இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதரம் -01 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK021 Published on 29-04-2024

Total Views: 22152

இதரம் -01

மிகப் பிரம்மாண்டமாக காட்சியளித்தது அந்த வீட்டின் நடுக்கூடம். வீடு என்பதை விட மஹால் எனக் கூறலாம். நடுக்கூடத்தில் தொங்கும் சாண்டிலியரிலிருந்து கீழே விரிக்கப்பட்டிருந்த ரஜாய் வரை அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு இடமும் அங்குள்ளவர்களின் செல்வச் செழிப்பை பறைசாற்றியது. 



வட்டமேஜை மாநாடு நடக்கவிருப்பது போல ஒரு பரபரப்பான சூழல். மொத்தக் குடும்பமும் உணவருந்த வந்திருந்தனர். காலை உணவு எவர்சில்வர் பாத்திரங்களில் அடைக்கப்பட்டு இருந்தது வந்தவர்களுக்கு விருந்தாக. திரைப்படங்களில் காட்டுவது போல அவ்வீட்டின் பெரிய மனிதர் வந்தால் தான் உணவருந்த வேண்டும் என்ற விதி அல்லாமல் அவரவர் வந்ததும் உணவருந்தி விட்டு நகர்ந்து கொண்டிருந்தனர். 


"மாறன் சாப்பிட வந்தாச்சா?" என்று கேட்டபடி வந்தமர்ந்தார் அவ்வீட்டின் பெரிய மனுஷி ஜீவரத்தினத்தம்மாள். அவ்வீட்டின் மொத்த ஜீவனும் அவருள் அடக்கம். என்பது வயதை தொட்டுவிட்ட பெண்மணி. 


"இன்னும் இல்லை அத்தை" பவ்யமாக பதில் வந்தது அறுபதை தாண்டிய ஜெகதீஸ்வரியிடமிருந்து. 


"மணி என்னன்னு தெரியுமா?" என்று கேட்டவர்," மல்லி!" என குரல் கொடுக்க, பதற்றத்துடன் ஓடி வந்தாள் தேவமல்லி. பொன்மஞ்சள் நிறத்தில் தாலிக்கயிறு மிணுமிணுங்க வந்தவளைப் பார்த்ததும் தெரிந்துவிடும் சமீபத்தில் தான் திருமணம் நடந்திருக்கிறது என்று. 


"பாட்டி !"என்று படபடக்க நின்றவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு," கூப்பிட்டா இப்படி வேகமா ஓடி வரக் கூடாது. வயிற்றில் பிள்ளையை வச்சுக்கிட்டு உனக்கேன் இந்த ஆகாத வேலை?" என்று கடிந்தவர்," மாறன் இன்னும் சாப்பிட வரலையாமே?" என்று அடுத்ததாய் கேட்க


"நா... நான் கொண்டு போறேன் பாட்டி."என்றாள். 


"இப்போதைக்கு கொண்டு போய் கொடு. ஆனா மதியம் அவன் மேசைக்கு வந்து தான் சாப்பிடணும் புரிஞ்சுதா?" என்று கணீர் குரலில் பேச," ம்ம்ம்" என தலையாட்டினாள் அவள்.


குரலின் கம்பீரம் யாரையும் அடிபணிய வைத்துவிடும் அத்தனை நிமிர்வு ஜீவரெத்தினத்தம்மாளிடம். 



'அவரிடம் எப்படி பேச?' என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள் மல்லி. 


'இருக்கும் கோபத்திற்கு ஏதாவது திட்டி விட்டான் என்றால் ?'என்று தான் தோன்றியதே தவிர,' அடிப்பான் என்றெல்லாம் யோசித்திடவில்லை அவள். ஏனெனில் அவன் அடிப்பான்' என்ற எண்ணம் துளி கூட அவளது சிந்தனையில் வரவில்லை. அவளின் சிந்தனை நாயகன் இன்னும் வெளிப்படவில்லை அறையிலிருந்து. 


தலையை படிய வாரிக் கொண்டிருந்தான் திருமாறன். நேற்று இருந்த களைப்பு இன்னும் முகத்தில் மிகுதியாகத் தான் இருந்தது. சுத்தமாய் உறங்கவில்லை என விழிகள் உணர்த்தி விடும், அத்தனை சிவந்து போய் இருந்தது. எல்லாம் முடிந்தது என்ன பேசி இனி என்ன பயன் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டிருந்தான் ஆனாலும் அலைபாயும் மனது அளவில்லாத கோபம் கொண்டது நேற்றைக்கு திருமணம் முடித்த பெண்ணவள் மீது. என்ன செய்து வைத்துவிட்டாள் அவள் என்று ஆத்திரமாக வந்தது அவனுக்கு. கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தில் ஒரு குத்து விட எண்ணி கையை இறுக்கிக் கொண்டுச் செல்ல மிகச் சரியாக 
அவனின் அறைக்கதவு மரியாதைக்காக தட்டப்பட்டது. முகத்தை இயல்பாய் மாற்றினான். தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன், கதவை நோக்கி நடந்தான். 


தட்டிய கதவு சில நொடிகளிலேயேத் திறக்கப்பட்டது. அவனுக்குத் தெரியும் காலை உணவிற்காக தான் கதவு தட்டப்பட்டது என்று. கையில் உணவுத் தட்டுடன் வந்தாள் அவள். திருமாறனின் இயல்பு முகம் இறுக்கமாக மாறியது. 

"சார் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்." எப்போதும் கேட்ட குரல், ஆர்வமாய் எதிர்பார்த்த குரல். ஆனால் இன்று கேட்கும்போது மனம் வெறுத்தது அந்தக் குரலை. 


பதிலே பேசாமல் பார்த்தான் அவளை. 

உணவுத்தட்டை மேசையில் வைத்துவிட்டு வெளியேறப் போனாள் அவள். 


"நில்லு!"என்றான் அமர்த்தலாக


அதே இடத்தில் ஆணியடித்தாற் போல நின்றாள் பெண்ணவள். 


"எடுத்துப் பரிமாறு" என்றான். 



ஆச்சரியத்துடன் பார்த்தவள், மலர்ந்த முகத்துடன் எடுத்து வைத்தாள். 



ஒன்றும் பேசாமல் உணவருந்தியவன், கையைக் கழுவி விட்டு வந்தான். 


பாத்திரங்களுடன் வெளியேறப் போனவளை மீண்டும் தடுத்தது அவன் குரல். 


"காஞ்சு போயிடுமே...?"வெளியே வராத குரலில் அவள் உரைக்க, அதுவெல்லாம் அவன் காதில் விழுந்தது போலவே காட்டிக் கொள்ளவில்லை அவன். 


கதவு தாழிடப்படும் ஓசை கேட்கவே என்னவென்று புரியாமல் பார்த்தாள். 


"அதெல்லாம் டேபிள்'ல வை "என அழுத்தமாய் உரைக்க பாத்திரங்கள் மீண்டும் மேசைக்கு இடம் பெயர்ந்தது. 


"உட்கார்ந்து சாப்பிடு" என்றான். 


"இல்ல பசிக்கலை" என்றதும் அவன் முகம் இறுகியது. 


"பிள்ளைத்தாட்சி பொண்ணு, குழந்தைக்காக சாப்பிடுங்க மல்லி" என்றதும் அவள் முகம் போன போக்கில் திருப்தி கொண்டவனாய்," என்ன மயக்கம் வருதா?" என்றவனின் குரலில் இருந்த கடுகடுப்பு சற்று முன் இருந்த அவள் மனநிலையையே மாற்றியது. 


"உன்னை இவ்வளவு ஹார்ஷா ஹேண்டில் பண்ணுவேன்னு ஒரு நாளும் நினைச்சதில்லை நான். உன்னை சந்திச்ச நாளை கூட நான் வெறுக்கிறேன் இப்போ."என்றான் எரிச்சலாக. 



உதடு கடித்து கண்ணீரை அடக்கி நின்றவள், உணவருந்த அமர்ந்தாள். வேகமாய் அவளை தூக்கி நிறுத்தியவன் கன்னம் வலிக்கப் பற்றினான். 



"சா... சார்... சார் வலிக்குது" கண்ணில் நீர் நிறைய உரைத்தவளின் இதழ்கள் அவன் வசமிருந்தது. சற்று நேரத்தில் விலக்கியவன், எதுவும் நடவாதது போலவே மென் மெத்தையில் அமர்ந்து கொண்டான். 



அவளுக்கோ அவன் கைத்தடம் கன்னத்தில் நன்கு பதிந்து போயிருந்தது. இதழ்களின் வன்மைக் கூடலில் காயம்பட்டிருந்தது வேறு. வலியின் காரணமாக அவள் விழிகள் கலங்கியிருக்க, அப்படியே உணவுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். 



வெளியே வந்த அவளின் மீது தான் அத்தனை பேரின் பார்வையும் இருந்தது. விறுவிறுவென்று சமையற்கூடத்திற்குள் நுழைந்து கொண்டாள். பாத்திரங்களை அவசரமாக கழுவப் போக 



"ம்மா ம்மா நான் பண்ணிக்கிறேன் நீங்க போங்கம்மா" என வேலைக்கார பெண்மணி வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்க, அதற்கு மேலும் அங்கே நிற்க இயலாதவளாய் அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் தங்கும் அறையில் தஞ்சம் புகுந்தாள். 



"என்னாச்சு அவ வேகமா போறா?" என்று முப்பது வயது மதிக்கத்தக்க ஒருத்தி கேட்க


"கன்னத்துல கைத்தடம் இருந்துச்சு மா. சின்னையா அடிச்சுட்டாரு போலருக்கு பாவம்" என்று முணுமுணுப்பாய் சொல்லி விட்டு வேலையை கவனித்தாள் அந்தப் பெண். 



கேட்டவளோ நொடியில் வெளியேறி அனைவருக்கும் செய்தியைப் பகிர்ந்திருந்தாள். 


"அடிச்சிருப்பார் போல கன்னத்தில் தடம் இருக்கு. ரத்தம் வேறயாம் உதட்டில் , பஞ்சு சொன்னா. பாவம் பிள்ளைத்தாச்சி வேற, இப்படி செய்யலாமா?. உங்க மகன் கிட்ட பேசுங்கத்தை. தவறை இவர் செஞ்சுட்டு அந்தப் பொண்ணை அடிப்பாரா பாவமில்ல" என்று ஆதங்கம் போலவே சொல்லி பற்ற வைத்துவிட்டுச் சென்றாள் அவ்வீட்டின் மூத்த மருமகள் நயனிகா. 



ஜெகதீஸ்வரிக்கு சுருக்கென்றிருந்தது மகனின் செய்கை. 


மக்கள் நலம் காக்கும் மருத்துவன் அவன். அவனிடத்தில் இப்படி ஒரு குணத்தை எதிர்பார்க்கவில்லை அவர். இவன் மீது தவறை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணை எப்படி கை நீட்டி அடிக்கலாம் எதற்கு அடிக்க வேண்டும். அவள் தன் பக்க நியாயத்தைக் கேட்டு அவன் தான் தந்தை என்று நிரூபித்த பிறகு தானே திருமணம் செய்து கொண்டாள். என் வயிற்றில் பிறந்தவன் இப்படியா வளர்ந்திருக்கிறான் என்று ஒரு தாயாய் அவர் நெஞ்சு கொதித்தது. தன் மகனே ஆயினும் திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணோடு இணைந்து குழந்தை வரை போயிருக்கிறான் என்றால் அவன் செய்தது தவறு தானே என மகனின் தவறுகளை சுட்டிக் காட்டியது அவரது மனம். 



"என்ன ஜெகா...?" கணவர் ஆதூரமாக தோள் தொடவும்," இவனுக்கு என்னங்க இவ்வளவு ஆணவம். அந்த பொண்ணை எதுக்கு கை நீட்டணும்?, இவன் செஞ்சது தப்புத்தானே?" என்று கோபத்துடன் கேட்க



"அது புருஷன் பொண்டாட்டி பிரச்சினை ஜெகா." என்றார் இளமாறன். 


"நேத்து தான் கல்யாணம் ஆகியிருக்கு, இன்றைக்கு கை நீட்டி இருக்கான். இதை புருஷன் பொண்டாட்டி சண்டைனு விடச் சொல்றீங்களா?, வெளியே தெரிஞ்சா நம்ம கௌரவம் என்ன ஆகறது? அதுவும் இல்லாம வேலைக்காரங்க எல்லாம் கவனிக்கிற அளவுக்கு அடிச்சிருக்கான்னா இது என்ன குணம். அவனை வரச் சொல்லுங்க நான் கேட்கிறேன். எதையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" என்று கொந்தளிக்க, இளமாறன்," சரி "என்றார். 



சற்று நேரத்தில் எல்லாம் திருமாறன் தன் பெற்றோரின் அறையில் இருந்தான். 



அவன் வந்ததுமே கத்தத் துவங்கிவிட்டார் ஜெகதீஸ்வரி. 



"பிள்ளைத்தாட்சி பொண்ணை கைநீட்டி அடிக்கிற அளவுக்கா அரக்கனா மாறிட்ட நீ?. உன் கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை திரு. அவ எது வேணும்னாலும் செஞ்சிருக்கட்டும். கைநீட்டுறது என்னப் பழக்கம்?" என்று கத்த



அவனோ அவர்களை அமைதியாகப் பார்த்து விட்டு, "சாரி மாம்" என்றபடி வெளியேறிவிட்டான். 

என்னங்க என்று ஜெகா இளாவைப் பார்க்க ஏற்கனவே எதுவும் பேச மாட்டான் இப்போ அதிகமா அமைதியா இருக்கான் இந்த மேரேஜை நாம நிறுத்தி இருக்கணும் ஜெகா. அந்தப் பொண்ணு சொல்றதை நம்பி இறங்கியிருக்கக் கூடாது என்றார் இளமாறன் மகன் சென்ற வழியைப் பார்த்தபடி.


"அவனே ஒத்துக்கிட்டான் தானே...? அப்புறம் எப்படி நிறுத்தி இருப்பீங்க, இவன் ஏதாவது மறுப்பு சொல்லி இருக்கலாம். செய்யலையே அத்தனை ரிலேட்டிவ்ஸ், பிஸ்னஸ் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி ஆமான்னு ஒத்துக்கிட்டானே?!" என கோபமாய் கேட்க


இளமாறன், "இதை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு எனக்குத் தெரியலை"என்றார் பெருமூச்செறிந்தபடி. 


"நம்ம வீட்டு ஆட்கள் முன்னாடி மட்டும் இது நடந்திருந்தா இந்நேரம் அந்தப் பொண்ணுக்கு ஏதோ காசோ, பணமோ தந்து விரட்டி விட்டு இருக்கலாம். இப்போ எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சுடுச்சு எப்படி விரட்ட?, அவ எங்கே போனாலும்  ஜெஆர்எம் குடும்பத்தின் மருமகளா தானே தெரிவா இல்லாட்டி என்று பல்லைக் கடித்த ஜெகதீஸ்வரி," நம்ம பிள்ளை மேல தவறை வச்சுக்கிட்டு யாரை நோக நான்?, நாய் தான் வாலாட்டுதேன்னு தடவிக் கொடுத்தா அது பதிலுக்கு நக்கித் தின்ன இங்கேயே வந்திடுச்சு" என்றார் கோபமாய். 



இளமாறனோ மனைவியை கண்டிக்க முடியாத நிலையில் அமைதியாக நின்றார். 


இளமாறன் அவ்வீட்டின் மூத்த வாரிசு. குடும்பத்தை ஜெஆர்எம் என்ற குழுமத்தை நிர்வகிக்கும் தலைவர். ஜெகதீஸ்வரி அவரது தர்மபத்தினி. என்ன தான் தலைவராக இருந்தாலும் வீட்டுப் பெண்களின் முடிவிற்கு மதிப்பு கொடுப்பவர் இளமாறன். ஜீவரெத்தினத்தம்மாளிடம் கேளாமல் மனைவியை கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய மாட்டார். இயல்பிலேயே பணிவானவர். இந்த தம்பதிக்கு மூன்று செல்வங்கள் மூத்தவன் ரகுவர்மன், அவனின் மனைவி நயனிகா. திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாகிறது இன்னும் பிள்ளைச்செல்வம் கிட்டவில்லை. இரண்டாமவது பெண்பிள்ளை கனகதுர்கா அவளுக்கும் திருமணம் ஆகிவிட்டது கணவர் நரேந்திரன்.மூன்று வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் இரட்டையர்கள் தன்யா பவ்யா. மூன்றாவது நம் நாயகன் திருமாறன் பொதுநல மருத்துவன். மூத்தவன் தந்தையுடன் சேர்ந்து குடும்பத்தொழிலை கவனிக்க பெண்ணவள் துர்காவும் அவர்களோடு இணைந்து கவனித்தாள் இதில் தப்பி வந்தது திரு தான். மருத்துவர் ஆவது அவன் கனவு. இளமாறன் மகனின் கனவை அச்சுப்பிசகாமல் நிறைவேற்றினார். மருத்துவர் ஆகி வந்தவன், வெளியே வேலை பார்க்க வேண்டும் என்று கிளம்ப அது தான் வீட்டுப் பெண்களுக்கு பிடித்தமில்லாமல் போனது. சலசலப்பிற்கு மத்தியில் தான் வெளியே சென்று வேலை பார்த்தான் திரு. மருத்துவமனை கட்டி அங்கே நிர்வாகியாக அவனை அமர வைக்க வேண்டும் என்று ஜெகதீஸ்வரி நினைக்க அவனோ நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டு கிளம்பி விட்டான். 


சிறிது நாட்கள் அவன் போக்கில் விடலாம் என்று இளமாறன் தான் சமாதானம் செய்து வைத்தார். நான்கு வருடங்களாக வெளியே தான் பணிபுரிந்தான் திரு. இதுவரையிலுமே எந்த பிரச்சினையும் கொண்டு வந்ததில்லை அவன். செய்யும் பணிக்கேற்ப அமைதியானவன் பொறுமைசாலி என்று தான் வெளியிலும் சரி குடும்பத்திலும் சரி பெயரெடுத்திருக்கிறான். ஆனால் இப்போதோ????? 


ஜீவரெத்தினத்தம்மாள் நெடுமாறன் தம்பதிக்கு மூன்று செல்வங்கள் இரண்டு ஆண்பிள்ளை ஒரு பெண்பிள்ளை. இளமாறன்,  திலகவதி, ஜெயராஜ். 


நெடுமாறன் - ஜீவரெத்தினம் 

இளமாறன், திலகவதி, ஜெயராஜ் 


இளமாறன் - ஜெகதீஸ்வரி 

ரகுவர்மன்(மனைவி நயனிகா) , கனகதுர்கா, திருமாறன் 


திலகவதி - செங்கதிரோன் 

 நரேந்திரன் (கனகதுர்காவின் கணவன், மகள்கள் தன்யா பவ்யா) 


ஜெயராஜ் - வைஷ்ணவி 

அர்ணவ்நெடுமாறன்


ஜெஆர்எம் குடும்பத்தின் உறுப்பினர்கள் இவர்கள் தாம். இதில் வந்து திருமாறன் மனைவியாக இணைந்தவள் தான் நம் நாயகி தேவமல்லி. அவ்வீட்டின் மூத்த மருமகள் நயனிகா வைஷ்ணவியின் அண்ணன் மகள். இதில் சொந்தமென்று இல்லாமல் தனியாக வந்து மருமகளாய் மாட்டியவள் தேவமல்லி மட்டுமே. அதிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவள். 


உண்மையில் நடந்தது என்ன திருமாறன் ஏன் மல்லியை வெறுக்கிறான் மல்லியின் நிலைக்கு திருமாறன் தான் காரணமா அல்லது மல்லி நாடகமாடுகிறாளா அடுத்த பதிவில் வருகிறாள் மாறனின் மல்லி. 



















Leave a comment


Comments 1

  • பிரியாமெகன் @Writer
  • 2 months ago

    சூப்பர் அக்கா 🤩


    Related Post