இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அகந்தை -23 அனைத்து பாகங்கள் படிக்க
By பிரியாமெகன் Published on 27-04-2024

Total Views: 27154

யாகம் நல்லபடியாக முடிந்தது.

முகிலன் நிலாவையே சுற்றி சுற்றி வந்து பேச. நிலா பயந்து யுகியின் பின் மறைந்துக் கொண்டாள்.

"அண்ணா அவ கொஞ்ச பயந்த சுபாவம் அதான் பேசமாட்டிக்கிறா நீங்க வேற நந்தனோட பிரண்ட்ல அதான் பயப்படறா . நீங்க போய் சாப்பிடுங்க"  என தன்மையாக சொல்லி அனுப்பி விட்டான் யுகி.

மேலே சாப்பிட போன முகிலனின் கண்களில் மிளகாய் பொடியை யாரோ கொட்டிவிட்டனார்.

"ஆ வலிக்குதே எரியுதே.?"

"ஏய் வலிக்குதா எரியுதா ஏதாவது ஒன்னை சொல்லு?" என்று சாதாரணமாக கேட்டான் நந்தன்.

"டேய் எரியுதுடா தண்ணிக் கொண்டுவாடா.யாருடா கண்ணுல மொளகாபொடியைப் போட்டது?" என்று அலற.

"கண்ணு கண்ட இடத்தைப் பார்த்தா இப்படி தான் மிளாகாய் பொடியை எங்க ஊர்ல போடுவாங்க நீ எங்கப்ப பார்த்தா?"

முகிலனுக்கு கண்ட இடம் என்றதும், நிலாவின் இடையைப் பார்த்த நியாபகம் தான் வந்தது. தான் பார்த்ததை யாராவது பார்த்திருப்பார்களோ அதுக்கு இது மாதிரிலாமா தண்டனை குடுப்பாங்க என்று தோன்ற அலறி அடித்துக் கொண்டு  குளியலறை நோக்கி ஓடினான்.

முகிலன் போனதும் நிலாவிடம் திரும்பிய யுகி.

"எதுக்கு? பூனை யாரைப் பார்த்தாலும் பயப்படற."

"அவங்க பிரண்ட் தானே  இப்போ வந்தவீங்க."

"ஆமா அதுக்குன்னு பயந்து ஒளிவியா?"

"இவங்களும் அவங்கள போலதானே இருப்பாங்க அதான்."

"சரியா போச்சி. இப்படியே இருந்தா நாளைக்கு எப்படிதான் இந்த ஊர் உலகத்தை சமாளிப்பியோ,ஷாலினியைப் பாரு உன்னைய விட ரெண்டு வருஷம் தானே பெருசு.. எப்படி எல்லாரையும் மிரட்டுறா. நந்தன் மாதிரி லட்சம் பேர் இந்த ஊர்ல இருப்பாங்க,  அவங்களுக்கெல்லாம் பயந்து ஓடினீனா வாழ்க்கை முழுக்க ஓடிட்டே தான் இருக்கனும், உன்னை தான் போட்டு மிதிப்பாங்க. எல்லோருகிட்டயும் தைரியமா பேசனும். உங்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தா கொஞ்சம் கூட யோசிக்காமல் கன்னத்துல அறைஞ்சிடு, சரியா?"

"ம்ம் எனக்கு பாதுக்காப்பா  தான் நீயும், அண்ணாவும் இருக்கீங்கல, அப்புறம் எதுக்கு நான் தைரியமாக அடிக்கணும்" என்று கேட்டவளை தலையிலையே வலிக்காமல் கொட்டியவன்.

"உன்னையிலா ஆயிரம் பாரதியார் வந்தாலும் திருத்தவே முடியாது  பூனை".

"பரவாயில்ல." என்றவள் சலுகையாக யுகியின் கையோடு கைக் கோர்த்துக்கொள்ள. விசேஷத்திற்கு வந்தவர்கள் கண்ணில்  நந்தன் உஷா நெருக்கம் எந்தளவு பட்டதோ அதேபோல் யுகி நிலாவின் நெருக்கமும் பட்டத் தொலைக்க.

வந்தவர்களுக்கு கரும்பு தின்ன கூலியா வேண்டும் என்பது போல் கிருஷ்ணம்மாளிடம் நன்றாக பற்ற வைத்துவிட்டு தான் சென்றனர்

அதன்பிறகும் சொல்ல வேண்டுமா.. அன்று இரவே ஒரு ஆட்டம் ஆடித் தீர்த்தவர், இனி வளவனையும்,நிலாவையும் வீட்டின் பக்கம் வரக்கூடாது  என உறுதியாக சொல்லிவிட்டார்.

ஷாலினியின் போக்கைக் கண்டு அவர் சொல்வது தான் சரி என்பது போல் மணிமேகலையும் இருந்துக் கொண்டார்

யாரும் பேசாமல் ஒதுக்கும் போது, வழியப் போய் பேச வளவனுக்கு ரோசம் இல்லையா? என்ன?,  அவர்கள் என்ன தங்களை ஒதுக்கி வைப்பது , நாங்க உங்களை ஒதுக்கி வைக்கிறோம் என அவர்கள் இருந்த திசைப் பக்கம் கூட செல்வதை நிறுத்திக் கொண்டனர்.

"அண்ணா."

"சொல்லு பாப்பா."

"நம்ப மேல என்ன தப்பு? நம்ப எப்போவும் போல தானே பழகுனோம்."

"அதுக்குன்னு வயசு இருக்கு பாப்பா. முன்னாடி நீங்க சின்ன பசங்க அதனால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனா இப்போ நீங்க விளஞ்சி நிற்கற கதிர் மாதிரி பக்குவமா கையாளனும், இல்லனா சேதாரம் ஆகிப் போகும். அவங்க வீட்டுக்கு வர  வேண்டாம்னு சொல்றது ஒரு நல்லதுக்கு தான் விடுங்க. இனி அங்கப் போக வேண்டாம்" என்று விட்டார் ராஜி.

நந்தனைப் பார்க்காமல் மாதக்கணக்கில் இருக்க முடிந்த நிலாவால் யுகி, ஷாலினியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

யுகியின் வீட்டு பின்புற வாசல்  கதவுக் கொண்டு அடைக்கப்பட்டது. இதுநாள் வரையிலும் பின்வாசலை தான் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.இந்த சண்டைக்குப் பின் யாரும் பின் வாசலைப் பயன்படுத்தக் கூடாது என உறுதியாக சொல்லிவிட்டார் கிருஷ்ணம்மாள்.

யுகியும்,  ஷாலினியும் கூட இந்தப் பக்கம் வரவில்லை என்றதும் வளவனுக்கு வருத்தம் உண்டானது.

"என்னமோ லவ் அது இதுன்னு சொல்லிட்டு சுத்துனா. அவங்க ஆயா இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு சொன்னதும் அப்படியே இருந்துட்டா இனி வரட்டும் பேசிக்கறேன்.என்று உள்ளுக்குள் மறுகிக் கொண்டான்

என்னதான் ஷாலினியை விட்டு விலக வேண்டும் என்று நினைத்தாலும்,  அவளே விலகும் போது வலிக்கத் தான் செய்தது வளவனுக்கு.

இரண்டு நாட்கள் சென்றயிருக்கும் நிலாவிடம் பூங்கொடியின் பையன் சூர்யா ஓடி வந்தான்.

"என்ன சூர்யா.?"

"அக்கா உன்னைய பார்க்க யுகிண்ணா இன்னைக்கு ஈவினிங் நம்ப மாரியம்மன் கோவிலுக்கு வராங்களா,உன்னைய அங்க வர சொன்னாங்க" என்றான்.

எட்டிப் பார்த்தால் வீடு ,  அங்கு என்ன நடக்கிறது என்றுக் கூட நிலாவிற்கு தெரியாமல் இருக்கலாம்,  ஆனால் நிலா வீட்டில் நடப்பதை மாடியில் இருந்து பார்த்தால் அப்படியே தெரியும்  பிறகு எதற்கு அவ்வளவு தூரம் வர  வேண்டும் என்று யோசித்தாலும் அவள் போகாமல் இல்லை.

ராஜியும் வளவனும் வேலைக்குச் சென்றயிருக்க..பூங்கொடியிடம் கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு சென்றாள்.

கோவிலில் சாமியை கும்பிட்டு சுற்றி சுற்றிப் பார்த்தாள் யுகி இருப்பது போல் தெரியவில்லை. கோவிலில் பெரிய கிணறு ஒன்று படிக்கட்டுகளுடன் இருக்க அங்கு சென்றுப் பார்த்தாள்.

ஏனென்றால் அந்த இடம்  யுகிக்கும் நிலாவுக்கும் மிகவும் பிடித்த இடம் கண்டிப்பாக அங்கு தான் இருக்க வேண்டும் என மனம் சொல்ல. அங்குச் சென்றாள்.

அவளது கணிப்பு பொய்க்கவில்லை. கிணற்றில் உள்ளே நீர் மட்டத்திற்கு மேலிருந்து இரண்டாம் படியில் அமர்ந்திருந்தான்.

"யுகி."

"வா பூனை".என்றவன் கை மீன்களுக்கு பொரிப் போட்டுக் கொண்டிருந்தது.

"பக்கத்துல இருந்துட்டு இங்க எதுக்கு வர சொன்ன அங்கையே என்கையாவது வந்துருக்கலாம்ல."

"அங்க இருக்கற எல்லோரும் நம்பலை எப்படி பிரிக்கறதுன்னே பார்த்துட்டு இருக்காங்க,அவங்களுக்கு முன்னாடி என்னத்தைப் பேச முடியும்.?"

"ம்ம் அவங்க சொன்னா நீ கூட பேசறதை நிறுத்திடுவில. உங்களை பார்க்காம எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?"

"நான் மட்டும் சந்தோஷமாவா இருக்கேன் புரிஞ்சிட்டு பேசு நிலா".

"ஓ இப்போ பூனைப் போய் நிலா ஆகிட்டனா,அந்த அளவுக்கு விலக்கி நிறுத்திட்டிங்க."

"ஐயோ  அது வாய் தவறி வந்துடுச்சு,  உனக்கு என்ன சொல்லிப் புரிய வைக்கறதுன்னும் எனக்கு தெரியல?, எப்படி புரிய வைக்கறதும்னு புரியல".

"நீ சொல்லு நான் புரிஞ்சிப்பேன்".

"ம்ம்  ஷாலினி வளவனை லவ் பண்றது வீட்டுல எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி".

"என்னது லவ்வா!!! இது எனக்கே தெரியாதே". என நிலா அதிர்ந்து பார்க்க..

"ஆமா ஷாலினி உன் அண்ணனை லவ் பண்றான்னு எங்க ரெண்டுபேருக்கும் தெரியும் . நீ படிச்சி முடிச்சதும் உன்கிட்ட சொல்லாம்னு இருந்தேன், அதுக்குள்ள வீட்டுல எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி, அவளை அடி வெளுத்துடுச்சி ஆயா .ரெண்டு நாளா எந்திரிக்க முடியாம படுத்த படுக்கையா கிடக்கறா.எங்க அத்தை வேற அது இதுன்னு ஏத்தி விட்டுட்டுப் போயிருக்கு, அப்பாவும் அம்மாவுக்கும் கூட இதுல விருப்பமில்லை போல" 

"லவ் பண்றது அவ்வளவு பெரிய குத்தமா?. அண்ணனை யாரும் கேக்கல.. இந்த விஷயம் தெரிஞ்சதும் உங்க ஆயா அண்ணனை வந்து அடிச்சிருக்கணுமே".

"ஆமா. அடிக்க தான் கிளம்புச்சி கிழவி ஆனா ஷாலினி தான் குறுக்க விழுந்து தடுத்துட்டா. நான்தான் அவனை லவ் பண்றேன் அவனுக்கு இந்த விஷயம் கூட தெரியாது தெரிஞ்சா என் மூஞ்சுல கூட முழிக்க மாட்டேன் ப்ளீஸ் யாரும் அவனைப் போய் பேசாதீங்கன்னு சொன்னா.. அதனால தான் ஆயா கொஞ்சம் அமைதியாச்சு."

"ம்ம் அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் பயமா இருக்கு. எங்க அண்ணாவுக்கு தெரியுமா?"

"தெரியும் ஷாலினி லவ் சொன்னதும் வளவன் என்கிட்ட சொல்லிட்டான்".

"ஓ" என்றாள் சோகமாக.

"நீ எதுக்கு பீல் பண்ற?".

"பயமா இருக்கு யுகி, இவ்வளவு நாள்  ஒன்னு மண்ணா இருந்துட்டு,  இப்போ நீ யாரோ நான் யாரோன்னு போறதைப் பார்க்கும் போது கஷ்டமா இருக்கு".

"கொஞ்சநாள் தாண்டா பூனை. சரியாகிடும்ன்னு நம்புவோம், வேற என்னப் பண்றது? பார்க்கக் கூடாதுன்னு சொல்றாங்க அதையும் மீறி பார்த்து அவங்க கோவத்தை இன்னும் அதிகமாக்கறதுக்கு பதிலா,  அப்படியே விட்டுடோம்ன்ன  அவங்களே எல்லாத்தையும் மறந்துடுவாங்க" 

"அவங்க மறந்துடுவாங்கன்னு என்னால நம்ப முடியல ஆயாவுக்கு முன்னாடியே எங்களைய சுத்தமா புடிக்காது, இதுல  இப்படின்னா சொல்லவா வேணும்" .

"அம்மா ஷாலினி இப்படி பண்ணதும் என்கிட்ட வந்து கேட்டாங்க"

"என்னனு?"

"நீயும் இப்படி ஏதாவது பண்ணிட்டு திரியறீயான்னு"

"அப்படி எதுவும் இல்லை தானே நீ தைரியமா சொல்ல வேண்டியதுதானே"

"அப்படி எதுவும் இல்லையா?"  என்று நிறுத்தியவன்,  "ஆமா நீ சொன்ன மாதிரி தான் சொன்னேன்,  இருந்தாலும் அம்மா நம்பல. அதுக்கு தான் ரெண்டு நாள் உன்னைய பார்க்காம இருந்தேன், அதுக்கு மேல தாக்கு புடிக்க முடியும்ன்னு தோணல அதா ஓடி வந்துட்டேன்".

"ம்ம் என்னாலையும் உன்னையும் ஷாலினியையும் பார்க்காம இருக்க முடியல".

யுகி அவனது பூனையை மட்டும் சொன்னால் அவளோ யுகியோடு ஷாலினியையும் சேர்த்து சொல்லும் போதே அவள் மனம் புரிந்து போனது யுகிக்கு.

முதலில் ஷாலினி பிரச்சனை சரியாகி வீட்டின் நிலைமை சரியாட்டும் பிறகு இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

யுகியின் மனதில் பூனை மட்டும் தான் நிரம்பி இருந்தாள் அது காதலா இல்லை அளவு கடந்த அன்பா என்றால் அவனுக்கே அது தெரியாது. இருந்தாலும் அவளை யாருக்காகவும் விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான் அதற்காகவே தன் மனதில் அவள் மேல் இருக்கும் அளவு கடந்தா அன்பை காதல் என்று எண்ணிக் கொண்டான்.

"சரி வீட்டுக்குப் போ யுகி அத்தைப் பார்த்தா திட்டப் போறாங்க."

"ம்ம் சாமிகிட்ட என்ன வேண்டிகிட்ட?"

"சீக்கிரம் நம்ப குடும்பம் சேரணும்னு வேண்டிகிட்டேன்".

"நடக்கும். வா போலாம்"

"நீ முன்னாடி போ. நான் போயிக்கறேன்"

"இருட்டப் போகுது தனியா எப்படி போவ,  நீ முன்னாடி போ நான் சைக்கிள்ள பின்னாடியே வரேன்" என்றான்.

இந்த அக்கறையை வளவனுக்கு பின் யுகியிடம் தான் பார்க்க முடியும், இதை தானே பெண்கள் மனம் கேக்கும். நந்தனிடம் ஏன் இதெல்லாம் இருப்பதில்லை என ஒருநொடி நந்தன் கண் முன் வந்து சென்றான்.நிலாவின் மனம்  நந்தனின் அன்புக்கு ஏங்கியது என்று சொன்னால் மிகையாகாது,

நந்தனும் யுகியைப் போல தன்னிடம் நடந்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்று பல தடவை கனவுக் கூட கண்டிருக்கிறாள்,  கனவு கண்டு என்ன பண்ண நந்தனிடம் தான் அதை எதிர்பார்க்க முடியாதே.

யோசித்துக்கொண்டே  அவளது வீதிக்கு வந்துவிட.

"இதுக்கு மேல போய்க்கோ பூனை நான் போறேன்" என அவளுக்கு மட்டும் கேக்கும் குரலில் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

அடுத்துவந்த நாளில் ஷாலினியை பள்ளிக்கு பாதுகாப்புடன் அனுப்பப்பட்டாள். அவளிடம் இருந்த சுதந்திரம் அனைத்தும் பறிக்கப்பட்டது.பள்ளிக்கு வண்டி ஏத்தி விடும் போதுக் கூட யாராவது ஒருவர் கூடவே இருப்பார்கள். தொலைக்காட்சி மறுக்கப்பட்டது, வெளி ஆண்களின் முன் வருவது தடுக்கப்பட்டது. அழகு சாதனப் பொருட்கள் மறுக்கப்பட்டது,  மொத்தத்தில் போட உடை, படிக்க படிப்பு, திங்க உணவு இதை தவிர மற்ற அனைத்தும் மறுக்கப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஷாலினி கண்ணில் ஜீவன் இன்றி சுற்றினாள்.

யுகியைப் பார்த்துவிட்டு வந்ததும் நிலா வளவனிடம் அனைத்தையும் சொல்லிவிட்டாள்.

"அண்ணா ஷாலினி ரொம்ப பாவம் உன்னைய விரும்பி தானே இப்போ இவ்வளவு கஷ்டப்படறா. அடிலாம் வாங்கிருக்கா தெரியுமா, அவளுக்காக ஏதாவது பண்ணு அண்ணா."

"அவளை யாரு விரும்ப சொன்னா.?இதுலாம் படிக்கற வயசு, லவ் பண்ற வயசு இல்லை. அவங்க வீட்டுல செஞ்சது தான் சரி. நீ அமைதியா இரு" என்று அதட்டி அடக்கி விட்டான்.

நாட்கள் வேகமாக சென்றது. இரு வாரம் சென்றயிருக்கும், வளவன் வேலை செய்யும் இடத்தில் உணவு வாங்குவதற்காக மார்த்தாண்டமும் ஷாலினியும் சென்றிருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் ஓடி வந்தவன் "மாமா  என்ன வேணும்ன்னு சொல்லுங்க, நான் கட்டி தரேன் ஏன் கும்பல்ல நிற்கறீங்க?"  என்றான்.

"உங்கிட்ட தான் பேச வந்தேன் நான் கடை ஓனர் கிட்ட சொல்லிடறேன் நீ வெளியே வெயிட் பண்ணு" என்றார்.

"ம்ம்" என்றவன் அவர் அருகில் நின்ற ஷாலினியைப் பார்த்துவிட்டு சென்றான்.

"பத்து பரோட்டா நாலு இட்லீ கட்டுங்க,நான் வளவன் கிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்தரேன்" என்றார்.

"கடையில கும்பல் அதிகம் இருக்கு சீக்கிரம் அனுப்பி வைங்க" என்று விட்டு அவர் கேட்டதை பொட்டலம் கட்டப் போனார்.

"மாமா.."

"என்னடா பண்ணி வெச்ச என் புள்ளைய?"

"மாமா சத்தியமா அவ பண்றதுக்கும் எனக்கும் எந்த  சம்மந்தமும் இல்லை. அவளோட விருப்பத்தை சொன்னதுமே நான் இதெல்லாம் சரி வராது கண்டதையும் நினைச்சி ஆசையை வளர்த்துக்காதன்னு சொல்லிட்டேன், மாமா ப்ளீஸ் நம்புங்க என்னைய" என்று அவரது கையை  பிடித்து மன்னிப்பு கேட்டு கெஞ்சினான்.

"ஓ அப்டியா உன் தகுதிக்கு நாங்க இணை இல்லைன்னு வேண்டாம்னு சொல்றியா..? உனையே நினைச்சி நினைச்சி இப்போ காய்ச்சல் கண்டு கிடக்கறாடா பாரு, கண்ணு உள்ளேப் போயிடுச்சி புள்ள சரியா தின்னு ரெண்டு வாரம் ஆகுது. அவக் காதல் உனக்கு அவ்வளவு கேவலமா போய்டுச்சா?"

"ஐயோ மாமா என்ன வார்த்தை சொல்லிட்டீங்க, உங்க தகுதிக்கு நாங்க தான் சரிப்பட்டு வர மாட்டோம் மாமா. ஆயாவுக்கும் தாத்தாவுக்கு. விஷயம் தெரிஞ்சா  பெரிய பிரச்சனையாகிடும். அதுமில்லாம இவளை நான் அந்த எண்ணத்துல பார்க்கவே இல்லை மாமா."

"இங்கப் பாரு வளவா உன்னைய விட என் பொண்ணுக்கு நல்ல பையன் கிடைப்பான்னு நான் நினைக்கல,உங்ககிட்ட வசதி இல்லாம இருக்கலாம், எங்களுக்கு இணையா இல்லாமல் இருக்கலாம் ஆனா உங்கிட்ட நிறைய அன்பு இருக்கு நல்ல குணம் இருக்கு என் பொண்ணை நல்லா பார்த்துப்பன்னு நம்பிக்கை இருக்கு. இதெல்லாம் போதும் என் பொண்ணை உனக்கு கட்டிக் குடுக்க.ரெண்டுபேரும்  படிச்சி முடிங்க நீ ஒரு நல்ல வேலையில போய் சேர்ந்து இவளுக்காக உன் தகுதியை இன்னும் உயர்த்திட்டு வா, இப்போ வேண்டாம்னு சொல்றவீங்க கூட அப்போ வேணும்னு சொல்லுவாங்க, நீ சொல்ல வைப்பன்னு நம்பறேன் செய்வ தானே.என்னோட காதல் மாதிரி உங்களோட காதலும் அத்துவானத்துல நின்னுடக் கூடாது". என்றவருக்கு இத்தனை வருஷம் ஆகியும் அவர் மனதில் ஆறாத வடுவாக  காதல் தடம் பதித்திருந்தது.

%மாமா அப்போ உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையா?"

"இல்லடா மாப்பிள்ளை.. இதைவிட வேற எப்படி என்னோட சம்மதத்தை சொல்றது.  இப்போ படிப்பை மட்டும் பாருங்க, நானே பொண்ணு கேக்க சொல்லி அனுப்புவேன் அப்போ வா காங்கேயன் காளை மாதிரி, யார் எதிர்க்கறாங்கன்னு பார்க்கலாம்?" என்றவர்,  "அவகிட்ட ஏதாவது பேசறதுன்னா பேசு. கேப் விட்டு பேசு." என்று அங்கிருந்து சென்று விட்டார்.

அவர் போனதும் ஷாலினியைப் பார்த்தவன்.

"உன் அப்பா சொன்னது கேட்டுச்சு தானே"

"ம்ம்"

"ஒழுங்கா படி, அப்புறம் நடக்கறது தானா நடக்கும்."

"அதுலாம் ஓகே.. நான் மட்டும் தானே என்னோட விருப்பத்தை சொல்லிருக்கேன்,   எந்த நம்பிக்கையில உன் காதலும் கிடைக்கும் நான் வெயிட் பண்றது." என்று ஷாலினி பட்டென்று கேக்க,

நெற்றியை தடவினான், இப்போது தான் அந்த எண்ணத்தில் பார்க்கவில்லை என்றான் உடனே மாத்தி காதல் சொல்ல மனம் வரவில்லை.ஷாலினியை விருப்பும்பினானா என்றால் கண்டிப்பாக விரும்புகிறான் தான், வெறும் பத்தாவது படிப்பவளிடம் எப்படி சென்று காதலைப் பற்றி பேசுவது. அவள் தான் அறிவு இல்லாமல் பேசுகிறாள் என்றால் தானும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என தான் விலகி விலகிச் சென்றான்,  

காதலிப்பதை விட காதலிக்கப் படுவது பரம சுகம் அல்லவா... அந்த போதை வளவனையும் விட்டு வைக்கவில்லை.

"நானும் தாண்டி உன்னைய விரும்பறேன்.பல விஷயத்தை நினைச்சிட்டு எதுவும் சொல்லாம எனக்குல்லையே மறைச்சுட்டேன், இப்பதான் மாமா நம்பிக்கை குடுத்துருக்கார்ல அப்புறம் எனக்கு என்ன பயம்?"  என்றவன் அவளது கையை பிடித்து, " நல்லா சாப்பிட்டு தைரியமா இரு. மாமா சொன்ன மாதிரி என் தகுதியை உயர்த்திட்டு உன்னை தூக்கிட்டுப் போக வருவேன்" .

"ம்ம் சரி" என்றாள்.  முகம் மலர சந்தோசமாக.

அதன்பிறகு தான் ஷாலினியின் முகம் தெளிந்தது.


Leave a comment


Comments 1

  • F Fajeeha Fathima
  • 2 months ago

    Super ah iruku ud oru jodiku lv set agiduchu 🔥 Interesting ah ituku aka daily ud podungale pls


    Related Post