இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலொன்று - 23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK031 Published on 27-04-2024

Total Views: 19071

காதலொன்று கண்டேன்!

தேடல்  23

அவளுக்கென..

"வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்டி ஏன் வந்தீங்கன்னு கேக்க கூடாதுல்ல சார்.."

"அது உண்ம தான்..ஆனா இப்டி திருட்டுத்தனமா வந்தா கேள்வி கேக்கற ரைட்ஸ் இருக்கு தான..?" இருபுருவமுயர்த்தி கூர் விழிப்பார்வையை பாய்ச்சி கேட்டவனின் கேள்வியில் அவள் சிரசு தன்னால் மேலும் கீழும் ஆடியது.

"சரி அப்போ சொல்லுங்க..எதுக்கு இந்த டைம்ல வந்தீங்க..?" ஆழ்பார்வையுடன் கேட்டவனுக்கு நிச்சயமாய் அவளிடம் பதில் வாங்காது விட்டு விடும் எண்ணம் இல்லை.

"அ..அது சும்மா தான்.."

"கண்டிப்பா சும்மா தானாஆஆஆஆ..?" ராகமிழுத்துக் கேட்டவனின் கடையிதழ் புன்னைகயில் துடித்தன.

"இந்த மனுஷன் வேற பேச்ச விட மாட்டாரு.." தனக்குள் கூறிக் கொண்டவளோ முக பாவத்தை மாற்றி கொண்டு "பசிக்கிது" என்க பொய்யென்று தெரிந்தும் பேசாமல் இருக்க முடியவில்லை,காளையவனால்.

உண்மை மட்டுமல்ல, பொய்யான அவளின் தவிப்புக்களும் வாட்டமும் கூட  அவனை அடியோடு அசைத்து விடக் கூடியவை என்றவன் உணர்ந்து கொண்ட கணம் அது.

ஏதோ டப்பாக்களை துழாவி ஓரிரண்டு கேக் துண்டுகளை எடுத்து நீட்ட மறுக்காமல் வாங்கி விழுங்கியவளுக்கு உண்மையில் கொஞ்சமாய் பசித்தது தான்.

இரண்டாவது துண்டை கடித்த படி கையில் இருந்த மற்றையதை அவன் புறம் நீட்ட மறுப்பாய் தலையசைத்தவனின் விழிகளில் இருந்தது தான் என்ன..?

"ப்ரிட்ஜ்ல தோச மாவு இருக்கு..இருங்க தோச ஊத்தி தர்ரேன்.." கூறிய படி குளிர்சாதனப் பெட்டியை திறக்க அப்போது தான் அவளுக்கு தீப்தி வெளியில் நிற்பதே நினைவில் வந்தது.

"ஐயையோ.." ஓடிக் கொண்டு சென்று கதவைத் திறக்க வாசற்கதவின் முன்னே உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்தாள்,தீப்தி.

"எரும..எரும..எவ்ளோ நேரம் நா வெளில நிக்கறது..உன் ஆளப் பாத்ததும் கூட வந்தவள மறந்துட்டியா..?" கடுப்புடன் கேட்டவளின் பின்னே வந்து நின்ற காளையவனைக் கண்டதும் நா மேலண்ணத்துடன் சடுதியாய் ஒட்டிக் கொண்டது.

"உள்ள வாங்க தீப்தி.." என்ற படி அவன் அழைக்க பயந்த படி உள்ளே நுழைந்தவளுக்கு தமக்கையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி வியப்பைத் தராமல் இல்லை.

"வெயிட் நா காபி போட்டு எடுத்துட்டு வர்ரேன்.." என்ற படி உள்ளே நகரப் பார்த்தவனை தடுத்து நிறுத்தினாள்,மித்ரா.

"இல்ல..இல்ல நாங்க கெளம்பறோம்..வீட்ல தேடுவாங்க..சித்தி வெளில போ வேணான்னு சொன்னாங்க..நாங்க தா கேக்காம வந்தோம்.." என்று பரபரக்க நிதானமாய் திரும்பி ஏறிட்டவனின் விழிகள் சொன்ன செய்தியில் சத்தம் செய்யாது தீப்தியின் அருகே அமர்ந்து கொள்ள காளையவனின் பாதங்கள் சமயலறையை நோக்கி விரைந்தன.

"இப்டி கண்ணாலே பயமுறுத்துறாரு..இதப்பாத்தா ரோமியோ மாதிரி இருக்காருன்னு சொன்ன..பொய் சொல்லலாம்..இப்டி ஒரு பொய்..உனக்கே ஓவரா இல்ல..?" தமக்கையின் காதுக்குள் கிசுகிசுத்தவளுக்கு ஜீவாவின் விம்பம் பற்றி தானாய் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையில் ஏற்பட்ட மாற்றம் தற்சமயம் தொலைந்து போயிருந்தது.

"அடியேய் நம்புடி..நா எதுக்குடி பொய் சொல்லனும்..? இப்போ இப்டி பாத்தாருன்னு எப்பவும் அப்டி இல்ல.."மித்ரா சொல்லி முடிக்கும் முன்னரே இரண்டு காபி டம்ளர்களுடன் வந்தவனைக் கண்டதும் சட்டென நின்றது,அவர்களின் பேச்சு.

காபியை கொடுத்து விட்டு மீண்டும் சென்றவனோ தோசையை சுட தனக்காக மெனக்கெடுகிறான்,
என்று புரிந்த மித்ராவுக்கு மனம் கேட்கவில்லை.

"இருடி வர்ரேன்.." என்ற படி சமயலைறைக்குள் நுழைந்தவளின் கரங்களில் பாதி நிரம்பிய காபி டம்ளர்.

"ஜீவா சார்.."

"ம்ம்ம்ம்.."

"எதுக்காக தோச ஊத்திட்டு இருக்கீங்க..எனக்கு பசிக்கல.."

"நா உங்களுக்கு ஊத்தறேன்னு நீங்க எப்டி நெனச்சுக்கலாம்.." தோசைக்கரண்டியால் கலவையை கிளறிய படி கேட்டவனின் முகத்தில் அதே இயல்பு நிலை.இவளுக்கு தலை சுற்றிப் போனது.

"அப்போ எனக்காக பண்ணலயா நீங்க..?" என்றவளுக்கு அவனின் வாயால் ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும் என்கின்ற திண்ணம்.

"என்ன பண்ணலயா..?"

"சிவசிவா..‌எனக்காக தோச ஊத்தலியா..?"

"நீங்களா நெனச்சிகிட்டா நா என்ன பண்றது..?"

"அப்போ எனக்காக ஊத்தல.."

"நா அப்டி ஏதாச்சும் சொன்னதா உங்களுக்கு கேட்டுச்சா..?"

"தயவு செஞ்சு இப்டி கேள்வியா கேக்காதீங்க..?"

"ஏன் பிடிக்கலயா..?

"ஐயோஓஓஓஓ"

"எதுக்கு இப்போ ஐயோ..?"

"கடவுளே..தப்பு தான்..என் தப்பு தான்..உங்க கிட்ட வந்து எனக்கா தோச ஊத்தறீங்கன்னு கேட்டது என் தப்பு தான்.."

"நா எதுக்கு மித்ரா உங்களுக்கு தோச ஊத்தி தரனும்..?" முகத்தில் எந்த வித உணர்வையும் காட்டாது அவன் கேட்க இவளுக்கு  வெறியாகிற்று.

"உங்ங்ங்ங்ங்ங்கள..மூணு நாள் பாக்கல..வாய்ஸ் கூட கேக்கலன்னு பதறிப்போய் ஒரு மனுஷி வீட்ல யாருக்கும் தெரியாம எல்லார் கண்ணுலயும் மண்ண தூவிட்டு தூங்கிட்டிருந்தவள எழுப்பி பைப் ஏறி குதிச்சு உங்கள பாக்க வந்தா நீங்க இன்னமும் கேப்பீங்க.." பற்களை நறநறத்த படி மொழிந்து விட்டு அவள் திரும்பி நடக்க அவனின் கேள்வியில் நின்றது,அவளது நடை.

"உங்க வீட்ல கட்டிக்கப் போறவர பாக்கப் போறத சும்மா போறதாவா சொல்லுவாங்க..?"குறும்பு கலந்த குரலில் கேட்டவனின் மொத்த திட்டமும் இப்பொழுது தான் அவளுக்குப் புரிந்தது.

தன்னையே நொந்து கொண்டு திரும்பி பாராது ஈரடி எடுத்து வைத்திட "என்ன மித்ரா..வெக்கம் ஏதாச்சும் வந்துருச்சா..?" என்றவனின் சத்தமான குரல் செவியில் மோத வெகுண்டவளோ மறுபுறம் திரும்பி "எனக்கு வெக்கம் ஒன்னும் இல்ல.." கூறிட சத்தமாய் தொடங்கிய வசனம் முற்றுப் பெறும் போது காற்று மட்டும் தான் வாயில் இருந்து வெளி வந்தது.

அவளில் இருந்து நான்கடி  வந்து நின்றிருந்த காளையவன் பார்த்த ஆழப்பார்வையில் வார்த்தைகள் தொண்டைக்குழியில் அடைத்துக் கொண்டன.

ஓரிரு முறை காளையவனின் விழிகளை நேர்கோட்டில் சந்தித்து இருந்தாலும் அது நொடி நேரம் கூட நிலைக்காது.காளையவனின் விழிகளே சுழன்று மறுபுறம் திரும்பி விடும்.

ஆனால்,இப்பொழுது தான் முதன் முறையாக அவனின் ஆழப்பார்வையை உணர்வது.சத்தியமாய் கட்டியிழுக்கும் பார்வையது.இடையிடையே இமைத்து இம்சிக்கும் பார்வையால் வருடும் விழிகளைக் கண்டு இமைத்திட முடியவில்லை,அவளால்.

"என்ன பார்வடா இது..சிவசிவா.." இதழ்கள் தன்பாட்டுக்கு உச்சரிக்க விழிகள் விரும்பியே அவன் விழிகளிடம் கட்டுப்பட்டன.

இமைக்காத பார்வையை எதிர் கொண்ட காளையவனும் உள்ளுக்குள் திணறிக் கொண்டு தான் இருந்தான்,அவனும் எத்தனை தூரம் தான் இழுத்துப் பிடித்த படி நடிப்பது..?

"மிஸ் பண்ணுனீங்களா என்ன..?" மார்புக்கு குறுக்கே கரத்தை இறுக்கிய படி கேட்டாலும் அந்த மூன்று வார்த்தைகளை கேட்டு முடிப்பதற்குள் முந்நூறு தடவை மூச்சு வாங்கியிருக்க வரண்ட தொண்டையை ஈரப்படுத்த எத்தனை முறை எச்சில் கூட்டி விழுங்கினானோ..?

விழிப்பார்வையில் உறைபவனை..
அருகாமையில் திணறுபவனை..
இரண்டும் ஒரு சேரத் தாக்கின்..?
ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து தானே போகும்.

அவன் கேட்ட கேள்வியை தாமதமாய் கிரகித்தவளோ மறுப்பாய் தலையசைக்க முறைக்க முயன்று தோற்றான்,காளையவன்.

"பொய் சொல்றீங்க தான..?" விழி சுருக்கி கேட்டவனோ இதழ் குவித்து ஊதிக் கொள்ள விரல்கள் இடது புற நெஞ்சை அழுத்தமாய் நீவி விட்டன.

தனது பொய்யை கண்டு கொண்டான் என்பது புரிய விழிகள் விரிய மறுப்பாய் மீண்டும் தலையசைக்க ஏனோ அந்த விழிமொழியை ஈடு செய்ய வார்த்தைகள் தோற்றுத் தான் போயிருக்கும்.

சாதாரணமாகவே இழுத்துக் கொள்ளும் விழிகள்,இன்று இன்னும் விரிந்து அவன் ஜீவனை மொத்தமாய் களவாடித் தான் தொலைத்தது.

"யப்போய்.." ஜீவனுக்கு புயலடிக்க விழிமூடி தலை தாழ்த்தி வழமை போலவே இருமுறை விரல் நுழைத்து பின்னந்தலை கோதி விட்டு நிமிர்ந்தவனுக்கு அவளிடம் சொல்லிய ஆக வேண்டும் என மனம் உந்தித் தள்ளியது.

"இ..இந்தக் கண்ணு ரெண்..ரெண்டும்..ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது..ஐ மீன் அப்டியே கட்டிப் போடுதுன்னு வச்சிக்கோங்களேன்..ப்ளீஸ் இப்டி கண்ண விரிச்சு பாக்காதீங்க.." விரல் கொண்டு விழிகளை சுட்டிக்காட்டி கரகரத்த குரலுடன் கூறி விட்டு நகர்ந்தவனின் செயலில் அவளுக்குத் தான் உலகம் உறைந்து போனது.

                 ●●●●●●●●

அந்த ஆள் அரவமற்ற வீதியில் காளையவனின் கார் மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருக்க புன்னகையில் துடித்த இதழ்களை அடக்கிய படி  வண்டியோட்டிக் கொண்டிருந்தவனின் அருகே அமர்ந்திருந்தவளின் பார்வை வெளியில் தான் திரிந்து கொண்டிருந்தது.

பின்னிருந்த தீப்திக்கு காளையவனின் முகத்தில் எந்த வித உணர்வையும் கண்டு பிடிக்க முடியாவிடினும் தமக்கையில் உலகம் மறந்த தோற்றம் யோசனையைத் தந்தது.

"அவரு தோச தந்தாரு..தலய நிமித்தி பாக்காம வாங்கி கிட்டா..
ரெண்டு பேரும் பேசிக்கவே இல்ல..கார்ல கூட நாம வம்படியா அனுப்பி வச்சு இருக்கலனா பின்னாடி தான் ஏறி இருப்பா..என்னாச்சு இவளுக்கு..இதுங்க ரொமான்ஸ் பண்ற ஆளுங்களும் இல்ல..அதுலயும் நம்ம ஹிட்லருக்கு லவ் பீலிங்க்ஸே இல்லாத மாதிரி தான் இருக்கு..அப்றம் எதுக்கு இப்டி அமைதியா வருதுங்க.." யோசனை செய்தவளுக்கு கற்பனையில் கூட காளையவனின் விழிகளில் காதலை கொண்டு சேர்க்க முடியவில்லை.

உணர்வுப் போராட்டத்துடனான மௌனம் இருவரிடையே.அதை கலைத்திடும் எண்ணம் இருவருக்குமே இல்லை.

அவர்களின் வீட்டை வந்தடைய வண்டி பக்கத்தில் இருக்கும் பாதையில் ஒதுங்கியது.

"ரெண்டு பேருக்கும் தான் சொல்றேன்..இனிமே நைட்ல இப்டி தனியா வெளில வந்தீங்கன்னா நானும் பாத்துட்டு பேசாம இருக்க மாட்டேன்..ரைட் புரியுதா..?"என்க தலையசைத்து விட்டு இவருவரும் வீட்டுக்குள் நுழைந்ததை கண்டதுமே கிளம்பியிருந்தது,காளையவனின் கார்.

மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அறைக்குள் நுழையும் வரை இருவருக்கும் போதுமென்றாகி விட்டது.

தீப்தி கட்டிலில் சரிய அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்ட மித்ராவின் முகத்தில் மினுமினுப்பு.விழிகளில் புதுவிதமாய் கலவையான உணர்வுகள்.

"என்னடி..மொகம் இப்டி டாலடிக்கிது..? மாமாவ பாத்ததும் ஒரு மாதிரி தான் இருக்க நீயும்..நா கூட அவரு கிட்ட பயங்கரமான திட்டு இருக்கும்னு நெனச்சேன்..ஆனா அது இல்ல..ஆனா உன் கூடவும் ரகடா தான நடந்துகிட்டாரு.." என்று அவள் கேட்க பெண்ணவளின் செவிகளில் காளையவனின் கரகரப்பான குரல் தானாகவோ ரீங்காரமிட ஏனோ கொஞ்சம் வெட்கம்.

"என்னடி..நா ரகட் பாய்னு சொல்றேன்..நீ வெக்கப்பட்டு சிரிக்கற..?" தமக்கையின் இதழ்களில் தோன்றிய முறுவலின் காரணம் புரியாது கேட்க மறுப்பாய் தலையசைத்து விட்டு சரிந்து கொண்டவளுக்கு உறக்கம் வர வெகு நேரம் பிடித்தது.

இரண்டு நாட்கள் ஓடியிருந்தது.

நாளை திருமணம் என்றிருக்க தயாளனின் வீட்டில் ஓரளவு ஆட்கள் தான்.கோயிலில் எளிமையான திருமணம் என்பதால் பெரிதாய் யாருக்கும் சொல்லிக் கொள்ளவில்லை.

ஜீவாவின் தரப்பில் இருப்பது சொற்ப ஆட்களே என்பதால் காளையவனை தயாளனின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தங்கச் சொல்லியிருக்க அவனை சம்மதிக்க வைக்க படாத பாடு பட்டவர்களோ மித்ராவை அணுகவே ஒத்துக் கொண்டான்,காளையவன்.

நேற்று காலையில் தான் வந்திருந்தான்.உடன் தங்க தரணியும் காளையவனின் சில தோழர்களும் வந்திருக்க அங்கிருக்கும் போதும் அலுவலகத்துக்கு சென்று வரத் தான் செய்தான்.

மாடியில் இருக்கும் மித்ராவின் அறையின் பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தால் தெளிவாய் அந்த வீடு தெரியும்.

நேற்றே இரண்டு முறை இரவில் வெளியில் உலாவிக் கொண்டிருந்தவனை அவனுக்குத் தெரியாமல் விழிகளில் உரசிக் கொண்டிருந்தது,எல்லாம் வேறு விடயம்.

நேரம் மாலை நான்கு மணியை எட்டியிருந்தது.

தன் அறையில் இருந்த மித்ராவுக்கு தாயின் நினைப்பு வர ஏனோ மனம் கலங்கியது.திருமணம் என்பது அவள் வாழ்வில் அத்தனை முக்கியமானதாய் இருக்க அதில் தாயில்லாதது அவளுக்கு பெரும் வெற்றிடத்தை தந்து விட்டிருந்தது.

அவளின் முக வாட்டத்துக்கான காரணம் தீப்திக்கும் சித்திக்கும் புரிந்திருக்க முடிந்த வரை தேற்ற முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் கண்டிருக்க முழுதாய் கலக்கத்தை போக்கிடத் தான் முடியவில்லை.

காரணம் ஏதோ சொல்லி குளியலறைக்குள் நுழைந்து அழுது தீர்த்து விட்டு வெளியே வந்தவளின் விழிகள் வீங்கியிருப்பது யாருக்குப் புரியாது போகும்..?

அவள் தங்கை மதுராவுக்கும் தமக்கையின் மனம் புரிய அவளைத் தேற்றத் தான் வழியில்லை.மதுரா தீப்தியின் முகத்தைப் பார்க்க சட்டென்று ஒரு யோசனை உதித்தது,அவள் மனதில்.

காளையவனின் மனதும் அவளைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தது.அவனும் அதே நிலையில் இருப்பதால் துல்லியமாய் அவளின் நிலையை உணர முடிந்தது,அவனால்.

மித்ராவின் அலைபேசியில் இருந்து ஜீவாவின் தனிப்பட்ட எண்ணை எடுத்து தன் அலைபேசியில் இருந்து குறுஞ்செய்தியொன்றை தட்டி விட அலைபேசியை எடுத்து படித்தவனுக்கு மனம் கேட்கவில்லை.

யாரினதும் கருத்தை கவராது வெளியே வந்து அழைப்பெடுத்திட திரையில் மின்னிய பெயரைக் கண்டதும் பட்டென தன்னை சமப்படுத்திய படி அழைப்பை ஏற்றிருந்தாள்,அவள்.

தேடல் நீளும்.

2024.04.25


Leave a comment


Comments


Related Post