இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--11 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 28-04-2024

Total Views: 28811

இதயம் 11


     “அங்கிள் உங்களுக்கு நிலான்னு யாரையும் தெரியுமா?“ தோழியின் தந்தையிடம் விசாரித்தாள் மினி. “நிலாவா எந்த நிலா“ என சில நொடிகள் யோசித்தவர் நினைவு வந்தவராகத் தொடர்ந்தார்.

 

     “அட நம்ம சாணக்கியனோட காதலியா? எனக்கு அந்தப் பொண்ணைப் பத்தி அதிகம் தெரியாது மா. செஸ் வீட்டைக் கட்டி முடித்ததில் இருந்து அந்தத் தம்பி தனியாகத் தான் இருக்காரு. அப்பப்ப அவரோட அப்பா அரசன் வந்து போவார்.


     அவரோட தான் எங்களுக்கு கொஞ்சம் பழக்கம். இங்க வந்து ஒரு வருஷத்துக்கு அப்புறம் தான் நிலாவுக்கும் சாணக்கியனுக்கும் நடுவில் இருக்கும் காதலைப் பத்தியே எங்களுக்குச் சொன்னார். அதுவும் சாணக்கியன் தம்பி யாரு என்னன்னு என் பொண்ணு சொன்னதை வைத்து நாங்க விசாரிக்கவும் தான் சொன்னார். 


     மாற்றான் தாய் சூழ்ச்சியால் அந்த ராமன் காட்டுக்குப் போனார். அதே மாதிரி இந்தத் தம்பி சாணக்கியன் கூட தான் பண்ணாத தப்புக்காகத் தான் இப்படி யாருக்கும் தெரியாம வனவாசம் இருக்கார்“ உண்மையான வருத்தத்துடன் சொன்னார். 


     “ஏன் அப்படி“ தடுமாற்றமாய் கேட்டாள் மினி. ஏனோ சாணக்கியனுக்கு ஒன்று என்னும் போதெல்லாம் அவள் உடலில் ஆரம்பித்து இதயம் வரை நடுங்கியது. 


     “எல்லாம் அந்தப் பொண்ணு நிலாவால் தான் மா“ என்க, மினிக்கு சதுரங்க இல்லத்தில் பார்த்த நிலாவின் புகைப்படம் நினைவுக்கு வந்தது. தன்னை விட அழகு என்று தோன்றவும் என்ன முயன்றும் முடியாமல் சின்னதாய் தாழ்வு மனப்பான்மை வந்தது மினிக்குள்.


     “அவங்களுக்குள்ள என்ன பிரச்சனை என்று தெரியாது. ஆனா அந்தப் பொண்ணு நம்ம சாணக்கியனை விட்டுப் போய் நாலு வருஷம் ஆச்சு“ வருத்தமாகச் சொன்னார். “ஓ என்னாச்சு ஏதாவது விபத்தா?“ என்க, “விபத்தா?“ ஆச்சர்யமாகக் கேட்டார் அவர்.

 

     “அந்தப் பொண்ணு இறந்துட்டாங்க தானே“ அவசரமாகக் கேட்டாள் மினி. “அட என்னம்மா நீ, காதல் தோல்வி என்றாலே யாராவது ஒருத்தர் செத்து தான் போகணுமா என்ன? அந்தப் பொண்ணு சாணக்கியன் மேல் சந்தேகப்பட்டு மொத்தமா கைவிட்டுப் போய் இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வேற எங்கேயோ போயிடுச்சு. வெளிநாடு போனதாக் கேள்விப்பட்டேன்“ என்க, இது மாபெரும் அதிர்ச்சி மினிக்கு.


     இறந்து போன காதலியின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நாள்தோறும் அந்தப் பெண்ணின் நினைவில் சாணக்கியன் தவிக்கிறான் என்பதே அவளுக்கு ஜீரணிக்க முடியாததாக இருக்க, இப்போது பார்த்தால் உயிரோடு உலகத்தின் ஏதோ ஒரு முனையில் இன்னொரு ஆண்மகனுடன் வாழும் ஒருத்தியை இன்னமும் நினைத்துக்கொண்டு இருக்கிறாரே இந்தப் பைத்தியக்கார மனிதர் என சாணக்கியனை மனதிற்குள் கடிந்து கொண்டாள்.


     “ஆமா நீ எதுக்கு அந்தப் பெண்ணைப் பத்தி கேட்கிற“ தேன்மொழியின் அம்மா மினியைச் சந்தேகமாகப் பார்க்க, “சும்மா தான் அம்மா“ என சமாளிக்கப் பார்த்தாள்.

 

     ஆனால் நாலும் தெரிந்த அந்த மனிதிக்கு அவளுக்குள் இருக்கும் தடுமாற்றம் புரிந்தது. ஏதோ சரியில்லை என்பதைப் புரிந்து கொண்டவர் மினியைப் பற்றி தன் மகளிடமும் அவள் அக்கா மற்றும் அத்தானிடம் பேச வேண்டியதை குறித்துக்கொண்டார்.


     மினி மருத்துவமனையில் இருந்து தேன்மொழியின் இல்லம் வந்தடைந்த பின்னர் முன்பைப் போல் முயல்குட்டியாக சுறுசுறுப்புடன் சுற்றிக்கொண்டிருக்காமல் சினைப்பசுவைப் போல் ஒரே இடத்தில் இருந்தாள். 


     இதே நேரத்தில் மினியிடம் தெரியும் மாற்றங்களைப் பற்றி ஜீவனுக்கு அழைத்துச் சொல்லி இருந்தார் தேன்மொழியின் தாய். ஜீவனுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை. உடனடியாக கிளம்பி வரப்போவதாக சொன்னவன் கிளம்ப முடியாத படி அவன் தேடி வந்த சித்தப்பா அன்றைய தினம் தான் இறந்து போனார்.


     அவருக்கான இறுதி காரியம் செய்து முடித்து கிளம்பலாம் என்று பார்க்கும் போது கனடாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டு அதன் காரணமாக விமானநிலையங்கள் ஒரு வார காலத்திற்கும் மேலாக இயங்காமல் இருந்தது. இப்படியாக இயற்கை அங்கே அவர்களைக் கட்டிப் போட, இங்கே மினியைக் கட்டிப்போட யாரும் இல்லையே.


     ஒன்று சேர வாய்ப்பே இல்லை என்று முடிவான பின்னும் கூட இன்னொருத்தியை மனது முழுவதும் சுமந்து கொண்டிருக்கும் மனிதர் நம் மேல் ஈடுபாடு காட்டுவது என்பது இயலாத காரியம். 


     தேன்மொழி கண்டிப்பாகத் தவறாகத் தான் புரிந்துகொண்டிருப்பாள். நான் அவரை வைத்த கண் எடுக்காமல் பார்க்கும் விதத்தை வைத்து அரசன் அங்கிள் தன்னிடம் அப்படிக் கோபமாகப் பேசி இருக்கக்கூடும், இல்லை சாணக்கியனே அவரின் அப்பாவிடம் பேசி என்னைத் திட்ட அனுப்பி இருக்க வேண்டும் என நடத்ந அனைத்தையும் ஓரளவு சரியாக யூகித்தாள்.

 

     இதில் புரியாத விஷயம் என்னவென்றால் சாத்தியமில்லாத ஒரு விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு தவிக்கும் மனிதரை அதில் இருந்து மீட்டெடுத்து இன்னொரு வாழ்க்கை அமைத்துக்கொடுக்கத் தான் எந்தப் பெற்றோரும் விரும்புவர். அப்படி இருக்க அரசன் அங்கிள் ஏன் என்னிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். 


     நான் அவர் மகனைக் காதலித்தால் அவருக்கு இலாபம் தானே. ஒருவேளை அவரும் தன் அப்பாவைப் போல் பணம், இனம், அ ந்தஸ்து எனப் பார்க்கும் ஆளா. அதனால் தான் நேரில் சந்தித்து என்னைக் கண்டித்தாரா?


     இத்தனை களேபரங்களுக்கு நடுவில் சாணக்கியன் மீது புதிதாக முளைத்திருக்கும் இனம்புரியாத இந்த உணர்வுகள் தனக்குத் தேவை தானா என யோசித்தவளின் புத்தி கெட்ட மனது அதோ இதோ என்று சாக்கு போக்கு தான் காட்டியதே தவிர ஒருமுறை கூட அவன் உனக்கு வேண்டாம் என்ற பதிலைக் கொடுக்கவில்லை. 


     தான் இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை, வயதோ இன்னும் இருபதைக் கூடத் தொடவில்லை. இந்த வயதில் பெரிய முடிவுகளை எடுக்கக்கூடாது என்பது தானே உளவியல் சொல்லும் உண்மை.


     தந்தை இன்னும் இனம், பிரிவு என்று பேசுபவர், அண்ணனும் அவருக்குக் குறையாதவன் தான். தாயும் கூட பெரிதாகக் காதல் திருமணத்தை ஆதரிப்பவர் கிடையாது. நமக்கும் கூட காதலிக்கும் வயது இல்லையே. எல்லாப் பக்கமும் அணை இருப்பதை எடுத்துக்காட்டி புத்தி அவளுக்கு நல்லது செய்யப் பார்க்க, இளமையின் வேகம் புத்தி வேண்டாம் என்று மறுக்க மறுக்க சாணக்கியன் வேண்டும் என்பதற்காக சாத்தியக்கூறுகளை அடுக்கியது.


     ஒரு காதலைத் தொலைத்தவர்கள் இன்னொரு காதலை அவ்வளவு சீக்கிரத்தில் தொலைக்க விரும்ப மாட்டார்கள். இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசத்தால் நாம் ஏதாவது தவறு செய்தால் கூட அவர் எடுத்துச் சொல்லி புரிய வைப்பதற்கான வாய்ப்பு அதிகம். 


     ஒருவேளை எதிர்காலத்தில் நாம் பிரியப்பட்டால் பிரியாவைப் போல் நாமும் சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டு அவரைக் கௌரவப்படுத்தலாம். இல்லை அவரை விட்ட இடத்தில் இருந்து துவங்க வைக்கலாம். பட்டுப்போன அவர் கனவை மீண்டும் துளிர்விட வைக்கலாம் வானவில்லின் வண்ணங்களைப் போல் தன் ஆசைகள் கனவுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தாள் அந்த புனிதவதி.


     வானவில்லுக்குப் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் மேகங்களின் வலி தெரியாத குழந்தைகள் அற்ப நேரம் மட்டுமே காட்சி தரும் வானவில்லின் வசந்தத்தை அனுபவித்து ஆராய்வார்கள்.

 

     மினியும் அப்படித்தான் அவள் காணும் கனவுகள் யாவும் நிறைவேற அவள் நிறைய சிரமங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.


     அடுத்த நாள் பிரியா சதுரங்க இல்லம் கிளம்பும் நேரம் வர போக வேண்டாம் என்று தான் அமைதியாக இருந்தாள் மினி. ஆனால் சாணக்கியனைப் பார்க்க வேண்டும் என புத்திகெட்ட அவள் மனம் பேயாய் பறக்க, இம்சை தாங்க முடியாமல் அதன் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு கிளம்பினாள். அவள் வருகையைப் பார்த்து சாணக்கியன் முகம் சுழிக்க, அரசன் கோபம் கொள்ள என மினியின் வரவேற்பு அந்த வீட்டில் அமோகமாக இருந்தது. 


     வேண்டாத விருந்தாளியாக அங்கே இருக்கப் பிடிக்காமல் தோட்டத்திற்கு வந்தவள் எப்போதும் தன் மனதிற்கு இதம் அளிக்கும் அந்தத் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.


     சதுரங்கக் காய்களின் வடிவத்தில் இருக்கும் அழகுச் செடிகளை சாணக்கியன் ஆசையாய் வருடுவதை அடிக்கடி தன் அறையில் இருந்து பார்த்த நினைவில் தானும் அதை வருடியவள் அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.


     சிப்பாய்கள், யானைகள், குதிரைகள், இரண்டு மந்திரிகள், ராஜா என இருந்த அந்த செடிகளில் ராணிக்கு இடம் இல்லாமல் இருந்தது. உடன் சந்தேகம் வந்தவளாக வேகமாக சதுரங்க இல்லத்தின் முன்னால் வந்து நின்று சுற்றிமுற்றி நோட்டம் இட சுற்றுச்சுவர்களில் பதியப்பட்டிருந்த சிப்பாய்கள், கேட்டில் இருந்த யானைகள், தூண்களில் இருந்த குதிரைகள், வீட்டினுள் இருக்கும் அந்தப் பெரிய கதவில் இருந்த மந்திரி அனைவரையும் பாதுகாக்க வீட்டின் மேல் நிழற்குடைக்குள் ராஜா இருந்தாலும் சின்ன இடத்தில் கூட ராணிக்கு இடம் இல்லை.


     சதுரங்க ஆட்டம் முடிந்ததும் காய்களை சாணக்கியன் தான் எடுத்து வைப்பான். அப்போது கூட ராணிகள் இரண்டையும் தனியாக எடுத்து வைப்பது நினைவு வந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அவள் கவனித்த பல ஆட்டங்களில் போட்டியின் ஆரம்பத்திலேயே அவன் தன் ராணியை பலி கொடுத்துவிடுவது நினைவு வந்தது. 


     ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காய் அதிபலமாக இருக்கும். ஜீவனுக்கு குதிரைகள், பிரியாவுக்கு யானைகள், தனக்கு மந்திரி இருப்பது போல் சாணக்கியனுக்கு ராணியைத் தவிர அனைத்து காய்களும் பலம் என்று தான் இத்தனை நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தாள் மினி. ஆனால் அவனுக்கு ராணி பலவீனத்தை உருவாக்குகிறது, அதனால் தான் அவன் வேண்டுமென்றே அதை இழக்கிறான் என்பது இப்போது புரிந்தது. பெண்களின் மீது இத்தனை வன்மமா என்று மலைத்தாள் பெண்.


      தன் எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மீண்டும் சதுரங்க இல்லத்திற்குள் சென்றாள் மினி. அங்கே பிரியா, சாணக்கியன் இருவரும் அப்போது தான் தங்களின் முதல் ஆட்டத்தை முடித்திருக்க, இரண்டாம் ஆட்டம் துவங்கும் போது பிரியாவுக்குப் பதிலாக தான் ஆடப்போவதாகச் சொன்னாள் மினி.


     “அம்மாடி சதுரங்கம் நீ நினைக்கிற மாதிரி சாதாரணம் இல்லை“ எழில் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான். அவள் யார் என்பது தெரிந்த பிறகு அவனால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. எப்படியாவது அவளைத் தன் நண்பனின் கண்பார்வையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று துடியாய் துடித்துக்கொண்டிருந்தது அவன் மனம். 


     அதற்காக தேன்மொழியிடம் கூடப் பேசிப் பார்த்தான். “ஆமா உங்க நண்பர் விஸ்வாமித்திரர், என் மினி மேனகை அவரோட பலகாலத் தவத்தை இவ வந்து தான் முடித்து வைக்கப் போறாளாக்கும். 


     ஒரு ஆண் தன்னோட கொள்கையில் தீவிரமாக இருந்தால் மேனகை என்ன, யார் வந்தாலும் அவரை அதில் இருந்து பின்வாங்க வைக்க முடியாது. ஆண்கள் நீங்க சபல புத்திக்காரரா இருந்துட்டு பழியைத் தூக்கி பொண்ணுங்க மேல் போடாதீங்க“ என்பதோடு முடித்துக்கொண்டாள் அவள்.

  

     இப்படியான நேரத்தில் தான் சாணக்கியனுடன் விளையாடுகிறேன் என்று மினி வந்து இருந்தாள். அவளை இங்கிருந்து அனுப்ப இது தான் சரியான நேரம் என்று நினைத்த எழில், “நீ பெரிய வில்லேஜ் விஞ்ஞானியா இருந்துட்டு போ, உனக்கு உன் மேல் அவ்வளவு நம்பிக்கை இருந்தால் நாம வேண்டும் என்றால் இந்தப் போட்டிக்கு பெட் வைச்சுப்போமா“ என்றான். எந்தவிதப் பின்யோசனையும் இல்லாமல் சரி என ஒப்புக்கொண்டாள் அவள். அவளுக்கும் கூட இந்த நேரத்தில் இந்த யோசனை சரியாகவே பட்டது.


     சாணக்கியன் நண்பனை முறைக்க, அது எதற்கு என்று புரிந்ததால், “பணம் எல்லாம் வேண்டாம் மினி. நீ ஜெயிச்சா என்கிட்ட இருக்கும் எதை வேண்டுமானாலும் நீ கேட்கலாம். அதுவே என் நண்பன் ஜெயிச்சா நான் சொல்லும் ஒன்றை நீ செய்ய வேண்டும்“ எழில் தன் எதிர்பார்ப்பை சொல்ல பெரிதாக எதிர்ப்பு சொல்லாமல் ஒப்புக்கொண்டாள் மினி.


     மினியின் முகத்தில் என்றும் இல்லாத அளவு இருந்த தீவிரம் சாணக்கியனை யோசிக்க வைத்தது. அவள் ஏதோ ஒரு தீர்க்கமான முடிவில் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது. கூடுதலாக ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடக்கப் போவது போலவும் உள்ளுணர்வு சொல்ல, “இதெல்லாம் வேண்டாம் எழில். என் விளையாட்டை வைத்து பந்தயம் கட்டுவதை நான் விரும்பல. பந்தயங்கள் என்னைக்கும் அழிவை மட்டும் தான் உண்டாக்கும்“ என நண்பனை எச்சரித்தான்.


     “இந்த ஒரு முறை பந்தயம் வைப்பதால் அந்த தருமர் மாதிரி நீ ஒன்னும் வனவாசம் போகப் போறது இல்லை. உன்னோட நல்லதுக்காக தான் நான் பண்றேன். மூடிக்கிட்டு விளையாடி ஜெயிக்கிறதைப் பார்“ என்று முடித்தான் அவன்.


     “அட்லீஸ்ட் அவ ஜெயிச்சா அவளுக்கு என்ன வேண்டும் என்பதை இப்பவே சொல்லச் சொல்லு“ என்றான் சாணக்கியன். “உங்க விளையாட்டு மேல் உங்களுக்கு அபிரிவிதமான நம்பிக்கை இருக்கே. பிரியா கூட இத்தனை நாளில் எத்தனை முறை விளையாடி இருப்பீங்க அவளால் ஒருமுறை கூட உங்களை ஜெயிக்க முடியலையே. 


     நான் அவகூட விளையாடிய ஒவ்வொரு நேரமும் தோத்து தான் போய் இருக்கேன். எப்படிப் பார்த்தாலும் விளையாட்டில் உங்க கை தான் ஓங்கி இருக்கும். அப்புறம் என்ன?“ என்றவள் தன் போக்கில் காய்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.


     முதலும் கடைசியுமாக என்று ஒரு விஷயம் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. ஆசைப்பட்டு, ஆத்திரப்பட்டு எந்த உணர்வுக்குக் கட்டுப்பட்டாலும் அது உணவுச் சங்கிலி போல் தொடர்ந்து கொண்டே தான் வரும். 


     அது போல் தான் விளையாட்டில் வைக்கப்படும் பந்தயங்களும் என்று சாணக்கியனுக்கு நன்றாகவே புரிந்திருந்தாலும், எழில் தான் கொண்ட பிடியில் உறுதியாய் இருந்தான். நடக்கும் விஷயங்கள் யாவும் சாணக்கியனுக்கு சரியாகவே படவில்லை.


     அஸ்தினாபுரத்தில் நடந்த பந்தயத்தால் பஞ்சபாண்டவர்களின் வனவாசம் எழுதப்பட்டது என்றால் சதுரங்க இல்லத்தில் நடக்கும் பந்தயத்தால் சாணக்கியன் வாழ்ந்து கொண்டிருக்கும் வனவாசம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்று அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை.


Leave a comment


Comments


Related Post