இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--13 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 30-04-2024

Total Views: 28065

இதயம் 13


     அன்றைய தினம் சாணக்கியன், மினி இருவருமே இரவு உணவு எடுத்துக்கொள்ளவில்லை. சாணக்கியன் பழைய நினைவில் துவண்டான் என்றால் மினியோ சாணக்கியனுக்கு அப்படி என்ன பிரச்சனையாக இருக்கும் என்ற யோசனையிலே நேரத்தைக் கடத்தினாள். 


     கைவிடப்பட்ட கைக்குழந்தை போல் அவன் நின்ற அநாதரவான தோற்றம் கண் முன் வந்து அவளைத் துன்புறுத்திக்கொண்டே இருந்தது. அவன் தன் சோகம் மறந்து மற்றவர்களைப் போல் மகிழ்வான் வாழ்வான் என்றால் அதற்காகத் தான் எதையும் செய்யத் தயார் என்று அவள் மனம் அடித்துக்கொள்ளத் துவங்கி இருந்தது.


     இரவு பத்துமணியை நெருங்கிய சமயம் வதனி மற்றும் ஜீவன் வந்து கொண்டிருந்த வாடகை வாகனம் சதுரங்க இல்லத்தைக் கடந்து தேன்மொழியின் இல்லத்தின் முன் நின்றது. 


     சாணக்கியன் அறை இருக்கும் முதல் தளத்தில் இன்னும் விளக்கு எரிவதைக் கவனித்துவிட்டு கணவனைச் சன்னமாய் முறைத்துப் பார்த்த வதனி கார் கதவைத் திறந்து இறங்கி வேகமாக தேன்மொழி வீட்டை நோக்கி நடந்தாள்.


     தான் வாழ்ந்து முடிக்கும் காலம் வரை யாருடைய நிழல் கூட தன்மேல் படக்கூடாது என்று நினைத்தாளோ அவனின் நிழலில் தன் தங்கையை இத்தனை நாள் இருக்கவிட்ட கணவனின் மீது கோபம், விட்ட குறை தொட்ட குறையை வைத்து இன்னமும் விளையாடும் விதியின் மீதான ஆத்திரம், தங்கையின் வயதின் மீது இருக்கும் பயம் என பலப்பல குழப்பங்கள் அவளைப் போட்டு படுத்தி எடுக்க, இந்த நேரம் இன்னொருவர் இல்லம் சென்று அங்கே அவர்களின் பாதுகாப்பில் இருக்கும் நம்வீட்டுப் பெண்ணை அழைத்து வருவது என்பது அவ்வளவு நன்றாக இருக்காது என்று ஜீவன் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அடம் பிடித்து அழைத்து வந்திருந்தாள் மினி.


     இத்தனை நாட்களில் என்னென்ன நடந்ததோ அதை யாரும் அறியார். ஆனால் இனிமேல் எதுவும் தவறாக நடக்கக் கூடாது என்பது தான் அவளின் இத்தனை பதற்றத்திற்குக் காரணம். தன் மூன்று பிள்ளைகளில் இளையவளை அவள் வைத்திருக்க, சபரி ஜீவனின் தோளில் உறங்கிக் கொண்டிருந்தான்.


     தந்தையின் கரத்தைப் பிடித்துக்கொண்டு நடந்து வந்த பாரியின் கவனம் அவன் சித்தியைப் போன்று சதுரங்க இல்லத்தில் விழுந்தது. அந்த வீட்டின் உச்சியில் இருளில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ராஜா சின்னத்தைப் பார்த்து ஆச்சர்யத்துடன் அதே இடத்தில் நின்றுவிட்டான்.


     “பாரி“ ஜீவன் அழைக்க, “அப்பா இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு“ மகன் சொன்னது தான் தாமதம், அவன் வாயை மூடிய ஜீவன் நல்லவேளை வதனி இவனைக் கவனிக்கவில்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு அவளின் பின்னால் சென்றான்.


     சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கும் அக்காவையும், அத்தானையும் பார்த்து மினி ஆச்சர்யப்பட, “மினி நீ இப்பவே நம்ம வீட்டுக்குக் கிளம்பு“ அதிகாரமாக சொன்னாள் வதனி.


     தேன்மொழியின் குடும்பமே தங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்து வதனி என்ற ஒற்றை வார்த்தையில் அவளை அமைதிப்படுத்திய ஜீவன், மினியை தங்களுடன் வரும்படி சைகை செய்ய அதைப் புரிந்துகொண்டவளுக்கு குழப்பம் இருந்தாலும்  கிளம்பினாள் தன்னவர்களோடு.


     காரில் ஏறியதும் மினியின் கவனம் தன்னால் சதுரங்க இல்லத்தின் மீது விழ, சின்னச் செறுமலுடன் தங்கையின் கவனத்தைக் தன் பக்கம் கொண்டு வந்த வதனி தன் மகன் பாரியை அவள் மடி மீது வைத்தாள். அதன்பிறகு மினியின் கவனம் வேறு எங்கும் செல்லவில்லை.


     ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த ஜீவன் பின்னால் திரும்பி, மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் தங்கையை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் அவசரப்பட்டு எதுவும் பேச வேண்டாம் என்று சைகையால் சொல்ல முதலில் முறைத்தவள் பின்பு மறுக்க ஆரம்பித்து கடைசியில் சம்மதித்தாள்.


     அவர்களின் வாகனம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து செல்வதை மகனின் அறை பால்கனியில் இருந்து  பார்த்துக்கொண்டிருந்த அரசன் மினியிடம் விரைவில் பேச வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டார். மினி யாராக இருந்தாலும் பரவாயில்லை. அவள் தான் தன் மகனின் மகிழ்வான வாழ்வுக்கான சாவி என்றால் அவளை தன் மகளாக ஏற்று அன்பு காட்டுவதில் அவருக்குப் பேரானந்தமே.


     கடந்தகால நினைவுகள் என்னும் கூண்டுக்குள் அடைபட்டு சுதந்திரத்தைப் பற்றிய யோசனை கூட இல்லாமல் கூண்டுக்கிளியாய் துன்புறும் மகனைச் சரிசெய்ய மினியால் மட்டுமே முடியும் என்று ஆழமாக நம்பும் அளவு அரசனை மினி எப்படிக் கவர்ந்தாள் என்பதை யாரும் அறியார்.


     வீடு வந்ததும் தன் அறைக்குச் செல்ல முயன்ற மினியைத் தடுத்தது வதனியின் குரல். “புதுப்பழக்கம் எல்லாம் வேண்டாம் மினி. நீ இங்க வந்து எட்டு மாசம் ஆகுது. இத்தனை நாளில் நானா வந்து கேட்கிற மாதிரி நீ எதையும் வைச்சுக்கிட்டது இல்லை. இப்ப என்னென்னவோ நடந்திருக்கு ஆனா என்கிட்ட அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல“ வேறு எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல, கல்லூரி விஷயத்தைப் பற்றி சொல்கிறார்கள் என்று நினைத்த மினி அது தன் தவறு தான் என்பது புரியவும் தலையாட்டி ஒப்புக்கொண்டு தன்னறைக்குள் சென்றாள். 


     அவள் சென்றுவிட்டாள் என்பதைப் புரிந்துகொண்ட பின்னர் கணவனிடம் பொங்க ஆரம்பித்தாள் வதனி. “என்ன நடக்கிது ஜீவன். அந்த சாணக்கியனோட சகவாசமே வேண்டாம் என்று நாம சேர்ந்து முடிவு பண்ணது உங்களுக்கு நினைவு இல்லையா? மினியோட ப்ரண்டு வீடு இருப்பது அவனோட வீட்டுப் பக்கத்தில் தான் என்று தெரிந்ததும் அவளைக் கையோடு கூட்டிட்டு வந்திருக்க வேண்டாமா? அதை விட்டுட்டு கழுகுக்கூடு இருக்கும் இடம் என்று தெரிந்தும் அங்கே கோழிக்குஞ்சை மேய விடுற மாதிரி வேலையைப் பார்த்து இருக்கீங்க“ ஆத்திரமாகக் கேட்டாள்.


     “கோபத்தில் கண்டதையும் பேசாத வதனி. சாணக்கியன்  தப்பானவன் இல்லை என்று உனக்கே தெரியும். கடந்த கால கோபத்தை நிகழ்காலத்தில் காட்டாதே. மினிக்கும் நமக்கும் நடுவில் இருக்கும் தொடர்பு தெரிந்திருந்தாலும் நம்ம மேல் இருக்கும் கோபத்தை அவள் மீது காட்டும் அளவு அவன் தப்பானவன் இல்லை“ அழுத்தமாகச் சொன்னான் ஜீவன்.


     “அவன் தப்பானவன் இல்லன்னா, அவனைப் பத்தி தப்பா சொல்ற நான் தான் தப்பானவளா? சொல்லுங்க ஜீவன் எல்லோரும் சொல்ற மாதிரி நான் தான் தப்பானவளா“ உச்ச தொணியில் கத்தினாள். 


     என்றும் இல்லாத தாயின் பரிமாணத்தைக் கண்டு பிள்ளைகள் மூவரும் அழ ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த மினி கணவன் மனைவி சண்டை போல என்று புரிந்து கொண்டு பிள்ளைகளை தன்னோடு அழைத்துச் சென்றாள்.


     வதனி என்ற அழைப்புடன் ஜீவன் அவள் தோள் தொட, “எல்லா விஷயத்திலும் என்னோட கருத்துக்கு ஒத்துப்போகும் நீங்க, எனக்காக எதையும் செய்யத் தயாரா இருக்கும் நீங்க, அந்தச் சாணக்கியன் விஷயத்தில் மட்டும் என்னை எப்போதும் இரண்டாம் பட்சமா மட்டுமே பார்க்கிறீங்க. ரொம்பக் கஷ்டமா இருக்கு. அவன் நமக்கு வேண்டாம் ஜீவன். அவனோட சம்பந்தப்பட்ட எதுவும் வேண்டாம். 


     நம்மைச் சேர்ந்தவங்க அவனுக்கு வேண்டாம், அவனைச் சேர்ந்தவங்க நமக்கு வேண்டாம். இதுவரை எப்படி இருந்தோமோ அப்படியே இருந்துவிட்டுப் போகலாம்“ கண்ணீரோடு சொன்னாள் அவள்.


     “அவன் பாவம் இல்லையா வதனி“ ஆதங்கமாகக் கேட்டான் ஜீவன். அவனுக்குள் சில நினைவுகள் நெருஞ்சி முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது. கெட்டவனைத் தண்டிக்க தான் ஆண்டவன் வேண்டும் நல்லவனைத் தண்டிக்க அவன் மனசாட்சி ஒன்றே போதும். நல்லவன் என்ற போர்வையில் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஜீவனால் தன் சொந்த மனசாட்சியிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. அதனால் அவ்வப்போது தன்னையும் மீறி மனைவியிடம் முன்னாள் நண்பனுக்காக பேசி விடுவான். இப்போதும் அப்படித்தான் நடந்தது.


    “அவன் ஒன்னும் பாவம் எல்லாம் இல்லை“ கத்திய வதனி மயங்கிச் சரிய, பெருமூச்சு விட்ட ஜீவன் அவளைத் தங்கள் அறைக்கு கொண்டு சென்றான். அடுத்த நாள் காலையில் உயிர்ப்பே இல்லாமல் தன் வாகனத்தைத் துடைத்துக் கொண்டிருந்த ஜீவன் அருகே வந்த மினி, “என்னால் தான் உங்களுக்கும் அக்காவுக்கும் பிரச்சனையா அத்தான். ஆனா என்னோட காலேஜ் லீவ் பத்தி சொல்லாதது அவ்வளவு பெரிய பிரச்சனையா என்ன“ கேட்ட மினிக்கு நிஜமாகவே புரியவில்லை தான்.


     “நடந்ததில் உன்னோட தப்பு எதுவும் இல்லை மினி. உன் அக்காவுக்கு கொஞ்சம் வேறுவிதமான சங்கடம் அதனால் தான் இப்படி நடந்துக்கிட்டா. நீ எதையும் பெருசு பண்ணாம உன்னோட படிப்பில் மட்டும் கவனம் செலுத்து“ என்க, சரியென்று தலையசைத்துவிட்டு நகர முற்பட்டவளைத் தடுத்தவன், 


     “யார் என்ன சொன்னாலும் உனக்குப் பிடித்ததை செய்யாம விட வேண்டாம். உன்னோட வாழ்க்கையை நிர்வகிக்கும் பொறுப்பு உனக்கு மட்டும் தான் உண்டு. எந்த முடிவு எடுப்பதா இருந்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு எடுப்பது தப்பில்லை. ஆனால் அப்படி எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க வேண்டாம்“ தான் சொன்ன இந்த அறிவுரை மினியை எவ்வளவு தொலைவு அழைத்துச் செல்லும் என்று புரியாமல் சொல்லிவிட்ட ஜீவன் தன் வேலையைத் தொடர குழப்பத்துடன் தன்னறை வந்தாள் மினி.


     அன்றைய தினத்தோடு அவள் கல்லூரி விடுப்பு நாட்கள் முடிவதால் அந்த தினத்தை முழுக்க முழுக்க குழந்தைகளோடு செலவு செய்தாள் மினி. காலை உணவை மூவருக்கும் அவளே தயார் செய்து கொடுத்தாள். 


     சபரி மற்றும் மகிழ் இருவரும் தேன் இட்லி சாப்பிட பாரி மட்டும் காரம் கேட்டான். இரட்டையர்களுக்குள் இத்தனை வித்தியாசமா என்று ஆச்சர்யம் கொண்டாலும் அவன் கேட்டதைக் கொடுத்து சாப்பிட வைத்தாள்.

 

     சற்றே தாமதமாக எழுந்த வந்த வதனி முந்தைய நாளைப் பற்றி தங்கையிடம் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள். பெரிதாக எந்த வருத்தமும் இல்லாத தங்கையின் தோற்றம் தான் நினைத்த அளவு சூழ்நிலை வந்துவிட வில்லை என்பதை உணர்த்த சற்றே நிம்மதி வந்தது அவளுக்கு. அந்த நிம்மதியுடன் கணவன் அருகே சென்றவள் முந்தைய நாள் தன் செயலுக்காக மன்னிப்பு வேண்டினாள்.


     சில விஷயங்கள் எளிதாக மீண்டும் மீண்டும் மன்னிக்கப்படுவதால் எதிராளி அந்த விஷயத்தில் தன் தவறை இறுதி வரை உணர்வதே இல்லை என்பதை ஜீவன் அறிய மாட்டானா? இல்லை அறிந்தும் மனைவி என்பதற்காக பொறுத்துப்போனானா என்று அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.


     தான் நினைத்தது போல் தங்கை சாணக்கியன் பக்கம் போகவில்லை. கணவனும் தன்னை மன்னித்துவிட்டான் அவ்வளவு தான் அனைத்தும் நார்மல் மோடிற்கு வந்துவிட்டது என்று வதனி தன்போக்கில் அன்றாட வேலைகளில் ஈடுபட, ஜீவனின் உள்ளம் தான் ஆற்றுவார் தேற்றுவார் இன்றி வேதனையில் துடித்துக்கொண்டிருந்தது.


     அடுத்த நாள் காலையில் தேன்மொழியை வகுப்பறையில் சந்தித்த மினிக்கு சாணக்கியனைப் பற்றிக் கேட்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அது தவறான கற்பனைகளுக்கு வித்திடும் என்பதால் சிரமப்பட்டு தன் ஆர்வத்தை அடக்கிக் கொண்டாள். ஆனால் அது எல்லாம் உணவு இடைவெளியில் அரசன் அவளைக் காண வரும் வரை தான்.


     “அங்கிள் நீங்க எதுக்காக இங்கே வந்தீங்க“ ஆச்சர்யமாகக் கேட்டாள் மினி. “நான் நேரடியாவே கேட்கிறேன் மினி. உனக்கு என் மகனைப் பிடிச்சிருக்கா“ அசராமல் கேட்டார் அரசன்.


     இந்தக் கேள்விக்கு அவளுக்கே உறுதியான பதில் தெரியாத போது அவருக்கு எப்படி அவளால் பதில் சொல்லிவிட முடியும். “எனக்கு அவர் மேல் அக்கறை இருக்கு அங்கிள். பிரியா அவரை எப்படிப் பார்க்கிறாளோ அதே மாதிரி தான் நானும் பார்க்கிறேன்“ சமாளிக்கப் பார்த்தாள்.


     “பிரியா என் பையனோட நிலையைப் பார்த்து வருத்தப்பட்டதோட நிறுத்திக்கிட்டாளே மா. உன்னை மாதிரி அவனோட சோகத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சு அதைத் துடைத்து எடுக்க நினைக்கலையே. உனக்கு தானே அவன் மேல் ஸ்பெஷல் அக்கறை இருக்கு“ வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.


     “எனக்குமே அதுக்கான காரணம் தெரியல அங்கிள். அவரோட பழைய வீடியோக்களைப் பார்த்து இருக்கேன். அதில் கண், காது, மூக்கு மாதிரி நிரந்தர உறுப்பா அவர் முகத்தில் நிலைத்திருந்த அந்தச் சிரிப்பை மறுபடியும் அவரிடத்தில் வரவழைக்கணும் என்று எனக்குத் தோணுச்சு. அதெல்லாம் உண்மை தான். ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் என் மனதில் இல்லை“ தெளிவாகவே சொன்னாள்.


     “அவனோட வாழ்க்கை முழுக்க வரணும் என்கிற நினைப்பு உனக்குள்ள இல்லையா மா“ அத்தனை ஆசையாகக் கேட்டார் அரசன்.


     “மன்னிச்சிடுங்கஅங்கிள். எனக்கு காதலிக்கிற வயதும் இல்லை அதுக்கான பக்குவமும் இல்லை. அதோட என்னோட வாழ்க்கை என் முடிவு மட்டும் இல்லை. என்னால் உங்க பையனை மட்டும் இல்லை, யாரையும் காதலிக்க முடியாது“ தன்மையாக மறுத்தாள் அவள்.


     அரசனுக்கு அதிகபட்ச ஏமாற்றம் தான். எல்லாப் பெற்றவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் குற்றம் குறை இல்லாத மன்மதனும், ரதியும் தான். ஆனால் எதிரே இருப்பவர்களும் அப்படியே தான் நினைக்க வேண்டும் என்று இல்லையே. மினி தன் மகனை மறுத்தது வேதனையாக இருந்தாலும் ஏற்றுக்கொண்ட மனிதர் அங்கிருந்து செல்லப்பார்க்க, “உங்க பையன் கிட்ட பேசினீங்களா அங்கிள். உயிரை விட பெரிதாக நினைக்கும் இலட்சியத்தை விட  அவருக்கு அப்படி என்ன பயம்“ ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டுவிட்டாள்.


     தன் விருப்பத்தை மறுத்தவளிடம் எதற்காக சொல்ல வேண்டும் என்று நினைக்காமல் தன் மகனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் யாவையும் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தார் அரசன். கேட்டுக்கொண்டிருந்த மினிக்கு இதயம் நின்றுவிட்டது போல் வலித்தது. எப்படியான நிலையில் இருந்து அவன் மீண்டு வந்திருக்கிறான் என்பது புரிய அவன் மீது அன்பும், மரியாதையும் ஊற்றாய் சுரந்தது. இதுவரை நேரில் பார்த்திடாத நிலாப்பெண்ணின் மீது ஆத்திரம் மலையளவு வந்தது.


     “அவரோட வாழ்க்கையை இல்லாமல் பண்ண அந்த புருஷன் பொண்டாட்டி இரண்டு பேர், அவரைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும் விட்டுட்டுப் போன நிலான்னு அவங்க எல்லோரும் நல்லா இருக்கும் போது, இவர் மட்டும் ஏன் அங்கிள் கூட்டுக்குள் ஒடுங்கி இருக்கணும். 


     இவரை இவரே அடைத்து வைத்திருக்கும் தனிமைக் கூட்டுக்குள் இருந்து கையைப் பிடித்து கட்டாயப்படுத்தி இழுத்தாச்சும் வெளியே கொண்டு வந்தாகணும். அவர் இழந்துவிட்ட சந்தோஷங்களை திரும்பக் கொடுக்க முடியாது தான். ஆனால் குறைந்தபட்சம் அவருக்கு புதிதான சந்தோஷங்களையாவது நாம உருவாக்கிக் கொடுக்கலாம் தானே“ பேச்சு வழக்கில் தன்னையும் மறந்து அரசனோடு கட்சி அமைத்தாள் மினி.


     அரசன் அமைதியா இருக்க, “அவரைச் சரி பண்ணுவதற்கான முயற்சியில் என்னோட உதவி உங்களுக்கு கட்டாயம் உண்டு. நான் இருக்கேன் உங்களோட“ ஆத்மார்த்தமாகச் சொன்ன மினியை நேர்பார்வை பார்த்த அரசன், “வேண்டாம் மினி, உனக்கு அவன் மேல் இஷ்டம் இல்லாத பட்சத்தில் அவனுக்கு உதவி செய்கிறேன் என்று பிரச்சனையை இழுத்துக்காத. 


     அவன் வாழ வேண்டியவன் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை நீயும் வாழ வேண்டியவ தான். என் பையனால் உனக்குப் பிரச்சனை வந்ததா இருக்க வேண்டாம். சாணக்கியன் என்ற ஒருவனைச் சந்தித்ததையே மறந்திடு. நான் இருக்கேன் அவனுக்கு. என்ன செய்தாவது அவனை மீட்டெடுப்பேன்“ என்ற அரசன் அங்கிருந்து செல்ல மினிக்கு என்னவோ போல் இருந்தது.


     பல வகையில் யோசித்து இது சரிவராது என்ற முடிவுக்கு வந்தவள் அவள் தான் என்றாலும் அதை அரசன் சொல்லும் போது பெரிய குற்றமாகத் தெரிந்தது. 

 


Leave a comment


Comments


Related Post