இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 21 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 27-04-2024

Total Views: 13761

காதலொன்று கண்டேன்!

தேடல்  21

அவளுக்கென..


தரணி சொன்னதை கேட்டவளின் மனதிலும் அதே எண்ணமே ஓடிக் கொண்டிருக்க பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள்,அடி வாங்கிக் கொண்டிருப்பவர்களை.

"அண்ணா..இவ்ளோ பேர் இருக்காங்கல..ஏன் யாருமே தடுக்க வர்ல..அதுவும் ரெஸ்டாரண்டோட ஓனரும் பேசாம பாத்துட்டு இருக்காரு.."

"அதுவா மேடம்,இது எங்க சாரோட பெஸ்டு ப்ரெண்டோட ரெஸ்டாரண்ட் அதான்.."

"ஆ..அப்டியா..?" என்ற படி மீண்டும் ஜீவாவைப் பார்க்க அவனோ சராமாறியாய் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தான்,சுற்றம் மறந்து.

காளையவனின் கோபம் அறிந்தது என்பதால் எதுவும் செய்ய முடியாது கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தவளுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை காக்க முடியாது போக கீழே விழுந்தவனை  மறித்து காளையவனின் முன்னே  சென்று நின்றாள்,தவிப்புடன்.

"ஜீவா சார் போதும்.."

"தள்ளிப்போங்க மித்ரா.." பற்களிடையே வார்த்தைகளை கடித்து துப்ப நகருவாளா அவள்..?

"ஜீவா சார் ப்ளீஸ்." அவள் சொல்வதைக் கேளாமல் முன்னேறப் பார்த்தவனை நெருங்கி கரத்தைப் பற்றி தடுக்க முயல அவளின் செயலை உணர்ந்தவனுக்கு இதயம் நின்று துடித்தது.

"எ..என்ன ப..பண்றீங்க..?" விழிகள் விரியக் கேட்டவனின் பாதங்கள் ஓரடி பின்னே உள்ளுக்குள் புதிதாய் ஒரு பதட்டம்.என்ன அதை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை,அவ்வளவே.

"சொல்ல சொல்லக் கேக்கலனா கைய புடிச்சி தான் நிறுத்தனும்.." காளையவனின் மனநிலை அறியாது அசட்டையாய் அவள் சொல்ல திக்கென்றாகிற்று,அந்த அசராத காளையவனுக்கு.

"ஓகே..ஓகே..நா அடிக்க மாட்டேன்..நீங்க ஓரமா போங்க மித்ரா.."

"இல்ல..நீங்க அப்டிதான் சொல்லுவீங்க..ஆனா நா ஓரமா போனதுக்கு அப்றம் நீங்க அடிப்பீங்க..அதனால கைய புடிச்சி கூட்டிட்டு போறது தான் சேஃப்.." காரணத்தை கூறிய படி மீண்டும் அவனின் கரத்தை பற்ற தாங்குவானா காளையவன்..?

விழி உரசலுக்கே தடுமாறிய இதயம், விரல் ஸ்பரிசத்திற்கு தடம் மாறும் சாத்தியம் அதிகம் அல்லவா..?

"வெயிட்..வெயிட்..யூ ஸ்டே தேர்.."குரலிலேயே பதட்டம் இருக்க இரு கைகளையும் அவனின் நெஞ்சுக்கே நேரே வைத்து நிற்கச் சொல்லவும் அவளும் நகரவில்லை.அவள் நின்றதும் தான் மூச்சே வந்தது,காளையவனுக்கு.

ஒரு நொடி அவள் ஆழ்ந்து பார்த்திருந்தாலும் அரிதாய் அவன் முகத்தில் தோன்றிய தடுமாற்றத்தை கண்டு கொண்டிருப்பாள்.ஆனால்,அவள் இருந்த மனநிலைக்கு அதையெல்லாம் கவனித்திடவில்லை.

பின்னந்தலை சிகைக்குள் விரல் நுழைத்து இரு முறை கலைத்து விட்டவனோ இதழ் குவித்து ஊதிக் கொண்டு மித்ராவை பார்க்க அவளோ அதே இடத்தில் நின்றிருக்க ஆயாசமாய் இருந்தது,காளையவனுக்கு.

"தரணி.."தன் கம்பீரக்குரலில் அழைக்க தாமதியாது வந்தவனுக்கு விழிகளால் சைகை செய்ய புரிந்து கொண்டு தலையசைத்தான்,அவனும்.

"போலாமா மித்ரா..?" கேட்ட படி அவன் நடக்க தரணிக்கு தலையசைப்பை பதிலாய் கொடுத்து விட்டு பின்னூடு சென்றாள்,அவளும்.

காரில் ஏறி தண்ணீரை மடமடவென பருகியவனுக்கு இப்பொழுது தான் மனம் கொஞ்சம் சமப்பட்டது போல்.

மித்ராவும் ஏறிக் கொள்ள அவளைப் பார்த்தவனுக்கு அவள் கதவை அடைக்க சிரமப்படுவது கவனத்தை ஈர்த்தது.

"என்ன டோர க்ளோஸ் பண்ண முடிலியா..?" தண்ணீர் போத்தலை இருக்கையில் கீழ் வைத்த படி கேட்க "ஆமா.." என்றவளின் விரல்கள் இன்னுமே அடைக்க  முயன்று கொண்டிருந்தன.

"வெயிட் நா க்ளோஸ் பண்றேன்.." என்ற படி அவள் புறம் கையை நீட்ட இருக்கையோடு பின்னோடு உடலை உள்ளிழுத்துக் கொண்டு அவள் அமர உணர்வுகளை உள்வாங்கியவனுக்கு நீண்ட கரம் அந்தரத்தில் நின்றது.

அவள் நிலையைக் கண்டவனுக்கு அதன் பின்னே தன் நிலை எண்ணி பயம் வர  காரில் இருந்து இறங்கி மறுபக்கம் சென்று கதவை அடைத்து விட்டவனின் இதழ்களில் இளமுறுவல்  ஓடி மறைய அவளுக்குத் தான் செயலில் உயிர் வரை ஆனந்தப் பிரவாகம்.

விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் மீது விருப்பம் வரலாம்.ஆனால்,உணர்வுகளை மதித்து நடக்கும் போது  தானே அது காதலாய் உருமாறும்.

காளையவனோ வண்டியை கிளப்ப அவளின் விழிகள் அவனை அடிக்கடி தொட்டு மீண்டு கொண்டிருந்தன.

அவனுக்கும் அது புரிந்தாலும் எதுவும் கேட்கவில்லை.வரும் வழி முழுவதும் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

சில மௌனங்களின் மொழிபெயர்ப்பு வார்த்தைகளை விட அழகு அல்லவா..?
அந்த நிலை தான் அவர்களிடையே.

இடையில் வண்டியை நிறுத்தி சில பொருட்களை வாங்கிக் கொண்டவனுக்கு அவளை வீட்டில் விடவே மனமில்லை.அவளின் அருகாமை அத்தனை பிடித்திருந்தது.அவளுடனான நிமிடங்களில் மனம் முழுக்க ததும்பி வழியும் உவகை உரைத்திட முடியாததாய்.

விறைப்பாய் முகம் இருந்தாலும் உள்ளுக்குள் விழாக்கோலம் தான்.

அவளின் வீட்டின் அருகே காரை நிறுத்திட புன் சிரிப்புடன் இறங்கப் பார்த்தவளிடம் பின் இருக்கையில் இருந்த பைகளை எடுத்து நீட்ட அவளுக்கு என்னவென்று புரியவில்லை.

"என்ன சார் இது..?இவ்ளோ பெரிய பார்சல்"

"என்னன்னு சொன்னா தான் வாங்கிப்பீங்களா..?" இயல்பான வார்த்தைகள் என்றாலும் விழிகளோ வாங்கிக் கொள்ளுமாறு சைகை செய்தனவே.ம்ஹும் சைகை இல்லை,நிச்சயம் அது கட்டளை தான்.

"கண்ணாலயே மெரட்ட ஆரம்பிச்சிட்டீங்களா..? தவறுதலா ஒரு கேள்வி கேட்றக் கூடாதே.." அவனுக்கு கேட்கும் படி முணுமுணுத்தவளோ வெடுக்கென பறித்துக் கொண்டு பிரித்துப் பார்க்க விழிகள் விரிந்து நின்றன.

"எனக்கு ஸ்வீட் புடிக்கும்னு உங்களுக்கு எப்டி தெர்யும்..?"

"உங்களுக்கு.."

"உங்களுக்கு பதில் வேணுமான்னு தான கேக்க போறீங்க..?"

"நோ நோ உங்களுக்கு என்ன புடிக்கும்னு தெரிஞ்சிகிட்டு இருக்க மாட்டேன்னு தோணுதான்னு கேக்க வந்தேன் மித்ரா.."

"எதுக்குமே பதில் சொல்றதில்ல..சீண்டி கிட்டே இருக்க வேண்டியது.." உதட்டை சுளித்து மொழிந்தவளோ கையில் இருந்த பையால் அவனுக்கு ஒரு அடியை வைத்து விட்டு இறங்கிக் கொள்ள காளையவனில் கட்டியிழுக்கும் கடையிதழ் புன்னகையொன்று.

மூன்று நாட்கள் கடந்து இருந்தது.

அன்று பேசியதற்கு பின் ஜீவாவிடம் இருந்து குறுஞ்செய்தி ஒன்று கூட வராதிருக்க மித்ராவுக்கு உலகம் சுழலவில்லை.

"என்னடி ஆச்சு..? உலகம் இடிஞ்சு விழுந்த மாதிரி நடந்துக்குற..தேவன்னா ஃபோன் பண்ணியாச்சும் பேசு..இப்டி மந்தமா சுத்திகிட்டு இருக்காம.." தீப்தியும் பலமுறை திட்டித் தீர்த்து விட்டாள்.

அவளின் திட்டுக்களில் இருந்து தப்பிக்க காளையவனுக்கு பலமுறை அழைப்பெடுத்தும் அவன் ஏற்றால் தானே.

தரணிக்கு அழைப்பெடுத்தால் "சார் பிஸியா இருக்காரு மேடம்.." என்று பதில் வருமே தவிர அவன் குரல் கேட்காது.

இன்னும் மூன்று நாட்களில் திருமணம் வேறு.நிலை கொள்ள முடியவில்லை அவளால்.

வீட்டில் இருந்து வெளியே செல்லவும் முடியவில்லை.சித்தி கண்டிப்பாக மறுத்திருக்க ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் தனியே சென்றாவது காளையவனை பார்த்து வந்து விடுவாள்.அதற்கும் வழி இல்லையே.

யன்னலோரமாய் நின்றிருந்தவளின் விழிகள் இரவு வானில் இலக்கற்று அலைந்து கொண்டிருக்க பலமுறை அழைப்பெடுத்துத் தோற்றுப் போன விரல்களில் அலைபேசி தொங்கிக் கொண்டிருந்தது.

சூழ பலர் இருந்தும் அவள் தனிமையையும் வெறுமையும் உணர மனம் முழுக்க காளையவன் நிறைந்திருப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை.இந்த தவிப்பு தன் மனதை படம் போட்டுக் காட்டினாலும் அவனைக் காண வேண்டும் என்பதே மனதில் ஓடிக் கொண்டிருந்த முதன்மையான எண்ணம்.

"கல்யாணத்துக்கு வருவார்ல..அன்னிக்கி இருக்கு மாப்ளகி.." அர்ச்சித்த படி திரும்ப அத்தனை நேரம் நின்று அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்த தீப்திக்கு கோபமாய் வந்தது.

"அடியேய்..என்ன தான் டி  ப்ரச்சன..?"

"எனக்கு ஜீவா சார பாக்கனும்.." குரல் உறுதியாய் வந்தாலும் விழிகளில் கரை தாண்டிய ஏக்கம்.

"அடியேய் நைட் பத்து மணி ஆகுது டி..இப்போ எப்டி டி..?"

"ப்ளீஸ் தீப்தி..காலைல சித்தி வெளிய போகவே விட மாட்டேங்குறாங்க..நீயாச்சும் ஏதாவது பண்ணேன் ப்ளீஸ்..எனக்கு நைட் தூக்கமும் வருதில்ல..ப்ளீஸ்.." அவள் கெஞ்ச தங்கையில் மனம் இளகிற்று.

"சரி நீ சார்கு இல்லன்னா தரணி சார்கு போன் பண்ணி சார் எங்க இருக்காருன்னு கேளு..யாருக்கும் தெரியாம போய் பாத்துட்டு வர்லாம்..நா ஸ்கூட்டிய கொண்டு வெளிய தான் பார்க் பண்ணிட்டு வந்துருக்கேன்..அதனால கேஸ் ஆகாது.." என்க விழிகள் மின்ன அழைப்பெடுத்தவளிடம் தரணி தான் பையன் தனது பழைய வீட்டில் இருப்பதாய் தகவல் சொன்னதே.

முகவரியை வாங்கி பார்க்க அது தீப்தியின் தோழி வீட்டின் பக்கத்து வீடு என்று கண்டு கொண்ட நொடி இருவருக்கும் அப்படி ஒரு ஆசுவாசம்.தீப்திக்கு பழக்கப்பட்ட இடம் அல்லவா.அதிலும் இடையில் ஒருமுறை தயாளன் வரும் வழியில் இருவருக்கும் வீட்டைக் காட்டியும் கொடுத்து இருக்கிறான்.தயாளன் காட்டிக் கொடுத்த இடம் என்று முகவரியைப் பார்த்த பின்னர் தான் இருவருக்கும் நினைவிலேயே வந்தது.

சத்தம் செய்யாது கிளம்பி வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்து அடுத்த பத்து நிமிடத்தில் காளையவனின் வீட்டின் முன் நிறுத்த துள்ளிக் குதித்து ஓடியவளின் கரத்தை பிடித்து தடுத்தாள்,தீப்தி.

"நா அமிர்தா வீட்டு வெளில இருக்கேன்..தோ ரெண்டு வீடு தள்ளி தான் அவ வீடு..நீ பாத்துட்டு போன் பண்ணு வந்துர்ரேன்.."

சரியென்பதாய் தலையசைத்து விட்டு நுழைவாயிலை திறந்து கொண்டு செல்ல அத்தனை பெரிய வீடில்லை அது. இரட்டைப் படுக்கையறை கொண்ட அளவான வீடு.

அழைப்பு மணியை அழுத்தியவளுக்கு எந்த வித பதிலுமே இல்லாது போக ஸ்கூட்டியுடன் நின்றிருந்த  தீப்தியைப் பார்க்க அவளோ திரும்பி வருமாறு சைகை செய்ய அசட்டையுடன் துப்பட்டாவை இடுப்பில் கட்டிய படி பைப்பில் ஏற தீப்தி பயந்து விட்டாள்.

அவள் ஓடி வரும் முன்னே ஏறி மொட்டை மாடியை அடைந்திருக்க நல்ல வேளை கதவு திறந்து இருந்தது.இல்லையென்றால் மித்ராவின் பாடு திண்டாட்டம் தான்.

"மொட்ட மாடி கதவு தெறந்து தான் இருக்கு..நா உள்ள போறேன்.."குறுஞ்செய்தியை தட்டி விட்டு உள்ளே நுழைய காளையவனோ குளித்துக் கொண்டிருந்தான்,அலுப்பு தீர.

இந்த மூன்று நாட்களில் அவனுக்கும் அதீத வேலைப்பழு.அவர்களின் தொழிற்சாலை ஒன்றில் நேர்ந்த குளறுபடிக்கு தீர்வு காண அங்குமிங்கும் அலைந்தவனுக்கு மித்ராவின் நினைவு வந்தாலும் அவளுடம் பேசுவதற்கு கொஞ்சமும் நேரம் இருக்கவில்லை.

அனைத்தையும் சரி செய்து விட்டு வீட்டுக்கு வரும் போது ஆறு மணி கடந்திருக்க வந்ததும் சோபாவிலேயே உறங்கி இப்போது தான் எழுந்திருந்தான்.எழுந்தவுடன் அவளோடு பேச மனம் விழைந்து மொட்டை மாடிக்கு சென்றவனுக்கு அலுப்புத் தீர குளித்து விட்டு ஆறுதலாய்ப் பேசலாம் என்கின்ற எண்ணம் வர குளிக்க வந்தவனுக்கோ அவள் தன்னை தேடி வருவாள் என்கின்ற ஊகம் இருந்திருக்காது.

குளியலறையில் இருந்ததால் சத்தம் கேட்காதிருக்க தோளில் துவாய் கிடக்க ஆடையை மாற்றிக் கொண்டு அறைக்கதவை திறந்த படி அவன் வெளியே வர செவிகளை உரசிற்று,காலடிச் சத்தங்கள்.

திடுமென கேட்ட சத்ததில் திருடன் என ஊகித்து கொண்டது,மனது.

வீட்டினுள் நுழைந்தவளுக்கு குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க அவன் குளிப்பதை முடிவு செய்தவளாய் சமயலறைக்குள் நுழைந்திருந்தாள்,தண்ணீர் குடிக்க.ஆளி இருக்கும் இடம் தெரியாததால் சமயலைறயில் மின் விளக்கை கூட ஒளிர விட்டிருக்கவில்லை.

சமயலறைக்கு பக்கத்தில் இருந்த கூடத்து மின் விளக்கு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்க அதன் வெளிச்சம் தான் சமயலறையிலும்.

யோசித்த படி சமயலறை வாசலுக்கு வந்தவனுக்கு இருட்டில் ஒரு வரி வடிவம் புலப்பட மட்டுமே முகத்தை மூட துவாயை கையில் எடுத்த படி  சத்தம் காட்டாமல் நெருங்கி நகர்ந்தவனுக்கு ஈரடி இடைவளியிலேயே புரிந்து விட்டது,அது அவள் தான் என்பது.

மித்ரா தான் காளையவன் வந்ததை கூட உணராமல் நீரை சரித்துக் கொண்டு திரும்ப திடுமென தன் முன்னே உருவம் நின்றிருந்ததில் பயத்தில் கத்தியே விட்டாள்,அதி சத்தமாய்.

"அடியேய் நான் தான்டி.." பதட்டத்துடன் கூறியவனோ அடுத்த முறை கத்த முயலும் முன்னே கையில் துவாய் கொண்டு அவளின் வாயை அழுத்தி அடைக்க குரல் செவியை தீண்டிய பின்னரே இயல்பாகினாள்,அவள்.

அந்த நொடி நேரத்தில் அவனின் விழிகளில் தோன்றிய பதட்டம் தான் எத்தனை அழகு...?
அவள் கண்டிருந்தால் உறைந்து நின்றிருப்பாளே.

"லைட்ட போட்ற வர கத்தாத.." எச்சரித்து விட்டு ஆளியை இயக்க அவ்விடம் முழுக்க வெளிச்சம் பரவிட காளையவனைக் கண்டதுமே மூச்சு வந்தது,அவளுக்கு.

"நா ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.." மூச்சு வாங்கிய படி சொல்ல உறுத்து விழித்தான்,அவளை.

"இது நா சொல்ல வேண்டிய டயலாக்..சரியாப் பாத்தா கத்தியிருக்க வேண்டியதும் நா தான்.."

"அட ஆமால.." அசடு வழிய சிரித்தவளின் மீது அழுத்தமாய் படிந்தது,காளையவனின் பார்வை.

"இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க மித்ரா..?" அவளின் வருகைக்கான காரணம் புரிந்தும் அவள் உரைத்து கேட்பதில் அத்தனை பிரியம் அவனுக்கு.

"சும்மா தான்.."

"சும்மான்னா புரியல..தெளிவா சொல்லுங்க.."

"இந்த மனுஷன் வேற..பதில் தெரிஞ்சும் கேள்வி கேக்கும்.." முணுமுணுத்துக் கொண்டன,அவளிதழ்கள்.

தேடல் நீளும்.

2024.04.21


Leave a comment


Comments


Related Post