இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 2 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 28-04-2024

Total Views: 17454

லாவண்யா அரவிந்தை அறைந்த விதத்தைக் கண்டு நிரஞ்சன் முதற்கொண்டு அனைவரும் திடுக்கிட்டு நின்றார்கள்.

ஜனனி மற்றும் லாவண்யா உடன் வந்த வாலிபன், 'இப்படிபட்ட மாப்பிள்ளையா தன் தங்கையின் கணவனாக தேர்ந்தெடுத்தோம்' என்று வெட்கி தலைகுனிந்து நின்றான். என்னதான் அவனது தந்தை பார்த்த மாப்பிள்ளையாக இருந்தாலும், அவர் தன்னிடம் கொடுத்த பொறுப்பை அவன் தட்டிக் கழித்ததுப் பெரும் குற்றம். மாப்பிள்ளையை பற்றி விசாரிக்க சொல்லியிருந்த தந்தையை சமாளிக்கும் நோக்கமாக, விசாரிக்கமலேயே தீர விசாரித்து விட்டதாக பொய்யுரைத்து தன் வழக்கம் போல நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டான்.

இதை பற்றி எதுவும் தெரியாத ஜனனி, தன் அண்ணனை தனக்கு உதவுமாறு கேட்டாள். "அண்ணா இப்பயாவது அப்பாகிட்ட என் கல்யாணத்தை யோசித்து முடிவு செய்ய சொல்லுங்க அண்ணா. நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லல... ஆனா இப்ப என் படிப்பு முடிஞ்சு ஒரு ரெண்டு வருஷமாவது வேலைக்கு போறேன்... நீங்க தான் அப்பாகிட்ட சொல்லி பார்க்கணும்" என்றாள். அவளின் அண்ணன் வெறுமனே தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

லாவண்யா, "டேய் அரவிந்த். மரியாதையா சொல்றேன்... இன்னொரு முறை ஜனனி இருக்கிற பக்கம் கூட நீ வரக் கூடாது. மீறி வந்தா, போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வெச்சிடுவேன். ஜாக்கிரதை" என்று மிரட்டினாள்.

அங்கே இருக்கும் சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எண்ணினான் அரவிந்த். "ஐயோ ஜனனி நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட. இந்த பொண்ணு ஊருக்கு புதுசு. ரூம் புக் பண்ண தெரியல. ஹெல்ப் பண்ண முடியுமானு கெஞ்சி கேட்டுச்சு. அதான் ஹெல்ப் பண்ணேன்" என்றான். 

"எப்படி? அரைகுறை ட்ரெஸ் போட்டுகிட்டா?" என்று நக்கல் கலந்த குரலில் வினவினாள் லாவண்யா. தன்னை குனிந்து பார்த்த அரவிந்தோ உறைந்துப் போனான். மேல் சட்டை இல்லாமல், அந்த காலத்து பட்டாபட்டிக்கு புது பெயராக விளங்கும் பாக்ஸர் உள்ளாடையை அணிந்தக் கொண்டு நின்றிருந்தான்.

அப்போது வரை அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணோ, அவன் போட்டப் பழியில், மற்றவர்களை தள்ளி விட்டு முண்டியடித்து அரவிந்த் முன் போய் நின்றாள். 

"நானா உன்னை கூப்பிட்டேன்.? நான் ஊருக்கு புதுசா? நீ தானே என்னை லவ் பண்றதா சொல்லி பின்னாடியே சுத்தின!? வா பழகலாம்னு கூட்டிட்டு வந்துட்டு, என் மேல பழி போட பார்க்கிற? ச்சே.. உன்னை போய் நம்பி வந்தேன் பாரு!... என்னை சொல்லணும்!!" என்றவள், அவனின் மற்றொரு கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். 

அதன் பிறகு அங்கிருந்து வெளியேறி நடந்தாள். அவ்வளவு நேரம் பார்வையாளராக நின்றிருந்த நிரஞ்சன், அந்த பெண் வெளியேறியதும், அவள் பின்னாடியே சென்றவன், ஹோட்டல் லாபியில் "ஹலோ மிஸ் இம்சை..." என்று அழைத்து நிறுத்தினான்.

யாரடா அது என்று திரும்பி பார்த்தவள், "நீயா?" என்று கேட்டு நிமிர்ந்தாள்.


"நீ இதே வேலையா தான் இருக்கியா? யார் வாழ்க்கையிலாவது  உனக்கு விளையாடிட்டு இருக்கணும் அப்படித்தானே?! எதுக்கு இப்படி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்கப் பார்க்கிற? உனக்கு தெரியும் தானே அவனுக்கு ஏற்கனவே நிச்சயம் ஆனது.? இவனை பற்றி தானே நீ அன்னிக்கு தியேட்டர்ல யார் கூடவோ பேசின?" என்று கேட்டான் நிரஞ்சன்.

"நான் யார்கிட்ட என்ன பேசினா உனக்கு என்ன மேன்? நீ மட்டும் என்ன? தியேட்டர் வந்தோமா, படம் பார்த்தோமானு இல்லாம, பொண்ணுங்களை சில்மிஷம் செய்தவன் தானே நீ? உன்னை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தேனே நீ எப்படி வெளியே வந்த? நீ ஜகஜால பிளேயர் போலயே?!" என்று அவளும் அவனை திட்டினாள்.

"ஹலோ நான் எந்த பொண்ணுகிட்டேயும் வம்பு வளர்க்கல. அதோட நான் பிளேயர் இல்ல. நான் நிரஞ்சன்... நிரஞ்சன் விஷ்வேஸ்வர்." என்றான் அவன்.

"க்கும்" என்று நக்கலாக பார்த்தவள் திரும்பி நடந்தாள்.

"இன்னொரு தடவை இந்த ஹோட்டல் பக்கம் வந்திராதே... வந்தா கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுவேன்" என்றான் நிரஞ்சன். அவன் குரலில் அதீத மிரட்டல் வெளிப்பட்டது. ஆனால் அதை கேட்டு அவனுக்கு பதிலடி கொடுக்க அப்பெண் அங்கே நிற்கவில்லை. அவள் எப்போதோ ஹோட்டலை விட்டு வெளியேறிச் சென்று விட்டாள்.

ஹோட்டல் அறையுள், அரவிந்த் லாவண்யாவின் முகத்துக்கு நேராக விரலை நீட்டி எச்சரித்தான். "நீ யாரு இதையெல்லாம் கேட்பதற்கு?"

"ஜனனி என்னோட ஃப்ரெண்ட். நான் என் பிரெண்டுக்காக எதுவானாலும் செய்வேன்!. ஒழுங்கா நிச்சயதார்த்தத்தில் ஜனனி குடும்பம் செய்த செலவுக்கான பணத்தை திருப்பிக் கொடுத்துட்டு, உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம போயிடனும். இல்ல நீ இப்படி அரைகுறையான ஆடையில் ஒரு பெண்ணோட இருந்த போட்டோவை ஜனனி அப்பா கைக்கு அனுப்பிடுவேன். ஜாக்கிரதை" என்று லாவண்யா மிரட்டினாள்.

அதை கேட்டதும், லாவண்யாவின் கையைப் பிடிக்க வந்த அரவிந்த், மேலும் அது இயலவில்லை என்றதும், அவளை நெருங்கி வேகமாக பின்னாடி தள்ளி விட்டான். அப்போது தான் உள்ளே வந்த நிரஞ்சன் பதறிப் போய் தங்கையை ஓடிப் போய் தாங்கினான்.

அதற்கு பிறகு காவலாளிகளை அழைத்து அரவிந்த்தை வெளியே அனுப்பினான். ஜனனியின் அண்ணனும் அங்கிருந்து வீட்டிற்கு கல்யாண விஷயத்தை பேச கிளம்பி விட, மீதமிருந்தது லாவண்யா, ஜனனி மற்றும் நிரஞ்சன்.

நிரஞ்சன், தன் தங்கையை முறைத்தான். "லாவண்யா... இதெல்லாம் என்ன வேலை.? உனக்கு எதாவது ஆகியிருந்தா என்ன செய்வது?"

"எனக்கு என்ன ஆகப் போகுது? ஆனா இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விடக் கூடாது!" என்றாள்.

"சாரி அண்ணா. என்னால் தான் பிரச்சனை. என்னை நினைச்சு தான் லாவண்யா இப்படி பண்ணிட்டா!. என்னால உங்களுக்கும்...."

"ஜனனி பிளீஸ்... நான் அரவிந்த் பத்தி பேசல... ஆனா லாவண்யா எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையா கையாள மாட்டியா? நீ தேவையில்லாம கோபப்பட்டு எடுத்ததும் அவனை எதுக்கு அடிச்ச? அதனாலே அவன் உன்னை எதாவது பண்ணியிருந்தா?"

"என்னை அவனால ஒன்னும் செய்ய முடியாது அண்ணா... யூ டோண்ட் வர்ரி" என்றவள், "ஓகே அண்ணா டைம் ஆகிடுச்சு... பை" என்று ஜனனியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

லாவண்யா, அவள் வந்த காரியத்தை செவ்வனே நிகழ்த்திவிட்டு கம்பி நீட்டி விட, நிரஞ்சன் சற்று நேரம் கடுவன் பூனை போல முகத்தை வைத்திருந்தான். அவனுக்கு அந்த பெண் மிஸ் இம்சை செய்த செயல்களே மனக்கண்ணில் தோன்றியது. பிறகு அவன் ஏற்கனவே கொடுத்திருந்த அப்பாயின்ட்மெண்டுகளை ஞாபகப்படுத்தும் விதமாக அவனது உதவியாளர் அவனிடம் கூறவும், முயன்று வேலையில் கவனத்தைப் பதித்தான்.

"சார். மணி பதினொன்று. மிஸ் கமலி ரங்கநாத் வந்திருக்காங்க. உள்ளே வர சொல்லட்டுமா" என்று சுந்தர் வினவினான்.

கமலி என்கிற பெயரைக் கேட்டதும், சட்டென நிமிர்ந்தான் நிரஞ்சன். அவனே தன் இருக்கையிலிருந்து எழ ந்துச் சென்று வரவேற்றான்.

"ஹாய் கமலி. எப்ப ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த?" 

"ஹாய் நிரு. நேத்து தான் வந்தேன். வந்ததும் உன்னை பார்க்க வந்துட்டேன். அப்புறம் எப்படி இருக்க?"


"ம்ம். எல்லாமே நல்லா தான் போயிட்டு இருக்கு. உன்னை பார்த்தே ரொம்ப நாளாச்சு. பிசினஸ் அறிவாளி ஆகிட்டப் போலயே"

"நானும் வளர்ந்தாகனுமே... கீயூட் பொண்ணு என்கிற பேரை மட்டும் வெச்சு என்ன செய்வது?"

"ம்ம். முகத்துல ஒரு தனி கலை தெரியுதே... எனி லவ்?" என்று அவன் இதழ் மலர்ந்து குறும்புடன் வினவ,

"லவ் அமையனும்னு தான் நானும் எதிர்பார்த்திட்டு இருக்கேன்... ஆனா நடக்குமா தெரியல"

"உன்னோட எதிர்பார்ப்பு என்ன கமலி? வர போறவன் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் ஏதாவது லிஸ்ட் வெச்சிருக்கியா?" என்று நிரஞ்சன் கேட்க,

"ஓ... இருக்கே... புத்திசாலியான, அன்பான, பொறுப்பான, நகைச்சுவை உணர்வோடு இருக்கணும். அழகா இருக்கணும். சமூக அந்தஸ்து இருக்கணும். எல்லாத்தையும் விட முக்கியமான ஒன்னு; எனக்கு புடிச்சவனா இருக்கணும்" என்றாள் கமலி.

"எனக்கென்னமோ நீ என்னை பத்தி சொல்ற மாதிரியே இருக்கே" என்றான்.

"தன்னம்பிக்கை இருக்கலாம் நிரு... அதீத நம்பிக்கை இருக்கக் கூடாது" என்றாள் சிரிப்புடன்.

"நிச்சயமா. நம்பிக்கை!! அதானே எல்லாம்" என்றான் அவனும்.

"ஆனா நான் எதிர்பார்க்கும் பையன் கிட்ட தன்னம்பிக்கையும் இருக்கணும். தலைகணம் இருக்கக் கூடாது." என்றாள் புன்னகையுடன். 

"ஓகே ஜோக்ஸ் அபார்ட். பிசினஸ் பேசலாமா?" என்று கமலி வினவ, அவனும் ஆமோதித்து தன் அலுவலகம் அழைத்துச் சென்றான். இருவரும் வியாபார சம்பந்தமாக பேச ஆரம்பித்தார்கள்.

லாவண்யா மற்றும் ஜனனி இருவரும் அன்று முழுவதும் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு, நேரே ஒரு பூங்காவிற்கு சென்றார்கள்.

அங்கே ஏற்கனவே அவர்களுக்காக காத்திருந்தாள் நிரஞ்சனால் மிஸ் இம்சை என்று அழைக்கப்பட்டவளும் அரவிந்துடன் அறையில் இருந்தவளுமான அபிராமி.

"ஹாய் சீனியர் வந்து ரொம்ப நேரமாச்சா? சாரி நாங்க என் அண்ணனை சமாளிச்சிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு."

"சீனியர் ரொம்ப தேங்க்ஸ். நீங்க மட்டும் ஹெல்ப் பண்ணலைன்னா, என் கல்யாணத்தை நிறுத்தி இருக்கவே முடியாது. எனக்கு கல்யாணம் நடந்திருந்தால் பிரச்சனை இல்ல. ஆனா அந்த அரவிந்த் கூட ஒரு லைஃப் என்னால யோசிச்சு கூட பார்க்க முடியல. பொண்ணுங்களை எப்படியெல்லாம் யூஸ் பண்ணாலம்னு தான் முழு நேரமும் யோசிப்பான்" என்றாள் ஜனனி.

"ஜனனி அது தான் இப்ப பிரச்சனை முடிஞ்சிருச்சே... இன்னமும் எதுக்கு அவனை பத்தி பேசிட்டு இருக்க?! அவனை பத்தி தெரிஞ்சு தான் உனக்கு ஹெல்ப் பண்ணேன் ஃப்ரீயா விடு. ஓகே. இனி கவலை இல்லாமல் உன் படிப்பை பாரு. உன்னோட அப்பா என்ன சொன்னாரு?"

"அவர் கல்யாணத்தையே நிறுத்திட்டாரு. அதுவும் அந்த அரவிந்தே வந்து அவனுக்கு வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்குன்னு சொன்னதும் அவர் வேற என்ன சொல்ல முடியும். அதையே சாக்கா வெச்சு நான் படிச்சு முடிச்சதும் வேலைக்கு போகனும் சொல்லி கொஞ்ச டைம் வாங்கிட்டேன். புண்பட்ட மனசுக்கு ஆறுதல் தேவைன்னா அதுக்கு கொஞ்சம் காலம் வேணும்னு சொல்லி சமாளிச்சிட்டேன்" என்றாள் ஜனனி.

"குட். சரி நான் கிளம்பறேன். எனக்கு கிளாஸ் இருக்கு."

"சீனியர் ஒரு நிமிஷம்" என்று நிறுத்திய ஜனனி, தன் பையிலிருந்து, "உங்களுக்கு கிஃப்ட் வாங்க தான் நினைச்சேன் ஆனா என்ன பிடிக்கும்னு தெரியாததுனால, உங்களுக்கு பிடிச்சதை வாங்கிக்கோங்க" என்று ஆயிரம் ரூபாயை நீட்டினாள் ஜனனி.

"ஜனனி நான் பணம் எதிர்பார்த்து இதை செய்யல. இந்த பணம் எனக்கு அவசியமுமில்லை. லாவண்யா எனக்கு பழக்கமானவள், கூடவே நாம எல்லாரும் ஒரே கல்லூரியை சேர்ந்தவங்க என்பதால் மட்டும் தான் ஹெல்ப் பண்ணேன். ஒருத்தருக்கு ஹெல்ப் பண்ணதில் எனக்கு திருப்தி கிடைச்சது. அவ்வளவுதான். உன்கிட்ட பணம் இருக்குன்னா அதை ஒரு நல்ல காரியத்துக்குப் பயன்படுத்து, யாருக்காவது தானம் பண்ணு. அதை விட்டுட்டு இப்படி ஹெல்ப் பண்றவங்களுக்கு எல்லாம் பணம் நீட்டி அசிங்கப்படுத்தாதே." என்று காட்டமாக கூறினாள் அபிராமி.

"ஜனனி இது உனக்கு தேவையா? சமயத்துல உன் புத்தி வேலையே செய்யாதே..." என்று லாவண்யாவின் பேச்சும் அவளை தடுத்து நிறுத்தியது.

அபிராமியின் மனநிலையை மாற்ற, "சீனியர்... இப்ப என்ன க்ளாஸ் போறீங்க? அரியர்ஸ் பாஸ் பண்ணவா டியூஷன் போறீங்க?" என்று கிண்டலாக வினவினாள் லாவண்யா.

அவள் கேட்டதில் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டு விரல் நீட்டி எச்சரித்தாள் அபிராமி. "அரியர்ஸ் எல்லாம் இல்ல. என்ஜினீயரிங் சிங்கிள் அட்டெம்ப்ட் தான். ஆனா இந்த என்ஜினீயரிங் சர்வீஸ் எக்சாம் தான் என் காலை வாரிட்டு இருக்கு. இப்ப ESE/IES (engineering services examination) டெஸ்டுக்காக தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஏற்கனவே ரெண்டு முறை அட்டெண்ட் பண்ணி ஃபெயில் ஆகிட்டேன். இது நான்காவது முயற்சி. எப்படியாவது பாஸ் பண்ணிடுவேன். அதுக்கு தான் பேராசிரியர் ஒருவரை மீட் பண்ண காலேஜ் வந்தப்ப, நீங்க ரெண்டு பேரும் பேசினது என் காதுல விழுந்துச்சு. அதோட அரவிந்த் எனக்கு சீனியர் அவன் எப்படிபட்டவன்னு எனக்கும் தெரியும். சோ ஹெல்ப் பண்ணேன்." என்றாள் அபிராமி.

"கணக்கு இடிக்குதே சீனியர். ரெண்டு முறை ஃபெயில் என்றால் இது மூன்றாவது தானே வரணும்?" ஜனனி கேட்கவும், 

"கரெக்ட். முதல் தடவை நான் எக்சாமுக்கே போகல." என்றாள் அபிராமி, "சரி டைம் ஆகிடுச்சு. பை அப்புறம் பார்க்கலாம்." என்று கிளம்பிவிட்டாள் அபிராமி.

ஒரு வாரம் கழித்து லீலாவதி வலியுறுத்தியது போலவே, நிரஞ்சனை அழைத்துக் கொண்டு கோயிலில் பிரார்த்திக்க சென்றார்.

"நிரஞ்சா, உனக்காக பிறந்தவ இந்த வருஷமாவது நம்ம கண்ணுல படனும்னு வேண்டிக்கோ. இருபது வருஷமாச்சு கவியரசன் குடும்பத்தோட தொடர்பு விட்டுப் போய்; இதுவரைக்கும் ஒரு தகவல் இல்ல. அவர் மட்டும் இல்லனா நீ எங்களுக்கு இருந்திருக்கவே மாட்ட. உன் அப்பாவோட உயிரையும் காப்பாத்தி கொடுத்தவர். அப்பேர்ப்பட்ட மனுஷன் இன்னிக்கு எங்க இருக்காரோ?! ஆண்டவன் தான் வழிக் காட்டணும். நல்லா வேண்டிக்கோ நிரஞ்சா..." என்ற பாட்டி லீலாவதி கண்களை மூடி கடவுள் முன் பிரார்த்தித்தார்.


Leave a comment


Comments


Related Post