இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
உனக்கென்றே உயிர் கொண்டேன் (அத்தியாயம் 8) அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK024 Published on 29-04-2024

Total Views: 20430

உனக்கென்றே உயிர் கொண்டேன் 8

விளையாட்டிற்காகக் கேட்டதற்கு உண்மையாகவே கிரெடிட் செய்வான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

நூறு, ஐநூறாக இருந்தாலும் பரவாயில்லை என்றிருக்கலாம். ஐம்பதாயிரம். கல்லூரி படிக்கும் இருபத்தியோரு வயது பெண்ணுக்கு அத்தகைய தொகை மிகவும் பெரியதாயிற்றே!

வேகமாக விடுதிக்கு ஓடி வந்தவள்... தனது அறைக்குள் புகுந்து கதவினை சாற்றி தாழிட்டு...

தமிழுக்கு வீடியோ கால் செய்திட்டாள்.

இருசக்கர வாகனத்தில் எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தவன், யாருடைய அழைப்பென்று பார்த்து வண்டியை சாலையோரமாக நிறுத்தினான். வண்டியில் அமர்ந்தவாறே அழைப்பை ஏற்று, முன்னுச்சி கேசத்தை கையால் சரி செய்தவாறு...

"சொல்லுங்க ஜூனியர்" என்றான். தன் மூரல்கள் பளிச்சிட.

வெகு நாட்களுக்குப் பின் அவனின் முகம் காண்கிறாள். இதயம் நின்று துடித்தது. அதுவும் அவனது விரல்கள் கோதும் கேசத்தில் தன் விரல்கள் நுழைக்க ஆசை எழுந்திட... மேல் பற்களால் தன்னுடைய கீழ் அதரத்தை அழுந்த பற்றினாள். இமை இழைகள் படபடத்தன. கண்களை இறுக்கி மூடிக்கொண்டாள்.

இப்போது அவனின் பார்வையில் ரசிப்பு. திரையில் தெரியும் முகத்தை அள்ளி எடுக்கும் பேராவல்.

பெட்ரோல் டேங்கின் மீது அலைப்பேசியை வைத்தவன், இரண்டு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்து முகத்தை வானோக்கி உயர்த்தி தன்னை நிலைப்படுத்த முயன்றான். அவனின் கீழ் பற்கள் மீசையை பற்றி விடுவித்தது.

"ஊப்..." இதழ் குவித்து ஊதியவன், அலைப்பேசியை கையில் எடுத்தான்.

'கிறங்க வைக்கிறாள்.'

மூடிய கண்களில் கருவிழிகள் அசைந்திட நிலையில்லாது தவிப்பவளின் முகம் கண்டு,

"மொழி" என விளித்தான். கரகரப்பாய் அவனின் குரலோசை.

"ஹான்..." என்று விழி திறந்தவளுக்கு தமிழ் குரல் மென்மை என்னவோ செய்தது. அவனது பார்வையில் புதிதாய் ஒன்றை காண்கிறாள்.

இதுவரை பொத்தி வைத்த காதலை கண்களின் வழி அவளுள் கடத்திட முயன்றானோ?

"எக்ஸாம் எப்படி பண்ண?"

"நல்லா பண்ணியிருக்கேன்" என்றவள், திரையில் தமிழின் பின்னணியில் தெரிந்த சுற்றுப்புறம் வைத்து, "எஸ்டேட் போறீங்களா?" எனக் கேட்டாள்.

"ஹ்ம்ம்..."

கேட்டதும் கொடுத்துவிட்டான். திருப்பி வாங்கிக்கோங்க என்று எப்படி சொல்வது தெரியாது திணறினாள். தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்வது?

"சீ...

"ம்ப்ச்...

"சீ...ஸ்...சீனி..."

"என்ன சீனி வேணுமா?" அவளின் திணறலும் அவனுக்கு ரசிப்பதாய்.

"என்ன பண்ணட்டும் சீனியர்? அது நான் சும்மா..."

"ரைட்ஸ் இருக்கே ஜூனியர்."

வெண்பா முடிப்பதற்கு முன்பு பதில் சொல்லியவன்,

"இருக்குதானே?" என்று கேட்டிட...

"இருக்கு... இருக்கு... இருக்கு பாஸ்" என்றாள். மீண்டும் மீண்டும்.

"அப்போ வச்சிக்கோ! தமிழ் கொடுத்தால் மொழி வச்சிக்கமாட்டாங்களா?" உள்ளர்த்தம் வைத்து வினவினானோ?

"என்னது?"

"எதுவாயிருந்தாலும்."

அவளின் தலை அவனுக்கு ஏதுவாக அசைந்தது.

"பர்ஸ்ட் டைம்... விளையாட்டுக்கு கேட்டிருந்தாலும், எப்படி எடுத்துக்கிறது? இந்த உரிமை பிடித்திருக்கே! பர்ஸ்ட் டைம் உரிமையா ஒன்னு கேட்டிருக்க... அது என்னவாயிருந்தால் என்ன? மொழி கேட்டு தமிழ் கொடுக்காமல் எப்படி? யூ ஆர் சம்த்திங் ஸ்பெஷல் டூ மீ. உனக்கும் தெரியும்" என்றவன்,

"தெரியும்ல?" என்று கேட்க,

"தெரியும்" என சத்தமின்றி கூறினாள்.

"ம்ம்ம்ம்... மொழிக்கு தமிழை புரியுதா?"

கடந்த சில நாட்களில் இருமுறை கேட்டுவிட்டான். வெண்பாவுக்கு படிப்பு முடிகிறது. உறவுகள் ஆகப்போகிறோம். இனியும் நேசத்தை மறைத்து வைத்திடக் கூடாதென்று முடிவெடுத்துவிட்டான் போலும்.

தமிழின் இக்கேள்விக்கு விடை தெரிந்தும் சொல்லாது கண் சிமிட்டாது அவனையே பார்த்திருந்தாள்.

சில நொடிகளில் தமிழின் பார்வை சுண்டியிழுக்க...

"வைக்கட்டுமா?" எனக் கேட்டாள்.

"ம்ம்ம்... வையேன்."

"நானா?"

"நீதானே கால் பண்ண? அப்போ நீதான் கட் பண்ணனும்."

"கட் பண்ணனுமா?"

"நான் மொபைல் கால் சொன்னேன்."

என்ன பேசுகிறோம் என்றே தெரியாது பேச்சினை நீட்டித்துக் கொண்டிருந்தனர். இருவருக்குமே அழைப்பினைத் துண்டித்திட மனமில்லை.

"எக்ஸாம் எப்போ முடியுது? பொள்ளாச்சி எப்போ வர?"

"நெக்ஸ்ட் வீக். இன்னும் எயிட் டேஸ் இருக்கு" என்றவள், "மீட் பண்ணலாமா சீனியர்? நிறைய பேசணும்" என்றாள்.

"மேடம் வந்துட்டு சொல்லுங்க. அடுத்த நாளே மீட்டிங்க பிக்ஸ் பண்ணிடலாம்" என்று தமிழ் உற்சாகமாக சொல்லிட...

அறையின் கதவு தட்டப்பட கையில் அலைப்பேசியோடு எழுந்து சென்று யாரென்று பார்த்தால்.

பக்கத்து அறை தோழி.

"சாப்பிட வா வெண்பா!" என்று சொல்லிச் சென்றாள்.

"நீயின்னும் சாப்பிடலையா?"

"இப்போ சாப்பிடணும்" என்று அவள் சொல்ல... "பர்ஸ்ட் அதை செய்" என்றவன், "நான் உனக்கொரு ஷாக்கிங் சர்ப்ரைஸ் வைத்திருக்கேன். நீ என்னை மீட் பண்ணும்போது தெரியும்" என்றவனாக அழைப்பை வைத்திருந்தான்.

தமிழ் சொல்லிய ஆச்சரியம் என்னவாக இருக்குமென யோசித்த சமயம், 'நானும் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்திருக்கேன்' என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

தமிழ் அனுப்ப வேண்டிய லோடினை சரியாக அனுப்பி வைத்துவிட்டு, தங்களின் பழ பண்ணைக்கு வந்து சேர, அஸ்வினிடமிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டதாக தகவல் வந்தது.

"ஓகே மாமா" என்று பதில் அனுப்பியவன் வேலையில் ஆழ்ந்துபோனான்.

அவனது மொழியோ அவனின் நினைவில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.

கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தவள், எட்டி மேசையின் இழுவையை திறந்து அதிலிருந்து தமிழுக்கு உரித்தான ஒன்றை எடுத்து பார்த்திட... அவளின் செவ்விதழ்கள் மலர்ந்து விரிந்தது.

"ரைட்ஸ் இருக்காமே! எந்தளவுக்கு தமிழ்?" அவனின் நிழலுருவிடம் கேட்டவள், "கட்டிக்கிற அளவுக்கா?" என்றிட... "கட்டிக்கலாமா? இதுக்கு மேல வெயிட் பண்ண முடியும் தோணல" என்றாள். அப்படியே மல்லாக்கா சரிந்து படுத்தவள் முதல் முறை தமிழை சந்தித்த தினத்திற்கு நினைவில் பயணித்திருந்தாள்.

பள்ளி இறுதி வருட தேர்வு முடித்து விடுமுறையிலிருந்த வெண்பா, சண்முகத்துடன் கோயம்புத்தூர் கார் மியூசியம் சென்றிருந்தாள்.

அங்கு சண்முகம் தன்னுடைய தோழர் ஒருவரை சந்திக்க...

"எதிரில் இருக்கும் பார்க்கில் பேசிட்டு இருக்கோம் அம்மு. நீ சுற்றி பார்த்துவிட்டு வா" என்று சென்றிட, வெண்பா பல வகை கார்களின் தோற்றத்தில் ஆழ்ந்து போனாள்.

திடீரென கேட்ட சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்தாள். அங்கு பூபேஷுடன் இன்னும் நான்கு நண்பர்களுடன் கலகலத்து சிரித்துக் கொண்டிருந்தான் தமிழ்.

தமிழின் கண்கள் சுருங்கி அதரம் விரிந்து இதழோரம் குட்டி புன்னைகையுடன் முகம் முழுக்க சிரித்திட... அவனை பார்த்ததும் வெண்பாவுக்கு பிடித்துவிட்ட உணர்வு.

அவர்கள் தங்களுக்குள் கொட்டம் அடித்தபடி அவ்விடத்தை சுற்றிவர, வெண்பாவின் பார்வை தமிழையே சுற்றி வந்தது. ஏனென்று காரணம் தெரியாமலே அவனின் பின்னால் பார்வையை தொடர்ந்து வைத்தாள்.

மியூசியத்திலிருந்து நண்பர்களுடன் தமிழ் வெளியேற அவளும் வெளியேறினாள்.

வெளியில் வந்ததும் தமிழ் அங்கிருந்த மரத்திற்கு கீழ் நண்பர்களுடன் நின்றுகொள்ள... வெண்பாவுக்கு எதிரிலிருந்த பூங்காவை கண்டதும் தான் சண்முகத்தின் நினைவு வந்தது.

'என்ன வெண்பா பண்ணிட்டு இருக்க?' என்று தன் நெற்றியில் தட்டிக்கொண்டவள், திரும்பி ஒருமுறை தமிழை பார்த்துவிட்டு...

"அவங்க லிப்ஸ் ஓரம் தெரியுற அந்த குட்டி ஸ்மைல் எவ்வளவு அழகா இருக்கு" என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவளாக சாலையை கடக்க முயன்றாள்.

"எவ்வளவு நீளம்!"

பூபேஷின் வார்த்தையில் என்னவென்று தமிழ் பார்க்க...

"அந்த பொண்ணோட ஹேர் டா மச்சி... இப்பவும் இவ்வளவு நீளம் ஹேர் வச்சிக்கிறாங்களா?" என்று வெண்பாவின் மிக நீளமான பின்னலிட்ட கூந்தலை பார்த்து பூபேஷ் கேட்டிட...

"உண்மையான முடியாக இருக்காது மச்சான்" என்றான் மற்றொருவன்.

வெண்பாவின் கூந்தலை அவர்கள் ஆராய்ச்சி செய்திட, தமிழோ வெண்பா சாலையை கடக்க முடியாது முன்னால் ஓரடி வைத்து உடனே பின்னால் ஈரடி வைப்பதுமாக வாகனங்களின் வேகத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதை கண்டான்.

நிமிடங்கள் சென்றும் அவள் சாலையை கடப்பது போல் தெரியவில்லை.

தான் சாலையை கடப்பது போல் அவளின் அருகில் சென்று தமிழ் நின்றிட, வெண்பா தனக்கு அருகில் அலைப்பேசியை பார்த்தபடி சாலையை கடந்திட வந்து நிற்பவனைப் பார்த்து பளிச்சிட்டாள்.

தமிழ் வெண்பாவின் முகம் கூட பார்க்கவில்லை. அலைப்பேசியை பார்த்தபடியே சாலையை கடந்தவன், கீழ் கண்களில் தெரிந்த வெண்பாவின் பாதம் வைத்து, தன்னுடைய அடிக்கு ஏற்ப அவளும் உடன் வருகிறாள் என்பதை அறிந்து முன்னேறியவன், சாலைக்கு அந்தப்பக்கம் சென்றதும்,  திரும்பி வந்தபக்கம் நடந்தான்.

செல்லும் தமிழின் முதுகை விழி விரித்து பார்த்த வெண்பா,

"அவங்க ரோட் க்ராஸ் பண்ணலையா? எனக்காக வந்தாங்களா?" என்றவளாக புன்னகைத்துக் கொண்டாள்.

தமிழ் அவனது நண்பர்களுடன் இணைந்து கொண்டதும், அவர்கள் அவனின் செயல் குறித்து ஏதோ கிண்டல் செய்து சிரிப்பது தெரிந்தது.

அதற்குள் சண்முகமே வெண்பாவை கண்டுவிட்டு அருகில் வர, அவளின் கவனம் அவரில் பதிந்தது.

அதன் பின்னர் இருவரும் பொள்ளாச்சி செல்ல கோயம்புத்தூர் ரயில் நிலையம் வர, வெண்பாவால் அங்கும் தமிழை காண முடிந்தது.

அங்கிருந்த மேடையில் வெண்பா அமர, பக்கத்து மேடையில் தமிழ் மற்றும் பூபேஷ் அமர்ந்திருந்தனர். நண்பர்களுடன்.

"தண்ணீர் பாட்டில் வாங்கிவறேன்" என்று சண்முகம் செல்ல, அப்போது அங்கு வந்த மேட்டுப்பாளையம் ரயிலில் தமிழின் குழு ஏறியது.

தமிழ் ஓடிச்சென்று ஏறியதில் அவனது பாக்கெட்டிலிருந்து ஏதோ விழுந்திட, என்னவென்று எடுத்து பார்த்தாள் வெண்பா.

அது தமிழின் கல்லூரி அடையாள அட்டை.

வெண்பா கொடுக்கலாமென்று முயல... ரயில் புறப்பட்டிருந்தது. அந்த கூட்டத்தில் தமிழின் முகமும் தென்படவில்லை. அன்று முதல் அந்த அட்டை அவளின் வசம்.

சொல்லப்போனால் அதற்கு அடுத்த நாட்களில் தமிழின் சிரித்த முகத்தை மறக்க முடியாது... தன் மனம் புரிந்திடவே... அவனுக்காகவே அவன் படிக்கும் கல்லூரியில், அவனது துறையில் வந்து சேர்ந்தாள். வந்த பிறகு தான் தமிழ் கல்லூரியில் எத்தனை பிரபலமென்றே அவளுக்குத் தெரியும்.

முதல் நாள் அவன் மொத்த மாணவர்களையும் கூட்டி பேசியதிலேயே அவனின் குணமும் பிடித்துவிட மொத்தமாக அவனில் தொலைந்துவிட்டாள்.

தமிழ் பேசி முடித்து வெளிவருகிறான் என்றதுமே, அதுவரை அவனையே சன்னல் வழி பார்த்துக் கொண்டிருந்தவள் வேகமாக வேடிக்கை பார்ப்பதைப்போல் திரும்பிக் கொண்டாள்.

தமிழுக்காக வந்தவளுக்கு அவனிடம் சென்று பேசிட மட்டும் தைரியம் வரவில்லை. தள்ளி நின்று அவனை பார்ப்பதிலேயே அத்தனை மகிழ்வு கொண்டாள்.

தமிழுக்காக அங்கு வந்தவளுக்கு மற்றோரு மாணவனால் தனக்கு பிரச்சினை வருமென்று நினைக்கவில்லை. அவன் கொடுத்த தொல்லையில் சுற்றம் மறந்து தனக்குள் உழன்று கொண்டிருந்தவளுக்கு தமிழும் தன்னை கவனிக்கிறான் என்பதை கருத்தில் கொள்ள முடியாது போனது.

பெண்களிடம் பேசியே இராத தமிழ் அந்த மாணவன் விஷயத்தில் கல்லூரி மாணவத் தலைவனாக மட்டுமே உதவி செய்தான் என்று நினைத்தவளுக்கு, தமிழ் தன்னை உறவினர் என்று சொல்லியதே ஆச்சரியம் என்றால் தன்னை அவனின் நட்பாக ஏற்றது பெரும் அதிர்ச்சி.

நீ எனக்கு முக்கியம் என்பதை சின்ன சின்ன விஷியத்திலும் அவளுக்கு காட்டினான். அதையெல்லாம் அவன் நட்பின் அடிப்படையில் செய்கிறான் என நினைத்து, தன் காதலை மறைத்து வைத்திருந்தவளுக்கு இரண்டு நாட்களாக அவனின் பேச்சின் மூலம் உணர்வதென்வோ காதல் தான்.

தமிழின் மீது காதல் கொண்டுள்ள மனம், அதற்கேற்றார் போல் நினைத்துக் கொள்கிறதோ? வெண்பாவால் இப்படி சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை.

தமிழுடனான நினைவுகளுடன் மெஸ் சென்று உணவை முடித்துக்கொண்டு வந்தவள், அலைப்பேசியை எடுக்க இரண்டு தவரவிட்ட அழைப்புகள். அஸ்வினிடமிருந்து.

"ஹாய் அண்ணா! போயிட்டு வந்துட்டிங்களா? நைட் கால் பண்ணலாம் இருந்தேன்" என்றாள்.

"ம்ம்ம் இப்போதான் அம்மு" என்றவன் பொதுவான பேச்சிற்கு பின்னர் மௌனமாகிட...

"பொண்ணு பிடிச்சிருக்குங்களா உங்களுக்கு?" எனக் கேட்டாள்.

"ரொம்ப பிடிச்சிருக்குடா!" சிறு வயது முதலே தன் உணர்வுகள் யாவற்றையும் தங்கையிடம் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து கொள்பவனுக்கு... இதில் மறைக்க ஒன்றுமில்லை என்பதால் உள்ளத்து நிலையை வெளிப்படையாகக் கூறியிருந்தான்.

"ரொம்பவா?"

"ம்ம்ம்ம்..." 

அஸ்வினின் சந்தோஷத்தை வெண்பாவால் உள்வாங்கிட முடிந்தது.

"பேசுனீங்களா?"

"செட் ஆகும் தோணுது அம்மு" என்ற அஸ்வின், "அவளோட தம்பியை இன்னும் அதிகமாக பிடிக்குது" என்று தமிழின் செயலை குறிப்பிட்டு சொன்னான்.

"அக்கா, தம்பி நல்ல அட்டாச்ட் அம்மு. சோ, உன்னையும் என்னையும் அவளால் புரிஞ்சிக்க முடியும்" என்றான்.

"அண்ணா" என்ற வெண்பா, "எதிலும் என்னை வச்சு பார்ப்பீங்களா நீங்க? இது உங்களுக்கானது... ஸ்பெஷல் மொமெண்ட்" என்றாள்.

அஸ்வினிற்காவது அன்னை தந்தை இல்லாமல் போனபோது ஓரளவிற்கு விவரம் தெரியும் வயது. வெண்பா சிறு மழலை. அப்போதிலிருந்து அவளுக்காக என்றே வாழ்பவனுக்கு தன்னுடைய திருமண விஷியத்திலும் தங்கையை முன்னிறுத்தி அனைத்தையும் யோசிக்கத்தான் அவனுக்குத் தோன்றியது.

"லவ் யூ'ண்ணா" என்ற வெண்பாவிற்கு, பூர்வியை அஸ்வினிற்கு பிடித்திருக்கிறது. அந்த பிடித்தத்திற்கு காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று அவனின் மகிழ்வில் மகிழ்வு கொண்டாள்.

"போட்டோ அனுப்பவாடா அம்மு?"

"கல்யாணமே வேண்டான்னு சொல்லிட்டு இருந்த என் அண்ணாவை பார்த்ததும் தலையாட்ட வைத்தவங்களை நான் நேரில் தான் பார்க்கணும்" என்று மறுத்துவிட்டாள்.

"உங்க ரெண்டு பேருக்கும் நல்லாவே ஒத்துப்போகும்" என்றவன் வெண்பாவின் தேர்வுகளைப் பற்றி பேசிவிட்டு அழைப்பை வைத்தான்.

வெண்பாவுக்கு எதுவாக இருந்தாலும், எத்தனை நாட்கள் ஆகியிருந்தாலும் அதனை தமிழிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவளுக்கு முழுமையடையும்.

கொஞ்ச நேரத்துக்கு முன்பு தான் தமிழிடம் பேசியிருக்க... இப்போது உடனே எப்படி அழைப்பதென்ற தயக்கம்.

இப்போதெல்லாம் வாரம் இருமுறையென இருந்த அலைப்பேசி அழைப்புகள், இந்த ஒரு வாரத்தில் பலமுறையென அதிகரித்து விட்டதைப்போலிருந்தது. அது பிடித்தும் இருந்தது.

இப்போது அழைத்தாலும் தமிழ் ஏன்? எதற்கு? என்று கேட்டிட மாட்டான். ஆனால் அவனிடம் தான் தடுமாறிப்போகிறோம் என்பதே அவளுக்கு இன்ப அவஸ்தையாக இருந்தது.

'இவங்களை நினைத்தாலே எல்லாம் மறந்துப்போகும்' என நினைத்தவள் அடுத்த தேர்விற்கான புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். சில நிமிடங்களில் அதில் மூழ்கியும் போனாள்.

வெகு நேரம் சென்றே சுற்றம் உணர்ந்தவள், இரவு உணவுக்கான நேரமாகியதை அறிந்து புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தாள்.

அன்று விடுதி தினம் என்பதால் மெஸ்ஸில் ஆட்டம் பாட்டமென ஒரே கொண்டாட்டம்.

ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஒரே மெஸ் என்பதால், கொண்டாட்டத்திற்கு பஞ்சமின்றி நேரம் வேகமாக கரைந்தது.

அன்று இறுதி ஆண்டு விடுதி மாணவர்களுக்கு மற்ற ஆண்டு விடுதி மாணவர்கள் பிரிவு உபச்சார விழாவாகவும் சேர்த்து ஏற்பாடு செய்திருக்க... வெண்பாவால் அறைக்கு எழுந்து செல்ல முடியவில்லை.

ஜூனியர்ஸ் சீனியர்களுக்கு விளையாட்டுக்கள் வைத்து தாங்கள் சொல்வதை செய்திட சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இங்கோ படுக்கையில் விழுந்த தமிழ் நேரத்தை பார்த்து, இன்னும் வெண்பாவிடமிருந்து குட்நைட் மெசேஜ் வராததால், படித்துக்கொண்டிருக்கலாம் என நினைத்து அவளின் தகவலுக்காகக் காத்திருந்தபடி அலைப்பேசியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

அப்படி அவனது தொடர்பிலிருக்கும் ஜூனியர்ஸ் விடுதி கொண்டாட்ட புகைப்படங்கள் ஸ்டேட்ஸ் வைத்திருப்பதைக் கண்டான்.

'ஹாஸ்டல் டே'வா?' தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், 'எப்போ முடியும் தெரியலையே! இவகிட்டேர்ந்து மெசேஜ் வராமல் தூக்கமும் வராது' என்று புலம்பியவனாக பூபேஷுக்கு அழைத்து பேச்சில் சில நேரத்தை கடத்தினான்.

பூர்வி, அஸ்வினின் திருமணத்தை பகிர்ந்து கொண்டான்.

"சோ, நிஜமாவே ரிலேட்டிவ் ஆகிட்டிங்க?" எனக்கேட்டு தமிழை பூபேஷ் ஒருவழி செய்திட்டான்.

விளையாட்டில் வெண்பாவின் முறை வர, அவளை பாட வைத்தனர். வெண்பா தனக்கு தெரிந்த அளவில் பாடிவிட்டு, மெஸ் பெஞ்சுக்களை ஒன்றாக இணைத்து உருவாக்கியிருந்த சிறு மேடை போன்ற அமைப்பிலிருந்து கீழிறங்க முற்பட, அவளது வகுப்புத் தோழன் திடீரென அவள் முன் மண்டியிட்டு ரோஜாவை நீட்டியிருந்தான்.

மொத மாணவக்கூட்டமும் ஓவென்று கூச்சலிட்டு ஆர்பரித்தனர்.

அம்மாணவனுக்கு ஆதரவாக சிலர் வெண்பாவை சம்மதம் சொல்ல சொல்லி கத்தி கூச்சலிட்டனர்.

பூபேஷுடன் பேச்சினை முடித்துக்கொண்ட தமிழ், மீண்டும் வாட்சப் ஸ்டேட்டஸினை பார்வையிட வெண்பாவிடம் காதலை சொல்லிய மாணவனின் நண்பன், வெண்பாவின் முன் அவன் மண்டியிட்டு பூவை நீட்டியபடி இருக்கும் புகைப்படக் காட்சியை வைத்திருந்தான். 

அடுத்த நொடி ஸ்டேட்டஸ் வைத்த மாணவனுக்கு தமிழ் அழைத்துவிட்டான்.



    


Leave a comment


Comments


Related Post