இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--12 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 28-04-2024

Total Views: 27421

 இதயம் 12


     யுத்தத்தில் எதிராளியை வீழ்த்துவதற்கு பல யூகங்கள் வகுக்கப்படும். அதில் மிக எளிதான அதே சமயம் முக்கியமான ஒன்று தன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாத எதிராளிக்கு முன்னர், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று காட்டிக்கொண்டு எதிர்பாரா நேரம் அவன் அசரும் வண்ணம் தாக்குதலை நிகழ்த்துவது. 


     அதனைத் தான் மினி கையாண்டாள். சதுரங்கத்தில் அசத்தலாக காய் நகர்வு என்று ஒன்று இருந்தால் மோசமான நகர்வு என்றும் ஒன்று இருக்கும். அப்படியான நகர்வு தான் F3 எனப்படும் வெள்ளை மந்திரிக்கு நேராக இருக்கும் சிப்பாயின் ஒரு கட்ட நகர்வு.


     மினி அதைச் சாத்தியப்படுத்தும் போது சதுரங்கத்தில் அரைகுறை அறிவைப் பெற்றிருக்கும் எழில் சிரித்தான் என்றால் சாணக்கியனுக்கு இந்த நகர்த்தலைச் செயலாக்கும் அளவு மினி முட்டாள் இல்லை என்றே தோன்றியது. 


      முட்டாள் ஆட்டம் (Fool’s Mate) என்ற ஒரு வியூகம் உண்டு. அதற்கு நாம் பெரிதாக எதுவும் செய்யத் தேவையில்லை. எதிராளி தொடர்ச்சியாக இரண்டு மோசமான நகர்த்துதலை ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் சரியாக முதல் காயை F3 நகர்த்தி இருந்தாள் மினி. 


     அதற்குப் பதிலாகத் தன் முதல் நகர்த்துதலை ராஜாவுக்கு நேராக இருந்த சிப்பாயை E5 கட்டத்திற்கு நகர்த்தி ராணி நகர்வுக்கு வழியமைத்தான் சாணக்கியன்.


     அவனை ஒரு பார்வை பார்த்த மினி தன் கையை வலப்பக்க குதிரைக்கு நேராக இருக்கும் சிப்பாயை நோக்கிக் கொண்டு சென்றாள். அவள் மட்டும் அந்தச் சிப்பாயை G4 கட்டத்திற்கு நகர்த்திவிட்டால், சாணக்கியன் தன் ராணியை QH4 நகர்த்தி அவளின் ராஜாவை எந்தவித சிரமமும் இல்லாமல் கைப்பற்றிவிடலாம். ஆனால் சாணக்கியன் நினைத்தபடி மினி அந்த நகர்வைச் செயலாற்றவில்லை.


     தன்னுடைய  ராஜாவுக்கு நேராக இருக்கும் சிப்பாயை இரண்டு கட்டம் நகர்த்தி E4 நகர்த்தலை அவள் சாத்தியப்படுத்த, Scholar’s Mate முறையில் வெள்ளைக் கட்டங்களில் நகரும் மந்திரியை BC4 நகர்த்தி கூடுதலாக ராணியின் துணையோடு தன் ராஜாவைக் கைப்பற்றத் திட்டம் போடுகிறாள் என அவளின் அடுத்தகட்ட நடவடிக்கையை சுதாரித்த சாணக்கியன் அதற்கு ஏற்ப நகர்த்தலை சாத்தியப்படுத்தி அவளைத் தடுத்தான்.


     இவையெல்லாம் எளிதான வியூகங்கள் தான், இவற்றைத் தாண்டிய பல வியூகங்கள் கூட எனக்குத் தெரியும் என்று அடுத்தடுத்துக் காட்டினாள் மினி. சாணக்கியனும் சளைக்காமல் அவள் அமைக்கும் வியூகங்களை உடைத்து, தான் புதிதாக வேறு வியூகங்கள் அமைத்து அவளை இக்கட்டில் நிறுத்தி என தன் திறமையை சிறப்பாகக் காட்டிக் கொண்டிருந்தான்.


     நேரம் தான் போய்க்கொண்டு இருந்ததே தவிர, இருவரில் யாருடைய கை மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் தான் அடுத்தடுத்த காய் நகர்த்தல் அமைந்தது. இருவரின் வசமும் சில காய்கள் இழக்கப்பட்டது, சில முக்கிய காய்கள் மீதம் இருந்தது. 


     இருவரில் யாராவது ஒருவர் சின்னத் தவறு செய்தாலும் எதிராளி கண்டிப்பாக அதைப் பிடித்துக்கொண்டு வெற்றிக்கனியைப் பறித்துக்கொள்வார் என்னும் நிலை வர, கண்களை மூடித்திறந்து ஒரு நிலையான முடிவுக்கு வந்த மினி சரசரவென சாணக்கியனுடைய காய்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் துவங்கினாள். 


     அதுவரை வெற்றி பெற விளையாடியவள் இப்போது அவனின் காய்களைக் கைப்பற்றுவது தான் தன் முழுநேர வேலை என்பது போல் அதில் முனைப்பாக இருக்க சற்றே குழம்பினான் சாணக்கியன். 


     அக்மார்க் விளையாட்டு வீராங்கனையாக தந்திரமாக விளையாடிக் கொண்டிருந்த மினி, திடீரென முதன்முதலாக சதுரங்கம் கற்றுக்கொள்ளும் சிறுபிள்ளைகளைப் போல் எதிராளியின் தேவையே இல்லாத காய்கள் மீது அதீத ஆர்வத்தைக் காட்டுவது அவனை அதிகமாக யோசிக்க வைத்தது. 


     தேவையே இல்லாத காய்களைக் கூட பாய்ந்து பாய்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தவள் அவள் பார்வையில் படும்படியாக ஆபத்தில் இருந்த  சாணக்கியனின் கருப்பு ராணியை சிறிதும் கண்டுகொண்டாள் இல்லை. 


     அவன் ஒரு தந்திரத்தோடு ராணியைக் காவு கொடுக்கக் காத்திருந்தான் என்றால் அந்தத் தந்திரத்தைத் தெரிந்து கொண்டவளால் அவனை வெற்றி பெற வைக்க முடியுமா என்ன? 


     உன் திட்டத்தை நான் அறிவேன் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டவளாய் அவனுடைய ராணிக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்புக் கொடுத்துக்கொண்டே வந்தவள் கடைசி வரை அதைக் கைப்பற்றவில்லை.

 

     மற்ற காய்கள் இருக்கும் வரை பெரிதாக எதையும் எடுத்துக்கொள்ளாத சாணக்கியன் மினி அமைத்த பாதி பாதி வியூகங்களின் உதவியால் காய்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு ஒரு குதிரை, ஒரு யானை, மூன்று சிப்பாய்கள், ராஜா மற்றும் ராணியோடு இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக டென்ஷன் ஆக ஆரம்பித்தான். 


     மினி இவ்வளவு நேரமாக செய்து கொண்டிருந்த தந்திரத்தின் முடிவு இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிய வர தவித்து தான் போனான்.


     அவன் முகத்தை வைத்து அகத்தை அறிந்து கொண்டிருந்தவள் அவன் பதற்றமடைய ஆரம்பித்ததும் தன் ஆட்டத்தை ஆரம்பித்தாள். அதாவது தன் வெள்ளை ராணியைப் பயன்படுத்த ஆரம்பித்தாள். அந்த நிலை வரை அவள் தன் ராணியை ஒரு கட்டம் கூட முன்னும் பின்னும் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


     தன் வெள்ளை ராணியைக் கொண்டு சாணக்கியனின் கருப்பு ராஜாவை விடாமல் தொடர்ந்தாள் மினி. சாணக்கியனின் கரங்கள் நடுங்க ஆரம்பித்தது. தன் பலவீனம் வெளிப்படுவதை விட தோற்பது பரவாயில்லை என நினைத்தவன் தனக்கு செக்மேட் அமைக்க தானே வழி அமைத்துக் கொடுத்தான். 


     அதைத் துளியும் கண்டுகொண்டாள் இல்லை மினி. பிரியாவுக்கு கூட மினி என்ன செய்ய முயற்சிக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சாணக்கியனுக்குப் புரிந்தது. 


     எதிரே இருக்கும் சிறு பெண் தன் பலவீனத்தைக் கண்டுபிடித்துவிட்டாள். அது நிஜமா என்பதைப் பரிசோதித்து தன்னை வெளிப்படுத்தவே இந்த விளையாட்டு என்று அவன் புரிந்து கொண்ட நேரம் அவன் கருப்பு ராஜா, அவளுடைய வெள்ளை ராஜா என இரண்டு ராஜாக்களுக்கு நடுவில் தன் வெள்ளை ராணியை வைத்துவிட்டாள். அதுவரை பல சிரமங்களுக்கு நடுவில் சாணக்கியன் கட்டிக்காத்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, ஆத்திரம் அதன் எல்லையைக் கடந்ததால் சதுரங்கப் பலகையைத் தூக்கி அடித்தான்.


      காய்கள் வீடு முழுக்க சிதறியது. வெளிப்படையாக உதறும் உடம்பு, கரங்களால் காதுகளை மூடிக்கொண்டு அங்கும் இங்கும் தலையை ஆட்டியதால் கலைந்து போன தலை, சிவந்த கண்கள், அதீத அழுத்தத்தால் கசங்கிய சட்டை, தூக்கிப் போடும் உடல் என மகனை இதற்கு முன்னர் பார்த்தே இராத நிலையில் பார்த்த அரசன் அவன் பக்கம் போகப் பார்க்க, “வேண்டாம் அங்கிள்“ தான் அமர்ந்திருந்த நிலையில் மாற்றம் இல்லாமல் அப்படியே இருந்தபடி சொன்னாள் மினி.


     “உயிர் மேல், உன் எதிர்காலம் மேல் ஆசை இருந்தால் இனி என்னைக்கும் என் கண்ணில் பட்டுத்தொலைச்சிடாதே. முதலில் போ இங்க இருந்து“ மினியைப் பார்த்து சாணக்கியன் போட்ட சத்தத்தில் சதுரங்க இல்லமே நடுங்கியது என்று சொல்லலாம்.


     மினியைத் திட்டிவிட்டு அவன் தன்னறைக்குள் புகுந்து கொள்ள, இங்கே இருந்த அனைவரும் மினியைத் தான் பார்த்தனர். “பிரியா நீ வீட்டுக்குப் போ நான் கொஞ்ச நேரத்தில் வரேன்“ தோழியின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள் மினி.


    “அவர் என்னோட குரு, அவருக்கு என்ன ஆச்சு என்பதை நானும் தெரிஞ்சுக்கணும்“ கேட்காத கேள்விக்கும் சேர்த்து பதில் சொன்னாள் பிரியா.


     “இது நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரோட நெருங்கிய உறவுகள் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டியது. அவருக்கு உதவி தேவை. அதை இவங்க இரண்டு பேர் தான் செய்ய முடியும்“ என்க, எழிலுக்கு கூட ஒருமாதிரி இருந்தது.


     “நீ போ பிரியா, நாங்க பார்த்துக்கிறோம்“ என்று அவன் தான் அவளை அனுப்பி வைத்தான். பிரியா வாசலைத் தாண்டும் வரை சிரமப்பட்டு பொறுமை காத்த அரசன், “என்னாச்சு என் பையனுக்கு“ வேகவேகமாகக் கேட்டார்.


      “இந்தக் கேள்வியை நான் தான் உங்ககிட்ட கேட்கணும். என்னாச்சு உங்க பையனோட வாழ்க்கையில். எதுக்காக பொண்ணுங்களைப் பார்த்து அவர் பயப்படுறார்“ புரிந்து கொள்ள முடியாத குழப்பத்துடன் கேட்டாள்.


     “பயமா, பயம் எல்லாம் இல்லை. அவனுக்குப் பொண்ணுங்களைப் பிடிக்காது. அதுக்குக் காரணம்“ எழில் சொல்ல வரும் போது அவன் கரத்தைப் பிடித்து தடுத்த அரசன் தானே தொடர்ந்தார்.


     “அவனோட பிரச்சனை என்ன என்பதை நீ தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவனோட பிரச்சனையை நீ எப்படிக் கண்டுபிடித்த என்பதை நாங்க தெரிஞ்சுக்கணும்“ அழுத்தம் திருத்தமாகக் கேட்டார்.


     “சதுரங்கம் அவர் வாழ்க்கையின் உயிர் மூச்சு. ரொம்பப் பிடித்த சாப்பாடை ஒவ்வொரு வாயா நாம எப்படி இரசிச்சு சாப்பிடுவோமோ அதே அளவு இரசனையோட ஒவ்வொரு போட்டியிலும் அவர் சதுரங்கக் காய்களை நகர்த்துவதை நான் பார்த்து இருக்கேன்.


     தோட்டத்தில் இருக்கும் அழகுச் செடிகளை அவர் தொட்டு உணரும் நேரம், தான் பெற்ற பிள்ளைகளைத் தொட்டுப் பார்த்து பூரிக்கும் அப்பாவோட உணர்வு தெரியும் அவர் முகத்தில். இன்னைக்கு நான் எதேச்சையாகக் கண்டுபிடித்த விஷயம் அப்படி அவர் விரும்பும் காய்களின் வரிசையில், சதுரங்கத்தின் உயிர்நாடி என்று வர்ணிக்கப்படும் ராணிக்கு இடம் இல்லை. 


     அதன் பிறகு கொஞ்சம் கவனித்துப் பார்க்கும் போது தான் புரிந்தது. அவரோட இரசனையில், பூரிப்பில், வீட்டுத் தோட்டத்தில்,  சுவரில், தூணில், மற்ற காய்களை வைக்கும் பெட்டிக்குள் என எதிலும் ராணிக்கு இடம் இல்லை. 


     அது, வெறும் ராணி என்ற பதவியின் மீதான வெறுப்பு மாதிரித் தெரியல எனக்கு. ஒட்டுமொத்தமா பெண்கள் மீதான கோபமா இருக்குமான்னு நான் யோசித்துக் கொண்டிருக்கும் போது, பிரியாவுடனான போட்டிகளில் வேண்டும் என்றே பல முறை அவர் தன் சொந்த ராணியை விட்டுக்கொடுப்பது நினைவு வந்தது. அப்ப தான் புரிந்தது அவருக்குச் சதுரங்கக் காயான ராணி மீது இருப்பது கோபம் இல்லை மாறாக பயம் என்று“ என நிறுத்தினாள்.


     “என்ன சொல்ற நீ“ எழில் முன்னே வர, “அவர் ராணியோடு இருக்கும் போது அசௌகர்யமாக உணர்கிறார். அதனால் தான் ராணியை பலிகொடுத்துவிட்டு மற்ற காய்களின் உதவியின் மூலம் போட்டியை வெற்றி பெறுகிறார். 


     இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் எதிராளியின் ராணியை விட தன் சொந்த இராணி தான் அவரை அதிகம் தொந்தரவுக்கு உள்ளாக்குது. எனக்கு என்னவோ ராணியைப் பார்க்கும் போதெல்லாம் அவரைத் தொந்தரவு படுத்தும் ஏதோ ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவரைத் தடுமாற வைக்குதுன்னு தோணுது. அதனாலே அதிகம் நிலைகுலைந்து போகிறார். 


     அந்த உணர்வைத் தவிர்ப்பதற்காகத் தான் எப்பவும் ராணியை விட்டுத் தள்ளியே நிற்கிறார். அவருக்கு ராணி தேவையில்லை என்று அவர் நினைக்கலாம். ஆனால் ராணி இல்லாமல் சதுரங்கம் விளையாட முடியாது என்பதால் தான் விளையாட்டு வீரரா தன் பயணத்தைத் தொடராமல் ஒரு ஆசிரியரா புதிய பரிணாமத்தை துவங்கி இருக்காருன்னு தோணுது“ அவன் மனதிற்குள் புகுந்து பார்த்தது போல் அனைத்தையும் தன் யூகத்தாலே சொன்னாள் மினி.


     அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்ன, சின்ன வயதுக்காரர்களாக இருந்தால் தான் என்ன.  தனக்குப் பிடித்தவரின் குணநலன்களை நன்றாகக் கவனித்தாலே அவர்களின் பலம், பலவீனம் எல்லாவற்றையும் ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். புரிந்து கொள்ளுதலுக்கு இன்னொரு பெயர் தானே அன்பு. அதைத் தான் செய்திருந்தாள் மினி.


     சாணக்கியன் அவள் மனதின் வெகு அருகில் நின்று கொண்டிருக்க, அவனை உள்ளே அனுமதிக்கவா வேண்டாமா என்று யோசனையில் இருந்தவள், அவனுடைய பலவீனத்தை தெரிந்து கொண்ட நொடி அவனுக்காகத் தன் மனக்கதவை சற்றே அகலமாகத் திறந்து வைத்தாள் என்றே சொல்ல வேண்டும்.


     “எதுக்காக பொண்ணுங்க மேல் அத்தனை வன்மம் அவருக்கு“ தன் சொற்களால் உயிருள்ள சிலையாக உறைந்து போய் இருந்த ஆண்கள் இருவரையும் மீட்டெடுக்கும் வகையில் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தாள் மினி.


     “அதைத் தெரிந்துக்கிட்டு நீ என்ன செய்யப் போற“ என்றான் எழில். வதனி மற்றும் ஜீவன் செய்து வைத்த காரியம் சாணக்கியனை அவன் இலட்சியப் பாதையை விட்டே தள்ளிவிட்டுவிட்டதை தாங்கிக்கொள்ள முடியவில்லை அவனால். அக்கா மீது இருக்கும் கோபம் தங்கை மீது திரும்பியது.


     அது… என்று இழுத்தாள் மினி. சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அவளால். “அவனைப் பத்தி இவ்வளவு பெரிய விஷயத்தைக் கணிச்சு சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம். அதுக்காக எல்லாம் அவனைப் பத்தின எல்லா உண்மைகளையும் உன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ விருந்தாளியா வந்தவ, விருந்தாளியாவே வெளியே போயிடு. அது தான் எல்லோருக்கும் நல்லது“ விரைப்பாகச் சொன்னான் எழில்.


     எதற்காக என்று தெரியாமல் போனாலும் திடீரென அரசன் மற்றும் எழில் இருவருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்பது புரிய, “அவரைக் கொஞ்சம் பார்த்துக்கோங்க“ என்றுவிட்டு தன்னால் அங்கிருந்து நகர்ந்தாள் மினி.


     “எழில் இனிமேல் அவகிட்ட இந்த மாதிரிப் பேசாதே“ கட்டளைத் தொணியில் சொன்னார் அரசன். எழில் அவரைப் புரியாமல் பார்க்க, “அவ தான் என்னோட வருங்கால மருமக“ மினி சென்ற திசையைப் பார்த்துக்கொண்டே தன்னுடைய முடிவைச் சொன்னார்.


     “ஆனா அங்கிள், அவ அந்த வதனியோட தங்கச்சி. அந்த நச்சுப் பாம்புகள் இரண்டு பேரோட நிழல் கூட நம்ம சாணக்கியன் மேல்படக் கூடாதுன்னு சொல்லும் நீங்களா அவங்க வீட்டுப்பொண்ணை உங்க மருமகளாத் தேர்ந்தெடுக்க நினைக்கிறீங்க“ ஆச்சர்யமாகக் கேட்டான்.


     “நாலு வருஷம் ஆச்சு. அவன் எதுக்காக விளையாடுவதை நிறுத்தினான் என்பதை உன்னாலோ என்னாலோ கண்டுபிடிக்க முடிந்ததா? அவ இந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சு இருபது நாள் தான் இருக்கும். ஆனா அவ கண்டுபிடிச்சிருக்கா. அவனுக்குள் புகுந்து பார்த்த மாதிரி ரொம்ப சரியாக் கண்டுபிடிச்சு சொல்லி இருக்கா.

 

     நோயைக் கண்டுபிடிச்சா மட்டும் தான் அந்த நோய்க்கான மருந்தைப் போட முடியும். அந்த வகையில் சாணக்கியனோட நோயைக் கண்டுபிடித்த அவளால் தான் அவனைக் குணப்படுத்தவும் முடியும் என்று நம்புறேன்“ தன் மனக்கருத்தைச் சொன்னார்.


     “எனக்கு இதில் உடன்பாடு இல்லை. எல்லாத்துக்கும் மேல், அவ யாருன்னு நம்ம சாணக்கியனுக்குத் தெரிந்தால் அவளோட நிழலைக் கூட இந்த வீட்டில் பட விட மாட்டான். அவசரப்பட்டு ஆசைப்பட்டு அப்புறமா சங்கடப்படாதீங்க“ என்றான்.


     “மினி யாரு என்னன்னு தெரிய வந்த நேரத்தில் இருந்து நாம நம்ம பக்கம் இருந்து மட்டும் தான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம். அவ அக்கா, அத்தான் பண்ண பாவத்துக்கு அவ என்ன பண்ணுவா? அதோட அவங்க சொல்லி தான் அவ இங்க வந்திருப்பான்னு என்ன நிச்சயம். ஒருவேளை எல்லாம் எதேச்சையாய் நடந்திருந்தால்“ ஆர்வமாகக் கேட்டார் மனிதர்.


     “நீங்க பண்றது எதுவுமே சரியில்லைன்னு தான் தோணுது அங்கிள். அப்புறம் உங்க இஷ்டம்“ என்ற எழில் இதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் அங்கிருந்து சென்றான்.


     அரசனைப் பொறுத்தவரை தன் மகனை இந்தளவு புரிந்து வைத்திருக்கும் அந்தச் சின்னப்பெண் அவனுக்கு மனைவியாக வந்தால் போதும் அவன் வாழ்வு சிறந்துவிடும் என்று நம்பினார். சேற்றில் வளர்ந்திருந்தால் தான் என்ன? 


     அங்கிருந்து அம்பிகையின் கைக்கு வந்து சேர்ந்தால் கமலம் தன் இயல்பை விட கொஞ்சம் அதிகமாகவே மணம் வீச ஆரம்பிக்கும் என்பது அவரின் கருத்து. அப்படி மினியும் கூட அவள் இப்போது இருக்கும் சேற்றில் இருந்து வெளியே வந்து மொத்தமாக தன் மகனை நம்பி வந்துவிட்டாள் போதும் என்று அவராக ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, விதி ஜீவன் மற்றும் வதனியின் ரூபத்தில் வேறு சதி செய்தது. 


     சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கிய கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளுடன் கிளம்பியதே தேன்மொழியின் வீட்டிற்குத் தான். காரில் வந்து கொண்டிருக்கும் போது அடிக்கடி கணவனைத் திரும்பி முறைத்துக் கொண்டே வந்தாள் வதனி. அந்தப் பார்வை சொன்னது அவளுக்குத் தெரியாமல் அவன் செய்த காரியம் அவளுக்குத் தெரியவந்துவிட்டது என்பதை. 


     தன் நிலா தன்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போவதற்குக் காரணமான வதனியைப் பார்க்கும் போது சாணக்கியன் என்ன மாதிரியான எதிர்வினையாற்றப் போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். 


    கூடுதலாக இவர்கள் அனைவரும் சேர்ந்து மறைக்கும் விஷயம் மினிக்குத் தெரிய வந்தால் அவள் என்ன முடிவு எடுப்பாள் என்பதும் யாருக்கும் தெரியாது. பலருக்கு பல திருப்பங்களை அள்ளித் தரக் காத்திருக்கும் அந்தப் பொன்னான நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. 


Leave a comment


Comments


Related Post