இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-24(2) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 28-04-2024

Total Views: 31641

அத்தியாயம் -24(2)


அவன் கண்களில் தாமாய் ஒரு ஆச்சரியம் வந்து குடிகொண்டது. அவள் வீட்டு முன்னறையோடே வந்து சென்றிருந்தவன் தற்போது தான் அவள் அறைக்கு வருகின்றான்.

அதுவும் அது அவளுக்கு மட்டுமல்ல, அவள் உடன் பிறத்தவனுக்குமான அறை. அஞ்சனா மற்றும் அர்ஜுன் இருவரும் ஒரே அறையை அல்லவா பங்கிட்டு பயன்படுத்தினர்.

இரண்டு கட்டில், இரண்டு கப்போர்ட், இரண்டு குளியலறை என்று அனைத்தும் இரண்டிரண்டாய் இருந்தது.

அறையின் சுவரெங்கும் அவர்கள் புகைப்படங்கள் தான்.. சிறு வயது முதல் தற்போது வரை, ஏன் அவர்கள் திருமணத்தின் போது அவர்கள் வளைத்து வளைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பும் மென்தகடாய் தொங்கிக் கொண்டிருந்தது.

அதில் அவனவள் பத்து மாத குழந்தையாய் உருண்டு திரண்ட கொலு கொலு உடலுடன் குப்புற படுத்துக் கொண்டு அர்ஜுனுக்கு தட்டிக் கொடுப்பதைப் போன்ற ஒரு புகைப்படம் அவன் கண்ணில் பட, அவன் இதழ்கள் மிக மிக அழகாய் தன் உவகையை சிந்தியது.

“ஏ சனா.. இது நீயாடி?” என்றபடி அந்த புகைப்படத்தை நெருங்கியவன் கைகள் அதிலிருக்கும் அவள் பிம்பத்தை வருட, 

“ஆமாம் மாமா.. அஜுக்கு தட்டி குடுத்து தூங்க வைப்பேனாம் நான்” என்று கூறிச் சிரித்தாள்.

கைகளில் சதை கோர்த்து வெட்டு விழுமளவு புசுபுசுவென இருந்த அவள் தோற்றம் காணவே, அள்ளிக் கொஞ்சத் தோன்றுமளவு இருந்தது. அதைக் கண்டவனுள், அவளைப் போன்றே, அவளை அச்சில் வார்த்து இதே போல் புசுபுசுவென ஒரு பெண் குழந்தை பிறந்தால் எப்படி இருக்குமென்ற ஆசை தோன்றியது.

அவள் தோளை சுற்றி கரம் போட்டு அணைத்தவன், “எனக்கு உன்னை போலவே கொலுக்கு மொலுக்குனு பாப்பா வேணும்டி சனா..” என்று ஆசையாய் கூற, 

“நாம சாமிகிட்ட கேட்போம் மாமா. சாமி குடுக்கும்” என்றாள்.

அவளை ஸ்லோ மோஷனில் பார்த்தவன், “என்னது?” என்க, 

“ஆமா மாமா.. அம்மா சொல்லிருக்காங்க. சாமிகிட்ட வேண்டிகிட்டா சாமி குழைந்தைய குடுப்பாங்கனு” என்றாளே பார்க்கலாம்.

சட்டென அவள் தோளிலிருந்து கரம் எடுத்தவன், “தப்புதான்டி.. தப்புதான்.. உன்கிட்ட ரொமேன்டிகா பேசினேன்ல? அது என் தப்பு தான்” என்க, 

“ஏன் மாமா?” என்றாள்.

“நைன்டீஸ் கிட்ஸாச்சும் முத்தம் குடுத்தா புள்ளை வரும்னு சொன்னோம்டி.. ஆனா நீ பக்கா மோசம்டி. சாமி தூக்கி போட்டு நாம புடிக்க புள்ளைய வச்சு த்ரோ பாலா விளையாட போறோம்?” என்று அவன் கூற,

 “அப்றம் எப்படி கிடைக்கும்?” என்றாள்.

“ம்ம்.. அமேசான்ல ஆர்டர் பண்ணினா கொண்டு வந்து டெலிவரி பண்ணுவான்” என்று அவன் கூற, 

அவனை முறைத்தவள், “என்னை பார்த்து எப்படி தெரியுது மாமா? குழந்தைலாம் அமேசான்ல கிடைக்காது. அம்மாகிட்ட இருந்து தான் பாப்பா உருவாகும்” என்றாள்.

“ஆமா.. ரொம்ப தெளிவு தான்டி நீ” என்றவன்,

 “அம்மா மட்டுமில்ல சனா.. குழந்தை உருவாக முழு ரெஸ்பான்ஸிபிலிடி அப்பா கிட்டயும் இருக்கு” என்று கூறினான். 

கூறியவன் குரலில் மோகமோ காமமோ இல்லை.. தன் குழந்தையை தந்தையாய் ஏந்தி பாதுகாக்கும் ஒரு அழகிய கண்காணா பந்தமே விரவியிருந்தது.

“என்னவோ மாமா” என்று அவள் தோள் குலுக்க, வலிக்காது அவள் தலையில் குட்டி சிரித்தவன், சுற்றிலும் மற்றோரு பகுதி முழுதும் வரைபட மென்தகடுகள் இருப்பதைக் கண்டான். கண்டதும் அவன் விழிகள் விரிந்து கொண்டு, ‘வாவ்’ என முனுமுனுக்க, 

“நல்லா இருக்கா மாமா?” என்றாள்.

“நீயா சனா வரைஞ்ச?” என்று அவன் வினவ, 

“இல்ல மாமா.. அஜு.. எனக்கு உருவ படம் வரைய அவ்வளவு அக்யூரேட்டா வராது மாமா. சீனரீஸ் தான் வரைவேன். அஜு செம்மயா வரைவான்” என்றாள். 

“ரொம்ப அழகா இருக்கு சனா. அவனுக்கு நல்ல டேலென்ட் இருக்கு” என்று யஷ்வந்த் கூற, “ம்ம்” என்றாள். 

சில நிமிடங்களில் இருவரும் வெளியே வர, வடையும் தேநீரும் மேஜையில் இருக்க அதை உண்டபடி அர்ஜுனும் மீனாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் இருவரும் வந்து அமர, நிமிர்ந்து மீனா புன்னகைத்து,

 “ஏ இந்தா அஞ்சுமா..” என்று தட்டை நீட்டினாள். 

“ஐ..” என்றபடி அஞ்சனா வடையை எடுக்கப்போக, “சனா நோ..” என்ற யஷ்வந்தின் கண்டிப்பான குரல் வந்தது.

அதில் சட்டென தனது உணவு முறை நினைவுவர, தன்னவனைப் பாவமாய் பார்த்தவள், 

“மாமா ஒன்னே ஒன்னு?” என்று கெஞ்சளாய் கேட்க, 

“நோ சனா..” என்றான்.

அர்ஜுனும்‌ மீனாவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொள்ள,

 “எனக்கு வேணாம் மீனு” என்றாள். 

“ஏன் அஞ்சு? டயட்டா?” என்று மீனா கேட்க,

 “உப்பு சாப்பிடக் கூடாது மீனு” என்றாள்.

“ஏன் பாப்பா?” என்று அர்ஜுன் வினவ, சொல்ல வெகுவாக தயங்கி தன்னவனைப் பார்த்தாள். அவன் பார்வையில் இருந்த கண்டிப்பே அவனுக்கு இதில் எத்தனை அதிருப்தி என்பதை பாவைக்கு உணர்த்தியது.

மெல்ல தலை குனிந்து, “எ..எனக்கு பிபி அதிகமா இருக்கு மீனு. உப்பு சாப்பிடக் கூடாது” என்று கூற, 

அர்ஜுன் தன் நிலை மறந்து அதிர்ச்சியில் சட்டென எழுந்து அருகே மீனுவின் மீது தன் கரத்தை இடித்துக் கொண்டான்.

“ஸ்ஸ்..” என்று அவன் ஒலி எழுப்ப, அவனுக்கு அருகே உள்ள நீள்விருக்கையில் அமர்ந்திருந்த யஷ்வந்த் “ஏய்..” என்று அவனது மற்றைய கரம் பற்றி அமர்த்தினான்.

நன்றி கூறவெல்லாம் மறந்தவனாய், “என்ன அஞ்சு சொல்ற?” என்று அவன் கேட்க, பெண்ணவள் பயத்துடன் சிரம் தாழ்த்தி அமர்ந்தாள்.

உள்ளிருந்து வந்த அமுதா, அர்ஜுனின் பதற்ற க் குரலில், “என்னாச்சுடா?” என்றுவிட்டு அப்போதே தனது மாப்பிள்ளையைக் கண்டார்.

 “மாப்ள.. வாங்க வாங்க.. எப்ப வந்தீங்க?” என்று அவர் உபசரிக்க, சிறு தலையசைப்புடன்,

 “இப்பதான்” என்று முடித்துக் கொண்டான்.

“அஞ்சு சொல்லு..” என்று அர்ஜுன் அதட்ட, மெல்ல மேலும் கீழுமாய் தலையாட்டினாள்.

 “என்னாச்சு அர்ஜுன்?” என்று அமுதா புரியாமல் வினவ, 

“உங்க பொண்ணுக்கு ஸ்ட்ரெஸ் அதிகாமாயி பிபி ஏறிபோச்சாம்” என்று அஞ்சனாவைப் பார்த்தபடி பல்லைக் கடித்தான்.

“என்னது பிபியா? ஏ அஞ்சு.. என்னடி சொல்றான் இவன்? உனக்கென்ன இந்த வயசுல பிபிலாம்?” என்று அமுதா பதற, அவள் முகம் இறுகி போனது.

“ஸ்ட்ரெஸ் ஆகுறளவு உனக்கென்ன கவலை இருக்கு? எதுக்கு இப்படி உடம்ப கெடுத்துட்டு பாவம் மாப்பிள்ளையையும் வருத்துற?” என்று அமுதா வினவ, அதற்குமேல் பொறுக்காதவளாய், 

“நான் யாரையும் படுத்தலை” என்று கத்தினாள்.

யஷ்வந்த் உட்பட அனைவரும் அஞ்சனாவை அதிர்ந்து நோக்க, 

“நான் யாரையும் படுத்தலை.. சும்மா உனக்கென்ன உனக்கென்னனு கேட்காதீங்க” என்று கத்தினாள். 

“இதென்ன அஞ்சு புதுசா குரலுயர்த்துற?” என்று அமுதா கண்டிப்புடன் வினவ, 

“ஆமா.. கத்துவேன்.. இதை நான் எப்பவோ செஞ்சிருந்தா நல்லா இருந்திருப்பேன் போல.. யாருக்கும் பாரமா இல்லாம, பைத்தியக்காரியா இல்லாம இருந்திருப்பேன்..” என்று கத்துகையில் அவள் கண்கள் சிவந்து அனலோடு சேர்ந்து கண்ணீரையும் கக்கியது.

“சனா..” என்று யஷ்வந்த் அவள் தோள் தோட, 

“நான் உங்களை படுத்துறேனா மாமா? சொல்லுங்க நான் படுத்துறேனா?” என்று அவனிடமும் கத்தினாள்.

“சனா காம் டௌன்..” என்று அவன் கனிவாய், பனிவாய் உரைக்க, 

“வலிக்குது மாமா.. சிரிச்சுட்டே தான் இருந்தேன்… அதுக்காக எனக்கு எந்த ஃபீலிங்சுமே இல்லைனு முடிவு பண்ணிடுவாங்களா? இந்த வயசுல உனக்கென்ன கவலை உனக்கென்ன கவலைனா என்ன அர்த்தம்?” என்று கதறலாய் இயம்பினாள்.

அமுதா மகளின் ஆவேசத்தை ஆதிர்வோடு நோக்க, அர்ஜுன் கண்கள் கலங்கி வருத்தத்தோடு பார்த்தான். 

அப்போதே வீட்டிற்குள் வந்த ஆதித்ரன் மற்றும் மால்யதா அஞ்சனாவின் சத்தத்தில் அதிர்ச்சியாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வர,

 “எனக்கு இந்த வயசுல இப்படி பிபி அதிகமா இருக்குறது தப்புனா, அதுக்கு காரணமே நீங்க தான்” என்று அன்னையைப் பார்த்து கூறினாள்.

“சனா..” என்று யஷ்வந்த் அவளை தடுக்க முயற்சிக்க, அவளோ பாதி வெடித்த அணையாய் முழுதும் வெடித்துத் தீர்க்காது ஓயமாட்டேன் என்றிருந்தாள்.

“எதுகேட்டாலும் அஜு.. எல்லாத்துக்கும் அஜு.. ஒன்னு வேணுமா அஜுவ கேட்டுக்கோ, எங்கயாவது போகணுமா அஜுவ கூட்டிக்கோனு எல்லாத்துக்கும் அவனை சார்ந்தே என்னை வாழ வச்சுட்டீங்கள்ல? எதையும் தெரிஞ்சுக்க கூடாது, எங்கேயும் போகக்கூடாது, அதிகமா பேசக்கூடாது பிடிச்ச மாதிரி நடந்துக்கக் கூடாது.. ஏன் கல்யாணம் நடக்க இருந்தப்ப என்னை சிரிக்கக் கூட கூடாதுனு தானே சொன்னீங்க?

முதல்ல நிறையா புரியலை ம்மா.. சிலரோட கேலி பேச்சுக்களுக்கான அர்த்தம் புரியலை.. இப்ப யோசிச்சா தான் புரியுது. நான் இப்படி ஒன்னும் தெரியாத மக்கா இருந்ததை தான் அவங்க ஜாடை பேசிருக்காங்கனு புரியுது. பணம், காசு, சொத்துனு நிறையா இருந்து என்ன பயன்? இந்த வீடு எனக்கு குடுக்க வேண்டிய அடிப்படை சுதந்திரத்தை குடுக்கலையேனு புரியுது. என்னோட அடிப்படை குழந்தைப் பருவத்தையே இழந்துட்டு இன்னும் சின்ன பிள்ளை போல இருந்துருக்கேன்னு புரியுது. 

எதை யார்கிட்ட கேட்கணும், எப்படி நடந்துக்கணும்னு ஒன்னுமே புரியாம அதை யோசிச்சு, நிஜமாவே நான் பைத்தியம் தானோனு நினைச்சு நினைச்சு தான் இப்படி ஆயிட்டேன்.. போதுமா?” என்று கத்திவிட்டு முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு வெடித்து அழுதாள். 

“எல்லாமே உங்களால தான் ம்மா.. எல்லாத்துக்குமே நீங்க தான் காரணம்.. அஜு அப்பவே சொன்னான்.. நான் தான் உங்களை பைத்தியகாரி போல நம்பிட்டு நீங்க சொல்றதையெல்லாம் கேட்டுட்டு இருந்துருக்கேன். நான் பைத்தியம் தான்.. நான் பைத்தியம் தான்” என்று அவள் கதறியழ, அவளை தோளோடு அணைத்துக் கொண்ட யஷ்வந்த் மெல்ல அவள் முதுகை வருடி தட்டிக் கொடுத்தான்.

அவனை கழுத்தோடு அணைத்துக் கொண்டவள், “நான் உங்களுக்கு தொல்லையாம் மாமா.. கடைசில எங்க அம்மாவும் அப்படி தான் சொல்றாங்க பாருங்க..” என்று ஏமாற்றமான குரலில் கதற, 

“அப்படிலாம் இல்லடா சனா..” என்றான்.

“முடியல மாமா..” என்றவள் அவன் மார்பில் முகம் புதைக்க, அர்ஜுன் தங்கையவள் நிலையை தாங்க முடியாது கண்ணீர் சிந்தியபடி விறுவிறுவென தங்கள் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

அமுதா இன்னமும் அதிர்ச்சி விலகாதவராய் அதிர்ந்து நிற்க, ஆதித்ரன் சூழலை தன் கையில் எடுத்தவனாய் தங்கையை நெருங்கினான்.

ஆதித்ரனைக் கண்டு யஷ்வந்த் நகர, தங்கையவளைத் தன் தோள் தாங்கியவன், “டேய்.. அஞ்சனா..” என்று அவள் தந்தை அழைப்பதைப் போல் அழைத்தான்.

“அண்ணா..” என்று அவனிடமும் ஒரு மூச்சு அவள் அழுது தீர்க்க, அவளுக்கு தட்டிக் கொடுத்தவன்,

 “பாப்பா.. புரியுதுடா.. அழாதனு சொல்ல அண்ணாவால முடியலை.. ஆனா உடம்பை கெடுத்துக்காதடா” என்று கூறினான். 

நாத்தனாரின் மறுபுறம் வந்தமர்ந்த மால்யதா, “அஞ்சுமா..” என்க, 

“அண்ணி..” என்றாள். 

“வேணாம்டா.. போதும்.. ரொம்ப அழுதுட்ட. இனி நீ ஹாப்பியா இருக்கணும். கிளம்பி போய் ரெஸ்ட் எடு. அழாதடா” என்று மால்யதா கூற, அவளை அணைத்துக் கொண்டு “ம்ம்” என்றாள்.

இருவரும் கலங்கிய விழிகளுடன் யஷ்வந்தை ஏறிட, மனைவியை தன்னிடம் அடைக்கலம் புகச் செய்வதவனாய், ஆதித்ரனிடம் தலையசைத்துவிட்டு விடைபெற்றான்.

வாசல் வரை சென்றவன் அர்ஜுன் அஞ்சனாவின் அறையைப் பார்க்க, அவ்வறையிலிருந்து குறைந்த ஓசையில் ஒரு ஓலம் எழுந்தது.

கண்களை அழுந்த மூடித் திறந்தவனாய் தன்னவளைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுச் சென்றான்.


Leave a comment


Comments


Related Post