இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
இதயத்தில் இடம் இல்லையோ--14 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK007 Published on 30-04-2024

Total Views: 27891

இதயம் 14


     ஆறு மாதங்கள் கழிந்த பிறகான ஒரு விடுமுறை நாள் அது. மினி இரண்டாம் ஆண்டின் முதல் செமஸ்டர் தேர்வு  விடுமுறையில் இருந்தாள். கிட்டத்தட்ட பத்து நாள்கள் விடுமுறைக்கு கூட ஊருக்கு வராமல் அக்கா பிள்ளைகளுடன் நேரத்தை செலவழித்துக்கொண்டிந்த மகளைப் பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தனர் மணிமேகலை இளவரசன் தம்பதியர். வந்த அடுத்த நாள் கிளம்ப முயன்ற தன் சித்தப்பாவையும், சித்தியையும் தடுத்து தன்னோடு தங்க வைத்திருந்தாள் வதனி. 

 

     மினியின் நடை, உடை, சிந்தனை ஆகியவற்றில் தெரியும் மாற்றங்களைப் பார்த்து இளவரசனுக்கு சற்றே அசௌகர்யம் தான் என்றாலும் பொறுத்துப்போனார். அன்றைய மாலை நேரம் மினி சேர்ந்திருக்கும் செஸ் க்ளப்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதாக இருக்க அதற்காகத் தயாராகிக்கொண்டிருந்த மகளை, “இதெல்லாம் எதுக்குத் தேவையில்லாத வேலை. இங்கு வந்தது படிப்பதற்காகவா இல்லை விளையாடுவதற்காகவா“ கடுப்பாகக் கேட்டார் இளவரசன்.


     வதனிக்கும் மினி சதுரங்கம் விளையாடுவதில் அவ்வளவு பிடித்தம் இல்லை தான். ஆரம்பத்தில் ஜீவன் தன் மச்சினிக்கு ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் போது, தன் சித்தப்பாவைப் போல் தங்கையின் படிப்பைக் காரணம் காட்டி முட்டுக்கட்டை போடப் பார்த்தாள். 


     ஆனால், “எனக்குப் பிடிச்சிருக்கு அக்கா. நான் கேட்டதுக்காகத் தான் அத்தான் கத்துக் கொடுக்கிறார். நமக்குப் பிடித்த ஒரு செயலை யாருக்காகவும் கைவிடக் கூடாதுன்னு நீங்க தானே சொன்னீங்க“ என்க, அதன்பிறகு மாற்றிப்பேச முடியவில்லை வதனியால்.


     கணவனைத் தனிமையில் கண்டிக்க, “எனக்கு செஸ் என்றால் எவ்வளவு பிடிக்கும் என்று உனக்குத் தெரியும். உன்னோட மனதை அனுசரித்து தான் பெரும்பாலான நேரம் நான் அமைதியா இருக்கேன். உன்னோட புருஷன் நான் உனக்குப் பிடித்த மாதிரி நடந்துக்கணும் என்று நினைப்பதில் பெருசா தப்பில்லை தான். 


     ஆனால் உன் வீட்டில் இருப்பதால் உன் தங்கையும் உனக்குப் பிடித்த மாதிரி தான் நடந்துக்கணும் என்று நினைப்பது எப்படி சரியா இருக்கும். உலகத்தில் எவ்வளவோ பேர் செஸ் விளையாடுவாங்க. அத்தனை பேரிலும் அவன் ஒருத்தனை மட்டுமே நீ பார்த்தால் தப்பு உன் மேல் தான்“ நேரடியாக அவன் சொல்லிவிட தவித்துப் போன வதனி அதன்பிறகு எந்த விதத்திலும் யாரையும் தடுக்கவில்லை.  


     கேள்வி கேட்ட தகப்பனுக்குப் பதில் சொல்ல முடியாமல் சதுரங்கக் காய்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த மினிக்கு உதவிக்கு வந்தான் ஜீவன். “நம்ம மினிக்கு இருக்கும் திறமைக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் அவ்வளவு ஏன் தேசிய அளவில் கூட அவளை விளையாட வைக்கலாம். அதற்கு நான் தயாராக இருந்தும் உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காக அமைதியா இருக்கா. 


     பசங்க பெத்தவங்களுக்காக அவங்களோட பெரிய பெரிய ஆசைகளை விட்டுக்கொடுக்கும் போது பெத்தவங்க அவங்க பெத்தவங்களுக்காக சின்னச்சின்ன விஷயங்களை பொறுத்துப் போவதில் தப்பில்லையே“ இளவரசனுக்குப் புரியும்படி ஜீவன் எடுத்துரைக்க அதன்பின் நடக்கும் எதையும் தடுக்கவில்லை அவர்.


      “மாப்பிள்ளை நல்லாப் பேசுறார் வதனி. யாருக்கு எதை எப்படிச் சொன்னால் புரியும் என்கிற வித்தை அவருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. அதை வைத்து தான் உன்னை தட்டித் தூக்கி இருக்கார் போல“ மணிமேகலை சாதாரணமாகச் சொல்ல, “சித்தி வயசுக்கு ஏத்த மாதிரிப் பேசுங்க“ என்றுவிட்டு அங்கிருந்து சென்றாள் வதனி.


     பிடித்தமான உறவுகள் அனைவரும் சுற்றி இருந்தும் ஒரு மாதிரி தனியாய் உணர்ந்தாள் மினி. இது தான் நடக்கிறது, இதற்காகத் தான் நடக்கிறது என்று தெரிந்தால் அதற்கு ஏற்ப அடுத்தடுத்த காரியங்களைச் செய்யலாம். ஆனால் காரணமே இல்லாமல் அவளைச் சுற்றிலும் படர்ந்திருந்த கண்ணுக்குத் தெரியாத தனிமை வேலி அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் மூச்சடைக்க வைத்தது.


     பொதுவில் உடலில் ஒரு நோய் வருகிறது என்றால் நாம் மருத்துவர்களை அணுகி அவர்கள் நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கு முன்பாக முடிந்தவரை நம் உடலே அந்தப் பிரச்சனையை சரி செய்யப் பார்க்கும். அது உடல் சம்பந்தமான பிரச்சனைக்கு மட்டும் அல்ல, மனம் சம்பந்தமான பிரச்சனைகளும் அதில் அடங்கும்.


     அப்படி மினியின் உள்ளுணர்வு அவள் இப்போது அனுபவிக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் சாணக்கியனை அடிக்கடி நினைவு படுத்தும். இந்நேரம் அவன் என்ன செய்து கொண்டிருப்பான், கடந்து போன நாட்கள் அவன் வாழ்வில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும், பிரியாவுடன் போட்டிகளுக்குச் செல்ல ஆரம்பித்து இருப்பானா? 


     பெண்கள் மீதான அவன் பலவீனத்தை சரிசெய்ய அரசன் அங்கிள் முயற்சிப்பதாகச் சொன்னாரே. ஏதாவது செய்திருப்பாரா? அவன் சரியாகி இருப்பானா? அவனை வேண்டாம் என்று போன பெண்ணை விடுத்து இன்னொரு நல்ல பெண்ணை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பானா எனப் பலபல யோசனைகள் அவளுள். 

 

     அவனைப் பற்றி யோசிக்கக்கூடாது என்று அவள் செய்யும் செயல்கள் யாவும் அவனை இன்னமும் தான் நினைவு படுத்தியது. கடந்து போன மாதங்களில் அவள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தாள் என்றாலும் இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு வெற்றிடம் உருவாகி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து அவளை மொத்தமாக விழுங்கக் காத்திருக்கும் கருந்துளையாக மாறிப்போனதை அவளைத் தவிர வேறு யாரும் அறியார். 


     அந்த கருந்துளையை நிரப்பும் சக்தி சாணக்கியன் மகிழ்வாக இருக்கிறான் என்ற தகவலால் மட்டுமே சாத்தியப்படும் என்பது புரிய, தனக்கும் அவனுக்கும் இடையே விட்டகுறை தொட்டகுறையாக இருக்கும் இந்த உணர்வுகளை ஏற்றுக்கொள்வதா இல்லை ஒதுக்கி வைப்பதா என்று புரியாமல் க்ளப்பிற்குக் கிளம்பினாள் மினி.


     அவள் நேரம் அன்று அங்கே பிரியாவும் வந்திருந்தாள். நிஜம் இன்றி நிழல் வந்திருக்க இயலாது என்பதைப் போல் குருவான சாணக்கியன் இல்லாமல் பிரியா வந்திருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டவள் அதிகாலைச் சூரியனுக்காக காத்திருக்கும் சூரியகாந்தியைப் போல் நாலாபக்கமும் சூரியகுலத்தோனின் பெயரைக் கொண்டவனைத் தேடினாள். 


     தன் அப்பா, அம்மா, அத்தான் அனைவரையும் மறந்து அந்த இடத்தின் மூலை முடுக்கெல்லாம் அவனைத் தேடி தன்னந்தனியாய் ஓடினாள். இந்த அலப்பறையில் வதனியின் மகன் பாரி அவள் பின்னாலே வந்து கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.


     ஒரு இடத்தில் பலபேர் நின்றிருந்த கூட்டத்தில் சாணக்கியனின் சாயலைப் பெற்றிருந்த ஒருவனைப் பார்த்ததும் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் கூட்டத்தை நோக்கி ஓடினாள் அவள். 


     அப்போது தான் அவள் விசித்திரமான நடவடிக்கைகளைக் கவனித்த இளவரசன் ஜீவனிடம் மகளைக் கைகாட்டி ஏதோ சொல்ல, தானும் குழம்பியவன் தான் சென்று பார்த்து வருவதாகச் சொல்லிச் சென்றான்.


     “இன்னும் எத்தனை நாளைக்குத் தான் யாரோ செய்த தப்புக்கு உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கிட்டு இப்படி அடைஞ்சு கிடக்கப் போற. இயற்கையின் விதியில் ஒருத்தருக்காக இன்னொருத்தர் படைக்கப்பட்டு இருப்பது உண்மை தான். ஆனா மற்றவர்களுக்காக மட்டுமே நாம படைக்கப்படல.


      உனக்குத் துரோகம் பண்ணவங்களைத் தாண்டி, உன்னை விட்டுட்டுப் போனவங்களைத் தாண்டி, உன்னை உனக்காக நேசிக்கும் உறவுகளைத் தாண்டியும் உனக்காக நீ வாழ வேண்டியது அவசியம். தயவுசெய்து வெளியே போ, நாலு பேரிடம் பேசிப் பழகு.

 

     என் இறப்பு இன்னும் எத்தனை வருடங்களில், மாதங்களில் வருகிறதோ எனக்குத் தெரியாது. நீ மனைவி குழந்தை என்று குடும்பமாக வாழ்வதைப் பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்பது உறுதியாகிப்போனது. குறைந்தபட்சம் நீ சரியாகிவிட்டாய். உன்னால் தனியே உலகைச் சமாளிக்க முடியும் என்கிற நம்பிக்கையை எனக்குக் கொடு“ தந்தையின் வார்த்தைகள் காதிற்குள் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது சாணக்கியன்.


     “ஆமையை குப்புறக் கவிழ்த்துப் போட்டால் அதன் நகர்வோடு சேர்த்து, வாழ்வும் அதே இடத்தில் நின்றுவிடும். அப்படி எப்பவோ நடந்து முடிந்து போன ஒரு சம்பவத்தால் உன்னோட வாழ்க்கை ஒரே இடத்தில் தேங்கிய குட்டை மாதிரி மாறிடுச்சு. உனக்கும் அந்த ஆமைக்கும் என்ன வித்தியாசம் சொல்லு“ தந்தையுடன் சேர்ந்து நண்பனும் வார்த்தைகளால் தூண்டிவிட்டதால் பின்யோசனை இன்றி வந்துவிட்டவனுக்கு, இதைப் போன்றதொரு பார்ட்டி ஹால் தான் தன் வாழ்வைப் புரட்டிப்போட்டது என்பது நினைவு வர மனவலியால் துடித்தவன் ஆறுதல் சொல்லக்கூட ஆன் இன்றித் தனியே வந்திருந்தான்.


     “நிலா நான் சொல்வதைக் கேளு. என்மேல் எந்தத் தப்பும் இல்லை. அவங்க செய்த தப்பை மறைக்க என்மேல் பழியைப் போடுறாங்க. இப்ப நான் இருக்கும் நிலைக்கு நீ என்பக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். நீயும் என்னை விட்டுப்போனால் நான் என்ன செய்வேன்“ என தான் கத்திக் கதறிய எதையும் சிறிதும் பொருட்படுத்தாமல் தன்னைத் தவிக்க விட்டுச் சென்றவளின் நினைவில் மனதோடு சேர்த்து தலையும் பாரமாக, லேசாகத் தடுமாறினான்.


     அப்போது உண்டான அசௌகர்ய உணர்வைத் தாண்டி சின்ன அழுகைக்குரல் ஒன்று காதில் விழ, தன்னை தனக்குள் ஆழமாக இழுத்துக் கொண்டிருந்த பொல்லாத நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்தவன், சத்தம் வந்த திசையில் பார்க்க அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தான் ஜீவன் வதனியின் மகன் பாரி.


     ஒற்றைப் பார்வையில் அவன் யாரென்று கண்டுகொண்ட சாணக்கியன் வேகமாக அங்கிருந்து நகரப் பார்க்க, “அப்பாவைத் தொலைச்சிட்டேன் அங்கிள், எனக்குப் பயமா இருக்கு“ என்று தன் சின்னத் தொண்டை கரகரக்க  சொன்னான் குழந்தை. பால் மணம் மாறா பாலகனைக் கண்ணாரக் காணும் யாருக்கும் அவனைத் துன்புறுத்த மனம் வராது. அப்படி இருக்க சாணக்கியன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன. 


     அள்ளி அணைக்க மனம் துடித்தாலும் குழந்தையின் முகத்தில் குடிகெடுத்த ஜீவன் முகத்தைக் கண்டு தள்ளி நின்றவன், அவனை அப்படியே விட்டுச் செல்ல மனம் இன்றி தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா எனத் தேட ஆரம்பித்தான். அவன் நேரம் அவனைத் தேடி சுற்றிக்கொண்டிருந்த மினி அவன் கண்ணிலே பட்டாள்.


     “மின்மினி“ சாணக்கியன் அழைத்த நொடி பட்டாம்பூச்சியைப் போல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்த அவள் பாதங்கள் அப்படியே நின்றது. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு வித பூரிப்புணர்வு ஓட வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் உணர்வை உணர்ந்தவளது புருவமுடி கூட வானை நோக்கி உயர்ந்தது. அந்த நேரம் அவளுள் ஊற்றெடுத்த உவகை வெள்ளத்தின் கொள்ளவை எத்தனை பெரிய கணித மேதாவியாலும் அளவிட்டிருக்க முடியாது.


     தான் காண்பது கனவா இல்லை நினைவா என்பது புரியாமல் மான்குட்டியாய் துள்ளிக்கொண்டு வந்த அந்தச் சிறுபெண் அவன் காலடியில் நின்று கொண்டிருந்த அக்கா மகனைப் பார்த்ததும், மற்றது மறந்து சித்திப் பாசம் தலைதூக்க “பாரி“ என்ற அழைப்புடன் அவன் அருகே சென்றாள்.


     “இவனைத் தெரியுமா உனக்கு“ புருவங்கள் நெறியக் கேட்டான் சாணக்கியன். அவன் கேள்விக்குப் பதில் சொல்வதற்காக அவள் வாயைத் திறக்கும் நேரம் அவ்விடம் வந்த ஜீவன் பழைய உணர்வில், “சாணக்கியா உன்னோட கால் சரியாகிடுச்சா“ ஆர்வமாக முன்வந்தான்.


     பதில் சொல்லாமல் சாணக்கியன் அங்கிருந்து நகரப்பார்க்க அவன் கரத்தைப் பிடித்த ஜீவன், “உன் கையால் ஒரே ஒரு அடி என்னை அடிச்சிடு“ யாசகம் போல் கேட்டான்.


     “மாட்டேன் அது மட்டும் எப்பவும் செய்ய மாட்டேன்“ ஜீவனின் முகத்தைப் பார்க்காமல் அழுத்தமாய் சொல்லிவிட்டு அவன் நகர, “இன்னும் எத்தனை வருஷத்துக்கு எனக்கு இந்தத் தண்டனை“ ஆதங்கமாகக் கேட்டான் ஜீவன்.


     “ஒன்னு நீ சாகணும், இல்ல நான் சாகணும். அப்ப தான் உன் மேல் எனக்கு இருக்கும் கோபம் போகும்“ என்றுவிட்டு திரும்பிப் பாராமல் நடந்து சென்றான் சாணக்கியன்.


     குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்ததால் அவனைச் சமாதானம் செய்வதற்காக சற்று தொலைவு அழைத்துச் சென்றிருந்த மினிக்கு ஆண்கள் இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பார்க்கும் போது அவர்கள் இருவரும் ஜென்ம பகையாளிகளைப் போல் முறைத்துக்கொண்டு இருப்பதாய் தோன்ற மெதுவாக அவர்கள் அருகில் வந்தாள். இந்த நேரத்திற்குள் அங்கிருந்து சென்றிருந்தான் சாணக்கியன்.


     சற்று நேரத்தில் விளையாட்டுகள் ஆரம்பிக்க நல்லபிள்ளையைப் போல் பிரியாவின் அருகே சென்று அமர்ந்து கொண்டான். இத்தனை நாள் அவனின் தயவால் பல ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பெண்ணவள் வெளியுலகத்தை தெரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது என்பதாய் தான் அவளை இங்கே அழைத்து வந்திருந்தான்.


     விளையாட்டு வீரர்களுக்கு இன்றியமையாத பல விஷயங்களில் முக்கியமான ஒன்று நிதானம். ஒரு விஷயத்தை அடிக்கடி நாம் செய்வதன் மூலம் அது பழக்கமாகிவிடும். அதைப் பற்றிய பயம் நம்மிடத்தில் இருக்காது. அப்படி ஒரு நிலைக்கு பிரியாவைப் பழக்கப்படுத்த வேண்டும்.


     எதிர்காலத்தில் பெரிய ஆட்டக்காரர்களுடன் விளையாடும் போது அது தனியாகத் தெரியக்கூடாது. பத்தோடு பதினொன்றாகத் தான் அதையும் அவள் பார்க்க வேண்டும். அதற்கு எவ்வளவு முடியுமோ அத்தனை புதிய ஆட்களுடன் அவள் விளையாட வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு ஏற்பாடை செய்திருந்தான். 


     பிரியா விளையாடும் அழகை அருகே இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர் அவளின் பெற்றோர். தேன்மொழிக்குக் கூட சாணக்கியனிடம் பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் தங்கையின் ஆட்டம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருப்பது தெரியத்தான் செய்தது.


     இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் மினியின் இயல்பான ஆட்டம் தேசிய அளவில் சதுரங்கத்தில் பல விருதுகள் பெற்றிருந்த வீரர் ஒருவரை அதிகமாகக் கவர்ந்தது. விருந்தினராக வந்திருந்த அந்த மனிதர் எதேச்சையாக மினியின் ஆட்டத்தைக் கவனித்து, “யாரிடம் பயிற்சி பெறுகிறாய்“ பேச்சுக்காகக் கேட்டார்.


     தானாகக் கற்றுக்கொண்டது தான் என்ற மினியின் பதிலில் ஆச்சர்யமானவர், அவள் அருகே அமர்ந்திருந்த இளவரசனிடம் மினியைப் பற்றி புகழ்ந்து பேசியதோடு நிற்காமல் தகுந்த முறையில் பயிற்சி கொடுத்தால் பெயரும் புகழும் பெறுவாள் என்று சொல்லிச் சென்றார். 


     இளவரசன் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ள வில்லை என்றாலும் ஜீவனின் மனதில் பெரிய விஷயம் ஒன்றுக்கான விதை ஒன்று விழுந்தது என்று சொல்லலாம். சாணக்கியனைப் பற்றி தெரிந்தவர்கள் அவன் நெடுநாட்களுக்குப்பிறகு பொது விழாவிற்கு வருகை தந்திருப்பதைப் பற்றி பேச அவை யாவும் நாராசமாக விழுந்தது என்னவோ வதனியின் காதுகளில் தான்.


     விழா நல்லபடியாக முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நேரம் பிரியாவின் அருகே நின்று கொண்டிருந்த சாணக்கியனை மினி பார்த்த இரசனைப் பார்வையைக் கவனித்தன ஒரு ஜோடி விழிகள்.


     தான் வாங்கிய பரிசை ஆசையாய் பிரியா சாணக்கியனிடம் காட்ட, “இது ஆரம்பம் மட்டும் தான். இங்கு ஆரம்பிக்கும் உன்னோட பயணம் எங்கும் நிற்காமல் நேரே உன்னோட இலக்கை போய் சேரணும்“ என மனமாறப் பாராட்டினான்.


     “கண்டிப்பா கோச்“ என்றவள் அத்தோடு தன்னைப் பெற்றவர்களிடம் சென்றாள். இதற்கு மேலும் தான் இங்கே இருக்க வேண்டாம் என்று நினைத்த சாணக்கியன் கிளம்பப் பார்க்க, இப்போது விட்டால் அவனை இனி எப்போது பார்ப்போம் என்று தெரியாது இறுதியாய் ஒருமுறை பார்த்துக்கொள் என மனம் கொடுத்த குடைச்சல் காரணமாக தானும் அவனை காண்பதற்காக கார் பார்க்கிங் நோக்கிச் சென்றாள் மினி.

 


Leave a comment


Comments


Related Post