இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
செந்தூரா 23 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK023 Published on 29-04-2024

Total Views: 23096

செந்தூரா 23


நாட்கள் மாதங்களாக உருண்டோடிக் கொண்டிருந்தது. செந்தூரன் மனைவியை நெருங்குவதும் அவள் அவனை அனுமதிக்க முடியாமல் தவிப்பதையும் பார்த்து  தாராவின் மனம் மாறும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்து விட்டான்.


அதுமட்டுமில்லாமல் அவன் தொடங்க இருந்த தொழிலுக்கான முன்னேற்பாடுகளை கவினுடன் சேர்ந்து பார்க்க தொடங்கியிருந்ததால் முழுநேரமும் வேலையில் மூழ்கிவிட்டான்.


ஒன்று கவினுடன் சேர்ந்து வெளியில் சென்று விடுவான். இல்லை வீட்டில் இருந்தாலும் தன் தொழிலை பற்றியே பேசிக்கொண்டும் அதற்கான வேலைகளிலும் ஈடுப்பட்டுக் கொண்டும் இருந்தான். அவளை தவிர்க்கிறான் என்றும் சொல்ல முடியாது, ஏனென்றால் அவள் அவனருகில் வந்தால் அவளுக்கும் சில வேலைகளை கொடுத்தான். ஏற்கனவே அவன் வாங்கி தந்திருந்த மடிக்கணிணியில் அவன் கொடுத்த வேலைகளை செய்து முடிப்பாள். அதிலேயே தெரிந்தது, அவன் தொடங்க போவது பன்னாட்டு நிறுவனம் என்று. பார்ட்னர்ஷிப் குறித்து அத்தனை டாக்குமென்ட்களையும் அவள் தான் செய்து முடித்திருந்தாள்.


அவ்வப்போது சாரதாவும் ஜானகியும் போன் செய்து அவளை விசாரித்தனர். தாரிகாவும் வீட்டின் பெரியவர்கள் அனைவரையும் வீட்டிற்கு வருமாறு எத்தனையோ முறை அழைத்து பார்த்து விட்டாள். ஆனால் செந்தூரன் அழைக்காமல் வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார்கள்.


செந்தூரனிடம் கேட்டதற்கு “தாரா, இப்போ அவங்க வந்தாலும் என்னால அவங்க கூட நேரம் செலவழிக்க முடியாது. ஆபிஸ் செட்டப் முடிஞ்சு ஆட்களை வேலைக்கு வைக்கிற வரைக்கும் நீயுமே எனக்கு ஹெல்ப் பண்ண வேண்டியிருக்கும். எப்படியும் இன்னும் கொஞ்ச நாட்களில் கம்பெனி திறப்பு விழாவிற்கு அவங்களை இரண்டுபேருமா போய் அழைச்சிட்டு வருவோம். அதற்கு பிறகு நம்ம பார்ட்னர்ஸ்ம் வந்திடுவாங்க. நான் கொஞ்சம் ப்ரீ ஆயிடுவேன்” என்றான். 


அதற்குபிறகும் அவனை தொல்லை செய்யக்கூடாது என்று அமைதியாகி விட்டாள். செந்தூரன் இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரமுகர்களையும், நண்பர்கள் வட்டாரத்தையும் கம்பெனி தொடக்கவிழாவிற்கு அழைத்தான். கவினை கலிபோர்னியா சென்று, சார்லஸ்பாண்டே, சங்கரபாண்டியன் மற்றும் ஆராத்யாவிடம் கம்பெனியின் கட்டமைப்புகளை விவரித்து நேரில் அவர்களை அழைத்து வரச் சொல்லி அனுப்பி இருந்தான் செந்தூரன்.


செந்தூரனும் தாரிகாவும் தம்பதிகளான பின் பொள்ளாச்சிக்கு முதல் முறையாக சென்றனர். அவர்கள் வரப்போவதை அறிந்த சொந்த பந்தங்கள் எல்லாம் அவர்கள் வீட்டில் கூடி விட்டிருந்தனர். “என்ன செவப்பா, உன் அத்தை பொண்ணை தூக்கிட்டு போய் கண்ணாலம் முடிச்சியாமே? கேள்வி பட்டோம். எனக்கு அப்பவே தெரியும்லே. அந்த புள்ள சடங்குக்கு யார் பேச்சையும் கேக்காம அவள் கழுத்துல மாலை போடும் போதே நெனைச்சேம்ல” என்றார் ஒரு பெரியவர்.


“பின்ன என்ன பெரிசு, அன்னிக்கே என் பொண்டாட்டினு நினைச்சு தான் மாலையை அவ கழுத்துல போட்டேன். சும்மா விட்டுடுவேனா?” என்றான் செந்தூரன்  மீசையை முறுக்கியபடி


அதைப்பார்த்து தாரிகாவிற்கு அன்றைய நாள் நினைவில் வந்தது. எப்படியாவது செந்தூரனே தன் கழுத்தில் மாலையிட வேண்டும் என்று அவள் மனதில் வேண்டிக் கொண்டிருக்க, அவன் அதை நடத்தியே முடித்தும் விட்டான். ஆர்வமாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை என்ன என்பது போல புருவம் உயர்த்தினான்.


“ஆத்தங்கரைக்கு போவோமா மாமா?” என்றாள் ஆசையாக. அவன் பதில் சொல்வதற்குள் ஜானகி வந்து அங்கிருந்தவர்களை விரட்டினார். “அவனுக்கே இத்தனை நாள் கழிச்சு தான் ஆத்தா அப்பனை பார்க்கணும் நினைப்பு வந்திருக்கு. இதுல நீங்க வேற கூட்டம் போட்டுகிட்டு. போங்க அங்கிட்டு. என் புள்ளைக்கு சாப்பாடு போடணும்” என்றார் அதிகாரமாக


“தாரா உன் பாடு திண்டாட்டம் தான் புள்ள, பார்த்து பதிவிசா நடந்துக்க” என்று ஒருத்தி சொல்லிவிட்டு போக, தாரிகா பயத்துடன் ஜானகியை பார்த்தாள்.


“அவளுக சொல்லிட்டு போறாளுக. நீயும் அங்கனயே பிள்ளையாராட்டம் நிக்கற? எங்க அத்தை அப்படி எல்லாம் இல்லைனு சொல்ல மாட்டியோ?” என்றார் ஜானகி.


“அவளே அப்படி சொல்ற மாதிரி நடந்துக்கோ. கட்டாயம் சொல்வாள்” என்றான் செந்தூரன் சுள்ளென்று.


உடனே ஜானகி கண்ணை கசக்கினார். “உனக்கு எப்ப என் மேல பாசம் இருந்திருக்கு? எப்பவும் உன் அத்தைக்காரி சாரதாவும் அவ பொண்ணும் தானே உனக்கு முக்கியமா? அவங்களை ஒரு வார்த்தை சொல்லிடக் கூடாதே? அப்படியே அப்பனை போல.. எனக்குனு இந்த வீட்டில் யார் இருக்கா” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார் ஜானகி.


உடனே ரஞ்சிதம் பாட்டி வந்து, “எவடி அவ, என் பேரனும் பேத்தியும் முதல்முறையா கல்யாணம் முடிஞ்சி வந்திருக்காங்க. அவங்களுக்கு விருந்து சமைச்சு போடாம ஒப்பாரி வைக்கிறவ? இப்போ வந்தேனா வகுந்துடுவேன் வகுந்து” என்றார் முச்சு திணறலுடன்.


“எது நீ எங்கம்மாவை வகுந்துடுவியா? எதா எழுந்து அந்த கோல் இல்லாமல் நடந்து வா பார்க்கலாம்?” என்று சிரித்தான் செந்தூரன்.


“போடா போக்கத்தவனே, உனக்கு போய் கொடி தூக்கனேன் பாரு” என்று தாடையை தன் தோளில் இடித்து கொண்டார் ரஞ்சிதம் ஆச்சி.


இவர்களின் சம்பாஷனையை காதில் வாங்காமல் அழுதுக் கொண்டே இருந்த ஜானகியை பார்த்த தாரா, ஜானகியின் பேச்சில் அவர் மனதின் காயங்களை புரிந்துக் கொண்டு அவர் அருகில் சென்றாள்.


“அத்தை, நானும் அம்மாவும் எப்பவும் உங்களுக்கு போட்டியாக இருக்கணும்னு நடந்துக்கிட்டதில்லை. அம்மா எங்கப்பாவோட சொந்தகாரங்க கிட்ட எல்லாம் எப்பவும் உங்களை பத்தி தான் பெருமையா பேசுவாங்க. என் அண்ணி என்னை சொந்த பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்கனு சொல்லுவாங்க. எனக்குமே உங்களை ரொம்ப பிடிக்கும் அத்தை.


தயவு செய்து எங்களை அப்படி நினைக்காதீங்க. சத்தியமா மாமாவை நான் வரவழைக்கலை அத்தை. இதுவரைக்கும் மாமாகிட்ட தனியா எங்க கல்யாணத்தை பத்தி பேசினதே இல்லை. அவரும் என்கிட்ட எதுவும் சொன்னதே இல்லை. அவர் என்னை கடத்தபோறார்னு தெரிஞ்சு இருந்தால் நான் அவர்கூட போயிருக்கவே மாட்டேன், என்னை நம்புங்க அத்தை” என்று ஜானகியின் தோளில் சாய்ந்து அழுதாள் தாரிகா.


“ச்சு, இதுக்கு தான்டி இத்தனை நாள் அவங்களை கூப்பிடாமல் இருந்தேன். நீதான் எல்லாரையும் வீட்டிற்கு கூப்பிடலாம்னு சொன்னே. இப்போ பார்த்தியா வந்ததும் உன்னை அழவைச்சிட்டாங்க? கிளம்பு போகலாம்” என்றான் செந்தூரன் கடுப்பாக


“நீ சும்மா இரு, எல்லாம் உன்னால் தான் வந்தது” என்றாள் தாரிகா எரிந்து விழுந்தாள் கோபமாக.


“நான் என்னடி பண்ணேன்? அவங்க தானே இப்போ கூட உன்னை திட்டினாங்க” என்றான் பதிலுக்கு அவனும் கோபமாக.


“அவங்க பிரச்சனையே நீ அவங்களை விட்டு ஒதுங்கி போறது தான். அத்தை, அத்தை பொண்ணுனு நீ எங்களை பத்தியே பேசிட்டு இருந்ததால தான் அவங்களுக்கு எங்க மேல காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கு. 


ஒரே பிள்ளையான உன் மேல இருக்கிற பாசத்தை எங்கம்மா பங்கு போட்டுக்கவும் தான் அவங்களுக்கு கோபம். அம்மா தானே! இங்கே தானே இருக்காங்கனு நீ விட்டேத்தியா இல்லாமல் கொஞ்ச நேரம் அவங்க கிட்ட நேரம் செலவழிச்சு இருந்தால் அவங்க இப்படி தனியா இருக்கறமாதிரி பீல் பண்ண மாட்டாங்க. எனக்குனு யாரு இருக்கானு கேட்டு அழறாங்கனா, நாம எல்லாம் அவங்களை தனியா விட்டுட்டோம்னு தானே அர்த்தம்?” என்று அழுத்தமான குரலில் கேட்டாள் தாரிகா


யோசனையுடன் தாயையும் மனைவியையும் மாறி மாறி பார்த்தான். “தனியா வீடு வாங்கி என்னை மட்டும் அங்கே கூட்டிட்டு போனால் அவங்களுக்கு இன்னும் தானே கஷ்டமாக இருக்கும்?. உன்னோட வளர்ச்சியை அத்தை மாமா, கிட்ட இருந்து பார்த்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாங்க? அதை விட்டுட்டு என்னை அவங்க எதுவும் சொல்லக்கூடாதுனு என்னை மட்டும் தனியா கூட்டிட்டு வந்துட்ட? அவங்களையும் வீட்டுக்கு வரவேணாம்னு சொல்லிட்ட. அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா மாமா?


என்னை திட்டினால் திட்டிட்டு போறாங்க, அவங்க என்னோட அத்தை தானே? இப்போ எங்கம்மா உன்னை திட்டினால் மறுபடியும் நீ அவங்க கிட்ட தானே போய் நிப்ப? அதுபோல தான் எனக்கு ஜானகி அத்தையும்” என்று சொன்னவளை கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுது விட்டார் ஜானகி.


“தாரா, முதல் முறையா நீ தான்டி என்னை முழுசா புரிஞ்சுக்கிட்ட? எங்க அம்மா கூட என்னை புரிஞ்சிக்கலை. இந்த வீட்டில் வேலை செய்யவும் சமைச்சு போடவும் ஒரு ஆளாக தான் என்னை பார்த்தாங்களே தவிர, நான் ஒருத்தி இருக்கறதையே இந்த வீட்டில் இருக்கறவங்க உணரல” என்று சொல்லி ஓவென அழவும் செந்தூரனுக்கு சங்கடமாகி போனது.


அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த கதிரேசனும் முத்துப்பாண்டியும், ஜானகி கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். 


தாரிகா தான் அத்தையின் முதுகை வாஞ்சையுடன் தடவி கொடுத்தபடி அங்கே நின்றிருந்த மூன்று ஆண்களையும் முறைத்தாள். “நீங்க எல்லாம் என் அத்தையை எப்படி நடத்தியிருக்கீங்கனு பாருங்க. இதுக்கு மேலயாவது ஒருத்தரை மட்டும் கொண்டாடாம எல்லாரையும் சமமாக பாருங்க, சமமாக நடத்துங்க” என்றாள் அழுத்தமாக.


“நாங்க எப்பவும் அவளை குறைவாக நினைச்சதே இல்லை. உன் அத்தை மனசிலயே இத்தனையும் வச்சிட்டு இருந்தால் எங்களுக்கு எப்படிமா தெரியும்?” என்றார் கதிரேசன் வருத்தமாக


“அதானே, பொம்பளைங்க மனசில் என்ன இருக்குனு தெரியாமல், நீங்க நினைக்கிறது தான் நடக்கணும்னு நடக்கிறது தானே ஆம்பளை புத்தி” என்று தாய்மாமனுக்கும் கணவனுக்கும் சேர்த்தே குட்டு வைத்தாள் தாரிகா.


தன்னைத்தான் மறைமுகமாக தாக்குகிறாள் என்று புரிய பின்னந்தலையை வருடிக் கொண்டே, தன் அன்னையருகே சென்றவன், அவர் மடியில் தலையை வைத்து படுத்துக் கொண்டு அவரின் இடுப்பை கட்டிக்கொண்டு, “அம்மா பசிக்குது” என்றான்.


ஜானகி எழப்போகவும், “இருங்க, அத்தை நான் எடுத்திட்டு வரேன்” என்று சொல்லி விட்டு தாரிகா உணவை தட்டில் கொண்டு வந்து கொடுக்கவும் ஜானகியே அந்த சாதத்தை பிசைந்து இருவருக்கும் ஊட்டினார்.


செந்தூரன் தன் செய்கைகளால் அன்னையை சமாதானம் செய்ய எண்ணிக் கொண்டான். அதை புரிந்தவர்களாக முத்துப்பாண்டியும் கதிரேசனும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியிருப்பதால் கிளம்பிச் சென்றனர்.


அன்று மாலை, செந்தூரன் தன் தாத்தாவின் புல்லட் வண்டியில் மனைவியை அமரவைத்து ஆத்தங்கரையை நோக்கி சென்றான். அனைவரும் வண்டியில் ஜோடியாக போகும் அவர்களையே ஆவலாக பார்க்கவும் வெட்கத்தில் கணவனின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள் தாரிகா. 


மென் சிரிப்புடன் ஆத்தங்கரைக்கு சென்றவன் வண்டியை நிறுத்தி விட்டு, அங்கிருந்த அம்மன் கோயிலுக்கு மனைவியை அழைத்துச் சென்றான். பிறகு நீர் வரத்து குறைந்திருந்த அந்த ஆற்று மணலில் கால் நீட்டி அமர்ந்துக் கொண்டான்.

தாரிகாவும் சிறுவயதின் நினைவுகளில் கட்டுண்டவளாக அவன் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.


“அந்த இள வயதில்

ஆற்றங்கரை மணலில்

காலடித் தடம் பதித்தோம்

யார் அழித்தார்” என்று பாடினான்


இப்போது தாரிகாவிற்கு தான் காதலித்த செந்தூரனே மனதில் நிறைந்திருக்க, அவனை நெருங்கி அவன் இடுப்பை சுற்றி அணைத்தவாறு அமர்ந்து கொண்டாள். அவளின் முகத்தை தன் ஒற்றை விரலால் நிமிர்த்தியவன் அவள் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்டு அவனை பார்க்கச் செய்தான். பார்வையாலே அவளின் மனக்கதவை உடைக்க எண்ணி விட்டான் போலும். கணவன் கூர்பார்வை விழிவழியாக நாடி நரம்பெல்லாம் ஓடி புது ரத்தம் உடலெங்கும் ஜிவ்வென பரவியது போலிருந்தது. கணவனின் காந்தப் பார்வையில் தடுமாறி வெட்கம் தாளாமல் இமை மூடிக் கொண்டாள்.


அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், அடுத்து அவள் இமைகள் இரண்டிலும் தன் முத்திரையை பதித்தான். அவளின் நாசியை செல்லமாக கடித்தான். அவளின் தேனூறிய இதழ்களை தன் விரலால் மெல்ல வருடினான். அடுத்து அவன் செய்ய போவதை உணர்ந்து வெட்கத்தோடு அவனிடமிருந்து விலக பார்த்தவளின் கன்னத்தை தன் இருகைகளாலும் அழுத்தி பிடித்துக் கொண்டான்.


அவன் முத்தமிடபோகிறானே என்று கண்களை இறுக மூடிக் கொண்டு, இதழ் துடிக்க அமர்ந்திருந்தவளை ரசித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவன். மெல்ல அவள் கண் திறந்து பார்த்த பிறகே அவள் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான். 


இருவரும் ஒரே மனநிலையில் இருந்ததால் அந்த முத்தம் இருவருக்கும் தேனாய் இனித்தது. மீண்டும் மீண்டும் அவன் அவளின் இதழில் தன் முத்திரையை ஆழமாகவும் அழுத்தமாகவும் வைத்துக் கொண்டே இருக்கவும், தானாக அவளின் கைகள் அவன் பின்னந்தலையை பிடித்துக் கொண்டது. அவளை வாரி அணைத்துக் கொள்ள துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, “பேபி, இன்னைக்காவது கிடைக்குமாடி” என்றான் ஆசையாக.


அவன் கேட்டதின் அர்த்தம் புரிய, “ச்சீ போ மாமா” என்று அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளின் முகத்தை நிமிர்த்தி அவளை நேராக பார்த்தபடி பாட தொடங்கினான்.


“பார்வைகள் புதிதா

ஸ்பரிசங்கள் புதிதா

மழை வர பூமி மறுப்பதென்ன

தொட தொட

மலர்ந்ததென்ன பூவே

தொட்டவனை மறந்ததென்ன”


என்று அவன் பாடிக் கொண்டே செல்ல, “ஐயோ வெட்டவெளியில் ரொமான்ஸ்சா போகலாம் மாமா, யாராவது பார்க்க போறாங்க, இது கிராமம்” என்று சிணுங்கினாள்.


“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, அப்போ தான் வருவேன்” என்றான் சின்னபிள்ளை போல.


“என்ன பதில் சொல்லணும்?” என்று கேட்டவளை பார்த்து கண்சிமிட்டி மோகனமாக சிரித்தான். அவனுக்கு எப்படி என்னவென்று பதில் சொல்வது? வெட்கத்துடன் நெளிந்தவள், அவன் கைகளை எடுத்து அவள் தோள் மேல் போட்டுக் கொண்டு, அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.


அதுவே அவளின் சம்மதத்தை அவனுக்கு பரிந்துரைக்க, சீட்டியடித்தபடி எழுந்து வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவளும் அவன் பின்னால் அமர்ந்து அவன் தோளில் கைப்போட்டுக் கொண்டாள்


செந்தூரன் ஒரு கையால் வண்டியை செலுத்திக் கொண்டே மறுகையால் அவன் தோள்களின் மேலிருந்த அவளின் கைகளை எடுத்து தன் இடுப்பை சுற்றி பிடித்துக் கொண்டான்.


அதில் அவன் எண்ணம் புரிய, அவன் இடுப்பை இருகைகளாலும் இறுக்கி பிடித்துக் கொண்டாள். அவளின் பஞ்சு மெத்தை மேனி உரசியதில் அந்த ஏகாந்தத்தின் நேரத்தை மேலும் நீட்டிக்க விரும்பியவன் வண்டியை நத்தை போல செலுத்தினான்.


நடந்த செல்பவர்கள் கூட இவர்களை கடந்து வேகமாக செல்லவும் தான் செந்தூரனின் கள்ளத்தனம் புரிந்தது. அவன் சட்டை உள்ளே அவள் கைவிட்டு அவன் இடுப்பில் கிள்ளினாள், “ஏய் என்னடி பண்றே?” என்று பதறினான். 


“ரோட்டை பார்த்து வண்டி ஓட்டு” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வண்டி சற்றே தடுமாறியது. அதே நேரம் வேகமாக ஒரு லாரி அவர்கள் எதிரே வந்துக் கொண்டிருந்தது.


அதைப் பார்த்த தாரிகாவிற்கு அந்த கணம் ஜோசியர் சொன்னது தான் நினைவிற்கு வந்தது. “மாமா” என்று அலறினாள்


(தொடரும்)




Leave a comment


Comments


Related Post