இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 28-04-2024

Total Views: 31811

அத்தியாயம்-23

அமைதியான நிர்மலமான முகத்துடன் அவள் உறங்கிக் கொண்டிருக்க, அவள் விழித்திடத்தான், (தன்) விழியுள் (அவள்) விழி வைத்து காத்திருந்தான்.

முந்தைய நாள் அவனை இறுக அணைத்து இதழ் பதித்தபடியே உறங்கியவள் மருந்தின் வீரியத்தில் இரவு உணவுக்குக் கூட எழாது உறங்கிவிட்டாள். அஞ்சனாவின் நிலையை தெளிவாய் கூறவில்லை என்றாலும் அவளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதையும், உணவில் உப்பு சேர்க்கக் கூடாது என்று மருந்துவர் கூறியதையும் மட்டும் வீட்டில் கூறியிருந்தான்.

அனைவரும் அவனை அதிர்ந்து பார்க்க, அவன் முகம் வழமை போல் உணர்வுகளின்றி இருந்தது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் பெண்ணுக்கு ரத்த அழுத்தம் என்று கூறினால், யார் தான் உடனே ஏற்றுக் கொள்வர்? அதுவும் இத்தனை சிறு வயதில்!

ஏன் என்னவென்று கேட்டோரின் கேள்விகளுக்கு தன் அழுத்தமான பார்வை ஒன்றை மட்டுமே பதிலாகக் கொடுத்தவன் உணவை பெயருக்குக் கொறித்துவிட்டு எழுந்து அறைக்கு வந்து அவளுடன் படுத்துவிட்டான்.

உறக்கம் வராது சண்டித்தனம் செய்தும் சிரமப்பட்டு அவன் உறங்கிட, அதுவும் சில மணி நேரங்களிலேயே கலைந்து போனது. இதற்குமேல் உறங்க இயலாதென்று உணர்ந்தவன் சென்று தனது திரேட் மில்லில் வியர்வை ஆறாய் பெருகியோடுமளவு ஓடி ஆறு மணியளவில் அவள் உறக்கம் கலைந்தாளா என்று பார்க்க வந்து அப்படியே அவளருகே அமர்த்திட்டான்.

துயில் கலைந்து மெல்ல கண் விழித்தவள், சில நிமிடம் தலையணையில் முகம் புதைத்து படுப்பதும் எழுவதுமாய் கண்களை கசக்கி முழுதாய் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே தூக்கம் கலைந்தாள்.

தன்னவனைக் கண்டு மென்மையான புன்னகை கொடுத்தவளுக்கு அடுத்த நொடியே முந்தைய தினம் நினைவில் ஆட, முகம் செவ்வரளியாய் சிவந்து போனது. அதில் தன் கதுப்புகள் புடைக்க சிரிப்பை அடக்கியவன், 

“ஓய் கோழிக்குஞ்சு” என்றழைக்க, அவனைத் திரும்பி என்னவென்று பார்த்தாள்.

எழுந்து கட்டிலில் அமர்ந்தவன் அவளை இழுத்து தன் மடியில் சாய்த்துக் கொள்ள, அதில் விழிகள் அகல விரித்தவள், 

“மாமா..” என்க, “ஷ்ஷ்.. முதல்ல நான் கேள்விகளை கேட்குறேன். அப்றம் நீ பதில் சொல்லு” என்றான்.

பாவையவள் திருதிருவென விழிக்க, “யார் உன்கிட்ட வந்து என்ன பேசினாங்க? எதுக்காக இத்தனை நாளா ஒருமாதிரியாவே இருந்த? ஹாஸ்பிடல் போய் என்னென்னமோ கேட்டிருக்கியே இதெல்லாம் யார் உனக்கு சொன்னாங்க?” என்று அவன் வரிசையாய் கேட்க, பாவை சோகமாய் அவனைப் பார்த்தாள்.

பாத்திரம் நிறைந்த பாலில் கலக்கப்பட்ட துளியளவு விஷமாய் அவள் கலக்கமான பார்வையில் பயம் கலந்திருந்தது. அதை உணர்ந்து மேலும் அவளை அரவணைத்துக் கொண்டவன், 

“நீ சொன்னா தானே சனா எனக்கு தெரியும்? நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். உன் யஷுமாமாகிட்ட நீ எதையும் மறைக்கவோ தயங்கவோ வேண்டாம்னு” என்று ஆறுதலாய் மொழிந்தான்.

அதில் தைரியம் திரட்டி அவனோடு ஒன்றி அமர்ந்தவள், “மாமா.. எனக்கு எதுவுமே தெரியலை மாமா. நான் ரொம்ப சைல்டிஷா இருக்கேன். எப்ப என்ன செய்யணும் எப்படி பேசணும்னு கூட தெரியலை.. நான் ரொம்ப மோசம் மாமா” என்று கண்ணீரோடு அவள் கூற,

 “மேல சொன்னியே உனக்கு இது தெரியலை அது தெரியலைனு.. அதுலாம் ஓகே.. அதுக்கு ஏன் உன்னை நீயே மோசம்னு சொல்ற?” என்றான்.

“ஆமா மாமா.. நான் மோசம் தானே? உங்களை ரொம்ப தொல்லை பண்றேன். எனக்கு எதோ மனநோய் இருக்காம் மாமா. அதான் எனக்கு எதுமே தெரியலையாம். நீங்க என்னை தெரியாம கல்யாணம் பண்ணிட்டீங்களாம்” என்று விக்கி விக்கி அவள் கூற,

 “யாரு சனா இப்படிலாம் உனக்கு சொல்றாங்க?” என்று கேட்டான்.

“மாமா.. நான் சொன்னேன்ல? காலேஜ்ல ஒரு அக்கா என்னை பைத்தியம்னு சொன்னாங்கனு.. அவங்க தான் மாமா சொன்னாங்க.. அவங்கள உங்க பர்த்டே அன்னிக்கு ந..நம்ம வீட்டுல பார்த்தேன் மாமா. நான் பயந்து போய் யமு அத்தைய தேடி கிட்சன் பக்கம் போகப் பார்த்தேன். அதுக்குள்ள அவங்க என்னை தனியா இழுத்துட்டு போயிட்டாங்க”

“நி..நீங்க அர்ஷித் அண்ணாகூட பேசிட்டு இருந்தீங்க. என்னால கூப்பிடவும் முடியலை. அவங்க நிறையா மனநோய் பெயரெல்லாம் சொல்லி எனக்கு அதுல ஏதோ இருக்கு, அதான் நான் இப்படி இருக்கேன்னு சொன்னாங்க. உ..உங்களுக்கு நான் பொருத்தமே இல்லையாம் மாமா. உங்களை கல்யாணம் பண்ண நிறையா பெரிய பெரிய கம்பெனீஸ் தயாரா இருந்ததாம். ஆனா போயும் போயும் என்னை நீங்க கல்யாணம் பண்ணிட்டீங்களாம்” என்றவள் அவன் சட்டையை பற்றிக் கொண்டு அவன் முகம் பார்த்து,

“என்னை கல்யாணம் பண்ணதுல உங்களுக்கு எந்த பயனுமே இல்லையாம் மாமா. அவங்கள போல யாரையும் பண்ணிருந்தா தொழில்ல இன்னும் பெரிய இடம் கிடைச்சிருக்கும், அழகான மனைவினு சொல்லிக்கும்படி இருக்கும், உங்க ஸ்டேடஸ் இங்கிரீஸ் ஆகும். ஆனா நான்.. நான் வெறும் ஜீரோவாம். அழகு, பகுத்தறிவு, படிப்பு, பணவசதினு எல்லாமே என்கிட்ட கம்பியாம்” என்று கண்ணீர் வடிக்க, கேட்டுக் கொண்டிருந்தவனுக்குத்தான் தாடை இறுகியது.

“நீங்க என்னை சீக்கிரமே விட்டுட்டு போயிடுவீங்களாம் மாமா. நா..நான் வெறும் யூஸ் அன்ட் த்ரோவாம்” என்று அவனை கட்டிக் கொண்டவள், 

“அப்படிலாம் விட்டுட்டு போகாதீங்க மாமா. நா.. நான் உங்களை விட மாட்டேன்” என்று அழ, 

அவளை தன் மார்பில் புதைத்துக் கொண்டவன், “ஏ கோழிக்குஞ்சு..” என்றான்.

“இன்னும் நிறையா சொன்னாங்க மாமா.. எனக்கு எதும் தெரியலை அது இதுனு.. ஒ..ஒரு மனைவியா கணவன் தேவையைக் கூட தீர்த்து வைக்க முடியாத உனக்கு எதுக்கு கல்யாணம்னு கேட்டாங்க. எ..எனக்கு அவங்க கேட்டதே புரியலை. என்ன புரியலையா? உனக்கு எங்கருந்து புரியும். உடனே போய் மாமா, அஜுனு யாருகிட்டயும் போய் அழத்தானே செய்வனு சொன்னாங்க” என்று அவள் கண்ணீரோடு ஏறிட்டு, 

“அதான் மாமா யாருகிட்டயுமே கேக்க தோன்றலை.. எனக்கு என்ன பண்ணனே தெரியலை. மிந்தாநேத்து நைட் தான் அவங்க சொன்னதுபோல மனநோய் இருக்கானு கூகுள் பண்ணி பார்த்தேன். அது நிறையா சொல்லிச்சு‌. பயந்து போய் தான் ஹாஸ்பிடல் போனேன்” என்று கூறினாள்.

“சாரி மாமா.. உங்கள கஷ்டபடுத்தணும்னு நான் நிஜமா நினைக்கலை” என்று அவள் கூற, 

“டேய் சனா..” என்று அவள் முகம் தாங்கியவன், “அப்படிலாம் இல்லைடா” என்று அவளுக்கு விளக்க முடியாத பாவனையுடன் கூறினான்.

பாவை திருதிரு விழிகளுடன் கலங்கியிருக்க, சில நிமிடங்கள் மௌனமே அவ்வறையை ஆட்சி செய்தது.

அவள் கண்ணீரை துடைத்து தன் முகம் பார்க்கச் செய்தவன்,

 “சனா.. உனக்கு என்னென்னமோ தெரியலைனு சொன்ன தானே? அது உண்மை தான். உனக்கு இந்த வயதிற்கான பக்குவங்கள் சிலது தெரியலை. ஆனா அதுக்காக அது மனநோய் இல்லை சனா. உனக்கு எதையும் சரியா சொல்லி கொடுத்து வளர்க்கலை. அறியாமைக்கும், அறிந்து கொள்ள முடியாமைக்கும் வித்தியாசம் இருக்குடி. 

உனக்கு இருப்பது அறியாமை. நீயே யோசி சனா. உனக்கு மனநோய் இருந்திருந்தா அன்னிக்கு என்கிட்ட வந்து எனக்கு இந்த கோர்ஸ் பிடிச்சிருக்கு நான் படிக்கணும்னு கேட்பியா? நான் படிக்கவா? அஜு நீயும் வரியானு தானே எப்பவும் சொல்லுவ? ஆனா அப்ப நீ உன்னோட இஷ்டத்தை தான் வெளிப்படுத்தின. சுயமா யோசிச்சு முடிவெடுத்த. அதெல்லாம் எப்படி வந்தது? நாங்க நீ சுயமா யோசிக்கணும் சிந்திக்கனும்னு அறிவுறுத்தினதால தானே அப்படி யோசிச்சு முடிவெடுத்த? மனநோய் இருந்திருந்தா நீ அப்படி பகுத்தறிவோட சிந்திச்சிருப்பியா?” என்று கேட்டு அவளைப் பார்த்தான்.

'முழுதாய் பேசி முடி பிறகு நான் தெளிவடைகிறேன்' எனும்படி அவள் நோக்க, அவள் தலையை பரிவாய் கோதியவன், 

“உனக்கு எதுவும் சொல்லிக்கொடுத்து வளர்க்கலை. அதனால எதுவும் தெரியலை. அவ்வளவு தான். பத்தொன்பது வருட பழக்கம், நான் இப்ப வந்து புதுசா மாத்துனு சொன்னா உடனே மாறிடாது சனா. மாறனும்னு நீ நினைக்கும் தருணம் உன் மனசு இரண்டுக்கு இடைப்பட்ட குழப்பத்துல தான் இருக்கும். நமக்கு தெரிஞ்சது சரியா இல்ல புதுசா கத்துகிட்டது சரியானு குழப்பமா தான் இருக்கும். உன்கிட்ட வந்து பேசினவங்க அந்த குழப்பத்தை தான் பயன்படுத்தி உன்னை எமோஷனலா அடேக் பண்ணிருக்காங்க” என்று கூறினான்‌.

“அ..அப்ப?” என்று அவள் கேள்வியாய் இழுக்க, 

“உனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது சனா. நீ நினைக்குற போல பயப்படுற போல உனக்கு எந்த டிஸாடர்ஸும் இல்லை. ரொம்ப சின்ன விஷயத்தை வச்சு உன்னை ட்ரிகர் பண்ணி ஸ்டிரெஸ் பண்ணிருக்காங்க. நீ எங்க யார்கிட்டையும் கேட்டுட கூடாதுனு தான் வேணும்னே நீ எங்க கிட்ட தான் வந்து கேட்பனு உன்னை குழப்பிருக்காங்க” என்றான்.

சில நிமிடங்கள் அவள் கண்கள் யோசனையாய் அலைபாய, அவள் யோசிப்பதற்காக நேரம் கொடுத்து காத்திருந்தான். 

“மாமா.. அப்ப மனைவியா நான் செய்ய வேண்டிய கடமைனு அவங்க சொன்னது?” என்று அவள் கேட்க, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் அவள் கன்னத்தை செல்லமாய் தட்டி கொடுத்தான்.

“சனா.. காதல் அப்படிங்குறது வார்த்தையில் விளக்க முடியுமான ஒரு பொருளோ செயலோ கிடையாது. அது உணர்வு.. உடலில் சுரக்கும் ஹார்மோனால் ஏற்படும் உணர்வுகள் சம்மந்தப்பட்டது. பெண்களுக்கு ஆக்ஸிடோஸின் அப்படிங்குற ஹார்மோனும், ஆண்களுக்கு டோபமைன், வாஸோப்ரிஸின் அப்படிங்குற ஹார்மோனும் தான் காதலை உணர வைக்கக் கூடிய ஹார்மோன்ஸ். நம்ம உடலில் கோபம், சிரிப்பு, சந்தோஷம், வலினு எல்லா உணர்வுகளையும் உணர, அனுபவிக்க ஹார்மோன்ஸ் தான் உதவுது. 

அப்படி தான் இந்த காதலும்.. காதல் ஒரு உணர்வு சனா.. அதை உணர்ந்தா மட்டும் தான் தெரிஞ்சுக்க முடியும். கணவனுக்கு மனைவி கிட்டயும் மனைவிக்கு கணவன் கிட்டயும் தேவையான அடிப்படை தேவை இந்த காதலும் நம்பிக்கையும் தான். எனக்கு ஒன்னே ஒன்னு சொல்லு. நான் உன்னை யூஸ் அன்ட் த்ரோவா பயன்படுத்துவேன்னு உனக்கு தோனுதா?” என்று கேட்டான்.

மீண்டும் அவள் முகத்தில் யோசனை ரேகைகள் அலைபாய, “தெரியலை மாமா.. ஆனா பயமா இருக்கு. என்..என்னால உங்களை விட்டுட்டு போக முடியாதுனு மட்டும் புரியுது. நி..நீங்க கோச்சுகிட்டாலோ, விட்டுட்டு போனாலோ.. என்..என்னால.. அ.அதை சொல்ல தெரியலை மாமா. ஆனா வருத்தமா இருக்கும்” என்று தடுமாற்றமாய் கூறினாள்.

“ஏன் நான் இல்லாம உன்னால வாழ முடியாதா சனா? நான் கூட இருக்கனும்னு உனக்கு என்ன அவசியம் இருக்கு?” என்று அவன் வினவ, 

கண்களில் கோர்த்த மெல்லிய நீர் படலம் அவள் கன்னத்தில் உருண்டோடியது. 

“தெரில மாமா.. எனக்கு நீங்க இருக்கணும். வேற எதும் தெரில” என்று அவள் கூற,

 “அந்த உணர்வை புரிஞ்சுக்கோ சனா. அது சொல்லும் காதல்னா என்னனு. யாரோ பிஸ்னஸ்ல உள்ளவர்களோட வீட்டு பொண்ண நான் கல்யாணம் பண்ணா இன்னும் பெரிய இடம் போவேன்னுலாம் சொன்னதா சொன்னியே. அப்படி தொழிலுக்காக கல்யாணம் செய்ய கல்யாணம் ஒன்னும் பிஸ்னஸ் கிடையாது சனா. வாழ்க்கை முழுக்க உனக்கு நான் எனக்கு நீன்னு உயிர்ப்போட வாழப் போற வாழ்வு அது. அது பணம், சொத்து அழகுனு இப்படியான தேவைகள் பார்த்து வராது” என்றான்.

அவன் கூறிய வார்த்தைகளை உள்வாங்கியவள், “அ..அப்ப விட்டுட்டு போக மாட்டீங்கல்ல மாமா” என்று வினவ,

 “விட்டுடுவேன்னு நினைக்குறியாடி கோழிக்குஞ்சு?” என்றான். 

அவனையே இரு நிமிடங்கள் அமைதியாய் பார்த்தவள், இறுக அணைத்துக் கொண்டு, “மாட்டீங்க..” என்று கூறினாள்.

“அவ்வளவு தான் சனா.. நான் உனக்கு திரும்பத் திரும்ப சொல்லும் ஒரே விஷயம் யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாத. அது நானாவே இருந்தாலும். அதை பத்தி யோசி. அது சரியா தவறானு ஆலோசி. எதையும் கண்மூடித்தனமா நம்பினா இப்ப வந்த பிரச்சினை போல நிறையா வரும். உனக்கு நேத்து ஏன் செஸ்ட் பெயின் வந்தது தெரியுமா?” என்று கேட்டு அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், 

“உனக்கு பிபி அதிகமா இருக்கு சனா. அதனால வந்த பெயின் தான் அது” என்றான்.

“அச்சுச்சோ..” என்று அவள் பதற, 

“நீ உன் மனசுலயே எல்லாத்தையும் குப்பை போல சேர்த்து உன் உடம்பை இந்த அளவு கெடுத்து வச்சுருக்க சனா. மனசையும் புத்தியையும் ரிலாக்ஸ்டா இருக்கவிடு. எதையும் குழப்பிக்காம என்கிட்ட மனசு விட்டு பேசு. நேற்று அந்த டாக்டரும் அதை தான் சொன்னாங்க. முதல்ல அவங்க உனக்கு கௌன்ஸலிங் குடுக்கணும்னாலும் நீ அதுக்கு மனதளவு தயாரா இருக்கனும்னு தான் என்னை பேச சொன்னாங்க. உனக்கு எதுவுமில்லைனும் நீ போல்டானவனும் முதல்ல நீ நம்பணும் சனா. அப்ப தான் அது மத்தவங்களுக்கு பிரதிபலிக்கும். அவ்வளவு தான் நான் சொல்லுவேன்” என்றான்.

அமைதியாய் அவனை அணைத்துக் கொண்டபடி அவள் மடியில் தவழ்ந்தவள் தலையை மென்மையாய் கோதி கன்னத்தில் இச்சிட்டவன், “வலிக்குதாடா இப்ப?” என்று வினவ, 

அவனை சங்கோஜமாய் ஒரு பார்வை பார்த்தாள். ஆதரவாய் கண்கள் மூடி திறந்தவன் மீண்டும் வினவ, 

“இப்ப எதும் வலிக்கலை மாமா” என்றாள். 

“ம்ம்.. காலேஜ்கு லீவ் சொல்லிடுறேன்.. ரெஸ்ட் எடு” என்று அவன் கூற,

 இரு நிமிடங்கள் அமைதி காத்தவள், “எனக்கு ஒன்னுமில்லை மாமா இப்ப. நான் போறேன்” என்றாள்.

“ஆர் யூ ஷ்யேர்?” என்று அவன் வினவ, 

“எஸ்..” என்றாள். 

“சரி லேட்டாகுது சீக்கிரம் ரெடியாகிட்டு வா நானே கொண்டு போய் விடுறேன்” என்றான்.

சரியென சென்று தயாயாகி வந்தவளை ஆடவன் கீழே கூட்டி வர, அனைவரும் உணவு மேஜையில் கூடினர். அனைவருக்கும் உணவு பரிமாறிய பின்பு அஞ்சனாவுக்கு மட்டும் வேறு உணவு பரிமாறப்பட்டது.

மதுவுடன் பேசும் சுவாரசியத்தில் அவள் அதை கவனியாதிருக்க, அவள் அந்த உப்பில்லா உணவை சுவைத்த பின்பு கொடுக்கப்போகும் முகபாவத்தைக் காண வெளிப்படையான ஆர்வத்துடன் காத்திருந்தான் யஷ்வந்த்.

மகனின் முகத்தையும் அதில் புதிதாய் தெரிந்த உணர்வுகளையும் கண்ட யமுனா, அவன் பார்வையின் இருப்பிடம் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். பேசியபடி உணவை எடுத்து வாயில் வைத்தவள் முகம் சுருக்கி தன் தட்டை நோக்க, முகம் அஷ்டகோணலாய் பிரதிபலித்தது.

மெதுவாக அதே முக பாவத்துடன் தலை நிமிர்ந்தவள், “உப்பே இல்ல” என்று கூற, யஷ்வந்த் வாய்விட்டு வெடித்து சிரித்தான். 

அஞ்சனாவின் பாவத்தில் அங்குள்ளோர் வந்த சிரிப்பை மறந்து யஷ்வந்தின் இந்த வெடி சிரிப்பை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

கண்களில் நீர் வருமளவு சிரித்தவன் தன்னை புரியாத கோபத்துடன் பார்க்கும் மணையாட்டியைக் கண்டு, “சா..சாரி சனா.. மு..முடியலைடி” என்றபடி எழுந்து வேக வேகமாக தங்கள் அறைக்கு சென்றான்.

அவனால் அந்த சிரிப்பை துளியும் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. 'கியூட்டு.. ஆனா சிரிப்புதான்டி உன்னோட.. நல்லா வாய்க்கு ருசியா ரிசிச்சு சாப்பிட்டதுக்கே ஆப்பு வச்சுட்டாங்க அந்த டாக்டர் கடைசில’ என்று சிரித்துக் கொண்டிவனுக்கு அப்போதும், அவள் உணவை ரசித்து உண்ணும் காட்சியோடு ‘ச்ச பாவம்..’ என்ற நினைப்பும் வந்தது.

கீழே ‘பே’ என விழித்துக் கொண்டிருந்தோர் நடப்புக்கு வந்து ‘பெப்பெப்பே’ என விழித்துக் கொண்டிருக்கும் அஞ்சனாவைப் பார்த்தனர்.

“அண்ணி..” என்று மது உலுக்க, அதிர்வோடு நினைவுக்கு வந்தவள், 

“சாப்பாட்டுல உப்பில்லை” என்று கூற, அவள் தலையில் வலிக்காமல் குட்டிய யமுனா, 

“பிபி இருந்தா உப்பு கிடையாது. ஒழுங்கா உடம்பை சரி பண்ணு உப்பு போட்டதெல்லாம் சாப்பிடலாம். ஒரு ரெண்டு மூனு மாசம் இது தான் உனக்கு” என்று கூறினார்.

“என்னதூ? ரெண்டு மூனு மாசமா? அத்தை.. இது அநியாயம்” என்று அவள் கூற, 

“உன்னை யாரு இப்படி உடம்பை கெடுத்துக்க சொன்னது? இந்த வயசுல இப்படி பீபீ ஏறுற அளவு உனக்கு என்னடி? ஆங்..?” என்று புருவம் உயர்த்தி மிரட்டும் தோரணையில் கேட்டார்.

அவரை பாவை பாவமாகப் பார்க்க, லேசாய் சிரித்தவர், “அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுடா. கொஞ்ச நாளுக்கு தான். ஓகே ஆயிட்டா பழையபடி சாப்பிடலாம். உப்பு குறைச்சு தான் போட்டிருக்கு..” என்று கூற, சிணுங்கலாய் அந்த தட்டைப் பார்த்தாள். இரவும் உண்ணாதது சேர்த்து வயிறு கிள்ளியெடுத்தது.

அதற்காகவேணும் உண்ண வேண்டி கண்கள் கலங்க கலங்க அந்த உணவை அள்ளி திணித்துக் கொண்டாள். அனைவரும் அவளை பாவமாய் பார்க்க, ஒருவழியாய் உண்டு முடித்தவள், சோகமாய் மாமியரைப் பார்த்தாள். 

“குட்.. ஜுஸ் குடிச்சுட்டு போ” என்று அவர் கூற, தாமரை பழச்சாற்றை கொடுத்தார்.

நல்லவேளை அதில் உப்பு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.. சுவை நன்றாகவே இருந்தது.. அதனால் அதை குடித்து முடித்து அவள் கைகழுவி வர, கீழே வந்த யஷ்வந்த்,

 “ம்மா.. அஞ்சனாவை விடப்போகணும். நான் ஆஃபிஸ் போய் சாப்பிட்டுக்குறேன்” என்று அன்னையிடம் கூறியவன், “சனா வா” என்றுவிட்டு சென்றான்.

வண்டியில் அவள் ஏறியதும் அவளுக்கான மருந்தினைக் கொடுத்து போட வைத்தவன் வண்டியைக் கிளப்ப, அவனை முறைத்து பார்த்தவள், 

“ஏன் மாமா அப்படி சிரிச்சீங்க?” என்று கேட்டாள்.

அதில் மீண்டும் சிரிப்பு வரப்பெற்றவன், “ஏ சனா.. உன் ரியாக்ஷன் பார்த்து என்னால கண்ட்ரோல் பண்ண முடியலைடி” என்று சிரித்தபடி கூற, 

“நல்லாவே இல்லை மாமா. இப்படியா சாப்பிடணும்?” என்று ஆற்றாமையாய் கேட்டாள்.

“சில் பேபி.. கொஞ்ச நாள்தான். எல்லாம் ஓகே ஆயிட்டா பழையபடி சாப்பிடலாம்” என்று ஸ்டியரிங்கை லாவகமாய் திருப்பியபடி கூறினான்.

ஆனாலும் அவள் முகம் உம்மென்று தான் இருக்க, கல்லூரியை வந்தடைந்தவன், இறங்க எத்தனித்தவள் கரம் பற்றி தன்புறம் இழுத்தான்‌.

தான் அமர்ந்திருந்த இருக்கையின் நுனிவரை இழுபட்டு வந்தவள் அவளவனை கண்டு திருதிருக்க, “காலைலயே எல்லாம் சொல்லிட்டேன் சனா‌. தெளிவா யோசி” என்று கூறினான்.

கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்தன அவளுக்கு. யோசனையாய் அலைபாந்த விழிகள் அவன் விழிகளில் நிலைகுற்றி நிற்க, மெல்ல தலையசைத்தாள்.

ஆடவன் அவள் கரம் விட்டு ‘போ’ என்று சைகை செய்ய, கதவு புறம் திரும்பியவள் சட்டென மீண்டும் திரும்பி அவனை இறுக கட்டிக் கொண்டு எழுந்து சென்றாள்.


Leave a comment


Comments


Related Post