இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-24(1) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 28-04-2024

Total Views: 31636

அத்தியாயம்-24(1)

அடுத்த நான்கு நாட்கள் அஞ்சனாவை யஷ்வந்த் தான் கல்லூரிக்கு அழைத்து சென்று வந்துக் கொண்டிருந்தான். அர்ஜூன் கை வலியில் கல்லூரிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, அன்று அஞ்சுவும் மீனாவும் சேர்ந்து அர்ஜுனைப் பார்க்க வந்திருந்தனர்.

“டேய் அர்ஜூன்.. நண்பா” என்றபடி வந்து அவன் அருகே அமர்ந்த மீனா, 

“என்னடா ராசா.. கையு போச்சா?” என்று கேட்க,

 “அடியே மீனு..” என்று அவளைக் கழுத்தோடு இறுக்கியவன்,

 “ஆமா கை போச்சு. நீதான் என் உயிர்ர்ர் தோழியாச்சே. வா உன் கைய குடு எனக்கு” என்றான்.

இவர்கள் பேச்சில் சிரித்த அஞ்சனாவின் சத்தத்தில் வந்த அமுதா மகளைக் கண்டு புன்னகைக்க, அன்னையைப் பார்த்ததும் அவள் முகத்திலிருந்த புன்னகை துடைக்கப்பட்டது போல் ஆனது.

சட்டென எழுந்தவள் முகத்தில் இதுவரை யாரும் கண்டிடாத ஒரு கடுமை இருக்க, எழுந்து நின்றவளோ, 

“என் ரூம்ல ஒரு புக் எடுக்கணும். எடுத்துட்டு வரேன்டா” என்றுவிட்டு சென்றாள். 

அமுதா மகளின் செயல் புரியாமல் பார்த்துவிட்டு மீனாவைக் கண்டு வலுக்கட்டாயமாக புன்னகைத்து வரவேற்றுவிட்டு சென்றார்.

அன்னையையும் தங்கையையும் பார்த்து குழம்பிய அர்ஜுன், 

“மீனு.. அஞ்சு காலேஜ்ல எப்படி இருக்கா? அன்னிக்கு அவகூட சண்டை போட்டதுக்கு முன்ன இருந்த போலதான் இருக்காளா? என்னாச்சுனு எதும் கேட்டியா?” என்று வினவ, 

“டேய்.. டேய்.. ஒன்னு ஒன்னா கேளுடா. அவ இப்ப ஓகே ஆயிட்டானு நினைக்குறேன். பழையபடி நல்லா சிரிச்சு ஹாப்பியா தான் இருக்கா. ஆனா அடிக்கடி ரொம்ப யோசனையா இருக்காடா. எதையோ யோசிச்சுட்டே இருக்கா போல. என்னனு கேட்டா பளிச்சுனு சிரிச்சுட்டு ஒன்னுமில்லைனு சொல்லிடுறாடா” என்றாள்.

யோசனையான முகபாவத்துடன், “அவ கொஞ்சம் மாறிட்டானு நினைச்சு சந்தோஷமா இருந்தேன் மீனு. சும்மா அஜு அஜுனு இல்லாம அவளா யோசிச்சு முடிவெடுக்கனும்னு பக்குவத்துக்கு வந்தா. ஆனா திடீர்னு ரெண்டு வாரம் பேய் பிடிச்சவ மாதிரி இருந்தா. அவர் கூட எதுவும் சண்டையோனு நினைச்சேன். கேட்டா அப்படிலாம் இல்லைனு சொன்னா. ஆனா ரொம்ப டிப்ரெஸ்டா தெரிஞ்சா. இப்ப இவ கண்ணுல பாக்குற ஸ்மைல் ரொம்ப நாள் கழிச்சு பார்த்த போல இருக்குடா” என்று அர்ஜுன் கூற, 

“ம்ம்.. அர்ஜுன்.. அஞ்சனா கொஞ்சம் அவளோட கூட்டிலிருந்து வெளிய வர முயற்சிக்குறாடா. அதுகூட அவளோட குழப்பத்துக்கு காரணமா இருக்கலாம். பாவம்டா அவ. என்னதான் நீ அவளுக்கு அம்மாவ நம்பாத அம்மா பேச்ச கேட்காதனு சொல்லிட்டே இருந்தாலும் இதே இடத்துலயே இருந்துட்டு இதே சூழல் குள்ள அவளால மாற முயற்சிக்க முடியாதுடா அர்ஜுன். 

என்னை கேட்டா அவளுக்கு கல்யாணம் ஆனது நல்லதுனு தான் சொல்வேன். இந்த சூழலை விட்டு வேறு இடம், பக்குவப்பட்ட மனிதர்கள்னு அவளோட இப்போதையே சூழலே அவளுக்கு நல்ல பகுத்தறிவை கொடுக்குது. அதுல அவளும் மாற முயற்சிக்குறா. இருந்தாலும் இத்தனை வருஷம் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இந்த புது மாற்றத்துக்கு நடுவில் அவளுக்கு குழப்பம் இருக்கும் தானே? அதனால கூட இருக்கலாம்” என்று ஒரு பெண்ணாக தோழியின் நிலையை யோசித்து பேசினாள், மீனா.

“அதுவும் சரிதான் மீனு” என்று அவன் ஒரு பெருமூச்சுவிட, 

“சரிடா நண்பா.. ரொம்ப யோசிக்காத. உன் கைய கவனிச்சுக்கோ” என்றவள் 
“தொட்டா வலிக்குமாடா?” என்று கேட்க, 

“ஏ.. கைய வச்ச கொன்னுபுடுவேன்” என்றான்.

அதில் பாவை வாய்விட்டு சிரிக்க, சற்றே பதற்றமான முகத்துடன் நீண்ட எட்டுக்கள் வைத்து உள்ளே நுழைந்தான், யஷ்வந்த் கிருஷ்ணா. உள்ளே நுழைந்தவனைக் கண்ட தோழர்கள் இருவரும் புரியாமல் எழ, அவர்களுடன் அஞ்சனா இல்லாதது அவனுக்கு இன்னும் மனதில் பதற்றத்தைக் கொடுத்தது. 

அர்ஜுனை நெருங்கியவன் தன் முக பாவங்களை மூடி மறைத்துக் கொண்டு, “சனா?” என்க, அர்ஜுன் மீனாவைப் பார்த்தான்.

 “அவ ரூம்ல தான் இருக்கா அண்ணா” என்று மீனா கூற, சிறு தலையசைப்புடன் சென்றான்.

“ஏ மீனு சொல்லிட்டு வரலையா?” என்று அர்ஜுன் கேட்க, 

“டேய் அவ சொல்லிருப்பானு நினைச்சேன்டா” என்று கூறினாள். 

“பாவம் பதறிட்டாரு போல மீனு” என்று அர்ஜுன் பதற்றமாய் கூற, 

“பாருடா.. என்னடா அதிசயமா உங்க மாமாக்கு பாவமெல்லாம் பாக்குற?” என்று மீனா கேட்டு சிரிக்கவும் தோழியை முறைத்து வைத்தான்.

அங்கு பூட்டப்படாத அவளது அறைக்கதவை திறந்து கொண்டு அவன் உள்ளே நுழைய, தனக்கு வேண்டிய புத்தகங்கள் சிலதை எடுத்து வைத்துவிட்டு தங்கள் அறையின் புகைப்படங்களை பார்த்து மெய் மறந்து நின்றுகொண்டிருந்த அஞ்சனா பதறித் திரும்பினாள்.

கண்கள் லேசாய் சிவக்க, பதற்றத்துடன் வந்தவனைக் கண்டு, “மாமா..” என்று அவள் வர, கதவை படாரென சாற்றியவன், 

“அறிவில்லையாடி உனக்கு” என்று கர்ஜித்தான்.

அதில் பதறி நின்ற இடம் அகலாது சிலையானவள் மருண்டு விழிக்க, “ஃபோன் எங்க?” என்றான். 

மெல்ல திக்கி திணறி நடப்புக்கு மீண்டவள் தன் பையில் அலைபேசியை தேட, அது அதன் உயிர்ப்பை விட்ட நிலையில் உள்ளே கிடந்தது.

“ஸ்..ஸ்விட்ச் ஆஃப் மாமா” என்று அவள் மொழிய,

 “ஒரு வார்த்தை சொல்லிட்டு வரமாட்டியா? பைத்தியகாரன் மாதிரி நின்னுட்டு இருந்தேன்’’ என்று கத்தினான்.

“மா.. மாமா.. நான் தெரியாம” என்று அவள் தடுமாற, அவள் விழிகளிலிருந்து மலுக் மலுக்கென நீர் வடிந்தது. கடினப்பட்டு அதை துடைத்துக் கொண்டவள், சில நிமிடங்கள் விம்மலை தன் தொண்டைக்குள்ளேயே வைத்து அழுத்த முயற்சித்தாள்.

ஆடவனும் கண்களை மூடி தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் இருக்க, 

“மாமா.. மீனு அர்ஜுன பார்க்க போறேன் வரியானு கேட்டா. நானும் அவனைப் பார்க்க போகவே இல்லையேனு தான் உடனே கிளம்பிட்டேன். உ..உங்க கிட்ட சொல்லனும்னு மறந்துட்டேன். சாரி மாமா” என்று தன் பக்க விளக்கத்தை கூறி முடித்தாள்.

அதில் சட்டென கண்கள் திறந்தவன், “உன்னை போக வேணாம்னு என்னிக்காவது சொல்லிருக்கேனா? என்கிட்ட சொல்லிருக்கலாம்லனு தான சொல்றேன்” என்று கூற, 

அவனை இறுக அணைத்துக் கொண்டவள், “தப்பு தான் சாரீ..” என்றாள்.

அவள் கண்களில் கண்ணீர் கோடாய் வழிந்து அவள் பயத்தை பிரதிபலித்த போதும் திடமாய் அவனுக்கு பதில் கூற முயற்சித்தாள். 

'சும்மா எல்லாத்துக்கும் பயந்து அழாத சனா. எதுவா இருந்தாலும் பேசி பழகு. தப்புனு அதை ஏத்துக்கிட்டு அதுக்கு மன்னிப்பு கேட்டா எதிர்ல இருக்குறவங்க புரிஞ்சு நடந்துப்பாங்க’ என்று என்றோ அவன் கூறிய வரிகள் தான் இன்று இவளை இவ்வாறு நடந்துகொள்ள வைத்தது.

அவள் பேசியதை கிரகித்து ஏற்று, தானும் அவளைத் தழுவிக் கொண்டவன்,

“உன்னை காணாம செத்தே போயிட்டேன்டி..” என்று கூற, 

“சாரி மாமா” என்று மேலும் இறுக்கிக் கொண்டாள்.

அவனிடம் மெல்ல பெருமூச்சு வெளியாக, மனம் சில நிமிடங்களுக்கு முன்பு வந்த குறுஞ்செய்தியை நினைத்து பதறித் துடித்தது.

அஞ்சனாவை கூட்டிவர கல்லூரிக்கு சற்றே தாமதமாய் சென்றவன் அவளைத் தேட, அவன் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்ததாய் ஒலி எழுந்தது. அதை எடுத்துப் பார்த்தவன், 

‘என்னடா? உன் பொண்டாட்டிய காணுமோ? நல்லா தேடு.. சீக்கிரம் உனக்கு கிடைக்க முடியாத இடத்துக்கு அனுப்பி வைப்பேன்’ என்ற தகவலைக் கண்டு ஒருநொடி பதறித்தான் போனான்.

செய்தியை இரண்டு மூன்று முறை படித்தவனுக்கு முதல் கட்ட அதிர்ச்சி விலகி, அதில் ஒரு நம்பிக்கையில்லா தன்மை உண்டானது. அஞ்சனாவுக்கு இரண்டு முறை அழைத்தவன் வண்டியை அவள் வீட்டை நோக்கி செழுத்தினான்.

வீட்டிற்கு வருவதற்குள் அவள் அலைபேசி எங்குள்ளது என்பதை அறிய காவல் துறையில் தனக்கு தெரிந்தவரைத் தொடர்பு கொண்டு கூறியவன் அதற்குள் அவள் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் உள்மனம் கூறியதுபோல் அது பொய்யான செய்தி என்று புரியவரவே தான் அவனுக்கு மூச்சே வந்தது.

“மாமா சாரி” என்று அவனிலிருந்து பிரிந்து அவன் முகம் நோக்க அவள் முயற்சிக்க, அதற்கு கூட விடாதவனாய் அவளை அணைத்துக் கொண்டவன் அவள் கழுத்தில் தன் முகம் புதைத்து, 

“இனி தயவுசெஞ்சு மறக்காத சனா..” என்றான், படபடத்த நிலையில்.

அவனது இதழ் உரசலிலும், உஷ்ண பெருமூச்சின் தாக்கத்திலும் மேனி ரோமங்கள் சிலிர்க்கப் பெற்றவள், “மா.. மாமா” என்க, அவனிடம் பதில் மொழி இல்லை.

உடல் சிலிர்க்க, நாணத்தில் படபடத்த அவள் உள்ளும் பொருளும் கொடுத்த மோன நிலையில் கண்கள் மூடி தவிப்பாய் நின்றவள் மீண்டும் “மாமா” என்று காற்றாகிப் போன குரலில் அழைக்க, அவளை விடுவித்து நிமிர்ந்தான்.

வரும்போது இருந்த கடுகடுப்பு சுத்தமாய் துடைக்கப்பட்ட நிலையில் அவன் முகத்தில் கனிவு தோன்றியிருக்க, சற்று முன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த அவள் கண்களும் அந்த சுவடை துறந்து நாணத்தை கசிந்து கொண்டிருந்தது.

“ச.. சாரி மாமா” என்று அவள் மீண்டும் தன் மன்னிப்பை தடுமாற்றமாய் நிலம் பார்த்தபடி கூற, 

“இட்ஸ் ஓகேடா” என்றவன்,

 “அவனை பார்க்க வந்தேன்னு இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்றபடி அவ்வறையை நோட்டம் விட்டான்.


Leave a comment


Comments


Related Post