்க. எனக்கு எல்லாமே குழப்பமா இருக்கு.. நா.. நான் பைத்தியமாம். எனக்கு இ.. இந்தமாதிரி மனநோய் இருக்காம். எ..என்னை கல்யாணம் பண்ணதே மாமாவோட பாவமாம்.. சி..சீக்கிரம் என்னை வி..விட்டுட்டு போயிடுவாங்களாம். மாமா என்னை நல்லா தானே பாத்துக்குறார்னு சொன்னா அது நடிப்புனு சொல்றாங்க. நா.. நான் என்னதான் பண்றது டாக்டர்?” என்று கேவ, 

“ஜஸ்ட் ரிலாக்ஸ் மா. ஒன்னுமில்லை” என்று தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்தினார்.

“எனக்கு என்ன பிரச்சினை டாக்டர்? நிஜமாவே எனக்கு மனநோய் இருக்கா? நா.. நான் பைத்தியமா?” என்று அவள் கதற, 

“லிஸன் மா.. மனநோய் இருக்குற யாரும் அவங்களுக்கு மனநோய் இருக்குனு பகுத்தறிஞ்சு வந்து கௌன்ஸலிங்லாம் எடுக்க மாட்டாங்க. இதுலயே உங்களுக்கு பிரச்சினை இல்லைனு புரியலையா?” என்று கேட்டார்.

“ஆ.. இல்ல எனக்கு என்னமோ இருக்கு” என்று கத்தியவள் தன் தலையை பிடித்துக் கொண்டு கதறி அழ, தன் செவிலியை அழைத்து அவளை ஆறுதல் படுத்தியபடி மயக்க ஊசி போட்டு படுக்க வைத்து உடனே யஷ்வந்தை அழைத்திருந்தார்.

அஞ்சனா அங்கு அனுமதிக்கப்பட்ட செய்தியை கிரகிக்க முடியாது இரு விநாடி குழம்பியவன் பின்பு பதற்றத்துடன் புறப்பட்டு அங்கு வந்திருந்தான்.

“அவங்கள பார்த்ததுமே உங்க வைஃப்னு அடையாளம் தெரிஞ்சுடுச்சு சார். அவங்களோட இன்னஸன்ஸ பயன்படுத்தி யாரோ ரொம்ப ஹர்ட் பண்ணிருக்காங்க. அது எதையும் வெளியவும் சொல்லாம மனசுக்குள்ளயே போட்டு உலட்டியதன் பலன் தான் அவங்க இங்க வந்தது. அதுமட்டுமில்ல அவங்க பிபி ரொம்ப அதிகமா இருக்கு. இந்த வயசுக்கு இவ்வளவு ப்ரஷர்லாம் ரொம்ப அதிகம் சார். நான் கௌன்ஸ்லிங் குடுப்பதை விட முதல்ல அவங்களுக்கு தேவை உங்களோட ஆறுதலும் அரவணைப்பும் தான். நீங்க அவங்கள விட்டுட்டு போயிடுவீங்கனு பயப்படுறாங்க சார்” என்று மருத்துவர் கூற, அவன் இதயத்தின் மையத்தில் யாரோ கூர் வால் கொண்டு குடைவதைப் போன்று உணர்ந்தான்.

‘நீ நிஜமா பைத்தியம் தான்டி.. இல்லைனா நான் உன்னை விட்டுட்டு போவேன்னு யோசிப்பியா?’ என்று அவன் மனம் எண்ண, 

“அவங்க ப்ரஷர் குறைய மாத்திரை தரேன் சார். கண்டிப்பா டயட் ஃபாலோ பண்ணியாகணும். பி.பி குறைஞ்சா தான் என்னால மேற்கொண்டு ப்ராப்பர் கௌன்ஸ்லிங் கொடுக்க முடியும். அதுக்கு முன்ன நீங்க அவங்க கிட்ட பேசுறது தான் சரியாவும் முறையாவும் இருக்கும்” என்று கூறினார்.

சரியென்று அவளிருக்கும் அறைக்கு வந்தவன், சோர்வாய் கட்டிலில் தோய்ந்து படுத்திருப்பவள் அருகில் வந்தமர்ந்தான். கண்களெங்கும் அவள் மீது கோபம் மட்டுமே.. அந்த கோபம் கூட வருத்தத்தின் சாயலென்று அவனுக்குப் புரிந்தும் இருந்தது.

ஆடவன் இவ்வாறான யோசனையோடு இருக்க, பேதையவள் மெல்ல விழி மலர்ந்தாள். முதலில் தான் எங்கு இருக்கின்றோம் என்னவானது என ஏதும் புரியாது எழுந்தமர்ந்தவள் மருத்துவமனை சுற்றத்தை உணர்ந்த பின்பே அவள் அங்கு எதற்கு வந்தாளென்ற காரணம் புரிந்தது.

மெல்ல அருகே திரும்பிப் பார்த்தவள், அழுத்தமான பார்வையுடன் யஷ்வந்த் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போக, எந்த மாற்றமும் இன்றி அதே பார்வையுடன் அவளைக் கண்டான்.

உள்ளே வந்த செவிலி அவனிடம் மருந்துகளைக் கொடுத்துவிட்டு, அஞ்சனாவிடம் நலம் விசாரித்துச் செல்ல, அவளைக் கண்களால் ‘வா’ என்றழைத்து கூட்டிச் சென்றான். மகிழுந்துப் பயணம் மௌனமாகத்தான் கழிந்தது.

திடீரென அசௌகரியமான பாவனையுடன் முகம் சுருக்கி ஏதோ யோசித்தவள் சட்டென சுற்றி முற்றி ஏதோ தேடினாள்.

அமைதியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் பதற்றம் கண்டு, 

“என்ன சனா?” என்க, 

“எ..என் ஃபோன் மாமா?” என்றாள். 

“பின்னாடி உன் பேக்ல இருக்கு” என்று அவன் கூற, 

அதைப் பார்த்தவள் “மாமா எனக்கு எட்டாது” என்று பாவம் போல் கூறினாள்.

தனது அலைபேசியை அவன் நீட்ட, பரபரப்பாய் அர்ஜுனுக்கு அழைத்தாள். அழைப்பு எடுக்கப்பட்டதும், “அ..அஜு..” என அவள் பதற, 

“அ..அண்ணி நான் மது” என்று கரகரத்த குரலில் மது கூறினாள்.

“ம..மது.. அஜு எங்க? அவனுக்கு என்னாச்சு?” என்று அஞ்சனா பதற, 

வண்டியை ஓரம் கட்டியவன் அவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்தான். 

“அண்ணி ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்..” என்று மது கூற, 

“ஆக்ஸிடென்டா? அஜுக்கு என்னாச்சு? ஒன்னுமில்லை தானே? மது..” என்று அழுதேவிட்டாள்.

அவளிடமிருந்து அலைபேசியை வாங்கியவன் எதிர்முனையில் இருந்தவளிடம் பேச, தங்கையும் அங்கு நிதானத்தில் இல்லை என்பது புரிந்தது. 

“நாங்க வரோம்டா” என்றவன், “சனா காம் டௌன்..” என்க, 

“மாமா.. அவனுக்கு.. அவனுக்கு ஒன்னுமில்லை தானே? எனக்கு ஃபீல் பண்ண முடியுது. நா..நான் அழுதா அவனுக்கு புரியும். அன்ட் அவனுக்கு உடம்பு முடியலைனா என்னால ஃபீல் பண்ண முடியும் மாமா” என்றாள்.

“சனாமா.. ஒன்னுமில்லை. நீ அமைதியா இருந்தா தான் உன்னை கூட்டிட்டு போவேன்” என்று அவன் கூற, 

வேகமாய் கண்ணீர் துடைத்து, “போலாம் மாமா” என்றாள்.

ஒரு பெருமூச்சு விட்டவன் அவளுடன் அர்ஜுன் இருக்கும் மருத்துவமனைக்குச் செல்ல, மது வெளியே நின்றிருந்தாள். அவளிடம் கேட்டுக் கொண்டு அவர்கள் அவன் அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு செல்ல, கையிலும் நெற்றியிலும் சிறிய கட்டுடன் அமர்ந்தபடி மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“அஜு” என்றபடி அவனிடம் வந்தவள் அவனை அணைத்துக் கொண்டு அழுதிட, தங்கையவளின் இந்த திடீர் வருகையில் அதிர்ந்தவன் நிமிர்ந்து மதியைப் பார்க்க அவள் செய்த வேலை தான் இதுவெனப் புரிந்தது.

மதியை ஒரு முறை முறைத்தவன், “பாப்பா..” என்க, 

“அஜு.. சாரிடா” என்றாள். 

“ஏ பாப்பா.. நீ வயிறு வலிக்குது, உடம்பு முடியலைனு தானே வீட்டுக்கு போறதா போன? இப்ப எதுக்கு அலையுற?” என்று அவன் கேட்க, தற்போது யஷ்வந்த் உள்ளுக்குள் அதிர்ந்து அஞ்சனாவைப் பார்த்தான்.

'பிராடு.. எல்லார்கிட்டயும் பொய் சொல்லிருக்கியாடி' என்று அவன் நினைக்க, 

“ரொம்ப வலிக்குதா அஜு?” என்றாள். 

“ஒன்னுமில்ல பாப்பா. ஒரு வண்டி குறுக்க வந்ததுல லேசா ஸ்கிட்டாயிடுச்சு” என்றவன் சட்டென நிமிர்ந்து மதியைப் பார்த்து, 

“உனக்கு ஒன்னுமில்லை தானேமா?” என்க, பாவை இடவலமாய் தலையசைத்தாள்.

யஷ்வந்த் மதியை கேள்வியாய் நோக்க, “அத்தான்கிட்ட இல்யூஷன் டிராயிங் கத்துக்க போனேன் அத்தான். திரும்ப வரும்போது வண்டி ஒன்னு வேணும்னே குறுக்க வந்துடுச்சு. பேலன்ஸ் பண்றதுக்குள்ள ஸ்கிட் ஆயிடுச்சு. நான் பின்னாடி உக்கார்ந்ததால காலூனி நின்னுட்டேன். அ..அத்தான் தான் வண்டியோட விழுந்துட்டாங்க” என்று தட்டுத் தடுமாறி கூறினாள்.

அர்ஜுனை பார்த்து அவன் நலனை தன் சிந்தைக்கு அனுப்பிய அஞ்சு, “ஓகே தானேடா?” என்க, 

“பாப்பா.. சில்.. நான் நல்லா தான் இருக்கேன். சின்ன அடிதான்” என்று கூறினான்.

யஷ்வந்த் சென்று மருத்துவரிடம் பேசி வர, மூவருமாக புறப்பட்டு அர்ஜுன் வீட்டை அடைந்தனர்.

கையில் கட்டுடன் உள்ளே நுழைந்த மகனைக் கண்டு பதறி வந்த அமுதா, “அர்ஜுன் என்னாச்சுபா?” என்க,

“ஒன்னுமில்லமா.. வண்டி ஸ்கிட்டாகிடுச்சு அவ்ளோதான்” என்றான்.

மேலோட்டமாய் நடந்தவற்றைக் கூறி அவரை சமன் செய்தவனை அமர்த்திய அஞ்சனா அவன் உடல் நலனை கவனித்துக் கொள்ளும்படி கூற, மருந்துகளை யஷ்வந்த் நீட்டினான்.

மருத்துவமனையிலிருந்து இருவரும் பார்த்துக் கொள்ளவுமில்லை, பேசிக் கொள்ளவுமில்லை. தற்போது யஷ்வந்த் மருந்தைக் கொடுக்கவும் அதை வாங்கியவன், பேசுவோமா வேண்டாமா என்று மனதில் ஆலோசிக்க, 

“ப்ரிஸ்க்ரிப்ஷன் பார்த்து ஒழுங்கா மெடிசின் எடுத்துக்கோ அர்ஜுன்” என்று யஷ்வந்த் கூறினான்.

'என்கிட்டயா பேசினாரு' என வியந்தபடி அவனைப் பார்த்தவன் தன் தொண்டையை செறுமிக் கொண்டு, “ம்.‌. தேங்ஸ்” என்க, 

'எங்கண்ணாவ மாமானு கூப்பிட்டா குறைஞ்சா போயிடப் போறாரு’ என உள்ளுக்குள் சடைத்துக் கொண்ட மது, 
“உடம்பை பார்த்துக்கோங்க அத்தான்” என்றதும், 

“ஷ்யோர்மா” என்றான்.

தானும் அர்ஜுனிடம் பேசிய அஞ்சனா தன் அன்னையை நோக்க, மகளின் நலம் விசாரிக்க அவர் காத்திருப்பது புரிந்தது. ஏனோ அன்னையிடம் முகம் கொடுத்துப் பேச அவளுக்கு விருப்பமில்லை. தன்னுடைய இந்த நிலைக்கு அன்னை தான் காரணம் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்றியது கூட அதன் காரணமாக இருக்கலாம்.

சட்டென யஷ்வந்த் புறம் திரும்பியவள் “போலாம் மாமா” என்றிட, 

அமுதா மகளின் இந்த திடீர் உதாசினத்தில் குழம்பி நின்றார். அர்ஜுன் தோளில் அழுந்த கரம் வைத்து தட்டிக் கொடுத்தவன் அமுதாவிடம் விடை பெற, மதுவும் விடைபெற்று வந்தாள்.

அமைதியாய் மூவரும் வீடு வர அஞ்சனா மேலே தங்களறைக்குச் சென்றாள். 

“என்னப்பா ரெண்டு பேரயும் நீ கூட்டிட்டு வர” என்று யமுனா வினவ, 

“அர்ஜுனுக்கு சின்ன ஆக்ஸிடென்ட் மா. பார்த்துட்டு அப்படியே இவங்கள கூட்டிட்டு வந்தேன்” என்றவன் விறுவிறுவென தங்களறைக்குச் சென்றான்.

புத்துணர்வு செய்து அவள் வந்து அமர, தானும் சென்று புத்துணர்வு பெற்று உடை மாற்ற சென்றவன், “மா..மாமா” என்ற அவளது முனங்கல் சத்தத்தில் குழம்பியபடி வெளியே வந்தான்.

தன் இடதுபுற மார்பை அழுத்திக் கொண்டு கட்டிலில் வலியோடு உருண்டுக் கொண்டிருந்தவள், “மாமா..” என்று வலியோடு அழைக்க, 

அதில் பதறி வந்தவன், “ஏ சனா என்னடி பண்ணுது?” என்றான்.

“மாமா வலிக்குது” என்றவள் தலையனை இறுக பிடித்து அதில் முகம் புதைத்து வெடித்தழ, 

 “சனா என்னை பாரு.. எங்க வலிக்குது? என்ன பண்ணுது?” என்றான்.

“மாமா.. இங்க வலிக்குது. முடியலை” என்று நெஞ்சை சுட்டிக் காட்டி அவள் கூற, அவனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. 

சட்டென அம்மருத்துவரை அழைத்தவன்,
 “டாக்டர்.. சனா செஸ்ட் பெயினா இருக்குனு சொல்றா..” என்க, 

“ஓ காட்.. பிபி அதிகமா இருந்தா இதுபோல பெயின் வரும் சார். பெயினுக்கு மருந்து குடுத்துருக்கேன். அதை குடுங்க. அப்படியும் குறையலைனா உடனே கூட்டிட்டு வாங்க. டைட்டா டிரஸ் பண்ணிருந்தா லூஸ் டிரஸ்கு மாற சொல்லுங்க” என்று கூறியவர் அம்மாத்திரையையும் கூற, வேகமாக சென்று அம்மருந்தை எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தான்.

அவன் மேல் சட்டையை இறுக்கமாய் பற்றியபடி அவனை அணைத்துக் கொண்டவள், “மாமா ரொம்ப வலிக்குதே..” என்க, 

“இதோடா.. மருந்து குடுத்துருக்கேன்ல.. ஓகே ஆயிடும்” என்று அவளுக்கு தட்டிக் கொடுத்து, அவள் உடையின் பின்புறமிருத்த கயிறுகளைத் தளர்த்தினான்.

“நா.. நான் உங்களுக்கு ரொம்ப தொல்லை தரேன்ல?” என்று அழுகையினூடே அவள் கேட்க, 

“ஏன் சனா நீயா இப்படிலாம் நினைக்குற? அப்படிலாம் இல்லைடா” என்றான்.

“எ..எனக்கு..” என்று ஏதோ பேச துடித்தவள் முகம் வலியில் சுருங்க,

 “சனா கொஞ்ச நேரம் அமைதியா இருடி.. வலி குறையட்டும்” என்றான்.

“மா..மாமா.. ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க..ஸ்ஸ் மாட்டீங்களே?” என்று தடுமாறி அவள் கேட்க,

 “அவள் முகத்தை கையில் ஏந்தினான். அவன் வாய்மொழி வார்த்தைகள் ஏதுமில்லை. ஆனால் தன் கலங்கிய விழிகளுக்குள் ஊடுறுவிய அவனது பார்வை அவளுக்கு ஏதோ ஓர் தெம்பைக் கொடுத்துப் பேசத் தூண்டியது.

“மாமா. முத்தம் தப்பில்லை தானே?” என்று அவள் கேட்க, ஆடவன் அமைதியாய் அவளை ஏறிட்டான். தன் எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் முகம் முழுதும் சிவந்திட, அதன் காரணம் கண்ணீரோ வெட்கமோ என்று புரியாத பார்வையுடன் நோக்கினான்.

“மாமா.. நான் உங்களுக்கு முத்தம் கொடுக்கலாமா?” என்று அவள் கேட்க, 

“நான் உன் யஷு மாமாடி. உனக்கு.. உனக்கு மட்டும் தான் என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு” என்று அழுத்தமாய், ஆழமாய், கூர்மையாய் கூறினான்.

கண்களை அழுந்த மூடியவள், “யஷு மாமா” என்று அவன் இதழ்களை முற்றுகையிட, அவள் வலிக்கு சிறந்த நிவாரணியாய் தன்னைக் கொடுத்தான்.

அவள் சிறுபிள்ளை, பக்குவமில்லை என்பதெல்லாம் அந்த நொடி அவனுக்குள் இல்லை! அவள் அவளது வலிக்கு தன்னையே, தனது அரவணைப்பையே ஆறுதலாய் தேடுகின்றாள் என்ற ஒன்று அவனுள் ஆழமான காதலை உணர்த்தியது! 

காதலில் காமுறுதலும் ஒரு அங்கமே என்றாலும் அதுவும் தன் இணையிடம் தனது மனதின் ஆசைக்கும், நிம்மதிக்கும், மருந்துக்குமாக பெறுவது தான் எத்தனை உணர்வுபூர்வமான வெளிப்பாடு!?


Leave a comment


Comments


Related Post