இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காதலாகி! காற்றாகி! அத்தியாயம் - 3 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK029 Published on 30-04-2024

Total Views: 14687

நிரஞ்சன் சற்று நேரம் கண்ணை மூடி நின்றான். பின்பு பாட்டியை தனியே விட்டுவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்தான். பழமையான கோவில் என்பதால், ராஜாக்கள் வடிவமைத்த அழகை ரசித்துக் கொண்டே சுற்றி வரலானான். அக்கோயிலில் சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் என்று எல்லா கடவுளுக்கும் சன்னதி அமைந்திருக்க, பிரகாரமும் பெரியது. எனவே மெதுவாக சுற்றுப்புறங்களில் பார்வையை ஓட்டியவாறே நடந்தான். நிரஞ்சன். ஒரு பக்கம் திரும்பும் நேரம், துர்கை அம்மன் சன்னதி முன்பு பார்க்காமல் ஒரு பெண்ணின் மீது லேசாக மோதினான். அவன் மோதியது வேறு யாருமில்லை அவனுக்கு ஏற்கனவே தெரிந்த மிஸ் இம்சை தான். அவன் மோதியதால் திடுக்கிட்டு கண்களை திறந்தாள் அபிராமி. அவனும் இடித்ததும் பதட்டத்துடன் சரியாக அவளின் முகத்தை காணாமல் "சாரிங்க... தெரியாம கால் தடிக்கிடுச்சு" என்று மன்னிப்பு வேண்டிவிட்டு நடந்தான்.

 "இங்கேயும் நீயா? நீ என்னை ஃபாலோ பண்றியா?" என்று கோபமாக கேட்டதும், நிரஞ்சன் நின்று திரும்பிப் பார்த்தான். 

"நீயா?" என்று அவனும் அதிர்ந்தான். 

"நானே தான்... வம்பு பண்றதையே வேலையா வெச்சிட்டு இருக்க? உன்னை போலீசில் மாட்டி விட்டும் கூட திருந்தலையே! உன்னை என்ன செய்யறேன் பாரு!" என்றாள்.

"ஹே... அன்னிக்கு தியேட்டர்ல நடந்ததுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. முதல்ல நான் எந்த பொண்ணுகிட்டையும் வம்பு வளர்க்கல... தியேட்டர்ல நான் இடிச்சதா சொன்னதே பொய். அந்த பொண்ணே போலீசில் ஒரு யூடியூப் பிராங்க் ஷோக்காக அப்படி பண்ணதா ஓத்துக்கிட்டு என்கிட்ட சாரி கேட்டாங்க. நீயா தப்பா புரிஞ்சிகிட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணிட்டு இருக்க? போராடு... வேணாம்னு சொல்லல... ஆனா தெரிஞ்சுகிட்டுப் போராடு... சும்மா சும்மா குதிக்க வேண்டியது... நீயா ஒன்னு யோசிச்சு, நீயா ஒன்னு செஞ்சிட்டு அதுல மத்தவங்களை மாட்டிவிட வேண்டியது... சரியான இம்சை..." என்றான் எரிச்சலுடன்.

அவன் அவ்வாறு கூறியதும், உண்மையாகவே இருக்குமோ என்று யோசனை செய்தவள், அவளின் ஈகோ உடனடியாக தலைதூக்கி அவளை தட்டியது.

"என்ன மேன் நீயா நீயான்னு பேய் படம் ஓட்டிட்டு இருக்க? இப்ப என்னையும் தானே இடிச்ச? இடிச்சது மட்டுமில்லாம ஓவரா பேசிட்டு இருக்க?!" என்று அவளும் பதிலுக்கு எகிறினாள்.

"உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?! எப்படியோ போ... ஆனா இடிச்சதுக்கு ரொம்ப சாரி" என்று எரிச்சலில் தொடங்கி நிதானத்தில் பேசி முடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்துச் சென்றான்.

அவள் அங்கேயே நின்று அவனை எண்ணி கோபத்தில் அர்ச்சனைப் பூக்களை முணுமுணுப்பு செய்துச் சிதறவிட்டாள். அவள் அவனை திட்டிக் கொண்டிருந்தவள் தோள் மீது மீண்டும் ஒரு கைத்தட்டவும், "ஏய் திரும்பவும் வந்திட்டியா?!" என்று திரும்பி கையை ஓங்கவும், "ஆ..." என்று குனிந்து சிறு சத்தம் எழுப்பினார்கள் அபிராமியின் அம்மாவும் தாத்தாவும்.

"மாமா இவளுக்கு என்னமோ ஆகிடுச்சு." என்ற அன்னையை கண்களை சுருக்கி முறைத்தாள் அபிராமி.

"கோகி... எனக்கு ஒரு சந்தேகம்... கோயிலில் இருக்கும் போது பேய் பிடிக்குமா?" என்று வினவினார் தாத்தா.

"மாமா ஒருவேளை ஏற்கனவே பேய் பிடிச்சு, கோவிலுக்குள்ள வந்ததும் சக்தி தாங்காம வெளியே வந்திருக்குமா?" என்று கோகி என்கிற கோகிலா வினவ,

அபிராமி தன் இடுப்பில் கைகளை வைத்து, "உங்களுக்கு கிண்டலா இருக்கா? எங்க போயிருந்தீங்க இவ்வளவு நேரம்? அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா?" என்று குரலை உயர்த்தினாள்.

 "கோகி... மகாராணிக்கு கோபம் வருது... ஒடிடலாமா?" என்று தாத்தா கேட்க,

"அட சும்மா இருங்க மாமா... எப்ப பாரு அவளுக்கு தோதாவே நடந்துக்கிட்டு??! அபி நாம கோவில்ல இருக்கோம்... கத்தாம சாமி கும்பிட்டு போக வந்திருக்கோம். கூட்டம் இல்லனு நம்ம இஷ்டத்துக்கு நடந்துக்க முடியாது. சாமிக்கு மரியாதை குடு... புரிஞ்சுதா?" என்றார் கோகிலா.

"ம்ம்." என்று சற்று அடங்கினாள் அபிராமி. அர்ச்சனை செய்துவிட்டு பிராகாரத்தில் அமர்ந்திருந்தார்கள் மூவரும்.

"அபுகுட்டி... இன்னும் நாலு நாளில் உனக்கு என்ஜினீயரிங் சம்பந்தமான ஐ.இ.எஸ் (இந்தியன் என்ஜினீயரிங் சர்வீசஸ்/ESE) எக்ஸாம் வருது. இந்த தடவையாவது எதையும் மறக்காம முன்னாடியே எடுத்து வெச்சிட்டு பரிட்சை எழுதும்மா... அப்புறம் தாத்தா நான் இதை மறந்துட்டேன்... இந்த கேள்வியை பார்க்கவே இல்ல... டைம் பார்க்கவில்லை... அப்படின்னு எதுவும் காரணம் சொல்லி வீட்டை இரண்டாக்கக் கூடாது..."

"கரெக்ட் மாமா... இதுவரைக்கும் மூன்று முறை சொதப்பிடுச்சு... நான்காவது தடவை உனக்கு எல்லாம் சரியாக அமைஞ்சு நீ பாசாகனும்னு தான் இந்த கோயிலுக்கு வந்து உன் பேர்ல அர்ச்சனை செய்திருக்கோம. மவளே சொதப்பிட்டு வந்து நின்னா..."

"என்ன பண்ணுவ அம்மா" மிகுந்த ஆர்வத்துடன் வினவினாள் அபிராமி!

"பிளீஸ் அபுகுட்டி எப்படியாவது பாஸ் பண்ணிடு இல்லனா உன்னோட அம்மா புலம்பலை என்னால தாங்க முடியாது... நீ போடற குப்பையை அள்ளிப் போட்டு வீட்டை க்ளீன் பண்றதே எங்களோட பொழப்பா இருக்கு" என்றார் தாத்தா தன் மருமகள் எந்த பதிலையும் சொல்வதற்கு முன்பாக.

"தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி தாத்தா" என்றாள் அபி.

"ஆனா மூன்று படி அதுவா தானே இருக்கு" என்றார் கோகிலா.

"அம்மா.... வேணாம்... கடுப்பதேத்தாத" என்றாள் முறைப்பாக!

"ச்சே... என் செல்லக்குட்டி சும்மா விளையாட்டுக்கு... எனக்கு நம்பிக்கை இருக்கு. என் பொண்ணு பெரிய அரசு என்ஜினீயராக வருவா" என்றார் கோகிலா அவள் முகத்தை வழித்து.

நிரஞ்சனின் பாட்டி லீலாவதி முருகன் சன்னதி முன்பு அமர்ந்து கண் மூடி வேண்டிக் கொண்டிருந்தார். அதற்குள் மீண்டும் ஒருமுறை பிரகாரத்தை சுற்றி வந்த நிரஞ்சன், ஒரு ஓரமாக அமர்ந்திருந்த அபியின் குடும்பத்தை கண்களால் அளவிட்டு அப்படியே சென்றுவிட்டான். கோகிலாவின் செய்கையையும் கண்டு முகத்தில் இன்முறுவலோடு நடந்தான்.

சற்று நேரத்தில் அபிராமியின் குடும்பம் புறப்பட்டு சென்றுவிட, நிரஞ்சன் அமைதியாக பாட்டியின் அருகில் உட்கார்ந்து பாட்டி கண்களை திறக்கும் வரை காத்திருந்தான். சிறிது நேரத்தில் கண்களை மலர்த்திய பாட்டி நிரஞ்சனின் கன்னத்தில் கையை வைத்து, "எனக்கென்னமோ இந்த வருஷம் உனக்கு கவியரசன் மகளோட கல்யாணம் நடந்திடும்னு தோணுது கண்ணா" என்றார். அதை கேட்டு, 'ஐயோ அப்படியா தோணுது?!' என்று மனதினுள் நினைத்தான்.

"பாட்டி எனக்கொரு டவுட்... நீங்களே சொல்றீங்க அந்த குடும்பத்தை சந்திச்சே இருபது வருஷமாகுது. அப்படி இருக்கும் போது, ஒருவேளை அவரோட பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தால் என்ன பண்ணுவீங்க?" இவ்வாறு நிரஞ்சன் கேட்டு, பாட்டியின் மனதில் சிறுவயதில் ஏற்படுத்தப்பட்ட கல்யாண வாக்கு சரிவராது என்பதை பதிய வைக்க முயன்றான்.

அவன் கேட்ட கேள்வியில் அதிர்ச்சி அடைந்த லீலாவதி, நெஞ்சில் கைவைத்து "ஹான்" என வாயைப் பிளந்து பார்த்தார்.

"பாட்டி... பாட்டி ரிலாக்ஸ்... நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். அப்படி ஆகியிருக்காது... நீங்க கவலைப்படாதீங்க..."

"கண்ணா... அப்படி ஆகியிருக்கக் கூடாது... ரெண்டு குடும்பத்துக்கும் ஒரு பிணைப்பு இருக்கு. அவங்க செஞ்ச உதவிக்கு நம்ம எவ்வளவு கடமைப் பட்டிருக்கோம்... நம்மளோட சத்தியத்தை நாம் எக்காரணம் கொண்டும் மீறக் கூடாது" என்று கலங்கிய குரலில் கூறினார் பாட்டி.

"பாட்டி எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அந்த கவியரசன் குடும்பத்தை எப்படியாவது கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்தறேன். நீங்க கலங்காம இருங்க பிளீஸ்" சமாதானம் செய்து உறுதி வழங்கினான் நிரஞ்சன். இறுதியில் தானே பாட்டியின் பிடியில் சிக்கிக் கொண்டோம் என்பதும் அவனுக்கு புரிந்தே இருந்தது. தற்போது, தானே அந்த குடும்பத்தை தேடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பதையும் உணர்ந்தான் நிரஞ்சன்.

அவனுள் ஏற்கனவே ஒரு ஜீவனுக்கு நன்றி கடன் பட்டுள்ளான். இதில் நினைவு தெரிந்த நாளிலிருந்து கவியரசன் குடும்பம் பற்றி சொல்லி சொல்லி வளர்த்த பாட்டி மற்றொரு நன்றி கடனையும் அவனது தலையிலேயே சுமத்தியுள்ளார். அதை எண்ணி அவனுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியாமல் தவித்தான்.

வீட்டிற்கு வந்ததும் லீலாவதி அமைதியாக இருக்கவும், மாயாவும் விஷ்வேஸ்வரனும் மாறி மாறி குடைந்து எடுத்தார்கள். "எனக்கு இப்ப எழுபத்தி நாலு வயசாகப் போகுது. ஆனா உங்க யாருக்கும் என் மேல அக்கறையே இல்ல." லீலாவதி கூறியதைக் கேட்டு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பார்த்தார்கள் நிரஞ்சனை பெற்றவர்கள்.

"அம்மா என்னம்மா ஆச்சு... உங்க பொறந்த நாளுக்கு தான் நாம எல்லாரும் குடும்பத்தோட திருக்கடையூர் அபிராமி கோயிலுக்கு போகலாம்னு நீங்க தானே சொன்னீங்க. அதுக்கு தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம்." என்று விஷ்வேஸ்வரன் கூறவும்,

"அதுமட்டும் பத்தாது. எனக்கு கவியரசன் குடும்பத்தை கண்டுபிடிக்கனும். உங்களுக்கு மறந்திருக்கலாம்; எனக்கு ஒரு துளிக் கூட மறக்கல. கவியரசன் பொண்ணு தான் இந்த வீட்டோட மூத்த மருமகளா வரணும். நிரஞ்சனுக்கும் இருபத்தி ஆறு வயசாகுது. எவ்வளவு நாள் நான் அவன் கல்யாணத்தைப் பார்க்க காத்திருக்கணும். நான் இன்னும் எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு தெரியல" லீலாவதி இரண்டு சொட்டு கண்ணீரையும் உகுத்து தன் மனவேதனையை வெளியேக் கொட்டினார்.

அவர் பேசியதைக் கேட்டு, அம்மா, பாட்டி, அத்தை என்று ஆளாளுக்கு அவரவரின் உறவுமுறை சொல்லி அவரது பேச்சு அவர்களை கஷ்டப்படுத்துவதைக் குரலில் வெளியிட்டார்கள்.

"பாட்டி நான் தான் சொன்னேன்ல... நான் அந்த குடும்பத்தை தேடி உங்க முன்னாடி நிறுத்தறேன்னு... அப்புறமும் எதுக்கு இப்படி பேசறீங்க?" என்ற நிரஞ்சன் தன் ஃபோனை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

ஓரக்கண்ணால் தன் மகனையும் மருமகளையும் பார்த்த லீலாவதி, "எனக்கு சொல் வாக்கு முக்கியம். கொடுத்த சத்தியத்தை நானும் மீற மாட்டேன்; இந்த குடும்பத்தையும் மீற விட மாட்டேன். விசு உனக்கு தெரியும் தானே... கவியரசன் மட்டும் இல்லன்னா இன்னிக்கு நீயும் நிரஞ்சனும் இந்த குடும்பத்துக்கு இருந்திருப்பீங்களா? எவ்வளவு பெரிய உதவி! அவங்களை நாம என்னிக்கும் மறக்கக் கூடாது! அவரோட பொண்ணு தான் இந்த வீட்டு மூத்த மருமகளா வரணும்... இது தான் என்னோட ஒரே ஆசை" என்றார் பாட்டி உறுதியாக! அதை கேட்டு மாயா அருகில் இருந்த கணவனின் தோளை தன் முழங்கையால் இடித்தார்.

"பொறு... பொறு" என விஷ்வேஸ்வரன் சைகை செய்ய, மாயாவோ முகத்தை தூக்கி வைத்தார். 

பிறகு தானே தன் மாமியாரிடம், "அத்தை நிரஞ்சனுக்கு தகுந்தவளா நான் ஒரு பொண்ணை...." என்றவரை இடையீடு செய்து தடுத்தார் விஷ்வேஸ்வரன்.

"என்ன சொல்ல வந்த?" என்று மாயாவிடம் பாட்டி கேட்கவும், "ஒன்னுமில்லை ம்மா அந்த பொண்ணு எப்படி இருப்பா? எங்க இருப்பா? அப்படின்னு ஒரு எதிர்பார்ப்பில் கேட்டுட்டு இருக்கா?"

"ம்ம்..." அதன் பிறகு லீலாவதி எழுந்து தன்னறைக்கு சென்றுவிட, மாயா உக்கிரமாக தன் கணவரை முறைத்தார்.

"என்னங்க நீங்க? நம்ம நிரஞ்சனுக்கு ஏத்த மனைவியா நான் கமலியை யோசிச்சு வெச்சிருக்கேன். நீங்க என்னடான்னா, அத்தையோட இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்கீங்க?"

"கமலியா?"

"ஆமா... ரங்கநாத் சாரோட பொண்ணு. நிரஞ்சன் தொழிலுக்கும் கமலி தான் தகுந்த ஜோடி. அவனோட இன்வெஸ்ட்மென்ட் விஷயத்துக்கும் ரங்கநாத் சார் தான் உதவியா இருக்காரு. அவர் தானே ரிசார்ட் கட்டும் பணியில் பங்குதாரராகவும் இருக்காரு."

"மாயா... பிசினஸ் வேற லைஃப் வேற... அதோட நிரஞ்சனுக்கு என்ன வேணும்னு அவன் தானே முடிவு எடுக்கணும்!?"

"அவன் இதுவரைக்கும் நம்ம பேச்சை தட்டியிருக்கானா? இல்லையே... அவனுக்கு என்ன தேவைன்னு அவன் என்னிக்குமே யோசிச்சதில்ல. நம்ம குடும்பத்துக்கு என்ன தேவையோ பெரியவங்க என்ன சொல்றாங்களோ அது தானே செய்யறான்." 

"அது கல்யாணத்துக்கு ஒத்து வராது மாயா" என்றார் விஷ்வேஸ்வரன்.

"அதே தான் நானும் சொல்றேன். சின்ன குழந்தைகளா இருக்கும் போது ஏனோ தானோனு சத்தியம் செய்ததே தப்பு இதில் அதை கடைப்பிடிக்கனும்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்று மாயா கேட்கவும், மோவாயை தடவினார் விசு என்கிற விஷ்வேஸ்வரன்.

"உங்களுக்கு நான் இன்னொரு விஷயமும் சொல்றேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நிரஞ்சனுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்துச்சே; அப்ப அவனை காப்பாத்தி ஹாஸ்பிடலில் சேர்த்து, கூடவே இருந்து பார்த்துகிட்டது கமலி தான்"

"நிஜமாவா?"

"ஆமா. நாம ஹாஸ்பிடல் போனப்ப கமலி தானே அங்க இருந்தா... அவள் தானே நமக்கு ஃபோன் செஞ்சு வரவழைச்சது!. இப்படிபட்ட பொண்ணை இழக்க என்னால முடியாது. நீங்க என்ன பண்ணுவீங்கன்னும் எனக்கு தெரியாது. எப்படியாவது அத்தை மனசை மாத்தி கமலியை எனக்கு மருமகளா கொண்டு வர வேண்டியது உங்க பொறுப்பு" என்று மாயா தன் பங்கிற்கு கணவனிடம் கட்டளையாக கூறிவிட்டு செல்ல, யார் பக்கம் என்ன பேசுவது என்று குழம்பிப் போனார் விஷ்வேஸ்வரன்.


Leave a comment


Comments


Related Post