இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
பொன்வண்டு நாடிய பூச்செண்டு...33-1 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK017 Published on 29-04-2024

Total Views: 30104

மண்டபம் முழுக்க கூட்டம் நிரம்பி வழிந்தது. முகிலன் பூச்செண்டின் சொந்த பந்தங்கள் தரணியின் வழி சொந்த பந்தங்கள் பழக்கவழக்கங்கள் மேலும் பெங்களூரில் இருந்து மொத்தமாய் கிளம்பி வந்திருந்த அலுவலக நண்பர்கள் என்று அந்த மாலை மயங்கிய முன்னிரவு நேரத்தில் மண்டபமே கலகலப்பாய் மாறி இருந்தது. ஜோடிகள் இரண்டும் கண்ணை பறிக்கும் அழகுடன் மேடையில் நின்றிருந்தனர் ஆண்கள் இருவரும் கோட் சூட் அணிந்து நிற்க அவர்களது உடையின் நிறத்திற்கு இணையான நேரத்தில் கல் வேலைப்பாடுகளுடன் கூடிய பிரைடல் லெகங்காவில் பெண்கள் இருவரும் அழகில் போட்டி போட்டனர்.


முகம் முழுக்க சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் இருந்தாலும் பூச்செண்டிடம் ஒட்டிக் கொள்ளாமல் சற்று விலகித்தான் நின்றிருந்தான் தரணி. காலையில் அவளுடன் பெரு விரலால் பெருவிரலை மோதி டீல் வைத்ததில் இருந்து இதே ஒதுக்கம்தான். பேசுவான்… சிரிப்பான்… ஆனால் தொடாமல் தள்ளி நிற்பான். எப்படியும் தன்னிடம் வலிய வந்து இழைந்து குழைவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனோ ‘நான் என்ன சும்மாவா’ என்று தெலுங்கு பட டைட்டில் போல் விறைத்துக் கொண்டு திரிந்தான். 


மலரின் மகரந்த மணத்தில் மயங்கி கிடக்கும் வண்டாய் தன்னை இடுப்போடு அணைத்து பேபி என்று தாபமாய் குழைவான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க அவனோ சரிதான் போடி என்று பார்வையால் அவ்வப்போது நோண்டிக் கொண்டிருந்தான்.


‘நெட்டமாடு ரொம்ப பண்ணுதே… கெட.. எனக்கென்ன… நீ கெத்த விட்றாத பூச்செண்டு…’ அடிக்கடி தன் தோளில் தட்டிக் கொண்டாள் அவள்.


போட்டோ செஷனில் தோளில் கை போடு இடுப்பில் கை போடு என்று போட்டோகிராபர் ஒவ்வொன்றாய் கூற இப்போ என்ன செய்வ என்பதுபோல் கெத்தாய் பார்த்தவளிடம் “இது தவிர்க்க முடியாது… இப்படி தொடுறது வேற… நாம போட்ட டீல் வேற…” என்று காதுக்கருகில் குனிந்து கிசுகிசுப்பாய் கூறி இடுப்போடு இறுக்கி அணைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்து அவளுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்தி குட் டச் பேட் டச்சிற்கு வேறு மாதிரி விளக்கம் கொடுத்து வைத்தான்.


ஆனால் தங்களின் இணையின் அழகை இருவரும் கள்ளத்தனமாய் ரசித்துக் கொள்ள தவறவில்லை. வாழ்வின் ஒரே ஒருமுறையான அற்புத நொடிகளை தங்களுக்குள் சேமித்துக் கொள்ளவும் தயங்கவில்லை. ஒரு பெரிய தட்டில் நான்கு லோட்டாக்கள் நிறைய பழச்சாறுடன் வியர்வையில் வழிந்த முகத்தை தோளை உயர்த்தி துடைத்தபடி மேடையின் மேலே ஏறினான் பரமசிவன்.


“எம்புட்டு நேரமா நின்னுக்கிட்டு இருக்கீக… தண்ணி கூட குடிக்காம தொண்டையே வறண்டு போய் இருக்கும்… இந்த ஜூஸையாவது குடிங்க…” உரிமையாய் அவர்களிடம் நீட்டினான்.


“வேற ஏதாச்சும் வேணுமா…?” அக்கறையாய் கேட்டான்.


“பசிக்குது பரமண்ணே…” வயிற்றை தடவினாள் பூச்செண்டு.


“க்யூ கட்டி நிக்கிற கூட்டத்தை பார்த்தா இப்போதைக்கு நீங்க சாப்பிட போக முடியாது போல தெரியுதேடா… மேடை ஏறுறதற்கு முன்னாடியே கொஞ்சமா சாப்பிட்டு வந்திருக்கலாம்… இன்னொரு டம்ளர் ஜூஸே எடுத்துட்டு வரட்டுமா…”


“இல்லல்ல வேணாம்… அப்புறம் சாப்பிட முடியாது... நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்…” சலிப்புடன் சொன்னவளிடம் சிரிப்புடன் தலையாட்டி கீழே இறங்கிக் கொண்டான் பரமசிவன். 


“வயித்துல குழந்தையோட இருக்கிறவளே அமைதியா இருக்கா… மதியம் பிரியாணியை ஃபுல் கட்டு கட்டினியே… அப்புறம் என்னடி உனக்கு பசி வந்துருச்சு…” வேண்டுமென்றே அவளை வம்பிழுத்தான் தரணி.


“நான் ஃபுல் கட்டு கட்டினதை நீங்க பார்த்தீங்களா…? அப்படியே இருந்தாலும் எட்டரை மணி ஆச்சு… பசிக்காம இருக்குமா…? உங்களுக்கு வேணாம்னா நீங்க பட்டினியா கிடங்க… என்னை ஏன் சீண்டுறீங்க…?” பழைய பூச்செண்டாய் மாறி அவனிடம் பாய்ந்தாள்.


“என்கிட்ட சேலஞ்ச் பண்ணினேல்ல… எத்தனை நாள் வேணும்னாலும் பட்டினியா இருப்பேன்… பாக்குறியா…” மீசையை நீவியபடி அவளை கண்கள் சுருக்கிப் பார்க்க அவனை மேலிருந்து கீழே பார்த்தவள் “எதோட எதை முடிச்சு போடுறீங்க… வீட்டுக்குப் போய் உங்களை கவனிச்சுக்கிறேன்…” பற்களை கடித்தபடி அவனை முறைத்தாள்.


“நீயா விரும்பி கவனிச்சா நான் ஆட்சேபணை சொல்ல மாட்டேன்…ஆனா நானே வலிய மரமாட்டேன்... தட்ஸ் இட்…” அவன் தோள்களை குலுக்கிக் கொள்ள “உங்கள…” என்று அவன் தலையில் குட்டப் போனவள் தான் இருக்கும் இடம் கருதி அவன் மாலையை சரி செய்வது போன்ற பாவனையுடன் சிரிப்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டு முன்னோக்கி திரும்பிக் கொண்டாள்.


“யார் மீரா அந்த பிளாக் பெர்ரி…?” மீரா முகிலனிடம் பரிசுப் பொருளை கொடுத்து மீராவின் காதில் ரகசியமாய் கேட்டாள் அவர்களுடன் பணி புரியும் அக்ஷரா.


அவள் குறிப்பிட்டு கேட்ட நபர் நமது பரமசிவனே தான் மண்டபம் முழுக்க ஓடியாடி வேலை செய்தபடி துருதுருவென திரிந்து கொண்டிருந்தவனின் ஓங்கிய குரலும் கவனிப்பு முறையும் தெனாவட்டு தோற்றமும் அவளை பெரிதும் வசீகரித்து விட்டன போலும். 


“யாரை கேட்கிற…?” புரியாமல் விழித்தாள் மீரா.


“கொஞ்சம் முன்னால உங்களுக்கு ஜூஸ் கொடுத்துட்டு போனாரே… அதோ அவர்தான்…” யாரையோ கை நீட்டி அழைத்து ஏதோ சத்தமாய் வேலை சொல்லிக் கொண்டிருந்தவனை சுட்டிக்காட்டினாள்.


“அவர் பேர் பரமசிவன்… முகிலோட ஸ்கூல் பிரண்ட்‌.. ரிலேட்டிவும் கூட…” என்றவள் “ஆமா எதுக்குடி கேட்கிற…?” புருவம் சுருக்கி வித்தியாசமாய் பார்த்தபடி கேட்டாள்.


“சும்மாதான்… அவரோட ஹாஸ்பிடாலிட்டி ரொம்ப அட்ராக்டிவா இருந்தது… அதான் கேட்டேன்…” தோளை குலுக்கியவளை ஒரு மார்க்கமாய் பார்த்தவள் “ஹாஸ்பிடாலிட்டி அட்ராக்டிவா இருக்குதா… இல்ல ஆளே அட்ராக்டிவா இருக்காரா…?” குறும்பாய் சிரிக்க “ஏன்… ஆளுந்தான் அட்ராக்டிவா இருக்கார்… இந்த லைட் வெளிச்சத்தில கருப்பா தகதகன்னு மின்றார் பாரு…” என்றாள் அக்ஷரா ஒருவித ரசனையுடன். ஆவென வாயை பிளந்திருந்தாள் மீரா.


“சும்மாடி… ஜஸ்ட் ஃபார் ஃபன்…” கண் சிமிட்டி சிரித்த அக்ஷரா அடுத்த பரிசுப் பொருளை தரணி பூச்செண்டிடம் கொடுத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்து மேடையில் இருந்து இறங்க “ஏங்க…  சாப்பிட வாங்க… ப்ரீயாதான் இருக்கு…” என்றபடி அவளை நெருங்கினான் பரமசிவன்.


“பிரண்ட்ஸ் எல்லாரும் கிப்ட் கொடுத்துட்டு இருக்காங்க… எல்லாரும் குரூப் போட்டோ எடுத்துட்டு செட்டா வந்துடுறோம்...” சிரித்தபடி தானும் பதில் அளித்தாள்.


“ஓ… முகிலோட வேலை செய்றவங்களா நீங்க எல்லாரும்…” என்றவன் கண்களால் அனைவரையும் ஆராய்ந்து “சரி… அம்புட்டு பேரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடுற மாதிரி ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்… வந்துருங்க…” என்றவன் போனை எடுத்து காதில் வைத்து “எலேய்… வேலு…” என்றபடியே நகர “நைஸ் ஸ்லாங்… நைஸ் கை (guy)” தனக்குத்தானே சிரித்தபடி கூறிக் கொண்டாள் அக்ஷரா. (அடுத்த கதைக்கு அச்சாரம் 🤣🤣)


ஒரு வழியாக அனைத்தையும் முடித்து அனைவரும் வீடு வந்து சேர்ந்தபோது இரவு மணி பதினொன்றை தாண்டி இருந்தது. அனைவருக்குமே அசாத்திய அசதி… மீராவின் சோர்வு அவளது முகத்திலேயே அப்பட்டமாய் தெரிந்தது… அறைக்குள் நுழைந்து உடை தலை அலங்காரம் என்று அனைத்தையும் கலைக்க உடனிருந்து உதவி செய்த முகிலன் அவள் படுத்தபின் பாதங்களை மென்மையாய் பிடித்துவிட்டான்.


“முகி… அதெல்லாம் ஒன்னும் வேணாம்… நீங்களும்தானே என்கூட நின்னீங்க… உங்களுக்கும் டயர்டாதானே இருக்கும்… நீங்க படுங்க…” தடுக்க முயன்றவளை தலை வருடி நெற்றியில் முத்தமிட்டு படுக்க வைத்தவன் “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடி… நீ நிம்மதியா தூங்கு… நான்தானடி காலை பிடிச்சு விடறேன்… அமைதியா படு…” பிடிவாதமாய் அவள் பாதங்களையும் விரல்களையும் மென்மையாய் அழுத்திக் கொடுக்க சில நிமிடங்களிலேயே ஆழ்ந்து உறங்கி இருந்தாள் மீரா.


பூச்செண்டோ தன் தலை அலங்காரத்தை கலைக்க பெரும்பாடு பட்டபடி டிரெஸ்ஸிங் டேபிளின் எதிரே அமர்ந்து இருந்தாள். அவள் படும் சிரமங்களை கடைக்கண்ணால் பார்த்திருந்தாலும் ஒன்றும் தெரியாதவன்போல் இரவு உணவை உடைக்கு மாறி கட்டிலில் படுத்துக்கொண்டான் தரணி. கண்ணாடி வழியே அவனை பார்த்தவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.


“கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா…?” கண்ணாடி வழியே பார்த்து கத்தினாள்.


“அதெல்லாம் நிறைய இருக்கே…” கைகள் இரண்டையும் தலைக்கு அடியில் கொடுத்து விட்டத்தை பார்த்தபடியே நக்கலாய் பதிலளித்தான்.


“இந்த டிரஸ்தான் போடணும்… இந்த மாதிரிதான் ஹேர் ஸ்டைல் இருக்கணும்னு நீங்கதானே எல்லாத்தையும் செலக்ட் பண்ணி குடுத்தீங்க… தலையில அங்கங்கே நூல் போட்டு கட்டி வச்சிருக்காங்க… நானே எப்படி ரிமூவ் பண்றது…? கையும் வலிக்குது… தலையும் வலிக்குது…” சலிப்பும் எரிச்சலுமாய் சத்தமிட்டவள் ஒரு பக்கமாய் புரண்டு படுத்து தலையை கையில் தாங்கி காலை ஆட்டியபடியே குறும்பாய் பார்த்துக் கொண்டிருப்பவனை முறைத்தாள்.


“நீயே பியூட்டிஷியன் தானே… நேக்கா கழட்ட தெரியாதா…?”


“எனக்கே எப்படி பண்ணிக்க முடியும்…? வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க…” திரும்பி அமர்ந்து அவனை முறைத்தபடி கூறினாள்.


“நோ வே… உன்னை தொடமாட்டேன்னு டீல் போட்டிருக்கேன்…”


அடுத்த நொடி ஒரு சீப்பு பறந்து வந்து அவன் மேல் விழுந்தது. 


“தொட்டு தொட்டு போட்டோவுக்கும் வீடியோவுக்கும் போஸ் கொடுக்கும்போது மட்டும் இனிச்சதோ…”


“நான்தான் சொன்னேனே… அது வேற…”


அடுத்ததாக பவுடர் டப்பா பறந்து வந்து அவன்மேல் விழ லாவகமாய் பிடித்துக் கொண்டவன் இதழுக்குள் சிரிப்பை அடக்கினான். தரையை தாண்டி வழிந்த கொண்டிருந்த பாவாடையை இரு கைகளாலும் தூக்கிப் பிடித்து டங் டங் என நடந்து வந்து மெத்தையில் அவன் அருகில் அமர்ந்தாள் பூச்செண்டு.


“மாமு… டென்ஷன் பண்ணாதீங்க… செம டயர்டா இருக்கு… உச்சந்தலையில நூல் வச்சு கட்டி இருக்காங்க.. அதை கழட்டி விடுங்க…” கோபத்தை அடக்கியபடி சற்று தன்மையாகவே பேசினாள்.


“ஆனா டீல்படி நீயா ஆசையா என்கிட்ட…” முடிக்கும் முன் தலையணையை எடுத்து அவனை அடிக்கத் தொடங்கினாள்.


சத்தமிட்டு சிரித்தவன் அவள் கையில் இருந்த தலையணையை பிடுங்கி ஓரமாய் வைத்து எழுந்து அமர்ந்து கோபத்தில் சிவந்திருக்கும் அவள் முகத்தை ரசனையாய் பார்த்தபடியே “நீ வலிய வந்து ஹெல்ப் கேட்கிறதாலதான் பண்றேன்… ஆனா டீல் டீல்தான்…” ஒற்றை விரல் நீட்டி கூற பெரிய பெரிய மூச்சுக்களுடன் அவனைப் பார்த்தவள் அவனை முறைத்தபடியே இன்னும் நெருங்கி அமர்ந்து தலையை குனிந்து காட்ட அவள் முடியோடு சேர்த்து கட்டி இருந்த கருப்பு நூலை லாவகமாக பிரித்து எடுக்கத் தொடங்கினான்.


“ஸ்ஸ்.. ஆஆ… வலிக்காம பண்ணுங்க…” எரிச்சலாய் சத்தமிட்டு கத்த “ஏய்… நாலு ஊருக்கு கேக்குற மாதிரி எதுக்குடி இப்படி சத்தம் போடற… வெளியில இருந்து கேக்குறவங்க அசிங்கமா நினைக்கப் போறாங்க… என் இமேஜை ஸ்பாயில் பண்ணி விட்றாத…” வேலையில் கவனம் வைத்தபடியே கூறியவனை நிமிர்ந்து பார்த்து தீயென முறைத்தாள். ஒரு வழியாய் ஒவ்வொன்றாய் பிரித்து தலை அலங்காரத்தை கலைத்து அவள் கூந்தலை விரித்து விட்டிருந்தான்.


Leave a comment


Comments


Related Post