இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--10 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 27-04-2024

Total Views: 31227

 

          இதயம் 11

     வெந்தய நிற தாவணி, அதற்கு ஏற்ப பெரிய கட்டம் போட்ட பாவடை, சட்டை அணிந்து நீண்ட கூந்தலை தளரப் பின்னலிட்டு தலைநிறைய முல்லைப் பூக்களை வைத்துக்கொண்டு தேவதையைப் போல் வந்து நின்றாள் அவள். 


     அவள் வீட்டில் அடிக்கடி தாவணி அணியும் வழக்கம் உள்ளவள் தான் என்றாலும் படிப்பிற்காக சென்னை வந்த பின்னர் குறைத்துக்கொண்டாள். புது சூழ்நிலைக்குத் தங்களை வெகுவிரைவில் பொருத்திக்கொள்ளும் குணம் பெண்களுக்கே உரித்தானது. அதற்கு மினி மட்டும் விதிவிலக்கா என்ன. இருந்தாலும் என்றாவது ஆசை வந்தால் அன்று யாரைப் பற்றிய கவலையும் இல்லாமல் தனக்கே தனக்காக அணிந்து கொள்வாள். அப்படித் தான் இன்றும் அணிந்து கொண்டிருந்தாள்.


     “என்னம்மா மினி, எப்பவும் ஹாலோட நின்னுடுவ. இன்னைக்கு மேல் மாடி வரை வந்துட்ட. ரொம்பத் தான் முன்னேற்றம் போல இருக்கு“ எழில் வழக்கம் போல் நக்கலடிக்க, “முன்னேற்றம் தான். இன்னைக்கு நடுவீடு வரை நான் வந்தாக வேண்டிய கட்டாயம்“ என்றவள் ஒரு சின்னப் பாத்திரத்தில் மூன்று பேர் சாப்பிடும் அளவிலான பாயாசத்தை கொடுத்தாள்.


     அதைத் திறந்து பார்த்துவிட்டு, “என்ன விஷேஷம்“ அரசன் விசாரிக்க, “இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்“ சிரிப்போடு சொன்னாள் பெண்.


     சற்று முன்னர் வரை மகனைப் பற்றி இருந்த கவலைகள் அனைத்தையும் நொடியில் மலர்ந்து பூரிப்படைந்த அரசன் அவளுடைய தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். காலில் விழப்போனவளை, “அப்பா, அம்மா, கடவுள் தவிர்த்து யார் காலிலும் விழக்கூடாது டா கண்ணா“ என்ற சிறு அறிவுரையுடன் அவளுக்குப் பிறந்தநாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று தன் சட்டை, கால்சட்டை என தொட்டுத்தொட்டுப் பார்க்க, “அதுதான் ஐநூறு ரூபாய் நோட்டு கத்தையா வைச்சிருக்கீங்களே. அதில் இருந்து ஒரு தாளை எடுத்துக்கொடுங்க சந்தோஷமா வாங்கிக்கிறேன்“ வெள்ளந்தியாய் பேசினாள் மினி.


     “ஆக பாயாசத்தைக் கொடுத்து பணத்தைப் பரிசா வாங்கிட்டுப் போக வந்திருக்க. அது சரி பாயாசம் கம்மியா இருக்கிற மாதிரி தெரியுதே அப்பா பையன் இரண்டு பேருக்குத் தான் கொண்டு வந்தியா? எனக்கு உன்னோட ப்ரண்டு வீட்டுக்கு வந்தா தான் கொடுப்பியா?“ என்றான் எழில்.


     “உங்களுக்குத் தேனைப் பார்க்கணும் என்றால் தாராளமா வாங்க. அப்போதும் உங்களுக்குப் பாயாசம் உண்டு. என்ன ஒன்னு அதை நான் கொடுக்க மாட்டேன், என் ப்ரண்டு கொடுப்பா. போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாங்கிக்கோங்க“ என்க, “சொல்ற மாடுலேஷனே சரியில்லையே“ என்று தன்னோடு நினைத்துக்கொண்டான் அவன்.


     “ஒருநாளைக்கு முக்கால் வாசி நேரம் நீங்க இங்க தான் இருக்கீங்க. அப்புறம் எப்படி உங்களை கணக்கில் சேர்துக்காம போவேன். உங்களுக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன். சாப்பிடுங்க“ என்க, இதையெல்லாம் சற்று தொலைவில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தான் சாணக்கியன்.


     அவனைக் கவனித்ததும் தன்னால் அவனை நோக்கிச் சென்றவள், “இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள்“ என்க, “அதுக்கு“ என்று சர்வசாதாரணமாகக் கேட்டான் சாணக்கியன்.


     “ஒருத்தங்க தானா வந்து இன்னைக்கு பிறந்தநாள் என்று சொன்னால் வாழ்த்தனும் அதை விட்டுட்டு இப்படி முகத்தில் அடித்த மாதிரியா பேசுவது“ அவள் என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டாள். 


     ஆனால் அவன் என்ன மனநிலையில் இருந்தானோ, “விஷேஷம் என்று தெரிந்தும் ஒருத்தங்க அமைதியா இருக்காங்க என்றால், எதிரே இருப்பவங்களை வாழ்த்த அவங்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம். அதைக் கூட புரிஞ்சுக்க முடியலையா? இல்லை புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா? 


     ஆமா உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம். உனக்குப் பிறந்தநாள் என்றால் எங்களுக்கு எதுக்காக இனிப்பு கொண்டு வர. இதில் அப்பாகிட்ட இருந்து பணத்தை வேற பரிசாக் கேட்கிற. ஆமா இன்னைக்குப் பிறந்தநாள் என்பதாவது உண்மையா?“ வார்த்தைகளைக் கொண்டு தேள்கொடுக்காய் கொட்டினான். 


     “இங்க பாருங்க, வாய் உங்களோடது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீங்க. அது என்ன பேச்சு, காசுக்காக ஆசைப்பட்டு ஒன்னும் நான் உங்க அப்பாகிட்ட இருந்து பணம் வாங்கல. 


     ஊருக்குக் கிளம்புவதற்கு முன்னாடி நான் வேண்டாம் என்று சொல்ல சொல்லக் கேட்காமல் என் அத்தான் கொடுத்த பணம் என்கிட்ட நிறையவே இருக்கு. அதில் இருந்து இப்ப வரை நான் ஒரு ரூபாய் கூட செலவு பண்ணல. எனக்குத் தேவையானதை என் அப்பாவோட பணத்தில் இருந்து வாங்குறது தான் என்னோட கௌரவம் என்று நினைக்கிறவ நான். சும்மா கண்டதையும் பேசதீங்க. 


     இந்த ஊரில் ஏன் எல்லோரும் இப்படி சந்தேகப் பிராணியாவே இருக்கீங்கன்னு தெரியல. எங்க ஊரில், எங்க வீட்டில் ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் அதைக் கொண்டாடும் விதத்தில் பால்பாயாசம், கேசரி இல்லை குறைந்தபட்சம் சாக்லேட்டாவது வாங்கி பக்கத்து வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் கொடுப்போம். பரிசா அங்க பணம் கொடுப்பதும் வழக்கம் தான். 


     அப்படி ஒரு நினைப்பில் தான் உங்களுக்கும் கொண்டு வந்தேன். பிடிச்சிருந்தா குடிங்க, பிடிக்காமப் போனால் நான் போனதுக்கு அப்புறம் கொட்டிட்டு நல்லபிள்ளை மாதிரி பாத்திரத்தை திரும்பக் கொடுங்க போதும். அதை விட்டுட்டு கண்டபடி பேசாதீங்க.

 

     ஆண்டவன் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா வாயைக் கொடுக்கல. எல்லோருக்கும் வாய் இருக்கு. எல்லோராலும் உங்களை மாதிரி விஷமாப் பேசத் தெரியும். பார்த்து இருந்துக்கோங்க“ படபட பட்டாசாய் வெடித்துவிட்டுக் கிளம்பினாள் மினி.


     “என்ன இருந்தாலும் நீ பேசினது ரொம்ப அதிகப்படி சாணக்கியா, அவ சின்னப்பொண்ணு“ என்க, “எனக்கும் அது நல்லாத் தெரியும். அதனால் தான் வேண்டும் என்றே பேசினேன். சில விஷயங்களுக்கு கசப்பு மருந்து தான் சரிவரும்“ பூடகமாகப் பேசியவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.


     “என்ன அங்கிள் இவன்“ எழில் குறைப்பட்டுக்கொள்ள, “நான் கவனிச்சு இருக்கேன் டா. அந்தப் பொண்ணு மினி ஒரு மாதிரி இவனை வைச்ச கண் வாங்காம பார்த்துக்கிட்டே இருக்கும். வயசானவன் நானே அதைக் கண்டுபிடிச்சிருக்கும் போது அவனுக்குத் தெரிந்திருக்காதா என்ன.

 

     அதனால் தான் அந்தப் பொண்ணு இனிமேல் அவன் இருக்கும் திசைப்பக்கமே திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு திட்டம் போட்டு செய்துட்டுப் போறான். எனக்குப் புரிஞ்சு போச்சு இவன் காலத்துக்கும் தனியா தான் இருப்பான்“ புலம்பிவிட்டுச் சென்றார் அரசன்.


     எழிலுக்கு ஏதோ உதைத்தது. கூடுதலாக இத்தனை நாள்களாக அவன் மறந்து போய் இருந்த இன்னொரு விஷயமும் நினைவு வந்தது. கடந்து போன நான்கு வருடங்களில் ஒரு முறை கூட நடக்காத சம்பவமாக ஜீவன் இந்த ஏரியாப் பக்கம் வந்தது. அதன்பிறகு மினி சதுரங்க இல்லத்திலேயே குடியேறியது. 


     வதனி அரசனைச் சந்தித்துப் பேச முயற்சித்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மினியிடம் தெரியும் வதனியின் சாயல் அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக  ஊருக்குப் போவதற்கு முன்னாடி அத்தான் கொடுத்த பணம் அதிகமாகவே இருக்கிறது என்று மினி சொன்னது, என ஆங்காங்கே இருந்த புள்ளிகள் அனைத்தையும் கோர்த்துப் பார்த்தவனுக்கு விஷயம் புரிபட, இன்னது என்று சொல்ல முடியாத வகையில் கோபம் முட்டியது. அதே கோபத்துடன் தேன்மொழியின் வீட்டிற்குள் நுழைந்தான் எழில்.


     அப்போது தான் தேன்மொழியின் பெற்றோர்கள் வந்திருக்க, வருங்கால மாப்பிள்ளையைப் பார்த்ததும் சீராட்ட ஆரம்பித்தனர் அவர்கள். தேன்மொழி வந்து அவன் அருகே அமர்ந்துகொள்ள அவர்கள் குடும்ப விஷயம் பேசும் போது நாம் எதற்காக அதிகப்படியாக என்று நினைத்த மினி தன் அறைக்குள் சென்று அடைந்துகொள்ள, அப்போதைக்கு எழிலால் மினியைப் பார்த்துப் பேச முடியவில்லை.

 

     இப்போதே அவன் பேசி இருந்தால் கூட வரப்போகும் பல பிரச்சனைகளைத் தடுக்க சின்ன வாய்ப்பாவது கிடைத்திருக்கும், ஆனால் விதி தன் கோரப்பிடியை சாட்டையாய் கொண்டு சுழற்சி வீச காத்திருக்கும் போது அதைத் தடுக்கும் அளவு திறமை வாய்ந்த மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன.


     அடுத்த இரண்டு நாள்கள் மினி சதுரங்க இல்லத்திற்குள் வரவில்லை. பிரியா மட்டும் தனித்து வந்தாள். சாணக்கியனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தது. “அப்ப அந்தப் பொண்ணுக்கும் என் பையனைப் பிடிக்கல போல. இவன் கொஞ்சம் பேசினதும் அப்படியே போயிட்டா. இப்படி ஒத்தை வாழையாய் தான் என் பையன் கடைசி வரை நிற்கப் போறானா கடவுளே“ என உள்ளுக்குள் சலித்துக்கொண்டே பிரியாவைப் பார்த்த அரசன், “உன்னோட ப்ரண்டு எங்கம்மா இரண்டு நாளா ஆளையே காணும்“ ஆர்வமாகக் கேட்டார்.


     சாணக்கியன் அவரை முறைப்பான பார்வை பார்த்ததோடு சரி, அதன்பிறகு முழுக்க முழுக்க விளையாட்டில் கவனமானான். 


     “அவங்க பிறந்தநாளுக்குச் செய்த பாயாசம் அதிகமா இருந்தது. வீணாக்க மனசு வராம எல்லாத்தையும் குடிச்சுட்டாங்க. அதனால் இப்ப கஷ்டப்படுறாங்க“ சாதாரணமாகச் சொன்ன பிரியா அதன்பிறகு தானும் ஆட்டத்தில் கவனமானாள்.


     “மகன் திட்டியதற்காக அல்லாமல் உடல்நிலை சரியில்லாததால் தான் அவள் இங்கே வரவில்லை என நினைத்து மகிழ்வதா. இல்லை, பிறந்தநாள் என்று அவள் சொன்னது உண்மை தான். தன் மகனின் கவனத்தை அவள் பக்கம் கொண்டு வருவதற்காக அவள் செய்த திருட்டுத்தனம் இல்லை என வருத்தப்படுவதா என நொந்து தான் போனார் அவர்.


     இப்போது உள்ள பிள்ளைகளுக்கு ஈர்ப்பு, இனக்கவர்ச்சி, காதல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு உறவு என பல பரிமாணங்கள் இருக்கலாம், அந்தக் கால மனிதரான அவருக்கு, ஒருவர் மீது பேரார்வம் வந்துவிட்டாலே அது காதல் தான். 


     அந்த வகையில் மினி சாணக்கியனை பார்த்த இரசனைப் பார்வை அவள் தன் மகனைக் காதலிக்கிறாள் என்றே நினைக்கத் தோன்றியது அரசனுக்கு. அந்த நேரத்தில் அவளுக்கும் தன் மகனுக்கும் பத்து வயதிற்கும் கூடுதலான வித்தியாசம் இருக்கிறது என்பதெல்லாம் அவருக்குப் பெரிதாகவே தோன்றவில்லை. 


     ஆசை கொண்ட மனம் கனவிலே மகனை மணக்கோலத்தில் கற்பனை செய்து பார்த்து இன்புற்றுக் கொண்டிருக்க, அதற்குள் சாணக்கியன், பிரியா இருவருக்கும் நடுவில் முதல் சதுரங்க ஆட்டம் நடந்து முடிந்திருந்தது. தோல்வியைத் தவிர்த்து டிராவுக்கே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டாள் பிரியா. 


     முடிந்த அளவு பொறுமையாக இருந்த அரசன் மனதின் நச்சரிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சென்றுவிட்டார் எதிர்கால மருமகளைத் தேடி. 


     சொப்புச் சாமானில் செய்யும் சமையல் வயிற்றை நிறைக்காது என்பது போல், கனவில் மட்டும் காணும் யாவும் கண்ணை நிறைக்காது என்பதை உணர்ந்து மினியிடத்தில் நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்னும் உத்தேசத்தில் இவர் வந்த நேரம் மினியை தேன்மொழி மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்த தகவல் அவளின் பெற்றோர் வழி கேட்கக் கிடைத்தது.


     “மினிப்பொண்ணுக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லை. டிரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்குன்னு தேன்மொழி இப்ப தான் சொன்னா. அவ அத்தான் ஜீவனுக்குப் போன் பண்ணி சொல்லிட்டு நாங்களும் அவளைப் பார்க்கத் தான் போய்க்கிட்டு இருக்கோம். நீங்களும் வேண்டுமானால் எங்ககூட வாங்களேன்“ என்றார் தேன்மொழியின் தந்தை.


     ஜீவன் என்ற வார்த்தையிலே மொத்த உற்றாகத்தையும் தொலைத்து இருந்தார் அரசன். அதனால் அடிபட்டு கிடக்கும் மகனை மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வாய்க்கு வந்ததைச் சொல்லிவிட்டு இயந்திர மனிதனைப் போல் தன்னால் அவர் தன் வீட்டை நோக்கி நடக்க சரியாக அதே நேரம் கோபத்தோடு உள்ளே வந்தான் எழில்.


     அவன் சந்தேகப்பட்டது அனைத்தும் சரிதான் என்பதை இரண்டு நாள்களில் புலனாய்வு செய்து கண்டுபிடித்தவனுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் நண்பனை நிம்மதியாக வாழவே விடமாட்டார்களா அந்த துரோகிகள் இருவரும். அன்று அக்கா கெடுத்த குடியை மீண்டும் கெடுக்க தங்கையை அனுப்பி வைத்திருக்கிறார்களா? என்ற கடுப்பில் அனைத்தையும் நண்பனிடம் சொல்லி மினியை இரண்டில் ஒன்று கேட்டும் முடிவோடு வந்தவன் பாதி வழியில் நண்பனின் தந்தையைப் பார்க்கவும் அவரிடம் அனைத்தையும் ஒப்புவித்தான்.


     “அவங்களைச் சும்மாவிடக் கூடாது அங்கிள். இந்த முறை அவங்களை விட்டுட்டோம் என்றால் கத்தி இல்லாமல், இரத்தம் இல்லாமல் சாணக்கியனைக் கொன்னுடுவாங்க“ எழிலின் ஒவ்வொரு வார்த்தையிலும் அனல் பற்றி எரிந்து கொண்டிருந்தது.


    “சாணக்கியன் கிட்ட இந்த விஷயத்தைக் கொண்டு போக வேண்டாம் எழில். அவன் இன்னமும் தான் பெண்களை வெறுத்துப் போவான். இதை நாமளே டீல் பண்ணுவோம்“ என்க, அத்தனை கோபத்திலும் அது சரியாகவே பட்டது எழிலுக்கு.


     மினியின் செல்போன் எண் தெரியாததால் தேன்மொழிக்கு அழைத்து அவர்கள் இப்போது இருக்கும் மருத்துவமனையை விசாரித்து நேரடியாக அங்கே சென்றனர் அனைவரும்.


     முகத்தில் சின்னதாய் காணப்பட்ட சோர்வைத் தவிர்த்து மற்றபடி நன்றாகவே இருந்தாள் மினி. இப்படி ஒரு நிலையில் இருப்பவளிடம் பேச வேண்டுமா என்று யோசித்தாலும் இது காலம் கடத்த வேண்டிய நேரம் இல்லை என உணர்ந்து பேச ஆரம்பித்தனர்.


     கடந்த காலத்தில் நடந்தது, இப்போது நடந்து கொண்டிருப்பது என எதுவும் தெரியாமல் தன்போக்கில் விளையாட்டுத் தனமாக, “என்ன அங்கிள் உடனடியா என்னைப் பார்த்தே ஆகணும் என்று தேன்கிட்ட விசாரிச்சீங்களாம். என்மேல் அவ்வளவு பாசமா?“  சிரிப்புடனே கேட்டாள்.


     “இந்த மாதிரி நேரத்தில் இதைப் பேசக்கூடாது தான். இருந்தாலும் எங்களுக்கு வேற வழி இல்லை. இனிமேல் எந்தக் காரணத்துக்காகவும் என் பையன் பக்கம் வராதே. அது தான் அவனுக்கும் நல்லது. உனக்கும் நல்லது“ நேரடியாகவே சொன்னார் அரசன்.


     “ஏன் என்னாச்சு“ ஒருவித அவசரத்துடன் கேட்டாள் மினி. அதுவும் அவர்களுக்குத் தவறாகவே தெரிய, “சொன்னாக் கேட்டுக்கணும் மினி. இது தான் எல்லோருக்கும் நல்லது“ கட் அண்ட் ரைட்டாகப் பேசினார் அரசன்.


     “எதுக்காக அங்கிள் சுத்தி வளைக்கணும். இந்தா பாரும்மா உனக்குன்னு சொந்த புத்தி இருக்கு தானே, அதை வைச்சு கொஞ்சம் நல்லா யோசி. அவன் வயசு என்ன உன் வயசு என்ன. உங்க இரண்டு பேருக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகாது. அடுத்தவங்க சொன்னதுக்காக உன் வாழ்க்கையை கெடுத்துக்காத. 


     புரிஞ்சு நடந்துக்கோ, உன் அத்தான் அக்காகிட்ட பேசி சீக்கிரமா அவங்களை வரவழைச்சு திரும்பி உன் வீட்டுக்கு போகப் பார். படிப்பு முடிந்ததும் நல்ல வேலையாப் பார்த்துக்கிட்டு வாழ்க்கையோட அடுத்தடுத்த கட்டத்துக்குப் போ. அது தான் எல்லோருக்கும் நல்லது“ என்றுவிட்டு மருத்துவமனை சூழலை நினைத்துப் பார்த்து அங்கிருந்து வெளியேறினான்.

 

     “என் பையனை விட்டுடுமா. இன்னொரு தோல்வி அவன் வாழ்க்கை முழுவதையும் கெடுத்திடும்“ என்றுவிட்டு அரசனும் கிளம்பினார்.


     “இப்ப என்ன நடந்தது தேனு“ மினி புரியாமல் பார்க்க, “இப்படி ஏதாவது நடந்திடும் என்று தான் ஆரம்பத்தில் இருந்து தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். ஆனா இத்தனை விரைவில் எதிர்பார்க்கல“ அவளும் தலையைச் சுற்றி மூக்கைத் தொட, “கொஞ்சம் தெளிவா பேசுறியா?“ என்று கத்தினாள் பெண்.


     “எனக்கு என்னவோ அவர் பையன் உன்னை விரும்புறாருன்னு தோணுது. முன்னாடி ஏற்பட்ட காதல் தோல்வி காரணமா உன்கிட்ட சொல்ல தயங்கிக்கிட்டு அவர் அப்பாகிட்ட சொல்ல, பெரிய பணக்காரருக்கு உன்னை மாதிரி நடுத்தர குடும்பத்துப் பொண்ணை ஏத்துக்க முடியல போல. அதனால் தான் வந்து குட்டையோட சேர்த்து உன் மனசையும் குழப்பிட்டுப் போறாரு“ நிஜத்தில் யார் குட்டையைக் குழப்புவது யார் என்று தெரியாமல்  நன்றாக இருந்த மினியை கெடுத்தாள் தேன்.


     அப்பொழுது இருந்து மினிக்கு சாணக்கியனின் நினைவு சற்றே அதிகமாகத் தான் இருந்தது. நிஜமாவே அவருக்கு என்னைப் பிடிச்சிருக்கா. அப்புறம் பிறந்தநாள் அன்னைக்கு நான் செஞ்சு கொடுத்த பாயாசத்துக்கு ஏன் அத்தனை கோபப்பட்டார்.

 

     ஒருவேளை நான் அவருக்காக ஸ்பெஷலா எதுவும் செய்யாம எல்லோருக்கும் செய்ததை கொடுத்துட்டேன் என்று கோபமா? அப்படியும் இருக்குமா? ஆனா நான் அவர் முன்னாடி இருந்த நேரத்தில் எல்லாம் அவரையே மட்டும் தானே பார்த்துட்டு இருந்தேன். அவர் ஒருமுறை கூட என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லையே. 


     ஒருவேளை நான் கவனிக்காத நேரத்தில் என்னைப் பார்த்து இருப்பாரா? அவருக்கு எதை வைத்து என்னைப் பிடித்திருக்கும். கண்டபடி யோசித்தாளே தவிர நிஜமாகவே சாணக்கியனுக்குத் தன்னைப் பிடித்திருக்குமா என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை.


     அவருக்கு முன்னால் காதலி இருந்ததா எல்லோரும் சொல்றாங்களோ அவங்க அளவுக்கு என்னையும் பிடிச்சிருக்குமா? ச்சே அதெல்லாம் முடிஞ்சு போன கதை. நான் அதைப் பத்தி பேசக்கூடாது. ஆனா எதனால் அந்தக் காதல் நிறைவேறாமல் போய் இருக்கும். அது தெரிந்தால் தானே இந்த விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வர முடியும்.

 

     நொடியில் உலகை வலம் வந்து முடிக்கும் திறன் பெற்ற கற்பனை வளம் நிறைந்த மனித மனது மினிக்குள்ளும் இருக்கும் தானே. கலர்கலர் கனவுகளை ஒன்று சேர்த்து வானவில்லாகக் காட்டி அவளை பெரிதாக மகிழ்வித்தது.


     அந்தக் கனவை தொடர முடியாமல் சாணக்கியனின் முன்னாள் காதலி என்னும் பெரும் சத்தம் இடையூறு செய்ய, எப்பாடு பட்டாவது சாணக்கியனின் கடந்த காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்ன பண்றது எப்படித் தெரிஞ்சுக்கிறது.

 

     யார்கிட்ட கேட்டா இதைப் பத்தி தெரியும். அரசன் அங்கிள் கிட்ட கேட்கலாமா? ஆனா அவர் என்மேல் கோபமா இல்ல இருக்கார். என்ன பண்றது எனக் குழப்பத்தில் இருக்கும் போது குழப்பத்திற்குப் பதிலாக அங்கே வந்து சேர்ந்தது தேன்மொழியின் தந்தை.

 



Leave a comment


Comments


Related Post