இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
அந்தகனின் அவள் - 04 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK013 Published on 29-04-2024

Total Views: 17066

அத்தியாயம் 04

அந்தகாரம் சூழ்ந்திருக்கும் பொழுதது. திருக்கடையூர் மொத்தமும் அவ்விருளில் அடங்கியிருந்தது. மருத்துவமனையில் இருந்து அஞ்சனாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கே வந்திருந்தான் திரு. முதலில் தங்களின் வீட்டிற்கே அவளை அழைத்துச் செல்லலாம் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அவளது பயம் நீங்கி நிதர்சனம் உணர வேண்டும் என்பதால் அவளின் வீட்டிற்கே அழைத்து வந்தான்.

உள்ளே நுழைந்தவளுக்கு தந்தை இல்லாத வெறுமை சுட, இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று அழுத்தமாகச் சொன்னவன் அவளை உள்ளே அழைத்து வந்தான். அவன் இருக்கும் தைரியத்தாலேயே அவளும் கொஞ்சம் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

"என்ன அஞ்சும்மா? இன்னும் பயமா இருக்கா?"

"நீங்க இருக்கீங்கள்ல பயம் இல்லை" உண்மையாகவே உணர்ந்து சொன்னாள். இரு குடும்பத்திற்கும் இடையே உள்ள பேச்சுவார்த்தை அவளுக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். தந்தைக்கு திருவென்றால் அவ்வளவு இஷ்டம். இவளுக்கும் பிடிக்கும் தான். ஆனால் அவனளவுக்கு இல்லை. அவனிடம் காதல் இருந்தது. இவளிடம் அவ்வுணர்வு இல்லை. அந்த அளவிற்கு திரு தன்னை வெளிப்படுத்தி அவள் மனதினை இன்னமும் சலனப்படுத்த முயற்சி செய்ததே இல்லை. 

"நான் எப்பவும் கூடவே இருப்பேன் அஞ்சு. அம்மா சாப்பாடு கொடுத்து விட்டாங்க. சாப்பிடுவோமா?"

"அம்மா வரலையா?"

"அத்தையை அம்மா கஷ்டப்பட்டு தூங்க வச்சுருக்காங்க. இப்போதைக்கு அவங்களுக்கு அதுதான் தேவை அஞ்சு. அவங்களும் கொஞ்ச நேரமாவது வேதனையை மறந்து இருக்கணும் இல்லையா?"

"புரியுது. ஆனால் என் மனசு அதை ஏத்துக்க மாட்டேங்குது திரு. உங்களுக்கே நல்லாத் தெரியும்ல இந்த வீட்டுல நான் அம்மா அப்பா மூனு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருந்தோம். இனி அதெல்லாம் திரும்பக் கிடைக்குமா? அவரோட இழப்பை யாராலும் ஈடு கட்ட முடியாது"

"நடந்து முடிஞ்சதை திரும்ப திரும்ப யோசிக்க கூடாது அஞ்சு. இனி நடக்குறதை நாம பார்க்கலாம்"

"எதையும் யோசிக்குற மனநிலையில நான் இல்லை"

"நான் எதுக்கு இருக்கேன். உன்னை யோசிக்க வைக்குறேன். முதல்ல சாப்பிடுவோமாம். அப்பறமா மாத்திரை எல்லாம் போட்டுட்டு நீ நிம்மதியாய் தூங்கி எந்திரிப்பயாம். சரிதானா"

"சரி" என தலையாட்டியவள் அவன் நீட்டிய தட்டினை வாங்க மறுத்து ஆ என காட்டினாள். மெல்லிய சிரிப்பு படர்ந்தது அவனது வதனத்தில்.

"சின்ன பாப்பா இவளுக்கு நாம ஊட்டி வேற விடணுமாம்" சிரிப்பினூடே அவனின் இதழ்கள் பேசியது.

"ஐயா எனக்கு அடிக்கடி ஊட்டி விடுவார். நீங்கதான் நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொன்னீங்கள்ல. அப்போ ஊட்டிவிடுங்க" ஓரளவுக்கு சகஜமாகிவிட்டது அவளது பேச்சிலே தெரிந்தது. அதுதானே அவனுக்கும் வேண்டும். அது மட்டும் இல்லாமல் தந்தையின் அன்பினை தன்னிடத்தில் தயங்காமல் எதிர்பார்க்கிறாள். இதுவே அவனுக்கு தற்போதைக்கு போதுமானதாக இருந்தது.

"நீ கேட்டால் நான் செய்வேன் அஞ்சு" சொன்னவன் அவளுக்கு ஊட்டிவிடத் தொடங்கினான்.

இயல்பாய்  ஆரம்பித்தவனுக்கு நொடிகள் கடக்க கடக்க இதமான இம்சையாய் இருந்தது. அவளுக்கு அப்படியெல்லாம் இல்லை போல. அதற்காக அவனது உணர்வுகள் கட்டுக்குள் இருக்குமா? அவளோடான நெருக்கம் அவன் எப்போதும் எதிர்பார்க்கும் ஒன்றுதான். அது இன்றைய தினம் கிடைத்ததில் மகிழ்ச்சியோடு இன்னபிற மாற்றங்களும் சேர்ந்து அவனைக் கொல்ல ஆரம்பித்தது. அவளது இதழ்கள் அவனது விரல்களை வருடி அவ்வுணவினை ஏற்றுக் கொள்ளும் போதெல்லாம் அவன் தோற்றுப் போய்க் கொண்டிருந்தான். இதையெல்லாம் இயமன் பார்த்திருந்தால் அவ்வளவுதான் அவனை தூக்கிக் கொண்டு போய் எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுத்திருப்பான். திருவுக்கு உண்மையிலேயே நல்ல நேரம் போல.

தன்னில் ஏற்பட்ட மாற்றங்களை எல்லாம் கடும் பிரயத்தனப்பட்டு அடக்கி வைத்தே அவளுக்கு ஊட்டிக் கொண்டிருக்க "சிவகாமி" என்றவாறு பக்கத்து வீட்டு ராதிகா உள்ளே வந்தாள். 

திருவும் அவளும் இருப்பதைப் பார்த்துவிட்டு, "அம்மா இல்லையா அஞ்சனா" என்றாள்.

"இல்லை. அத்தை வீட்டுல இருக்காங்க"

"உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு போனாளே. அதான் வந்ததும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். பார்த்தா நீங்க இரண்டு பேரும் மட்டும் தனியா இருக்கீங்க. உங்க அம்மா எப்படி உங்களை இப்படி விட்டுட்டு அங்க இருக்கா. இதெல்லாம் சரியா" ஒரு மாதிரியான குரலில் வினவி வைக்க திருவுக்கு அந்த கேள்வியின் அர்த்தம் புரிந்து எக்குத்தப்பாக கோபம் வந்துவிட "இங்க பாருங்க உங்களுக்கு என்ன பிரச்சனை" என அதே கோபத்தோடு கேட்டே விட்டான்.

"எனக்கென்ன தம்பி பிரச்சனை. சாவு வீட்டுல நீங்க தான் இங்கிதம் கூட தெரியாமல் நடந்துக்கிறீங்க. கல்யாணம் நடந்திருந்தால் கூட பரவாயில்லை. அதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது இப்படி தனியா இருக்குறது நல்லாவா இருக்கு. எந்த குடும்பத்துலயும் இப்படி நடந்தது இல்ல. நீங்கதான் சின்னஞ்சிறுசுக. உங்களுக்கு முறையெல்லாம் தெரியாது. உங்க வீட்டுல கூடவா அந்த வழமை தெரியாது. இந்த நேரத்து வயசுப் பையனும் பொண்ணும் தனியா இருக்குறது சரியே கிடையாது. இப்படி உங்களை தனியா விட்டுட்டு உங்க வீட்டுல எப்படி இருக்காங்க" என நீட்டி முழக்க...

"நான் இவளை கட்டிக்கப் போறவன். தேவையில்லாமல் பேசுறதை விட்டுட்டு உங்க வேலையைப் பார்த்துட்டுப் போங்க. இல்லைன்னா நான் வேற மாதிரி பேச வேண்டி இருக்கும். அவளே இப்போத்தான் உடம்பு தேறி வந்துருக்கா. அவளை போய்.. ச்சே வீட்டுல வேற வேலை எதுவும் இல்லையா. எப்படா அடுத்தவன் குடும்பத்தை ஏதாவது சொல்லலாம்னு வம்புக்கு அலைவீங்களா" இம்முறை காட்டம் அதிகமிருந்தது அவன் குரலில்.

"யாரு நான் வம்புக்கு அலையுறேனா.. எனக்கு இது தேவைதான் தம்பி நானே சிவகாமியை பார்த்துட்டு போலாம்னு நல்லெண்ணத்துல தான் வந்தேன். ஆனால் நீ என்னமோ ரொம்ப பேசுற. அதுசரி அவங்க ஐயா இறந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள இந்த வீட்டுலயே இப்படி இருக்க இவளுக்கு மனசு வருதுன்னா இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு.. என்னமோ பண்ணித் தொலைங்க. செத்தவருக்கு கொஞ்சங்கூட மரியாதையே இல்லை.. என் பொண்ணு என் பொண்ணுன்னு அந்த அண்ணன் அம்புட்டு தாங்கி வளர்த்துச்சு. அதுக்கு பதில் மரியாதை போல" முணங்கிக் கொண்டே அவசரமாய் வெளியேறினாள் ராதிகா.  அந்த அவசரத்தில் இருந்தது முழுக்க அதை அடுத்தடுத்த வீடுகளில் ஒளிபரப்பு செய்ய வேண்டிய அவசியம் மட்டுமே.

"ஊஃப்ப்.. இவங்களோட" என தலையை அழுந்தத் தேய்த்துக் கொண்டு திரும்பியவன் தேம்பித் தேம்பி அழுத அஞ்சனாவைப் பார்த்து சோர்ந்தே போனான். 

"அஞ்சு வேண்டாம் அழாத. இப்போத்தான் உடம்பு சரியாகிருக்கு. ஒழுங்கா அமைதியாய் இரு"

"நான் எங்க ஐயாவுக்கு நல்ல புள்ளையாய் நடந்துக்கலை" விடாமல் அழுதவளுக்கு மூச்சு வாங்கியது. ஆயிரம் சமாதானங்கள் சொல்லியிருப்பான் அது அத்தனையும் அவளது காதில் விழவே இல்லை. திருவால் என்ன முயன்றும் அவளைச் சமாதானப்படுத்தவே முடியவில்லை.

வேகமாய் தன் அறைக்குள் நுழைந்துக் கதவை சாத்திக் கொண்டாள். காதுக்குள் மீண்டும் மீண்டும் ராதிகாவின் குரல். அவளால் அந்த பெண்மணி சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. தந்தையின் நினைவினை மறந்து திருவின் அருகாமையில் இப்படி நடந்துக் கொண்டது மாபெரும் தவறென அவள் மனம் எண்ணி எண்ணி வேதனைப் பட்டது. சிவகாமி இருந்தாலாவது அவளை தேற்றி இருப்பாள். திருவுக்கோ அந்த சந்தர்ப்பத்தினை கூட அவள் வழங்காமல் இப்படி வந்து ஒளிந்துக் கொண்டாள். வெளியே திருவோ அழும் சத்தத்தில் தன்னையே நொந்துக் கொண்டான். அவளை இப்படி அழவிடவா அவளுக்குத் துணையாய் நான் இங்க வந்தேன் என்ற எண்ணத்திலே அவளறையின் முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவு நேரம் அழுதுக் கொண்டிருந்தாளோ தெரியாது. அப்படியே அழுதழுது அவளது இமைகள் இரண்டும் மெல்லமாய் அவளையும் அறியாது மூடிக் கொள்ள கண்ணீரின் பிசுபிசுப்பில் அது இரண்டும் ஒன்றோடு ஒன்று இறுக ஒட்டிக் கொண்டதில் அவள் உறக்கத்தில் அமிழ்ந்து போகத் தொடங்கினாள். அவளது விசும்பல் நின்று அவள் உறங்குவதை சன்னல் வழியாக பார்த்தவன் நிம்மதியுடன் அங்கே முன்னிருந்த இருக்கையில் கால் நீட்டி படுத்து விட்டான்.

இருள் கவிந்திருந்த அந்த இரவின் நடுநிசியின் போது ஒட்டியிருந்த இமையிரண்டும் பிசுபிசுப்பை மீறி திறந்து கொண்டது. அஞ்சனா கண்களை நன்றாக உருட்டி பார்த்தாள். எதிரே மையிருட்டு. எது எங்கிருக்கிறது என்பதே புரியாத அளவிற்கு இருண்டு கிடந்த அந்த காட்சி முதலில் அவளை திடுக்கிட வைத்தது. அச்சத்தினை அவளது இதயம் தாறுமாறாக துடித்து வெளிப்படுத்தியது. கையால் இதயத்தினை பிடித்தவள் விழிகளை சுழற்றினாள். கண்ணுக்கு எதுவும் தென்படவில்லை. இப்போது அவளது செவிக்கு அருகே ஒரு குரல். உன்னிப்பாக கவனித்துக் கேட்கையில் அது அது அவளது ஐயாவின் குரல்.

"அஞ்சனாம்மா.. ஐயாவைத் தேடுறயா டா. ஐயா இங்கதான் இருக்கேன். ஐயாவுக்கும் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியலை. நீயும் என் கூட வந்துடு அஞ்சம்மா" என்று அழைக்க அந்த அழைப்பில் அவளது தலை தன்னாலே ஆடியது.

"ஐயாவோட கையை கெட்டியாய் பிடிச்சுக்கோ டா. என்கிட்ட வந்துடலாம். இங்க இருக்க வேண்டாம்"

"வர்றேன் ஐயா. நீங்க இல்லாத இடத்துல எனக்கு என்ன வேலை. நான் வந்துடுறேன்.  நான் உங்களுக்கு நல்ல புள்ளையாய் இருக்கத்தான் ஆசைப்படுறேன். " எனச் சொல்லியபடி அவள் கைகளை நீட்டி காற்றினிலே துழாவினாள்.

"ஐயா! ஐயா!" அவளது குரல் மட்டுமே இப்போது அங்கே எதிரொலித்தது. "ஐயா என்னைக் கூட்டிட்டு போயிடுங்க. நானும் வர்றேன்" அவள் கை அந்தரத்தில் ஆடியபடியே இருக்க அந்த கையின் மீது கயிறொன்று வந்து விழுந்தது.

விழுந்த வேகத்தில் கண்களை கூசச் செய்யும் அளவிற்கு பளீரென்ற வெளிச்சம் அவ்விடம் முழுதும் பரவ, இதுவரை மூடியிருந்த விழிகள் திறக்கவும் அந்த கயிறின் பரிணாமமே தென்பட்டது. 

உதடுகள் பயத்தோடு "எமன்" என அழைத்தபடி அந்த கயிற்றின் மறுமுனையை நோக்கி பார்வையை நகர்த்த அங்கே எருமையின் மீது ஆரோகணித்தபடி வீற்றிருந்தான் எமன். மரணத்தின் தேவனை நேருக்கு நேர் கண்ட கணம் தேகம் சில்லிட்டு வெடவெடவென நடுங்கத் தொடங்கியது. மரணபயத்தில் அவளது முகம் அரண்டு போயிருந்தது.

கரத்தில் இருந்த கயிறு கழுத்தில் வந்து விழுந்து சுருக்க "அய்யய்யோ எமன்.. நான் சாகப்போறேன்" கத்தியவள் அப்படியே எழுந்து அமர்ந்துவிட்டாள். கண்டதெல்லாம் கனவு என்று அவளால் கண்டறிந்துக் கொள்ளவே இயலவில்லை. மனமும் மூளையும் அந்தளவிற்கு பயத்தின் பிடியில் நடுநடுங்கிப் போயிருந்தது. எழுந்தவள் தப்பிக்க வேண்டி வேகமாக கதவைத் திறக்க திருவின் மார்பின் மீதே மோதி நின்றுவிட்டாள்.

அவனோ எதுவும் பேசவில்லை. அவளை இறுகிய அணைப்புக்குள் கொண்டு வந்து அவளின் பயத்தினை தான் வாங்கிக் கொள்வது போல இறுக்கமாக நின்றிருந்தான். அவள் உடல் நடுக்கம் அவனையும் சேர்த்து நடுங்க வைத்தது. 

"உள்ள நான்..எருமை... எமனை..."

"ஷ்ஷ்" அவளது உதட்டின் மீதே விரல்களை பதித்து கண்களையே ஆழ்ந்து பார்த்து வேண்டாம் என மறுப்பாக தலை அசைக்க அவள் ம்ம் என முணங்கிவிட்டு அவன் மார்பின் மீதே சாய்ந்து கொண்டாள்.

முப்பதாவது நாள் முடிவில இவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கணும். அந்த கல்யாணம் மட்டும் தான் இவளை பயத்துல இருந்து பாதுகாக்கும். உரிமையானவனா நானும் அவளை நல்லபடியாய் பார்த்துக்கவும் முடியும் இவ்வாறு யோசித்தபடி அவனும் அவனுக்கு மாறாய் நானும் சாகப் போறேன். ஐயா என்னை கூப்பிடுறாரு. அம்மாவை தனியா விட்டுட்டு சாகப்போறேன் என்று அவளும் உறுதியாக நினைக்கத் தொடங்கினார்கள்.

அந்த தருணத்தில், சட்டென்று வீட்டுக்கு வெளியே யாரோ அலற அவளை அணைப்பில் இருந்து விடுவித்துவிட்டு திரு வேகமாக அங்கிருந்து ஓடினான்.

தொய்ந்து விழுந்தவளை உறுத்துப் பார்த்தபடி இயமன் கைகட்டி நின்றிருக்க, வெளியிலோ அந்த ராதிகாவை எருமை ஒன்று துரத்திக் கொண்டிருந்தது. 


காதலாசை யாரை விட்டது..!




Leave a comment


Comments


Related Post