இந்த தளத்தில் எழுத விரும்புவர்கள் priyamehannovels@gmail.comஎன்ற மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும்.
காந்தனின் குழவியவள்-26 அனைத்து பாகங்கள் படிக்க
By PMKK014 Published on 30-04-2024

Total Views: 30526

அத்தியாயம்26


“மெசூரிட்டிலாம் அந்ததந்த வயசுல தானா வரும்டா. உங்களுக்கு வராம இல்லை.‌ வந்ததை புரிஞ்சு நீங்க பகுத்தறியும் வாய்ப்பை அடைச்சுட்டாங்க. இது ஒன்னும் பெரிய பிரச்சினைலாம் கிடையாது. அதனால இதை நினைச்சு இன்செகியூரா ஃபீல் பண்றதை முதல்ல நீங்க ஸ்டாப் பண்ணனும்” என்று அந்த மருத்துவர் கூற, 

“ஆனா எனக்கு நிறையா தெரியலையே டாக்டர்” என்று அதிலேயே நின்றாள்.

“அதனால என்னடா? இப்ப தெரிஞ்சுக்கோங்க. அப்ப தெரிஞ்சுக்கலைனா இனிமே தெரிஞ்சுக்கவே முடியலைனு இல்லையே. போகப் போக புரிஞ்சுக்கலாம், தெரிஞ்சுக்கலாமே” என்று அவர் கூற, மெல்ல தலையசைத்தாள், அஞ்சனா.

“உங்களை நீங்களே ரொம்ப பலகீனமாவும், அறியாமைல ஊறி போன முட்டாளாவும் நினைப்பதை முதல்ல நிறுத்துங்கடா. அறியாமை என்பது எல்லா மனிதனுக்கும் வரும் ஒரு விஷயம் தான்” என்று அவர் கூற, 

“எனக்கு நிறையா கேள்விகள் கேட்க இருக்கு டாக்டர். ஆனா அதெல்லாம் பேசவே கூடாது என்ற வரையறைக்குக் கீழ தான் எனக்கு சொன்னாங்க.. அதுல தான் என் குழப்பமே. எதை யார்கிட்ட கேட்கணும்னு நான் தயங்குவதே அதனாலதான்” என்றாள்.

“உங்களுக்கு என்ன கேள்வி கேட்கணும்னாலும் என்கிட்ட கேட்கலாம். என்கிட்ட இன்னதுதான் கேட்கணும் பேசணும்னு எந்த வரையறையும் இல்லை” என்று அவர் தெளிவாய் கூற, சற்றே தயங்கினாள்.

அவளாக பேச அனுமதி கொடுத்து அவர் அமைதி காக்க,

“மு.. முத்தம், காதல் இதெல்லாமே தப்புனுதான் எனக்கு சொல்லி வளர்த்தாங்க. ஆ..ஆனா.. அப்படிலாம் இல்லைனு மாமா சொல்றாங்க. பீரியட்ஸ் பத்தி வெளியிடங்கள்ல, மற்ற ஆண்கள் கிட்ட பேசவே கூடாதுனு சொல்லிருக்காங்க.. ஆனா மாமா இது ஒரு சாதாரணமான விஷயம்.‌ இதை, அதுவும் என்கிட்ட சொல்ல எதுக்கு நீ தயங்குறனு கேட்பாங்க” என்று கூறினாள்.

அவள் முகமே அவற்றை பேச அவள் எவ்வளவு சங்கோஜப்படுகின்றாள் என்பதை எடுத்துக் காட்டியது.

“பீரியட்ஸ்னா என்னனு தெரியாதாடா உங்களுக்கு?” என்று கேட்க, 

“அ..அது அழுக்கு.. வேஸ்ட் வெளியேறும்” என்றாள்.

அந்த மருத்துவருக்கு அவளின் பதில் அத்தனை ஆச்சரியத்தையே கொடுத்தது.

 'பீரியட்ஸ்கு இப்படி ஒரு விளக்கமா குடுப்பாங்க. இன்னும் எந்த காலத்துல இருக்காங்களோ?’ என்று நொந்தவராய் “பீரியட்ஸ் அது கிடையாது டா” என்க, 

“அப்றம்?” என்றாள்.

“இங்க நிறையா பேர் செய்யும் தப்பே இதுதான். பெண்பிள்ளைகளுக்கு அவங்களுடைய சொந்த உடல் சார்ந்த அறிவைப் பற்றியே யாரும் சரியா புரிய வைக்குறதில்லை. ஆணோ பெண்ணோ அவங்கவங்க சொந்த உடல் சார்ந்த விஷயங்களைத் தெரிஞ்சிருக்கணும். அப்போதான் ஒரு சுகாதார அறிவோடும் பாதுகாப்போடும் அவங்களால இருக்க முடியும். அதுவும் ஆண்களுக்கு அவங்க உடல் சார்ந்து விஷயங்கள் மட்டுமில்லை, பெண்களோட உடல் பற்றிய அறிவும் இருந்தா தான் அவங்களால கல்யாண லைஃபயே ஒழுங்கா லீட் பண்ண முடியும்.

பீரியட்ஸ் அப்படிங்குறது உன் கருவறையில் உருவாகும் கருமுட்டை. அதுக்கு இணையான விந்தணவுக்காக அது காத்திருக்கும். மாதா மாதம் இப்படி கருவாயிலுக்கு வந்து காத்திருக்கும் கருமுட்டை அதற்கான விந்தணு கிடைக்காதபோது உன் கருவாயிலிலிருந்து வெளிவேறும்” என்று கூற, புரியாத மொழியில் படம் பார்ப்பதைப் போன்று முழித்தாள்.

இன்றைய தலைமுறையினர் பெண்களுக்குக் கற்றுத் தரும் சுகாதார பாடங்கள் ஏராளம் வளர்ந்துவிட்டது என்று நாம் கூறிக் கொண்டாலும், இன்னும் பல இடங்களில் பெண்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சுகாதார பாடங்கள் சரிவர நிகழாமலே உள்ளது.

அனைவரும் இதுகுறித்த கருத்துக்களை அறிய வேண்டும் என்று தான் பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்களிலேயே ‘தி அடலெஸன்ஸ் ஏஜ்' என்று பாடமாக கொடுக்கின்றனர். ஆனால் பல பள்ளிகளில் இந்த வயது பிள்ளைகளுக்கு எதற்கிந்த பாடமென கற்றுத் தருவதே இல்லை, மீதி இடங்களில் சரியான விளக்கங்கள் இல்லை. சுகாதார விழிப்புணர்வைப் பற்றி மட்டுமே கருத்தோடு கூறுவதைக் தவிர அந்த பாடங்கள் என்ன விரசமான கருத்துக்களை கூறுகிறதாம்? கற்றுத்தரவே கூடாத வயது என்றிருந்தால் அரசாங்கம் அதை ஏன் பாடமாகக் கொடுக்கப் போகின்றது என்ற விழிப்புணர்வோட யோசிக்க அனைவரும் மறுத்துவிடகின்றனரோ? மறந்துவிடுகின்றனரோ?

இப்போதே கற்றுத் தர என்ன அவசியம் என்று எண்ணும் சில பழமைவாதிகள் அவர்கள் காலத்தில் அவர்களது அறியாமையோடு தற்போதைய பிள்ளைகளை ஒப்பிட்டு, ‘ஏன் எதுவும் தெரியாம நாங்க கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்துகிட்டு வாழலையா?’ என்று சாதாரணமாக கேட்கின்றனர்.

ஆனால் இன்றைய சமூகமும் அன்றைய சமூகமும் ஒன்றா? பெண் பிள்ளைகள் என்ன? ஆண்களுக்கே பாதுகாப்பில்லையே? 'நல்ல தொடுகை', ‘கெட்ட தொடுகை' என்று அன்றைய பள்ளி பிள்ளைகளுக்கு கற்பிக்கவில்லை, ஆனால் இன்று கற்பிக்கப் படுகின்றதே? காரணம் இன்று பள்ளி பிள்ளைகளுக்கும் நடக்கும் பாலியல் தொல்லைகளே!

எட்டு வயது குழந்தை, பத்து வயது குழந்தை, ஐந்து வயது குழந்தை என சின்னஞ்சிறு சிட்டுகளிடம் தங்கள் ஆதிக்கத்தை செழுத்தும் காமுகர்களுக்கு மத்தியில் தத்தமது பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர் நிச்சயம் இவற்றை சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் என்பதே உண்மை!

இங்கு சட்டங்களும் மாறப்போவதில்லை, சரித்திரங்களும் நிகழப்போவதில்லை. குறைந்தபட்சம் தங்கள் பிள்ளையை காத்துக் கொள்ளுமளவு அவர்களுக்கான விழிப்புணர்வையும், அதையும் தாண்டி ஏதும் நடந்துவிட்டால் அதை கடந்துவர வேண்டிய பக்குவத்தையும் அல்லவா கொடுத்து வளர்க்க வேண்டும்?

தனக்கு என்ன நடக்கிறது, நடந்தது என்றே தெரியாமல் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் ஆண், பெண் இருவருமே வளர வளர தங்களுக்குள் ஒடுங்கி நரக வாழ்வை அல்லவா வாழ்வர்?

எத்தனை பெண்களுக்கு அவர்கள் பூப்பெய்தியதும் அவர்கள் உடலில் கருவாயில் என்ற பகுதி உள்ளது என்பதை கூறி, அதன் சுகாதார அறிவுரைகளை வளர்க்கின்றனர்?

ரத்தம் என்று கண்டதும் பதறும் குழந்தைகளுக்கு அது அழுக்கு, அசுத்தம் என்று கூறி மாதவிடாய் குறித்த அறிவே முற்றிலும் இல்லாமல் செய்து விடுகின்றனர்.

அனைத்தையும் கற்றுக்கொள்ள ஒரு வயது உள்ளது என்பது உண்மையே! எனில் பூப்பெய்திய பிள்ளைகளுக்கு மாதவிடாய் குறித்த அறிவுரைகளும், ஆலோசனைகளும் மட்டும் தட்டிக்கழிக்கப்படுவது ஏன்? 

இதை நீ தெரிந்துகொள்ளும் வயதில்லை என்று கூறி எந்த முகத்துடன் சிறு வயதிலேயே குழந்தை திருமணம் மட்டும் செய்து வைக்க முடிகின்றதாம்?

நாம் நாகரீகம் நோக்கி அடியெடுத்து வைத்துவிட்டோம் என்று நமக்கிடையே நாமே பீற்றிக் கொள்வதெல்லாம் நகரப்பகுதிகளில் உயர்ந்த கட்டிடங்களையும், விண்ணைத் தாண்டி செல்லும் விண்வெளி விமானங்களையும் வைத்து தான்.

ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமபுரத்திலிருந்து தோன்றுகிறது என்பதே உண்மையான கருத்து. எத்தனை கிராமங்களில் குழத்தைத் திருமணம் முற்றுமாக ஒழிந்துவிட்டது?

படிக்கும் போதே திருமணம் முடிந்து செல்லும் பெண்களுக்கு திருமண சுமை அந்த வயதில் சரி, ஆனால் உடல் சார்ந்து அறிவுரைகள் பற்றித் தெரிந்து கொள்வது தவறு! இப்படியான கருத்துக்கள் நம்மிடையே இருக்கும்வரை அஞ்சனா போன்று ஆயிரமாயிரம் பிள்ளைகள் உருவாகுவதும், தங்களைப் பற்றி தாங்களே அறியாமல் தங்களின் உடலை காமுகர்களுக்கு அறியாமையோடு காவு கொடுப்பது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். 

தன் கண்முன் அந்த பச்சிளம் வயதில் அவள் கண்ட சம்பவத்தை அவள் மறந்தால் மட்டுமே போதும் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டிருந்த அமுதா, அவள் அதை கடந்து வர வேண்டும் என்று ஒருபோதும் எண்ணாது போனதே தவறு!

நம் மனம் முற்றிலும் எதையும் மறப்பதும் இல்லை, சரியாக அனைத்தையும் நினைவு கூறுவதுமில்லை. மறக்க வேண்டியவற்றை மறுத்து, நினைக்க வேண்டியவற்றை தவிர்க்கும் புதிரல்லவா இந்த மனம்!

முற்றும் முழுதாய் மறக்க இயலாமல் கலங்கலாய், தோழியின் கதறலோடு மனதின் அடியாழத்தில் புதைக்கப்பட ஒன்றை அவள் புரிந்து கொண்டு கடந்து வரவல்லவா வழிவகை செய்திருக்க வேண்டும்?

ஆணும் பெண்ணும் இணைவதே தவறென்றால், நம் அகவியல் இலக்கணம் காட்டிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் முற்றுமாக பிழை தானே!? அனைத்தும் பிழையல்லை, அதன் இடம், பொருள், ஏவல், நபர், செயல் என அனைத்தும் சேர்ந்து தானே ஒரு செயலில் சரி, தவறை தீர்மானிக்க இயலும்? அதைதான் நாம் கற்பிக்க வேண்டும். அந்த பகுத்தறிவை தான் நமது குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அந்த அறியாமை என்ற இருளை தான் நாம் நீக்க வேண்டும். 

அடுத்த பத்து நாட்களும் அஞ்சனாவுக்கு இந்த பகுத்தறிவை தான் அந்த மருத்துவர் புகட்டிக் கொண்டிருந்தார்.

எதை எதை பொதுவிடத்தில் பேசலாம், எவை எவை அந்தரங்கம் என்பது பற்றிய பகுத்தறிவை அவருக்கு தெரியவைத்தவர், கூடுதலாய், ‘செக்ஷுவல் எஜுகேஷன்' பற்றியும் அவளுக்கு பாடங்கள் எடுத்தார்.

ஒருவரின் பார்வைக்கு உள்ள வேறுபாடு, அர்த்தம், நோக்கம் போன்றவற்றை புரிந்துகொண்டு விலகுவதும், நெருங்குவதும் குறித்த ஆரம்பக்கட்ட பாடத்திலிருந்து அவளுக்கு அனைத்தையும் விளக்கினார்.

பத்தொன்பது வருட அறியாமை இந்த பத்து நாட்களில் நீங்கிவிட வாய்ப்புமில்லை, அவளவன் அதை எதிர்ப்பார்க்கவுமில்லை. அஞ்சனா முதலில் இரண்டு மூன்று நாட்கள் கழிவிரக்கமும் சோகமும் தாக்கப்பட்டவளாய் துவண்டபோதும், அவளை அணைத்து ஆதரித்து ஆறுதல் படுத்தி அவளை மேலும் முன்னேறச் செய்த யஷ்வந்த் இந்த பத்து நாட்களில் அவள் ஓரளவு அனைத்தும் புரிந்துகொள்ள தன் மனதை திடப்படுத்திக் கொண்டது புரிந்தது.

அதில் மனமெங்கும் அவளுக்கான நல்ல எதிர்காலத்தின் சந்தோஷமே அவனை சூழ்ந்திருந்தது. இப்படியே அழகாய் சென்று கொண்டிருந்த நாட்களுடன் யாவரும் பயணிக்க, அன்று வீட்டு கூடத்தில் அமர்ந்து யஷ்வந்த், யாழினி, யாதவ் மற்றும் யமுனா பேசிக் கொண்டிருந்தனர்.

“பெரிய இடத்து காண்டிராக்ட். நிறைய டிமான்ட்ஸ் இருக்கும்பா. நம்மளோட பிராடக்ஸ்கான டிஸ்ப்ளே பக்காவா இருக்கணும். அப்பதான் கிடைக்கும். நம்மளோட அஷுரென்ஸ், தரம் எல்லாம் அவங்களுக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கணும்” என்று யமுனா கூற, பிள்ளைகள் மூவரும் அதை சிரத்தையாகக் கேட்டுக் கொண்டனர்.

யாழினி யஷ்வந்தின் நிறுவனத்தில் சேர்ந்து இத்தோடு நான்கு மாதங்கள் கடந்திருந்தது. முதல் மூன்று மாதம் ஒரு சாதாரண ஊழியரைப் போல் வேலை பார்த்து தன்னை செப்பனிட்டுக் கொண்டவள், அதன் பிறகு அவர்கள் நிறுவனத்தின் ஒரு சிறு கிளை பிரிவினை பொறுப்பேற்றுக் கொள்ளும்படி அண்ணனால் பணிக்கப்பட்டாள்.

முதல் வாரம் சற்றே திணறிய தங்கைக்கு ஊக்கம் கொடுத்து, அவள் ஏதும் தவறு செய்தால் பாரபட்சமின்றி கண்டித்து வழிநடத்தினான், யஷ்வந்த்.

அன்னை பேசி முடிக்கவும் தங்கையைப் பார்த்த யஷ்வந்த், மிக மிக சாதாரணமான குரலில், “யாழி பிரஸன்டேஷன் ரெடி பண்ணிடு. நீ தான் பிரஸன்ட் பண்ண போற” என அவள் தலையை குண்டை வீசினான்.

“நானா?” என்று அரண்டு விழித்தவள், தன் அன்னையை நோக்க, அவர் யஷ்வந்தை நோக்கினார்.

“நீ இப்ப பார்த்துக்குறது நம்ம கம்பெனில இருந்து ஒரு சின்ன சிறுதொழில் உதவிக்குழு போன்ற நிறுவனத்தை தான். கிட்டதட்ட உன்னோட நிறுவனத்தை மொத்தமா ஹான்டில் பண்றதும் நம்ம மெயின் பிராண்ச்ல நார்மல் வர்கரா வர்க் பண்றதும் ஒன்னுனு சொல்லலாம். உனக்கு எடுத்ததும் மொத்த கம்பெணியவோ இல்ல ஹாஃப் ஷேரயோ கொடுக்க தான் அம்மா சொன்னாங்க. ஆனா அப்படி மொத்தமா கொடுக்க உன்கிட்ட எக்ஸ்பீரியன்ஸும் இல்லை, கேபாசிடியும் இல்லை”

“அதான் யுவனா புட்டிக்ஸ உன்கிட்ட கொடுத்தேன். இந்த ஒரு மாதம் நீ அங்க கொண்டுவந்த புதுபுது விஷயங்களையும் நோட் பண்ணிட்டு தான் இருந்தேன். யுவர் மூவ், அன்ட் டிசைன்ஸ் வேர் நைஸ். கத்துகுட்டியாவே இருக்காம நாலு விஷயம் கத்துக்க எக்ஸ்பீரியன்ஸ் ரொம்ப அவசியம். அதனால இந்த டீல நீ தான் ஹேன்டில் பண்ண போற” என்று யஷ்வந்த் கூறினான்.

“எல்லாம் சரி யஷ்வா. அதுக்கு இவ்வளவு பெரிய டீலிங்க கொடுக்கணுமா?” என்று யமுனா கூற, “ம்மா.. அவன் அவ்வளவு சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க மாட்டான். இப்ப யாழினி பண்ணனும்னு சொன்னா ஒரு காரணம் இருக்கும். இது கிடைக்கலைனா நம்ம கம்பெணிக்கு எந்த லாஸும் இல்லை. ஆனா யாழினிக்கு தி பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும்” என்று யாதவ் கூறினான்.

யாழினி முகம் இன்னுமே தெளிவில்லாதிருப்பதைக் கண்ட யஷ்வந்த்,

 “நீ தான் பண்ற. அவ்வளவு தான்” என்றுவிட்டுச் செல்ல, 

‘அய்யோ அந்த மீட்டிங்ல அவரும் இருப்பாருல்ல?’ என்றெண்ணி மேலும் பதறினாள்.

அந்த பதற்றம் வெளிப்படையாய் அவள் கண்களில் தெரிய, 

“யாழி.. ஜஸ்ட் சில்.. யஷ்வா ஒரு விஷயத்தை அவ்வளவு சாதாரணமா முடிவு பண்ண மாட்டான். உன் கேபாசிட்டிக்கு மீறினதுனு நினைச்சிருந்தா உன்னை இதுல இழுத்திருக்கவே மாட்டான். அதனால பொறுமையா யோசிச்சு பிரஸன்டேஷன ரெடி பண்ணு” என்று யாதவ் கூறினான்.

அன்று நாள் முழுதும் அவள் முகத்தில் படபடப்பு தான். தோட்டத்தில் அஞ்சு மற்றும் மதுவுடன் அமர்ந்துகொண்டு ஒரு மூச்சு புலம்பி தீர்த்தவளை மது அடக்கப்பட்ட சிரிப்புடனும் அஞ்சு பாவமாகவும் பார்த்து வைத்தனர்.

'யாழி அண்ணியும் அவங்கள விரும்புறாங்களோ?’ என்ற எண்ணம் அவள் புலம்ப ஆரம்பத்ததிலிருந்து இதோடு மூன்றாவது முறையாகத் தோன்றிவிட்டது அஞ்சனாவுக்கு. 

'அவரும் இருப்பாரு அண்ணாவும் இருப்பாங்க.. எனக்கு அதுவே பயமா இருக்கு. அவரு எதும் பேச வந்துட்டா? பேச என்ன பார்த்தாலே எனக்கு வார்த்தை வராது’’ என்ற அவளது புலம்பலே அஞ்சனாவை அவ்வாறு யோசிக்க வைத்தது.

காதல் என்றால் என்னவென்றும், தான் யஷ்வந்தின் மீது கொண்டுள்ள காதலை உணரும் முன்னும் யாழினிக்கு அர்ஷித் மீதுள்ள நேசத்தை அவள் புரிந்து கொண்டது தான் விந்தையே!

அன்று இரவு படுக்கையில் படுத்துக் கொண்டு மடிக்கணினியில் கண்கள் பதிய வேலை பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்ப்பதும், மனதோடு வார்த்தைகளைக் கோர்ப்பதுமாக இருக்க, அதை கவனித்துக் கொண்டிருந்தவனும் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

வேலையை முடித்துவிட்டு அவன் வந்து படுக்க, “மாமா..” என்றழைத்தாள். அழகிய சிரிப்புடன் அவள் புறம் திரும்பியவன், 

“சொல்லுங்க கோழிக்குஞ்சு” என்க, 

அந்த புன்னகையில் ரசனையோடு ஒரு நொடி தேங்கி நின்றவள், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “ஒன்னு கேட்கணும்” என்றாள்.

“கேளு..” என்றபடி அவன் அவளைக் கட்டிக் கொள்ள, 

“இ..இப்படிலாம் பண்ணா என்னால கேக்க முடியாது. விடுங்க” என்று தத்தி பித்தி கூறினாள். 

அதில் லேசாய் சிரித்துக் கொண்டவன் அவளை விடுவிக்க, 

“அ..அர்ஷித் அண்ணாவும் நீங்களும் ஃப்ரெண்ட்ஸா இல்ல எனிமீஸா?” என்று கேட்டேவிட்டாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் முகத்தில் சற்று முன் இருந்த அந்த புன்னகையின் சாயல் அப்படியே காணாமல் போக, கேள்வி கேட்டவளது நெஞ்சுக்கூடு பதறித் துடித்தது.

'அய்யோ.. சிறுத்தைய சுரண்டி விட்டுட்டோமோ?’ என்று நினைத்தவள் மெல்ல அவனை நெருங்கிப் படுத்து சமாதானம் செய்யும் விதமாய் அணைத்துக் கொள்ள, அவள் செயலில் வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவன், 

“இப்ப எதுக்கு இந்த கேள்வி?” என்று கேட்டான்.

காலை முதல் யாழினி தவித்த தவிப்பைக் கூறியவள், “சப்போஸ்.. நான் அர்ஷித் அண்ணாவோட கூட பிறந்த தங்கையா இருந்து, நீங்க என்னை விரும்பிருந்தா.. என்ன பண்ணிருப்பீங்க?” என்று கேட்க, அவளை ஒற்றைப் புருவம் உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான்.

அவள் பேச்சுக்குக் கூட ‘அர்ஷித்திற்கு ஒரு தங்கை இருந்து அவளை நீ விரும்பியிருந்தால்' என்று கேட்க விரும்பவில்லை. ஒரு சான்றாகக் கூட அவனுடன் தன்னை மட்டும் வைத்து அவள் பேசியதில் அவள் தன்னிடம் எத்தனை உடமையோடு இருக்கின்றாள் என்பதை உணர்த்த நொடி அவனுக்கு சிறகில்லாமல் வானில் பறக்கும் உணர்வு தான்.

“ஏன் அர்ஷித்துக்கு வேற தங்கச்சியே இல்லையா? சொந்தத்துல நிறையா இருக்காங்களே” என்று அவன் கூற, அவனை முறைத்தவள், 

“அதான் உங்களுக்கு நான் இருக்கேன்ல மாமா? ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள்.

அத்தனை நேரம் தயங்கித் திணறி பேசியவள் புயல் போல் வார்த்தையை கடித்து துப்பியதில் அழகாய் சிரித்துக் கொண்டவன்,

 “கண்டிப்பா தட்டி தூக்கிருப்பேன்” என்று அணைத்துக் கொண்டான்.

“அப்ப அர்ஷித் அண்ணா யாழி அண்ணிய விரும்புறதுக்கு என்ன சொல்வீங்க?” என்று படபடப்பாய் அவள் கேட்க, 

அமைதியாய் அவளைப் பார்த்தவன், “நான் என்ன சொல்லணும்னு எதிர்ப்பார்க்குற சனா?” என்றான்.

“இல்ல நீங்க என்ன நினைக்குறீங்களோ அதை சொல்லுங்க” என்று அவள் கூற, 

“யாழிக்கும் விருப்பம் இருந்தா எனக்கு என்ன ஆட்சேபனை?” என்று கேட்டவன் அறிவான் யாழினிக்கு அர்ஷித் மேலுள்ள பிடித்தத்தை.

ஆக அவளைத் தவிர அவளுக்கு அர்ஷித் மேலுள்ள காதல் அனைவருக்குமே புரிந்துதான் இருந்தது, நம் புதிதாக அறிவாளியாய் மாறின நாயகிக்குக் கூட!

“எனக்கென்னமோ அண்ணி உ..உங்களுக்கு பயந்து அமைதியா இருக்காங்களோனு டவுட்டா இருக்கு” என்று அஞ்சனா கூறவும், அவளை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவன், 

“தெரியும் சனா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்ல ஒரு நொடி அதிகம். ஆனா அதுக்கு பிறகு அவளுக்கு பிரச்சினை இல்லாததால தான் அவன் காதலை ஏத்துக்கிட்டது போல இருக்கும். அதை அர்ஷித் இல்லை, உண்மையா நேசிக்கும் எவனும் விரும்பமாட்டான். அவளுக்குள்ள உள்ள பயத்தையும் தாண்டி அவளோட காதல் அவளுக்கு புரியணும். அப்ப தான் அவன்மேல உள்ள காதல் அவளுக்கு பூதாகரமா தெரியவரும்” என்று கூறினான்.

தன்னவனை ஆச்சரியமாய் பார்த்தவள், “காதல்ல இவ்வளவு ஃபீலிங்ஸ் இருக்கா மாமா?” என்று கேட்க, 

“ஏன் இல்லை? இப்ப உன்னைத் தவிர வேற யாரையும் என் பக்கத்துல கனவுல கூட வச்சு பார்க்க நீ விரும்பாம இருந்தியே.. அதுவும் காதலில் ஒரு உணர்வு தான்” என்று அவளுக்குத் தன்மேல உள்ள உணர்வும் இந்த காதல் தான் என்பதை மறைமுகமாகக் கூறினான்.

அவன் வார்த்தைகள் உணர்த்தியும் உணர்த்தாத பொருளில் புரிந்தும் புரியாத உணர்வோடு அவள் விழிக்க, அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்தவன், “குட் நைட் சனா” என்றுவிட்டுப் படுத்தான்.


Leave a comment


Comments


Related Post